Posted on Leave a comment

காவியக் கண்ணப்பர் | ஜடாயு

கண்ணப்ப நாயனாருடைய பரவசமூட்டும் கதையை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் அனேகமாக யாருமே இருக்க மாட்டார்கள். அவர் வாழ்ந்து சிவனருள் பெற்ற காளத்தி மலை எனப்படும் காளஹஸ்தி ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் இடத்தில் உள்ளதால் கண்ணப்பரை இந்த மூன்று பிரதேசங்களிலும் மிகவும் பக்தியுடன் போற்றி வணங்குகிறார்கள். அவரது திருக்கதையைக் கூறும் முழுநீளத் திரைப்படமான ‘பேடர கண்ணப்பா’ கன்னடத்தில்தான் முதலில் வெளிவந்தது. 1954ல் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் ராஜ்குமார் நடித்து தேசிய விருது பெற்ற இந்தப் பிரபலமான திரைப்படம் பின்பு 1955ல் ‘வேடன் கண்ணப்பன்’ என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கன்னட சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இந்தப் படம் கருதப் படுகிறது.

தாராசுரம் கோயில் சிற்பம்

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக தமிழ்நாட்டின் சிவாலயங்கள் எங்கும் கண்ணப்பர் வணங்கப்படுகிறார். ஆனால், பெரும்பாலான நாயன்மார்களும் வாழ்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்திற்கும் முன்பு பழங்காலத்திலிருந்தே சிவபக்தி மரபில் ஒரு பெரும் தொன்மமாக அவரது கதை வந்துகொண்டிருக்கிறது. திருமுறைகளில் பல இடங்களில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி…”

(திருவாசகம்)

“வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம்
காய் கணையினால் இடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே”

(திருஞான சம்பந்தர் தேவாரம்)

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள், செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும், பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே.

(திருநாவுக்கரசர் தேவாரம்)

வழிநடந்து தேய்ந்த செருப்பு
பசுபதி சிரத்தில் கூர்ச்சமாயிற்றே**
வாயினால் கொப்புளித்த நீர்   
திரிபுராந்தகரின் திவ்ய அபிஷேகமாயிற்றே
கொஞ்சம் கடித்த மாமிசத்துண்டின் மிச்சம்
புதிய நைவேத்தியமாயிற்றே
அஹோ! பக்தி எதைத்தான் செய்யாது
வனவேடன் பக்தர்களின் மணிமுடியானானே.

(ஆதிசங்கரரின் சிவானந்தலஹரி, 65)

(** அபிஷேகத்திற்கு முன் தெய்வத் திருமேனிகளின் மீது வைக்கப்படும் தர்ப்பைப்புல் கூர்ச்சம் எனப்படும்.)

பின்பு நாயன்மார்களின் சரிதங்களை முழுமையாகத் தொகுத்து பொ.யு பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரியபுராணமாக இயற்றுகிறார். இந்த நூலினுள் உள்ள கண்ணப்ப நாயனார் புராணத்தில் (181 பாடல்கள்), அதுகாறும் சிறு குறிப்புகளின் வழியாக அறியப்பட்டிருந்த இந்த சரிதத்திற்கு ஒரு முழுமையான காவியத்தன்மையை அளித்துவிடுகிறார். செறிவான நுண்தகவல்களாலும் தனது அற்புதமான கவித்துவத்தாலும் இக்கதைக்கு மகத்தான அளவில் சேக்கிழார் மெருகூட்டியிருக்கிறார். எங்களது பெங்களூர் இலக்கிய வாசிப்புக் குழுவின் வாராந்திர அமர்வுகளில் இந்தப் பகுதியை சில வாரங்கள் முன்பு வாசித்தபோது இதனை முழுவதுமாக உணர்ந்தோம். இக்கட்டுரையில் சற்றே விரிவாக அதைக் காண்போம்.

வன வேடர் வாழ்க்கை: 

சோழ மன்னனது அவையில் அமைச்சர் பதவியேற்று அரச அதிகாரத்துடன் வாழ்ந்த சேக்கிழார், வனவேடர்களின் ஊரையும் வாழ்க்கையையும் அதற்கே உரிய பொலிவுகளும் கொண்டாட்டங்களும் துலங்குமாறு வர்ணித்திருக்கிறார். எந்தவிதமான அருவருப்பையும் கூச்சத்தையும் வெளிப்படுத்தவில்லை.

காளத்தி மலை அமைந்துள்ள பகுதியான பொத்தப்பி நாடு என்ற மலைப் பிரதேசத்திற்கு இன்றும் அதே பெயர் புழக்கத்தில் உள்ளது. கண்ணப்பர் நாடு என்றே அதனை அறிமுகம் செய்கிறார் கவி. அப்பகுதியில் உள்ள உடுக்கூரு (Vutukuru) என்னும் கிராமம்தான் பெரியபுராணத்தில் வரும் உடுப்பூர் என்றும் ஒரு கருத்து உள்ளது.

மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.

யானைத் தந்தங்களை வேலிபோல நட்டுவைத்து அதுவே மதிளாக அமைந்தது உடுப்பூர். அங்கு கொடிய நீண்ட காதுகள் வளைந்து தொங்கும் வேட்டை நாய்களை வார்க்கயிற்றினால் மரங்களில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த விளா மரங்களின் கொம்புகளில் வார்க்கயிற்றால் செய்த வலைகள் தொங்கும். மலைநெல் முற்றத்தில் காய்ந்து கொண்டிருக்கும். அத்துடன், பன்றி, புலி, கரடி, காட்டுப்பசு, மான் முதலிய பார்வை மிருகங்கள் கட்டப்பட்டிருக்கும் (“பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும்”). வேடர்கள் காட்டு விலங்குகளின் குட்டிகளைப் பிடித்து வந்து, அவைகளை வீட்டு விலங்குகளாக்கி வளர்ப்பர். இவற்றைப் பார்வை மிருகம் என்பர். வேட்டையாடும்போது இவற்றைப் பார்வையாகக் காட்டி, அந்தந்த இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளைப் பிடிப்பர்.

“வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
‘கொல்’ ‘எறி’ ‘குத்து’ என்று ஆர்த்துக் குழுமிய ஓசை”

எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். கூடவே, உடுக்கும் ஊதுகொம்பும் பறையும் கூடிக் கலீரென ஒலித்திடும் ஓசைகளுக்கு மேலாக சுற்றியுள்ள மலைகளில் இரைந்தோடும் அருவி ஒலிகளும் ஆங்காங்குக் கேட்கும். இத்தகைய ஊரில் வாழும் வேடர்கள் மலைத் தேனும் ஊன் கலந்த சோறும் உணவாக உண்பவர்கள். நஞ்சு ஊட்டிய கூரிய கொடிய நெருப்புப் போலும் அம்பினைக் கைக் கொண்டவர்கள். அச்சம், அருள் என்ற இரண்டையுமே அறியாதவர்கள்.

மைச் செறிந்தனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன்தோலார்.

திண்ணன் பிறப்பும் இளமைப் பருவமும்:

இந்த நாட்டின் அதிபதி நாகன். அவன் மனைவி தத்தை. அவர்களுக்கு நீண்டநாள் குழந்தைப் பேறில்லை. தங்கள் குலதெய்வமான முருகன் கோயில் சென்று சேவல்களையும், மயில்களையும் காணிக்கையாக விடுத்து (பலிகொடுத்து அல்ல), குரவைக் கூத்தாடி வழிபாடு செய்கிறார்கள்.

வாரணச் சேவலோடும்வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப்புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.

(சுரும்பணி – வண்டுகள் மொய்க்கும், பேரணங்காடல்)

முருகன் அருளால் பிறந்த குழந்தையைத் தந்தை கையில் தூக்கிவைத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்

(அருமையால் – கடினமாக இருப்பதால், திண்சிலை – வலிய வில்.)

குழந்தை நடக்க ஆரம்பித்தவுடன் அதற்குப் பல்வேறு நகைகளை அணிவிக்கிறார்கள். தலையில் வெள்ளிப் பூண் திகழும் புலிநகச் சுட்டி. நெஞ்சில் முள்ளம் பன்றியின் முள்களை அரிந்து இடையிடையே கோத்த நீண்ட புலிப்பல் மாலை. காலில் யானைக் கொம்பினால் செய்த தண்டை. இந்தக் கோலத்துடன் திண்ணன் வீதியிலே விளையாடுகிறான். இப்படி வளர்ந்து வரும் நாளில் திண்ணனாரின் குழந்தை விளையாட்டுக்களை பக்திரசம் பொங்க சேக்கிழார் வர்ணிக்கிறார்.
ஒருமுறை பார்வை மிருகமாக அங்கிருந்த புலியின் வாயைக் குகை என்று நினைத்து திண்ணன் அதற்குள் கையை நீட்டி விடுகிறான். அன்புடைத் தந்தையான நாகன் அதுகண்டு பயந்துபோய், அப்படிச் செய்யாதே என்று ஒரு சிறு குச்சியைக் கையில் எடுத்து வீசுகிறான். குழந்தை அழுது கண்களில் நீர் சொரிகிறது. அதுகண்டு ஓடிவந்த தாய் எடுத்தணைத்து அந்தக் கண்ணீர் முத்துக்களை, தன்வாயால் முத்தம் கொடுத்து மாற்றுகிறாள். இக்காட்சியை சூரியன், சந்திரன் என்ற இருசுடர்களையும் கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்களில், பின்னர் நேர இருக்கும் தீங்கினைத் தீர்க்கப் போகின்ற அந்த அழகிய கண்களில், நீர் சொரிந்தது என்று சமத்காரமாகக் கூறுகிறார் கவி.

இப்படியே வளர்ந்து அவர் வில்வித்தை பயிலும் பருவத்தை அடைந்ததும், அதனை ஒரு பெரிய விழாவாக அந்த ஊரே கொண்டாடுகிறது. தலைவனின் மகன் வில்பிடிக்கப் போகிறான் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சியுடன் பொன்னும் மணியும் யானைக் கொம்பும் மயிற்பீலியும் புலித்தோலும் கள்ளும் இறைச்சியும் தேனும் கிழங்கும் கனியும் திரள்திரளாக எடுத்துக்கொண்டு வேடர்கள் வருகிறார்கள்.

மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல்நறவும் ஊனும் பழங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.

(தரளமும் – முத்தும், வரியின் – புலியின், கோடும் – தந்தமும், நறவும் – தேனும், துன்ற – அடர்ந்திருக்க.)

அந்த விழாவில் பல்வேறு சடங்குகளும் முறையாகச் செய்து வில்வித்தையை சிறப்பாகப் பயின்று தேர்ந்த வில்லாளியாகவும் வேட்டைத் தொழிலில் வல்லவராகவும் ஆகிவிடுகிறார் திண்ணனார்.


கன்னி வேட்டை 

அந்நிலையில், அங்குள்ள மலைப்புறங்களிலும், பயிர் விளையும் காடுகளிலும் எங்கும் கொடிய பன்றி, புலி, கரடி, காட்டுப்பசு, காட்டெருமை எனப் பல விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்தன. அதுகண்டு, மாதம்தோறும் செய்திடும் முறையான வேட்டை தாமதமானதால் இந்நிலை நேர்ந்தது என்று வேடர்கள் அனைவரும் திரண்டு, குலத்தலைவனான நாகனிடம் வந்து முறையிட்டார்கள். மூப்படைந்துவிட்டதால் முன்புபோல வேட்டையாடும் திறன் இல்லை, எனவே திண்ணனையே தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாகன் கூறினான். தேவராட்டி என்ற முதிய பெண்ணை அழைத்து, வேட்டை சிறக்க கானுறை தெய்வங்களுக்கு பலி ஊட்டுமாறு நாகன் வேண்ட, அவளும் வந்து அதனைச் செய்து முடித்தாள்.

“கோட்டமில் என் குலமைந்தன் திண்ணன், எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு, பூண்டு,
பூட்டுறு வெஞ்சிலை வேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான்; அவனுக் கென்றும்
வேட்டைவினை எனக்கு மேலாக வாய்த்து
வேறுபுலம் கவர் வென்றி மேவு மாறு,
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டு” என்றான் கவலையில்லான்.

(கோட்டம் – குற்றம், வெஞ்சிலை – கொடிய வில், வென்றி – வெற்றி, வேறு புலம் – மற்ற பிரதேசங்கள்.)

வேடர்களெல்லாரும் மிக மகிழ்ந்து திண்ணனாரின் கன்னி வேட்டைக்கான (முதல் வேட்டை) ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்கள்.

திண்ணனாரின் வேட்டைக் கோலத்தைப் பாதாதி கேசமாக சேக்கிழார் விரிவாக வர்ணிக்கிறார். மயில் இறகின் அடியில், குன்றி மணிகளை இடை இடையே வைத்து மயிர்க்கற்றையை நெற்றியில் பொலிவுபெறச் சாத்தினார்கள். பலவகை மணிகளைக் கோர்த்து இடையிடையே பன்றிக் கொம்புகளை இளம்பிறைத் துண்டங்கள் எனத் தொங்கவைத்து, அவற்றை வேங்கைப் புலியின் தோல் மேலாகப் பதித்து, தட்டை வடிவினதாக அமையப் பெற்ற சன்னவீரம் எனும் அணிகலனை மார்பிலே அணிவித்தார்கள். தோள்களில் வாகுவலயங்கள் மின்ன, பலவித காப்புக்கள் அணியப் பெற்று விளங்கிடும் முன் கையில், மழைமேகம்போல் அம்பு சொரியும் வில்லின் நாணினைப் பற்றிடும் கோதையைக் கட்டினார்கள். இடையில் புலித்தோல் ஆடையை உடுத்தி, முத்துக்கள் விளிம்பில் பதித்த நீண்ட உடைத் தோலினையும், சிவந்த நிறம்கொண்ட உறையுள் செருகப் பெற்ற சுழல் வாளையும் பொருத்தினார்கள்.

வீரக்கழல் காலின் விளங்க அணிந்து, பாதம்
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெருவில் வலங்கொண்டு, பணிந்து, திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து, ஏற்றி, வியந்து தாங்கி…

வீரக்கழல்களைக் காலில் பூட்டி, பாதம் பொருந்துமாறு தோல் செருப்பை அணிந்து, பளுவான பெரிய வில்லை வலம் வந்து வணங்கி எடுத்து, இரு காலும் நிலத்தில் மடித்து நின்று ஊன்றி நின்றார். நாணை ஏற்றி வில்லை வளைக்கும்தோறும் அதன் லாகவத்தை வியந்து நோக்கிக் கையில் எடுத்துக்கொண்டார்.

அவ்வாறு, ஆண் சிங்கம்போல எழுந்த திண்ணனார் முன்பு வேடர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்தது.

ஆளியேறு போல ஏகும் அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே.

இறுக்கிக் கட்டிய வார்க் கயிறுகளை அந்த வேடர்கள் தங்கள் முரட்டுக் கைகளில் ஏந்தி வந்தார்கள். கூடவே வேட்டை நாய்கள் இருபக்கங்களும் ஒன்றொடு ஒன்று பொருந்தாமல் ஓடி வந்துகொண்டிருந்தன. வெற்றித் தெய்வமான கொற்றவையின் திருவடி முன் போய் நீள்வதுபோல, அவை தங்கள் சிவந்த நாக்குகளைத் தொங்கவிட்டிருந்தன.

தனது பாசவலையை அறுப்பதற்காக அந்தக் காட்டுக்குள்ளே ஓடுகின்ற திண்ணனாருக்கு முன், காட்டை வளைப்பதற்காக வார்வலைகளைச் சுமந்து செல்லும் வேடர் கூட்டம் ஓடியது.

போர்வலைச் சிலைத்தொழில் புறத்திலே விளைப்ப, அச்
சார்வலைத் தொடக்கறுக்க ஏகும் ஐயர் தம் முனே
கார்வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார்வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்.

(சார்வலைத் தொடக்கறுக்க – தம் உள்ளத்துள் சார்கின்ற பாசவலைகளின் பந்தத்தை அறுக்க, ஐயர் – தலைவராகிய திண்ணனார், முனே – முன்னே, கார்வலைப் படுத்த குன்று – மேகங்கள் சூழ்ந்த மலை, கானமா – காட்டு மிருகங்கள், வார்வலைத் திறம் – வலைகளின் பொதி, வெற்பர் – மலைவாழ்பவர்.)

வேட்டை முறைமைப்படி, முதலில் மிருகங்கள் அதிகமாக உள்ள ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்து, அதற்கு வெளியே அவை ஓடிவிட முடியாதபடி வலையால் சுற்றி வளைத்து ஒரு சிறிய வேட்டைக் காட்டை உருவாக்குவார்கள். பின்பு அதற்குள்தான் வேட்டையாடுவார்கள். இந்தக் குறிப்பையே மேற்கூறிய பாடலில் கூறுகிறார்.
கொம்புகள் ஒலிக்கவும், பறைகளும் பம்பையும் முழங்கவும், அனைவரும் கூடி கைகளைத் தட்டுதலால் பேரோசை எழவும், வேட்டுவக் கூட்டம், அவ்வேட்டைக் காட்டினைப் பலபக்கமும் வளைத்துச் சென்றது. இந்த ஓசைகளால் காட்டிலுள்ள மிருகங்கள் கலங்கி எழுந்தன. காட்டுப் பன்றிகள், மானினங்கள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், கொடிய புலியின் வகைகள் எனப் பெருமிருகங்கள் பலவாக வெருண்டு எழுந்து பாய, வேடர்கள், அவற்றின்மேல் நெருங்கிச் சீறி அம்பினால் எய்து கொன்றார்கள்.

வெங்கணைபடு பிடர்கிழிபட விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கெழு சிரம் உருவிய பொழுது அடல் எயிறுற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்.

(கயவாய் – மான், கருமா – பன்றி, எயிறுற – பல்லில் சேர, புரைவன – போல்வன.)

கொடிய அம்பு பட்டதால் பிடரி கிழியும்படி விசையுடன் உருவப்பட்ட மான், அந்த அம்பு முன் போதலால் வாயினில் குருதி பெருகிச் சிவந்த நெருப்பைப்போலக் காட்சி தந்தது. அதன்பின் இன்னும் அம்புகள் விசையுடன் சென்று முன்னே வந்த பெரும் பன்றியின் தலையில் உருவின. அப்பன்றி அதே வீச்சில் சென்று முன்னாக வந்த புலியின் வாய்க்குள் அம்புடன் சேரத் தைத்தது. அக்காட்சி புலி, பன்றியைக் கௌவிக் கொண்டோடியதுபோல இருந்தது.

இத்தகைய பயங்கரமான வேட்டைத் தொழிலிலும் சில நியதிகளையும் வரம்புகளையும் அவர்கள் கடைப்பிடித்தனர். உடுக்கைபோலக் காலும் மடிந்த செவியும் உடைய யானைக் குட்டிகளை அவர்கள் தீண்டமாட்டார்கள். துள்ளி ஓடுகின்ற சிறு மிருகக் குட்டிகள் மீதும் அம்பு எய்ய மாட்டார்கள். கருவுற்றிருப்பதால் கால் தளர்ந்து ஓட முடியாது தளர்ந்து போய்விட்ட விலங்குகளையும், தங்களது பிணையை அணைத்துக்கொண்டு கூடியிருக்கும் மிருகங்களையும் அவர்கள் துயரம் செய்ய மாட்டார்கள்.

துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள் மிகைபடு கொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறுகொலைபுரி சிலை மறவோர்.

இப்படி வேட்டை நடந்து கொண்டிருக்கையில், யானைகளும் அச்சமுற, காடெங்கும் புழுதி பரவுமாறு ஒரு பன்றி எழுந்தது. மேகங்கள் இடி இடித்துக்கொண்டு போவதுபோலக் கர்ஜித்து, கண்களில் தீப்பொறி பறக்க வேடர்கள் கட்டிய வலைகள் எல்லாம் அறும்படியாக விசையோடு ஓடியது. அதனைத் துரத்திக் கொல்லும் உறுதியுடன் கூட்டத்தைப் பிரிந்து அந்தப் பன்றியின் பின்னே திண்ணனார் ஓடினார். நாணன், காடன் என்ற இரு வீரர்கள் மட்டும் தங்கள் தலைவரைப் பிரியாது தொடர்ந்து ஓடினர். ஓடிக்களைத்த பன்றி ஒரு மர நிழலில் மூச்சு வாங்கி நிற்க, அம்பெய்யாது வேகமுடன் ஓடி அப்பன்றியின் உடலைத் தனது சுழல்வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கினார் திண்ணனார். அச்சோ இவனல்லவோ ஆண்மகன் என்று காடனிடம் சொல்லி உளம் பூரித்தான் நாணன்.

வேடர்தம் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன்
“காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந்து எய்த்தோம்;
ஆடவன் கொன்றான் அச்சோ” என்றவர் அடியில் தாழ்ந்தார்.

(மாடு – பக்கத்தில், துணியாய் – துண்டாய், எய்த்தோம் – களைத்தோம்.)

சிவ தரிசனம்:

“இவ்வளவு தூரம் ஓடிவந்ததால் மிகவும் பசிக்கிறது. கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுப் பிறகு இப்பன்றியை நெருப்பில் காய்ச்சி உண்டு அதன்பின் வேட்டைக் காட்டைச் சென்று சேர்வோம்” என்று நாணனும் காடனும் கூறினர். சரியென்று திண்ணனும் சொல்ல, தண்ணீருக்காக, அந்த மலைச்சாரலில் உள்ள பொன்முகலி ஆற்றை நோக்கி அவர்கள் சென்றனர். வழியிலே தோன்றும் ஒரு குன்றைப் பார்த்த திண்ணன், அங்கு போவோம் என்று சொல்ல, அது குடுமித்தேவர் உறையும் மலை, அங்கே சென்று கும்பிடலாம் என்று நாணன் கூறினான்.

“நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம்” என்ன, நாணன்
“காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து, செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்” என்றான்.

திருக்காளத்தி மலையின் மேல் ஏற ஏற, தன் உடலில் உள்ள பாரம் எல்லாம் நீங்குவது போலவும், நெஞ்சத்தில் ஆசை பொங்கி இதுவரை இல்லாத வேறோர் விருப்பம் தோன்றுவது போலவும் உணர்வதாகத் திண்ணனார் கூறுகிறார்.

“ஆவதென்? இதனைக் கண்டு இங்(கு) அணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்! ஆசையும் பொங்கி, மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்;
தேவர் அங்கிருப்பது எங்கே? போகு?” என்றார் திண்ணனார் தாம்.

பிறகு மலைச்சாரலில் பொன்முகலி ஆற்றின் கரையை அடைந்ததும், சுமந்து வந்த பன்றியை அங்கு கிடத்தி, தீமூட்டி சமைக்க ஏற்பாடு செய்யுமாறு காடனிடம் கூறிவிட்டு, நாணனும் திண்ணனும் முன்னே செல்கின்றனர்.

தனக்கு முன்பாக நாணனும், தனது அன்பும் விரைந்து ஏறிச்செல்ல, காளத்தி மலையின் உச்சியை நோக்கித் திண்ணனார் அடிவைத்து நடக்கிறார். இந்தக்காட்சி சிவஞானிகள் தத்துவங்களாகிய படிகளில் ஏறி, பரம்பொருளாகிய சிவத்தைச் சென்றடைவதுபோல உள்ளது.

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி,
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
நீள்நிலை மலையை ஏறி, நேர்படச் செல்லும் போதில்.

(வரை – மலை, சோபானம் – படிகள்.)

சைவ சித்தாந்த மரபு பிரபஞ்சம் 96 தத்துவங்களால் ஆனது (தத்துவங்கள் என்பது உலகை இயக்கும் அக, புற சக்திகளைக் குறிக்கும்) என்றும் பரம்பொருளாகிய சிவம் இந்த அனைத்துத் தத்துவங்களுக்கும் அப்பால் உள்ளது என்றும் கூறுகிறது. அந்த சித்தாந்தக் கருத்தை இந்த இடத்தில் அற்புதமாக சேக்கிழார் பொருத்திக் காட்டுகிறார்.

இப்படிச் சென்ற திண்ணனார், குடுமித்தேவரின் திருவுருவத்தைக் காண்பதற்கு முன்னமேயே, இறைவனது கருணை கூர்ந்த பார்வை அவர்மீது பொருந்த, இப்பிறவியில் முன்னர் சார்ந்திருந்த வினைகள் அனைத்தும் நீங்கி, ஒப்பற்ற அன்புருவமாக ஆனார்.

தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்புருவம் ஆனார்.

ஓடிச் சென்று அப்பெருமானைக் கட்டித் தழுவினார். முகர்ந்து மகிழ்ந்தார். அவரது மேனியின் மயிர்க்கால்கள்தோறும் மகிழ்வு நிறைந்து பொங்கியது. மலர் போன்ற கண்களில் இருந்து அருவிபோல நீர் பொழிந்தது. “அடியேனுக்கு இவர் இங்கே அகப்பட்டாரே, அச்சோ!” என்று உவகையடைந்தார். (இக்கதைப் போக்கில் பின்னர் வரும் குறிப்புகளிலிருந்து குடுமித் தேவரின் திருவுருவம் முகலிங்கம் எனப்படும் லிங்கவடிவமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல சிவாலயங்களில், குறிப்பாக கர்நாடகக் கோயில்களில் மீசையுடன் கூடிய முகம் லிங்கத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்).

“ஐயனே, வேட்டுவச் சாதியார்போல, யானை, கரடி, புலி, சிங்கம் திரியும் இக்காட்டில் துணைக்கும் ஒருவரும் இல்லாமல் இப்படித் தனியே இருக்கிறீரே… கெட்டேன்!” என்று உள்ளம் பதைத்தார் திண்ணனார். பின்பு அங்கு பச்சிலையும் மலரும் இறைந்து கிடப்பதைப் பார்த்து, இந்த நற்செயலைச் செய்தது யாரோ என்று நாணனிடம் கேட்டார்.

பச்சிலை யோடு பூவும்பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ…?

‘‘முன்பு வேட்டையாட வந்தபோது ஒரு அந்தணர் இந்தப் பெருமானுக்கு நீராட்டிப் பூசை செய்ததை நான் பார்த்தேன்’’ என்று அவன் கூறினான்.

ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும்அவன் செய்தானாகும் என்றான்.

உடனே, இதுவே இவருக்கு இன்பமளிக்கும் செயல் என்று தன் மனத்துள் உறுதி செய்துகொண்ட திண்ணனாரின் மனதில் தாமும் அதேபோலப் பூசை செய்ய வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதே நேரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் இறைவனை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. போவதும் வருவதும் இறைவனை அணைத்துக் கொள்வதும் வைத்தகண்கள் மாறாமல் மீண்டும் மீண்டும் நின்று நோக்குவதுமாக, கன்றை விட்டு அகல மனமில்லாத தாய்ப்பசுபோல இருக்கிறது அவர் நிலை.

போதுவர் மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலின் நோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப் போல்வர்;
“நாதனே அமுது செய்ய நல்ல மெல்லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்” என்பார்.

(புனிற்றா – புனிற்று + ஆ – புதிதாகக் கன்றை ஈன்ற தாய்ப்பசு.)
பின்பு ஒருவழியாக, ‘‘நீர் அமுதுசெய்ய நானே போய் மெல்லிய இறைச்சி கொண்டுவருவேன்’’ என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார்.

சிவபூஜை:

நாணனும் திண்ணனாரும் உச்சியிலிருந்து கீழிறங்கி நதிக்கரைக்கு வருகிறார்கள். “தீயும் கடைந்து மூட்டி வைத்திருக்கிறேன், பன்றியின் உறுப்புகளையெல்லாம் உங்கள் குறிப்பின்படி பிரித்து வைத்திருக்கிறேன். ஏன் இவ்வளவு காலம் தாழ்த்திவிட்டீர்கள்?” என்று கேட்கிறான் காடன்.

அதற்கு நாகன், “ஐயோ, அதை ஏன் கேட்கிறாய்? இவன் மலைமேலே தேவரைக் கண்டதும், மரப்பொந்தைப் பிடித்த உடும்புபோல அவருடன் ஒட்டிக்கொண்டான். இப்போதும் கீழே வந்தது எதற்காக தெரியுமா? அந்தத் தேவர் தின்ன இறைச்சி கொண்டுபோவதற்காக. இனிமேல் இவன் நம்குலத் தலைமையை விட்டான். தேவருக்கே ஆட்பட்டுவிட்டான்” என்கிறான்.

“அங்கு இவன், மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு,
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்பென்ன நீங்கான்;
இங்கும் அத்தேவர் தின்ன இறைச்சி கொண்டேகப் போந்தான்
நம் குலத்தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு” என்றான்.

“திண்ணா! நீ எங்கள் குலமுதல்வன் அல்லவா? இப்படி செய்யலாமா?” எனக் கேட்கும் காடனின் முகத்தையும் பாராமல் தனது காரியத்தில் முனைந்திருக்கிறார் திண்ணனார். பன்றி இறைச்சியை நெருப்பிலிட்டு வதக்கி, அவற்றில் நன்கு வெந்த தசைகளை ஓர் அம்பில் கோத்து, நெருப்பில் இட்டுக் காய்ச்சி, சுவையைப் பரிசோதிப்பதற்காக அவற்றை வாயில் போட்டு அதுக்கிப் பதம் பார்த்து, மிகவும் சுவையுடையவற்றை தான் செய்து வைத்திருக்கும் தொன்னையில் இட்டுக் கொண்டிருக்கிறார். “இந்நேரம் இவனுக்குக் கடும்பசி இருக்கும், அதைப் பற்றிய பொருட்டே இல்லை. நமக்கும் பசி பிடுங்கித் தின்கிறது. இறைச்சியை நமக்குத் தரவேண்டும் என்றுகூட இவனுக்குத் தோன்றவில்லை” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு நாணனும் காடனும் வாய்பிளந்து நிற்கிறார்கள். இவனுக்கு ஏதோ தெய்வமயக்கம் ஏற்பட்டுவிட்டது. கீழிறங்கிப் போய் வேடுவர்களோடு தந்தை நாகனையும் தேவராட்டியையும் கூட்டிக்கொண்டு வருவோம் என்று முடிவு செய்து அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறார்கள்.

அவர்கள் போனதும் திண்ணனாருக்குத் தெரியவில்லை. கையில் தொன்னையை எடுத்துக்கொண்டு, வாயில் நதிநீரை நிரப்பிக்கொண்டு, தனது கொண்டையில் மலர்களைச் சொருகிக்கொண்டு பூசைக்கு விரைகிறார்.

கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊனமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி,
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

(கல்லை – தேக்கிலையால் செய்த தொன்னை, உன்னி – எண்ணி, பள்ளித்தாமம் – மலர்மாலை, குஞ்சி – கொண்டை, துதைய – நெருங்க.)

குடுமித்தேவரை வணங்கும் கண்ணப்பர். இதில் விமானத்துடன் கூடிய கோயில் சித்தரிக்கப் பட்டுள்ளது (தஞ்சைப் பெரிய கோயில் சிற்பம்)

 ஐயோ என் நாயனார் பசித்திருப்பாரே என்று பதைபதைப்புடன் சென்று, சிவலிங்கம் மீதிருந்த மலர்களைச் செருப்புக்காலால் அகற்றிவிட்டு, தன் நெஞ்சத்தில் விளைந்த அன்பையே உமிழ்வார்போல அபிஷேகம் செய்கிறார்.

இளைத்தனர் நாயனார் என்றுஈண்டச் சென்று எய்தி, வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு, முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி, வாயில் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போல, விமலனார் முடிமேல் விட்டார்.
(வெற்பின் – மலையில், முதல் – அனைத்திற்கும் ஆதியானவர்.)

பின்பு, மலர்களைச் சாற்றுகிறார். தான் கொண்டுவந்திருந்த தொன்னையை முன்பாக வைத்துப் பின்வருமாறு வேண்டுகிறார்:

பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ்விறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்தருளும் என்றார்.

இப்படிப் பரவசப்பட்டுத் திண்ணனார் நிற்க, மாலைப்போதும் வந்தது. அவரது பேரன்பைத் தன் கதிர்க்கரங்களால் வணங்கி, மலைக்கு அப்பால் சென்று சூரியன் மறைந்தான். இரவு கவிந்தது. கொடிய விலங்குகள் வரும் என்பதை நினைத்துக் கையினில் வில் தாங்கிக் கருமலைபோல நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார் திண்ணனார்.

செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்.

(சிலை – வில், வரை – மலை, மருங்கு – பக்கத்தில்.)

நிலவின் ஒளியில்லாத அந்த அமாவாசை இருட்டிலும், தீப மரங்களின் ஒளியும், புலனடக்கிய முனிவர்களின் தவத்தின் ஒளியும், குரங்குகள் மரப்பொந்துகளில் வைத்த மணிகளின் ஒளியும் சேர்ந்து வீச, அந்த மலைச்சாரலில் இரவென்பதே இல்லை.

செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணிவிளக்கொளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கியுள்ளார் அரும்பெருஞ் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவொன்றில்லை.

பொழுது விடியவும், பறவைகளின் ஒலி கேட்கவும், சூரியன் முழுதாக உதிக்கும் முன் வேட்டையை முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, காளத்தி நாதரைக் கைதொழுது வில்லும் அம்பும் ஏந்திப் புறப்பட்டார் திண்ணனார்.

காலைப் போதானதும், அங்கு வழக்கமாக வந்து ஆகம முறைப்படி சிறப்பாகப் பூசைசெய்யும் சிவகோசரியார் வருகிறார்.

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர் சிவகோசரியார்.

சிவபெருமான் திருமுன்பு இறைச்சித் துண்டுகள் இறைந்து கிடப்பதைப் பார்த்துப் பதைபதைத்து, “நேர்வரத் துணிவில்லாதே வேடுவரே இவ்வாறு செய்திருக்க வேண்டும், இறைவனே இதுவும் உன் திருவுள்ளமோ?” என்று கதறியழுகிறார். அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கித் தூய்மை செய்து, மீண்டும் நீராடி வந்து வேதமந்திரங்களை ஓதி, திருமஞ்சனம் முதலான சகல உபசாரங்களுடனும் தனது பூசையைச் செய்து முடிக்கிறார். பின்பு தனது தபோவனத்திற்குத் திரும்பிச் செல்கிறார்.

காலையில் கிளம்பிய திண்ணனார், தனியொருவராக வேட்டைக் காட்டில் திரிந்து, பன்றி, மான் முதலான பல விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பக்குவமாக சமைத்து எடுத்து வருகிறார். அந்தணரின் பூஜை நிர்மால்யங்களை அகற்றிவிட்டு, தம்முடைய பூசையை செய்து முடிக்கிறார்.

வந்து திருக்காளத்தி மலையேறி வனசரர்கள்
தந்தலைவனார், இமையோர் தலைவனார் தமையெய்தி,
அந்தணனார் பூசையினை முன்புபோல் அகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்முடிப்பார்.

உடும்பு இறைச்சி படைக்கும் திண்ணனார் (தஞ்சைப் பெரியகோயில் சிற்பம்)

இவ்வாறாக, திண்ணனார் பூசையும், சிவகோசரியார் பூசையும் மாறிமாறித் தொடர்ந்து நடந்து வந்தன. செய்தி கேள்விப்பட்டு திண்ணனாரின் தந்தையாகிய நாகனும் வேடர்களும் மலைமேல் ஏறிவந்து என்னென்னவோ செய்து பார்த்தனர். திண்ணனார் காளத்திநாதரைக் கணமும் பிரியேன் என்று தம் உறுதியில் நின்றார். சரி, இவன் நம் வழிக்கு வரமாட்டான் என்று முடிவு செய்து அவர்கள் வந்தவழியே திரும்பினர்.

சிவார்ப்பணம்:

திண்ணனாரின் பூசையைத் தீமை என்று கருதி ஒவ்வொரு நாளும் அகற்றிச் சுத்தம் செய்து வருகிறார் சிவகோசரியார். ஐந்தாவது நாள் பொறுக்காமல், இறைவனே இந்த அனாசாரத்தை நீரே நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். அன்றிரவு சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, அந்தணரே அப்பூசையைச் செய்பவன் சாதாரண வேடுவன் என்று தவறாக எண்ணாதீர் என்று அறிவுறுத்தித் திண்ணனாரின் அன்பு எத்தகையது என்றும் கூறுகிறார்.

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்றருள் செய்வார்.

“நாளை பூசையை முடித்தபின்பு நீ ஒளிந்திருந்து நடப்பதைப் பார். பின்பு, அவன் என்னிடம் கொண்டிருக்கும் அன்பின் சிறப்பையெல்லாம் நீ உணர்வாய்” என்று சிவபெருமான் கனவில் ஆணையிடுகிறார். சிவபெருமான் கனவில் கூறியதன் அதிசயத்தை நினைத்தபடியே ஆறாம் நாள் காலையில் வழக்கம்போல மலையேறிச் சென்று பூசையை முடித்துவிட்டு மறைந்து நின்று காத்திருக்கிறார் சிவகோசரியார்.

வழக்கம்போலத் தனது ஊனமுதையும் பூசைப் பொருட்களையும் எடுத்து வரும் திண்ணனார், வழியில் தீய நிமித்தங்களைக் காண்கிறார். என் ஐயனுக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலைப்பட்டுக்கொண்டே விரைகிறார். பக்கத்தில் வரும்போது இறைவனின் வலது திருக்கண்ணிலிருந்து உதிரம் வடிவதைப் பார்த்து ஓடோடி வருகிறார்.

அண்ணலார் திருக்காளத்திஅடிகளார் முனிவனார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத்திருநயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந்தோடி வந்தார்.

வந்தவர் கையில் இருந்த வில்லும் பூசனைப் பொருட்களும் சிதறி வீழ, நிலத்தில் விழுந்து புரண்டு அழுகிறார். பின்பு எழுந்து சென்று இறைவன் கண்களில் வழியும் இரத்தத்தைத் துடைக்கிறார். அப்போதும் அது நிற்கவில்லை என்பதைக் கண்டு மனம் பதைத்து யார் என் தலைவருக்கு இதைச் செய்தது என்று சுற்றுமுற்றும் சென்று தேடிப்பார்க்கிறார். ஒருவரையும் காணவில்லை. பின்பு மீளவந்து இறைவன் திருமேனியைக் கண்டு புலம்புகிறார்.

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்ததென்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்ததென்னோ
ஆவதொன்று அறிகிலேன்யான் என்செய்கேன் என்று பின்னும்.

(அடுத்ததென்னோ – நிகழ்ந்ததென்னவோ, மேவினார் – சேர்ந்தவர்கள்.)

பின்பு, “என்ன செய்தால் இக்கண்ணில் தோன்றும் இப்புண் தீரும்? இம்மலைச்சாரலில் உள்ள பச்சிலைகளைக் கொணர்ந்து மருந்தாகப் பிழிவேன்” என்று நிச்சயித்து, வனத்தில் வேகவேகமாக அலைந்து திரிந்து உடனடியாக மூலிகைகளைக் கொணர்ந்து மருந்தாகப் பிழிந்து பார்க்கிறார்.

புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநாயகன் பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.

அப்போதும் இரத்தம் வடிவது குறையவில்லை. இந்த நிலையில் இனிமேல் என்ன செய்வது? ஊனுக்கு ஊனே மருந்து என்ற கானகவாசிகளின் பட்டறிவு அவர் மனதிலே மின்னலடிக்கிறது.

“இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச்செயல்?” என்று பார்ப்பார்
“உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன்” ஏனும் உரைமுன் கண்டார்.

அடுத்த கணமே, மகிழ்ச்சி பொங்கும் உள்ளத்தோடு, ஓர் அம்பை எடுத்து அதனால் தன் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து அப்படியே குருதி கொட்டும் திருக்கண்களின் மீது அப்புகிறார்.

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்னிருந்து தம் கண்
முதற்சரம் மடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் அப்ப.

உடனே அந்தக் கண்ணில் கொட்டிக் கொண்டிருந்த இரத்தம் நின்று விடுகிறது. திண்ணனார் ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆகா நான் செய்தது நன்று என்று உள்ளம் பூரிக்கிறார்.

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தினின்று ஏறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி
“நன்று நான் செய்த இந்த மதி” என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்.

திண்ணனாரின் அன்பின் திறத்தை மேலும் காட்டவேண்டி, இறைவன் தனது இடக்கண்ணில் இரத்தம் வடியச் செய்கிறார். ஐயோ கெட்டேன் என்று அலறுகிறார் திண்ணனார், பின்பு, “அச்சமில்லை, என்னிடம் இதற்கு மருந்துண்டு; இடக்கண்ணையும் தோண்டி அப்புகிறேன்” என்று நிச்சயிக்கிறார்.

கண்டபின், “கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண்ணொன்று
புண்தரு குருதி நிற்க, மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்; மற்று இதனுக்கு அஞ்சேன்; மருந்து கைக்கண்டேன்; இன்னும்
உண்டொரு கண்; அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன்” என்று.

இறைவனது இடக்கண் இருக்குமிடத்திற்கு அடையாளமாக அங்கு தனது காலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணை அகழ்வதற்கு முற்படும் தருணத்தில், இறைவனது திருக்கை வெளித்தோன்றி, “கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க” என மூன்று முறை அமுதவாக்காக மொழிந்தது.

செங்கண் வெள்விடையின் பாகர், திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர், திருக்காளத்தி அற்புதர் திருக்கை, அன்பர்
தங்கண் முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.

திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கண்ணப்ப நாயனார் சோழர் கால செப்புத் திருமேனி சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இத்தருணத்தின் உணர்ச்சிகரம் அதில் அபாரமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. வலதுகண் அகழ்ந்து எடுக்கப்பட்ட முகம். அந்தக் கண்ணை ஏந்தியிருக்கிறது கரம். ஆயினும் முகத்தில் வேதனையின் சுவடு இல்லை, வாயில் பற்கள் சிறிதே வெளித்தோன்ற ஒரு தெய்வீகக் குறுநகை. இதனைப் படைத்த அமர சிற்பியின் கலைமேன்மையை என்ன சொல்லிப் புகழ்வது!

சிவபெருமான் கண்ணப்பரைத் தனது கையால் பிடித்துக்கொண்டு, எமக்கு வலப்புறமாக என்றென்றும் வீற்றிருப்பாய் என்று அருள் புரிந்தார்.

ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு, “என் வலத்தின்
மாறிலாய் நிற்க” என்று மன்னு பேரருள் புரிந்தார்.

இவ்வாறாகப் பெரியபுராணத்தின் கண்ணப்பர் சரிதை நிறைவுறுகிறது. தன்னளவில் ஒரு தனிக்காவியம் என்றே இதனைக் கூறலாம்.

கண்ணப்பர் சிற்பங்கள் சோழர் காலம் தொடங்கிப் பல கோயில்களிலும் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்திருக்கின்றன. சிவபக்தி மரபில் கண்ணப்பரின் மகத்தான இடமென்ன என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். எனவே இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இவற்றைக் கண்ணுறும் வரலாற்று “ஆய்வாளர்களில்” ஒரு சாரார், அரசனுக்காக வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே கண்ணப்பரின் உக்கிரமான பக்தியைக் காட்டும் இச்சிற்பங்களை அமைத்துள்ளார்கள் என்று ஒரு கோட்பாட்டை எந்த ஆதாரமுமின்றி முன்வைக்கிறார்கள். அந்தச் சிற்பங்களும் சரி, மேற்கண்ட காவியச் சித்தரிப்புகளும் சரி, ஆழமான பக்தி உணர்வின் தூண்டுதலால் மட்டுமே படைக்கப்பட்டிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்;
கேளார் கொல்? அந்தோ கிறிபட்டார் – கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்ற
கண்ணப்பராவார் கதை. 


(கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (பதினொன்றாம் திருமுறை)

Leave a Reply