Posted on Leave a comment

ஸ்ரீ கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | சந்தித்தவர்: அபாகி

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றில் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் பலருண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ கணேசன் ஜி. 1970ல் இருந்து ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக (முழுநேர ஊழியர்) இருந்து வருபவர். தமிழகத்தில் பல்வேறு ஹிந்து இயக்கப் பிரமுகர்களை உருவாக்கியவர். மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ போன்ற பல்வேறு பிரபலங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக மாற்றியவர். தற்போது, விவசாயிகளுக்கான இயக்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத அமைப்பாளர். ஏராளமான விவசாயிகளைத் தலைவர்களாக மாற்றிய பெருமை இவருக்குண்டு. உடல்நிலை தளர்ந்த நிலையிலும், திருச்சியை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்

சென்னைக்கு வந்திருந்த ஸ்ரீகணேசன் ஜியை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவற்றில் சில பகுதிகள் இங்கே:
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பில் எப்போது
சேர்ந்தீர்கள்?
1963ல்
குரோம்பேட்டையில்
இருந்தேன். அப்போது தி.நகர் பசுவுல்லா சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிச்சிக்கிட்டிருந்தேன். ரக்ஷாபந்தன் நேரத்தில் ஒரு நோன்பு வரும். அதனால எங்க பள்ளியில் அரை நாள் விடுமுறை விட்டார்கள். சாயங்காலம்தான் அந்த நோன்பு. அதனால வீட்டுல பூஜையெல்லாம் முடிச்சிட்டு 6 மணிக்கு வாங்கடான்னு சொன்னாங்க. ஏன்னா பெண்கள் விழாதான் அது. அதனால் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாண்டோம். கிரிக்கெட் முடிஞ்சிட்டுது. அப்புறம் திரும்ப வந்தோம். ஆறு மணிக்குத்தான வீட்டுல வரச் சொன்னாங்க, இன்னும் நேரம் இருக்கேன்னு பார்த்தோம்.
அப்போது மூணாவது வீட்டுப் பையன் சொன்னான், “டேய் இங்க நேத்து கபடி விளையாடினாங்கடா, பாக்கலாம்ன்னான். சரின்னு கபடி விளையாட்ற இடத்துக்கு போனோம். நாங்க போகும்போது எல்லாரும் அப்போதுதான் விளையாடிட்டு வரிசையா ரவுண்டா நின்னாங்க. எங்களையும் உக்காரச் சொன்னாரு. எங்கள் ஆரூயிர் தாய்நாடேன்னு ஒரு பாட்டை பாடினாரு. எல்லாரையும் அதைத் திரும்ப பாடச் சொன்னாரு.
அப்புறம் ஒரு அருமையான கதை சொன்னாரு. மகாத்மா காந்தி ஒரு கிராமத்துல நிதி திரட்டியபோது ஒரு சிறுமி ஒரு சின்ன பென்சில் கொடுத்தாராம். அதைத் தேடினது பத்திய கதை அது. ரொம்பவே கவர்ந்தது. கடைசியில் சமஸ்கிருத மொழியில் பிரார்த்தனை. அரை அரை வரியா சொல்லி திரும்ப சொல்லச் சொன்னாரு. முடிஞ்ச உடனே நாங்கள்லாம் சேரலாமான்னு கேட்டேன். நாளைல இருந்து வந்துடுனு சொன்னாரு.
சந்தா எவ்வளவுன்னு கேட்டேன்.
நாடு போன்ற ஒரு குடும்பம் இது. இந்த தேசத்த ஒரு குடும்பமாக்கணும். குடும்பத்துல ஒருத்தன உறுப்பினரா சேர்த்துக்க சந்தா உண்டான்னு சொன்னாரு. அப்ப நாளைக்கு வந்துட்றேன்னு சொன்னேன்.
எதுக்கு சார் இந்த சங்கம், நல்லா இருக்குன்னேன். நாளைக்கு கொஞ்சம் முன்னாடியே வந்துடுன்னு சொன்னார். நானும் அரை மணிநேரம் முன்னாடி போனேன். அவரும் வந்துட்டாரு.
எதுக்காக இந்த சங்கம்னு திரும்ப கேட்டேன். அதான் நேத்தே சொன்னேனே, “தேசத்த முழுக்க ஒரு குடும்பமாக்கணும். காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும். சிவபெருமான் நம்ம அப்பா. வடக்கே தக்ஷிணாமூர்த்தியா இருக்காரு. நம்ம அம்மா பார்வதி தெற்கே கன்னியாகுமரியா இருக்கா. நாமெல்லாம் சகோதரர்கள். உடன்பிறப்புகள். இந்த உணர்வு இருக்கும்போது இந்த நாடே உலகத்தில தலைசிறந்த நாடாகிடும்னு சொன்னாரு.
ஆனா அப்ப அதுமாதிரியெல்லாம் இல்ல. மொழி, மதம்னு ஒருபக்கம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், சண்டை. நம்மலாம் பாரத மாதாவின் குழந்தைகள். நம்ம எல்லாரும் ஒரு குடும்பம் ஆக்கணும். இதை எப்படிங்கய்யா செய்றது, சந்தாலாம் இல்லை, எப்படி உறுப்பினர் கணக்கு எடுக்கிறது, இது எப்படி செய்யமுடியும்னு கேட்டேன்.
செய்வோம்யா. இந்த
பூமில கடவுள் 24 மணிநேரத்த நமக்குக் கொடுத்திருக்கான். சாப்பிடறது, தண்ணி குடிக்கிறது, காத்த சுவாசிக்கிறதுக்குன்னு. அதுல ஒரே ஒரு மணி நேரத்தை இந்த நாட்டுக்காக நாம கொடுக்கணும், அதான்யா சந்தான்னு சொன்னாரு.
எப்படி வரணும் என்று என்றேன். “அப்படியே வரவேண்டியதுதான். செருப்ப அங்க வரிசையா கழட்டி போட்டுட்டு வரணும். ஒரு ரூபாய் செருப்பு இருக்கும், 5 ரூபாய் செருப்பு இருக்கும். 50 ரூபாய் செருப்பும் இருக்கும், 500 ரூபாய் செருப்புகூட இருக்கும். ஆனால் செருப்பு செருப்புதான. வந்து அங்க வரிசையா வெச்சிட்டு வரணும். கோயிலுக்குள்ள செருப்ப போட்டு போவோமா? அதுமாதிரிதான் ஒருமனப்பான்மையோடு வரணும். ஏன்னா, நாம பாரத மாதாவோட குழந்தை. நீ படிச்சவனா இருக்கலாம், படிக்காதவனா இருக்கலாம், உயர்ந்த சாதிய சேர்ந்தவனா இருக்கலாம், தாழ்த்தப்பட்ட சாதிய சேர்ந்தவனா இருக்கலாம். உயர்ந்த உத்தியோகம், தாழ்ந்த உத்தியோகம், தெருக்கூட்டுறவங்க, மளிகைக் கடை வச்சிருக்கிறவங்கன்னு எந்த வேறுபாடும் வரக்கூடாது. பாரத மாதாவோட குழந்தைன்னு வரணும். உடம்பால, மனசால, இந்த உணர்வோட வரணும். 24 நாளு மணி நேரத்துல 1 மணிநேரம், 24 நாள்ல ஒருநாள். அப்படி வரணும்னு சொன்னார்.
அப்படி வர ஆரம்பிச்சவன்தான். நானா போய்ச் சேர்ந்துட்டேன். அங்கே அப்போ சங்கத்த யாரு நடத்துனாங்கன்னா பிஜேபில சங்கர்ன்னு ஒருத்தர், ரயில்வேல வேலை பார்த்துட்டு, தீனதயாள் உபாத்தியாயா செத்துப் போன பிறகு, முழுநேரமா இருந்தாரு. அவரு அந்தப் பகுதில (சங்கத்துல) கார்யவாஹ் (செயலாளர்) ஆக இருந்தாரு. அவரு தம்பி தியாகராஜன். அவரும் சங்கத்துல இருந்தாரு. அவரு குரோம்பேட்டை நேரு நகர்ல இருந்தாரு. அவரு அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்தார்னு நினைக்கறேன், அதனால போஸ்ட் ஆபீஸ்வீடுனு அவங்க வீட்டைச் சொல்லுவாங்க. அவருதான் அந்த ஷாகாவ நடத்துனாரு. அவரு நடத்துன விதம் ரொம்பப் புடிச்சிருந்தது. அதனால, தானா போய்ச் சேர்ந்தேன்.
பிரச்சாரக்கா
எப்ப வந்தீங்க?
1970
சங்கத்தின் மூணாவது ஆண்டு பயிற்சிக்கு நாக்பூருக்குப் போயிருந்தேன். என்னுடன் ஒன்பது பேர் வந்திருந்தாங்க. இப்போது ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவராக இருக்கும் சேலம் குமாரசாமி உட்பட. முகாம் முடியும் நேரத்தில், மறைந்த சுப்பராவ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுல, ‘ஸ்ரீகணேஷ், உன்னை தூத்துக்குடிக்கு போட்டிருக்காங்க. அதனால இந்த மூணாவது ஆண்டு பயிற்சி முடிஞ்சவுடனே தூத்துக்குடிக்கு இந்த விலாசத்துக்கு வரவும். அங்க மனவாளசாமின்னு ஒருத்தரும், நெல்லையப்பன்னு ஒருத்தரும் இருப்பாங்க. அவங்க உங்கள வரவேற்பாங்கன்னு சொல்லியிருந்தார். ஆனா உண்மையில பிரச்சாரக்கா எப்ப வந்தேன்னா… 1970 ஏப்ரல் 23 அன்னிக்கு எனக்குக் கல்லூரியில் மூணாவது ஆண்டு கடைசி நாள் பரிட்சை. ஒரு மணிக்கு பரிட்சை எழுதி முடிச்சிட்டு, 2 மணிக்கு பையை எடுத்துக்கிட்டு, தஞ்சாவூர் காரியாலயத்துக்கு பஸ் ஏறிட்டேன். ஏன்னா நான் சங்கத்தில் இரண்டாவது ஆண்டு, முதல் ஆண்டுப் பயிற்சி முகாம்கள் முடிக்கும்போதே அப்போதைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் இராமகோபாலன் ஜி, ‘யாரெல்லாம் இந்தத் தேசம் முன்னேற்றத்துக்காக உழைக்க முடியும்?’னு கேட்டாரு. திரும்பிப் பார்க்காம கை தூக்கணும்னு சொன்னாரு. நிறைய பேர் கைதூக்கினோம். அதுல நானும் ஒருத்தன். இல. கணேசன், சுகுமார் எல்லாரும் கை தூக்கினோம். சுகுமார்னா, இப்போதைய பி.எம்.எஸ். அகில பாரதப் பொறுப்பாளர் சுகுமாரன் ஜி. ஏப்ரல் 23, 1970ல் தஞ்சாவூர் காரியாலயத்துக்குப் போயிட்டேன். அப்போது 100 மாணவர்களை ஷாகாக்குக் கொண்டுவரணும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ்ல கோபாலகிருஷ்ணன், T.R. நாராயணன் (இல. கணேசன் தங்கை வீட்டுக்காரர்), ராமரத்தினம் ஜி, வெங்கட்ராமன், அதே மாதிரி சுந்தர்ராஜன்னு ஒருத்தர் மானா மதுரை சாவடியில காரியாலயத்துல இருந்தாரு. இவங்கதான் 100 மாணவர்களை ஷாகாவுக்குக் கொண்டுவர முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம் மதுரைல சங்க சிக்ஷா வர்க (ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர பயிற்சி முகாம்) நடந்தது. அங்க ஐந்து, ஆறாவது நாள் இருந்து கணக்கை முடிச்சிட்டு, அங்கிருந்து கிளம்பி 8ம் தேதியோ என்னவோ சென்னைக்கு கிளம்பி வந்து 9ம் தேதி நாக்பூர் முகாமுக்குப் போனோம். அப்ப பிரச்சாரக்கா வந்தாச்சு.
அந்த நேரத்தில்
பிராந்திய பிரச்சாரக்காக
(
ஆர்.எஸ்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
இராம.கோபாலன்
ஜி இருந்தார்.
உங்களுக்கு அவரோடு
இருந்த அனுபவம்
பற்றி சொல்லுங்க
அவரோடு அனுபவம் 63வது வருஷமே தொடங்கியாச்சு.
இங்க சென்னை சாங்கிக் (கூடுகை) நடக்கும். கண்ணப்பர் ஹால், இல்லைன்னா சேத்துப்பட்டு, வடபகுதில இருக்கிற ரெயில்வே C.I.T. காலனில நடக்கும். இந்த சாங்கிக்ல விசேஷப் பயிற்சியும் நடக்கும். எல்லாத்திலேயும் கலந்துக்கிடுவோம். அங்கவச்சிதான் முதன்முதலா இராமகோபாலன் ஜியைப் பார்த்தோம். அங்க தேசபக்திக் கதைமலர்னு ஒண்ணு, விஜயபாரதம் (தியாகபூமி) வெளியிட்டாங்க. கனகராஜன்தான் அப்ப அதுக்கு ஆசிரியர். அதுல கப்பலோட்டிய தமிழன் செக்கிழுக்கிற படம்தான் அதன் முகப்பு அட்டையில போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தையும் வாங்கிட்டு, முதல்முறையா கோபால்ஜிகிட்ட பேசினோம். அதுதான் முதல் அத்தியாயத்தோட ஆரம்பம். அதுதான் பிரச்சாரக்கா வர்றதுக்கு கிடைத்த உணர்ச்சிகள்.
என்னோட முதல் முக்கிய சிக்ஷக் (ஆர்.எஸ்.எஸ். ஷாகா பொறுப்பாளர்) தியாகராஜன். அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அங்கே ஒரு வீட்டு மாடில எங்க ஷாகா (ஆர்.எஸ்.எஸ். கிளை) ஸ்வயம்சேவகர்களுக்கு உணவுன்னு சொன்னாங்க. எனக்கு அதுக்கு முன்னாடி அது மாதிரி எல்லாம் அனுபவம் கிடையாது. என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க. நானும் போயிருந்தேன். அங்க கோபால்ஜி வந்திருந்தாரு. அங்க சடகோபன்னு ஒருத்தர். பிற்காலத்தில் அவரும் பி.ஜே.பி. முழு நேரமா வந்தாரு. அவரும் இவரும் போஸ்ட் ஆபிஸ்ல செஞ்சுக்கிட்டு இருந்த தங்களுடைய வேலையை ராஜினாமா செஞ்சிட்டு DL படிச்சிட்டு இருந்தாங்க. அதையும் முடிச்சிட்டு, சேலம், கோவை ஆகிய இடங்கள்ளல்லாம் முழு நேரமா வந்தாரு. அவரு கோபால்ஜிகிட்ட பேசிட்டு இருந்தாரு. ‘நீங்கள்ளா கல்யாணம் பண்ணிட்டுதான் பிரச்சாரக் ஆகணும்னு சொன்னீங்க. நாங்கள்லாம் கல்யாணம் பண்ணிகிட்டோம். ஆனா நீங்க எப்ப பண்ணப்போறிங்கன்னு கேட்டாரு. உங்க வீட்லலாம் அதப் பத்தி கேக்கலயான்னு இராமகோபாலனைக் கேட்டாரு.
தேசத்துக்காக வந்திருக்கோம், அப்படி போகவேண்டியதுதான்னு இராமகோபாலன்ஜி சொன்னாரு. அப்பதான் எனக்குத் தெரியும், அவர் திருமணம் ஆகாம பிரச்சாரக்கா ஆனவர்னு. அதுக்கப்புறம் ஷாகாவுல பாப்போம்.
பொத்தேரில ஒரு காரியாலயம் இருக்கு. அந்த காரியாலயத்துல அவரு இருந்தாரு. நான் அங்கே போவேன். நான் மயிலாடுதுறைக்கு கல்லூரிக்கு போயிட்டேன். அப்ப சென்னைக்கு ஏதாவது காரியமா வந்தேன்னா அங்க போவேன். அதுக்குள்ள எப்படியோ நட்பு வந்துருச்சு. அப்படியே போயிட்டு வருவேன். அங்க சீனிவாசன், கண்ணப்பான்னு ஒருத்தர், குஸ்தியெல்லாம் நல்லாப் போடுவாரு இவரு, அவங்கல்லாம் அங்க இருந்தாங்க. என்னை சாப்பிடுனு சொல்வாரு. இரு இரு, பேசிட்டுப் போலாம்னு சொல்வாரு. அப்படியே போச்சு.
அதுக்கு அப்புறம்தான் மயிலாடுதுறைக்குப் போய் முதல் வருஷப் பயிற்சி, இரண்டாவது வருஷப் பயிற்சி, மூணாவது வருஷப் பயிற்சி எல்லாம். அப்புறம் மயிலாடுதுறைக்கு வருஷத்துக்கு ஒருதரம் அவரு வருவாரு. அப்ப அங்க ஷாகா ஆரம்பிச்சாச்சு. அந்த ஷாகா ஆரம்பிச்சி இரண்டாவது வருஷம்தான் பாஸ்கர்ராவ் அங்க பிரச்சாரக் ஆனார். அதுக்கு முன்னாடிலாம் அங்க கோபால்ஜி வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்திருவாரு. வல்லநாடு கோயில்ல நடந்தது. நாற்பது ஐம்பதுபேர் வருவாங்க. நானே அதை இரண்டா பிரிச்சி கல்லூரி மாணவர்களுக்குன்னு தனியா பயிற்சி கொடுப்பேன். அப்ப இராமகோபாலனுடைய அக்கா கூட இருந்தாங்க. அவங்க திருவெற்றியூர்ல கல்யாணம் ஆகி இருந்தாங்க. ஒருதடவை அவர் தன்னோட செருப்பை எடுத்துட்டு வந்துரு போலாம்னு சொன்னாரு. அதாவது வெளியே நின்னுட்டுப் பேசிட்டு இருந்தாரு. நான் அவரோட செருப்பைக் கால்ல போட்டுட்டு இருந்தேன். செருப்பு ரொம்ப பொருந்தியிருக்கே. என்னோட செருப்பும் நல்லாப் பொருந்தியிருக்கு, பிரச்சாரக்கா வர்றதுக்கும் எல்லாம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரு. அப்ப அது புரியல. சிந்திக்க சிந்திக்கத்தான் எல்லாம் புரிஞ்சது.
ஷாகால அவரு பேசினால் பொறி பறக்கும். அதுக்கு அப்புறம் பயிற்சி. ஒரு முகாமில் இன்ஸ்பெக்ஷன். எல்லாரும் அவங்க அவங்க பொருட்களை எடுத்து வைக்கணும்னு சொன்னாங்க. இராமகோபால்ஜி, இன்னும் இரண்டு பேரு வருவாங்கன்னு சொன்னாங்க. அப்ப என்னோட பொருட்களை கோபால்ஜி பார்த்தாரு. இந்த மூஞ்சிக்கு பவுடர் கேக்குதான்னு சொன்னாரு. விபூதி வேற பவுடர் வேறப்பான்னார். அன்னிக்கு தூக்கிப் போட்டதுதான் அந்த பான்ஸ் பவுடரை. அப்புறம் போடறதே இல்லை. அப்புறம் கல்லூரிப் படிப்பு இரண்டு வருஷம். அப்பல்லாம் பவுடர் இல்லாம மெட்ராஸ்ல பள்ளிக்கூடத்துக்குக்கூட போகவே முடியாது. நம்ம உணர்வு அப்படி இருக்கும். என்னவோ மாதிரி இருக்கேன்னு தோணும். அப்ப கூட பவுடர் போட்டதில்ல. அவரு சொல்லிட்டாரு, அப்படியே பவுடரை விட்டாச்சு. அப்புறம், ‘என்னாச்சு, ரெடியாய்ட்டியா, என்ன பண்றஅப்படின்னு அடிக்கடி கேப்பாரு.
அதுக்கு அப்புறம் எமர்ஜென்சி பீரியட்லாம் வந்தது. தூத்துக்குடிக்கு பிரச்சாரக்கா போயிருக்கோம். தூத்துக்குடிக்கு வருஷத்துக்கு மூணு தடவை போயிடுவாரு. திருச்செந்தூருக்கு மூணு தடவை வந்து பேசியிருக்காரு. தூத்துக்குடில, விளாத்திகுளத்துல, ஸ்ரீவைகுண்டத்துல, கோவில்பட்டிலன்னு எல்லா இடங்கள்லயும் பேசி இருக்காரு. விளாத்திகுளத்துல ஒரு தி..காரர் வீட்ல தங்கியிருந்தாரு. தி..காரரா இருந்தாலும் ரொம்ப ஆதரவாளரா மாறிட்டாரு. அப்படி என்னைப் பார்க்கிறதுக்காக வந்தேன்னுதான் சொல்லுவாரு. ஆனா, சங்க வேலையா திட்டம் போட்டுதான் வருவாரு எப்பவும். சுப்பராவ்தான் திட்டம்போட்டே கொடுப்பாரு. மாநில பிரச்சாரக் வர்றாரு, அதெல்லாம் அரேஞ்ச் பண்ணுங்கன்னு சொல்லிடுவாரு. நல்லா வேலை செஞ்சா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பத்து பேரு, இருபது பேரு, முப்பது பேரு இருப்பாங்க. அவரு பேரச் சொன்னா போதும், பெரிய மாற்றம் வந்துடும். அதுமாதிரிதான் தர்மபுரில. அப்பலாம் சைக்கிள் ஓட்டமுடியாது. சைக்கிள்லாம் கொடுக்கமாட்டாங்க. அப்படி கொடுத்தாலும் ஒண்ணுதான் கிடைக்கும். மணல்ல வச்சி மிதிக்க முடியாது. ஆனா அவரு நாலு பேர வச்சி ஓட்டிக்கிட்டு போவாரு. அப்படியே திருச்செந்தூர். அப்படி இருக்கும்போது அவரு பூஜை பண்ற முறை, தினசரி அனுஷ்டானங்கள்ல கரெக்டா இருப்பாரு. இதெல்லாம் அவரைப் பார்த்து ஒரு இம்ப்ரெஷன், அவர மாதிரி வரணும்னு. அவரு கூட்டம் நடத்தினா போதும், ஆள் வந்துரும். அது அப்படியே ஒரு பெரிய மார்க்கத்துல என்னைக் கொண்டுபோய் விட்டிச்சி.
சுந்தர.லட்சுமணனை
(
ஆர்.எஸ்.எஸ்.
பிரச்சாரகர், சேவாபாரதி
அகில பாரத
பொறுப்பாளர்) சங்கத்துக்கு
கொண்டுவந்தது நீங்கதானே?
அப்ப நான் தூத்துக்குடில பிரச்சாரக்கா இருந்தேன். இடிந்தகரைல பெரிய மதமாற்று வேலையெல்லாம் நடந்துடுச்சு. அப்ப தாய்மதம் திரும்புதல்னு ஒரு ஷாகா இருக்கு, வான்னு சொல்லிட்டாரு. நானும் போயிட்டேன். பகவான் அப்படிங்கிறவர் அங்க வேலை பாத்தாரு. அப்ப சுந்தர லட்சுமணன் அப்பா சுந்தரம்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அப்ப, ‘ கணேசா, திருச்செந்தூர்ல ஒரு ஷாகா ஆரம்பிக்கணும்னு சொன்னல்ல, உனக்கு ஒருத்தர அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்னு சொன்னாரு.
சுந்தரம்ஜியிடம் பேசினேன். அவரு, ‘இதுமாதிரி பள்ளிக்கூடத்தை நடத்துறேன். இந்தக் குழந்தைகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கிறேன். நல்ல விஷயங்கள்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். வாங்க, நாம RSS இந்துக்களை சேர்த்து நடத்தலாம்னு சொன்னாரு. அதனால அங்கபோய் அவரைத் தொடர்புகொண்டேன். நான் அவரைத் தேடிப் போனேன். மார்கழி மாசம் 1ஆம் தேதிதான் போனேன்னு நினைக்கிறேன். அப்ப அவரு பையன்ங்களை அழைச்சிக்கிட்டுக் குழுவா திருப்பாவை, திருவெம்பாவை பாடிட்டுப் போயிட்டு இருந்தாரு. அவரு வீட்டுலேயே தங்கச் சொன்னாரு. சாப்பாடு அவரு வீட்டுல. அப்ப சுந்தர.லட்சுமணன் காலேஜ்ல பி.யு.சி. படிச்சிட்டு இருந்தாரு. அவரோட ஸ்கூல்லயே ஷாகா ஆரம்பிச்சோம். அவரு வீட்டுப் பையங்க, பக்கத்து வீட்டுப் பையங்க எல்லாரும் சேர்த்துக்கிட்டு ஷாகா ஆரம்பிச்சு, அப்படியே 50, 60 பேர் ஆயிட்டோம். அப்ப நான் திருச்செந்தூர்லேயே தங்கிடலாம்னு முடிவு பண்ணினேன். அப்ப அவரு வீடு அங்க இருந்தது. முருகானந்தம் டிரெஸ்ட்னு ஒண்ணகூட அவரு நடத்திட்டு இருந்தாரு. அதுல மேல ஐந்து ரூம் வச்சிருந்தாரு. அதுல ஒரு ரூம் கொடுத்தாரு. அதனால, காலை வேளைல எழுந்திச்சு, திருச்செந்தூர் நாழிக் கிணறு எல்லாம் சுத்திக் குளிச்சிட்டு, காலைல வெளியே போயிட்டு, மத்தியானம் வந்துருவேன். அப்புறம் சாயங்காலம் ஷாகா நடக்கும். அதுல அப்படியே சுந்தர.லட்சுமணன் முக்கிய சிக்ஷக்கா ஆயிட்டாரு. அந்த ஆண்டுப் பயிற்சி வந்தது. லட்சுமணனைக் கூப்பிட்டேன். நான் வரேன்னும் சுந்தரம்ஜி சொன்னாரு. என் பையன் சின்னபையன்னு சொன்னாரு. ‘இல்ல இல்ல, உங்க பையனை முதல்ல நீங்க அனுப்புங்க. நீங்க அடுத்த வருஷம் வாங்கன்னு சொன்னேன். சுந்தர.லட்சுமணனோட தாத்தா, பாட்டி ரெண்டுபேரும் இருந்தாங்க. அம்மாவோட அண்ணா, தாத்தா அவங்க ரெண்டு பேரு, மொத்தம் ஐந்துபேரும் மூணு நாள் தங்குறோம்னு சொல்லிட்டு, மொத்தம் முப்பது நாளும் தங்கிட்டாங்க. ஒண்ணு ரெண்டு நாள் தவிர மற்ற எல்லா நாட்களும் தங்கிட்டாங்க. ஆசிரியர் பயிற்சி முடிச்சிருந்தாங்க. விருதுலாம் கூட வாங்கினாங்க. அவங்க பெரிய அம்மாவா இருந்து எல்லாருக்கும் வழிகாட்டினாங்க. நான் வேற ஊருக்கு மாற்றலான பிறகு இரண்டாவது பி.பி.. முடிச்சாரு. மூணாவது வருஷம் முடிச்சாரு. அப்புறம் எமர்ஜென்ஸி பீரியட்ல பிரச்சாரக்கா வந்தாரு.
எமர்ஜென்ஸி
நேரத்தில் எப்படி
வேலை செய்தீங்க?
எமர்ஜென்ஸி பீரியட்ல தென்சென்னைதான் நம்ம இடம். தென்சென்னைல கிழக்குப் பகுதிதான் இந்தக் காரியாலயத்துல இருந்தது. சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ராயப்பேட்டை, டிரிப்ளிகேன், மயிலாப்பூர், அப்புறம் மௌன்ட் ரோடு, அடையார் வரைக்கும். இந்த ஏரியாவை நாலா பிரிச்சிருந்தாங்க. இந்தப் பகுதிக்கு நான். வடபகுதிக்கு சேதுபதி பத்மநாபன், கிழக்குப் பகுதி பீஷ்மாச்சாரி, இப்ப வெளிநாட்டில் பிரச்சாரக்கா இருக்காரு. ஹைதராபாத்ல இருந்து பிரச்சாரக்காக வந்தாரு. மேற்குப் பகுதிக்கு சண்முகநாதன்ஜி. நாலுபேருகிட்டயும் ஒப்படைச்சாங்க.
எமர்ஜென்ஸி
அறிவித்த நேரத்தில்
எங்கிருந்தீங்க?
எமர்ஜென்ஸி அறிவித்த சமயத்துல, எமர்ஜென்ஸி மாதிரி வரும் என்று சொல்லப்பட்டிருந்தது. எனக்கு அதைப் பத்தியெல்லாம் அவ்வளவு தெரியாது. எமர்ஜென்ஸி அறிவிக்கும்போது நான் இங்கேதான் இருந்தேன். காரியாலயம்கூட இங்கதான் இருந்தது. இடிக்கப்படுவதற்கு முன்னாடியே இதை வாங்கிட்டோம். இதை சீல் வச்சிருவாங்களோன்னு இருக்கோம். எமர்ஜென்ஸி காலைலதான் அறிவிக்கிறாங்க. தினத்தந்தி நாளிதழ் முதல்பக்கத்துல RSS அலுவலகம் சீல் வைக்கப்பட்டதுன்னு செய்தி வெளியிட்டிருந்தாங்க. ஆச்சரியமாக இல்லை? இன்னிக்குதான் அறிவிச்சி இப்பதான் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்குள்ள தினத்தந்தி பேப்பர்ல செய்தி இருக்கு. நாங்க எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருந்தோம். அப்படி எதாவது எமர்ஜென்ஸி மாதிரி அறிவிச்சா சுதந்திர தினப் பூங்காவில் எல்லாரும் சந்திக்கணும்னு சுப்பராவ் சொல்லியிருந்தாரு. இருக்கிற இடம், நாம எங்கெல்லாம் தங்கணும்ங்கிற ரகசிய இடம் எல்லாம் முடிவாகியிருந்தது. எமர்ஜென்ஸில எனக்கு வெளில வரக்கூடாதுன்னு உத்தரவு. ஆனால் முக்கியமான தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க இணைப்பெல்லாம் இருந்தது. எல்லா மாநிலத்திலேயும் தொடர்புகொள்ளணும். நமக்குக் கடிதங்கள் அங்கங்கே வரும் போகும். இந்தப் பொறுப்புக்கு லிங்க்1னு பேரு. பல்வேறு பகுதிகளிலிருந்து என்னைத் தொடர்பு கொள்வாங்க. அப்படி கடிதப் போக்குவரத்து நாடு முழுவதும் நடத்துறது, மத்த மாநிலங்களில நடக்கிறதைத் தெரிஞ்சுக்கிறது, தமிழ்நாட்ல நடக்கிறதைச் சொல்றதுன்னு கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் நம்ம கைல இருந்தது. தலைவர்கள்லாம் வரும்போது ரகசியமாக தலைவர்களைச் சந்திக்க வைக்கிற வேலை, இதுதான் நம்ம எமர்ஜென்ஸி வேலை.
இந்தியன்
எக்ஸ்பிரஸ் ராம்நாத்
கோயங்காவைத் தொடர்பு
கொண்டீர்களா?
கோயங்கா வீட்டுக்கு நான் போவேன். எப்படி போவேன்னா அவங்க வீட்டுல கிருஷ்ணா கைத்தான்னு அவரோட மகள் இருந்தாங்க. அவங்க ஒரு பால் பண்ணை வச்சி நடத்திட்டு இருந்தாங்க. ஹரிஹரன்னு முன்னாள் பிரச்சாரக் அங்க வேலை பார்த்தாரு. கோயங்கா வீட்டுலதான் எமர்ஜென்சி நேரத்துல மறைந்த கி. சூரியநாராயணராவ் ஜி கொஞ்சநாள் இருந்தாரு. அவருக்கு எப்படி நேரடித் தொடர்பு வந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா அந்த ஹரிஹரன் மூலமா அங்க தங்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அப்ப அதுக்கு முன்னாடி எஸ். குருமூர்த்தி பெரியவங்களை தொடர்புகொண்டு எமர்ஜென்ஸி பத்தி பேசியிருந்தார். இண்டியன் எக்ஸ்பிரஸ்ல ஆடிட்டிங் செய்வதற்கு அவருதான் போவாரு. ஆனா ஹரிஹரன் மூலமாகதான் சூரிஜியை அங்க தங்க வச்சாரு. அப்படி நான் அந்த வீட்டுக்குப் போயிருந்தேன். கோயங்கா இருப்பாரு, அவர் மகன் சூர்தாஸ் இருப்பாரு, அப்ப தியாகராஜன்ஜி கூட இருப்பாரு. அப்ப நான் ஐந்து ஆறு முறை போயிருக்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின்
சோ…?
சோவைத் தொடர்பு கொள்ளணும்னு இராமகோபாலன் ஜிதான் சொன்னாரு. ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்னு ஒரு பிரதியை சோவிடம் கொடுன்னு சொன்னாரு. அதனால சோவை நீ சந்திக்கணும்னு சொல்வாரு. அப்போ சிதம்பரம்னு அங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி இருந்தாரு. இந்தியன் ரிவியூனு டிடிகே ரோட்ல இருக்கிற மியூசிக் அகாடமில ஒரு பத்திரிகை ஆபிஸ் இருக்கும். அந்தப் பத்திரிகையோட எடிட்டர் சிதம்பரம். அவரை எனக்கு கோபால்ஜி அறிமுகப்படுத்தி வச்சார். சோ தினமும் ஆபிஸ் போறதுக்கு முன்னாடி தியாகி சிதம்பரத்தைச் சந்திச்சிட்டுதான் போவாரு. அதனால அங்க சோவைச் சந்திக்கிறதுக்காக அங்க போய் தினமும் ஒருமணி நேரம் பேசிட்டு இருப்பேன். அப்ப அங்க சோ வருவாரு. அப்ப அவரை சந்திச்சு எமர்ஜென்ஸி நேரத்துல என்ன விஷயம் நடக்குது, என்ன என்ன சம்பவம்லாம் நடக்குதுன்னு நாங்க விவாதிப்போம். அங்க இருந்த நாலு பேர்ல, குருமூர்த்தி, வரதராஜன், சி. கோபாலன் ஆகிய மூணு பேருக்கு, நகரத்துல இருக்கிற முக்கிய பிரமுகர்களை ரகசியமா தொடர்பு கொள்வதற்கு துருப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ரொம்ப நல்லா செயல்பட்டாங்க.
நான்தான் அப்ப சோவோட லிங்க். வாரத்துல மூணுநாள் சந்திச்சிடுவேன். அவரோட காபி சாப்பிடுவேன். இப்ப அவரு இருந்தாருன்னா என்னைப் பார்த்தா அடையாளம் தெரியுமானு தெரியாது.
இந்து முன்னணி
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
தி..வை
எதிர்த்து சங்க
வேலைகள் எப்படி
இருந்தன?
சங்க வேலை, தி..வை எதிர்க்கணும், அதை முறியடிக்கணும்னு சொல்றதில்ல. சங்கம் ஒழுங்கா இருக்கணும்ங்கிறதை மட்டும் ரொம்ப வலியுறுத்தி இருந்தாங்க. ‘அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறிவிடு’, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்புஇந்த ரெண்டு விஷயத்தை இராமகோபாலன் ஜி இங்க வலியுறுத்தினாங்க. அதற்காகப் புத்தகத்தையே நாம போட்டோம். அந்த சமயத்துலதான் நான் சேலத்துல கல்லூரில படிச்சிட்டு இருந்தேன். 69 இருக்கும் அப்ப. சேலத்துல இருக்கிற ராமர், பிள்ளையார் சிலைக்கெல்லாம் செருப்பு மாலை போட்டு, சாணிய கரைத்து ஊத்தி, விளக்குமாறெல்லாம் அடிச்சு அவமானப்படுத்தினாங்க. இந்த விஷயம் எல்லாம் நம்ம ஷாகால தீவிரமாக விவாதிக்கப்படும். அவன் போட்டுருக்கான், அதனால அதைக் கண்டிச்சு நம்ம வால்போஸ்டர் ஒட்டுவோம்னு சொல்லி, மயிலாடுதுறையில நான் அதை ஒட்டியிருக்கேன். கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரு அங்க படிக்கிற மாதிரி நிக்கிறது. வெறும் வால்போஸ்டர்தான் ஒட்டினோம். அதுதான் தி..வை எதிர்த்து நாம செஞ்ச முதல் போராட்டம்னு நினைக்கிறேன். நாமல்லாம் ஒண்ணா நின்னு படிக்கிற மாதிரி காட்றது. அப்ப அங்க வர்றவங்களும் அதைப் படிப்பாங்க. அப்படி ஒவ்வொருத்தரையா படிக்க வைக்கிறது. அது பெரிய இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அப்புறம் சேலத்துல இருக்கிறவங்க அதை எதிர்த்தாங்க. அப்புறம் தி. கூட்டத்துக்குப் போய் அவங்க பேசறதெல்லாம் கேக்கறது. நாம சாதியத்தான் எதிர்த்தோம். சாதி இல்லாத இந்தியா ஒண்ணா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் நாம இருக்கோம். சாதிய ஒழிக்கணும், இந்துக்கள ஒற்றுமைப்படுத்தணும்ங்கிற எண்ணம் எனக்கு இருந்தது.
அப்ப தர்மபுரில தி..காரர் ஒருத்தர் நாகராஜன்னு பேரு, பஸ்டாண்ட்ல டீக்கடை வச்சிருந்தாரு. அவர் பழக்கமானார். அப்போ ஒருநாள் .வெ.ரா. வர்றார்னு சொன்னாரு. இருவரும் .வெ.ரா.வைப் பார்க்க போனோம். அங்க .வெ.ரா தமிழாசிரியர் வீட்டுல தங்கியிருந்தாரு. அவர்கிட்ட, ‘சாதிலாம் இல்லை, இந்துக்கள் ஒண்ணா இருக்கணும்னு சொல்ற RSS இயக்கத்துல முழு நேர ஊழியரா இருக்காருன்னு என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு. அப்படியா வாங்கன்னு .வெ.ரா. கூப்பிட்டாரு. ‘அப்படியா, RSS போறேன்னு சொன்னேன். அய்யா சாதி ஒழியணுங்கிற கொள்கை இரண்டு பேருக்கும் ஒண்ணுதான்னு நாகராஜன் சொன்னாரு.
ஈவெரா அவர்கள்
வேற எதாவது
சொன்னாரா?
வேற எதுவும் சொல்லல, வாங்கன்னாரு, அப்புறம் டீக்கடைக்காரர பார்த்து நீயும் RSS இருக்கியான்னு கேட்டாரு. ஆமா, அவங்க ஷாகா நடத்துவாங்க, நான் போவேன்னு சொன்னாரு. வேற ஒண்ணும் சொல்லலை. சிரிச்சாரு. ஆனா வாங்கன்னு கூப்பிட்டாரு. அது எனக்கு ஆச்சரியமா இருந்தது. சின்ன பசங்கதான நாம, நம்மை வாங்கன்னு கூப்பிட்டாரேன்னு தோணுச்சு. ஏன்னா கடவுள் இல்லைன்னு சொன்னவருதானன்னு ஒரு எண்ணம். அதுக்கப்புறம் தி..காரங்க சில பேர் தொடர்புல வந்தாங்க.
பாலக்காட்டுல கோபால்ஜி வந்தாரு, அங்க கன்னிகா பரமேஸ்வரி கோயில்னு ஒண்ணு இருந்துச்சு. கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும். RSS கொள்கை விளக்கக் கூட்டம்னு போட்டு நோட்டீஸ்லாம் அடிச்சிக் கொடுத்து, கோபால்ஜிய கூட்டிட்டு வந்தோம். பக்கத்துல இருக்கிற கிராமத்துல நாங்க போய் நேர்ல நோட்டீஸ் கொடுத்துக் கூப்பிட்டு வந்தோம். ஒரு 150 பேர்க்கு மேல வந்திருந்தாங்க. கல்யாண மண்டபம் முழுவதும் நிரம்பிடிச்சு. அந்த கூட்டத்துல கோபால்ஜி பேசினாரு. அப்போ தி..காரர் ஒருத்தர், சரிங்க அப்ப நாங்கல்லா எப்படிங்க உங்க கூட்டத்துக்கு வரமுடியும்னு கேட்டாரு. ‘நான் தி..வுல இருக்கேன், மாமிசம் சாப்பிடுவேன். நீங்களோ இந்துக்கள் ஒற்றுமைன்னுதான் சொல்றீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா நான்லாம் சேரமுடியாதே. மாமிசம் சாப்பிடறேன், இந்துவே இல்லையேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா சாப்பிடக்கூடாதுன்னு? ரெண்டு ஆடு சாப்பிடணும்.” “இங்க ஐயருங்கல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்களே. மாமிசம் சாப்பிட்டவங்க அத விடமுடியாதுங்களேன்னு சொன்னாரு. “யாரு சொன்னா விடச்சொல்லி? ரெண்டு ஆடு சாப்பிடுங்கன்னு சொன்னாரு கோபால்ஜி. அதிர்ச்சியாயிட்டாரு தி..காரர். “அய்யருங்க மாமிசம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, RSS அய்யரு இயக்கம்னு சொல்றாங்க…”ன்னு திரும்பவும் சொன்னாரு. “சாப்பாடு வீட்ல சாப்பிடப் போற, இங்கயா வந்து சாப்பிடப் போற? இல்ல RSS சாப்பாடு போடப்போதாஅவங்க அவங்க சாப்பிடுவாங்க இஷ்டமிருந்தா. நம்ம மாரியம்மன் கோயிலுக்கு கிடா வெட்டுறதில்லையா, அதல்லாம் இருக்கும். அதாவது கடவுளைப் பார்த்துடணும், கடவுள அடைஞ்சிடணும்னு நினைச்சிருக்காங்க. அவங்க நிறைய ஆசையை விடணும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இப்படி நிறைய விஷயங்களை விடணும். அதுல மாமிசமும் விடணும்னு சொல்லியிருக்கு. அப்ப கடவுளைப் பார்த்திரலாம்னு சொல்லியிருக்கு. அதைதான் சொல்லியிருக்காங்க எல்லாரும். அதல்லாம் சாப்பிடலாம். RSS இருந்தாலும் சாப்பிடலாம்னு சொன்னாரு. தி..காரருக்கு உடனே சந்தோசம். தருமபுரில எந்த இடத்துல என்னைப் பார்த்தாலும் உடனே என்னைக் கூட்டிட்டுப்போய், இவர் RSS இருக்காருன்னு பெருமையா சொல்லி அறிமுகப்படுத்தி வைப்பாரு. அவரோட நண்பர் ஒருவர் பெரியசாமின்னு ஒரு டாக்டர் ஒருத்தர் இருந்தாரு. அவருதான் எனக்கு நிறைய உதவி பண்ணினார் தருமபுரில. அவர் ஜிசிஐஎம் படிச்சிருந்தாரு. அவரைத்தான் .தி.மு..க்கு முதல் மாவட்ட அமைப்பாளராக எம்.ஜி.ஆர். போட்டார். தர்மபுரி மாவட்டத்துல நிறைய இடங்கள்ல நமக்கு நண்பர்கள்தான்.
எமர்ஜென்ஸிக்கு
அப்புறம் எங்க
இருந்தீங்க?
எமர்ஜென்ஸிக்கு அப்புறம் என்னை இங்கிருந்து இராஜபாளையம் ஜில்லாக்குப் போட்டுட்டாங்க. நாங்க போறதுக்கு நாலு ஐந்து வருஷத்துக்கு முன்னாடி சங்கரன்கோவில்ல சுப்பாராவை பிரச்சாரக்கா போட்டிருந்தாங்க. அங்க ஏதோ உண்ணாவிரதம் இருந்ததால, ஸ்கூல்ல டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதனால பள்ளிக்கூடத்தை எதிர்த்து கேஸ் போட்டு ஜெயிக்கிற வரைக்கும் அங்கயே இருந்தாரு. அங்க இருக்கிற கிராமங்களில் எல்லாம் சங்கம் அமைச்சி நடத்திட்டு இருந்தாரு. அவரு இராஜபாளையத்துல சமந்தபுரம் அப்படிங்கிற இடத்துல ஷாகா நடத்திட்டு இருந்தாரு. வாரத்துக்கு ஒருதடவை வருவாரு. பழைய பேட்டைலயும் ஷாகா நடத்தினாரு. கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான் போனபிறகு ஒரு மூணு ஆண்டு இருந்தேன். மூணு ஆண்டுக்குள்ளே ஒரு 16 ஷாகா நடத்திட்டோம். மாநில அளவிலான ஒரு வருடாந்திர முகாமும் அங்க நடத்தும் ஒரு வாய்ப்பு கிடைச்சது. அங்க சங்கம் நல்ல செல்வாக்கா இருந்தது. இராஜசுப்பிரமணியம் பாலிடெக்னிக்லதான் முகாம் நடந்தது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவராக இருந்த பேராசிரியர் இராஜேந்திரசிங் போன்ற தலைவர்கள் வந்து வழிகாட்டினாங்க.
அப்பதானே
சங்கர சுப்பிரமணியம்
(
தற்போதைய பி.எம்.எஸ்.
மாநில அமைப்பாளர்)
வந்தாரு?
ஆமா, சங்கர சுப்பிரமணியம், .பி.வி.பி.யோட அமைப்பாளரா இருந்த ஆதித்யன், அப்புறம் பாலுன்னு ஒருத்தர் வந்திருந்தாங்க. இப்படி நமக்காக நிறைய பேர் வந்திருந்தாங்க. தற்போதைய தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் பி.எம். ராமகிருஷ்ணன், வி.ஹெச்.பி. தென் பாரத அமைப்பாளர் பி.எம். நாகராஜன் இவங்கள்லாம் அந்த நேரத்துலதான் நம்மகூட வந்தாங்க. இராஜபாளையத்துல ஒரு 15, 16 ஷாகா. செல்வாக்குள்ள ஒரு இயக்கமாக இருந்தது.
அதன் பிறகு
எங்கே இருந்தீர்கள்?
மதுரை ஜில்லா பிரச்சாரக்கா இரண்டாண்டு, அப்புறம் விபாக் (மூன்று அல்லது நான்கு மாவட்டம் சேர்ந்தது) பிரச்சாரக்கா மதுரையில இருந்தேன். இப்ப இருக்கிற டி.வி. ரங்கராஜன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசகண்டன், அவரு நகர காரியாலயத்துல இருந்தாரு. தினமணில எழுத்தாளராக இருந்த சுவாமிநாதன், அவர் ஜில்லா காரியகர்த்தாவா இருந்தாரு. இந்து முன்னணில இராஜகோபால்னு ஒருத்தர் வெட்டுப்பட்டு இறந்துபோயிட்டார். அவரு என்னோட மையப்பகுதி காரியாலயத்துல இருந்தாரு. அதுக்கு அப்புறம் பரமேஸ்வரன்னு ஒருத்தர் புரொபஸர். அவருக்குகூட நல்ல நெருக்கம் கிடைச்சது. அவர .பி.வி.பிக்கு அறிமுகப்படுத்தி வைச்சேன். பிற்காலத்தில் அவரும் வெட்டப்பட்டு இறந்து போனார்.
கோபால்ஜி (இராமகோபாலன் ஜி) வெட்டப்பட்டபோது நான் அங்க இருந்தேன். காலைல ஷாகாக்கு கிளம்பிட்டு இருக்கும்போது, அகில பாரத நுகர்வோர் அமைப்பின் (.பி.ஜி.பி ) தற்போதைய எம்.என். சுந்தரோட அண்ணன் எம்.என். சுப்பிரமணியன்னு நினைக்கிறேன், அவரு திருவனந்தபுரத்துல இருந்து வந்திருந்தாரு. கோபால்ஜி வெட்டுப்பட்ட செய்தியை அவருதான் கொண்டுவந்தாரு. உடம்பெல்லாம் ரத்தம் பட்டிருந்தது. “கோபால்ஜி இப்படி வெட்டுப்பட்டுட்டாரு, யாதவராவ்ஜி, சூரியநாராயணராவ், சங்கராச்சாரியார், சின்மயானந்தர். இந்த நாலுபேருக்கும் உங்களுக்கும் தகவல் கொடுக்கச் சொன்னாங்க. சாவைக் கண்டு நான் பயப்படலன்னு சொல்லச் சொன்னாரு. அவர வெட்டுனவங்களைப் பிடிச்சிட்டாங்க. அவருக்கு கழுத்துல வெட்டுப்பட்டு எலும்பெல்லாம் தெரியுது. ஆனா பேசிட்டு இருக்காரு.” மதுரை மெடிக்கல் காலேஜ்ல உதவிப்பேராசிரியரா இருக்கிறவர் சொன்னார், “உடனே அழைச்சிட்டு போங்கய்யா, அவரு பேசறாருல, காப்பாத்திடலாம், அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாராம். இப்ப இருக்கிற மாதிரி அப்ப ஃபோன்லாம் கிடையாது. இந்த மாதிரி கோபால்ஜி வீட்டுக்கு ஃபோன் பண்ணிக்கிறேன்னேன். மதுரை மெடிக்கல் காலேஜ்ல இருந்தவங்களுக்கு ஃபோன் பண்ணினேன். கோபால்ஜி வந்திருக்காருன்னாங்க. இராமகோபாலன்ஜிக்கு இரத்தம் கொடுக்கணுமா என்னன்னு பார்த்துக்கோங்கன்னு சொன்னேன். இப்படி பத்துபேருக்கு ஃபோன் பண்ணிருப்பேன். பத்து பேருக்கு தகவல் சொல்லி நேரா ஆஸ்பத்திரிக்கு வந்துருங்கன்னு சொல்லிட்டு, நேரா இராஜகோபாலன்ஜி (பிற்காலத்தில் இந்து முன்னணித் தலைவராக இருந்தவர், தீவிரவாதிகளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர்) வீட்டுக்கு போனேன். அவரு உடனே போஸ்டர் அடிக்கணும்ஜின்னு சொன்னாரு. என்கிட்டயே காசு கேட்டாரு. 50 ரூபாய்க்கு அப்போ கட்டைல வச்சி அடிச்சி தருவான். லெக்ஷ்மி பிரஸ்ல அடிச்சிட்டு, ஆஸ்பத்திரிக்குப் போனோம். நிறைய போலிஸ்காரங்க அங்க. எல்லாரையும் விடுவாங்கன்னு நினைச்சு போனோம். ஆனா என்னை மட்டும் உள்ளே விட்டாங்க. அப்பதாம் என்னை போலிஸ்காரங்களுக்கெல்லாம் தெரியும்னு நினைச்சேன். அப்ப அவருக்கு ஒரு பக்கம் ஷேவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் தைச்சிட்டு இருந்தாங்க. ரத்தம் விளக்கெண்ண மாதிரி குபுக் குபுக்ன்னு வந்துட்டு இருந்தது. வலிக்கலையான்னு கேட்டேன். இல்லன்னு சொன்னாரு.
நாலு நாளா போராடி ஆப்ரேஷன் பண்ணி சக்சஸ் பண்ணிட்டாங்க. முடிஞ்சப்புறம் அவரைப் பார்க்க நான் போனேன். அப்புறம் மூணுநாள் அங்க இருந்துட்டு, வடசென்னைக்குப் போறதுக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தேன். அப்ப சங்கத்துல நிறைய பொறுப்பு கொடுத்திருந்தாங்க. விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு போணும்னுலாம் சொல்லிருந்தாங்க. அப்பதான் இதுமாதிரி ஆயிடுச்சி. அதனால உடனே சென்னைக்கு கிளம்பி வரவும்னு சூரிஜி சொல்லிட்டாரு. உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணி, அதுக்கு வேற ஒருத்தரை ஏற்பாடு செஞ்சேன்.
விஷ்வ ஹிந்து
பரிஷத்துல
விஷ்வ ஹிந்து பரிஷத்துல போயி நாங்கல்லாம் வேலை பார்த்தோம். அப்புறம் ஓராண்டுக்குப் பிறகு சங்கத்துக்கே வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னை பாண்டிச்சேரிக்கு பிரச்சாரக்காகப் போட்டாங்க. அங்க ரெண்டு, மூணு வருஷம் இருந்தேன். அந்த சமயம் வடலூர்ல சங்கஷிர்சனம் ஒண்ணு நடத்தினோம். சுதர்ஷன்ஜி சிதம்பரத்துக்கு வந்தாரு. வடலூர்ல முகாம் நடத்தினோம். சிதம்பரத்துல ரெண்டு, மூணு முகாம் நடத்தினோம். கடலூர் மாவட்டம் கொஞ்சம் பின்தங்கின மாவட்டமாத்தான் அப்ப இருந்தது. இருந்தாலும் அந்த சமயம் நல்ல எழுச்சி இருந்தது.
அதுக்கு அப்புறம்
கன்னியாகுமரியா?
பாண்டிச்சேரில ரெண்டு வருஷம் இருந்தபோது, அதுக்கு அப்புறம் திருச்சில போட்டாங்க. அங்க இருந்தபோதுதான் டாக்டர்ஜி நூற்றாண்டு விழா நடந்தது. அப்பதான் ஷுகர் ரொம்ப அதிகம் ஆயிட்டது. அப்ப அதெல்லாம் தெரியாது. கால்ல ஓட்ட விழுந்துடுச்சி. அப்புறம் கேட்டா ஷுகர் 525ன்னு சொன்னாங்க. அப்புறம் ஷுகருக்கு மருந்து எடுத்தேன். காலைலயும், மாலைலயும் ரெண்டு வேளையும் இன்சுலின் போட்டுக்குவேன். அப்புறம் அது மூடிடுச்சு. சரியா போயிடுச்சு. அப்புறம் திருச்சில ரெண்டு வருஷம். அதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு வான்னு சொல்லிட்டாங்க. அப்ப அங்க இருந்த பாஸ்கர் ராவ் தூத்துக்குடி, திருநெல்வேலிக்குப் போயிட்டாரு. அப்ப திருநெல்வேலிலதான் ஹெட்குவாட்டர்ஸ். அப்படி அங்க இருந்தப்புறம், பாஸ்கர் ராவ்க்கு பத்து மாவட்ட பொறுப்பு (சம்பாக்) கொடுத்துட்டாங்க. கன்னியாகுமரி பிரச்சாரக்கா 2 வருஷம் இருந்த பிறகு, 1993 என்னை சூரியநாராயண ராவ்ஜி, கேந்திர பிரச்சாரக்கா இருந்த கிருஷ்ணபாஜிஎல்லாரும் முடிவு செஞ்சு நம்ம ஸ்ரீகணேசனை பாரதிய கிசான் சங்கத்துக்கு மாநிலப் பொறுப்பாளராகப் போட்டிருக்குன்னு அப்ப சொன்னாங்க. அந்தக் கூட்டத்துல அப்போதைய அகில பாரத பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்திரி வந்து கிசான் சங்கத்தைப் பத்தி தெரியுமான்னு கேட்டாரு. தெரியாதுன்னு சொல்லிட்டேன். சாப்பிடுவியா நல்லான்னாரு, நல்லா சாப்பிடுவேன்னு சொன்னேன். சும்மா செல்லமா ஒரு குத்து குத்திட்டு, சீரியஸாயிட்டாரு.
நம்ம
சங்கத்தால எல்லா இந்துக்கள்கிட்டயும் போக முடியும். ஆனா அதுக்கு இப்படித்தான் போகணும்னு ஒரு பயிற்சி இருக்கு. எல்லா இந்துக்களும் ஷாகா வருவதற்கு காலம் அதிகமாகும். விஷ்வ ஹிந்து பரிஷத்தால போகமுடியும். விஷ்வ ஹிந்து பரிஷத் இவ்வளவு நாள் நடந்தது. இது இரண்டாவது. மூன்றாவதாக பி.ஜே.பி. போகமுடியும். எல்லாக் கிராமங்களுக்கும், பி.ஜே.பி. எப்படி போனாலும் பாதிபேரு அரசியல்ரீதியா எதிராத்தான் இருப்பான். கிசான் சங்கம் எல்லா கிராமத்துக்கும் நல்லா போகமுடியும். பி.எம்.எஸ். தொழிற்சங்கம் நகரத்துல இருக்கும். கிராமத்துல போகமுடியாது. ஆனா கிசான் சங்கம் மூலமா கிராமத்துக்குப் போகமுடியும். கிசான் சங்கம் மூலமாக நம்ம சங்கக் கருத்தைச் சொல்லணும். ஆனா ஒண்ணு நியாபகம் வச்சிக்கணும். எல்லா விவசாயிகளையும் ஒரு சமஸ்காரமா உண்டாக்கணும்னு சொன்னாரு.
பாரதிய கிசான்
சங்கத்தின் மாநில
அமைப்பாளர் என்று
உங்களை அறிவித்ததும்
என்ன செய்தீர்கள்?
என்னை அறிவித்ததும், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர் சேஷாத்திரிஜி, ‘டெல்லியில் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் கூட்டம் நடக்குது. அங்க போயிட்டு வாஎன்றார். அந்தக் கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டாங்க. அடுத்த கிசான் சங்கத்துக் கூட்டத்துக்கு கூப்பிடறதா சொன்னாங்க. இப்படிப் பல கூட்டத்துக்குப் போய் எனக்கு ஒரு விஷயம் தோணிச்சு. கிராமங்களில் எல்லாக் கட்சிக்கும் பிரமுகர்கள் இருக்காங்க. ஆனா, விவசாயிகளுக்காக வாதாட, போராட, தலைவர்கள் தேவைன்னு உணர்ந்தேன். முதல் கட்டமா, ஆர்.எஸ்.எஸ்ஸிடம் கேட்டு, 17 பழைய பொறுப்பாளர்களுக்குக் கடிதம் போட்டேன். அதுல, ஏழு பேரு திருநெல்வேலியில நடந்த மாநிலக் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. அதுல வந்தவங்க ஐந்து பேர் மாநில அளவிலயும், ரெண்டு பேர் மாவட்ட அளவிலும் பொறுப்பேத்துக்கறதா சொன்னாங்க. இன்னும் சிலரையும் சேர்த்து 10 பேர் கொண்ட மாநிலச் செயற்குழு அமைத்தோம்.
இந்த 25 வருஷத்துல
தமிழகத்தில் பாரதிய
கிசான் சங்கம்
சார்பில் என்னென்ன
பணிகள் செய்திருக்கிறீர்கள்?
நிறைய செய்திருக்கோம். எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தியிருக்கோம். தென்னை விவசாயிகள், மல்லி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நெல் விவசாயிகள்னு எல்லாருக்காகவும் குரல் கொடுத்திருக்கோம். மதுரை மாவட்டத்துல முல்லைப் பெரியாறு தொடர்பான கருத்தரங்கம், திருநெல்வேலி, திருச்சி, மதுரைன்னு எல்லா இடங்களிலும் நதிநீர் தொடர்பான கருத்தரங்குகள், இயற்கை விவசாயம் தொடர்பான முகாம்னு நிறைய நடத்தியிருக்கோம். இவ்வளவு டன் வறட்டிகள் கொண்டு யாகம் நடத்தினா, இத்தனை ஆக்ஸிஜன் பெருகி, மழை வரும்னு விஞ்ஞானபூர்வமான உண்மை. காவிரிக்கரையில மழை வேண்டி ரெண்டு முறை யாகம் நடத்தியிருக்கோம். ரெண்டு முறையும் நல்ல மழை. எல்லா ஊர்களிலும் கோமாதா பூஜையும் நடத்தியிருக்கோம். பசு சார்ந்த பொருளால நிறைய நன்மை இருக்கு. அதேபோல நாட்டுமாடு விவசாயத்துக்கு மட்டுமல்ல, பல வகைகளில் உதவிகரமா இருக்கு.
அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்கணும்ங்கறதுதான் கிசான் சங்கத்தோட முக்கியமான கோரிக்கை. விவசாயிகளிடம் உற்பத்தி விலையை விட குறைவா வாங்கி அரசாங்கமே ஏமாத்துது. நகரங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச சந்தை விலை நிர்ணயிக்கப்படுது. ஆனா, விவசாயிகளுக்கு அவங்களோட உற்பத்தி செலவு கூட கிடைக்க மாட்டேங்குது. பல இடங்களில் கடன் வாங்கிதான் விவசாயிகள் பயிரிடறாங்க. உற்பத்தி விலையே கிடைக்கலேன்னா கடன் தள்ளுபடி கேட்கறாங்க. அப்படி கேட்கறது நியாயமில்லதான். ஆனா, வேற வழியில்லையே! கடன் தள்ளுபடி தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வு லாபகரமான விலைதான்.
உலகமயமாக்கலின்
தாக்கம் விவசாயத்தில்
இருக்கிறதா?
நிச்சயமா. விவசாயிகளைத் தந்திரமா வியாபாரத்துக்குள்ள தள்ளுவதுதான் உலகமயமாக்கல். விவசாயிகளிடம் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகள்ன்னு சொல்லி, மரபணு மாற்ற விதைகளை விக்கறான். அந்த விதைகளால, மனித இன செயல்பாடுகளே மாறக்கூடிய அபாயங்கள் இருக்கு. அதோட மண்ணு விஷமாகி, மண்ணுல விளையுற பயிர்கள் விஷமாகி, அதனால உணவுப் பொருட்கள் பால் வகைகள் விஷமாகி, அதை சாப்பிடற மக்கள் விஷமாகி, நாடே ஆஸ்பத்திரியா மாறிக்கொண்டிருக்கு. அப்புறம், நம்ம நாட்டுல ஏராளமான மருந்துகளையும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கு. நம்ம நாட்டுல என்ன விளையணும்னு வெளிநாட்டு நிறுவனங்கள் முடிவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படறோம். பன்னாட்டு நிறுவனங்கள் கூட சாதாரண விவசாயிகள் போட்டியிட முடியுமா? இந்த மோசடிதான் உலகமயமாக்கல்.
வாஜ்பாய்
ஆட்சிக்காலத்தில் விவசாயிகளைத்
திரட்டி கிசான்
சங்கம் சார்பில்
தந்தோபந்த் டெங்கடிஜி
டெல்லியில் ஆர்ப்பாட்டம்
நடத்தினாரே?
எதிர்க்கட்சியா இருக்கும்போது பேசறது சுலபமா இருக்கு. ஆனா, ஆட்சிக்கு வந்தா எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள், பன்னாட்டு நிறுவனங்கள் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. பா... ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி கிசான் சங்கத்தின் கோரிக்கையானவிவசாயிகளுக்கு லாபகரமான விலையை வாஜ்பாய் கொள்கையளவில் ஒத்துக்கொண்டார். இந்த நாட்டுல 80 சதவீத மக்கள் கிராமத்துலதான் வாழறாங்க. விவசாயம்தான் அவங்களோட ஆதாரம். விவசாயிகள் நல்லா இருந்தாதான் கோயில் பூசாரி முதல் எல்லா வியாபாரங்களும் பிழைக்கும். கிராம பொருளாதாரமே விவசாயிகளைதான் நம்பியிருக்கு. விவசாயிகள் நலிஞ்சு போனா, நாடே நலிஞ்சு போகும். இது வாஜ்பாய்க்கு புரிஞ்சது. முதல்ல, வருஷத்துக்கு ஒண்ணு நடைமுறைப்படுத்தறதா சொன்னார். அதை செய்யறதுக்குள்ள அவரோட ஆட்சி கவுந்து போச்சி. விவசாயிகளோட நிலைமையும் இன்னும் மாறலை. அவர், நதிநீர் இணைப்புத் திட்டங்கள்போல சிலவற்றைச் செய்தார். ஆனா, அது போதுமானதா இல்லை.
மன்மோகன்
சிங் தலைமையிலான
காங்கிரஸ் அரசாங்கம்
பத்தி?
அது வெளிநாட்டு அரசாங்கம் போலதான் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவான அரசாங்கமாத்தான் செயல்பட்டார். அவர் நம்ம நாட்டு ஆளா இருந்தாலும், அமெரிக்க ஆள்போலதான் இருந்தார். அதனால அவர் ஆட்சியில விவசாயிகளுக்கு ஆதரவான ஒரேயொரு திட்டத்தைக்கூட சொல்ல முடியல.
அவருடைய ஆட்சியில்
விவசாயிகள் பட்டினிச்
சாவு அடைந்ததாக
பிரசாரம் செய்யப்பட்டதே?
வேற வழி? கடன் வாங்கி விவசாயம் பண்ணாங்க; உற்பத்தி விலையை விட குறைவான விலை; விவசாயத்துக்கு எதிரான அப்போதைய அரசின் நடவடிக்கைகள். இதனால, விவசாயிகள் தற்கொலை செய்யப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மோடி ஆட்சியில்
விவசாயிகளுக்கு என்ன
செய்துள்ளார்?
மோடி நல்ல மனுஷன். விவசாயிகள் முன்னேறினாதான் நாடு முன்னேறும்னு உணர்ந்துருக்கார். கவலைப்படறார். இந்த ஆட்சியில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயத் திட்டங்கள் வந்துருக்கு. நீர் மேலாண்மை தொடர்பான மோடி அரசின் திட்டம் எதிர்காலத்தில்தான் பலனளிக்கும். ஆனா, இப்ப இருக்கற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லைனுதான் சொல்லணும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடணும்னு கேட்டோம்; அதை பத்தி எதுவும் சொல்லலை. ஆனா, கிசான் சங்கத்தோட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த வருஷ பட்ஜெட்டுலஃபேமிலி லேபருக்கும்சேர்த்து விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும்னு சொல்லியிருக்கார். விவசாயிகள் கடன் வாங்கிப் பயிரிடறது மட்டுமல்ல; அவங்க குடும்பமே வேலை செய்யுது. அதை புரிஞ்சுதான் ஃபேமிலி லேபர் பத்தி பேசியிருக்காரு. அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலை குறித்து பரிசீலிக்க ஒரு குழு அமைப்போம்னு சொல்லியிருக்கார். ஆனா, அது பத்தி உத்திரவாதம் எதுவும் தரலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி, உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு விலை நிர்ணயிப்போம்னு சொல்லியிருந்தார்.
மோடியை விவசாயிகளுக்கு
எதிரானவரா சித்திரிக்கிறார்களே?
மோடிக்கு நம்ம நாட்டுல மட்டுமல்ல, உலக அரங்கிலும் பெயர் கிடைச்சிருக்கு. அதனால, எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாவே மாறிட்டாங்க. அரசியல் லாபத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்தறாங்க. ஆனா, இந்தப் போராட்டங்களால விவசாயிகளுக்கு எதுவும் நன்மை நடந்ததா தெரியலை. விவசாயிகளோட கடன்களைத் தள்ளுபடி செய்யணும்னு போராடுற எதிர்க்கட்சிகள், ஏன் லாபகரமான விலை வேண்டும்னு போராடுவதில்லை.
அது மட்டுமல்ல, இயற்கையை சுரண்டுறாங்க; காடு, வனங்களை சுரண்டுறாங்க; சட்டவிரோதமா மணலை அள்ளறாங்க. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கண்டிக்கறது இல்ல. எதிர்த்துப் போராட்டம் நடத்தறது இல்ல. ஆனா, விவசாயிகளை மட்டும் தங்களோட அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்க நினைக்கறாங்க.
தமிழகத்தில்
இப்போது கிசான்
சங்க வேலைகள்
எப்படியிருக்கிறது?
தமிழகத்துல, அரசியல் கட்சிகள் மாதிரியே விவசாயி சங்கங்களும் ஆயிட்டாங்க. அரசியல் தலைவர்கள் மாதிரியே இருப்பைக் காட்ட போராட்டம் நடத்தறாங்க. இதுக்கு மத்தியில பாரதிய கிசான் சங்கம் சந்தேகமே இல்லாம வளர்ந்துட்டு வருது. கிராமந்தோறும் விவசாயத் தலைவர்களை உருவாக்குவது, இயற்கை விவசாயத்தைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நாட்டு மாடுகள் வளர்ப்பு, கோ பூஜைகள் நடத்துவது, விஷமில்லா உணவுப் பொருட்களை வழங்குவது, நீர் மேலாண்மை செய்வது போன்ற பயனுள்ள விஷயங்கள் செய்துட்டுதான் இருக்கோம்.
எதிர்காலத்
திட்டங்கள் ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?
நீர் மேலாண்மையை மேம்படுத்தணும். தமிழகத்துல ஆண்டுதோறும் 3,000 டி.எம்.சி. அளவுக்கு மழை பெய்யுது. அது மக்களுக்கு பயன்படாம வீணா கடல்ல கலக்குது. அதை மேலாண்மை செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தணும். தேவைக்கு மேற்கொண்டு அண்டை மாநிலங்களைக் கேட்கலாம். தர மறுத்தா சட்டபூர்வமாகவும் வாங்கலாம். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. இன்னைக்கு மக்கள்தொகை அதிகமாயிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி, தங்கள் மாநிலத்துல பாயுற நதியை தாங்களே பயன்படுத்திக்கணும்னு அண்டை மாநிலங்களும் நினைக்குது. நாமதான் விழிச்சுக்கணும்.
பாரதிய கிசான்
சங்கம் சார்பில்
விவசாயிகளுக்கு கூட்டுறவு
வங்கி தொடங்கப்
போவதாக கூறப்படுகிறதே?
ஆமாம். நபார்டு வங்கி சார்பிலே ஏராளமான விவசாயத் திட்டங்கள் அறிமுகமாயிருக்கு. மற்றொரு பக்கம், லாபகரமான விலையை அரசாங்கம் மட்டுமே நிர்ணயித்துவிட முடியாது. அரிசி, தானியம், காய்கறிகளோட விலைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் கூட மாறுபடலாம். அதனால, விவசாயிகள் மத்தியில் கூட்டுறவு இருக்கணும்; அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்கணும்; விளையும் பொருட்களை தங்களுக்குள்ள லாபகரமான விலையில் பகிர்ந்து கொள்ளணும்ங்கற நோக்கத்தோட தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கியைத் தொடங்கும் திட்டமிருக்கு. இது சம்பந்தமா கலந்து பேசிட்டு இருக்கோம்.



(புகைப்படங்கள்பிரசன்னா)

Leave a Reply