Posted on Leave a comment

அஸதோமா ஸத்கமயா! – (ம.வெங்கடேசனின் இந்துத்துவ அம்பேத்கர் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாக:!
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித் விர்த்யகர்த்தாரமவ்யயம்!!

– ஸ்ரீமத் பகவத்கீதை – 4வது அத்தியாயம், 13 வது ஸ்லோகம்.

“குணங்கள், கருமங்கள் என்ற இவற்றின் பாகுபாட்டை ஒட்டி வர்ணங்களை சிருஷ்டி செய்திருக்கிறேன்!”

– கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்.

என்னுடைய முகநூல் பக்கத்தின் பதிவொன்றில் அண்மையில் ஒரு கேள்வியைப் பதிவு செய்திருந்தேன். கீதை ஸ்லோகங்களை – அதன் கருத்துக்களை இந்து நண்பர்களில் எத்தனை பேர் வாசித்துள்ளீர்கள் என்பதே வினா. பின்னூட்டமிட்டிருந்த 32 பேர்களில் வெறும் இரண்டு பேர்களே வாசித்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். எழுபதிற்கும் அதிகமான விருப்பக்குறிகள்! முகநூல் நண்பர்களின் பொய்யாமையைப் போற்றும் அதே தருணத்தில் இஸ்லாமியர்கள் குரானை வாசிப்பது போன்றோ, கிறித்துவர்கள் பைபிளை ‘சுவாசிப்பது’ போன்றோ – இந்துக்கள் கீதையை அணுகுவதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

கீதை மட்டுமே இந்து மதத்தின் பிரமாணமல்ல என்பதும் உண்மை. மற்ற மதங்களுக்கு ஆதாரம் ஒற்றை நூல் என்றால் – நமக்கு ஒரு நூலகமே உள்ளது. வேதங்கள், புராணங்கள், தத்துவங்கள்… என. பிற மதங்களைத் தோற்றுவித்தவர் ‘ஒருவர்’ என உண்டு. இந்து மதத்தில் அவ்விதம் இல்லை. இந்து மதத்தின் பலமே அதன் பலவீனமாகிவிட்டது துரதிஷ்டவசமானது. விளைவாக இந்துமதம் சாதியத்தைத் தூக்கிப்பிடிக்கிறது என்று விமர்சனம் (அது பல சமயங்களில் அவதூறு என்ற நிலையை அடைந்துவிட்ட பின்பும்) வைக்கப்படும்போது அதனை எதிர்கொள்ள இயலாமல் விழிக்கிறோம். எனவேதான் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை தழுவினார் எனக் கூறப்படும்போதும் விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் ஏற்கிறோம். “உண்மையில் அம்பேத்கர் ஜாதி ஒழியவேண்டும் என்று எழுதினாரா அல்லது இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதினாரா? என்ற கேள்வியை முன்வைத்துத் தொடங்குகிறது ம.வெங்கடேசன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் என்ற அரிய புத்தகம்.

புராணங்களும் இதிகாசங்களும் சாதியை முன்னிறுத்துகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு முகத்தில் அறையும் பதில்களைத் தருகிறார் ம.வெ.

ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதத்தை எழுதியவர் மீனவ குலத்தில் பிறந்த வியாஸர். ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் வேடர் குலத்தைச் சேர்ந்த ‘ரத்னாகர்’ என்ற இயற்பெயரைக் கொண்ட வால்மீகி. பாகவதம் பாடிய பகவான் புகழ் போதாது என பாரதம் பாடி பகவான் கிருஷ்ணரை வியாசர் போற்றுகின்றார். கடவுளெனக் கொண்டாடப்படும் கிருஷ்ணர் பிறப்பால் யாதவர். கடவுளின் அவதாரமான ராமபிரான் சத்ரியர். போற்றுபவரும் பிராமணர் அல்லர். போற்றப்படுபவரும் பிராமணர் அல்லர்! இந்தப் புள்ளியிலிருந்து 22 அத்தியாயங்களில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய உண்மையான பரிமாணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது.

சமஸ்கிருதத்தினை பாரதத்தின் அதிகாரபூர்வ மொழியாகக் கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தில் அதனை ஆதரித்துக் கையொப்பமும் இட்டவர் அம்பேத்கர். மேலும், இந்தியாவில் இருந்த – இருக்கிற ஒவ்வொரு ஜாதியும் ஒரு இனக்குழு எனப் பிரிவினை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் வரையறுத்ததைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் அவர். மற்றொருவர் குருஜி எனப் பணிவுடன் விளிக்கப்படும் கோல்வல்கர்… ஆர்.எஸ்.எஸ்!

ம.வெ.வின் வாதம் மேற்கூறிய இரு பெருமக்களின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அமைகிறது.

விடுதலைக்காகச் சிறைப்பட்ட வேறெந்தத் தலைவரையும் விட ஒப்பீட்டளவில் பெரும் கொடுமையை அந்தமான் சிறையில் அனுபவித்த வீர்சாவர்க்கருடன் தீண்டாமை ஒழிப்பில் இணைந்து அம்பேத்கர் செயல்பட்டதை நூல் பதிவு செய்கிறது. தேசியக் கொடியில் அசோகச்சக்கரத்தை, சாவர்க்கரும் ஆதரித்ததை ம.வெ.விளக்குகிறார். காந்தி கொலை வழக்கில் (தனிப்பட்ட வன்மத்தினைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு) சாவர்க்கர் கைதுசெய்யப்பட்டார். சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு, ‘சாவர்க்கர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை, ஜோடிக்கப்பட்ட வெற்று வழக்கு’ என எடுத்துக்கூறியவர் அம்பேத்கர்.

குருஜி கோல்வல்க்கர், வீர்சாவர்க்கர் ஆகியோருடன் மட்டுமல்ல, இந்து மகாசபையைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேவுடன் கூட அம்பேத்கருக்கு இருந்த நெருங்கியத் தொடர்பை விளக்கும் புத்தகத்தின் 12வது அத்தியாயம் முக்கியமானது.

“நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரிலிருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது!’ சொன்னவர் அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதர்ஸம் சுவாமி விவேகானந்தர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

வெறும் புள்ளி விவரங்களும் – தேதிகளும் – அடிக்குறிப்புகளும் கொண்டதல்ல இந்நூல். தான் முன்வைக்கும் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைப்பதோடு அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் கூறுகிறார் ம.வெங்கடேசன். அம்பேத்கர் இந்துத்துவாவை எவ்விதம் அணுகினார் என்பதைப் பதிவுசெய்வதோடல்லாமல் அக்காலத்துடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார்.

1952ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாம்பே வடகிழக்குத் தொகுதியில் அம்பேத்கர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது நேருவின் காங்கிரஸ். ஆனால் பணி ஆற்றியவர் ஆர்எஸ்எஸ். பிரசாரகர் தத்தோபந்த் தெங்கடி என்ற பிரசாரக்.

இடதுசாரிகளின் எளிய இலக்காகவும், கற்பிதங்களின் அடிப்படையில் விமர்சிக்க ஏதுவாகவும் இருப்பது இந்துத்துவம். அவர்கள் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாதத்தைத் தமது புரட்டுகளுக்கு வலுச் சேர்க்க துணைக்கழைத்துக்கொள்வர். ஆனால், கம்யூனிஸம் மற்றும் ‘மக்கள் (?) சீனம்’ பற்றி அம்பேத்கர் என்ன கருத்துக்கொண்டிருந்தார் என்பதை ம.வெங்கடேசன் பதிவு செய்கிறார்.

“அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை.”

“இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது.”

“கம்யூனிச நாடுகளில் ஒழுக்க நெறி என்ற ஒன்றே இருக்காது. இன்று ஒழுக்கநெறியாகக் கருதப்படுவது அடுத்த நாளே ஒழுக்க நெறிக்குரியதாக இல்லாமல் ஆகிவிடும்.”

– மேற்கூறிய விமர்சனத்தை முன்வைத்த அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் தெரியுமா?

‘பெட்டி பூர்ஷ்வா மிஸ்லீடர்’ என்று கேலி செய்தனர். மேலும், 1952 தேர்தலில் ‘காம்ரேட்’ எஸ்.ஏ.டாங்கே ‘ஒதுக்கப்பட்ட இடத்துக்குப்’ போட்டியிடுபவர்களில் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ என்றார். அம்பேத்கர் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனதை ம.வெங்கடேசன் பதிவு செய்கையில் இடதுசாரிகளின் ‘நுட்பமான அரசியல் சுத்திகரிப்பு’ பற்றி வயிறெறிவதைத் தவிர வேறென்ன செய்வது?

சீனாவைப் பற்றி கோல்வல்கரின் கருத்தென்ன? அது – ரத்தினச் சுருக்கமானது – ‘கள் குடித்த குரங்கைத் தேள் கொட்டியதுபோல்!’

புத்தகத்தில் 18வது அத்தியாயம் தேசிய அபாயமாக நூற்றாண்டுகளாக இந்தியாவைப் பீடித்திருக்கும் மதமாற்றம் – அம்பேத்கர் ஏன் இஸ்லாம் – கிறுத்துவமதம் போன்றவற்றிற்கு மாறவில்லை என்பதை நுணுக்கமாக அலசுகிறது. ம.வெங்கடேசனின் மொழிநடை மற்றும் வாதத்திறன் உச்சம் பெறுவது இப்பகுதியில்தான்.

பெரும் திரளான மக்களுக்குத் தலைவராக கருதப்பட்ட அம்பேத்கர் மதமாற்றச் சக்திகளின் விருப்பத்திற்குரிய தேர்வாகவே எப்போதும் இருந்திருக்கிறார். அவரை முன்னிநிறுத்தி பல்லாயிரம் பேரை ஈர்க்கலாம் என்ற பெரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மதமாற்றச் சக்திகள் விரும்பியது இயல்பே.

1935ல் அம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தபோது தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்தினைத் தழுவ 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் ஹைதராபாத் நிஜாம். அந்த ஆண்டே பதுவானில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டிற்கு அழைப்பு வந்தும் அம்பேத்கர் செல்லவில்லை. அவர் இஸ்லாமிற்கு மாறிவிட்டார் என வதந்தியைப் பல முறை மறுத்துள்ளார். அம்பேத்கர் கூறினார்: ‘நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடானுகோடி பணம் என் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு சீரழிந்திருக்கும்.”

மதம் மாற்றத்தை தம்மைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைச் செம்மைப்படுத்தும் கருவி எனக் கருதும் கிறித்துவம் குறித்து அம்பேத்கர் கூறுவது: ‘இந்தியக் கிறித்துவர்கள் சமூக அநீதிகளை அகற்றுவதற்காக எப்போதும் போராடியது இல்லை.’

மற்றும் கிறித்துவத்துக்கு மதமாற்றத்தை மேற்கொள்வது தேசிய நலனுக்கு எதிரானது என்ற பார்வையே அம்பேத்கருக்கு இருந்துள்ளது என்பதை ம.வெங்கடேசன் வெளிப்படுத்துவதோடு அம்பேத்கர் பௌத்தத்தினை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குகிறார். 1956 அக்டோபர் 14 அன்று பௌத்த மதத்திற்கு மாறுகிறார் அண்ணல். அவரே எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்துக்கள் என்பதை வரையறுக்கும்போது அது பௌத்தர்களையும், சீக்கியர்களையும், ஜைனர்களையும் உள்ளடக்கியது என்கிறார். இந்துமதம் மதம் அல்ல வாழ்வியல் முறை என்பதோடு இந்துத்துவம் என்பது மதம், தேசம், கலாசாரம், பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவற்றின் அடிப்படையில் அம்பேத்கர் இந்துவாகவே இந்திருக்கிறார் என்ற கருத்தை ம.வெங்கடேசன் நிறுவுகிறார்.

மேலும் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் அம்பேத்கருக்கும் பொது சிவில் சட்டம், இந்தியப் பிரிவினை, இந்து சட்ட மசோதா, தேசிய மொழிகள் போன்றவற்றில் ஒத்திசைவான கருத்து இருந்ததை இந்தப் புத்தகம் படம்பிடிக்கிறது.

அம்பேத்கர் இந்து மத்தை விமர்சனம் செய்துள்ளார். உண்மை. ‘தந்திரம் மிக்க இந்து கிழட்டு நரி’ என ஜின்னாவால் வர்ணிக்கப்பட்ட காந்திகூட விமர்சனம் செய்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கூட விமர்சித்துள்ளார். நோக்கம் ஒன்றுதான், சீர்திருத்தம்! விமர்சனத்திற்கு முகம் கொடுப்பதாகவும், நாத்திகவாதத்தினையும் பரிசீலிப்பதாகவும் காலந்தோறும் இந்து மதம் இருந்து வருகிறது.

தேசத்தின் இருபெரும் தலைவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் முறையாகத் தொகுக்கப்பட்டு இன்றும் அச்சில் கிடைப்பது நல்லூழ். காந்தியின் நூல்கள் அனைத்தும் நவஜீவன் ட்ரஸ்ட்டால் பராமரிக்கப்படுகிறது. பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது அவற்றுள் சுமார் 15 பாகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டன. அதற்கென சிறப்பு அச்சுரு (Font) உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் அவர்களுடைய எழுத்துக்களும் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ம.வெங்கடேசனின் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ நூல் அண்ணலின் எழுத்துக்களையும், குருஜி கோல்வல்க்கரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டுக் கடும் உழைப்பில் மிளிரும் ஆவணமாக விரிகிறது.

அஸதோமா ஸத்கமயா
தமஸோமா ஜ்யோதிர் கமயா
ம்ருத்யோர்மா அம்ருதம் கமயா

என பிரஹதரண்ய உபநிஷத் போதிக்கும் பவமான மந்திரம். இதன் பொருள் பொய்யிலிருந்து நிஜத்திற்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கும் அழைத்துச் செல் என்பதாகும். இந்துத்துவ அம்பேத்கர் வரலாற்றில் பதியப்பட்ட பொய்யானவற்றில் இருந்து நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது நிச்சயம்.

Leave a Reply