Posted on Leave a comment

இந்திய அறிவுசார் சொத்துரிமைப் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 1 | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

பொங்கல் விழா சமயங்களில், ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். ஆயிரக்கணக்கானோர் கூடி இருப்பார்கள். ஏகப்பட்ட குழந்தைகள் போட்டிகளில் சேர விரும்புவார்கள். காலிறுதி, அரையிறுதி என்றெல்லாம் போட்டிகள் வைக்க நேரம் இருக்காது. எனவே, ஆங்காங்கே அண்ணாக்கள் கூட்டத்தோடு நின்று கொண்டிருப்பார்கள். திடீரென மைக்கில் அறிவிப்பு வரும். “ஓட்டப்பந்தயத்திற்கு குப்புசாமி அண்ணாவிடம் பெயர் கொடுக்கவும், முதலில் பெயர் கொடுக்கும் பத்து பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும்” என. அவரைத் தேடி கண்டு பிடிப்பதற்குள், ஏற்கெனவே பத்து பேர் பெயர் கொடுத்திருப்பார்கள்.

இதற்காகவே, என் அண்ணா நான் இருக்கும் பக்கமாக வந்து நிற்பான். மைக்கில் அறிவித்ததும், நான் போய் முதலில் பெயர் கொடுத்துவிடுவேன்.

ஒருபோதும் நான் வென்றதே இல்லைதான். என்னுடைய இந்த அல்ப சாமர்த்தியத்தால் (!!!) மிக மிகத் திறமையான நிறைய வீராங்கனைகள், போட்டிக்குப் பெயர் கூட கொடுக்க முடியாமல் நின்றதுண்டு.

இந்த அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) பதிவுகளைப் (ரெஜிஸ்ட்ரேஷன்களைப்) பார்த்ததும் எனக்கு அந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

உலகம் மொத்தத்திற்குமே கண்காட்சி போல, பொருட்காட்சி போல இருக்கும், பெரும் வரலாறு கொண்ட இந்தியா போன்ற பல ஆசிய நாடுகள் தன் படைப்புகளைப் பொதுவில் வைத்திருக்க, இதோ இப்போது வந்த, வரலாறு ஏதும் இல்லாத நாடுகள் தன் கண்டுபிடிப்புகளை ஓடி ஓடிப் பதிவதும், பல வீராங்கனைகளை ஓரங்கட்டிவிட்டு என்னைப் போன்ற சில்லுண்டிகள் தன் பெயரைப் போட்டிக்கும் பதிவு செய்த சாமர்த்தியம் போலவே தோன்றுகிறது.

இந்தியாவைப் பொருத்து, கண்டுபிடிப்போ கலையோ, எதையும் கண்டுபிடித்தவர் பெயரில் பதிந்து கொள்ளும் வழக்கம் இல்லை. பல சமயங்களில் அவை மற்ற நாடுகளைப் போலவே அந்தந்த நாட்டு அரசர்களின் சொத்தாகியது.

ஆரம்ப காலங்களில் இங்கிலாந்தில் ஒருவர் ஒரு தொழில் செய்ய வேண்டும் எனில், தன் தொழில் குறித்து அரசியிடம் அனுமதி கோரி மனு ஒன்றை அளிக்க வேண்டும். அரசி அதை ஏற்றுக் கொண்டால், இவரின் மனு பதியப்பட்டு, அதற்கு அனுமதிக் கடிதம் அளிக்கப்படும். அதன் பின்னிட்டு, அவர் தன் கண்டுபிடிப்புகளைப் பொருட்களாக்கி விற்றுக் கொள்ளலாம். அறிவுசார் சொத்துரிமை என்பதே ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் இப்படித்தான் துவங்கியது.

இப்படி அரசி தரும் அனுமதிக் கடிதங்களே, உரிமங்களாகப் பதிவாகி இருந்தன.

இந்தியாவில் இருந்த சூழலே வேறு. எவர் வேண்டுமானாலும் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எனினும், சாதிக்கட்டுக்குள் அவை இருந்தன. அதுவும் கூட இங்கே பதியும் வழக்கம் இல்லாமல் போனதற்குக் காரணம் எனலாம்.

இவை எல்லாவற்றையும் தவிர, இந்திய மதங்களில், அனைத்துக் கலைப் படைப்புகளும், கோவிலுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தன. பக்தி சார்ந்தவையாகவே இருந்தன. அதற்குக் காரணம், பக்தி காரணமாகவோ, ‘சாமிகுத்தம்’ ஆகிவிடும் எனும் பயத்தின் காரணமாகவோ அதில் கலப்படம் வராது என நினைத்திருக்கலாம். மதங்கள் வேண்டாம், கோவில்கள் வேண்டாம் எனச் சொல்பவர்கள், அந்த கோவில்களோடு தொடர்பாகி கோவில்களோடும் பக்தியோடும் இறுகக்கட்டி வைக்கப்பட்டிருந்த இதுபோன்ற கலைகளைப் பாதுகாக்க வழியும் சொன்னால் நல்லது.

மேலும், பக்தியின் காரணமாகவே, தான் எழுதிய பாடல்களைக் கூட, அப்பாடல்களைப் பாடினால் பாடுபவருக்குப் புண்ணியம் சேரும் எனும் நம்பிக்கையில், பிரபலமான சாஹித்ய கர்த்தாக்கள்தான் அவற்றைப் பாடினார்கள் எனப் பொய் சொல்வதும் உண்டு. சட்ட மொழியில் இதை பாஸிங்க் ஆஃப் என்பார்கள். தான் சொல்லும் அந்தப் பொய் அடுத்தவருக்கு நல்லது செய்வதற்கே என அவர்களாகவே நம்பிக்கொண்டனர். இப்போதும்கூட செய்யப்படும் இதுபோன்ற பாசிங்க் ஆஃப்களின் நோக்கம் சட்டத்தால் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

ப்லகேரிசம் என்பது அடுதவருடைய படைப்பை தன்னுடையது எனச் சொல்வது. அப்படி அடுத்தவர் பொருளுக்குத் தன்னுரிமை கோரும் சச்சரவில் உலகம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, இந்தியாவில் அதற்கு நேர் மாறாக, பக்தியின் காரணத்தால், பாஸிங்க் ஆஃப் தான் அதிகம் நடை பெற்று வந்திருக்கிறது. (இங்கும் ப்லகேரிசம் உண்டுதான்.)

தியாகராஜரோ, தீக்ஷிதரோ எழுதியதாக நாம் நம்பும் பாடல்களில் சில அவர்களால் எழுதப்பட்டதல்ல. அதை மொழியின் வளத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக, தீக்ஷிதர் எழுதிய  ‘அகிலாண்டேஷ்வரி’ எனும் த்விஜாவந்தியில் பாடப்படும் க்ருதி அவர் எழுதியதல்ல என மொழி வல்லுநர்கள் நிருபிக்கிறார்கள்.

அதே போலத்தான், மற்ற அறிவுசார் விசயங்களிலும். இந்திய கலாசாரத்தில், ‘தன்னுடையது’ எனும் முனைப்பு ஆரம்பம் முதலே கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கிறது. அப்படி அள்ளித் தருவதை பெருமையாகவே நம் முன்னோர் நினைத்திருந்திருக்கிறார்கள். அது மருத்துவமாகட்டும், வேறு படைப்புகளாகட்டும். தவறாக பயன்படுத்தப்படக் கூடும் என இருந்தவை மட்டுமே, கண்டுபிடித்தவர்களுக்குள், அல்லது அவர்களது குழுவுக்குள், மட்டுமே தகவல் பரிமாறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. வெளி ஆட்களுக்கு அவை குறித்த தகவல் ஏதும் தரப்பட மாட்டாது. சில இடங்களில் அது அந்த சாதிக்காரர்களின்/குழுக்களின் தனிச் சொத்தாகவே கூடப் பார்க்கப்பட்டது. இதுவே பிற நாடுகளில், அல்லது இன்றைய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களில், ‘வியாபார ரகசியம்’ (Trade Secrete) என அங்கிகரிக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக கோகோ கோலாவின் தயாரிப்பு முறை எங்கும் பதிந்து வைக்கப்படவில்லை. அதன் தயாரிப்பு முறை அந்த நிறுவனம் சார்ந்த மூன்றே பேர்களுக்கு மட்டுமே தெரியும் எனச் சொல்வார்கள்.

இப்படி ட்ரேட் சீக்ரட் என வைத்துக் கொள்வதால், அந்த அறிவு, அதன் பின்னிட்டுப் பயன்படுத்தவோ, அந்தப் பொருளை உற்பத்தி செய்யவோ முடியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்திய கை-மருந்துகள் பலவற்றை நாம் இழந்திருக்கிறோம். அதே, கோகோ கோலா உற்பத்தி முறை தெரியாவிட்டால் மனித இனத்திற்கு நட்டம் அல்ல. அல்லவா?

ஆசிய கலாசாரம், குறிப்பாக நமது இந்திய கலாசாரம், உலகத்தின் மற்ற பாகங்களின் கலாசாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருப்பதாலேயே, நமது கலாசாரத்தை ஒட்டியதாக நமது சட்டமும் இருக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், எல்லோரும் ஓடுகிறார்கள் எனவே நானும் ஓடுகிறேன் என்பது போல, உலக வழக்கத்தையே நாமும் ஏற்று அறிவுசார் சொத்துரிமை குறித்த பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்திருக்கிறோம்.

உதாரணமாக நாமறிந்த ஒன்றைச் சொல்வதெனில், ‘Made in China’ என சைனாவில் தயாரித்த ஒன்றைக் குறிப்பிடுவது போலவே, ‘Made as China’ என்றும் (உண்மையில் கொஞ்சம் மிஸ்லீடிங்காக) குறிப்பிட்டுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால், ஷாம்பெய்ன் எனும் மதுவை, TRIPS எனும் பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி, ‘ஷாம்பெய்ன் போலவே’ தயாரிக்கப்பட்டது என அதை ஒத்த வேறொரு மதுப்புட்டியில் எழுத இயலாது.

நமது கள் போன்றவற்றிற்கெல்லாம் இந்த அந்தஸ்து/சலுகை கிடையாது. கள் போன்றவை நமது பண்பாட்டோடு இணைந்தவையாகவே இருந்திருக்கின்றன. பனைமரத்தை அழித்த கையோடு, பனைத் தொழிலும் போய், இதற்கான அந்தஸ்துகளையும் பன்னாட்டு ஒப்பந்தங்களில் இழந்து நிற்கிறோம்.

(தொடர்வோம்)

Leave a Reply