Posted on Leave a comment

பேயரசுகளும், பிணம் தின்ற சாத்திரங்களும்! | கோ.இ. பச்சையப்பன்

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் – படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்- நூலை முன்வைத்து.

“இந்த பூர்ஷ்வா அறிவுஜீவி வர்க்கத்திடமிருந்து நீங்கள் விலகிவிட்டால், நீங்களும் சர்வநிச்சயமாக, சத்தியமாக மரணம் அடைவீர்கள்!”

(- லெனின், மாக்ஸிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில்)

கடந்த ஆண்டு எங்கள் மாவட்டத் தலைநகரில் புத்தகக் காட்சி பத்து நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் வந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக, அண்மையில் தனது ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட பென்னம்பெரிய நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் இடம்பெற்றிருந்தார். அகாதெமி விருதைப் பெற நூலின் தகுதியைவிடத் தேர்வுக்குழுவிற்கு எழுத்தாளர் எவ்வளவு நெருக்கமானவர் என்பதே முக்கியம் என்பதெல்லாம் வேறு விஷயம்.

சிறப்பு விருந்தினர், தன் உரையில் கீழடி ஆய்வுகள் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை, பெருமையை விளக்குகின்றன எனத் தொடங்கி சமஸ்கிருதம் எவ்விதம் தமிழின் தொன்மைப் பெருமையை அபகரிக்கின்றது என்பதை, மதமாற்ற முகவர்கள் தேவரான கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் வழியே பேச ஆரம்பித்து முடித்தார். இணைப்புரை நிகழ்த்திவந்த நான், அவருடைய உரைக்குப் பிறகு, பக்கச்சாய்வுடன் பல வரலாறுகள் எழுதப்படுகின்றன; மூலதனம் எழுதிய மார்க்ஸ் தனது வீட்டு வேலைக்காரியை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதை மார்க்ஸ் வரலாறுகள் உரைக்கின்றனவா என்று கேட்டேன். பிடித்தது சனி. நிகழ்வு நிறைவுற்ற பின்பு அடுத்த இரண்டு நாள்களுக்கு எனது அலைபேசியில் தன்னிலை விளக்கம் அளிப்பதும், கருத்துரிமை பற்றிய பாடங்களைக் கேட்பதும் என வெறுத்துப்போயிற்று.

மேற்படி அலைபேசியில் உரையாடிய புண்ணியவான்கள்தான் மாதொருபாகனுக்காக – தமிழகம் முழுவதும் ‘கருத்துச் சுதந்திரம்’ பற்றிப் பேசுபவர்கள். ‘என் உணவு என் உரிமை’ எனப் பொதுவெளியில் மாட்டுக்கறி விருந்து நடத்துபவர்கள்.

“பெறுவதற்கோர் பொன்னுலகம்” எனத் தொடங்கி சமூகப் பொருளாதார அரசியல் விடுதலை, சமத்துவ சுதந்திரம் பற்றிப் பேசும், எழுதும் கம்யூனிஸ்டுகள் முற்றிலும் தாங்கள் போதிக்கும் கருத்துக்களுக்கு மாறாக இயங்குவதற்கான ஏவிய சான்றுதான் மேலே நான் சொன்னது.

ஒரு மனிதன் 25 வயதிற்குள் கம்யூனிஸ்ட் ஆகாவிட்டால் முட்டாள்; 25 வயதிற்கும் மேலும் கம்யூனிஸாக இருந்தால் அவன் பைத்தியக்காரன் என்ற சொலவடையை வாசித்துள்ளேன் என்றபோதும் பத்து வயதில் வாசிப்புலகில் நுழைந்துவிட்ட எனக்கு ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவற்றின் பதிப்புகளில் வெளிவந்த ரஷ்ய மொழிபெயர்ப்புகள் மிகவும் கவர்ந்தன. கையடக்கமாக இறுக்கமான காலிகோ பைண்டிங்கில், செல்லரிக்காமலிருக்க நாஃபதலீன் தெளித்த வாசனையுடன் வந்த அப்புத்தகங்கள் ரஷ்யாவைப் பற்றிய உன்னதமான சித்திரத்தை அளித்திருந்தன. போதாக்குறைக்கு கலைந்த முடியும், கவர்ச்சிகரமான முகமும் கொண்டிருந்த சே குவேராவின் அலட்சியமான ‘பாவ‘த்துடன் சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் வேறு! எனவே, 25 வயதிற்குள் நான் முட்டாளானேன். அதாவது கம்யூனிஸ்ட்டானேன். ஆனால், நான் பைத்தியக்காரனாவதிலிருந்தும் என்னைத் தடுத்தது அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம் – படுகொலை – பேரழிவு – கம்யூனிஸம் என்ற புத்தகம், அசைக்க முடியாத தரவுகளுடன் – தெளிவான மொழிநடையில், ஊடகபலமும் எழுத்துவன்மையும் கொண்ட கம்யூனிஸ்டுகளைக் கூட மௌனமாக்கிய நூல்.

கம்யூனிஸத்தினை மூலதனம் என்ற நூல் மூலம் அளித்த கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முதல் அச்சித்தாந்தத்தினைப் பின்பற்றி ஆட்சியதிகாரத்தை அடைந்து – தற்போது இடதுசாரிகளால் திருவுருவாக்கப்பட்டிருக்கும் லெனின், ஸ்டாலின், குருஷேவ், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் கம்யூனிஸத்தின் மீதான காதலால் சீனமாவிடம் போரில் மூக்கறுப்பட்ட கனவான் நேருவரை இந்நூல் ஆராய்கிறது.

மார்க்ஸின் வரலாற்றை எழுதுபவர்கள் உணர்ச்சி ததும்ப அவருடைய மனைவி வறுமை மற்றும் நோயால் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றி எழுதியதைத் தவறாமல் குறிப்பிடுவார்கள்.

எங்கள் குழந்தை பிறந்தபோது
அதற்கு தொட்டில் வாங்கவும்
பணமில்லை!
இறந்தபோது
சவப்பெட்டி வாங்கவும்
பணமில்லை!

ஒரு கவித்துவமான சோகத்தை நம்மிடையே விதைக்கும் இவ்வரிகளுக்குச் சொந்தமான ஜென்னியின் கணவர் மார்க்ஸ், நீக்ரோக்களையும் யூதர்களையும் வாழ்நாள் முழுவதும் வெறுத்தவர் என்பதைக் கீழ்க்கண்ட அவர் கடித வரிகளே நிரூபிக்கின்றன என்பதை அரவிந்தன் எடுத்துக்காட்டுகிறார்.

எங்கெல்ஸிற்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன் மருமகன் மீதான விமர்சனத்தை இப்படிக் குறிப்பிடுகிறார். ‘அந்த ஆளிடம் நீக்ரோக்களிடம் காணப்படும் குணக்கேடு இருக்கிறது.’ நீக்ரோக்களைக் குணக்கேட்டின் உறைவிடமாக அடையாளப்படுத்தும் இம்மனிதர்தான் பொதுவுடைமையின் தந்தை! இனவெறுப்பு மட்டுமல்ல, புரட்சியின் போர்வையில் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தை ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி, பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்வதற்கான வித்து இருவராலும் (மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ்) ஊன்றப்பட்டதை நூலில் வாசிக்கும்போது அதிர்ந்துபோகிறோம்.

‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என ஜார் மன்னன் வீழ்ந்ததை இந்தியாவின் கவிதை வடிவில் பாரதி பதிவு செய்ததை வாசிக்கும் யாவரும் ஜார் மன்னனை ஒரு கொடுங்கோலனாகத் தன் மனத்தே உருவகித்திருப்பார்கள். ஓரளவும் உண்மையும் கூட. ஆனால் ஜார் மன்னரை வீழ்த்தியதாக ‘கூறப்படும்’ லெனின் தன்னையும் தன் நாற்காலியையும் காப்பாற்றிக்கொள்ள செய்த படுகொலைகள் பல்லாயிரக்கணக்கானவை.

1917ல் ரஷ்யாவில் புரட்சி தொடங்கும்போது இடதுசாரிகளில் போல்ஷ்விக் பிரிவு தலைவர்கள் – புக்காரின், ட்ராட்ஸ்கி 5,000 மைல்களுக்கு அப்பால் நியூயார்க்கில் இருந்தனர். லெனின் சுவிட்ஸர்லாந்தில் இருந்தார். 47 வயதான அம்மனிதர் முற்றிலும் நம்பிக்கை இழந்து ‘எனது ஆயுளில் புரட்சியே வரப்போவதில்லை’ என்று சொல்லியிருந்தார்.

சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும், மற்றொரு இடதுசாரி பிரிவினருமான மௌள்ஷ்விக்குகளும் ஜார் மன்னனை வீழ்த்த, ஜெர்மனியின் உதவியுடன் ரஷ்யாவில் லெனின் ஆட்சியைப் பிடித்தார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரசிடமிருந்து பாகிஸ்தானைப் பெற ‘ஒரு முஸ்லிம் தேசத்திற்குக் குறைந்து எதனையும் ஏற்கமாட்டேன்’ என்று நோகாமல் நோன்பு கும்பிட்ட முகம்மது அலி ஜின்னாவிற்குச் சமமானவர் லெனின். பிறகு நிகழ்ந்ததுதான் பேரவலம். விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். கொல்வதற்கு வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. வதை முகாம்களை நிறுவிய வகையில் ஹிட்லருக்கு லெனின் முன்னோடி. அம்முகாம்களில் லெனின் உத்தரவால் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை வைத்துப் பார்க்கும்போது ஹிட்லர் குறைவாகவே கொடுமை செய்திருக்கிறார் என்று தோன்றிவிடும்! ‘1918ல் ‘நாம்போவ் – என்ற பகுதியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்த, ‘தாய்’ எழுதிய மாக்ஸிம் கார்க்கிக்கு லெனின் எழுதினார்: “நீங்கள் சர்வ நிச்சயமாக, சத்தியமாக, மரணம் அடைந்துவிடுவீர்கள்.”

‘Man – How proudly that word ring’ எனப் பேசிய கார்க்கி அமைதியானார். வதைமுகாம்கள் சிலவற்றை அவர் பாராட்டக்கூடத் தயங்கவில்லை என அரவிந்தன் விளக்குகையில் நமக்குத் தோன்றுவது Life – how proudly that word rings!

லெனின் செய்த படுகொலைகளைப் பின்னர்வந்த ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் அதனையே செய்தார். இவர்கள் அத்தனைபேரும் செய்த படுகொலைகளை, ஏற்படுத்திய பஞ்சத்தை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஆவணங்கள் பேசின. இவை அனைத்தையும் அரவிந்தன் நீலகண்டன் தரவுகளுடன் முன்வைக்கிறார்.

சோவியத் ரஷ்யா மட்டுமல்ல, கம்யூனிஸம் காலூன்றிய க்யூபா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை நூல் ஆவணப்படுத்துகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் கம்யூனிஸக் காதலால் சீனாவை முழுமையாக நம்பி முதுகில் குத்தப்படும் பகுதி, நூலின் முக்கியமான பகுதி. பாபாசாகேப் அம்பேத்கர் சீனாவையும் சோவியத் யூனியனையும் இந்தியாவின் அச்சுறுத்தல்கள் என (மிகச்சரியாக) கணிக்கிறார். ‘நேருவின் பஞ்சசீலக் கொள்கையைத் தன் நாடாளுமன்ற உரையில் ‘கம்யூனிஸமும் சுதந்தரமான ஒரு ஜனநாயகமும் இணைந்திருக்க முடியும் என்பது அடிமுட்டாள்தனம். கம்யூனிஸம் என்பது காட்டுத்தீ போன்றது. இந்தக் காட்டுத்தீயின் அருகில் இருக்கும் நாடுகள் ஆபத்தில் இருக்கின்றன’ என விமர்சித்தார் அம்பேத்கர்.

(அம்பேத்கரை ராகுல சங்கிருத்யாயன் தனது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூலில், சுகபோகி, தீண்டத்தகாதவர்களில் ஜமீன்தார்களை உருவாக்குபவர் என்று விமர்சிப்பதை அரவிந்தன் பதிவு செய்கிறார்.)

காட்டுத்தீ 1962ம் ஆண்டு பற்றியது. அதன் கொடும் வெப்பம் உமிழ் தீயில் 4,897 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். 3,968 பேர் சீனக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். லெனினும், மார்க்ஸும், மாவோவும் நேருவிடம் உருவாக்கிய தாக்கத்திற்கு இந்தியா அளித்த விலை அது என்பதை அரவிந்தன் நீலகண்டன் துல்லியமாகப் பதிவு செய்கிறார்.

அரவிந்தன் நீலகண்டன் இந்நூலினை உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். 25 பக்கங்களுக்கு நீளும் பார்வை நூல்கள் மற்றும் ஆவணங்களே சாட்சி. இடதுசாரி நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவரிடம் ஒரு அபாயம் உண்டு. அந்நூல்களின் சிடுக்காக மொழிநடை நமது எழுத்திலும் படிந்துவிடும் அபாயம்தான் அது. கம்யூனிஸத்தின் பிற அபாயங்கள் அளவிற்கு அது வீரியம் மிக்கதில்லை என்றபோதும் வாசகனுக்கு வரும் உபத்திரவம் அது. ஆனால் அரவிந்தன் நீலகண்டனின் நீரோடை போன்ற மொழிநடை ஒரே அமர்வில் நம்மை வாசிக்கச் செய்கிறது.

பின்குறிப்பு: கார்ல் மார்க்ஸைப் பற்றிய ஒற்றை உண்மையைக் கூறுவதற்காக ஒரு எளிய எழுத்தாளனை வறுத்தெடுத்த ‘தோழர்கள்’ – இத்தனை ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட, ஒரு ஆவணத்தை நிகர்த்த இந்த நூலை எழுதிய அரவிந்தன் நீலகண்டனை எவ்விதம் எதிர்கொண்டார்கள்?

Leave a Reply