Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 13 | சுப்பு


ஆங்கிலத்தின் வழியாக ஆர்.எஸ்.எஸ்

1971ல் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹமானின் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சட்டப்படி முஜிபுர் ரஹுமான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் ராணுவம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ராணுவ பலத்தோடு கிழக்கு வங்காளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கானவர்கள் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அந்தச் சமயத்தில் வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஜனசங்கம் நாடு தழுவிய இயக்கத்தை நடத்தியது.

சென்னையில் புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடந்த ஊழியர் கூட்டத்தில் வாஜ்பாய் பேசினார். நான் ஜனசங்க உறுப்பினர் இல்லை என்றாலும் கூட்டத்திற்குப் போய் முன்வரிசையில் அமர்ந்துவிட்டேன். என்னை இந்தக் கூட்டத்திற்கு அழைத்துப்போனது அனில்குமார் சோனி என்கிற கான்பூரைச் சேர்ந்த நண்பர். இவர் தீவிர ஜனசங்கப் பற்றாளர். எந்தப் பேச்சைப் பேசினாலும் அது வானிலை அறிக்கையாக இருந்தாலும் வரப்போகிற திரைப்படமாக இருந்தாலும் ‘ஜனசங்கம் ஒருநாள் தில்லியின் செங்கோட்டையில் கொடி ஏற்றும்’ என்று சொல்லித்தான் முடிப்பார்.

வாஜ்பாயின் பேச்சு – அது பேச்சல்ல, நாட்டியம் என்றுதான் சொல்ல வேண்டும். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் முகத்தை அசைத்தும் பாவத்தோடு அவர் உரையாற்றும்போது அந்த வார்த்தைகளுக்குள் புதிய வலு சேர்ந்துகொண்டது.

கூட்டம் முடிந்து திரும்பும்போது சோனி என்னிடம் கேட்டார். “வாஜ்பாய் பத்தி என்ன நினைக்கிற” என்று. நான் சொன்னேன், “அவருடைய கால்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது கால்கள் வலுவாய் இருக்கின்றன” என்று. நண்பர் சோனிக்குப் புரியவில்லை.

வாஜ்பாய்தான் பாரதநாட்டைத் தூக்கிப்பிடிக்கப் போகிறார், அதற்கேற்ற வலு அவருடைய கால்களில் இருக்கிறது என்று விளக்கிச் சொன்னேன்.

*

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.என்.அனந்தநாயகி சில மாதங்களிலேயே இந்திரா காங்கிரசுக்கு மாறிவிட்டார். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அரசியல் அயோக்கியத்தனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் எங்களுடைய குழு சிதறிவிட்டது. நான் மட்டும் பாதையை மாற்றிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் நோக்கிப் பயணப்பட்டேன். அதற்கான காரணிகள் பல. ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸில் சேரும் வரை ஏழாண்டு கால இடைவெளி. இந்த ஏழாண்டுக் காலத்தில் நான் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருந்தேன். இப்படி எக்கச்சக்கமான புத்தகங்களைப் படித்து ஆங்கிலப் பதங்களைப் பழக்கப்படுத்திக்க கொண்டதால் என்னுடைய எழுத்து நடை சராசரிக்கு மேலாகவும், ஆங்கிலத்தைப் பேசிப் பழக வாய்ப்பில்லாத காரணத்தினால் என்னுடைய பேச்சுநடை சராசரிக்குக் கீழாகவும் இருப்பதாக நண்பர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இப்படிப் படித்த புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் என்னுடைய அரசியல் மாற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன. ஒன்று லியோன் யூரிஸ் எழுதிய எக்ஸோடஸ் ((EXODUS – LEON URIS)) என்கிற ஆங்கிலப் புதினம். ஒரு அமெரிக்க நர்ஸுக்கும் யூதப் போராளிக்கும் இடையே ஏற்பட்ட ரசாயன மாற்றங்களைச் சொல்வதாகத்தான் கதை தொடங்குகிறது. ஆனால் பக்கங்கள் விரிய விரிய ஒரு இனத்தின் வீர / சோக வரலாறாக மாறிவிடுகிறது. யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோரிக்கை காகிதங்களில் எழுதப்பட்டு, ரகசியக் குழுக்களில் பேசப்பட்டு, ஊர்வலங்களில் முழங்கப்பட்டு, பல லட்சம் பேரை பலி கொடுத்த பின்னர் சாத்தியம் ஆனது எப்படி என்பதைச் சொல்கிறார் லியோன் யூரிஸ்.

யூதர்கள் செய்ததை இந்துக்கள் ஏன் செய்யக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அது, செய்யவேண்டும் என்ற ஆசையாக மாறியது. அதற்கான வேலையில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்ற சங்கல்பமாகக் கெட்டிப்பட்டது. இப்படி வேகமான உணர்ச்சிகளோடு ஆர்.எஸ்.எஸ்ஸைத் தேடி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக சமாஜ ஷாகாவுக்கு போனேன் (1973). அங்கே எதேச்சையாக ஹண்ட்ரெட்ஜி என்று அன்போடு அழைக்கப்படும் ஆர்.ஸ்ரீநிவாசன் எக்ஸோடஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இதுதான் நம்முடைய இடம் என்று நிச்சயப்படுத்திக்கொண்டேன்.

இன்னொரு புத்தகம் பால்ராஜ் மதோக் எழுதிய இந்தியனைசேஷன் ((Indianisation – What, Why, and How). இந்தப் புத்தகத்தைப் பக்கத்துக்குப் பக்கம் பாஸ்பரஸ் என்று சொல்லலாம். தேசிய உணர்வு என்பதைப் புள்ளி வைத்துக் கோலம் போட்டுக் கொலுவேற்றிக் கும்பிட்டிருப்பார் இவர். அரேபியத் தன்மை என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கு அவசியமானது அல்ல என்பதை அழகாக விளக்கி இருப்பார். நேருவின் பிடிவாதத்தால் இந்திய நாடு இழந்தவை பற்றிச் சொல்லி இருப்பார். ஸ்தாபனக் காங்கிரசை விட்டு வெளியேறி அரசியலரங்கத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை வெளியில் நின்று நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை ஆட்டத்துக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்க்குள்ளும் தள்ளிவிட்ட காரணிகளில் இந்தப் புத்தகமும் ஒன்று என்று சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் தி.மு.க சார்புடையவன். நாங்கள் இருவரும் அதிகமான நேரங்களை அறிவாராய்ச்சியில் செலவழிப்போம். எனக்கு அமெரிக்க நாத்திகர் இங்கர்சாலை ((ROBERT G INGERSOLL) அறிமுகப்படுத்தியது இவன்.

நண்பனுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வேலை கிடைத்தது. வேலையில் சேருவதற்கு டாக்டர் சர்ட்டிபிகேட் வேண்டும். அவனுக்கோ டீ குடிக்கக்கூடக் காசில்லாத நிலைமை. மிகவும் வருத்தப்பட்டான். அவனை அழைத்துக்கொண்டு அடையாரிலுள்ள டாக்டர்களை ஒவ்வொருவராகப் பார்த்து சர்ட்டிபிகேட் கொடுக்கும்படியும் அதற்கான பீஸைப் பிறகு வாங்கிக் கொள்ளும்படியும் வேண்டினேன். யாரும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. திரு. ராமமூர்த்தி என்ற E.N.T. சர்ஜனை அணுகினோம். சிறிது தயக்கத்துடன், “இப்பொழுது முடியாது, நீங்கள் மதியம் வாருங்கள்” என்றார். எனக்குப் பொதுமையில்லை. “இப்பொழுதே கொடுத்துவிடுங்களேன்” என்று வற்புறுத்தினேன். அவர், “தம்பி வீட்டில் ஒரு சாவு ஆகிவிட்டது. என்னுடைய நம்பர் ஸ்டாம்ப் அந்த அறையில்தான் இருக்கிறது. பிரேதத்தை எடுத்த பிறகுதான் நான் அங்கே போக முடியும்” என்று கூறினார். இவ்வளவு நல்ல மனதுடையவரைத் தொந்தரவு செய்வதற்குக் கஷ்டமாயிருந்தது. இருந்தாலும் எங்கள் நிலைமை அப்படி. அந்த வீட்டில் வாசலிலேயே காத்திருந்தோம். பிரேதம் வெளியே போன பிறகு நாங்கள் உள்ளே போய் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொண்டோம். திரு.ராமமூர்த்தி பணம் எதுவும் தர வேண்டாமென்று சொல்லிவிட்டார். திரு.ராமமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரென்று பிறகு தெரிந்து கொண்டேன்.

இப்படி பல விஷயங்கள் சேர்ந்து என்னை இந்து இயக்கப் பற்றாளனாக மாற்றிவிட்டன. இதைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.

கன்னியாகுமரியிலிருக்கும் விவேகானந்தர் நினைவாலய கமிட்டியும், ஆர்.எஸ்.எஸ்ஸால் ஏற்படுத்தப்பட்டதுதான். வெளிப்படையாக அரசாங்கத்தை விரோதம் பண்ணிக் கொள்ள விரும்பாத சில ஹிந்து அபிமானிகள் இந்த மாதிரி ஸ்தாபனங்களில் இடம் பெறுவார்கள். விவேகானந்தர் நினைவாலய கமிட்டி புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தது. நூற்று ஐம்பது ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை விற்றால் இருபத்தைந்து ரூபாய் கமிஷன். ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு ஒரு சிறுவனை அனுப்புவதற்காக இந்தப் புத்தக விற்பனையில் நானும், கண்ணன் என்ற நண்பனும் இறங்கினோம். ஒரு சைக்கிள் கேரியரில் புத்தகம், ஹாண்டில் பாரில் கண்ணன் என்று ஒரு வாரம் தெருத்தெருவாக அலைந்தோம். யாரிடம் இதை விற்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பெரிய பங்களாவாகப் பார்த்து, அவர்களுக்கு நூற்றைம்பது ரூபாய் பெரிய தொகையாக இருக்காது என்ற எண்ணத்தில் முயற்சித்தோம். இது சிறிது பலனளித்தது.

தொழிலதிபர் சுந்தரமையர் வீட்டில் கூர்க்கா எங்களை உள்ளேவிட மறுத்துவிட்டான். நாங்கள் கூர்க்காவோடு தகராறு செய்து கொண்டிருந்ததை சுந்தரமையர் பார்த்துவிட்டார். எங்களை உள்ளே அழைத்துப் பேசினார். ஒரு புத்தகம் விற்பனை ஆயிற்று.

திரைப்பட பைனான்சியர் ஒருவர் புத்தகத்தை வாங்கி எடைபோடுவதுபோல் தூக்கிப் பார்த்தார். விவேகானந்தர் புத்தகத்தை எடைபோடுவது என் தேச பக்திக்குச் சவாலாயிருந்தது. அவரை நன்றாகத் திட்டிவிட்டு புத்தகத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றதில் நானும் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் பிரபலமானோம்.

(தொடரும்)

Leave a Reply