Posted on Leave a comment

பி.ஆர். ஹரன் – அஞ்சலி | அரவிந்தன் நீலகண்டன்

பி.ஆர்.ஹரன்: மறைவு: ஜூலை 4, 2018

தமிழ் ஹிந்துத்துவ எழுத்துலகம் என்பது அன்று மிகவும் சிறியது.  1980களின் இறுதியில் ஒரு பெரும் எழுத்தியக்கமாக உருவாகி வரத்தொடங்கிய ஹிந்துத்துவ சிந்தனையுலகமும் எழுத்துலகமும் பின்னர் திடீரென்று இல்லாமல் போயிற்று. 2004 இல் வாஜ்பாய் அரசு தோற்று முழுக்க முழுக்க இந்து எதிர்ப்பு என்பது அடிப்படை அரசியல் விதியாக தமிழ்நாட்டில் மாறியது. இதற்கான ஆதார அடையாளங்கள் 2002 இலேயே தொடங்கிவிட்டன. திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மதவாதிகள் ஆகியோர் அடங்கிய மிகச் சீரான படையொன்று தமிழில் இயங்கியது. தமிழ் இணையவுலகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினர். அச்சு ஊடகங்களுக்கு அங்கிருந்து இறக்குமதியானார்கள்.  அக்காலகட்டத்தில், அதாவது 2002-2010 காலகட்டத்தில் ப்ளாக்கர்கள் கோலோச்சிய காலத்தில் ’சைகோ போலி டோண்டு’ என்கிற ஒரு திராவிட-இடதுசாரி கும்பல் ஒவ்வொரு இந்து ப்ளாக்கரையும் குறிவைத்து ஆபாசத்தின் உச்சத்தில் தாக்கியது. மிகவும் கடுமையான உளவியல் தாக்குதல்கள் அவை. அதிகார வர்க்கத்தின் ஆசியும் தமக்கிருப்பதாகக் காட்டிக் கொண்டு அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு ப்ளாக்மெயில் வரை நீண்டன. இன்று அந்த ‘சைகோ போலி டோண்டு’ குழுவினர் மதிப்புடைய இடதுசாரி திராவிட எழுத்தாளர்களாக வலம் வருகின்றனர். அவர்கள்தான் எனத் தெரிந்தாலும் அவர்களை ஆதாரபூர்வமாக சிக்கவைப்பது கடினம்.

எந்த சூழ்நிலையில் பி.ஆர்.ஹரன் இயங்கினார் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எனவேதான் இந்த விவரிப்பு.

பி.ஆர்.ஹரன் குறித்து எனக்கு தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக தெரியாது. அவர் அன்னையார் முதியோர் நோய்களால் அவதிப்பட்டப் போது ஹரன் அவர் அன்னையாரைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஹரன் திருமணமாகாதவர். ஒரு முதன்மை நிறுவனத்தில் முன்னாள் விற்பனை அதிகாரி. அவர் எப்படி ஹிந்துத்துவ எழுத்துலகத்துக்குள் வந்தார்? 2004 இல் நடந்த சங்கராச்சாரியார் கைது அவரை கடுமையாக பாதித்தது. தீபாவளி நாளில் ஒரு ஹிந்து சன்னியாசி கைது செய்யப்படுகிறார். எப்படி இது சாத்தியம்? இப்படி ஒரு கிறிஸ்தவ பிஷப் , விடுங்கள் ஒரு கிறிஸ்தவ போதகரைக் கூட கிறிஸ்துமஸ் நாளில் கைது செய்ய முடியுமா? இக்கேள்விகள் அவரை எழுத வைத்தன.

அவர் விரைவில் இது காஞ்சி மடம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என கண்டுகொண்டார் ஒட்டுமொத்த ஹிந்துசமுதாயமே ‘a society under siege’  என்பதை உணர்ந்து கொண்டார். மதமாற்றங்கள், மதக் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு அவர் சென்றார். மலர்மன்னனுடன் அவர் கலவரப் பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு செய்தார். ஆர்கனைசர், யுவபாரதி, நியூஸ் டுடே, உதய் இந்தியா, திண்ணை. காம், வலம் என பல பத்திரிகைகளில் எழுதினார். எழுத்து தம் ஆயுதம் என்பதை கண்டு கொண்டார். அதனை அவர் தர்மம் என உணர்ந்ததைக் காக்க பயன்படுத்தினார். எள்ளளவும் சுயநலமற்றவர்.

கால்நடை பாதுகாப்பு, கோவில் பாதுகாப்பு, பண்பாட்டு பாதுகாப்பு என அவர் இயங்கிய தளங்கள் பலவிதமானவை. ஆனால் அவை அனைத்தையும் இணைத்தது தர்மம் குறித்த அவரது பற்று.

அவர் என்றைக்குமே தனக்காக எழுதியதில்லை. தன் பெயர் வரவேண்டுமென்பதோ அல்லது தனக்கு புகழ் வரவேண்டுமென்பதோ குறித்து அவருக்கு கிஞ்சித்தும் எண்ணம் இருந்ததில்லை. எழுத்து துறையில் தெரிந்தோ தெரியாமலோ இருந்து தொலைப்பதால் இதை சொல்கிறேன். முனிவர்கள் தவம் செய்யும் போது ரம்பையோ மேனகையோ வந்து நடனமாடுவார்கள் என்று சொல்வார்களே, எழுத்தை தவமென செய்தால் வந்து நடனமாடும் ரம்பை மேனமை இந்த புகழ் போதை. மிகக் கடுமையான போதை. போதை என்று இல்லாவிட்டாலும் கூட எழுத்தின் மீது ஒரு பற்றிருக்கும். இது என் எழுத்து என்கிற ஒரு அடிப்படையான கர்வம். பி.ஆர்.ஹரனுக்கு இது எதுவுமே இருந்ததில்லை. அவர் எழுத்து என்பது தர்மத்தையும் தேசத்தையும் காப்பாற்ற செய்யப்படும் வேள்வியில் சொரியப்படும் ஆகுதி. ஆகுதியான பிறகு அது தேவதைகளுக்குத்தான் சொந்தம். இந்த யக்ஞத்தின் அதிதேவதை ராஷ்ட்ரி. அவ்வளவுதான். அவ்வளவேதான். அதற்கு மேல் அவர் தன் எழுத்தைக் குறித்து ‘என் எழுத்து’ என சிந்தித்ததே இல்லை. அர்ஜுனனும் பாணம் காண்டீபத்திலிருந்து சென்ற பிறகு அதை என் அம்பு என நினைத்திருக்க மாட்டான் என்று சொல்வார்கள். காண்டீபத்திலிருந்து விடுபடும் பாணம் கிருஷ்ணார்ப்பணம் ஆகிவிடுகிறது. ஹரனுக்கு அனைத்துமே தேசத்துக்கு அர்ப்பணம்.

எனக்கும் அவருக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. அவருக்கு ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய ஸ்தாபனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எனக்கு இல்லை. அவர் அந்த ஸ்தாபனத்தின் பார்வையில் தர்மத்தை வரையறை செய்தார். என்னால் அதை இறுதிவரை ஜீரணிக்க முடியவில்லை. என்றைக்கும் ஏற்பது இயலாது. ஈழத்தமிழர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் நாங்கள் கடுமையாக முரண்பட்டோம். ஒருவர் உங்கள் நண்பனாக இருக்கும் போது அவரது பெருமை தெரிவதை விட அவர் உங்கள் எதிர்நிலைபாட்டில் நிற்கும் போதுதான் அவரது உண்மையான பெருமையோ தன்மையோ விளங்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி.

ஒரு சர்வதேச ஹிந்துத்துவ அறிவுஜீவி. அவர் ஒரு விஷயத்தில் என்னுடைய உழைப்பை பயன்படுத்தியிருந்தார். ஆனால் அதை அவர் அங்கீகரிப்பதில்லை. இதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஹரன் பொங்கி எழுந்துவிட்டார். அப்போது எங்கள் இருவருக்கும் பல விஷயங்களில் காரசாரமான மோதல்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டம். எந்த ஹரன் தன்னுடைய எழுத்தினை பற்றற்ற நிலையில் தேசார்ப்பணமாகக் கொண்டு இயங்கி வந்தாரோ அதே ஹரனுக்கு அவருடன் நிலைப்பாடுகளில் கடுமையாக வேறுபட்டு வாதிடிக் கொண்டிருந்த என் உழைப்பை ஒருவர் உதாசீனப்படுத்துகிறார் என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த மகோன்னதமே என் மனதில் ஹரனை வரையறை செய்கிறது.

அவர் நியூஸ் டுடேயில் பணியாற்றிய போது ஒவ்வொருநாளும் ஒரு கட்டுரை எழுதுவது பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அவர் பழகும் விதம் நண்பர்களை என்றென்றைக்குமாக மாற்றியிருக்கிறது. கம்பீரமான குரல்.  முதன் முதலில் அவரைப் பார்த்த போது அவர் பழைய ராணுவ அதிகாரி என்றே நினைத்தேன். கேட்டும்விட்டேன். ‘இல்லை’ என்று புன்னகையுடன் சொன்னார். பிறகு ‘ராணுவத்தில் சேருவதுதான் என் முதல் ஆசையாக இருந்தது’ என்றார். எல்லா விதங்களிலும் அவர் ஒரு அருமையான மனிதர். ஒருவருக்கு அவரை போன்ற எதிரிகள் இருந்தால் நண்பர்கள் தேவை இல்லை. எதிரிகளையும் நேசிக்கத் தெரிந்தவர்.

இன்று ஹரன் நம்மிடையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் நினைவு எப்போதும் உடனிருக்கும். அவருக்கு தமிழ்நாடு குறித்து இருந்த கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘வேதமுடையதிந்த நாடு’ என்பதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் வேதம் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கால்நடை செல்வம் பெருக வேண்டும். அனைத்து சமுதாயங்களும் பரஸ்பர அன்புடன் நல்லுணர்வுடன் சமரசத்துடன் வாழ வேண்டும். ஹரன் மனதில் பதிந்திருந்த லட்சிய தமிழகம் இதுதான். ஒரு விநோதம் ஹரன் தரிசித்த தமிழ்நாட்டை ஏற்கனவே ஞானசம்பந்தர் தம் தேவாரப்பாடலில் வரையறை செய்திருக்கிறார். அதை படிக்கும் போதெல்லாம் இனி சிவபெருமானுடன் பி.ஆர்.ஹரனின் முகமும் நினைவில் வரும்.

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

இதை எதிர்க்கும் சக்திகளுடன் எவ்விதத்திலும் ஹரன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஜிகாதிகளையும் மதமாற்றிகளையும் தீராவிடக் கும்பல்களையும் இடதுசாரி போலிகளையும் எதிர்த்து தமிழ்நாட்டில் இயங்குவது மிகக் கடினமான விஷயம். ஏறக்குறைய தன் மரண சாசனத்தில் தானே கையொப்பமிட்டு வாழும் வாழ்க்கைதான் அது. அந்த வாழ்க்கையைத்தான் ஹரன் வாழ்ந்தார்.

இறுதி நாளிலும் பாரதி குறித்த நாடகத்துக்கு சென்று கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி கோவில் வீதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டது. இறுதி வரை தேசசேவையில் உயிர் பிரிவதென்பது அவருக்கு பெரிய பாக்கியம். எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு வாழ்நாளெல்லாம் சுயநலமின்றி வாழ்ந்த மனிதர் இறுதியில் மிகப் பெரிய சுயநலத்துடன் நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு தான் பூரணாகுதி ஆகிவிட்டார். அவர் மனதில் தரிசித்த தமிழ்நாட்டை நாம் உருவாக்குவோம்.  அது மட்டுமே அவருடைய நினைவுக்கு நாம் செய்யும் ஒரே அஞ்சலி.

Leave a Reply