Posted on Leave a comment

சிலைத் திருட்டு – கடந்த காலத்தைக் கடத்துபவர்கள் | சுஜாதா தேசிகன்

To every man upon this earth
Death cometh soon or late
And how can man die better
Than facing fearful odds,
For the ashes of his fathers,
And the temples of his gods?

– Thomas Babington Macaulay, Lays of Ancient Rome

உலகில் எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம்
நம் முன்னோர்களையும், தெய்வத்தின் கோயில்களையும்
காக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு
அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

அந்தக் கவிஞன் பாடிய கோயில் தெய்வங்கள் இன்று பல நாடுகளில் சிதறி, பல கோயில்கள் காலியாக இருப்பது வருத்தமான விஷயம் என்பதைவிட வெட்கக்கேடான விஷயம்.

சமீபத்தில் நண்பர் எஸ்.விஜயகுமார் எழுதிய ‘The Idol Theif’ என்ற புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தை ஆர்டர் செய்தபின் ஒரு வாரத்தில் வந்தது. அந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தித்தாளில் சிலைக் கடத்தல், திருட்டு என்று செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன.

*
ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு படையெடுப்புகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று 1311, இன்னொன்று 1323. இரண்டாம் படையெடுப்பில் ஸ்ரீரங்கத்தின் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் காப்பாற்றப்பட்டு, 48 வருடம் பல இடங்களில் வாசம் செய்து திரும்பி வந்தார். காப்பாற்றப்பட்டதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுத்த விலை பிள்ளை ஸ்ரீலோகாச்சாரியார் என்ற ஆசாரியனை இழந்தது; ஸ்ரீவேதாந்த தேசிகன் பிணக் குவியல்களின் நடுவில் சுதர்சன சூரியின் சுதபிரகாசிகா என்ற ஓலைச் சுவடியையும் அவருடைய இரண்டு சின்ன பிள்ளைகளையும் பிணத்தோடு பிணமாகக் காப்பாற்றினார். நம்பெருமாள் கிடைக்கவில்லை என்று தெரிந்து முகமதிய படைகள் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்று குவித்தார்கள். இது ‘பன்ணீராயிரவர் குடிதிருத்திய பன்றி யாழ்வான் மேட்டுக் கலகம்’ என்று கோயிலொழுகில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*
எங்கள் வீட்டில் ஆழ்வார்கள் மூர்த்தி செய்ய விருப்பப்பட்டு பல இடங்களில் அலைந்து கடைசியாக சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியைக் கண்டுபிடித்தேன். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்ப மரபில் வந்தவர். இவரைத் தேடிக்கொண்டு கும்பகோணம் சென்றபோது அவர் வீட்டுக் கதவில் இவருடைய சிற்ப மரபின் பரம்பரை ‘குடும்ப மரம்’ அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அதை உன்னிப்பாகக் கவனித்தபோது இவர் மூதாதையர்கள் சோழ காலத்தவர்கள் என்று புரிந்தது. ராஜராஜசோழன் பெரியகோயில் செய்த சிற்பிகளுக்கும் இவர் பாரம்பரியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரிடம் சிற்பம் செய்யவேண்டும் என்றபோது தயங்கினார். “நியமத்துடன் பாரம்பரிய முறைப்படி சிற்பம் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்”. 3D பிரிண்டிங் காலத்தில் இந்த மாதிரி செய்ய இன்று யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

சிற்பங்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். முதலில் மெழுகில் ஒரு மாடல் செய்துவிடுவார்கள். அதைக் காவிரியில் கிடைக்கும் களி மண்ணால் மூடி உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி பிறகு அதில் உலோகத்தைக் காய்த்து ஊற்றி வடிவமைப்பார்கள். நான்கே வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், இதைச் செய்ய பல காலம் ஆகும். ‘Lost wax techinque’ என்று கூகிளில் தேடிப் பார்த்தால் இதன் கஷ்டம் தெரியும்.

“ஒவ்வொரு சிற்பத்தை வடிக்கும் முன்பு, நாள், நட்சத்திரம் பார்த்து பசுவிற்குப் பூஜை… உலோகத்தை ஊற்றும் போது அது ஒழுங்கான சிற்பமாக வர வேண்டும்… கிட்டதட்ட பிரசவம் மாதிரி” என்றார் அந்த எண்பது வயது சிற்பி.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பெருமாளின் விக்கிரகம் அளவில் பெரியதா, சிறியதா, தங்கமா, செப்பா என்று நினைத்தால் அது என் தாய் தந்தையரை ஆராய்வது போன்ற செயலாகும். ஆனால் இன்று நாளிதழ்களில் ஐம்பொன் சிலை கடத்தல் என்று செய்தி பெட்ரோல் விலை ஏற்றம் என்பது போல சாதாரண விஷயமாகிவிட்டது. நம் பாரம்பரியத்தை எப்படிக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி இது.

கோயில்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் பொக்கிஷம். நமது செழிப்பான கலாசாரத்தின் எடுத்துக்காட்டுகள்.

நம் வரலாறு எழுதப்பட்டது, திருத்தப்பட்டது; ஆனால் நம் பாரம்பரியம் மாறவேயில்லை. பல படையெடுப்புகள் நிகழ்ந்தது. பலவற்றை இழந்தார்கள். மதம் மாற்ற முயன்றார்கள். ஆனால் மக்கள் ஹிந்து மத நம்பிக்கையை மட்டும் என்றுமே இழக்கவில்லை.

சில வருடங்களுக்கு என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது ஊரில் அவர் தந்தை அர்ச்சகராக இருக்கும் கோயிலில் சிலைக் கடத்தல் எப்படி நடந்தது என்று விவரித்தார். சிலைக் கடத்தல் எப்படி நடக்கிறது என்று மேலும் தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று தேடியபோது ‘The Plunder of Art’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் தமிழ்நாட்டுச் சிலைகள் மட்டுமல்ல, நம் நாட்டுப் பொக்கிஷங்கள் பல எப்படித் திருடப்படுகிறது என்று படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

கலைப் பொக்கிஷங்கள் என்றால் உடனே நாம் சிலைகளை மட்டுமே யோசிக்கிறோம் – சிலைகள் தவிர, நகை, ஓவியத்திரை (tapesteries), ஓவியங்கள், மரச்சாமான்கள், சிறு பொருட்கள் என்று பல பொருட்களும் அதில் அடங்கும்.

ஸ்ரீரங்கத்தையும் மஹாபலிபுரத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்த அற்புதங்களை முதல் முதலில் தீடீரென்று நேரில் பார்க்கும்போது அவருக்கு ஒரு ‘cultural shock’ ஏற்படுவது இயற்கையே. ஏனென்றால் இந்த மாதிரி அவர்கள் நாட்டில் கனவில்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தப் பொக்கிஷங்களுக்குப் பக்கத்தில் நாம் காலி ஜூஸ் பாட்டிலைப் போடுவது அவருக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

1970 – 1988 வரை நம் நாட்டில் 3,500 கலைப் பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன. கணக்கில் வந்தவை இவை. வராதவை இன்னும் நிறைய. இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்றபோது நமது கலைப் பொக்கிஷங்கள் பல தெருவில் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக, அஹோபிலத்தில், ராமேஷ்வரம் திருப்புள்ளாணியில், காஞ்சிபுரத்தில் என்று எல்லா இடங்களிலும் சாதாரணமாகச் சாலையில் கிடக்கிறது. இந்த ஊருக்குச் சென்று பல கலைப் பொருட்களை ஒரு கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வந்துவிடலாம்.

ஸ்ரீரங்கம் உட்பட பல கோயில்களில் கல்வெட்டுகளை உடைத்து அதன் வழியே வயரிங் செய்வது, சுவரின் மீது போஸ்டர் ஒட்டுவது என்று நம் பாரம்பரியத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு முறை சுஜாதாவின் தம்பியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா சென்றபோது அங்கே சுற்றுலாப் பயணிகளிடம் அருகில் இருக்கும் கோயில்களில் உள்ள கலைப் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருந்தார்கள் என்று சொன்னார்.

கலைப் பொருட்களின் திருட்டு 1936ல் ஆரம்பித்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டாக்டர் டர்டீஸ் (Dr. Durdaise) என்ற பிரஞ்சுக்காரர் பாண்டிச்சேரியிலிருந்து பல கலைப் பொருட்களை உள்ளூர் ஆட்களை வைத்துக் கடத்தினார் என்று தெரிகிறது. 1937ல் மிஸ் பியர் குஸ்டன் (Miss Pierre Gustan) கலைப் பொருட்களை ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு, ஹிமாச்சல், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிஸா, ஆந்திரா என்று இந்தியாவில் எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. கஜுராஹோ கோயிலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் பல மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இன்றும் ஏதாவது ஒரு கோயிலில் சிற்பங்கள் திருடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

புத்தகத்தை எழுதிய விஜயகுமார் தன் வலைப்பதிவில் சிற்பங்களைப் படத்துடன் எழுத ஆரம்பித்தபோது அவருக்குச் சில ஆச்சரியங்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய சிற்பம் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை எப்படி திருடப்படுகின்றன, எந்த வழியாகப் போகிறது, யாரிடம் போகிறது, நடுவில் ஏஜண்ட் யார் என்று நிஜ சம்பவங்களைப் படிக்கும்போது, உண்மை கற்பனையைவிட விநோதமானதாக இருக்கிறது.

மிக நேர்த்தியான நடராஜர், சிவகாமி சிலைகள், பல நூறு கிலோ எடையிலானவை. இதைக் கடத்த சாமர்த்தியம் தேவை இல்லை; நம் நாட்டில் கலாசாரம் தெரியாதவர்கள் இருக்கும்வரை இது தொடந்துகொண்டேதான் இருக்கும்.

புத்தகத்தைப் படிக்கும்போது இது சுபாஷ் கபூர் ‘திருட்டு’ வாழ்க்கை வரலாறு என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சுபாஷ் கபூர் என்ற ஒரு மனிதர் மாதிரி இன்னும் எவ்வளவு கபூர்கள் இருக்கிறார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இந்த கலைப் பொருள் சேகரிப்பு என்னும் ஒரு விதமான பணக்காரப் பொழுதுபோக்கு ஒரு எல்லைக்கு மேல் செல்லும்போது அங்கே குற்றம் நடைபெறுகிறது.

சுபாஷ் கபூர் விற்ற கலைப் பொக்கிஷங்களை எல்லா அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம். 2011ல் அவர் ஜெர்மனி வந்தபோது அவரை இண்டர்போல் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சிலைத் திருட்டுக்குக் கைது செய்தது. அமெரிக்கா அவருடைய கிடங்கைச் சோதனை செய்தபோது கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலர் மதிப்பு மிக்க பல கலைப் பொருட்கள் கிடைத்தன. கபூர் இந்தத் தொழிலில் கடந்த நாற்பது வருடங்களாக இருக்கிறார். கூலிக்கு வேலை செய்யும் சாதாரணத் திருடர்கள் முதல் சில காவல்துறை அதிகாரிகள், அருங்காட்சியகத்தில் வேலை செய்பவர்கள், கல்வியாளர்கள், அழகிகள் என்று இந்தக் கொள்ளைக்குப் பலர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள்?

இவ்வளவு சிலைக் கடத்தலைப் பார்க்கும்போது அரசியல் தொடர்பு இல்லாமல் இதை எல்லாம் செய்திருக்கவே முடியாது. புத்தகத்தில் இதுபற்றி இல்லை.

மோடி அரசு வந்த பின்தான் இந்தியாவிற்குச் சிலைகள் திரும்ப வரும் மகிழ்ச்சியான செய்தியே வருகிறது.

புத்தகத்தில் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையும் மீண்டும் கிடைக்கப்பெற்றோம் என்று படிக்கும்போதே நம் மனதுக்கு ஒரு வித நிம்மதி ஏற்படுகிறது. புத்தகத்தில் சுத்தமல்லி சிலைகளின் மதிப்பு ரூ34,00,00,000 என்று போடப்பட்டிருக்கிறது. என்னுடைய கருத்து இந்தச் சிலைகளுக்கு மதிப்பே கிடையாது; விலைமதிப்பற்றது!

பண்டையப் பொக்கிஷங்களும், நினைவுச்சின்னங்களும்தான் நம் பாரத நாட்டின் ஆன்மா. நமது வரலாற்றையும் கலாசாரத்தையும் அவை பிரதிபலிக்கின்றன. இவற்றை 3D பிரிண்டர் மூலம் கூட மீண்டும் கொண்டு வர முடியாது.

விஜயகுமார் செய்யும் செயலை அரசு செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லா இடங்களிலும் உள்ள பொக்கிஷங்களை ஆவணப்படுத்த வேண்டும். இதைச் செய்தாலே பாதி வேலை முடிந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் இதைச் செய்வது மிகச் சுலபம். அடுத்து சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 49வது ஷரத் இப்படி சொல்லுகிறது

Article 49 [Protection of monuments and places and objects of national importance]

It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interest, declared by or under law made by Parliament to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.

புத்தகத்தில் சிலைக் கடத்தலைவிட என்னை அதிர்ச்சியாக்கியது தமிழ்நாடு அரசு 1993ல் இந்திய தண்டனைச் சட்டம் 380 பிரிவில் கொண்டு வந்த திருத்தம்தான்.

380 பிரிவு சட்டம் இப்படி இருக்கிறது:

“Whoever commits theft in any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwelling, or used for the custody of property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1993ல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பின் வரும் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்:

Whoever commits theft in respect of any idol or icon in any building used as a place of worship shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than two years but which may extend to three years and with fine which shall not be less than two thousand rupees.

அதாவது வீட்டில் திருடினால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை. அதே கோயிலில் திருடினால் இரண்டே வருடம்தான் தண்டனை. கூட இரண்டாயிரம் ரூபாய் அபராதம். இந்தத் திருத்தம் இன்றும் இருக்கிறது. அவர்களைக் குறை சொல்ல முடியாது, நாம் ஓட்டுப் போட்டு வந்தவர்கள்தானே. அதனால் நமக்கும் ஒரு விதத்தில் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு.

சிலைக் கடத்தலுக்குத் தனிப் படை என்று செலவு செய்வதைவிட இந்த மாதிரி திருத்தங்களைக் கொண்டு வராமல் இருப்பதே மேல்.

நண்பர் விஜயகுமார் முயற்சியால் 2000 – 2012 வரை 26 சிலைகளை இந்தியா திரும்ப பெற்றிருக்கிறது. இதற்காக நாம் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

புத்தகத்தின் கடைசியில் சொல்லும் விஷயம் மிக முக்கியமானது:

“சில வருடங்கள் முன் புகழ்பெற்ற ஏல நிறுவனம் ஒன்று என் ஆராய்ச்சிக்கு ஸ்பான்சர் செய்வதாகச் சொன்னார்கள் அதைத் தவிர அவர்களுடைய அருமையான நூலகத்தில் எனக்கு இலவச அனுமதி அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களிடம் இருக்கும் பழங்காலத்துக் கலைப்பொருட்களை நான் ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.

நான் இலவசமாகச் செய்து தருகிறேன் ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை அவர்களிடம் முன் வைத்தேன் அது, ‘பொருட்கள் எங்கிருந்து தருவித்தார்கள் என்று சொல்ல வேண்டும். சந்தேகப்படும்படி ஏதாவது பொருட்கள் இருந்தால் ஏழு நாட்களுக்குள் அந்தக் கலைப் பொருளை சப்ளை செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’.

அதற்குப் பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர்கள் வக்கீலுக்கு என் மறுப்பைத் தெரிவித்து நன்றிக் கடிதம் எழுதினேன். அதில் கடைசியில் ‘Not every Indian is for sale!’ என்று முடித்திருந்தேன்.”

அடுத்த முறை பணக்கார ஹோட்டலிலோ அல்லது சாலை ஓரத்திலோ நம் கலைப் பொக்கிஷங்களைப் பார்த்தால் உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வரிகளை படித்துப் பாருங்கள்.

The Idol Thief, பக்கங்கள் 248, பதிப்பகம்: Juggernaut.

Leave a Reply