Posted on Leave a comment

சிலைத் திருட்டு – பதற வைக்கும் ஆவணம் | ஆமருவி தேவநாதன்

விஜயகுமார் என்றொரு சிங்கப்பூர் வாழ் இந்தியர், பாரத தேசத்தின் தொல்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வருவதுதான் ‘The Idol Thief’ நூலின் கரு. நல்ல திரைக்கதையாக உருப்பெறும் நிகழ்வுகள், விறுவிறுப்பான கதையோட்டம், பதறவைக்கும் உரைநடை மற்றும் நிகழ்வுகள், மனதைத் தொடும் முடிவு என்று செல்லும் கதை பெரும் வசூலை அள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்று. திரைப்படத்தின் துவக்கத்தில் ‘இதில் வரும் சம்பவங்கள் கற்பனை அன்று, பாத்திரங்களும் அப்படியே. குற்றவாளிகளாகக் குறிப்பிடப்படுபவர்கள் தற்போதும் உயிருடன் இருப்பவர்களே. அவர்கள் மனது வருத்தமடைந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை’ என்று ஒரு அறிவிப்பு செய்துவிட்டுப் பின்னர் திரைப்படமாக வெளியிடலாம். ஏனெனில், நடந்தவை அனைத்தும் உண்மை, பாத்திரங்கள் அனைவரும் நிஜமான மனிதர்கள், பலர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர்கள்.

விஜயகுமார் கல்வியால் கணக்கர், தொழிலால் தனியார் கப்பல் துறை அதிகாரி, தன்முனைப்பால் கல்வெட்டு / சிற்ப ஆய்வாளர். இந்தக் கலவையால் உலகெங்கிலும் அருங்காட்சியகங்களில் உள்ள பாரதத்தின் பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுக் கொண்டு வருகிறார். எப்படிச் செய்தார், என்னென்ன செய்தார், எந்தெந்த குற்றவாளிகளைப் பிடிக்க உதவினார், எந்தெந்த தெய்வங்கள் மீண்டும் பாரதம் வந்துள்ளன என்பது பற்றிய விளக்கமே இந்த நூல்.

இது ஒரு கற்பனைக் கதை என்றால் கதையின் வடிவம், எழுத்து நேர்த்தி, பாத்திரப் படைப்பின் நிலை என்று விரிவாக ஆய்வு செய்யலாம். ஆனால், இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. மூன்றாம் மனிதரின் அனுபவங்கள் குறித்த தொகுப்பு என்றாலாவது நூலாய்வு / திறனாய்வு என்று எழுதித்தள்ளலாம். ஆனால், இது தன்மை நிலையில் இருந்து, தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதென்பதால், நூலாய்வு என்று இல்லாமல், கருவைப் பற்றியே பேசவேண்டியுள்ளது.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலால் ஈர்க்கப்பட்ட விஜயகுமார், நூலில் கூறப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று கதைக்களனில் மூழ்குகிறார். தன்னிலை மறந்து, கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும் கற்கத் துவங்குகிறார். அதன் மூலம் இந்தியச் சிற்பங்களை எப்படி அறிந்துகொள்வது என்பதில் தேறுகிறார். சுயமாகக் கற்றுக் கொண்ட சிற்ப சாஸ்த்ரம் உந்த, ஒரு விசையைப் போலச் செயல்பட்டு உலக அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியக் கலைப் பொக்கிஷங்களைப் பற்றி ஆராய்கிறார். அவை பற்றிய ‘முன் கதைச் சுருக்கம்’ (Provenance reports) இருக்கிறனவா என்று தேடுகிறார். பல கலைக் கூடங்களில் உள்ள சிற்பங்களுடைய முன் கதைச் சுருக்கங்களில் ஓட்டைகள் இருப்பதைக் கண்டு, அருங்காட்சியகங்களின் அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்புகிறார். பதில்கள் வராததாலும், வந்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாலும் அச்சிற்பங்களைப் பற்றி இந்தியக் காவல் துறையிடம் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை முதலியவற்றைக் குடைகிறார். சிலைகள் கடத்தப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன. அரசதந்திர உத்திகளின் மூலம் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ள நாட்டின் அரசாங்கங்களுடன் போராடி, அப்பொக்கிஷங்களைத் திரும்பப் பாரதத்திடம் ஒப்படைக்க முயற்சிகள் எடுத்து வெற்றியும் காண்கிறார்.

மேற்சொன்ன முயற்சிகளில் சிலைகள் திரும்பக் கிடைத்த கதைகள், அந்நிய நாட்டுக் குற்றவாளிகள் சிறைபிடிக்கப்பட்ட கதைகள், அவர்கள் இந்தியச் சிறைகளில் இருந்து வெளிவர மேற்கொண்டுள்ள தவறான முயற்சிகள், தமிழக அற நிலையத் துறையின் அலட்சியங்கள், தமிழகக் காவல் துறையின் சிலை காப்புப் பிரிவின் செயல்பாடுகள், தனிப்பட்ட வெளிநாட்டுப் புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் பணிகள், அமெரிக்க புலனாய்வுத்துறையின் உதவிகள் என்று பலதரப்பட்ட பிரமிக்க வைக்கும் செய்திகளைக் கொண்ட திகில் திரைப்படம் போன்று செல்கிறது இந்த நூல்.

நூலில் விவரிக்கப்பட்டுள்ள பல செய்திகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், அற நிலையத் துறையின் அலட்சியம் பிரதானமாகத் தெரிகிறது. சுத்தமல்லி என்னும் சோழர்கால வெண்கலச் சிலைகள் உள்ள கோவிலில் சிலைகள் களவாடப்பட்டுவிட்டன என்பதை அறியாமலேயே அந்தக் கோவிலுக்குப் பாதுகாப்புக் கதவிற்கு அற நிலையத் துறை ஏற்பாடு செய்கிறது. காவல் துறையில் உள்ள சில கறுப்பாடுகள் சிலைக் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகள் குறித்த செய்திகளைக் குற்றவாளிகளுக்குக் கசியவிடுவது மனதைப் பதைபதைக்கச் செய்து, இவற்றைத் தடுக்க முடியாத நமது கையாலாகாத்தனத்தை முகத்தில் அறைந்தது போல் சொல்லிச் செல்கிறது இந்த நூல்.

இந்நூலின் மூலம் சுத்தமல்லி, ஶ்ரீபுரந்தான், பழுவூர் முதலிய சோழர்காலச் சிற்றூர்களில் நடந்த கொடும் சிலைக் கொள்ளைகள், சிலைகள் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு, மீட்டெடுப்பில் அளப்பரிய சாதனைகள் ஆற்றிய மாந்தர் என்று பல செய்திகள் மிக நுணுக்கமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டு CERN என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனம் தனது நுழைவாயில் முகப்பில் நடராஜர் சிலையொன்றை நிறுவியுள்ளது. பிரபஞ்ச உருவாக்கம், வளர்ச்சி, அழிப்பு, மீட்டுருவாக்கம் இவற்றைச் சித்தரிப்பதான நடராஜர் சிலை, பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கைகள் எதுவும் நிலவாத ஐரோப்பிய தேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. நடராஜர் சிலை தத்துவத்தை மறைந்த ஆங்கிலேய எழுத்தாளர் அல்டோஸ் ஹக்ஸ்லி வியந்து போற்றுகிறார். ஆனால், நடராஜர் சிலையில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய அவரது இடது கையை வெட்டி எடுத்துச் சோதித்துள்ள கயமை நிறைந்த தமிழ்நாட்டின் அறிவின்மையையும், திராவிட அரசியல் நம் உள்ளங்களில் இருந்து கழற்றியுள்ள ஆன்மீக உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது நூல்.

ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம், திருமாலைப் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்று ஐந்து நிலைகளில் வழிபடச் சொல்கிறது. கலியுகத்தில் பெருமாள் ‘அர்ச்சாவதாரம்’ என்று விக்ரஹ வடிவில் அவதாரம் செய்துள்ளான் என்றே போற்றுகிறது. அவ்வளவு பெருமைகள் வாய்ந்த இறைத் திரு உருவங்களை வெறும் உலோக விற்பனைக்காகவும், வெளி நாடுகளில் பெரும் பொருள் ஈட்டும் கலைப் பொருட்களாகவும் விற்பனை செய்யும் நிலையில் நமது கல்வி முறை நமது ஆன்மீக அறிவை மழுங்கச் செய்துள்ளதையும் நூல் சொல்லாமல் சொல்கிறது.

சிலைகள் மீட்பு குறித்துப் பெரிய உதவிகள் செய்துள்ள அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரியை நம்மால் மறக்க முடியாமல் செய்துவிட்டார் ஆசிரியர். இந்திய அரசு தனது உயரிய விருதுகளை விஜயகுமாருக்கும் அந்த அமெரிக்க அதிகாரிக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மனம் ஏங்கச் செய்கிறது இந்த நூல்.

எந்த நடராஜர் சிலையையும் சிந்தனை இல்லாமல் கடந்து போக முடியாமல் செய்துவிட்டார் ஆசிரியர். இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் The Idol Thief.

Leave a Reply