எனது மாணவர்கள் நேரமேயில்லை என்று சொல்லும்போது நான் கேட்பேன்: ‘யாருக்கெல்லாம் 25 மணி நேரம் வேண்டும் ஒரு நாளைக்கு?’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள், அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்?’ சிலருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தெரிந்துவிடும், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று. ‘ப்ஸ்…’ என்று ‘உச்’ கொட்டிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னால் எழுந்திருங்கள்’ என்று நான் விடாமல் சொல்லுவேன்.
என்னதான் சொன்னாலும், கடந்துபோன காலங்கள் போனதுதான். அவற்றை மீட்டுக் கொண்டுவர முடியாது என்பதெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் நாம் செலவழித்த நேரங்களைp பிற்காலத்தில் நமக்காகp பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். எப்படி என்று மேலே படியுங்கள்.
கிறிஸ்டினாவிற்கு 67 வயது. பணிஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியை. தனியொருத்தியாக வாழ்ந்து வரும் இவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் இருப்பது சுவிட்சர்லாந்து நாட்டில். இந்த நாட்டின் ஓய்வூதியம் மிக அதிகம். வயதான காலத்தில் சாப்பாட்டிற்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ கவலைப்பட வேண்டாம். அப்படியிருக்கும்போது, இந்த வயதில் நிம்மதியாக ஓய்வெடுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தைச் சேமிக்கிறேன். எனக்குத் தேவையானபோது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தைச் சேமிக்க முடியுமா? முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்கவேண்டும்? சேமித்து என்ன செய்வது?
சுவிட்சர்லாந்துநாட்டில் இருக்கும் செயின்ட் காலன் (St. Gallen) நகரம்தான் முதன்முதலில் இந்த நேர வங்கி என்னும் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் புதுமையான இந்த நேர வங்கி எப்படிச் செயல்படுகிறது? பணிஓய்வு பெற்றவர்கள் தங்களைவிட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டைச் சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்குச் சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை? இதற்காக அவருக்குப் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக இந்த நான்கு மணி நேரம் அவரது ‘நேர வங்கி’ கணக்கில் சேர்த்து வைக்கப்படுகிறது. அவருக்கு உடம்பு முடியாமல் போகும்போது வேறு ஒருவரின் உதவியை அவர் நாடலாம். அவர் சேமித்து வைத்திருக்கும் நேரங்களில் இன்னொரு ஆர்வலர் வந்து இவருக்கு உதவுவார். அந்த ஆர்வலரின் வங்கிக் கணக்கில் இந்த நேரம் சேமித்து வைக்கப்படும்.
எதற்காக இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?
சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1960ம் ஆண்டு பத்து குடிமகன்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருந்தார். இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு பேர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல். இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், தினசரி வேலைகளுக்கே அடுத்தவர் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களில் ஓய்வூதியத் தொகையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருக்கும் நான்கு பேர்களின் பங்களிப்பு பணிஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத் தொகையாக மாறுகிறது. இப்போதிருக்கும் நிலையில் இன்னும் நாற்பது ஆண்டுகளில் இரண்டு பேர்கள் இந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.
வயதானவர்களின் – குறிப்பாக சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களின் – எண்ணிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. செயின்ட் காலன் நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மனி எல்லையின் அருகில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்கெனவே பல தன்னார்வத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருவதால் இந்த நேர வங்கி திட்டத்தையும் இங்குச் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சுவிஸ் ரெட் கிராஸின் உள்ளூர் அமைப்பு 2008ம் ஆண்டிலிருந்து இதுபோல ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே இங்கு நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போடுவது இந்த நேர வங்கியின் நோக்கம் அல்ல. வயதானவர்களின் தினசரித் தேவைகளை இந்த நேர வங்கி ஆர்வலர்கள் செய்து கொடுக்கிறார்கள். இந்த சேவையின் முக்கிய நோக்கம் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் சுதந்தரத்தை இழக்காமல் நீண்ட நாட்கள் வாழ உதவுவதுதான்.
மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.
நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தைச் சேமித்து வைக்கிறார்கள். தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது நேர வங்கி இவர்களது சேவையைப் பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.
மொத்த ஜனத்தொகை 72,522 உள்ள செயின்ட் காலனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12,000 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 300 தன்னார்வலர்கள் ஒரு வாரத்திற்கு 2-3 மணிநேரம் என்று 42 வாரங்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் மொத்தம் 25,000 மணிநேரங்கள் சேமித்து வைக்கப்படும். இந்த இலக்கை அடைந்துவிட்டாலே இந்தத் திட்டம் வெற்றி என்று சொல்லலாம். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 750 மணி நேரங்களைச் சேமித்து வைக்கலாம்.
இந்தத் திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதியச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்தத் திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதைச் சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.
இது ஒரு தன்னார்வத் தொண்டு என்றாலும் செயின்ட் காலன் அதிகாரிகள் இதற்கென்று 150,000 சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களை ஆர்வலர்கள் அணுகுவதற்கு ஏதுவாக ஒரு இணையத்தளமும், ஆர்வலர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும், மற்ற நிர்வாகச் செலவுகளுக்காவும் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் ஆர்வலர்களின் சேமிப்பு நேரத்தை ஈடுகட்டுவதற்கும் இந்தப் பணம் உதவும்.
பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நேர வங்கி இந்த எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும்.
இந்த நேர வங்கி பற்றி Andric Ng என்பவர் mothership.sg என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிங்கப்பூரும் இதனைப் பின்பற்றலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். நம்மூரில் இந்தச் சேவை அதிகமான கவனத்தைக் கவரும் என்று தோன்றுகிறது. இப்போது நாங்கள் குடியிருக்கும் Gated Community-யில் வாழ்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் 65+. பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள். இதே பிரச்சினையை சீனாவில் உள்ள பெற்றோர்களும் எதிர்கொள்ளுவதாக ஆண்ட்ரிக் எழுதியிருக்கிறார்.
இந்த நேர வங்கி நம்மூரில் பயன்படுமா?
நன்றி:
https://www.swissinfo.ch/eng/swiss-city-set-to-launch-elderly-care–bank-/32209234
mothership.sg