Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 11 | சுப்பு


முதல் காதலும் தெய்வக் குத்தமும்

பையனை இஞ்ஜினியர் ஆக்க முடியாவிட்டாலும் அரசாங்க வேலைக்காவது அனுப்ப வேண்டுமென்பது நயினாவின் ஆசை. இரயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்திய அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கான பரீட்சையை நான் எழுதினேன். பரீட்சையில் சிறப்பாக வெற்றி பெற்றாலும், சென்னையை விட்டுப் போக வேண்டியிருக்குமே என்ற எண்ணத்தால் நேர்முகத் தேர்வில் வேண்டுமென்றே ஏடாகூடமாகப் பதில் சொல்லி வேலை கிடைக்காமல் செய்து கொண்டேன்.

சென்னையை விட்டுப் புறப்படுவதற்கு எது இடர்ப்பாடாக இருந்தது என்பதைச் சொல்கிறேன். அது என்னுடைய முதல் காதல்,

மீசை முளைக்கின்ற பருவத்தில் காதல் இல்லாமல் வீரம் மட்டும் இருந்தால் அது சுண்ணாம்பில்லாத தாம்பூலம் போல ஆகிவிடும் அல்லவா. எனவே முதல் காதல்.

பக்கத்து வீட்டுப் பெண்ணோடுதான் காதல். பெயர் சங்கரி. பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவி. இந்தப் பிராயத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஏதோ ‘அலைகள் ஓய்வதில்லை, ஆயிரம் தாமரை மொட்டுக்கள்’ என்று அனாவசியமாகக் கற்பனை செய்ய வேண்டாம். நமக்கு அதெல்லாம் லபிக்கவில்லை. காதலர்களுக்கிடையே குறைந்தபட்ச இடைவெளி ஐந்து அடி என்பதைக் குறித்துக்கொள்ளவும். ஆகவே பௌதிகம் எதுவும் இல்லை.

ஏற்கெனவே நமக்குத் தமிழ்ப் பற்று அதிகமாக இருந்ததாலும் பருவத்தின் பார்வை அதைச் சூடேற்றி விட்டதாலும் விருத்தப் பாவாக ‘நாடிய நாற்பது’ என்று ஒரு கவிதை நூல் எழுதினேன்.

இப்படியாக நெருங்கிய பேச்சு, மூச்சு எதுவும் அதிகம் இல்லாமல் இரண்டு வருடகாலம் போய்க்கொண்டிருந்த இந்தக் காதல், தெய்வக் குத்தத்தால் தடைப்பட்டது. மன்னிக்கவும், முற்றுப்பெற்றது.

இந்தக் காலத்தில் நானும் சில நண்பர்களும் ஒரு நல்ல பழக்கத்தை வைத்துக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு குறிப்பிட்ட கோவிலுக்குப் போவதுதான் அந்தப் பழக்கம். கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கும். இருந்தாலும் ஏதாவது சிபாரிசு பிடித்து நாங்கள் உள்ளே போய்விடுவோம். இதே கோவிலில் சாமியார் ஒருவர் குறி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடத்திலும் கூட்டம் அலைமோதும். நாங்கள் சாமி தரிசனத்தோடு சரி. சாமியாரைப் பார்ப்பதில்லை.

இருந்தாலும் ஒருநாள் விதி விளையாடியது. நண்பர்கள் வற்புறுத்தலுக்காகச் சாமியாரையும் பார்க்கப் போனோம் அங்கே எங்கள் முறை வருவதற்காகக் காத்திருந்தோம்.

காத்திருந்த நேரத்தில் சும்மா இருக்காமல் சாமியாரைப் பற்றி ஏதோ கமெண்ட் அடித்தேன். அதைச் சாமியார் கவனித்துவிட்டார். என்னை அருகில் அழைத்து கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டுதட்டி ‘வீட்டுக்குப் போ, தெரியும்’ என்றார்.

தெரிந்துவிட்டது. சங்கரியின் குடும்பத்தார் வீட்டைக் காலி செய்துகொண்டு சென்னையின் மறு எல்லைக்குப் போய்விட்டார்கள். இப்படி காதல் கதை இடைவேளையிலேயே முற்றுபெற்றுவிட்ட பிறகு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கொஞ்ச காலம் போதைக்கு அடிமையாகி இருந்தேன். கொஞ்ச காலம்தான். மீண்டும் அரசியல், அடாவடி என்று தொடர்ந்தது என் பயணம்…

நயினா டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஷார்ட்ஹேண்ட், டைப்ரைட்டிங் படிக்கச் சொன்னார். இன்ஸ்டிடியூட்டிலிருந்த ரசீதுப் புத்தகத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். மாதாமாதம் வீட்டில் கொடுக்கும் பணத்தைச் செலவு செய்துவிட்டு ஒவ்வொரு ரசீதாக எழுதி வீட்டில் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் அம்மா, “ஏண்டா உங்க இன்ஸ்டிடியூட்டில் நீ மட்டும்தான் படிக்கிறாயா?” என்று கேட்டார். என்னால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘ரசீது அடுத்த அடுத்த நம்பராகத் தொடர்ந்து வருகிறதே, அதனால் கேட்டேன்” என்றார். இன்ஸ்டிடியூட் படிப்பு இதோடு முடிந்தது.

***

முதன் முதலில் நான் சின்னமலை பகுதியில் லேத்துப்பட்டரை ஒன்றில் உதவியாளனாகச் சேர்ந்தேன். மெஷினிலிருந்து உலோகச் சுருளை அகற்றுவதும் மெஷின்மேன் ஏவும் வேலையைச் செய்வதும்தான் முதல் நாள் நடந்தது. இரண்டாம் நாள் என்னை டீ வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கி வந்தேன். டீ குடித்த டம்பளரை, அவர்கள் குடித்ததைக் கழுவி வைக்கச் சொன்னார்கள். அது கௌரவக் குறைவாகத் தோன்றியதால் மறுத்துவிட்டேன். அந்த நிமிடமே நான் வெளியேற்றப்பட்டேன்.

மவுண்ட் ரோடு கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சமயத்தில் எக்ஸ்ட்ரா ஆள் எடுப்பார்கள். காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வேலை நேரம். நாளொன்றுக்கு ரூ 2.75 கூலி. இந்த வேலையை நான் ஒழுங்காகவும், திறமையாகவும் செய்தேன் என்று சொல்லலாம். பில் போட வேண்டும், கவுண்ட்டரிலிருந்து துணி வியாபாரம் செய்ய வேண்டும். பேல் உடைக்க வேண்டும். மூட்டை தூக்க வேண்டும். இந்தக் கடையில் கல்லாவில் உட்காருவதைத் தவிர எல்லா வேலைகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட்டேன்.

இங்கே முதலில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் கடைசியாகவும் கடைசியில் வந்தவர்கள் முதலாகவும் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டியது சம்பிரதாயமாய் இருந்தது. எனக்குப் பிறகு வேலைக்கு வந்தவர்கள் இளம் பெண்கள் என்பதால் இந்த மரபு என் விஷயத்தில் மீறப்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்றுதான் வாராந்திரச் சம்பளம். அன்றுதான் வேலை நீக்கமும். என்னை அனுப்பப் போகிறார்கள் என்று நம்பிக்கையான தகவல் கிடைத்தவுடன் ஒரு சூழ்ச்சி செய்தேன். ரெடிமேட் சட்டைகளை கோ-ஆப்டெக்ஸில் ரிடர்ன் எடுக்க மாட்டார்கள். நூற்றுக்கணக்கான ரெடிமேட் சட்டைகளை வேண்டுமென்றே சைஸ் மாற்றிக் கொடுத்துவிட்டேன். இந்த நெரிசலில் சட்டையைப் போட்டுப் பார்க்க முடியாது. சரியில்லையென்றால் திங்கட்கிழமை எடுத்து வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.

வெள்ளிக்கிழமையன்று சம்பளப் பட்டுவாடா செய்து என்னை அனுப்பிவிட்டார்கள். திங்கட்கிழமை காலை கோ-ஆப்டெக்ஸ் பக்கத்திலுள்ள டீக்கடையில் மறைந்திருந்து ரெடிமேட் சட்டை வாங்கினவர்கள் வந்து தகராறு செய்வதைக் கண்குளிரக் கண்டேன். நிலைமை மோசமாகி, போலீஸ் வந்தபோது அங்கிருந்து நழுவிவிட்டேன்.

பிறகு எலக்ட்ரிக்கல் உபகரணங்களை ரிப்பேர் செய்து கொண்டிருந்த விஷ்ணுவின் அண்ணன் மோகனிடம் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். இந்த வேலை எனக்குப் பிடித்திருந்தது. இந்த முதலாளிக்கும் என்னைப் பிடித்திருந்தது. இந்த முதலாளி ஒரு டைப். வாராவாரம் நான் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் இவர் கண்டிப்பாக இருந்தார். பசி வேளையில் சாப்பாடோ, டிபனோ வாங்கித்தரமாட்டார். ஆளுக்கு நாலு கொய்யாப்பழம், நாலு வாழைப்பழம், இரண்டு ஆரஞ்சுப்பழம்தான். ரொம்பவும் போராடினால் டீ கிடைக்கும். சௌகரியமாக நடத்தினாலும் இந்த முதலாளி சம்பளம் மட்டும் தரமாட்டார். இந்த வேலையிலிருந்து நானே விலகிவிட்டேன்.

தெரிந்தவர் ஒருவரின் சிபாரிசோடு வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் கிண்டி மெஷின் டூல்ஸ் என்ற தொழிற்சாலைக்குப் போனேன். போனவுடன் என் அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் உட்கார வைத்தார்கள். அன்றுநாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த நிலை நீடித்தது. மனோகர் எழுதிய ‘Bend in the Ganges’ இந்த மூன்று நாட்களும் எனக்குத் துணையாயிருந்தது. நான்காம் நாள் இந்த அலுவலகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது.

அடையாரிலிருந்து சைதாப்பேட்டை வழியாக கிண்டி மெஷின் டூல்ஸ்க்கு வர வேண்டும். காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால் திரும்பிவர இரவு எட்டு மணி ஆகிவிடும். நூறு ரூபாய் சம்பளம் என் செலவுக்கே சரியாய் இருக்கும். இந்த வேலை ஆறுமாதம் நீடித்தது. பிறகு எனக்கு அம்மை போட்டுவிட்டதால் இரண்டு மாத லீவு எடுத்தேன்.

லீவு முடிந்து வேலைக்குப் போனால் என் இடத்தில் இன்னொருவரை நியமனம் செய்துவிட்டிருந்தார்கள். அக்கௌன்டென்டிடம் முறையிட்டேன். ‘சரி, இங்கேயே இரு. முதலாளியைக் கேட்டுப் பார்க்கலாம்’ என்றார். ரிசப்ஷனிலேயே உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது அங்கே PBX எக்ஸ்சேஞ்ச் வைப்பதற்காக டெலிபோன் ஆட்கள் வந்தார்கள். சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் அவர்களுக்கு உதவிகரமாய் இருந்தேன். அப்போதே அந்த PBX எக்ஸ்சேஞ்சை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்துகொண்டேன். இது நடந்து கொண்டிருக்கும்போது முதலாளி வந்தார். அங்கே நான் என்ன செய்கிறேன் என்று விசாரித்தார். அந்த எக்ஸ்சேஞ்சை இயக்குவதாகக் கூறினேன். என்னுடைய திறமையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு என்னை டெலிபோன் ஆபரேட்டராக நியமனம் செய்தார். இந்த வேலை ஆறு மாதம். இங்கே ஒரு போர்மனோடு சண்டை போட்டுக்கொண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.

என்னுடைய சொந்தக்காரர் ஒருவர், மலேசியன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மேனேஜராக இருந்தார். அவருடைய தயவால் நான் டிராவல் ஏஜெண்ட் ஆனேன். இதுவும் மூன்று மாதங்களுக்குத்தான். ஒருநாள் இந்த மானேஜர் குடித்துக் கொண்டிருப்பதை நயினா பார்த்துவிட்டார். இந்தத் தொழில் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

நயினாவின் வற்புறுத்தலால் இந்தச் சமயத்தில் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் பி.யூ.சி. படித்து பாஸ் செய்தேன்.

(தொடரும்.)

Leave a Reply