Posted on Leave a comment

அரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்

“இந்தத் தேசத்தின் எதிர்காலத் தலைமுறை உருப்பட ஒரே வழி எல்லாப் பள்ளிக்கூடங்களையும் இடித்து (?) தரைமட்டமாக்குவதுதான்” – ரஸிகமணி என்று இன்றளவும் புகழப்படும் டி.கே.சி. அவர்களின் இக்கருத்தை கல்கி தனது பல கட்டுரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் பொருள் படிக்காமல் எல்லோரும் தற்குறிகளாய் ‘திகழவேண்டும்’ என்பதன்று. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கல்வி முறையும் தேர்வு முறைகளும் இருந்த நிலைமையைக் கண்டு அவர் மனம் வெதும்பி முன்வைத்த விமர்சனம் இது.

என் நினைவாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நான் பயின்ற தமிழ்ப்பாட நூல்களின் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘கருத்து தெரிந்து’ நான்காம் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை நான் பயின்ற தமிழ்ப்பாடங்கள் சில –

‘இவர்தாம் பெரியார்’ – பாரதிதாசன் பாடல்
‘கொடி நாள்’ – கட்டுரை கலைஞர் மு. கருணாநிதி
‘வீட்டிற்கோர் புத்தக சாலை’ – பேரறிஞர் அண்ணா
‘செவ்வாழை’ – சிறுகதை – துணைப்பாடம் அண்ணா
‘பொங்கல் திருநாள்’ – கடிதம் – அண்ணா
‘இருண்ட வீடு’ – பாரதிதாசன்.

மற்றும் சிற்பி பாலசுப்ரமணியன், சாலை இளந்திரையன் போன்ற பேராசிரியர்களின் கட்டுரைகள் இடையிடையே. அவையெல்லாம் எனது இலங்கைச் செலவு… என்று தலைப்பிலேயே தம்மை இனங்காட்டிக் கொள்ளும் வகையறாக்கள்.

தமிழக அரசுப்பள்ளிகளில், மாநிலப் பாடத்திட்டத்தைப் பயின்று பட்டதாரியானவன் – துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு வாய்க்கவில்லையென்றால் – கீழ்க்காணும் முடிவுகளுக்கு வந்திருப்பான்.

– தமிழகத்தில் அண்ணாதுரை மட்டும்தான் அறிஞர்.
– திருக்குறளைவிடச் சிறந்தது குறளோவியம்.
– தமிழின் தனிப்பெருங் கவிஞர் பாரதிதாசன் மட்டுமே (இவர் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்படுவதால் ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் பங்காற்றியிருக்கலாம்.)
– ஈ.வெ.ரா. மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழன் பகுத்தறிவினைப் பெறாமல் ஐந்தறிவோடு வாழ்ந்து மடிந்திருப்பான்.

ஏனென்றால் ராமசாமி நாயக்கர்தான் தமிழனைக் காட்டுமிராண்டி என்றும், தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றும், ஆங்கிலமே தமிழன் உய்ய வழி என்றும் கூறியதால் அவர்தான் தமிழினத்தலைவர். பெரியார் என்று அழைக்கப்பட்ட அவர் கண்ணகியை வசைபாடியதும், தமிழின் தனிப்பெருஞ்செல்வங்களான பக்தி இலக்கியங்களைக் கொளுத்த வேண்டும் என்றதும் அன்னாரின் கூடுதல் தகுதிகள். அவருடைய தலைமை சிஷ்யரும் பின்னால் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று புகழப்பட்டவருமான அண்ணாதுரை ‘தீ பரவட்டும்’ என்று தனது குருநாதரை வழிமொழிந்தார்.

தமிழகத்தின் முதலமைச்சர்களாக அடுத்தடுத்து பதவி வகித்தவர்கள் அண்ணாதுரையும் கருணாநிதியும். எனவே அவர்கள் எழுத்தாளர்களானார்கள். எனவே அவை பாடப்புத்தகங்களில் – வெவ்வேறு வகுப்புகளில் இடம்பெறத் தகுதிபெற்றனவாகிவிட்டன. இப்பட்டியலில் ஜெயலலிதாகூட தனது ஒரு கட்டுரை மூலம் இணைந்திருந்தார். 1991-96ம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்கள் என்ற தலைப்பிலோ என்னவோ கட்டுரை எழுதியிருந்தார். அவர் மட்டும் எழுத்தாளரில்லையா என்ன? முதலமைச்சர் ஆகிவிட்டாரல்லவா?

நாட்டின் எதிர்காலத் தலைமுறை உருவாகும் இடம் வகுப்பறை என்பதையும், அதற்குப் பாடநூல்களின் உள்ளடக்கமும் போதனா முறைகளும் முக்கியம் என்பதையும் அரசியல்வாதிகள் உணர்ந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் கல்வியாளர்கள்? உண்மையில் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் என்ற விஷயம் அதன் தீவிரத்தன்மையோடு எந்தக் காலத்திலும் அணுகப்படவேயில்லை.

தமிழ்மொழியைப் புதிதாகக் கற்றுணர்ந்த ஒருவன் நம் பாடப்புத்தகங்களை அளவுகோலாகக்கொண்டு, அவற்றில் உள்ள பாடங்களை எழுதிய ஆசிரியர்களின் வேறு நூல்களை, படைப்புகளை அணுகினால் என்ன நிகழ்ந்திருக்கும்?

தம்பிக்குக் கடிதங்கள் எழுதிய அதே கைதான் ‘ரோமாபுரி ராணிகளும்’, ‘கம்பரசமும்’ என்ற தலைப்பில் குப்பைகளை எழுதியுள்ளது என்பதை அறிந்து அதிர்ந்திருப்பானல்லவா?

இவையெல்லாம் கடந்தகாலம்.

அண்மையில் வெளிவந்துள்ள 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களின் அடிப்படையில் தற்போதைய நிலைமையை விவாதிப்போம்.

உதயசந்திரன் ஐஏஎஸ்ஸின் கல்வித்துறை வருகை ஒரு நல்ல மாற்றமாகக் கருதப்பட்டது. அவருடைய கடந்த காலச் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை விதைத்திருந்தன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் காட்டியவர். மதுரையில் புத்தகக் காட்சிக்கு வழிவகுத்தவர். நியாயமானவர் என்கிற ஒரு பொதுக்கருத்தும் நிலவியது. எனவே எதிர்பார்ப்பில் நியாயமிருந்தது.

தமிழகம் முழுவதுமிருந்து கடந்த ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பாடத்திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இச்செயல்பாடு உண்மையிலேயே கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்தது. பாடப்புத்தகங்கள் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இடையே அரசியல் நிர்பந்தத்தால் உதயசந்திரனுக்கு நேர்ந்த அதிகாரக் குறைப்பிற்கு, சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து எதிர்ப்புக் குரல்களும் எழும்பின.

கடந்த ஜூன் முதல் தேதி அரசு அறிவித்தவாறே புதிய பாடநூல்கள் வந்துள்ளன. நமது பரிசீலனைக்கு 6, 9 மற்றும் 11ம் வகுப்பு பாடநூல்களை எடுத்துக்கொள்வோம். முதலில் மொழிப்பாடமான தமிழ்!

புறத்தோற்றத்தில் – முழுமையாக நவீன அச்சுக் கலையின் சாத்தியமான உச்சபட்ச தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பதை உணரலாம். 90% பக்கங்கள் வண்ணத்தில் – முக்கியக் கருத்துகள் வேறு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமின்றி புத்தகம் பள்ளிக் குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

தொழில் முறை ஓவியர்களின் படத்தை மட்டுமல்லாது, கோபுலு, மணியம் செல்வன் போன்ற கலைஞர்களின் ஓவியங்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும், ஆசிரியரின் வேறு நூல்கள் எவை என்பதும் ஆசிரியர் குறிப்புப் பகுதியில் பழைய பாடத்திட்ட நூல்களில் இடம்பெறும். புதிய பாடத்திட்டத்தில், பாட ஆசிரியரின் வேறு நூல்கள் மட்டுமின்றி, பாடப்பொருளோடு தொடர்புடைய மற்றவர்கள் எழுதிய நூல்களும் ‘நூல்வெளி’ என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது.. மேல்நிலையில், பாடத்தோடு தொடர்புடைய வேறு நூல்கள் ‘அறிவை விரிவு செய்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன.

பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தின்போதே பெரும் எதிர்பார்ப்பை விதைத்த மாற்றம் QR CODE முறையில் இணையத்தளங்களைப் பயன்படுத்தி ‘காட்சி வழி கற்றல்’ அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவது என்பதாகும். ஆனால் நடைமுறைச் சிக்கல்களை இம்முறை எதிர்கொள்கிறது. முதலில் ஆசிரியர்களிடம் இணைய வசதிகொண்ட ஆண்ட்ராய்ட் அலைபேசி இருக்க வேண்டும். செயலியை உள்ளீடு செய்தபின் இயக்கத் தெரிய வேண்டும். எதிர்வரும் காலத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளினால் இத்தகைய குறைபாடுகளைக் களைய முடியும் என்பதும் உண்மை.

ஆனால் அலைபேசித் திரையில் தோன்றுவதை ஆசிரியர் மட்டுமே காண இயலும். நாற்பது மாணவர்களுக்கும் மேம்பட்ட வகுப்புகளில் தனித்தனியே தனது அலைபேசியை வழங்கி – கையாள – நேரம் அனுமதிக்காது. அது சாத்தியமும் இல்லை. மேலும், பெரிய திரையில் இதனைக் காண்பித்திட அனைத்து அரசுப்பள்ளிகளிலும் வசதி இருக்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் தொடர்பான தனது கட்டுரை ஒன்றில், ‘செய்யுள்’, ‘தற்காலக்கவிதைகள்’ என்பதற்குப் பதில், கவிதை, புதுக்கவிதைகள் என அச்சிட என்ன தயக்கம் என்று பிரபஞ்சன் கேட்டிருப்பார். தற்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் மேலாய்வு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர் – எனினும் அதே ‘செய்யுள்’ நீடிக்கிறது.

‘செய்யுள்’ என்ற தலைப்பில் ‘ஆத்மாநாம் கவிதைகள்’ இடம்பெறுகின்றன.

பழைய பாடத்திட்டத்தில் துணைப்பாடமாகப் பல சிறுகதைகள் – குறைந்தபட்சம் எட்டு தரப்பட்டிருக்கும். ஜெயகாந்தன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன் எனத் தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளுமைகளை மேல்நிலையில் மாணவர்கள் (சில ஆசிரியர்கள்!) சந்திப்பர். பின்னாட்களில் தங்கள் துணைப்பாடத்தில் இடம்பெற்ற சிறுகதையாசிரியர்களின் ஒட்டுமொத்த தொகுப்பை வாசிக்க, துணைப்பாடம் ஒரு திறப்பாக இருக்கும் என்பது (மூட) நம்பிக்கை. மேல்நிலைகளில் துணைப்பாட நூல் தனி நூலாகவே வரும். உடன் இலக்கணப்பகுதி இடம்பெற்றிருக்கும்.

ஆனால், இப்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழில் துணைப்பாடங்கள் அனைத்தும் சிறுகதைகள் அன்று. பட்டிமண்டபம் என்றொரு பகுதியும், இசைத்தமிழர் இருவர் என்றொரு பகுதியும் உள்ளன. இளையராஜாவைப் பற்றியும், ஏ.ஆர். இரஹ்மானைப் பற்றியும் (ரஹ்மான் அல்ல! அப்படித்தான் இலக்கணப்படி போட்டிருக்கிறார்கள்) படிப்பது மற்றுமொரு பாடப்பகுதி போன்றே உள்ளது. சேகரின் மகன் எப்படி ‘இரஹ்மான்’ ஆனார் என்பதும் திலீப் என்பது யாருடைய இயற்பெயர் என்பதும் உதயசந்திரனுக்கே வெளிச்சம்.

ஜெயமோகனின் யானை டாக்டர் – சுருக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. ‘அறம்’ என்ற தொகுப்பில் உண்மை மனிதர்களின் கதைகள் என இடம்பெற்ற யானை டாக்டர் ‘குறும்புதினம்’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழிலக்கிய வடிவம் குறித்துப் பாடநூல் குழு அறிந்திருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஜெயமோகனைப் பற்றிய அறிமுகத்தில் உலகின் மிகப்பெரிய நாவல் வடிவமான அவருடைய வெண்முரசைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ரஷ்யாவில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை ஒரு புனைவாகப் பதிவு செய்த அவருடைய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ பற்றிய ஒற்றை வரிகூட இல்லை. ஏன் இல்லை என்று யோசித்தால், பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள் யாராக இருந்திருப்பார்கள் என்பதை யூகிக்கலாம்.

தமிழில் 96 சிறுகதைகளும், ஏராளமான மொழிபெயர்ப்புகளும் எழுதிய புதுமைப்பித்தனின் படைப்புகள் குவிந்திருக்க – அவருடைய முன்னுரையொன்று பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது, வியப்பளிக்கிறது. ‘ஜீவா’ மறைவு குறித்து சுந்தர ராமசாமி எழுதிய ‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், அ.முத்துலிங்கத்தின் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எனப் பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலே சுருங்கிப்போய்க் கிடக்கிறது.

தமிழ்ப்புனைவுலகில் நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட அழகியபெரியவனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது. புத்தகத்தில் அவருடைய வரிகளை கவிதை என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

புத்தகத்தின் இயல் ஒன்றிலேயே கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனின் கட்டுரையொன்று இடம்பெற்றுள்ளது. அதன் உள்ளடக்கத்தினையும், மொழிநடையையும் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு மேல்நிலை இரண்டாம் வகுப்பில் கோணங்கியின் மதினிமார்கள் கதையோ (அ) பொம்மைகள் உடைபடும் நகரமோ இடம்பெறக்கூடும். மாணவர்களும் ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ அதனை வாசித்து ‘தெளிவடையலாம்’!

6, 7 மற்றும் 11ம் வகுப்பு தமிழ்ப்பாட நூல்களில் எதிலும் கடவுள் வாழ்த்தே இல்லை. மரபாக இடம்பெறும் பல்சமயப் பாடல்களும் இல்லை. உதயசந்திரன் தன் நேர்காணல்களில் அழுத்தமாகக் கூறும் மாற்றமும் இஃதே. தமிழுக்கு பக்தி இலக்கியங்கள் வளம் சேர்த்தமைக்கு நன்றிக் கடனாகவாவது கடவுள் வாழ்த்து இடம்பெற்றிருக்கலாம்.

பன்மைத்துவம் மிக்க சமயச்சார்பற்ற பாடத்திட்டம் எனத் தற்போதைய சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி உதயசந்திரன் கருத்துரைத்திருந்தார். பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் அரசியல் குறுக்கீடுகளே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசியலில் இன்னும் அவர், ஷெர்லக் ஹோம்ஸ் கூறுவது போல், எலிமெண்ட்ரி… ஆம். சார்லி ஹெப்டோ இதழ் பிரான்சில் வெளியிட்ட கருத்துப்படத்திற்கு அண்ணாசாலையை ஸ்தம்பிக்கச்செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த இங்கே கூட்டம் உண்டு. கிருத்துவ நாடுகளில் கூட வெளியான டான் பிரவுனின் டாவின்சி கோட் திரைப்படம் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தடை செய்யப்பட்ட வரலாறு உண்டு. மதச்சார்பின்மை என்பது இந்து மத நம்பிக்கைகளை விமர்சிப்பதே தவிர வேறல்ல என்பதே தமிழகத்தின் நிலைமை. மதச்சார்பற்ற பாடத்திட்டம் எனக் கடவுள் வாழ்த்தைப் பலிகொண்ட உதயசந்திரன் குழுமம், வரலாற்றுப் பாடத்தில் பொது ஆண்டினைக்கொண்டு காலத்தை நிர்ணயித்து, கி.மு, கி.பி நீக்கத்தை முன்வைத்து மதச்சார்பின்மையின் எல்லையை விஸ்தரிக்க முயன்றார். சட்டப்பேரவை வரை விவாதம் நீண்டது. உலகம் தழுவிய முறை என மாஃபா பாண்டியராஜன் விளக்கம் தந்ததும்,இம்முறையை ஆசிரியர்களின் பயிற்சி வகுப்பில் விதந்தோதி நீட்டி முழக்கியதும், அடடா… செங்கோட்டையனும் ஸோ கால்ட் மதச்சார்பின்மைக் கொள்கைப்படி கி.மு, கி.பியே தொடரும் என்று சொல்லிவிட்டார். சரி, அச்சிட்ட புத்தகங்களில் எப்படி மாற்றுவது? ஜெயலலிதா கடந்த காலங்களில் கருணாநிதியின் செம்மொழி வாசகத்தினை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது போன்றா என்ற விளக்கம் ஏதுமில்லை. இத்தனைக்கும் முழுமையான கிறுத்தவரான ஐ.நா சபையின் பான் கி மூன் முதல் பல வரலாற்று ஆசிரியர்கள் வரை ஏற்றது பொது ஆண்டு முறை. பாடத்திட்ட வடிவமைப்பின் போது அரசியல் குறுக்கிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது?

வரிக்கு வரி உதயசந்திரன் வாசித்து பாடநூல்களை உருவாக்கியதாக நாளிதழ் ஒன்று பதிவுசெய்துள்ளது எனில், தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் என ‘மனோன்மணியம்’ பெ.சுந்தரனார் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? மனோன்மணியம் அன்று – மனோன்மணீயம். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயரே தவறாக உள்ளது. சுந்தரனார் எப்போது ‘மணியம்’ வேலை பார்த்தார் என்று தெரியவில்லை. பதினோராம் வகுப்பில் சரியாக உள்ளது. பாடப்பகுதியில் ஒன்றாக மனோன்மணீயம் இடம்பெற்றதும் காரணமாக இருக்கக்கூடும். உதயசந்திரன் ரொம்பவும் வருத்தப்படத் தேவையில்லை. பழைய தமிழ்ப் பாடநூலான ஏழாம் வகுப்பிலும் சுந்தரனார் மணியமாகத்தான் பணிபுரிகின்றார். நமது மொழிப்பாட நூலாக்கத்தின் ஆசிரியர்களின் தமிழ்ப்பற்று எவ்வளவு மேலோட்டமானது என்பதற்கு இதுவே சான்று.

பழைய ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலில் உ.வே.சா.வின் பெயரின் விரிவாக்கத்தையே தவறாகக் குறிப்பிட்ட கடந்தகால ‘வரலாற்றுப் பெருமை’ நமது பாடநூல் குழுவிற்கு உண்டு. உ.வே.சா. பதிப்பித்த நூற்களையும் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை ஆய்வாளர் பொ.வேல்சாமி வெளுத்து வாங்கியிருந்தார் தன் முகநூல் பக்கத்தில். ஆனாலும் ‘மனோன்மணீயம்’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் இருக்கும்போதும் தவறு தொடர்ந்து நிகழ்வது பேரவலம்.

ஏழாம் வகுப்பில் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பாரதியார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் அறிமுகத்தில் பாரதிதாசன் – புரட்சிக்கவிஞர் என அடைமொழியுடன் சிறப்பிக்கப்படுகிறார். பெருஞ்சித்திரனாரும் பாவலரேறு என அடையாளப்படுத்தப்படுகிறார். பாரதியார், கவிஞர் பாரதி எனப்படுகிறார். அவ்வளவுதான் அவ்வளவுதான்! பாரதி மகாகவியா இல்லையா என வ.ரா., கல்கி, ஜீவா என ஒரு இலக்கியப் போரே நிகழ்ந்த தமிழுலகில் ‘கவிஞர்’ பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்று மட்டும் கூறுவதன் மூலம் எதனை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? மகாகவி, தேசியக்கவி என எளிய மனிதர்களால் விளித்து மகிழப்படும் பாரதி – கவிஞர் பாரதி (எ) சுப்பிரமணியன். வலம்புரிஜான் கூறியது நினைவிற்கு வருகிறது. “பாரதியாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த நபர்களை விட அவர் உடலில் மொய்த்த ஈக்கள் அதிகம்!”

பாடப்புத்தகங்களில் மொழிப்பாடமாக இடம் பெறத்தக்கவை, அதன் உள்ளடக்கம், தரம், மாணவர்களிடையே வளர வேண்டிய படைப்பாற்றல் உள்ளிட்ட மொழித்திறன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்யப்படாமல், ஆளுங்கட்சித் தலைவர்களாலோ (அ) அவர்களுக்கு அணுக்கமானவர்களாலோ எழுதப்பட்டது என்ற ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு தேர்வு செய்யப்பட்ட நிலைமை மாறியுள்ளது என்றே கூறவேண்டும். இதற்குத் தேர்வுக்குழுவினரை மட்டும் உடனே பாராட்டிவிட முடியாது. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசிய எடப்பாடியாரும், தர்மயுத்தம் புகழ் ஓ.பன்னீர்செல்வமும் எழுத்தாளர்கள் அல்லர் என்ற தமிழ்மக்களின் நல்லூழும் ஒரு காரணம்.

மொழிப்பாடங்கள் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை (skills board), கற்றல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் (Learning, Speaking, Reading, Writing, சுருக்கமாக CRSW) திறன்களை ஆறாம் வகுப்புகளில் வளர்க்கும் வண்ணம் அமையவேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படைப்பாற்றல் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பனவாக அமைதல் வேண்டும். புதிய பாடநூல் ஏராளமான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது எனினும், அதனை செய்துபார்க்கத் தேவையான மொழி ஆய்வகம், துணைக்கருவிகள், (செயல்படுகின்ற) நூலகம் போன்ற வளங்கள் அரசுப்பள்ளிகளில் இருந்தால் மட்டுமே பாடநூல் மாற்றங்கள் முழுமையான வெற்றி தரும்.

என்றாலும், பலநூறு ஆளுமைகளின் ஆலோசனைகள், பல்வேறு கருத்தரங்குகள் – கடும் உழைப்பைக் கோரும் பாடநூல் தயாரிப்புப் பணியில் அயராமல் ஈடுபட்ட கல்வியாளர்கள் எல்லாம் வைரமுத்துவின் கவிதையைத் தமிழ்ப்பாடநூலில் இடம்பெறச் செய்யத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

முதல் படி என்ற வகையில் நாம் இப்பாடத் திட்டத்தின் குறைகளையும் மீறிப் பாராட்டலாம். ஆனால் செல்லவேண்டிய தூரம் மைல் கணக்கில் உள்ளது.

Leave a Reply