“சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவே இல்லை என்பதை சுஜாதாவுக்குச் சொல்ல விரும்புகிறேன்!”
“சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவில்லை என்பது என் இரண்டாவது மகனுக்குக்கூடத் தெரியும்!”
சாண்டில்யனின் வார்த்தைகளுக்கு சுஜாதாவின் பதில் எழுபதுகளில் ஒரு சின்ன சலசலப்பை உண்டாக்கிய கதை இப்போது வேண்டாம். ஆனால் மேற்சொன்ன சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொட்டதா இல்லையா என்பது கிடக்கட்டும். இந்தச் சென்னைக்கலகமே ஒரு சுவாரஸ்யமான சமாசாரம்தான்.
நாமெல்லாம் நன்கு அறிந்த 1857 சிப்பாய்க்கலகம் பெரும்பாலும் வடக்கு, மேற்குப் பகுதிகளில் நிகழ்ந்தது. அதன் சிற்சில தாக்கங்கள் மெட்ராசிலும் எதிரொலித்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, 1806ம் ஆண்டு இங்கே ஒரு ‘கச முசா’ நிகழ்ந்ததென்னவோ உண்மைதான்.
அப்போதைய மெட்ராஸ் ஆர்மியின் தலைமைக் கமாண்டராக இருந்த ஜெனெரல் சர் ஜான் கிராடாக் (General Sir John Craddock) செய்த காரியத்தினால் விளைந்தது வில்லங்கம். வேலூர்க்கோட்டையில் தன் சிப்பாய்களிடம் ஒரு ஆணையைப் போட்டார். இனி நெற்றியில் விபூதி குங்குமம் இடக்கூடாது, டர்பன் அணியக்கூடாது என்பதே அந்த ஆணை.
ஹிந்துப் படை வீரர்களோடு விட்டாரா? முஸ்லிம் சிப்பாய்களுக்கும் ஆணையிட்டார். தாடி மீசையை மழிக்கவேண்டும், மீசையை ட்ரிம் செய்துகொள்ளவும் வேண்டும், நிச்சயம் ரவுண்டு தொப்பி அணியவேண்டும்.
இவையெல்லாம் இருந்தால்தான் கிழக்கிந்திய கும்பினியின் படை வீரருக்கான அடையாளம் இருக்கும் என்று அவர் நம்பினார்.
கொதித்தெழுந்தனர் ஹிந்து முஸ்லிம் படைவீரர்கள். மதச்சின்னங்களை அழிப்பதோடு இல்லாமல் கிறிஸ்துவ முறைப்படி தொப்பியா!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவத்தோரு பேர் மெட்ராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பப்பட, இங்கே இரண்டு பேருக்கு 90 கசையடிகளும் மீதம் பத்தொன்பது பேருக்கு 50 கசையடிகளும் கொடுக்கப்பட்டன. அதோடு கும்பினியாரிடம் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்கவைக்கப்பட்டனர்.
இதெல்லாம் சகியாமல் சில படைவீரர்கள் 1806 மே மாதம் கலகம் செய்தனர். ஹிந்து முஸ்லிம் சிப்பாய்கள் 69வது ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 14 ஆஃபீஸர்களையும் 115 சாதாரண ஐரோப்பியப் படை வீரர்களையும் கொன்று போட்டனர். முக்கால்வாசி வீரர்கள் பாரக்ஸில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே, கலகம் செய்தவர்கள் வேலை தீர்த்துவிட்டனர். தமிழ் வீரம், முதுகில் குத்தும் கோழைத்தனம், மறவர் குலமெல்லாம் அதிகம் பார்க்கவில்லை போலும். கொல்லப்பட்டவர்களில் வேலூர்க் கோட்டையின் கமாண்டர் ஜான் ஃபான்கோர்ட்டும் ஒருவர் (Colonel St. John Fancourt). கலகக்காரர்கள் பொழுது விடியும்போது வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி மைசூர் சுல்தான் கொடியை ஏற்றி திப்புசுல்தானின் இரண்டாவது மகனான ஃபதே ஹைதரை (Fateh Hyder) ராஜாவாகப் பிரகடனம் செய்தனர்.
இதெல்லாம் ஒருநாள் கூத்துதான்.
மேஜர் கூப்ஸ் (Major Coops) என்னும் பிரிட்டிஷ் ஆஃபீசர் கோட்டையிலிருந்து தப்பி ஒரே ஓட்டமாக ஓடி ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் பட்டாலியனில் விஷயத்தை விளக்கினான். ஒன்பதே மணி நேரத்தில் சர் ராபர்ட் ரோலோ கில்லெசெப்பி (Sir Rollo Gillespie) என்னும் கமாண்டரின் தலைமையில் சரசரவென வேலூர்க் கோட்டையை வந்தடைந்தனர். அடுத்து கில்லெசெப்பி செய்த விஷயம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய ஜேம்ஸ் பாண்ட் வகை சாகசம்.
கோட்டையின் முக்கியக் கதவு கலகக்காரர்களால் காக்கப்பட்டுக்கிடக்க, இவர் உடும்பு கணக்காக சிலருடன் கோட்டை மதில் மேலேறித் தாக்குதலை ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் வந்துவிட்ட 69வது ரெஜிமெண்ட் குண்டு வைத்துக் கோட்டைக் கதவைப் பிளக்க, மெட்ராஸ் கேவல்ரியும் 19வது ரெஜிமெண்ட்டும் புகுந்து ரணகளம் செய்தார்கள். கலகக்காரர்கள் எதிர்த்து நிற்க முடியாதபடி அதிரடித் தாக்குதல். கண்ணில் பட்ட நூறு வீரர்களை ஆட்டு மந்தையாய் வெளியே இழுத்து வந்து அத்தனை பேரையும் விசாரணை ஏதுமின்றிச் சுட்டுத்தள்ளினார் கில்லெசெப்பி. மொத்தமாக 350 கலகக்காரர்கள் கொல்லப்பட, இன்னொரு 350 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள்.
கில்லெசெப்பி அப்போது சொன்னார், “இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்திருந்தால் இந்தியாவின் பிரிட்டிஷ் சரித்திரமே மாறியிருக்கும்!”
கலகம் முறியடிக்கப்பட்ட பின்னால் விசாரணை ஒன்று நிகழ்ந்தது. அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, ஆறு கலகக்காரர்கள் பீரங்கி முன் நிற்கவைக்கப்பட்டு வெடித்துச்சிதறடிக்கப்பட்டனர். ஐந்து பேர் ஒரு துப்பாக்கி ஸ்குவாடினால் சுடப்பட, இன்னும் எட்டு பேர் தூக்கிலிடப்பட, அதிர்ஷ்டம் வாய்ந்த கடைசி ஐந்து பேர் நாடு கடத்தப்பட்டனர். கலகத்தால் சுதாரித்துக்கொண்ட கும்பினி மூன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட்டையும் கலைத்துப்போட்டது. இந்தக் களேபரத்துக்கு ஆரம்பமான உடை விவகாரத்தைத் தொடங்கி வைத்த ஆஃபிசர்களை இங்கிலாந்து மறுபடி அழைத்துக்கொண்டது. வேலூர்க் கோட்டையில் சுகமாகவே சிறைவாசம் செய்துகொண்டிருந்த திப்புசுல்தான் வாரிசுகள் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.
இந்தக் கலகக் கூத்தினால் நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த மெட்ராஸ் கவர்னர் லார்ட் வில்லியம் பெண்டிங்க் (சென்னையின் இன்றைய சிங்காரவேலர் மாளிகையின் முன்னோடியான பெண்டிங்க் பில்டிங்கின் பேர் கொண்டவர்) இங்கிலாந்துக்கு வாபஸ் அழைக்கப்பட்டுவிட்டார்.
இந்த மெட்ராஸ் கலகத்தைப் பற்றிய நேரடிச்செய்தி நமக்குக் கிடைக்க உதவியது லேடி ஃபான்கோர்ட் (Lady Fancourt) எழுதிய டயரிக் குறிப்புகள்தான். இந்தக் கலகத்தை நேரில் கண்டவர். தன் குழந்தைகளுடன் தப்பிய இவரின் கணவர்தான் கலகக்காரர்களால் கொல்லப்பட்ட வேலூர்க் கொட்டையின் கமாண்டர் ஜான் ஃபான்கோர்ட்!
மெட்ராசுக்கு அருகில் நடந்த இந்தக் கலகத்துக்கும், பின்னாளில் சுமார் ஐம்பது வருடங்களுக்குப்பிறகு, அதாவது சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து என்று பெயர் பெற்ற, 1857ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி பாரக்பூரில் முதலில் ஆரம்பித்த சிப்பாய்க் கலகத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. 1857 சிப்பாய்க்கலகம், வேலூர் அளவுக்குச் சின்னதில்லை, பெரிய அளவில் நடந்த புரட்சி. இதில் புரட்சியாளர்கள் பஹதுர் ஷா சஃபரை இந்தியாவின் சக்கரவர்த்தி என்று சொல்லி, முகலாய ஆட்சி மீண்டும் மலர்ந்துவிட்டது என்று பிரகடனம் செய்தார்கள். நம் வேலூர் ஆசாமிகளும் திப்புவின் இரண்டாவது மகனை அரசராக ஆக்கினார்கள். மதப்பழக்கங்களைச் சீண்டிய விதத்திலேயே இரண்டு கலகமும் தொடங்கின.
இந்தச் சிப்பாய்க் கலகத்தின் விளைவால் பிரிட்டிஷ் அரசாங்கம் கவன்மெண்ட் ஆஃப் இந்தியா சட்டம் 1858ஐ இயற்றி இந்தியாவின் அரசுரிமையை முழுவதுமாக மகாராணியின் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தவிட்டது. ஒரு நல்ல நாள் நல்ல முகூர்த்தத்தில் கிழக்கிந்திய கம்பெனியை இழுத்து மூடச்சொல்லி உத்தரவும் ஆகியது.
இங்கேயும், அந்தக் கலகத்தின் தாக்கத்தில் சில சில்மிஷங்களும் அடக்குமுறைகளும் நடந்தன என்கிறது மெட்ராசின் சரித்திரம்.
1857ம் ஆண்டே ஹைதராபாத்தின் அரண்மனை, சையது ஹுசைன் என்னும் ஆசாமியை நகரி, காளஹஸ்தி, வெங்கடகிரி சமஸ்தானங்களுக்கு அனுப்பி பிரிட்டிஷாருக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டியது. ஹுசைன் அதோடு நில்லாமல் வட ஆற்காடு, சித்தூரில் எல்லாம் கலகத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டே போனார். இங்கே திருவல்லிக்கேணியில் ஷாஹிதி மஹால் என்னும் ஆற்காடு மன்னரின் அரண்மனையில் முஸ்லிம் அன்பர்கள் கூட்டம் கூடி அவரை ஹைத்ராபாத் நிஜாமுடன் சேர்ந்து கலகம் செய்யுமாறு வற்புறுத்தினார்கள். சய்யது ஹாமிட் ஜெல்லா என்னும் திருவல்லிக்கேணி வாசி ஒருவர் இந்தியப்படை வீரர்களைத் தூண்டி விடும்படியான பிட் நோட்டிசெல்லாம் விநியோகித்து மாட்டிக்கொண்டு ஏழு ஆண்டுகள் சிறைக்குப்போன கதையும் உண்டு. சேலம், கோயமுத்தூர் மலபாரிலெல்லாம்கூடச் சின்னச்சின்ன கலகம் ஏற்படத் தூண்டுதல்கள் நிகழ்ந்தாலும் அவையெல்லாம் வெகு சுலபமாக அடக்கப்பட்டன.
இதுபோல மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்வது என்று யோசித்த பிரிட்டிஷார் The Corps of Madras Volunteer
Guards என்னும் அமைப்பை உருவாக்கி (ஜூலை 2, 1857) அதில் 100 குதிரைப்படை 700 தரைப்படை வீர்ர்களை நியமித்து மெட்ராசைச் சுற்றி ரோந்து வர ஆரம்பித்தனர். இந்த அமைப்பு தொடர்ந்து, பின்னாளில், கூட்டம் கூடும் இடங்களில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும் உதவியது.
மெட்ராசில் உள்ள பிரிட்டிஷார் ஒன்று கூடி, கலகம் தங்களைப் பாதிக்காதவாறு காத்துவிட்டதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, காசு போட்டு மெமோரியல் ஹால் ஒன்றைக் கட்டினார்கள். கர்னல் ஜார்ஜ் வின்ஸ்காம் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கர்னல் ஹார்ஸ்லி என்பவரால் அருமையாகக் கட்டப்பட்ட அந்த இடம்தான் இன்றும் நம் பார்க் டவுனில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.
சுஜாதாவும் சரி சாண்டில்யனும் சரி, சிப்பாய்க்கலகம் சென்னையைத் தொடவே இல்லை என்று சொன்னதை முழுக்க சரி என்று சொல்லமுடியாது, வேண்டுமானால் ஏறக்குறைய சரி என்று சொல்லலாம்.
முக்கியக்குறிப்பு: 1857ன் மகத்தான விடுதலை எழுச்சியை சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்தனர். ஆனால் வீரசாவர்க்கர் வெளியாவதற்கு முன்பே பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப் பட்ட தனது நூலில் முதல் சுதந்திரப் போர் என்றே அதனை அடையாளப் படுத்தினார். அந்த நூல் நாடு முழுவதும் தேசபக்தர்களிடையே பெரும் உத்வேகத்தை உருவாக்கியது (தமிழில் ‘எரிமலை’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது). தற்போதைய இந்திய வரலாற்று நூல்கள் அனைத்திலும் முதல் சுதந்திரப் போர் (First War of Independence) என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப் படுகிறது.
ஆதாரக் குறிப்புகள்:
1. Championing
Enterprise by V Sriram
2. Madras and the 1858 Revolt by S Muthiah