
அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்பவர் நடித்த ‘காலா’ எனும் திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படத்தை இக்கட்டுரையாளன் பார்க்கவில்லை. பார்க்கப் போவதும் இல்லை. ஆனால் இத்திரைப்படம் ராமன் நல்லவன் அல்ல என்றும் ராவணன் நல்லவன் என்பதுமான இரட்டையை முன்வைக்கிறது.
இது ஒன்றும் புதிதல்ல. ராமனைக் கீழ்மைப்படுத்தி ராவணனை நல்லவனாகவும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவனாகவும் சொல்லும் கதையாடல், காலனிய–மதமாற்ற சமூகவியல் உக்திகளில் ஒன்றாக தமிழகத்தில் விதைக்கப்பட்டது. எம்.ஆர்.ராதா என்கிற மூன்றாம்தர ‘நகைச்சுவை’ நடிகர் நடத்திய ‘கீமாயணம்’ என்கிற நாடகம் இந்தக் கருத்தை அபத்தமான மலினச்சுவை நாடகங்கள் மூலம் மக்களிடையே பரப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இதனால் மனம் புண்பட்டார். இந்த நாடகம் ஆபாசமான வெறுப்புப் பிரசாரம் என அவர் கருதியதால் அதைத் தடை செய்ய, ’நாடகம் நடத்துவது குறித்த சட்டத்தில்’ கடுமையான சட்டத் திருத்தம் கொண்டுவரவும் அவர் தயங்கவில்லை.
ராமாயணத்தை இனரீதியிலான காவியமாகப் பார்க்கும் பார்வையை பிரிட்டிஷார் மிக அக்கறையுடன் படித்த தமிழர்களிடம் தூவி வந்தார்கள். குறிப்பாக பிராம்மண சாதிகளை சாராத தமிழர்களிடம் அவர்கள் இப்பிரசாரத்தைச் செய்து வந்தார்கள்.
இதற்கெல்லாம் முன்னரே இங்கு ராவணன் குறித்த ஒரு தெளிவான பார்வை இருந்தது. ராவணன் சிறந்த சிவ பக்தன். அவன் வீணை இசையில் வல்லவனும் கூட. ராவணன் குறித்துக் கொடுக்கப்படும் சித்திரமானது முக்கியமானது. இன்றைக்கும் சிவ பூஜைகளில் ராவணனுக்கு ஒரு பகுதி பலன் அளிக்கப்பட வேண்டுமென்கிற மரபு சிவன் கோவில்களில் உண்டு.
நன்மை–தீமை ஆகியவற்றின் போராட்டத்தில் ஒரு மனிதனை அல்லது ஒரு இனக்குழுவை தீமையின் ஒட்டுமொத்த வடிவமாகக் காட்டும் தன்மை நம் காவிய மரபிலோ அல்லது பொது கலாசாரத்திலேயோ இல்லை. இந்துத்துவத்தின் அடிப்படையான தன்மை இது. எனவேதான் ஜிகாதி பயங்கரவாதத்தையும் வஹாபிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பரவலையும் எதிர்க்கும் இந்துத்துவர்கள், மேற்கத்திய வலதுசாரிகள் போல ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை எதிர்மறையாகச் சித்தரிக்காமல் எப்போதும் டாக்டர் அப்துல் கலாம், ஷாகீத் அஷ்ரப்துல்லா கான், இசை ஞானி பிஸ்மில்லா கான் ஆகியவர்களை அதன் மறுபக்கமாக, இஸ்லாமியருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்துக்கும் மாதிரியாக, முன்னிறுத்துவதைக் காண முடியும். இதையே நாம் ராவணன், துரியோதனன், கர்ணன் ஆகிய எதிர்மறை நாயகர்களைக் காட்டும் போக்கிலும் காண முடிகிறது. அவர்களிடமும் நல்ல குணங்கள் இருந்தன. தம்மளவில் அவர்கள் மிகச்சிறப்பான பெரிய ஆளுமைகளும் கூட. அப்பெரும் ஆளுமைத்தன்மையே அவர்களின் வீழ்ச்சியின் பெரும் சோகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைகிறது. இது காவிய உக்தி மட்டுமல்ல, பெரும்பாலான யதார்த்தச் சூழல்களிலும் சோகமான உண்மை. பெரும் ஆளுமைகளின் வீழ்ச்சிகள்தான் காவியங்களின் கருவுக்கு ஆழம் சேர்ப்பவை. நம் போன்ற சாதாரணர்களுக்கு முக்கியமான பாடம் அளிப்பவை. ‘எவ்வளவு பெரிய ராவணனே பெண்ணை அவள் விருப்பத்துக்கு எதிராகத் தூக்கி வந்து சிறைப்படுத்திய ஒரு குற்றத்தால் வீழ்ந்தானே…’ எனும் பேச்சை இன்றைக்கும் சர்வ சாதாரணமாகக் கடைத்தெருக்களில் கேட்க முடியும். இந்தக் கடைத்தெருப் பேச்சில் இருக்கும் சுய கலாசாரப் புரிதல்கூட இல்லாத கலாசார அறிவின்மையைக் கல்லூரிப் பேராசிரியர்களிடம் உருவாக்கியதில்தான் இருக்கிறது காலனிய உக்தியின் வெற்றி.
விஷயத்துக்கு வருவோம்.
ராமன் ஆரிய வந்தேறிகளின் தலைவன். ராவணனோ திராவிடன். இதில் நவ–அம்பேத்கரியவாதிகள் இன்னொரு அதிரடியையும் சேர்ப்பார்கள். திராவிடர்கள் நாகர்கள். யார் சொன்னார்கள்? பாபா சாகேப் அம்பேத்கரே கூறியிருக்கிறார்.
பாபா சாகேப் அம்பேத்கர் மிக முக்கியமான வரலாற்று ஆராய்ச்சியாளர். ஆரிய படையெடுப்பு இனவாதக் கோட்பாடுகளை எதிர்த்தவர். வலிமையான ஆதாரங்களுடன் அவற்றை உடைத்தெறிந்தவர். ஆனால் அன்றைக்கு ஆசாரவாதிகளை எதிர்க்க அவருக்கு ஒரு வலுவான பாரதிய மாற்று தேவைப்பட்டது. எனவே அவர் வைதிகப் பண்பாட்டின் சமூக தேக்கநிலைக்கு எதிரான ஒரு தரப்பாக நாகர்–பௌத்தர் என்கிற ஒன்றை உருவாக்கினார்.
சமூகத் தேக்கநிலை என்பதைப் பிறப்படிப்படையிலான வர்ண முறையின் இறுக்கம் என்றும் அதில் சடங்கு ரீதியாக பிராம்மணர்களின் மேலாதிக்கம் எனவும் கருதலாம். நாகர்கள் இந்தச் சடங்கு ரீதியிலான சமுதாயத்தின் வெளியே இருப்பவர்கள். இதற்கு எதிர்த் தரப்பாக அவர் புத்தரையும் புத்தரது தம்மத்தையும் நிலை நிறுத்தினார். என்ற போதிலும் ஒட்டுமொத்தமாகச் சமுதாயத் தேக்கநிலை என்பது இப்படிப்பட்ட குழு அடையாளங்களைத் தாண்டியது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதில் இனம் சார்ந்த அடையாளப்படுத்துதலை அவர் தவிர்த்தார்: ‘பிராம்மணன் ஆரியன் என்றால் தீண்டப்படத்தகாதவன் (என அடையாளப்படுத்தப்பட்டவனும்) ஆரியனே; பிராம்மணன் திராவிடன் என்றால் தீண்டப்படத்தகாதவன் (என அடையாளப்படுத்தப்பட்டவனும்) திராவிடனே; பிராம்மணன் நாகர் என்றால் தீண்டப்படத்தகாதவன் (என அடையாளப்படுத்தப்பட்டவனும்) நாகரே.’
இருப்பினும் ஆரியர் வேறு நாகர் (=திராவிடர்) வேறு எனும் இரட்டை அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டது. இதே கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்கெனவே நிராகரித்திருந்தார் என்றபோதிலும் இதை அவர் ஒரு வித பண்பாட்டுப் போராக அணுகினார் எனக் கருத இடமிருக்கிறது. ஆகவே பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட நாகர் ராவணன் – ஆரிய ராமன் என்கிற இரட்டைக்குள் விழுவதில் ஆச்சரியமில்லை.
இந்நிலையில் நாகர் என்பவர் யார்? அவர்களுக்கும் ராமனுக்கும் ராவணனுக்கும் கூடவே பௌத்தத்துக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது முக்கியமான ஒன்றாக அமையும்.
ராமனின் முன்னோர்களில் ஒருவன் புருகுச்சன். பவுநேயர் எனப்படும் கந்தர்வர்களால் நாகர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் மகா விஷ்ணுவிடம் சென்று தம்மை பாதுகாக்கும்படி கோரினர். அவர் தாம் சூரிய வம்சத்தில் மாந்தாதா எனும் அரசனின் மைந்தனான புருகுச்சன் என்பவனிடம் தாம் ஆவேசித்து நாகர்களை பாதுகாப்பதாகக் கூறினார். புருகுச்சன் நாகர்களுடன் இணைந்து போர் புரிந்து அவர்களை கந்தவர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்தான். நாகர்கள் தம் இளவரசியான நர்மதையை புருகுச்சனுக்கு மணம் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளைப் பாராயணம் செய்வோருக்கு நாகங்களால் எவ்வித தீங்கும் நேராது என்றும் வரம் அளித்தனர். இந்த நாக இளவரசிக்கும் சூரிய குல மன்னனுக்குமான வழித்தோன்றல்களிலேயே ராமர் தோன்றினார்.
ராவணனுக்கும் நாகர்களுக்கும் கடுமையான விரோதம் இருந்தது என்பதையும் ராமாயணம் குறிப்பிடுகிறது. நாகர்களின் பெரும் நகரமான போகவதி மீது படையெடுத்து அதை சூறையாடினான் ராவணன். அத்துடன் நாகர்களின் இளவரசனான தட்சகனின் மனைவியையும் கவர்ந்து கொண்டான். நாகர்களின் பிதாமகப் பேரரசனான வாசுகியை விரட்டியடித்தான். மேலும் ராமரின் முன்னோர் மட்டுமல்ல, ராமரின் குமரனான குசன் நாக இளவரசியான குமுதவதியை மணந்தான் என்றும் அறிகிறோம்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ராவணன் நாகர்களின் எதிரி என்பதும் ராமரோ நாகர் மக்களின் நண்பனாகவே விளங்கினார் என்பதும் தெளிவாகும்.
இது ஒருபுறமிருக்க நாகர்களுக்கும் பௌத்தத்துக்குமான உறவு எப்படி இருந்தது என்பதையும் பார்க்கலாம்.
பௌத்தம் அதன் தொடக்கத்தில் நாகர்களை மிகவும் கீழாகப் பார்த்தது. பாலி மொழியில் உள்ள விநய நூல்களில் ஒன்றான மகாவக்கோ (மகாவர்க்க) நூலின்படி புத்தர் பெருமான் கருணையின் வடிவமாகவே இருந்தாலும் கூட நாகர்களுக்கு சங்கத்தில் இணைந்து கொள்ள அனுமதி மறுத்துவிடுகிறார். அவர்களால் தம்மத்தை உணரமுடியாது என்பதே காரணமாம். அவரிடம் ஞானம் பெற வந்த நாகனிடம் பகவான் புத்தர் அவர்களுக்கு இந்த உடலில் தம்மத்தை உணர முடியாது என்று சொல்கிறார். ஆனால், ஒரு நாகன் குறிப்பிட்ட நாட்களில் தொடர்ந்து உபவாசம் இருந்து வர வேண்டும்; அப்படிப்பட்ட நாகன் இறந்த பின்னர் மறு ஜென்மத்தில் உயர்ந்த பிறப்பை அடைந்து அதன் பிறகு சங்கத்தில் இணைந்து தம்மத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார் புத்த பகவான். புத்தரை மாரன் தாக்கியபோது அவருக்குக் குடை விரித்துக் காத்தவன் நாக அரசனான முசலிந்தன் என்பான் என்ற போதிலும் நாகர்களுக்கு பௌத்த சங்கத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் சாக்கியமுனியான புத்த பகவான் கடுமையாகவே இருந்திருக்கிறார். அந்த நாகன் சென்ற பிறகு புத்த பெருமான் தம் சீடர்களிடம் விளக்கினார். ‘நாகர்கள் மனித வடிவத்தில் இருப்பது ஒருவித கண்கட்டு வித்தையன்றி வேறல்ல. தமக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நிச்சயமாக தெரியும் போது கலவையின் போதும் அவர்கள் மீண்டும் தங்கள் சுயவடிவில் மாறிவிடுவார்கள். எனவே பௌத்த துறவிகள் கவனமாக இருக்க வேண்டும்’ என்று எச்சரிக்கையும் செய்தார்.
இப்பார்வையில் நாகர்கள் புத்த பெருமானின் எதிரிகள் அல்ல. ஆனால் அவர்கள் பௌத்த தம்மத்தை அறிந்து கொள்ளவோ அல்லது சங்கத்தில் இணையவோ தகுதி அற்றவர்கள். எனவே அவர்கள் பௌத்தத்தின் விளிம்பு நிலைகளில் ஏக்கத்துடன் சேவைகளைச் செய்து மறு ஜென்மங்களில் பௌத்தராக மாறி உய்வெய்தலாம்.
இப்பார்வைக்கு வரலாற்றுச் சான்று இருப்பதாக சீன யாத்திரீகரான ஹுயூன் ஸ்வாங் கூறுகிறார். ராமகிராமம் எனும் இடத்தில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் ஒரு ஸ்தூபி உண்டு. இந்த ஸ்தூபியில் புத்தரின் புனித நினைவுப் பொருள் இருந்தது. அசோக சக்கரவர்த்தி அந்த ஸ்தூபியிலிருந்து அதை எடுத்து அதற்குத் தன் இடத்தில் ஒரு பெரிய ஸ்தூபி கட்ட வேண்டுமென்று விரும்பினார். அப்படி அவர் அதை அகற்றப் போனபோது ஏரியிலிருந்து வெளிப்பட்ட நாகர்கள் அதைத் தடுத்தனர். அப்போது நாகர்கள் அசோகனிடம் உரையாடினர். தாம் செய்த பாவ வினைகளால் தாம் நாகர்களாகப் பிறந்துவிட்டதாகவும் இப்போது இந்த ஸ்தூபியைப் பாதுகாக்கும் திருப்பணியைச் செய்வதால் தம் வினைகள் நீங்கி மறு ஜென்மத்தில் நற்பிறப்பு அடைவதே அவர்கள் வாழ்க்கை நோக்கம் என்றும் கூறினர். எனவே அந்த ஸ்தூபியில் இருக்கும் புனிதப் பொருளை எடுக்காதிருக்கும் படி அசோகரிடம் கூறினர். அசோகர் அதை ஏற்றுக்கொண்டு அந்த ஸ்தூபியை மேலும் நன்றாகக் கட்டி அங்கே இந்த நிகழ்ச்சியைக் கூறும் ஒரு கல்வெட்டையும் பொறித்தார் எனக் கூறுகிறார் ஏழாம் நூற்றாண்டின் சீன யாத்திரீகர்.
மெதுவாக நாகர்களையும் தம்மத்துக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொண்டு வர பௌத்தம் முடிவு செய்தது. புலனின்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நாக அரசனை இந்திரன் மிரட்ட அவன் சாக்கிய முனியின் தம்மத்தை ஏற்கும் காட்சி அமராவதி நாகார்ஜுன குண்டாவில் காணக்கிடைக்கிறது.
நாகர்களைச் சிறப்பாகக் காட்டும் காவியம் என்னும் முறையில் ஹர்ஷ சக்ரவர்த்தி எழுதிய நாகானந்தா முக்கியமானது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட காவியம். கருடனுக்கும் நாகர்களுக்குமான பகை வித்தியாதர இளவரசனான ஜுமுதவாகனனால் தீர்கிறது. ஜீமுதவாகனன் போதிசத்வர்களில் ஒருவன் கருடர்களுக்கும் நாகர்களுக்குமான பகையைத் தீர்க்க தன்னையே அளித்தவன் என்பது ஜாதகக் கதைகளில் வருவது. பௌத்தம் நாகர்களை நேர்மறையாகக் காட்ட ஆரம்பித்த நிலையில் எழுந்த ஜாதகக் கதை இது. இதையே காவியக் கருவாக்கியுள்ள ஹர்ஷர் இதனை வேத–பௌத்த தர்ம–தம்ம இணைப்புக்குப் பயன்படுத்துகிறார். இங்கு நாகர்களை ஹர்ஷர் சிவ பக்தர்களாகக் காட்டுகிறார். இது வரலாற்றிலும் உண்மையான ஒரு விஷயம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பின்னர் காவியமெங்கும் வேத தர்மத்தின் தெய்வங்களையே காவிய மாந்தர் வணங்குகின்றனர். இறுதியில் கருடனுக்குத் தன்னையே பலியாகத் தரும் வித்யாதர இளவரசன், அவனுக்காக உயிர் விடும் அவன் காதலி, அவன் குடும்பத்தினர் ஆகியோருக்கு கௌரியே ஆசிர்வாதம் அளிக்கிறாள்.
இவை அனைத்தையும் ஒருமித்துப் பார்க்கும்போது நாகர்–பௌத்தர்–பூர்வகுடி என்கிற கதையாடல் எப்படி இந்தியப் பண்பாடு காட்டும் வரலாற்று கலாசார யதார்த்தத்திலிருந்து விலகி உருவாக்கப்பட்ட காலனியக் கட்டுக்கதை என்பது புரியும். இந்தப் போலியான காலனியக் கட்டமைப்பு இருமையைத் தாண்டி நாகர்களை நாம் சிந்திக்க வேண்டும்.