Posted on Leave a comment

மகரந்த ரேகை | சுஜாதா தேசிகன்

தமிழ்ப் படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஹீரோவின் இல்லத்தில் அவருக்குத் தெரியாமல் போதைப் பொருளை வைத்து போலீஸில் சிக்க “கியாரே செட்டிங்கா” என்று வில்லன் அவரை முழிக்க வைப்பார். ஆங்கிலத்தில் ‘The evidence was planted’ என்பார்கள். இன்று ‘Plant is the evidence’ என்று சொல்லலாம்.

கொலையைக் கண்டுபிடிக்க மூன்று முக்கியக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

எங்கே? யார்? எப்போது?

எங்கே என்ற கேள்வி சில சமயம் கண்டுபிடிக்க மிகக் கஷ்டம். உதாரணத்துக்கு, போர்க் கைதிகளை எல்லாம் கொன்று ஒரு குழியில் புதைத்தால் அவர்கள் எங்கே கொலை செய்யப்பட்டார்கள் என்று கண்டுபிடிப்பது மிகக் கஷ்டம். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தால் கொலை நடந்த இடத்தில் இருக்கும் செடி, கொடிகள், ஏன் அங்கே இருக்கும் கண்ணுக்கு தெரியாத மகரந்த நுண்துகள் கூட முக்கியத் தடயமாக இருக்கிறது.

மகரந்த ஒவ்வாமையால் (pollen allergy) பலர் பாதிக்கப்படுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மரபணு (DNA) வளர்ச்சியால் இன்று ‘Forensic Botany’ (தாவரவியல் தடயவியல்) மிக வேகமாக வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

செடி எப்படி ஆதாரமாகும்? சில வருடங்கள் முன் ஒரு சிறுகதை படித்தேன். சிறுகதையின் பெயர், யார் எழுதினார்கள் என்ற விவரம் எல்லாம் நினைவில் இல்லை. கதையின் முடிச்சு மட்டும் ஞாபகம் இருக்கிறது. சுமாராக அந்தக் கதையைச் சொல்ல முயற்சிக்கிறேன்.

அந்த வீட்டுக்கு வெளியே நீல நிற ஹைடராங்கிஸ் (Hydrangeas) பூக்கள் பூத்துக் குலுங்கும். உள்ளே ஒரு பெண் எப்போதும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருப்பாள். எப்போதும் இல்லை, அவள் கணவன் இருக்கும்போது மட்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் அந்தப் பையன்தான் அவளுக்கு ஒரே ஆறுதல்.

கணவன் இல்லாத சமயம் தான் படும் துன்பங்களையெல்லாம் அவள் இவனிடத்தில் சொல்லி அழுவாள். அவனும் அவளுக்கு அறுதல் கூறுவான். நீங்கள் நினைப்பது சரிதான், அவன் அவளைக் காதலித்தான்.

ஒரு நாள் அவள், “இன்னிக்கு நிறைய அடிவாங்கிவிட்டேன்…” என்று அழத் தொடங்க அந்தப் பையன், “கவலைப்படாதே… நாளைக்கு வேலை விஷயமாக ஊருக்குப் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன். வந்தவுடன் நாம் ஊரை விட்டு ஒடிவிடலாம்.”

ஒரு வாரம் கழித்து வரும்போது பக்கத்து வீட்டில் அழும் சத்தம் எதுவும் கேட்காமல், தெருவே நிசப்தமாக இருந்தது. கடையில் சாமான் வாங்கும்போது கடைக்காரன், “சார் அந்தப் பெண் இறந்துவிட்டாள்… யாரோ சுட்டுவிட்டு…”

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினான்.

“நீங்கள் யார், உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “பக்கத்து வீட்டுப் பெண்ணின் கணவன் அவளை நிறைய அடிப்பான். அழும் குரல் எப்போதும் கேட்கும். அவள் கணவன்தான் அவளைக் கொலை செய்திருக்க வேண்டும்.”

இன்ஸ்பெக்டர், “துப்பாகியால் சுடப்பட்டிருக்கிறாள். அப்போது அவள் கணவன் வீட்டில் இல்லை. அவள் சுடப்பட்ட துப்பாக்கி கிடைத்தால்தான் மேற்கொண்டு துப்பு துலக்க முடியும். எதற்கும் உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க. உங்க மேலையும் எங்களுக்குச் சந்தேகமா இருக்கு… விசாரிக்கணும்.”

தினமும் அலுவலகம் போகும்போது அவள் ஆசையாக வளர்த்த அந்த ஹைடராங்கிஸ் பூக்களைப் பார்த்துவிட்டுச் செல்வான். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தப் பூக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டரைக் கையோடு அழைத்து வந்தான்.

”இந்தப் பூச்செடி கீழே தோண்டிப் பாருங்கள்.”

இன்ஸ்பெக்டர் நம்பிக்கை இல்லாமல் தோண்ட கீழே ஒரு ரிவால்வர் கிடைக்க அதில் இருந்த தோட்டாக்கள் அந்தப் பெண் சுடப்பட்ட தோட்டாவும் பொருந்த… கணவனைக் கைது செய்தார்கள்.

துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்ற என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மண்ணின் pH கொண்டு ஹைடராங்கிஸ் மலர்களின் வண்ணம் இளஞ்சிவப்பாக மாறும். pHஐ மாற்றுவதன் மூலம் வண்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சுத்தமான நீரின் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும்பொழுது, கலக்கப்படும் பொருளைப் பொருத்து அது அமிலத்தன்மை உடையதாகவோ (acid) காரத்தன்மை உடையதாகவோ (basic or alkaline) மாறும். ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் ஐயானை (ion) பொறுத்து pH மாறுபடும். 

ஹைட்ரஜன் ஐயான் (ஹைட்ரஜன் அயனி என்பார்கள்) என்பது ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கினால் கிடைப்பது. அடுத்த முறை எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலக்கிச் சாப்பிடும்போது எலுமிச்சை அமிலத்தில் ஹைட்ரஜன் ஐயான்களைக் குறைக்கிறோம் என்று தெரிந்துகொண்டு குடியுங்கள்.

பொதுவாக தாவரவியல் என்றால் செடிகளைப் பற்றிய படிப்பு ஆகும். ஆனால் தற்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தால் அதைத் தடவியலில் பயன்படுத்தும்போது, மகரந்தம், விதைகள், இலைகள், பூக்கள், பழங்கள் மூலம் மரணம் எங்கே நிகழ்ந்தது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க உதவுகிறது. 

ஒரு மகரந்தம்

மகரந்தின் தனித்த துகள்கள் மனிதக் கண்ணுக்குத் தெரியாதவை. ஒரு பூவில் லட்சம் மகரந்தத் துகள்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். நுண்ணோக்கி (microscope) மூலமே அவற்றைக் காணலாம். இறந்தவர் மூக்கில் அல்லது அவர் சட்டையில் பட்டன் ஓட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத் துகள்களின் மூலம் எங்கிருந்து வந்தார் என்று தீர்மானிக்கலாம். கிட்டதட்ட ஐந்து லட்சம் மகரந்த வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். இவை மறைமுகமான கைரேகையாக விளங்குகிறது.

Palo Verde trees

1992ல் நடந்த சம்பவம் இது:

அந்தப் பெண் அமெரிக்காவில் அரிசோனா என்ற பகுதியில் அலங்கோலமாக இறந்து கிடந்தாள். பாலியல் தொழிலாளி. போலீஸ் அங்கே வந்து பார்த்தபோது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. சற்று தூரத்தில் ஒரு பேஜர் கிடந்தது. விசாரணையில் அது மார்க் என்பவருடைய பேஜர் என்று கண்டுபிடித்து அவரிடம் சென்றபோது, “அந்தப் பெண்ணுடன் நான் உல்லாசமாக இருந்த சந்தர்ப்பத்தில் என் பேஜரைத் திருடிவிட்டாள். அவளைக் கொலை செய்யவில்லை. கொலை நடந்த இடத்துக்கு நான் போனது கூடக் கிடையாது” என்று சத்தியம் செய்தான்.

போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன செய்வதெனப் புரியாமல், கொலை நடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தபோது திரும்பிய பக்கம் எல்லாம் அடர்த்தியான மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பாலோ வர்டீ (Paloverde) மரங்களாக இருந்தன. அப்போது ஒரு மரத்தின் கிளையில் சிறியதாக ஒரு சிராய்ப்பு இருந்தது. எதோ வண்டி சென்றபோது மரத்தின் கிளையைத் தேய்த்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்து, மார்க் வீட்டுக்குச் சென்று அவனுடைய வண்டியைச் சோதனை செய்தார்கள். சின்னதாக இரண்டு பழுத்த பாலோ வர்டீ காய்கள் அதில் இருந்தன.

ஊர் முழுக்க இந்த மரம்தான் இருக்கிறது. சாதாரணமாக எந்த மரத்துக்குக் கீழே வண்டியை நிறுத்தினாலும் காய்கள் வண்டியின் மீது விழும். தான் அந்த இடத்துக்குச் சென்றதே இல்லை என்று மீண்டும் சத்தியம் செய்தான் மார்க்.

அந்தக் காய்களை அரிசோனா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பினார்கள். விதைகளைப் பொடி செய்து அதிலிருந்து டி.என்.ஏ பரிசோதனை செய்தார்கள். பக்கத்தில் இருந்த மற்ற மரத்தின் விதைகளையும் ராண்டமாக எடுத்து அதையும் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

பல்வேறு மகரந்தங்கள்

நம்முடைய கைரேகை எப்படித் தனித்தன்மையுடன் இருக்குமோ அதேபோல ஒவ்வொரு மரத்தின் டி.என்.ஏவும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. இதற்காகச் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். கொலை நடந்த இடத்தில் இருந்த மற்ற மரங்களின் காய்களில் உள்ள டி.என்.ஏ மார்க் வண்டியில் இருந்த காய்களின் டி.என்.ஏவுடன் பொருந்தவில்லை. அடிப்பட்ட மரத்தின் காய்களுடன் மட்டுமே கச்சிதமாகப் பொருந்தியது. மார்க்கு சிறைத் தண்டனை கிடைத்தது.

மகரந்தம் ஆராய்ச்சியை மகரந்தத்தூளியல் (Palynology) என்பார்கள். மகரந்தத்தின் ஆயுள் பல நாள். முறையாகச் சேமிக்கப்பட்டால், மகரந்தம் நூற்றாண்டுகளுக்குக்கூட நீடிக்கும்.

பூச்சியின் காலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் 

இன்னொரு சம்பவம். அந்தப் பெண் தன் நாய்க்குட்டியுடன் கடற்கரையில் நடக்கும்போது அங்கே ஒரு பார்சல். திறந்து பார்த்தபோது கிட்டதட்ட மயங்கிவிட்டாள். உள்ளே அழுகிய நிலையில் ஒரு குழந்தை. கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பெண் குழந்தை, சமூக வலைத்தளங்களில், நியூஸ் என்று விளம்பரப்படுத்தினார்கள். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. துப்பறிவாளர்கள் குழந்தை போட்டிருக்கும் துணியை ஆராய்ந்தபோது அதில் பைன் மரத்தின் மகரந்தத் துகள்கள் கிடைக்க, அது எந்த இடத்து பைன் என்று கண்டுபிடித்து சில மாதங்களில் குழந்தையையும் அதைக் கொலை செய்தவனையும் கண்டுபிடித்தார்கள்.

அந்த ஏணி!

மகரந்தத் துகள் மட்டுமல்ல, சில சமயம் மரக்கட்டை கூடத் துப்பு கொடுக்கும். 1935ல் மாடியில் இருந்த குழந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது. கடத்தப்பட்ட இடத்தில் ஒரு ஏணி மட்டுமே இருக்க மரக்கட்டையில் மிக்க அனுபவமிக்க கோஹ்லெர் அழைக்கப்பட்டார். அவர் மரத்தை ஆராய்ந்து என்ன மாதிரி மரம், எந்தத் தேசத்து மரம் என்று சொல்ல, ஒரு தச்சன் வீட்டில் பரணில் அதே மரத்தின் கட்டை ஒன்று இருக்க, அவர் மாட்டிக்கொண்டு தண்டனை பெற்றார்.

கள்ள ரூபாய் நோட்டு, போதைப் பொருள் என்று எல்லாவற்றிலும் இந்த மகரந்த ரேகையை ஆராய்ந்தால் ‘இங்கிருந்து’ என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

சட்டையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மகரந்தங்கள் 

கொலை செய்துவிட்டு புல் தடுக்கிக் கீழே விழ பயில்வானாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண புல் உங்கள் சட்டை, சாக்ஸ் எங்காவது ஒட்டியிருந்தாலும் போதும், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். கொலை செய்துவிட்டு வந்து துணியை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைத்தாலும் சில மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொண்டு இருக்குமாம். ஜாக்கிரதை.

Leave a Reply