Posted on Leave a comment

நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி – ஆமருவி தேவநாதன்


இந்திய விண்வெளித்துறையை அழிக்க நடந்த அமெரிக்கச் சதியில் பங்குகொண்டு, மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் உளவாளிகள் மூலம் இஸ்ரோவின் தன்னிகரில்லா விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வை விவரிப்பதே ‘Ready to fire’ என்னும் நூல். எழுதியவர் நம்பி நாராயணன் என்னும் ஏவுகணை விஞ்ஞானி.

இந்த நிகழ்வை, கேரளத்தின் அன்றைய காங்கிரஸ் முதலமைச்சர் கருணாகரனை வீழ்த்த ஏ.கே.அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி பயன்படுத்திக் கொண்டதும், அதற்காக தேசத்தின் மிகப்பெரிய திட்டத்தையே வீழ்த்தத் துணிந்ததும், அந்த முயற்சியில் கேரளக் காவல்துறையை வெறும் ஏவல் வேட்டை நாய் போல் பயன்படுத்தியதும், இண்டெலிஜன்ஸ் பீரோ என்னும் மத்தியப் புலனாய்வுத் துறையில் அமெரிக்க ஊடுருவலும் பக்கத்துக்குப் பக்கம் அதிர வைக்கின்றன.

க்ரயோஜெனிக் ராக்கெட் இஞ்சின் தயாரிக்க இந்தியா முயல்கிறது. அதற்கு ரஷ்யா உதவுகிறது. அந்த முயற்சியில் நம்பி நாராயணன் முன்னின்று செயல்படுகிறார். அமெரிக்கா தனது க்ரயோஜெனிக் இஞ்சினை மிக அதிக விலைக்கு விற்க முயல்கிறது (935 மில்லியன்). இந்தியா மறுத்து ரஷ்யாவிடம் 235 மில்லியனுக்கு வாங்குகிறது. இதனைத் தடுக்க இயலாத அமெரிக்கா மத்திய உளவுத்துறையை ஊடுருவி, இந்திய அதிகாரிகளை விலைக்கு வாங்கி, இந்திய விண்வெளி அறிஞர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தி, இதற்கு ஒரு மாநில அரசின் உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட பாட்டை விவரிக்கிறது இந்நூல்.

எளிமையான குடும்பப் பின்னணி கொண்ட நம்பி நாராயணன், சிறு வயதில் தந்தை தாய் இருவரையும் இழந்தது, பொறியாளராவது, கரும்பாலையில் பணியில் சேருவது, பின்னர் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்து பணியாற்றுவது என்று துவங்கும் நூல், நம்பியின் வாயிலாக அந்நாளைய விண்வெளி ஜாம்பவான்களான ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் முதலிய நட்சத்திரங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. விக்ரம் சாராபாயின் தன்னிகரில்லாத் தொண்டு, எப்பாடுபட்டாகிலும் பாரதத்தை விண்வெளித் துறையில் சிறந்த நாடாக்க வேண்டும் என்ற அவரது தணியாத தாகம், அதே உத்வேகத்தைத் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கும் ஏற்படுத்துவது என்ற அவரது எண்ணம் முதலியன பெருவியப்பளிப்பன.

நம்பி நாராயணன் தனது கதையைச் சொல்லும் வழியே இந்திய விண்வெளித்துறையின் வரலாற்றையும் சொல்லிச் செல்கிறார். தும்பாவில் Sounding Rocket ஏவப்பட்ட காலம் தொட்டு க்ரயோஜெனிக் இஞ்சின் பொருத்திய ராக்கெட் ஏவும் காலம் வரை இந்திய விண்வெளித்துறையின் அடுக்கடுக்கான வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சந்தித்த இடையூறுகளையும் வெற்றியடைவதற்கு எடுத்துக் கொண்ட சிரமங்களையும் விறுவிறுப்பான திரைப்படம் போன்று விவரித்துச் செல்கிறது நூல்.

இந்நூலின் மூலம் நம்பி மற்றும் அவருடன் பணியாற்றிய பொறியாளர்கள் முதல் களப்பணியாற்றிய வெல்டர், பிட்டர் முதலியோர் வரை அத்தனை ஊழியர்களின் பங்களிப்பும் ஆவணப்படுத்தப்படுகிறது. ஒருபுறம் சாராபாய், சத்திஷ் தவான் என்று ஜாம்பவான்கள், மறுபுறம் அதிகார அடுக்கில் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் என்று இரு வேறு நிலைகளில் உள்ள அனைவரும் பாரதத்தின் உன்னதம் கருதியே செயல்பட்டனர் என்பதைப் பார்க்கும்போது, தன்னலம் சிறிதும் அற்ற தியாகிகளைக் கொண்ட நமது பாரதத்தாயின் உன்னதத்தை உணரமுடிகிறது.

ஒரு வெல்டரை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறார் நம்பி. அங்கு மிகத் திறமையுடன் செயலாற்றுகிறார் அந்த வெல்டர். அவரது திறமையைப் பார்த்து பிரான்ஸ் நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள முயல்கிறது. வெல்டர் மறுத்துவிடுகிறார். நான் பாரதத்தின் சேவையையே விரும்புகிறேன் என்று மீண்டும் பாரதம் திரும்பிவிடுகிறார். வந்த சில ஆண்டுகளில் இறந்துவிடுகிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நம்பி அவரது வீட்டைப் பார்க்கிறார். மிகவும் எளிமையான வீடு. அதுவும் கடனில் உள்ளது. நம்பி நினைப்பது – இவர் பிரான்ஸின் வேலையை ஒப்புக் கொண்டிருந்தால் இந்த வீட்டை விடப் பெரிய அளவிலான பத்து வீடுகளைக் கட்டியிருக்க முடியுமே என்று வருந்துகிறார்.

இதைப் போலவே மற்றொரு பொறியாளர் பிரான்ஸ் வருகிறார். வந்தவுடன் பாரதத்தில் அவரது சிறு குழந்தை இறந்துவிடுகிறது. அந்தச் செய்தியை அவரது தந்தையாரும் நம்பியும் மறைத்துவிடுகின்றனர். குழந்தை இறந்த செய்தி தெரியாமல் பொறியாளர் பணியாற்றுகிறார். நம்பியும் பொறியாளரும் வாரயிறுதி நாட்களில் கடைகளுக்குச் செல்லும் போது பொறியாளர் தன் குழந்தைக்குப் பொம்மைகள் வாங்குகிறார். நம்பிக்கு அடக்கமுடியாத துக்கம். இறுதியில் பொறியாளர் பணி முடிந்து பாரதம் திரும்பியவுடன் செய்தியைத் தெரிவிக்கச் செய்கிறார் நம்பி. பொறியாளரும் நிதர்சனத்தை உணர்ந்து மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார். இப்படிப் பல தியாகங்கள், கண்ணீர் பனிக்கும் நிகழ்வுகள் என்று விரிகிறது நூல்.

தொழில்நுட்பப் பணியாளர்கள்தான் பாரதத்தாயின் உன்னதத்திற்கு உழைத்தார்களா என்னும் கேள்வி எழலாம். அந்நிலையில் டி.என்.சேஷன் என்னும் பேராளுமை முன்னின்று ‘நிர்வாகத்தினரும் அவ்வாறே’ என்று சொல்கிறது. பாரதத்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நெருடலான ஒப்பந்தம் தயாரித்தல், பிரான்ஸ் நாட்டின் விண்வெளித்துறையின் தலைமையுடன் மோதுதல், பிரதமரின் ஆணையைப் பெற்று மஹேந்திரகிரியில் விண்வெளித்துறைக்கு இடம் வாங்கிக்கொடுத்தல், ஊழல் புகார்களை விசாரித்தல் என்று பல துறைகளிலும் டி.என்.சேஷன் தனது அறிவுத்திறத்தையும் தேசபக்தியையும் பறைசாற்றுகிறார். நூலிற்கு முன்னுரையும் அளித்துள்ளார் சேஷன்.

நூல் வழியே விண்வெளித்துறை பற்றி நமக்குத் தெரியவருவன:

* மற்ற துறைகள் போன்றே போட்டி, பொறாமை, பழிவாங்குதல் முதலியவற்றால் சூழப்பட்டுள்ளது

* திறமை, கடின உழைப்பு, துறை சார்ந்த நுண்ணறிவு பெற்ற பொறியாளர்கள்

* உட்பூசல்களால் ஏற்படும் நேர, உழைப்பு இழப்புகள்

* பொறியாளர்களும் ஊழியர்களும் கத்தி மேல் நடப்பது போன்று மிகக் கவனத்துடன் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம்

* இஸ்ரோவில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தொழில் நுட்ப அறிவின்மை

நூல் வழியே வேறு பல செய்திகளும் கிட்டுகின்றன. அவை: காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களின் பதவி வெறியில் பாரதத்தைப் பலிகொடுக்கத் தயங்க மாட்டார்கள். தமிழகத்தில் நிறுவப்பட இருந்த ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றதற்கு அண்ணாதுரையின் அரசே காரணம்.

எம்.ஜி.ஆர். நமது விண்வெளித்துறைக்குச் செய்த நன்மையையும் விவரிக்கிறார் நம்பி.

காமராஜர் பற்றிய ஒரு நிகழ்வு மனதை உலுக்குகிறது. நம்பி நாராயணன் கல்லூரியில் படிக்கும்போது காமராஜர் தமிழக முதல்வர். அவரைக் கல்லூரியின் விழாவிற்கு அழைக்க விரும்புகிறார் நம்பி. திராவிடத் தாக்கம் மாணவர்களிடையே இருந்த நிலையில் பலர் ஏளனம் செய்கின்றனர். பொறியியல் கல்லூரியில் அறிஞர்களை அழைத்துப் பேச வைக்க வேண்டும். காமராஜர் 6ம் வகுப்பே பயின்றுள்ளார். தற்போது ‘அறிஞர்’ என்று வலம் வரும் அண்ணாதுரையை அழைப்பதே சரி என்று பேசுகிறார்கள். நம்பிக்குக் காமராஜரை அழைக்க விருப்பம். அவரைச் சந்திக்கிறார்.

‘தம்பி, சரியா வருமாண்ணேன். நான் படிக்கவே இல்ல. நீங்களோ இஞ்சினியரிங் காலேஜ் பசங்க. நல்லா படிச்சவங்களைக் கூப்புடுங்கண்ணேன்’ என்கிறார் முதலமைச்சர் காமராஜர்.

நம்பி வற்புறுத்தவும், காமராஜர் இசைகிறார். பேச்சு பெரும் வரவேற்பைப் பெறுகிறது.இப்படியும் ஒரு முதலமைச்சர் இருந்துள்ளாரா என்று எண்ண வைக்கும் நிகழ்வை அளிக்கிறார் நம்பி நாராயணன். இதற்கு நேர்மாறான அரசு பற்றிய செய்தியும் இடம்பெறுகிறது.

விக்ரம் சாராபாய் கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். அது கிழக்குக் கடற்கரையில் அமைவது, பூமியின் சுழற்சியால் ராக்கெட்டுக்கான எரிபொருள் சேமிப்புக்கு உதவும் மற்றும் அருகில் கடல் இருப்பதால் பாதுகாப்பானதும் என்பதால். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட அமைச்சர் மதியழகன்.

மற்றொரு சமயம் தமிழகக் கடற்கரையோரக் கிராமத்தை விட்டுத்தரச் செய்ய அவ்வூரில் உள்ள தேவாலயப் பாதிரியார் ஒப்புக்கொள்வதும், பின்னர் பின்வாங்குவதும் தற்காலத்தை நினைவுபடுத்துவன.

மிக அதிகமான தொழில் நுட்ப விவரங்கள் கொண்ட இந்த நூல் பல நேரங்களில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வதாகவும் அமைந்துள்ளது ஒரு குறையே.

இந்த நூலைப் படித்த பின் பாரதீயர்கள் நினைவில் கொள்ள வேண்டியது: ஒவ்வொரு முறை வெற்றிகரமாகப் பறக்கும் இஸ்ரோவின் ராக்கெட்டிலும், அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு மற்றும் தியாகம், பல வெளி நாடுகளின் சதிகள், அவற்றை முறியடித்த இந்திய விஞ்ஞானிகளின் திறமை முதலியன பயணிக்கின்றன என்பதே.

Leave a Reply