
திருந்துவதற்குத் திருப்போரூர்
1971 தேர்தலில் மயிலாப்பூரில் தி.மு.க. அணியின் வேட்பாளர் ம.பொ.சிவஞானம். ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராவதற்கு இரண்டு பேரிடையே போட்டி ஏற்பட்டது. ஒருவர் பத்திரிகையாளர் பி.சி. கணேசன். இன்னொருவர் வழக்கறிஞர் டி.என்.அனந்தநாயகி. அந்த நேரத்தில் நானும் என்னோடு சேர்ந்த நண்பர்களும் டி.என். அனந்தநாயகியை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சித்தலைமையிடம் வலியுறுத்தினோம். காரணம் ரொம்பச் சாதாரணமானது. டி.என்.அனந்தநாயகி நொச்சிக்குப்பத்திற்கு வந்து தன்னை ஆதரிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். பி.சி.கணேசன் இந்த வேலையைச் செய்யவில்லை. முடிவில் அனந்தநாயகிதான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் உற்சாகமாக வேலை செய்தோம்.
பிற்காலத்தில் பி.சி.கணேசன் எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தில் நேர்மையும் அறிவின் ஆளுமையும்கொண்ட ஒருவருக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டோமே என்பதை நினைத்து வருந்தினேன்.
இந்தத் தேர்தலில் துக்ளக் பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் தி.மு.க. எதிர்ப்பாளருக்குச் சிறந்த போர்க்கருவியாகப் பயன்பட்டது. ஒருமுறை அட்டைப் படத்தில் ம.பொ.சி. அவர்கள் பயாஸ்கோப் பார்த்துவிட்டுக் குதிப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. ராஜேந்திரன் மேலே குறிப்பிட்ட கார்ட்டூனை நொச்சிக் குப்பத்திற்கு எதிரிலிருந்த கார்ப்பரேஷன் பள்ளியின் சுவரில் வரைந்தான். பீச் ரோடிலிருந்த இந்த கார்ட்டூனை அந்தப் பக்கம் போகிறவர்களெல்லாம் பார்த்துக்கொண்டே போனார்கள். கோட்டைக்குப் போகின்ற மந்திரிகளும், எம்எல்ஏக்களும் கூடப் பார்த்தார்கள். விளைவு: மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் எங்களைத் தேடி வந்து எச்சரித்தார். பீச் ரோட்டில் வண்டி ஓட்டுபவர்களின் கவனத்தைத் திருப்பும்படியாக எந்த பேனரும் வைக்கக்கூடாது என்று அவர் சொல்லிவிட்டார். கார்ப்பரேஷன் சுவர் வெள்ளையடிக்கப்பட்டு கார்ட்டூன் மறைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டுமென்ற உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று. இந்த மாதிரி சமயங்களில் என் மூளை அபாரமாக வேலை செய்யும்.
என்னுடைய ஆலோசனைப்படி கார்ப்பரேஷன் சுவரைவிடப் பெரியதாக ஒரு மரப்பலகை தயார் செய்யப்பட்டது. அதை நகர்த்திச் செல்லுவதற்கு வசதியாக கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டன. முந்தைய கார்ட்டூனைவிட அழகாகப் பெரியதாக அதே கார்ட்டூனை இந்தப் பலகையில் ராஜேந்திரன் வரைந்தான். வரையப்பட்ட கார்ட்டூன் பலகை கோலாகலமாக ஊரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ப்டது. மக்கள் கார்ட்டூன் பலகைக்கு ஆரத்தி எடுத்தார்கள். பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தார்கள். பட்டாசு வெடித்தார்கள். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வந்தார். ஆனால் ஜனங்களின் உற்சாகத்தை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மட்டும் குறித்துக் கொண்டார்.
அடையாரிலிருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். காமராஜர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையே அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் இல்லை என்றும், மந்திரிகளில் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லாம் இரண்டு பெண்டாட்டிக்காரர்கள் என்றும் கூறினார். கீழே உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்து ‘அது, ஆதித்தனார்’ என்று கூவினான். ‘எலே எனக்குத் தெரியாதா? உட்காருலே. பொதுக்கூட்டத்திலே பேரைச் சொல்லக்கூடாதுங்கறது பண்பு. நீ சும்மாயிரு’ என்று சத்தம்போட்டு அவனை அடக்கிவிட்டார். அரசியல்வாதிகளில் காமராஜர் வித்தியாசமானவராயிருந்தார். பேச்சாளர்களில் யாராவது தரக்குறைவாகப் பேசினால் அவரை அங்கேயே கண்டிப்பார்.
தேர்தலன்று சென்னை நகரில் திமுகவினரின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அடையாரில் என்.எஸ்.வரதாச்சாரி என்ற பழம்பெரும் தியாகி, வித்தகன் என்ற தி.மு.க. தொண்டரால் தாக்கப்பட்டார். மயிலாப்பூர் மாட வீதிகளில் சோடாபுட்டி வீச்சு. பிராமணர்களை ஓட்டுப் போடாமல் தடுக்க வேண்டுமென்பதுதான் சதித்திட்டம். தேர்தலன்று நொச்சிக்குப்பத்திலிருந்த என்னைச் சுற்றி திமுகவினரின் வியூகம். எனக்கு ஆபத்து வரவிருந்தபோது நண்பன் ஒருவனால் காப்பாற்றப்பட்டு அங்கிருந்து தப்பித்தேன்.
தேர்தல் முடிவு வந்தவுடன் திமுகவின் கை ஓங்கிவிட்டது. நொச்சிக்குப்பத்திலிருந்த காங்கிரஸ்காரர்களை போலீசாரும் திமுககாரர்களும் சேர்ந்து தாக்கினார்கள். ஒருமுறை திமுககாரர்களிடம் ராஜேந்திரன் வசமாகச் சிக்கிக் கொண்டான். நான்கு பாட்டில்களை அவன் தலையிலேயே அடித்து உடைத்தார்கள். முகத்தில் வழிந்த ரத்தம் சட்டையில் இறங்கி இரத்தமயமாகிவிட்டது. ஆள் பிழைக்கமாட்டான் என்று நினைத்து அவனை அனுப்பிவிட்டார்கள்.
பலத்த காயங்களோடு வீட்டுக்கு வந்த ராஜேந்திரனை உடனடியாக இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போகும்படி சொல்லி அனுப்பினோம். செலவுக்குப் பயந்துகொண்டு பஸ்ஸில் போக வேண்டாம் என்றும் சைக்கிள் ரிக்ஷாவில் போக வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினோம்.
ராஜேந்திரன் என்னுடைய வார்த்தையை மீறவில்லை. இரத்தக்கறையோடு சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டுக்கு போயிருக்கிறான். அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சைக்கிள் ரிக்ஷாக்காரர் மயக்கம் அடைந்துவிட்டார். அவரை ரிக்ஷாவில் உட்கார வைத்து அதை ஓட்டிக்கொண்டு இராயப்பேட்டை மருத்துவமனை வரை போய்விட்டான் ராஜேந்திரன். அங்கே இரண்டு பேருக்கும் சிகிச்சை செய்யப்பட்டது. திரும்பி வரும்பொழுது சைக்கிள் ரிக்ஷாவை யார் ஓட்டி வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதே நேரத்தில் அடையாரில் தங்கியிருந்த சில மலேசிய மாணவர்களுக்கும், எங்கள் கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டு, பெரிய தகராறாக முற்றியது. வெகு நாட்களாக என்னைக் குறிவைத்திருந்த போலீஸார் இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று நன்றாக விசாரித்தார்கள். அவர்கள் என்னை அடித்ததைவிட எதிர்க்கோஷ்டியாரின் முன்னிலையில் இது நடந்தது என்பது அதிக வேதனையைக் கொடுத்தது. காங்கிரஸ் நடவடிக்கைகளுக்காக என்னை மயிலாப்பூரில் கண்காணித்து வந்த இன்ஸ்பெக்டர் பிர்லா போஸ் அப்போதுதான் அடையாருக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவருடைய கை வலிமையைக் காட்டி என் மூக்கெலும்பு உடைக்கப்பட்டது. உடலெங்கும் ஊமைக்காயம். ஐந்து போலீஸார் அரை மணி நேரம் அடித்தார்கள். பிறகு ஜட்டியோடு லாக்கப்பில் தள்ளப்பட்டேன். வெகு நேரம் கழித்து நயினா வந்து ஜாமீனில் அழைத்துப் போனார்.
போலீசாரும் திமுகவினரும் மட்டும்தான் வன்முறையைக் கையிலெடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. நாங்களும் எங்கள் பங்கைக் குறைவில்லாமல் செய்தோம். நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பலராமன் இதில் ஸ்பெஷலிஸ்ட். கோபம் வந்தால் போலீஸ்காரருடைய சட்டையைப் பிடித்து அப்படியே தூக்கிவிடுவார். அவரிடமிருந்து போராடி போலீஸ்காரரை மீட்பதற்கு ஒரு படையே தேவைப்படும். பிறகு விசாரணைக்கு என்று அழைத்துப்போய் பலராமனை லாக்கப்பில் வைத்து போலீசார் ரவுண்டுகட்டி அடிப்பார்கள். ஆனால் அவர் அஞ்சமாட்டார். வெளியே வந்தவுடன் அடுத்தமுறை எந்தப் போலீஸ்காரர் மாட்டுவார், எப்பொழுது சட்டையைப் பிடித்துத் தூக்கலாம் என்பதில் கவனமாக இருப்பார்.
பொதுவாக அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 1967 தேர்தல் வரை திமுகவைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் ஈ.வெ.ரா. அதனால் அவருடைய இயக்கத் தோழர்களும் திமுகவிற்கு எதிராகவும், காங்கிரஸுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஈவெரா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திமுகவிற்கு ஆதரவாகப் பேசினார். எழுதினார். அவருடைய இயக்கத் தோழர்களில் பலருக்கு இது சரியாகப் படவில்லை. அவர்கள் காங்கிரஸ் ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறவில்லை. இப்படிப்பட்டவர்கள் நொச்சிக்குப்பத்திலும் இருந்தார்கள். தமிழ்நாடெங்கும் இந்தப் பிரிவு தொடர்ந்தது. இவர்களால் தீவிர திமுக எதிர்ப்பும் ஓரளவு பிராமண எதிர்ப்பும் என்கிற விநோதமான நிலைப்பாடு தமிழக காங்கிரஸில் ஒரு பகுதியாக இன்றளவும் தொடர்கிறது.
வன்முறையில் எங்களுடைய பங்களிப்பைப் பற்றிச் சொல்கிறேன். என்.எஸ்.வரதாச்சாரி என்ற தியாகி வித்தகனால் தாக்கப்பட்டதில், எங்களுக்கு ரொம்பவும் வருத்தம். வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபொழுது சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை பாரிமுனையில் நடந்த இப்போராட்டத்தில் போலீஸ்காரர்கள் துப்பாக்கியை நீட்டியபோது வரதாச்சாரி சட்டையைக் கிழித்து மார்பைக் காட்டினார். அன்று முதல் அவர் சட்டை அணிவதில்லை. நோ ஷர்ட்டு வரதாச்சாரி என்று புகழடைந்தார். இப்படிப்பட்ட தியாகியை தாக்கிவிட்டார்களே, அதற்குப் பதிலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குப் பலமாக இருந்தது.
வித்தகனோடு பழக்கம் உள்ள சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களோடு பேசி ஒரு ஏற்பாடு செய்தேன். ‘திருப்போரூருக்குப் பக்கத்தில் இளநீரில் கலந்து சாராயத்தை விற்கிறார்கள். அது அற்புதமாக இருக்கும்’ என்றுசொல்லி வித்தகனை ஒரு காரில் ஏற்றி அழைத்துப் போனார்கள்.
அந்தக் காலகட்டத்தில் சென்னைக்கும் திருப்போரூருக்கும் இடையே அதிகப் போக்குவரத்து இருக்காது. முருகன் கோயிலில் விசேஷமான நாட்களில் மட்டும் அந்த வழியில் பஸ் போக்குவரத்து இருக்கும். நான் ஸ்கெட்ச்சு போட்டுக் கொடுத்தபடி சம்பவ இடத்தில் வித்தகன் தாக்கப்பட்டார். சட்டை பேன்ட்டை கழற்றிவிட்டார்கள். செருப்பும் பறிக்கப்பட்டது. உள்ளாடை மட்டும்தான் பாக்கி. ஆசை தீர அடித்துவிட்டு, வித்தகன் கையில் ஒரு பீடிக்கட்டையும் வத்திப்பெட்டியையும் கொடுத்துவிட்டு நண்பர்கள் காரில் ஏறி சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
உடலில் காயங்களோடு பீடியைப் புகைத்தபடியே ஊருக்கு வருவதற்கு வித்தகன் படாதபாடு பட்டிருப்பார். எண்ணாததை எல்லாம் எண்ணியிருப்பார். அதன் விளைவாக அவர் திருந்திவிடுவார் என்பதுதான் என்னுடைய வரைவுத்திட்டம். அது நிறைவேறிவிட்டது.
(தொடரும்…)