தொடர், மசாலாத்தனம் நிறைந்து இருக்கும் என்றால் அது தவறில்லை. ‘காண்கின்றவர்கள் விரும்புவதைக் காட்டுகிறோம்’ என்று சொல்லிவிடலாம். ‘எங்களது ரசிகர்கள் அறிவியல் அதிகம் விரும்பமாட்டார்கள்; அவர்களுக்குத் தெரியாது, எனவே எங்களுக்கு எது தெரியுமோ, வசதிப்படுமோ அதுதான் அறிவியல் எனக் கொண்டுவருவோம்’ என்ற மனநிலையை இத்தொடரில் பார்க்கலாம். இது கவலைக்குரியது.
எரிக்கப்பட்ட உடலின் சாம்பலை ஆராய்ந்து, அதன் அறிக்கை எனக் காட்டுகிறார்கள். அதில் மெல்லக் கொல்லும் விஷமாக ஆர்சனைடு கண்டறியப்படுவதாகச் சொல்கிறார் ஒரு வல்லுநர். சாம்பலில் ஆர்சனிக் என்ற தனிமம் கண்டறியப்படலாம். ஆர்சனைடு?
இதைவிட ஒருபடி மேலே போய், சாம்பலில், இறந்தவரின் ரத்தவகை ஏ பாசிடிவ் என்று கண்டறிகிறார்கள்.
நாம் நகைத்துப் போகலாம். அல்லது ‘ஆர்சனிக்,- ஆர்சனைடு – என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏதோ கொல்ற விஷம், உடம்புல இருந்திருக்கு. எப்படித் துப்புக் கண்டுபிடிக்கறாங்கன்னு பாருங்க’ என்று சொல்லிப்போகலாம். இழப்பு ஒன்றுதான். நம்பகத்தன்மை.
இந்த நம்பகத்தன்மை செய்தியில் வேண்டும். ஆனால் கதையில் வேண்டாமெனச் சொல்வது சரியானதா? கதை என்றால் எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கப்படலாமா? அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு எப்படி அதனைச் சொல்ல என்ற காரணத்தாலா? அல்லது, இந்த அறிவியல் செய்திகளெல்லாம் படித்த சிலருக்கு மட்டுமே என்னும் மேன்மட்டச் செருக்கின் விளைவு என்ற கருத்தினாலா?
நம்பகத்தன்மை என்பது எதிலும் காணப்படவேண்டிய ஒன்று. Traceability and validation என்பது நம்பகத்தன்மையின் அடிப்படைக் கூறுகள். ஒரு நம்பத்தகுந்த இடத்திலிருந்து (Reliable source) செய்தி கேட்கிறீர்கள். அதை அப்படியே போட்டுவிடுவதால் அது நம்பத்தகுந்ததாக ஆகிவிடுவதில்லை. செய்தி மற்றொன்றுடன் சரிபார்க்கப் படவேண்டும் (Validated) அல்லது உறுதிப்படுத்தப்பட வேண்டும் (Verified). தோற்றுவாய்கள், மூலங்கள் தெரிவிக்கப்பட்டு ஆதாரங்கள் (Proof), உசாத்துணைகள் (References) கொடுக்கப்படவேண்டும்.
இதெல்லாம் கதைக்கு எதற்கு? ‘விஷம் கொடுத்தார்கள். செத்துப்போனார். முடிந்தது கதை (அல்லது தொடங்கியது)’. இதில் பாதிப்பு ரசிகர்களுக்கே. அவர்கள் காண்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதில் அவர்களது ரசிகத்தன்மையை வளர்க்கவோ, மேலும் அறிவினைச் செம்மைப்படுத்துவதோ இயலாமல் போகிறது. ஒரு சமூகத்தின் பொது அறிவின் விழுக்காடு குறைவதுடன், பொதுச்சமூக உணர்வு மழுங்கிப்போகிறது.
60களில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் அறிவுசார்ந்த தருக்கம் சார்ந்த உணர்வுக் காட்சி வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. கல்லூரிகளில் இலக்கிய வகுப்பில் ஷேக்ஸ்பியரின் காதல் நாடகங்கள் மட்டுமே சொல்லித் தருவார்கள். சிவாஜி திருக்குறள் பற்றிப் பேசுவதை ரேடியோவில் கேட்கும்போது, தங்கவேலு நோட்ஸ் எடுப்பார். எத்தனை வீடுகளில் அப்படி நோட்ஸ் எடுத்திருக்கிறார்கள்? புத்தகம் விரும்பியான கதாபாத்திரத்தின் வாசிப்பு நிலை, எந்த வகையான புத்தகங்கள் என்று ஒரு கதாபாத்திர உருவாக்கம் (characterization) மருந்துக்கும் இருக்காது. மலையாளம் இதில் சற்றே வேறுபட்டிருந்தது. மணிச்சித்ரத்தாழ் திரைப்படத்தில், மனப்பிளவு, Multiple personality disorder என்றெல்லாம் கொண்டுவந்தாலும், அதனைச் சரியாக விவரித்துக் கையாண்டிருப்பார்கள்.
இந்த நம்பகத்தன்மையின் விளைவாகப் பலரும் இன்று multiple personality disorder, psychosis என்றெல்லாம் அறியத் தொடங்கினார்கள். மனநோய் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வு ஏற்பட, பொழுதுபோக்குக் காரணிகள், ஊடகங்கள் காரணமாக இருந்தன என்றே சொல்லாம். அதிகம் அறியாதிருந்த, இருளடர்ந்த மன நோய்கள் சற்றே வெளிச்சம் கண்ட ஆரோக்கியமான தருணம் மணிச்சித்ரத்தாழின் பின்னே சாத்தியமானது.
டாக்டர் ஹவுஸ் தொடரில், ஒரு யூதன், நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் தன் மனைவியைப் பார்க்க மறுத்து டாக்டரிடம், “உங்களுக்கு வேண்டுமானால், அவள் மற்றுமொரு நோயாளியின் உடலாக இருக்கலாம். எனக்கு மனைவி. எனது கலாசாரத்தில், மனைவியின் உடல் மதிப்பிற்குரியது. பார்க்கவேண்டிய தருணமன்றிப் பிற வேளையில் பிறந்தமேனியாகப் பார்க்கமாட்டேன்” என்கிறபோது, மருத்துவம், தொழில் தருமம் இவற்றைத் தாண்டி, மனிதம், கொள்கை, பற்று, மரியாதை, கலாசாரம் என்பதன் எல்லை தெரிகிறது. கோடு எங்கே கிழிக்கப்படவேண்டுமென ஒரு ஆரோக்கியச் சிந்தனையோ அல்லது அது குறித்த ஆரோக்கியமான விவாதமோ எழும் சாத்தியத்தை அத்தொடர் வழங்கியது. என் வீட்டில் இந்த நிகழ்ச்சி கண்டபின் நடந்த விவாதம் பதின்ம வயதினனாக இருந்த என் மகனுக்குப் பல கோணங்களில் வாழ்வைக் குறித்த சிந்தனையை வளர்த்தது.
சிஐடி போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இந்த நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தால், பலர் பேசத் தயங்கிக் கொண்டிருந்த, அதிகம் அறியாதிருந்த, தவறாக அறிந்திருந்த செய்திகள் பல, மக்களிடையே வலுவாகச் சென்று சேர்ந்திருக்கும். சில தயக்கங்களுக்குத் தெளிவும் கிடைத்திருக்கும். கட்டுப்பாடற்று, தடைபடும் இயக்கம் உள்ள (Spastic ஆக உள்ள) சிறுவனை அடைத்து வைக்காமல், யதார்த்தமாகப் பழகுங்கள் என்ற செய்தியை அவர்கள் சொல்லியிருக்கலாம். தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தினைச் சொல்லியிருக்கலாம். இரத்த தானம், கண் தானம் பற்றிப் பேசியிருக்கலாம். இது மிகையான எதிர்பார்ப்பல்ல. சிஎஸ்ஐ தொடரில் கார் விபத்தில் பிழைத்திருக்கும் ஒருவனது கழுத்தில் இருக்கும் கீறல் கொண்டு, அவன் சீட் பெல்ட் அணிந்திருந்தான் என அறிவதோடு, அதனால்தான் அவன் பிழைத்தான், அணியாத பிறர் மண்டை உடைந்து இறந்தார்கள் எனவும் காட்டுவார்கள். இருக்கைப் பட்டையின் முக்கியத்துவத்தைப் பலமாக, மறைமுகமாக உணர்த்தும் காட்சி அது.
அறிவியல் கருவிகளாகட்டும், செய்முறைப் படிகளாகட்டும், அவற்றைக் காட்டுவதில் உள்ள அலட்சியம் நம்மூர்த் தொடர்களைக் காணத் தவிர்க்க வைக்கிறது. எந்த அளவு இதில் நம்பகத்தன்மை வேண்டும்? கெமிக்கல் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு அதன் பெயர் சரியாக இருந்தாலென்ன தவறாக இருந்தாலென்ன என்ற கேள்வி ஆரோக்கியமானதல்ல. பார்ப்பவர்கள் அறியமாட்டார்கள் என்ற அலட்சியம், பொதுவில் எடுத்தவனுக்கு அறிவில்லை என்ற நகைப்பையே மக்களிடம் வலுப்படுத்தும்.
நான் பணியாற்றிய இரு பெரும் அறிவியல் கருவி தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வுச்சாலைகளில் சிஎஸ்ஐ தொடரின் படப்பிடிப்புகள் நிகழ்ந்தன என்பதால், ஒவ்வொரு படியிலும், எத்தனை கவனம் எடுத்துக்கொண்டார்கள் என்பதை அறிய முடிந்தது. எந்தக் கருவி எதற்குப் பயன்படுத்துவார்கள், எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதிலிருந்து, எந்த வேதிப் பொருள் பெயரைச் சொல்லவேண்டும் என்பது வரை தெளிவாக அறிந்தபின்னே, படப்பிடிப்பு நடந்தது. அறிவியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த கதைகள் எழுதுபவர்கள் அத்துறை வல்லுநர்களிடம் நடையாய் நடந்து செய்தி சேகரித்து எழுதிய நிகழ்வுகள் பல உள்ளன. நமது நாட்டில் ‘அறிவியல்கதை எழுதறது என்ன பெரிய விஷயம்? ஒரு வாரம் நெட்டுல தேடி, அத வைச்சு எழுதிரலாம்’ என்ற பேட்டிகள் வருவதைக் கேட்கிறோம். இணையத்தளத்தில் தேடினால் செய்தி கிடைக்கும். அதன் நம்பகத்தன்மை, உறுதிப்படுத்துதல், துறை அறிவு இல்லாதோர்க்குக் கேள்விக்குறிதான்.
ஒரு காணொளியைக் காண்பதும், கதை வாசிப்பதும், அத்துடன் முடிந்தால் அது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே கொண்டதாக இருக்கும். வாசித்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, புத்தகங்களை ஆராய்ந்து, இணையத்தில் மேய்ந்து மேலும் அறியத் தூண்டினால், அப்படைப்பு முழுமை பெற்ற ஒன்று. டாவின்சி கோடு புத்தகம் வந்தபின், பாரிஸ் லூஅர் (Louvre) அருங்காட்சியகத்தில், அப்புத்தகமும் கையுமாக நின்று ஒவ்வொரு இடமும் பார்த்த சிலரை நேரிலே கண்டிருக்கிறேன். உழைப்பின் பின், உண்மையினை நோக்கி நடக்கும் படைப்புகளுக்கு மதிப்பு தனி.
சாம்பலில் எப்படி இரத்த வகை காண முடியாதோ, அதே போல்தான் மைக்ராஸ்கோப்பில் டிஎன்ஏ மரபணுவின் வடிவம் காண்பதும். பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் பிளாஸ்டிக் பையை வைத்து சர்ஜரி செய்வதைக் காட்டும் காணொளிகள் நிறைந்தது பாரதம். ரசிகர்கள் இதுபோன்ற ‘எம் ரசிகர்களுக்கு இதெல்லாம் தெரியாது. கண்டுக்க மாட்டாங்க’ என்ற சிந்தனை தோய்ந்த படைப்புகளை நிராகரிப்பதுடன், அவை பற்றிக் கடுமையாக விமர்சிப்பதன் மூலம், ஒரு பொறுப்புணர்வைப் படைப்பாளிகளிடையே கொண்டு வர வேண்டும்.
அதுவரை, ‘பாஸ் இது கடும் விஷம். சோடியம் க்ளோரைடு’ என்றபடி கலர் கலரான திரவங்கள் நிறைந்த குடுவைளைக் குலுக்கி, வெள்ளைக் கோட்டு அணிந்து பேசுபவர் அறிவியலாளர் என்ற அபத்தங்கள் உலா வருவதைப் பொறுக்கத்தான் வேண்டும்.