Posted on Leave a comment

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்து ஆலய-சிற்ப-கட்டட எழில் | அரவக்கோன்

இன்றைய கர்நாடகப் பகுதியை பொ.பி. 10-14 நூற்றாண்டுகளுக்கு (பொ.பி. பொது யுகத்துக்குப் பின்) இடையில், முதலில் பேலூர் பின்னர் ஹளேபீட் நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டு, ஹொய்சாள மன்னர் பரம்பரை திடமானதும் உறுதியானதுமான ஆட்சி செய்தது. இவர்களின் முதல் நிலம் மேற்குத் தொடர்ச்சிமலையில் உயர்ந்த பகுதிகளாகும். அதை மலைநாடு என்பர். மேற்கு சாளுக்கியருக்கும் காலசூரியருக்கும் தொடர்ந்து இருந்து வந்த பகையும் போர்களும் இவர்கள் கால் ஊன்றித் தழைப்பதற்கு நல்ல வாய்ப்பாயின.

சாளா என்னும் ஒரு இளைஞன் தனது ஜைன குரு சுதத்தாவை அவரைத் தாக்க வந்த ஒரு புலியிடமிருந்து அதைக் கொன்று காத்ததாகவும் அங்காடி என்னும் ஊரில் உள்ள வாசந்திகா பெண் தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில் இது நிகழ்ந்ததாகவும் கிராமிய வீரகதை ஒன்று உண்டு. அது ‘ஹளே’ என்னும் பழைய கன்னட மொழியில் உள்ளது. ‘ஹொய்’ என்னும் கன்னடச் சொல்லுக்கு ‘அடி, கொல்’ என்று பொருள். சாளா என்பவன் புலியைக் கொன்றதால் ‘ஹொய்சாளா’ என்னும் பெயருடன் அந்த அரசவம்சம் தோன்றியது. இந்தச் செய்தி பேலூர் கல்வெட்டில் (விஷ்ணுவர்த்தனன் பொ.பி. 1117) காணப்படுகிறது. ஆனாலும் இது உறுதியான செய்தி அல்ல.

தலைக்காட்டில் விஷ்ணுவர்த்தனன் சோழர்களைப் போரில் வென்றபின் தனது அரசு அடையாளச் சின்னமாக சோழரின் அரசக்குறியீடான புலியுடன் போரிடும் வாலிபன் உருவத்தைத் தோற்றுவித்தான். அவனது இடைவிடா முயற்சியால் ஹொய்சாள அரசு நிலை கொண்டு தனியரசாக விளங்கத் தொடங்கியது. அவனது ஆட்சியில்தான் (பொ.பி.1116) தலைநகரம் பேலூரிலிருந்து ஹளேபீடுக்கு மாற்றப்பட்டது. ‘மலப்பா’ என்னும் சிறப்புப் பெயரிலும் இவர்கள் அழைக்கப்பட்டனர். விஷ்ணு வர்த்தனனின் சுதந்திர ஆட்சி என்பது அவனது பேரன் இரண்டாம் வீரபல்லாளன் மூலம் நனவாயிற்று. அதுவரை அவர்கள் மேற்கு சாளுக்கியர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாகவே இருந்தனர். அவ்வரசனுக்கு தட்சிண சக்ரவர்த்தி (தென்னகப் பேரரசன்) ஹொய்சாள சக்ரவர்த்தி (ஹொய்சாளப் பேரரசன்) என்பன பட்டப் பெயர்கள். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள கண்ணனூர் குப்பம் இவர்களது தமிழ் நிலத்துத் துணைத் தலைநகரமாக விளங்கியது. அங்கிருந்தவாறு தமிழ்நிலத்தை ஆட்சிசெய்தனர்.

பொ.பி. 14ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் திடமாக நிலைகொண்ட இஸ்லாமிய மன்னன் சுல்தான் அலாவுதீன் கில்ஜீ தனது தளபதி மாலிக் காஃபூர் மூலம் தெற்கு நோக்கிப் படையெடுத்து மதுரையை பொ.பி.1336ம் ஆண்டு கைப்பற்றினான். ஹொய்சாள தலைநலர் ஹளேபீட் நகரை பொ.பி.1311-1327 ஆகிய இரு ஆண்டுகளிலும் தாக்கிப் பேரழிவை உண்டாக்கினான். மூன்றாம் வீர பல்லாளன் சுல்தானுடன் மதுரையில் நிகழ்ந்த போரில் (பொ.பி. 1343) இறந்து போனான். அத்துடன் ஹொய்சாள வம்சமும் நசித்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் கர்நாடகத்தில் பௌத்த, ஜைன மதங்களின் வலிமை குன்றி அவை நலியத் தொடங்கின. பசவண்ணா, மத்வாச்சாரியார், ராமானுஜர் ஆகிய மூன்று முக்கியமான சமய குரவர்கள் இந்து மதத்தை விரிவாக்கம் செய்யத் தொடங்கினர். இது கர்நாடக நிலத்தில் இலக்கியம், கலை, வாழ்க்கைவழி என்று எல்லாவற்றிலும் ஊடுருவிப் புதிய வெளிச்சம் பாய்ச்சியது. சைவமும், வைணவமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன.

ஜைனத்திலிருந்து வைணவத்திற்கு மாறிய விஷ்ணுவர்த்தனன் பல வைணவ ஆலயங்களை எழுப்பினான். இன்று ஹொய்சாள வம்சம் சார்ந்த ஆட்சிக் காலத்தை அவர்களால் எழுப்பட்ட ஆலயங்கள்தான் நமக்கு நினைவுறுத்துகின்றன. அப்போது கற்றளி ஆலயங்கள் தொடர்ந்து தோன்றிய வண்ணம் இருந்தன. தொடர்ந்து நிகழ்ந்த போர்கள் அதற்குத் எப்போதுமே இடையூறாக இருந்ததில்லை. இவர்களின் ஆலயங்களின் அமைப்பு முறை சிற்பவழி மேலைச் சாளுக்கியர்களின் நீட்சிதான். அந்தச் சிற்பிகளும் முந்தைய சாளுக்கியர் காலத்துச் சிற்பிகளின் தலைமுறைகள்தான்.

இவர்களது ஆலயக் கட்டட வழி, கூடுதலான நுணுக்கங்களும் ஏராளமான அணிகலன் கூடியதுமாகும். அனுபவ முதிர்ச்சியுடன் கூடிய சிற்பங்கள் இவர்களது தனித்தன்மை. இவர்களின் அக்கறை கோபுரத்தை உயர்த்துவதில் இருக்கவில்லை. மாறாக, அதில் அடர்த்தியும் நுட்பமும் கூடிய சிற்பங்களை உருவாக்குவதில்தான் இருந்தது. பெண்களின் உருவச் சிலைகளில் பெண்மை, அவர் உடல் வனப்பு போன்றவை தூக்கலாகவே காணப்படுகிறன. அந்தச் சிற்பிகள் மாக்கல் வகைப் பாறையைப் பயன்படுத்தி நேர்த்தியின் உச்சத்தைத் தொட்டனர். இந்தச் சிற்பவழியே பின்னர் தோன்றிய விஜயநகரப் பேரரசு, தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்டது.

பேலூர் சென்னகேசவ ஆலயம் பொ.பி. 1117
ஹளேபீட் ஹொய்சாளேஸ்வர ஆலயம் பொ.பி.1121
சோமனாதபுரம் சென்னகேசவ ஆலயம் பொ.பி. 1279

இம்மூன்றும் மற்ற ஆலயங்களிலும் அதிக கவனம் கொள்ளப்படுபவையாகும். அது அவற்றின் அமைப்பிற்கும், சிற்ப எழிலின் உச்சத்துக்குமானதாகும். ஹளேபீட் ஆலயத்தை ஹிந்து ஆலயக் கட்டமைப்பில் ஒரு முன்மாதிரியாகவும், அதன் வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாகவும் வரலாற்று, கலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனி நாம் இந்த மூன்று ஆலயங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம்.

பேலூர் சென்னகேசவ ஆலயம்- பொ.பி.1117

பேலூரில் உள்ள யாகாச்சி (Yagachi) ஆற்றின் கரையில் மன்னன் விஷ்ணுவர்த்தனால் பொ.பி.1117ல் கட்டப்பட்ட சென்னகேசவர் ஆலயம் முதலில் விஜய நாராயணர் ஆலயம் என்றுதான் அறியப்பட்டது. இந்த ஆலயம் எழுப்பப்பட்டதற்கு வரலாற்று வல்லுநர்கள் கூறும் காரணங்கள் மூன்றாகும்.

1. தனது தலைவனாக இருந்த சாளுக்கிய மன்னன் நாலாம் விக்ரமாதித்யன் தனக்கு அளித்த ‘சுதந்திர மன்னன்’ என்ற தகுதியைக் கொண்டாடும் விதமாகவும் சாளுக்கிய சிற்ப கட்டடக் கலையை விஞ்ச வேண்டும் என்னும் அவாவின் காரணமாகவும் இந்த ஆலயத்தை அவன் எழுப்புவித்தான்.

2. பொ.பி.1116ல் தலைக்காட்டில் சோழருடன் நிகழ்த்திய போரில் தான் பெற்ற வெற்றியையும் அதன் மூலம் கங்கவாடி எனப்படும் தெற்கு கர்நாடகப் பகுதியைத் தனது ஆட்சியின் வளையத்திற்குக் கொண்டு வந்ததையும் கொண்டாடும் விதமாக இதை உருவாக்கினான்.

3. திருவரங்கம் வைஷ்ணவப் பிரிவின் மடாதிபதியான ராமானுஜர் அவனிடம் உண்டாக்கிய தாக்கத்தால் ஜைன மதத்திலிருந்து விலகி வைணவத்துக்கு வந்ததையும் வைணவத்தின் பெருமையைப் பரப்பும் விதமாகவும் அவன் இதைக் கட்டுவித்தான்.

இந்த ஆலயம் இங்குக் கட்டப்பட்ட பின் பேலூர் பரபரப்பான வழிபாட்டு நகரமாக மாற்றம் கொண்டது. பொ.பி.1000-1346களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹொய்சாள ஆட்சியில் 958 இடங்களில் ஏறத்தாழ 1500 ஆலயங்கள் உண்டாக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தில் 118 கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. அவை பொ.பி.1117 முதல் 18ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது சேர்க்கப்பட்டவையாகும்.

முதலில் எழுதப்பட்ட கல்வெட்டு செய்தியில் மன்னன் தான் தனது வாளின் மூலம் வென்ற பெரும் செல்வத்தைக் கொண்டே இந்த ஆலயத்தை எழுப்பியதாகக் குறிப்பிட்டிருக்கிறான். சாளுக்கியரிடமிருந்து தனக்குக் கிட்டிய விடுதலையைப் பறைசாற்றும் விதமாகவே இதை எழுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் தொடக்கத்தில் இந்த ஆலயம் விஜய நாராயண ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் இந்த ஆலயம் தவிர கேசவருக்கும் லட்சுமிநாராயணருக்கும் வேறு இரு ஆலயங்களையும் எழுப்பினான்.

இந்த ஆலயத்தை உருவாக்கிய சிற்பிகளும், கட்டட, கைவினைக் கலைஞர்களும் சாளுக்கிய ஆட்சியிலிருந்து பெறப்பட்டவர்தான். இதுதான் ஹொய்சாளர் ஆட்சியில் தோன்றிய முதல் ஆலயமும் கூட. இதனால் பின்னாட்களில் இடம்பெற்ற நெரிசலான, நுணுக்கம் மிகுந்த சிற்ப அணுகுமுறை இந்த ஆலயத்தில் இருக்கவில்லை. தேவையான இடங்களில் கல்பரப்பு வெறுமையாக விடப்பட்டது.

கிழக்குமுகம் பார்க்கும் மைய நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் ஹொய்சாளர் கட்டியது அல்ல. அது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி உள்ள உயர்ந்த மதிற்சுவரும் கூட அப்போதுதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

சென்னகேசவ ஆலயத்துக்கு வலப்புறத்தில் கப்பே சென்னிகராயர் ஆலயமும் இலக்குமியின் ஒரு தோற்றமான சௌம்யநாயகியின் ஆலயமும் (மிகவும் சிறியது) சிறிது பின் தள்ளி அமைந்துள்ளன. இடப்புறத்திலும் ஒரு ஆலயம் உள்ளது. அது ரங்கநாயகி எனப்படும் ஆண்டாளுக்கானது. வளாகத்தில் இரண்டு கற்தூண்கள் உள்ளன. ஒன்று தீபத்தூண், இது ஹொய்சாளர் காலத்தில் நிறுவப்பட்டது. மற்றது கருடத்தூண். இது விஜயநகர அரசின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது.

ஆலயம் மாக்கல் கொண்டுதான் எழுப்பப்பட்டது. ஹொய்சாள வழி ஆலய அமைப்புக் கொண்ட இதன் அடித்தளப் பகுதிகள் பெரும் அளவில் உள்ளன. ஒற்றை கருவறையும் மேலே கோபுரமும் உள்ள அதன் பரப்பு 10.5. மீட்டர் சதுரமானது. முன்னால் உள்ள மண்டபத்தை நீண்ட தாழ்வாரம் இணைக்கிறது. கருவறை மேல் இருந்த கோபுரம் இப்போது இல்லை.

மண்டபத்தில் அறுபது பிரிவுகள் உண்டாக்கப்பட்டுள்ளன. பெரிய மேடை நிலத்திலிருந்து ஏறத்தாழ ஒரு சராசரி மனிதனின் உயரத்துக்கு உண்டாக்கப்பட்டு அதில் பக்தர்கள் சுற்றிவர அகன்ற பாதையுடன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து மேடைத்தளத்தை அடையப் படிகளும் தளத்திலிருந்து நுழை வாயிலை அடைய இன்னும் சில படிகளும் காணப்படுகின்றன. அவை அகலம் கூடியவை. ஆலயம், மண்டபம் இரண்டின் அடித்தள வடிவையே அதைத் தாங்கும் தளமும் கொண்டுள்ளது. அந்த மண்டபம் முதலில் திறந்தவிதமாகவே இருந்தது. ஆலயம் கட்டி முடித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் அது மண்டபத்தின் எல்லைத் தூண்களை இணைக்கும் விதமாக, கல்சுவர் கொண்டு பாதுகாப்புக் கருதி மூடப்பட்டு விட்டது. அது பலவடிவத் தூண்கள் கொண்டதாகும். இந்தச் சுவர்களின் பிரிவுகள் 28 ஆகும். மேற்புறப்பரப்பில் இலைகளும் தாவர வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. மன்னன் விஷ்ணுவர்த்தனும் அரசி சாந்தலாதேவியும் அமர்ந்திருக்கும் சிலைகளும் நிற்கும் சிலையும் உண்டு.

கருவறையில் கேசவரின் ஆறு அடி உயரம் கொண்ட சிலை நிற்கும் விதமாக உள்ளது. அதன் நுழைவாயிலின் இருபுறமும் ஜய விஜயர்களின் நெடிய உருவமும் அவர்களுக்கான பெண் ஏவலர் சிலைகளும் உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் உள்ள படிகளின் இருபுறமும் புலியுடன் போரிடும் வீரன் சிலைகள் காணப்படுகின்றன. புலியின் தோற்றம் சிங்கம் போன்ற முகத்துடன் சிலையாகி உள்ளது. இந்து ஹொய்சாளர்களின் அரசு இலட்சினையாகும். மண்டபத்தில் உள்ள கடைசல் தூண்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். நரசிம்மதூண் முன்னர் சுழலும் வகையாக மேற்புறத்தில் பொருந்தியிருந்தது. இந்த கடையப்பட்ட தூண்கள் பல்வேறு வடிவ வேறுபாடுகளுடன் உள்ளன. மொத்தம் உள்ள 48 தூண்களில் நடுவில் உள்ள நான்கு தூண்கள் கடையப்பட்டவை அல்ல. செதுக்கப்பட்டவை. மற்ற தூண்களைக் காட்டிலும் எழிலும் மிடுக்கும் கூடியவை. நான்கு தூண்களிலும் அவை கூரையைத் தாங்கும் இடத்தில் ‘சிலாபாலிகா’ எனப்படும் பெண் சிலைகளைக் கொண்டுள்ளன (இவை பற்றி விரிவாக பின்னர் தனியாகப் பேசுவோம்). அவை மொத்தம் 42 அவற்றில் மண்டபத்தின் வெளிச்சுற்றில் உள்ள தூண்களில் 38 சிலைகள் உள்ளன.

ஆலய வெளிச்சுவரின் கீழ்புறம் உள்ள அடுக்குகளில் யானை, சிங்கம், புரவி, மலர் வடிவம் அன்னம், புராணக்காட்சிகள் போன்றவை தொடராகச் சிற்பமாகி உள்ளன. யானைகளின் எண்ணிக்கை 650 ஆகும். இவை பத்து (தோராயமாக) ஒன்றன் பின் ஒன்றாகவும் அவற்றை எதிர்நோக்கும் பத்து யானைகளும் என்று சிலையாகி உள்ளன. மற்றவையும் இந்த விதமாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒரு அடுக்கின் அகலம் என்பது தோராயமாக 12 முதல் 18 அங்குலம் வரை இருக்கும். ஹொய்சாள ஆலயங்களில் உள்ள சிற்றின்பவகைச் சிற்பங்கள் ஒதுக்குப்புறமான இடத்திலேயே காணப்படுகின்றன. எண்ணிக்கையிலும் அவை குறைவுதான். கஜ்ராஹோ ஆலயம் போன்றதல்ல. சுவர்ப்பரப்பின் தென்மேற்கு மூலையில் நரசிம்மர், மேற்குப்புறத்தில் ஐராவதேஸ்வரர், ஆலயத்தின் முகப்பில் இறக்கையை விரித்தபடியான கருடன், நடமிடும் காளி, அமர்ந்த விநாயகர், வாமனர், கைலாயத்தை அசைக்கும் இராவணன், மகிஷனை அழிக்கும் துர்க்கை, வராகர், நிற்கும் பிரம்மன், அந்தகாசுரனை வதைக்கும் சிவன், பைரவர், சூரியன், மீன் இலக்கைக் குறிவைக்கும் காண்டீபன் ஆகிய சிற்பங்கள் அவற்றின் சிற்ப முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. அவற்றில் வடக்குக் கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிர வழிச் சிலைவடிவங்களின் பாதிப்பு உள்ளது.

இந்தச் சிற்பிகள் தாங்கள் உருவாக்கிய சிலைகளில் தங்கள் பெயர், குடும்ப விவரம், தாங்கள் சார்ந்த குழு போன்ற செய்திகளை எழுதி வைத்துள்ளனர் என்பது சிறப்பான செய்தியாகும். ருவரி மல்லிதம்மா என்னும் சிற்பி உருவாக்கியதாக நாற்பது சிலைகளுக்கும்மேல் காணப்படுகின்றன. ஐந்து மதனிகா சிலைகளுக்கு உரிய சிற்பி என்று சவனாவின் பெயரும், தாசோஜா என்னும் சிற்பி உருவாக்கியவை நான்கு என்றும், மல்லியண்ணா, நாகோஜா என்னும் இரு சிற்பிகள் பறவை, விலங்குகளை உருவாக்கியதில் முதன்மையானவர் என்றும் அறிகிறோம்.

கப்பே சின்னி ஆலயம்

சென்னகேசவர் ஆலய வளாகத்தின் உள்ளேயே காணப்படும் இந்த ஆலயம் அமைப்பில் அது போலவே இருப்பினும் வடிவத்தில் சிறியது. கருவறையில் 6.5 அடிகள் உயரம் கொண்ட சென்னிகராயர் சிலை நின்றவாறு உள்ளது. சுற்றுச் சுவரில் தசாவதாரக் காட்சிகள் சிற்பமாகி உள்ளன. பொ.பி.1117 நூற்றாண்டில் மன்னர் விஷ்ணுவர்த்தனரின் மூத்த மனைவியும் பட்டத்து ராணியுமான சந்தலாவின் பொருளுதவியுடன் இது கட்டப்பட்டது. ஆலயத்தின் துளைகளுடன் கூடிய சாரளங்கள் பொ.பி.1206ல் மன்னன் 2ம் பல்லாளனால் உண்டாயின. நுழைவாயிலின் மேற்புறச்சுவர் இருபுறமும் மகரமீன்கள் கூடிய லக்ஷ்மி நாராயணர் சிலை ஏராளமான அணிகலன்களுடன் காணப்படுகிறது. இது சென்னகேசவர் ஆலயத்தின் வலப்புறத்தில் உள்ளது. சிற்பங்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிடினும் அதன் ஆலய அமைப்புக்குச் சிறப்பானது. பின்னாளில் இங்கு இன்னொரு கருவறையும் இணைக்கப்பட்டது. அது மடிப்புகளற்ற சதுரப் பரப்பில் எழுப்பப்பட்டது.

ஹளேபீட்

12ம் நூற்றாண்டில் ஹளேபீடு ஹொய்சாளர் தலைநகரமாகத் திகழ்ந்தது. கன்னட மொழியில் ஹளேபீடு என்பது ‘சிதைந்த நகரம்’ என்று பொருள்படும். இதன் முந்தைய பெயர் தொரசமுத்திரம் அல்லது துவார சமுத்திரம் என்பதாகும். அந்தப் பெயரில் ஒரு பெரிய ஏரி உள்ளது. பஹாமனி சுல்தானால் இந்த நகரம் இரண்டு முறை தாக்குதலுக்குள்ளாகி சிதைந்து போனது. ஹளேபீடு நகரத்தில் மூன்று ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை:

1. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், 2. கேதாரேஸ்வரர் ஆலயம், 3. பார்வதநாதர் ஆலயம்.

1-ஹொய்சாளேஸ்வரர் ஆலயம்

சிவனுக்கான இந்த ஆலயம் பொ.பி.12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆட்சி செய்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாள மன்னரின் ஆட்சியில் பொ.பி.1120ம் ஆண்டில் எழுப்பப்பட்டது. ஹளேபீட் என்னும் பகுதி முன்னர் துவாரசமுத்திரம் அல்லது தொரசமுத்திரம் என அழைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மன் இரண்டாம் வீரபள்ளாலன் ஆகிய மன்னர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றது. இந்த ஆலயம் எழுப்ப 86 ஆண்டுகள் ஆனபின்னும் இது முற்றுப் பெறவில்லை. பொ.பி.1310ல் மாலிக் காஃபூரின் படைகள் நகரைச் சின்னாபின்னம் செய்தன. ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டன.

இந்த ஆலயம் அமையக் காரணமானவர் அவ்வூரில் இருந்த சைவப் பிரிவு வர்த்தகச் செல்வந்தர்கள்தான். அவர்களுள் கேடமல்லன், கேசரசெட்டி ஆகிய இருவரும் முன்னின்று பொருள் திரட்டி மன்னனின் ஆதரவுடன் ஆலயத்தை எழுப்பினார்கள். இது பேலூரில் சென்னகேசவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே அதற்குப் போட்டியாகக் கட்டப்பட்டது. தொரசமுத்திரம் என்னும் மாபெரும் ஏரிக்கு அருகில் இவ்வாலயம் உண்டானது. ஏரி ஆலயத்திற்கு 75 ஆண்டுகள் முந்தியது. இவையெல்லாம் கல்வெட்டுக் குறிப்புகளில் கிட்டும் செய்திகள். தென் இந்தியாவில் உள்ள பெரிய சிவ ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆலயம் இரண்டு கருவறைகளையும், அவற்றின் மேல் உயரம் குறைந்த கோபுரங்களையும் கொண்டது. அவற்றில் ஒன்று ஹொய்சாளேஸ்வரருக்கும், மற்றது சுந்தரேஸ்வரருக்கும் ஆனது. (ஒன்று அரசன் விஷ்ணுவர்த்தனனுக்கும், மற்றது அவனது மனைவி சாந்தலாதேவிக்கும் காணிக்கையானது.) ஆலயம் முழுவதும் மாக்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதைத் ‘த்விகுட’ (இரண்டு கோபுரம் கொண்டது) என்பர். நிலத்திலிருந்து நன்கு உயர்த்தப்பட்ட தரைத்தளம் பின்னர் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு முன்மாதிரியானது. கிழக்குப்பார்த்த இரு கருவறைகளுக்கும் தனித் தனியான முக மண்டபங்கள் உண்டு. இரண்டும் ஒரு பாதையால் இணைகின்றன. பேலூர் சென்னகேசவர் ஆலயத்தைக் காட்டிலும் அளவில் சிறிய கருவறைகள்தான் இங்கு உள்ளன.

துர்க்கை, ஹளேபீடு

கருவறை லிங்கமும் எளிமையான தோற்றம் கொண்டதுதான். ஆனால், ஆலயத்தின் வெளிப்புற சுவர்ப்பரப்பு அவ்விதமானதல்ல. செங்கோண அமைப்பில் சுவர் நீண்டும் உள்மடிந்தும் வெளிவந்தும் பலவித வடிவங்களுடன் உண்டானது. அவற்றில் சிற்பங்கள் குவிந்து கிடக்கின்றன. கோபுரம் இப்போது இல்லாவிடினும் அது எவ்விதம் அமைந்திருந்தது என்பதை எளிதில் ஊகிக்க முடியும். அது நட்சத்திர வடிவமான கோபுரம்தான். நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட வடிவங்களுடன் கூடிய மேடையில் பல அடுக்குகள் கொண்ட அடித்தளம் உண்டாக்கி அதன் மேல் சுவரும் கோபுரமும் மண்டபமும் கட்டப்பட்டது. நாற்புறமும் ஆலயத்தைச் சுற்றி உயர்ந்த மதிலும் தூண்கள் கூடிய கூரையுடன் தாழ்வாரமும் அவற்றுக்குத் தரையிலிருந்து படிகளும் உள்ளன.

ஆலயத்திற்குப் புகுமண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ள மண்டபம் நேராக இல்லாமல் வடக்கு முகமாக மடங்கி உள்ளது. தெற்கில் ஒரு மண்டபமும் கிழக்கில் இரண்டு மண்டபங்களும் உள்ளன. இம்மண்டபங்களின் மேற்தளத்தைக் கடைசல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட தூண்கள் தாங்குகின்றன. இந்த மண்டபங்களுக்கு உள்ள படிகளின் இருபுற ஓரத்திலும் நிலத்தில் இரண்டு சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தின் அடித்தள மேடை திறந்த வெளியிலும் விரிவடைந்து உள்ளது. ஆலயத்தின் மண்டபம் தூண்களுடன் முதலில் நாற்புறமும் திறந்த விதமாகவே உருவானது. பின்னர் மண்டபத்தைக் கற்சுவர்கள் கொண்டு மூடிவிட்டனர். சுவரில் சதுரமான துளைகள் வெளிச்சமும் காற்றும் பரவும் விதமாய்க் கொண்டுள்ளது. அதன் வடக்கு தெற்கு நுழைவில் வரிசையான கடைசல் தூண்கள் உள்ளன. ஆலயத்திற்கு முன்புறம் உள்ள அவ்விதத் தூண்களில் மட்டுமே மதனிகா என்று குறிப்பிடப்படும் பெண் சிலைகள் கூரையையும் தூணையும் இணைத்தபடி முன்புறம் சாய்ந்தவாறு காணப்படுகின்றன. ஆலயத்தில் வேறெங்கும் அவற்றைக் காணவியலாது.

ஆலயத்தின் சுவரை மேலிருந்து கீழாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். கூரையைத் தொடும் பகுதிலிருந்து கீழிறங்கும் சுவரின் ஒரு பகுதியில் அணிவகுக்கும் சிற்றாலயங்கள். நடுப்பகுதியில் கடவுளர்ச் சிற்பங்கள். அதற்குக் கீழ்ப்பகுதி நிலத்திலிருந்து சுவரின் தொடக்கம். இது எட்டு அடுக்குகள் கூடியது.

இடப்புறத் தெற்கு நுழைவாயில் சுவரில் தொடங்கும் நடன விநாயகர் சிலை வடக்குப் புற வலது பக்கத்தில் இன்னொரு விநாயகர் சிலையுடன் முடிகிறது. இவற்றின் இடையில் ஆலயத்தின் வலது, பின்புறம், இடது ஆகிய மூன்று பக்கச் சிவர்களிலும் உள்ள சிலைகளின் எண்ணிக்கை 140. அனைத்தும் பேருருவச் சிலைகள்தான்.

மேடையிலிருந்து தொடங்கும் சுவரின் முதல் அடுக்கில் யானைகளின் வரிசை (வலிமை/ உறுதி இவற்றின் அடையாளம்) அதற்கு மேலுள்ள அடுக்கில் சிங்கங்களின் வரிசை (அச்சமின்மை) மூன்றாவதில் மலர்களின் வரிசை, நான்காவதில் புரவிகள் (வேகம்) ஐந்தாவதில் திரும்பவும் மலர்களின் வரிசை, ஆறாவதில் புராண நிகழ்வுகளின் காட்சிகள், ஏழாவதில் யாளி, மகரமீன் போன்ற கற்பனை விலங்கு வடிவங்கள், எட்டாவதில் அன்னப் பறவைகளின் வரிசை என்றிருக்கும் இதன் தொடரின் நீளம் 660 அடிகளாகும். (முப்புறமும் முன்புறத்தின் நுழைவாயிற்படிகளை விலக்கியும் உள்ள பகுதி) புராண நிகழ்வுகளுக்கு இடையில் அவற்றுக்குத் தொடர்பற்ற வேறு காட்சிகளும் உள்ளன. இதன் பின்னர் ஹொய்சாள ஆலயங்களின் அமைப்பு முறை இதை ஒட்டியே அமைந்தது. ஆனால் அவற்றில் ஆறு அடுக்குகள் மட்டுமே உண்டு. தெற்கில் உள்ள நுழைவாயில்தான் முன்னர் பிரதானமானதாக விளங்கியது. இப்போது புழக்கத்தில் இருக்கும் வடக்கு நுழைவாயிலின் மேலே உள்ள சிற்ப வேலைப்பாட்டைக் காட்டிலும் அதில்தான் சிறப்பு கூடுதலாக உள்ளது. ஆலயத்தின் உட்புறம் ஏறத்தாழ எளிமையாகவே உள்ளது. ஆயின் அதன் மைய மண்டபம் அளவில் பெரியது. இரண்டு கருவறையின் நுழைவாயிலில் உள்ள வாயிற்காப்போரின் சிலைகள் கருங்கல்லில் ஆனவை. பணிப்பெண்களுடன் காணப்படுகின்றன.

‘கருட தூண்’

இந்த ஆலய வளாகத்தில் காணப்படும் ஒற்றைக்கல் தூண் ‘கருட தூண்’ என்றழைக்கப்படுகிறது. இது போரில் உயிரிழந்தவருக்குக் கட்டப்படும் வீரக்கல் வகையானது அல்ல. கருடர் எனப்படுபவர் அரசனின் மெய்க்காப்பாளர்கள். அரசனுடனேயே அவனுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து அவனது மரணத்துக்குப் பின் தம் தலையைக் தாமே கொய்து தம்மை மாய்த்துக் கொள்பவர்கள். இந்தத் தூணில் அது பற்றின கல்வெட்டுச் செய்தி உள்ளது. குருவ லக்ஷ்மணன் என்னும் வீரன் தன் மனைவி மற்ற மெய்க்காப்பாளர்களின் தலையை வெட்டிக் கொன்று தானும் தனது தலையைக் வெட்டிக் கொண்டு மாண்ட செய்தி உள்ளது. கன்னட எழுத்தில் அந்த மொழியிலேயே இது பதிவாகி உள்ளது. தூணிலும் வாளால் தமது சிரம் கொய்யும் வீரர்களின் சிலைகளும் உள்ளன.

நந்தி மண்டபங்கள்

ஆலயத்தின் கிழக்குப் பகுதி வளாகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களின்  எதிர்ப்புறத்தில் இரண்டு மண்டபங்கள் அருகருகே உள்ளன. ஏறத்தாழ ஒரு சிறு கோயிலின் தோற்றம் கொண்ட அவை வேலைப்பாடுடைய உயர்த்திய மேடை கொண்டவை. மண்டபங்களின் மையத்தில் மாபெரும் அளவில் படுத்திருக்கும் ஒற்றைக்கல் நந்திகள் இரண்டிலும் உள்ளன. அதைச் சுற்றிவர தூண்களுடன் கூடிய வழி உள்ளது. சிலபடிகள் ஏறி அதை அடையலாம். நிலத்தில் படிகளின் இருபுறமும் அளவில் சிறிய ஆலயங்கள் உள்ளன. இரண்டாவது நந்தி மண்டபத்தின் பின்னால் உள்ள கருவறையில் கருங்கல்லால் உருவான ஏழடி உயரம் கொண்ட சூரியனின் சிலை நிற்கிறது. இவை அடைக்கப்பட்ட மண்டபங்கள் அல்ல. அவற்றிலுள்ள அனைத்துத் தூண்களும் கடைசல் முறையில் உருவானவை. ஒன்று போல மற்றது இல்லை. அமர்ந்த நிலையில் பெரும் விநாயகர் சிலை ஒன்றும் தெற்குப் புறத்தில் திறந்தவெளியில் உள்ளது. மேடையும் சேர்த்து அதன் உயரம் எட்டு அடிகள்.

இந்த வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப்படும் அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது. திறந்தவெளியில் பல்வேறு இடங்களிலிருந்து சேகரித்துக் கொண்டுவந்த சிலைகளின் தொகுப்பு இங்குக் காணப்படுகிறது. அவை ஏறத்தாழ 1,500 எண்ணிக்கை கொண்டவையாகும். 18 அடி உயரம் கூடிய ஜைன தீர்த்தங்கரரின் நிற்கும் சிலை சிதைந்து போன ஜைன ஆலயத்திலிருந்து மீட்கப்பட்டதாகும். இங்குள்ள சிலைகள் உலக நாடுகள் பலவற்றிலும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆலயத்தில் காளிதாசன், தாமோஜன், கேதனா, பல்லானா, ரெவோஜா, ஹரிஷ ஆகிய சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டுக் குறிப்பு அவர்களின் பங்களிப்பை பற்றின விவரத்தைச் சொல்கிறது.

கேதாரேஸ்வரர் ஆலயம்

ஹொய்சாளேஸ்வர ஆலயத்தினின்றும் 500 மீட்டர் தாண்டி அமைந்துள்ளது இவ்வாலயம். கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து மன்னன் இரண்டாம் வீரபல்லாளன் அவனது பட்டத்துராணி அபிநவகேதலா தேவி இருவராலும் பொ.பி.1219ல் இந்த ஆலயம் எழுப்பட்ட விவரம் தெரிகிறது. ஆலயத்துக்குச் சேதம் நேர்ந்த போதிலும் அது ஏறத்தாழ முழுமையாகவே உள்ளது. பின்னாட்களில் விரிவாக்கமும் கூடியது, இது.

மாக்கல் கொண்டு எழுப்பப்பட்ட இந்த ஆலயம் 16 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவம் கூடிய உயர்த்தப்பட்ட சுவர் அடுக்குகளின் மீது அதே வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. மூன்று கருவறைகள் கொண்ட அது இப்போது வெறுமையாக உள்ளது. கோபுரங்களும் இல்லை. கடைந்து உருவான தூண்கள், உட்கூரை சிற்ப குவியல்கள் சுவரை இரண்டாகப் பிரித்து உண்டாக்கிய சிலைகள், தள அடுக்குகளின் நாற்புறமும் உள்ள தொடர் வடிவங்கள் என்று அனைத்தையும் கொண்ட இந்த ஆலயத்தை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றும் விதமாக பார்வையாளர் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.

சோமநாதபுரம் சென்னகேசவ ஆலயம்

ஹொய்சாள அரசன் மூன்றாம் நரசிம்மன் ஆட்சியிலிருந்தபோது அவனது படைத் தளபதிகளில் ஒருவனான சோமநாதன் மன்னனிடம் கேசவருக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி கேட்டான். மன்னன் அதற்கு அனுமதி அளித்ததுடன் அதற்கான பொருளையும் வழங்கினான். ஆலயம் கட்டப்பட்டு பொ.பி. 1268 இல் குடமுழுக்கும் கண்டது. ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் இவை தெரிய வருகின்றன.

இது மூன்று கருவறைகளை அடுத்தடுத்து உள்ளடக்கிய ஆலயமாகும். அவற்றின் மேலே அளவில் சிறிய கோபுரங்களும் உண்டு. கிருஷ்ணனின் மூன்று தோற்றங்களான ஜனார்த்தனன், கேசவன், வேணுகோபாலன் சிலைகளவற்றில் நிறுவப்பட்டு வழிபாடுகள் நிகழ்ந்தன. பின்னால் நிகழ்ந்த ஆலய அழிப்பினால் கேசவனின் சிலை இப்போது இல்லை. மற்ற இரண்டு கருவறைகளும் மூளியாகக் காணப்படுகின்றன. மூன்று கருவறை உள்ளதால் இது திரிகூட ஆலயம் என்று குறிப்பிடப்படுகிறது.

தளபதி சோமநாதன் தன் பெயரில் ஏற்படுத்தியதாக இது இருப்பதாலும், இது தோன்ற அவன் காரணமானதாலும் இது சோமநாதபுர கேசவ ஆலயம் எனப்படுகிறது. நட்சத்திர தள அமைப்பை உடையது. பல அடுக்குகள் கொண்ட உயர்த்திய தரைதளத்தில் ஆலயத்தில் சுற்றிவர திறந்தவெளிப் பாதையுடன் காணப்படுகிறது. சுவர்களிலும் உட்கூரை கோபுரங்களிலும் காணப்படும் சிற்பங்களின் சிறப்பைச் சொற்களால் கூறவியலாது.

இவையல்லாமல், குறிப்பிடத்தகுந்த ஆலயங்கள் உள்ள மற்ற இடங்கள்:

1) கோரிவங்கலா- பொ.பி. 1173
2) அம்ருதபுரா பொ.பி. 1279
3) பெலவாடி-பொ.பி. 1200
4) அரசிகரே பொ.பி. 1220
5) மொசலே-பசலூரு-பொ.பி. 1234
6) ஹரண ஹள்ளி -பொ.பி. 1235
7) நக்கஹள்ளி-பொ.பி. 1246
8) ஹொசஹோலலு-பொ.பி. 1250
9) அரலகுப்பே-பொ.பி. 1250

Leave a Reply