Posted on Leave a comment

டிரைவர்கள் சொன்ன கதைகள் | ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்


 அனுபவஸ்தன் சொல்றான் கேட்டுக்க என்பது நம்மூரில் நாம் அடிக்கடி கேட்கும் வசனம். நாம் தவறு செய்கையில் நமக்கு நல்லது சொல்பவர்களின் பேச்சை நாம் கேட்க நமது நலம் விரும்பிகள் சொல்வது இது. அந்த நல்லதை நாம் அனுபவித்தும் அறியலாம். பட்டுத் திருந்தியவன் சொல்வதைக் கேட்டும் திருந்தலாம். நாலு ஊர் தண்ணி குடிச்சி நல்லது கெட்டதைப் பட்டுத் தெரிஞ்சவன் சொல்வதைக் கேட்கையில் நன்றாய்த்தான் இருக்கிறது.

தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைப் பயணத்தில் கழிக்கும் ஒருவர் கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டு தான் பெற்ற அனுபவங்களை அதிலும் குறிப்பாய்த் தனக்கு வாகனம் ஓட்டிட வந்தவர்களின் ஊடாகப் பெற்ற அனுபவங்களை ‘வலவன் ட்ரைவர் கதைகள்’ என்ற பெயரில் கதைகளாக எழுதியுள்ளார். ‘வலவன்’ என்ற வார்த்தை பச்சைத் தமிழர்களுக்குப் புரியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால் ட்ரைவர் கதைகள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டிய நிலை.

மொத்தமே 10 கதைகள்தான். ஆனால், அவை தரும் வாசிப்பின்பம் அலாதியானது. ஒரு வலுவான சிறுகதைக்கு உரிய அனுபவங்களை அழகான கதைகளாக்கியுள்ளார் சுதாகர் கஸ்தூரி.

பெரும்பாலும் குறிப்பிட்ட இன மக்களெனில் இப்படித்தான் இருப்பார்கள் என்ற மனவார்ப்பு நம்மிடம் இருக்கிறது. பல சமயங்களில் அவை தவறாகவே இருக்கின்றன என்றாலும் அதை ஒத்துக்கொள்ள நமது ஈகோ இடம் கொடுப்பதில்லை. வாகன ஓட்டிகளிடம் சண்டை போடுபவர்களில் பெரும்பான்மையோர் உண்மையைச் சொன்னால் ஈகோவால் உந்தப்பட்டதாலேயே அடித்துப் பேசியிருப்பார்கள்.

ஓட்டுநர்களின் நம்பிக்கைகள் ஜாதி, மத இன வேறுபாடற்றது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மிக மோசமான, திகிலான, சொன்னால் நம்ப முடியாத அனுபவங்கள் இருந்தே தீர்கின்றன. அவை தரும் பதட்டம், அந்த அனுபவத்தை மீண்டும் சந்திக்க நேர்கையில் அவர்கள் வினோதமாக நடந்து கொள்வது ஆகியவற்றை சுதாகர் கஸ்தூரி மிக அருமையாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

ஓட்டுநர்களாக ஆனவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலாக இருப்பதில்லை. உயிர் பிழைத்துக்கிடக்க, ஊரில் இருந்த / இருக்கும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அல்லது இதைத்தவிர வேறு எதுவும் தெரியாமல் இத்தொழிலுக்கு வந்தவர்களே அதிகம்.

இந்தியாவின் நீள, அகலங்களை, அவற்றைக் கடக்கும் வழியில் காணும் காட்சிகளை, எழுத்திலேயே காண்பிக்க முடிகிறது சுதாகர் கஸ்தூரிக்கு. நல்ல குளிர்ப் பிரதேசப் பயணத்தை விவரிப்பதாகட்டும், குண்டும் குழியுமான சாலையில் நடக்கும் பயணமாகட்டும், கசகசவென வேர்த்துக்கொட்டும் சூழலாகட்டும், ஒரு தாபாவில் உணவருந்தும் காடசியைச் சொல்வதாகட்டும், எல்லாவற்றையும் எழுத்திலேயே கண்ணில் கொண்டுவர முடிகிறது சுதாகர் கஸ்தூரியால்.

மும்பையிலிருந்து வெளியூர்ப் பயணத்திற்காக காரில் வெளியேறுவது என்பதே பெரிய சோதனையாய் இருக்கும்போலத் தெரிகிறது. பெரும்பாலான கதைகளில் இதுவே முக்கிய விஷயமாய் இருக்கிறது.

வெறும் ஓட்டுநர்தானே என அலடசியப்படுத்திவிட முடியாதபடிக்கு கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்களையும் காலம் ஓட்டுநர்களாக்கி விடுகிறது.

சில சமூக கலாசார பழக்க வழக்கங்களையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் சுதாகர், அவை குறித்து தனது கருத்துக்களாக எதையும் சொல்வதில்லை.

எல்லாம் சுயநலமே என எண்ணும் ஒருவருக்கு, பசியால் அழும் குழந்தைக்கு முகம் அறியாப் பெண் தாயெனப் பரிந்து பாலூட்டும் கணத்தில் மனம் உடைகிறது. சோட்டாணிக்கரா எவ்வளவு தூரம் என அம்மையைத் தரிசிக்க புறப்படுகிறார் ஒருவர். கண நேரத் தரிசனங்கள் நமது முன் முடிவுகளை, அகந்தையை எப்படி அழித்து விடுகிறது என்பதை அழகாகச் சொல்கிறார், அம்ம கதையில்.

இன்றைய அவசர உலகில், அதுவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், குழந்தைகளை நேசிக்கும், தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு ட்ரைவர், பொய் சொல்லும் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொய் எப்படி ஒரு டிரைவரின் சாவுக்கு காரணமாகி விடுகிறது என்பதை ஆதிமூலம் கதையில் சொல்லிச் செல்கிறார்.

கவரிமான் கதையில் வரும் டிரைவரின் வாழ்க்கை தமிழகத்தில் ஒரு சில ஜாதிகளில் இருப்பதை அறிந்திருக்கிறேன். அண்ணன் செருப்பு வீட்டில் இருந்தால் தம்பி வீட்டுக்குள் நுழைய மாட்டார் என ஒரு கலாசாரம். இந்தக் கதையில் சாதியின் கட்டுமானத்தை எதிர்க்க இயலாத, அதே சமயம் தனது மனைவியைத் தன்னுடன் அழைத்துக்கொள்ள முடியாத பொருளாதாரச் சூழலில் இருக்கும் ஒருவன் மனதில் புழுங்கி அழும் ஒரு கதை.

வாடிக்கையாளர்களின் கைப்பாவையாய் இருக்கும் ஓட்டுநர்களின் சொந்த வாழ்க்கையில் குடும்பத்திற்குக் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் போகிறது. மகள் பரிசு வாங்குவதை நேரில் காண இயலாத் துக்கத்துடன் முடிகிறது செண்பகாவின் அப்பா.

தந்தையானவன் கதையில், வீட்டிலிருந்து ஓடி வந்துவிடும் ஒருவனை ஒரு பெரியவர் எப்படி தந்தையானவனாய் இருந்து காக்கிறார் என்பதையும், அவருக்கும் வளர்ப்பு குழந்தைக்குமான உறவையும் மிக அழகாய் விவரிக்கிறார்.

மிஸ்ராஜி – நமது பொதுப்புத்தி ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்களை எப்படி நினைக்கிறது என்பதை மிஸ்ராஜி மூலமாய்ச் சொல்கிறார். ஒவ்வொரு விஷயத்திற்கும் இன்னொரு பக்கமும் இருக்கும் என்பதை நாம் அறிவதில்லை அல்லது அறிய விரும்புவதில்லை என்பதைச் சொல்லிச் செல்கிறார்.

கறை – தான் செய்யாத தவறென்றாலும், குற்ற உணர்ச்சி வினோதமான பழக்கங்களைக் கொண்டு வருகிறது. காரைக் கழுவிக்கொண்டு இருக்கிறான் முகேஷ்.

லடசுமணன் – தன தந்தையின் இன்னொரு மனைவியை, அவரின் குழந்தையைத் தன் குழந்தையாய் வளர்க்கும் ஒருவரின் கதை. டிரைவரின் கதையில் திவச மந்திரங்களும், விளக்கங்களும், அவற்றைக் கதையில் கச்சிதமாய்ப் பொருத்திய விதமும் அழகு.

ஹரிசிங் – காலிஸ்தான் தீவிரவாதியாய் இருந்து தலைமறைவாய் இருந்துவிட்டு, மீண்டும் காலிஸ்தான் தீவிரவாதியாக மாறும்நேரத்தில் சரியான வழிக்குச் செல்லும் ஒரு சர்தாரின் கதை.

தனது அனுபவங்களை நல்ல கதை சொல்லியான சுதாகர் கஸ்தூரியால் இயல்பாக அருமையான கதைகளாக்கித் தர முடிந்திருக்கிறது. டிரைவர் கதைகள்தானே என தாண்டிச் செல்ல முடியாத வாழ்வியல் கதைகள் இவை.

நல்ல வாசிப்பின்பத்திற்கும், நம் வாழ்க்கையை அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது.

Leave a Reply