Posted on Leave a comment

கால்பந்து உலகக் கோப்பை 2018 | லக்ஷ்மணப் பெருமாள்


சாக்கர் (Soccer) என்றழைக்கப்படும் கால்பந்து விளையாட்டுதான் உலகின் மிக அதிக ரசிகர்களைக் கொண்டது. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கொருமுறை நடக்கிறது. 1930ல் முதல் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1938-1950 வரையிலான காலகட்டத்தில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடக்கவில்லை. 21 வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியானது ( 2018 ) ரஷ்யாவில் கோலாகலமாக நடந்தது.

32 அணிகளை எட்டு பிரிவுகளாகப் பிரித்து லீக் சுற்றுகள் நடந்தன. லீக் சுற்றைப் பொருத்தவரையில் ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் மோதும் இரு அணிகளின் பலத்தைப் (வெற்றி-தோல்வி-சமன்) பொருத்துப் புள்ளிகளைப் பெறுகின்றன. லீக் சுற்றில் தமது பிரிவிலுள்ள மாற்று அணிகளுடன் விளையாடி முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சுற்று 16 என்று சொல்லப்படும் நாக் அவுட் (தோற்கிற அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல இயலாது) போட்டிக்குத் தகுதிபெறும். ஒருவேளை இரு அணிகள் இரண்டாமிடத்தில் சம புள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில், எந்த அணி அதிக கோல்களை லீக் சுற்றில் போட்டுள்ளதோ அது தகுதி பெறும். அதிலும் சிக்கல் என்றால், எதிரணியைக் குறைவாக கோல் போட அனுமதித்த அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

சுற்று 16 ஐப் பொருத்தமட்டில் உலகக் கோப்பைக் கால்பந்து அட்டவணைப்படி அணிகள் விளையாடுகின்றன. ஒரு பிரிவில் முதலிடம் பெற்ற அணியும் அடுத்த பிரிவில் இரண்டாமிடம் பிடித்த அணியும் நேரடியாக மோத வேண்டும். அதில் தேர்ச்சி பெறும் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இதில் தோல்வியுற்ற அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறி விடும். காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளின் போட்டிகளும் சுற்று 16 ஐப் போலவே மாற்றுப் பிரிவில் வெற்றி பெற்று வரும் அணியுடன் மோத வேண்டும். தோற்கும் அணிகள் வெளியேறி விடும்.

உலகக் கோப்பை கால்பந்து 2018

உலகப் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஒவ்வொரு முறையும் சில அதிர்ச்சிகளும் ஆச்சரியமான முடிவுகளும் காத்திருக்கும். அவ்வகையில், 2006 உலகக் கோப்பையை வென்ற இத்தாலி , 2010 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் லீக் சுற்றிலிருந்து சுற்று 16 க்குக் கூட தகுதி பெற இயலாமல் வெளியேறியது. 2010 உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் 2014 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இத்தாலி போலவே லீக் சுற்றிலேயே வெளியேறியது. மீண்டும் இந்தாண்டு அதே அதிர்ச்சியைத் தந்தது, 2014 உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி. ஆம், மிக வலிமையான அணியாகப் பார்க்கப்பட்ட ஜெர்மனி இந்தாண்டு லீக் சுற்றிலேயே வெளியேறியது.

உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இத்தாலி 2018 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை தகுதிச் சுற்றிலேயே இழந்து வெளியேறிய சோகமும் நடந்தது. கூடவே 2014 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை வந்த நெதர்லாந்து அணியும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி இருந்தது. அதாவது இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கே தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்க அணிகளில் அதிகமாகக் கலந்து கொள்ளும் கானா, கென்யா அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை இழந்திருந்தன. அமெரிக்க நாடுகளில் USA, சிலி போன்ற அணிகள் தகுதி பெறவில்லை.

2018 உலகக் கோப்பை போட்டிக்கு வந்த அணிகளில் நட்சத்திர வீரர்களைக் கொண்ட போர்ச்சுக்கல் (கிறிஸ்டியானா ரொனால்டோ), அர்ஜென்டினா (மெஸ்ஸி) இரு அணிகளும் சுற்று 16ல் வெளியேறின. ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி லீக் சுற்றிலிருந்து சுற்று 16க்குக் கூடத் தகுதி பெறாமல் வெளியேறின.

இதுவரை உலகக் கோப்பைக் கால்பந்து வரலாற்றில் அதிகமுறை ( 5 முறை) கோப்பையைக் கைப்பற்றிய பிரேசில் (நெய்மர்) அணி காலிறுதியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. உண்மையில் பெல்ஜியம் அணி மிகுந்த துடிப்புடன் விளையாடிய அணி. ஆனால் பெல்ஜியம் பிரான்சுடனான அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது. பிரான்ஸ் 2-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய போதே கால்பந்து ரசிகர்கள் பிரான்ஸ்தான் உலகக் கோப்பையை வெல்லும் அணி என்று கணிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

மறுபிரிவில் குரோஷியா ஆரம்பத்திலிருந்தே கடின உழைப்புடன் ஒவ்வொரு சுற்றிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் விளையாடி வந்தது. அதிலும் ரவுண்டு 16 சுற்றில் டென்மார்க்கையும், காலிறுதியில் உள்ளூர் அணியான ரஷ்யாவையும் பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி நம்பிக்கை தரும் வகையில் காலிறுதி வரை எளிதாகவே வெற்றி பெற்று வந்தது. ஆனால் அரையிறுதியில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியிலும் பெல்ஜியம் அணியிடம் இங்கிலாந்து தோற்றது.

உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக குரோஷியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதும் ஒருங்கிணைந்த அந்த அணியின் ஆட்டமும் பெரும்பாலும் நேர்த்தியாகவே இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியிடம் (France 4- Crotia 2) என்ற கோல்கணக்கில் தோற்றது. குரோஷியா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளின் அதிபர்களும் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். கூடவே ரஷ்யாவின் விளாடிமிர் புதினும்! உண்மையில் குரோஷியா தோல்வியைத் தழுவினாலும் அந்நாட்டு அதிபர் மற்றும் மக்கள் தங்களது வீரர்களையும் பயிற்சியாளரையும் இன்முகத்துடனே வரவேற்றார்கள். பிரான்ஸின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் விடியவிடிய கொண்டாடித் தீர்த்தார்கள்.

விருதுகள் வாங்கிய வீரர்கள் -2018:

Golden Ball Award – குரோஷியா கேப்டன் லுகா மோட்ரிக் (LUKA MODRIC). மிகச் சிறந்த வீரர் என்ற விருதினை தட்டிச் செல்வதற்குக் காரணம், middle லிலிருந்து அதிக நேரம் பந்தைக் கொண்டு செல்வதும் நேர்த்தியாக விளையாடியமைக்காகவும் இந்த விருதைத் தட்டிச் சென்றார் லுகா.

Golden Boot Award – இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (HARRY KANE). அதிக அளவில் 6 கோல்களை 2018 உலகக் கோப்பையில் அடித்ததால் இந்த விருது ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

Young Player Award – பிரான்ஸ் அணி வீரர் க்ளியான் மாப்பே ( KYLIANAN MBAPPE). மிக வேகமாகப் பந்தைக் கடத்திச் சென்ற வல்லமையும் இறுதிப் போட்டி வரை வந்த காரணத்தாலும் இளம் வீரரான இவருக்கு விருது வழங்கப்பட்டது.

Golden Glove Award – பெல்ஜியத்தின் கோல் கீப்பர் திபாத் கோர்த்யாஸ் (THIBAUT COURTOIS). ஏழு போட்டிகளில் வெறும் 6 கோல்களை மட்டுமே எதிரணியனரால் போட முடிந்தது. குறிப்பாக பிரேசிலுடனான காலிறுதிப் போட்டியில் பல கோல்களைத் தடுத்ததும் மற்ற அணியினரின் கோல் போடும் பல்வேறு வாய்ப்புகளைத் திறம்பட தடுத்தமையால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

*

உலகில் கால் பந்தாட்டத்தில் பல்வேறு வீரர்கள் இன்று வரையிலும் விளையாடும்போதும், விளையாட்டில் ஏற்படும் காயங்கள் காரணமாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பலனில்லாமல் இறந்துபோகும் துயரச் சம்பவங்கள் நின்றபாடில்லை. பல விளையாட்டு வீரர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முடமான சம்பவங்கள் உண்டு. இதுவரை இத்தனை வீரர்கள் இறந்துள்ளார்கள் என்று கணக்கிட முடியாத அளவிற்கு வீரர்கள் இறந்து வருகின்றனர். உள்ளூர்ப் போட்டிகள், நட்பு ரீதியிலான போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் என நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.

உலகக் கால்பந்து அமைப்பு பல்வேறு சட்ட விதிகளை மேம்படுத்தி வந்தபோதிலும் இன்னமும் இறப்புகள் தொடர்கின்றன. 1889ல் வில்லியம் க்ரோப்பரில் ஆரம்பித்த மரணம் இன்றுவரை தொடர்கிறது. வேகமாக ஓடும்போது இன்னொரு வீரர் குறுக்கே கால் நீட்டி விழுவதால், பந்தைத் தன் அணி வீரருக்கு பாஸ் கொடுப்பதற்காக தலையை வைத்து முட்டும்போது, கால்களை உயர்த்தி எப்படியேனும் பந்தைத் தன் அணி கைவசமாக்க வேண்டும் என்று எண்ணிக் காலைத் தூக்க எதிரணி வீரரின் முகத்தில் படுவது, இப்படியான நிகழ்வுகளில், காயத்தில் ஆரம்பித்து மரணம் வரை அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்து விடுகிறது. முன்பெல்லாம் கோல் கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும் போது இருந்த விதிமுறைகளால் அதிக கோல்கீப்பர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையொட்டியே இப்போது பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது உலகக் கால்பந்தாட்ட அமைப்பு.

*

1970ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடக்கவிருந்தது. அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மத்திய அமெரிக்க நாடுகளான எல் சல்வேடர் ( El Salvador ) க்கும் ஹோண்டுரஸ் ( Honduras )க்கும் நடந்தது. மொத்தமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் என்பதே விதி. முதல் போட்டியை ஹோண்டுரஸ் அணி வென்றது. இரண்டாவது போட்டியை எல் சல்வேடர் அணி வெற்றி பெற்ற போதே விளையாட்டரங்கில் ஹோண்டுரசின் கொடிகள் கிழித்தெறியப்பட்டன. மூன்றாம் போட்டி பெரும் சர்ச்சைக்குள் நடந்து எல் சல்வேடர் அணி வெற்றி பெற்றது. இதையொட்டி ஏற்பட்ட கலவரங்களால் ஹோண்டுரஸ் தனது ராஜ்ய உறவை எல் சல்வேடருடன் துண்டித்தது. இதையடுத்து நடந்த போர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 1000 முதல் 2000 பேர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் அறிவித்தன.

இந்தப் போருக்கு வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமே காரணமல்ல. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் வர்த்தகம், எல்லைப் பிரச்சினை மற்றும் மற்றொரு நாட்டில் குடிபுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளன. விளையாட்டரங்கில் ஹோண்டுரசின் தேசியக் கொடிகள் மற்றும் மக்கள் அடிக்கப்பட்டு இன்னலுக்குள்ளானதால்தான் போராக மாறியது. இதையடுத்து எல்லைப் பிரச்சினை சர்வதேச வழக்காக மாறி இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் படி 1992 ல் ஹோண்டுரசிடம் சர்சைக்குரிய பகுதியை ஒப்படைத்தது எல் சல்வேடர்.

*
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இந்தியாவில் எழுப்பப்படும் கேள்வி 125 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டிலிருந்து 11பேர் கொண்ட ஒரு அணியை உருவாக்கி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறச் செய்ய இயலாதா என்பதே! உண்மையில் கிரிக்கெட்டில் உலக ஜாம்பவான்களில் இன்று மிக முக்கிய அணியாக மாறியுள்ள இந்தியாவில் ஏன் கால்பந்து ஆட்டத்தில் சோபிக்க இயலவில்லை. கால்பந்துப் போட்டியில் விளையாட சர்வதேச அளவில் இந்திய அணி தகுதி பெற்றதே இல்லையா போன்ற கேள்விகள் நமக்கு எழலாம்.

1951ல் நடந்த ஆசியக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற அணிதான் நமது இந்திய அணி. மீண்டும் 1962ல் ஜகர்தாவில் நடந்த ஆசியக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா. 1956ல் நடந்த உலக ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்ற அணிதான் இந்திய கால்பந்து அணி. இதே காலகட்டத்தில் இந்தியாவின் கிரிக்கெட் அணி எந்த சாதனையும் செய்ததில்லை. சொல்லப்போனால் அது கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியை மட்டுமே கண்டது.

1950களில் விளையாடிய இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்கள் மிகுந்த திறமையானவர்கள். அத்தகைய திறமை வாய்ந்த இந்திய கால்பந்து அணி 1950ல் பிரேசிலில் நடக்கவிருந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என்று இந்திய கால்பந்தாட்ட அமைப்பு (AIFF) அறிவித்தது. அதற்குச் சில நடைமுறைச் சிக்கல்களை மேற்கோள் காட்டிப் பங்கு பெறாது என அறிவித்தது. Barefoot பயிற்சி மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் 70 நிமிட போட்டிகளில் மட்டுமே இந்தியா விளையாடி வருகிறது என்ற காரணங்களைச் சொல்லியது. அதோடு, போட்டிக்குச் செல்வதற்கான பயணச் செலவுகள் அதிகமாகும் என்பதால் இந்தியா பங்கேற்காது என்று AIFF அறிவித்தது. இதில் கொடுமை என்னவென்றால், உலகக் கால்பந்தாட்ட அமைப்பு (FIFA) தங்கும் வசதி மற்றும் பல செலவுகளைத் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் இந்தியா FIFA வகுத்துள்ள விளையாட்டு விதிகளின் படியும் விளையாடினால் போதுமென்றது.

இந்தியாவின் அப்போதைய பிரதமரான ஜவகர்லால் நேரு இந்தியக் கால்பந்து அணியை உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு அனுப்ப எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அவரின் அக்கறை எல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஊக்கப்படுத்துவதிலேயே இருந்தது. காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நேருவுக்கு இருந்த அக்கறை, இந்தியக் கால்பந்து அணியை பிரேசிலுக்கு அனுப்புவதில் இல்லை. நேரு இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமான விஷயம். அந்தக் காலகட்டத்தில் நேரு தாமாக விருப்பப்பட்டு கிரிக்கெட் போட்டியைத் துவங்குவது மற்றும் கிரிக்கெட் உடையுடன் pad சகிதமாகக் கலந்து கொள்வது என ஆர்வம் காட்டினார். வெற்றியோ தோல்வியோ இந்தியக் கால்பந்து அணியை பிரேசிலுக்கு அனுப்ப முயற்சி செய்திருந்தால், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இந்தியா இடம்பெற்றது என்றாவது வரலாற்றில் பதிவாகியிருக்கும். ஓர் ஆட்சியாளர் மற்றும் அரசு தருகிற முக்கியத்துவம்தான் குறிப்பிட்ட விளையாட்டில் அந்த நாட்டின் நிலையை எந்தளவுக்கு மாற்றும் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் சொல்ல இயலாது. இதை மறைக்க நேரு கோப்பை என்ற பெயரில் 1982ல் கால்பந்துப் போட்டிகள் நடந்தன என்பது மற்றொரு கொடுமை.

கிரிக்கெட் என்பது மேல்தட்டு மக்களின் விளையாட்டாகவும் கறுப்பினத்தவரை பங்கெடுக்கச் செய்யாத ஒரு விளையாட்டாகவும்தான் இருந்தது. இன்று வரையிலும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் கால்பந்து விளையாட்டு உண்டு. கிரிக்கெட் விளையாடும் நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சவூதி அரேபியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் 2018 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்தன. சவுதியைப் போல ஒரு முக்கியத்துவத்தை இந்திய அரசு கால்பந்து வீரர்களுக்குக் கொடுத்திருந்தால் இந்தியாவும் இன்று உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் நாடாக இருந்திருக்கும். சில விஷயங்கள் கனவுகளாகவே இருக்கின்றன. அதில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு இந்தியக் கால்பந்து அணி தகுதி பெறுவதும் ஒன்று.

Leave a Reply