The Madras District Gazettier, The Nilgiris, W Francis
புல்பள்ளி கிராமம் கேரளாவின் வயநாட்டு தாலுகாவில் இருக்கிறது. சுல்தான் பத்தேரி என்னும் வினோதப்பெயர் கொண்ட ஊருக்கு இருபத்து நான்கு கிலோமீட்டரில் இருக்கும் படு கிராமம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற எடுத்த அபார முயற்சிகளில் இந்தப் புல்பள்ளியும் சிக்கிக்கொண்டது. புல்பள்ளி மட்டுமில்லை, சுற்றுவட்டார ஊர்களான செட்டப்பாலம், மடப்பள்ளிக்குன்னு, வனமூலிகா, பெரிக்கல்லூர், பிரக்கடவு என்று எல்லா ஊர்களிலுமே எஸ்டேட் வேலைக்கு ஆள் எடுக்க மேஸ்திரிகள் வந்து அப்பாவி கிராம மக்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.
ஜி.எஃப்.ஃபிஷெர் துரை 1820களிலேயே சேலத்தில் சேர்வராயன் மலையில் காபித் தோட்டங்களைப் பயிரிட்டுச் சம்பாதித்தார். அப்போதைய சேலம் கலெக்டர் காக்பர்ன் அவருக்கு மலைத்தொடர்களில் காபி பயிரிட அனுமதித்துவிட, நல்ல விளைச்சல். இவரைத் தொடர்ந்து ஜே.ஔச்டர்லொனி துரை வயநாட்டில் காபித் தோட்டங்களை உருவாக்கி நிர்வகித்தார். 1840-50 காலகட்டங்களில் வேலை செய்ய மேஸ்திரிகள் கிராமம் கிராமமாகப்போய் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அரக்கத்தனமான கொடுமைக்கு ஆளாக்கின கால கட்டம்.
துரைகளின் மற்றும் துபாஷிகளின் வாழ்க்கை படு சுவாரஸ்யமானதாக இருந்திருக்கிறது.
துரை வரும்போது என்ன பரபரப்பு! முதலில் அந்த பியூன் என்பவன் “நவுரு நவுரு, துரை வந்தாச்சு” என்று விரட்டிக்கொண்டே போக, பின்னால் குமாஸ்தாக்கள் கையில் பேப்பர் கட்டுக்களுடன், “நிக்காதய்யா வழியில! துரைக்கு கோவம். எதுனா பண்ணிப்பிடப்போறார்!”
அதன் பின் ஒன்றிரண்டு துபாஷிகள், அவர்களின் எடுபிடிகள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள்.
“என்ன அய்யிரே! என் காண்ட்ராக்ட் இன்னிக்கு கையெழுத்தாவுமா?”
“எது, அந்த பிலாத்தோப்பு நிலமா? நேத்தே தொர யாருட்டயோ கேட்டுக்கினு இருந்தாரு. நீங்க ஒண்ணும் நெஜத்துக்கு மாறா வெல சொல்லலியே?”
“கும்பினி வெல பதிமூணு ரூவாத்தான் போட்ருக்கேன். நெசமாலும் அது பதினேழுய்யா. உன்னாண்ட சொன்னேனே, ரெண்டு ரூவா காசும், மொந்தன்பழத்தார் ஒண்ணும் வீட்ல தரச்சொன்னெனே?”
“எனக்கு சரின்னா, அவாளுக்கு மனசு கனியணூமே!”
“பாத்து நீங்களும் சொல்லிடுங்க சாமி! அடுத்த மாசம் கல்யாணம் வருதாமே, நானே நேர்ல வர்ரேன்!”
“ஆஹா, கொடுத்து வெச்சிருக்கேன்னா!”
துரைக்கு முன்னால் அடிமையாய்க் கூனிக்குறுகும் துபாஷி, துரை அந்தாண்டை நகர்ந்ததும் ஒரு சமஸ்தான ராஜாவாய் மற்றவரைச் சிறுமைப்படுத்துவது வாடிக்கையாக நடந்தது.
‘டேய்! கேட்டே இல்ல தொர சொன்னத? பேசாம கிரயம் பண்ணிக்கொடுத்துட்டு வாங்கின்னு போ!”
“இல்லீங்க, எட்டு ரூவான்னு…..”
“என்னடா எட்டு ஏழுன்னு இழுக்கற? கேசவா! விஜாரி!”
“வாடா இங்க, உம்முகத்துக்கு மூணு ரூவா போறாதா? நம்ம அய்யாட்டயே எதுத்து பேசுவியா? தொர சொல்றதக் கேக்கல நீயி? நைன் ருபீஸ்ன்னாரே, நைன்னா என்ன, மூணுடா!”
“சரிங்க சரிங்க கைய விடுங்க, வலிக்குது”
“போ போ குடுத்ததை வாங்க்கிக்கினு நட, வேலயைப்பாரு”
அந்த துபாஷிக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து, அவனைச் சுற்றிய எடுபிடிக் கூட்டம், அடியாட்கள், துபாஷி போலப் பட்டு வேஷ்டியும் சில்க் ஜிப்பாவுமாய் அத்தர் மணக்க ஆள் படை என்று வலம் வரும் காட்சி கண்ணில் தெரிந்து, சாதாரணர்களை, நாமும் ஏதாவது செய்து துரையின் அருகில் போய்ச் சம்பாதிக்க மாட்டோமா என்று ஏங்க வைத்தது.
1840களில் வயநாட்டிலும் நீலகிரியிலும் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைகளிலும் காபி நன்றாக விளைந்து லாபம் தர ஆரம்பித்துவிட்டது. மேற்சொன்ன ஃபிஷெரும் ஔச்டர்லோனியும் பல ஏக்கராக்களில் காபி பயிரிட்டுக் கொழித்துக்கொண்டிருக்க, இருபதே வருடங்களில் நிலைமை மாறியது.
1865ம் வருடத்தில் நல்ல மழை அடித்துப் பெய்தது. எஸ்டேட்டை வலம் வந்த துரைகள் சிலாகித்து மேஸ்திரிகளிடம், இன்னும் நூறுபேர் வேலைக்கு வேண்டும் என உத்தரவிட்டனர். இங்கிலாந்துக்கு எழுதின கடிதத்தில் இந்த முறை இன்னும் 20 சதவீதம் கூடவே காபி ஏற்றுமதியாகும் என்று ஔச்டர்லொனி கடிதம் எழுதினார்.
ஆனால் போரர் (Borer) என்னும் பூச்சி பரவி பல எஸ்டேட்டுகளில் காபித் தோட்டங்கள் அழிந்தன. அதோடு இலைப்புழு புகுந்து அடித்த கொட்டத்தில் 1871ல் காபி சுத்தமாகக் கையை விரித்தது.
இந்த வருடத்தில்தான் தங்கப்புரளி மறுபடியும் கிளம்பியது.
மறுபடியுமா?
ஆம். 1831ம் ஆண்டே வயநாட்டுப் பள்ளத்தாக்குகளில் மாப்ளா என்று சொல்லப்படும் அடிமை வேலையாட்கள் உள்ளூர் நிலச்சுவான்தார்களால் அமர்த்தப்பட்டு தங்கம் எடுக்கும் முயற்சிகளைச் செய்து வந்தார்கள். அவர்களின் முறை பழங்காலச் சல்லடை முறையானதால் குந்துமணி குந்துமணியாகச் சில பொட்டுத் தங்கமே கண்ணில் பட்டது. ஆனால் அதற்கான கூலியோ, கிடைக்கும் தங்கத்தைவிட அதிகமாக இருந்தது. அப்போது அங்கு டூர் வந்த லெஃப்டினெண்ட் வூட்லி நிகொல்ஸன் இந்தத் தங்க சமாசாரங்களை ஆராய முற்பட்டார். அவர் வருவதை அறிந்த உள்ளூர் ஆசாமிகள் அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, தங்கம் எடுக்க உத்தரவாதம் தர, நிக்கோல்ஸன் கொஞ்சம் அவசரக்கோலமாக ஆராய்ந்து ஆகா ஓகோவென அறிக்கை கொடுத்துவிட்டார். இதை நம்பி அரசாங்கம் பல இயந்திரங்களைத் தருவித்து தங்கத்தேடலுக்கு ஆரம்ப மணி அடித்தாலும் சில மாதங்களிலேயே இந்தத் தேடலில் பைசா பேறாது என்பது புரிந்துவிட்டது. எனவே 1833ம் ஆண்டு அரசாங்கம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
1871ல் காபி ஏமாற்றிவிட, தோட்ட உரிமையாளர்கள் மறுபடி இந்தத் தங்கப்புரளியை சீரியஸாக எடுத்துக்கொண்டு இதில் இறங்கினார்கள். ப்ரோ ஸ்மித் (Mr.Brough Smith) என்னும் விற்பன்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டார். இந்த ப்ரோ ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்றையே ஒரு தனி அத்தியாயமாக எழுதலாம். ரத்தினச் சுருக்கமாக – 1846ல் சாதாரண க்ளார்க்காக இங்கிலாந்தில் கான்செட் இரும்பு கம்பெனியில் ஆரம்பித்த ப்ரோ ஸ்மித், 1853ல் மெல்போர்னுக்கு வந்தார். 12 வருடஙகளில் என்னென்னமோ செய்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகிவிட்டார். கூடவே கனிம சமாச்சாரங்களில் உஸ்தாத் என்று பெயரெடுத்தார். இவர் வயநாட்டுக்கு வந்து ஒன்றரை வருடம் தங்கி என்னத்தையோ ஆய்வெல்லாம் செய்து, இங்கு தங்க உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது என்று அறிக்கை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து பல கம்பெனிகளுக்கு ஆலோசகராகக் கொழிக்க ஆரம்பித்தார்.
குமாஸ்தாக்களும் பியூன்களும் அபார ரகசியங்கள் வைத்துக்கொண்டிருந்த காலம். நம்ம பயல்களின் மஹா அடிமைத்தனங்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே கும்பினிக்காரர்களை ஓரளவுக்கு ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. 1836லேயே இங்கிருந்த ஒரு ஆங்கில மாது தன் சகோதரிக்குக் கடிதத்தில் எழுதின விஷயம் இப்போது படித்தால் மறுபடி இங்கிலாந்துடன் சண்டைக்குப் போக வேண்டியிருக்கும்.
“ஆர்மகமும் சுப்பூவும் விருந்து முடிந்தவுடன் எங்கள் காலில் விழுந்து எழுந்தனர். ‘துரைசானி அம்மா! எங்களால் முடிந்த அளவு உங்களை உபசரித்தோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் அது எங்களின் அறியாமையால்தான். மரியாதைக்குறைவால் அல்ல. உங்களை நாங்கள் எம் தாயினும் மேலாகப் பாவிக்கிறோம்.’
சங்கீதம் என்று ஏதோ இசைத்தார்கள். நம் ஊரில் மரண ஊர்வலம் போல இருந்தது.
எல்லோரும் திருடர்கள். எல்லோரும் நடிக்கிறார்கள்.”
இந்த ஆர்மகமும் சுப்பூவும் இத்தனைக்கும் பணக்கார துபாஷிகள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் கும்பினி வெள்ளையர்களுக்கு குமாஸ்தாக்களும் பியூன்களும் இன்னுமே மனிதர்களாகவே படவில்லை. இவர்கள் இருப்பதையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அவர்கள் தத்தம் திட்டங்களைப் பற்றிப் பேசலானார்கள். அரைகுறை ஆங்கிலம் அறிந்து வைத்திருந்த நம் குமாஸ்தாக்களும் பியூன்களும் இந்த விஷயங்களை ஏதோ ராஜ ரகசியமாக குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பெருமை அடித்துக்கொண்டிருக்க, அரசாங்க செய்திகள் கசியத்தொடங்கின.
தங்கத் தேடலுக்குத் தோதாக தென்னிந்திய ஆல்ஃபா கோல்டு மைனிங் கம்பெனி நிறுவப்பட்டதிலிருந்தே பாரி அண்ட் கம்பெனி அதற்கு ஏஜண்ட்டானார்கள். எங்கடா சம்பாதிக்கலாம் என்று தேவுடு காத்துக்கொண்டிருந்த கும்பினி அதிகாரிகள் தத்தம் மச்சான், சகலைகளுக்கு எழுதின சுருக்கில் 41 கம்பெனிகள் இங்கிலாந்தில் ரெஜிஸ்தர் செய்யப்பட்டு 50 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங் முதலீடு செய்ய, இந்தியாவில் ஆறு கம்பெனிகள் செய்த முதலீடு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பவுண்டுகள். எல்லா கம்பெனிகளும் வயநாட்டை நோக்கி வர, அப்போது சில சாதாரணர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.
துரைமார்களுக்கும் கம்பெனி ஆசாமிகளுக்கும் கூழைக்கும்பிடு போட்டு இடம் காண்பிக்கிறேன், ஆள் தருவிக்கிறேன் என்று ஏஜண்டு வேலை செய்து பணம் பார்த்தார்கள். இதில் ஒரு பேக்கரி வைத்து நொடித்துப்போனவனும் சர்க்கஸில் கோமாளியாக இருந்தவனுங்கூட அடக்கம்! கூடவே பின்னி கம்பெனியும், பாரியும் அர்பத்னாட்டும் அந்த கம்பெனிகளுக்கான மானேஜிங் ஏஜன்சி எடுத்து ஆட்களை வயநாட்டிற்கு அனுப்பினார்கள். காபியும் அப்போது விலை சரிந்துகொண்டிருந்ததால், காபி தோட்ட முதலாளிகள் தங்கள் நிலத்தைத் தங்கம் தோண்ட விற்க ரெடியானார்கள். அதற்கு ஏகப்பட்ட போட்டி இருக்கவே நிலத்தின் விலை எகிறியது. ஆரம்பத்தில் 70 பவுண்டுக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலம் விரைவிலேயே 2600 பவுண்டு வரை ஏறியதாம்.
இந்த அழகில் சென்னையில் வியாபாரிகளிடையே ஏகப்பரபரப்பு.
மைசூர் மாகாணத்தில் எத்தனை சலுகைகள் தெரியுமா, நம்ம ப்ரெசிடென்ஸியில் கொடுக்கவில்லையென்றால் தொழில் எப்படி முன்னேறும் என்றெல்லாம் கூட்டம் போட்டுப்பேசி கும்பினியிடம் சலுகைகள் கேட்க, லண்டன் எப்போதும் போல ஈசானிய மூலையைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தது.
ஒவ்வொரு கம்பெனிக்கும் இந்த மூன்று ஏஜண்ட்டுகள் – பாரி, பின்னி அர்பத்நாட் – முழு வேலையையும் கவனித்தார்கள். மேஸ்திரிகள் இப்போது மண் தோண்ட ஆள் சேகரித்தார்கள். காப்பி தோட்டத்தில் இடுப்பொடிந்தவர்கள் இப்போது பள்ளம் நோண்டுவதில் முதுகெலும்பை முறித்துக்கொண்டார்கள். அந்த உழைக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் விழுந்த அடிகளும், சிந்திய ரத்தங்களும், பிறந்த குழந்தைகளும், அகாலமாக இறந்த ஆட்களும், சக்கையாக உபயோகப்படுத்தப்பட்ட பெண்களும்… ஒவ்வொன்றும் ஒரு கதையாகிப் போனது.
ஆல்ஃபா கம்பெனியின் பங்கு விஷமாய் ஏறி, பல கை மாறி, ஒவ்வொரு மாற்றலிலும் விலை ஏற்றம் கண்டது. இன்றும் நாம் பார்க்கும் அதே பங்கு மார்க்கெட் ரசாயன விலையேற்றத்திற்குச் சூடு கிளப்ப, வெகு சீக்கிரத்திலேயே அங்கே தங்கத்தேடல் குப்புறத் தலைவிழ்ந்தது. மிஞ்சி மிஞ்சிப் பார்த்ததில் ஒரு டன்னிலிருந்து நான்கு அவுன்ஸ் தங்கமே கிடைத்ததாம். இன்னொரு இடத்தில் 19 டன்னில் கிடைத்த தங்கம் 2 Dwts. அதாவது ஒன்றின் கீழ் ஒன்பது அவுன்ஸ் மட்டுமே. (அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 18.23 Dwts)
பெரும் பள்ளங்கள் தோண்டினதுதான் மிச்சம். ஸ்மித்தின் அறிக்கை படியெல்லாம் தங்கம் அப்படி ஒன்றும் அகப்பட்டுவிடவில்லை. தோண்டத் தோண்ட மண்ணும் சகதியும் தண்ணீரும்தான் கிடைத்தன. ஒரே ஒரு கம்பெனி 363 அவுன்ஸ் தங்கமும் இன்னொரு கம்பெனி 60 அவுன்ஸும் எடுத்ததோடு ரகளை முடிவுக்கு வந்தது.
இதை அறிந்தோ என்னவோ ப்ரோ ஸ்மித் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்னும் ரீதியில் நடித்து, நிறைய பணத்தைக் கவர்ந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஜூட் விட்டிருந்தார்.
அடுத்த சில நாட்களிலேயெ ஒவ்வொரு கம்பெனியாகக் கதவைமூடிப் பூட்டுப் போட்டார்கள். ஆசாமிகளுக்கு வேலை போனது. புல்பள்ளி கிடங்க நாடு நாஞ்சில் நாடு பிரதேசங்களில் கோச் வண்டிகள் நடமாட்டம் குறைந்து மறுபடியும் சோகையான ஆடுகளும் மாடுகளும் அழுக்கு மேல் துணி அணிந்த கிராமத்தார்களும் தெருவில் ஊடாட, துரைமார்கள் போக்குவரத்தும் நின்று போனது. எஸ்டேட்டுகளில் காபி பயிரிடல் மீண்டும் ஆரம்பிக்க, மேஸ்திரிகள் மறுபடியும் கிராமங்களுக்கு வந்து அடிமைகளைத் தேடிப் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தார்கள்.
ஏராளமான மனிதர்களின் உயிரையும் இன்னும் பலரது நல் வாழ்க்கையையும் காவு வாங்கிய பின்னர் தங்கத்தேடல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
மீண்டும் The Madras District Gazettier, The Nilgiris by W Francis……
“By 1906, at Pandalur, three or four houses, the old store, traces of race course survive; At Devala, were a grave or two; topping many of the little hills derelict bungalows and along their contours, run grass grown roads. Hidden under thick jungle are heaps of spoil, long forgotten tunnels used only by she-bears and panthers expecting an addition to their families and lakhs worth of rusting machinery that were never installed…..”