2002ல் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் அர்த்தநாரீஸ்வரருடன் சேர்த்து ஏழு சிற்பங்கள் ‘பழுதடைந்துள்ள’ காரணங்களால் அகற்றப்படுகின்றன. அவை கோவிலுக்குள் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக அவற்றைப் போன்ற மூன்றாம் தரச் சிற்பங்கள் செய்யப்பட்டுக் கோவிலில் வைக்கப்படுகின்றன. 2004ல் உண்மையான பழமையான அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தால் மிகப்பெரிய தொகைக்கு ($300,000) வாங்கப்படுகிறது. பிரத்தியங்கா தேவி என இன்று அறியப்படும் சரபனிமூர்த்தி மற்றொரு அருங்காட்சியகத்தால் ஜூன் 1 2005ல் மற்றொரு கொழுத்த தொகைக்கு ($328,244) வாங்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறையில் தொடங்கி காவல்துறை வரை எவருக்கும் இந்த உண்மையான சிற்பங்கள் காணாமல் போனது குறித்து எதுவும் ‘தெரியாது.’ ஆனால் ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களிடம் இந்தச் சிற்பங்களையெல்லாம் 1971லேயே வாங்கிவிட்டதாக ‘சிறப்பான’ ஆவணத் தரவுகள் இருக்கின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு மனிதர் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார். பகல் நேரங்களில் அவர் கப்பல் கம்பெனி ஒன்றில் மேலாண்மை அதிகாரி. இரவு நேரங்களில் அவர் தம் இணையத் தளம் மூலமாக பாரத நாட்டின் ஆன்மிகக்-கலை பொக்கிஷங்கள், அவற்றின் நிலை ஆகியவற்றைத் துப்பறியும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவார். 2013ல் அவர் இந்த அர்த்தநாரீஸ்வரரைப் பார்த்திருக்கிறார். அதாவது உண்மையான அர்த்தநாரீஸ்வரரை. அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தின் அருகே உள்ள கோவில் விருத்தாசலம் கோவில்.
விருத்தாசலம் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரரின் தற்போதைய சிற்பம் கிடைக்குமா? தனது வலைப்பதிவில் கேட்கிறார். கிடைக்கிறது. பார்த்ததும் நம் துப்பறிவாளரின் கண்களில் தெளிவாக அது போலி என்பது தெரிந்து விடுகிறது. மூலச் சிற்பம் கோவிலில் குறைந்தபட்சம் 1973-74 ஆண்டுகளிலாவது இருந்தது என்பதற்கு ஆதாரம் வேண்டும். ஏன்? 1972ல்தான் இந்திய அரசாங்கம் ஒரு தடையைக் கொண்டு வந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பழமையான எந்தச் சிற்பமும் இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டால் அதனை வாங்கியவரிடமிருந்து இந்தியா அந்தச் சிற்பத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் – எந்த ஈடுதொகையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவேதான் ஆஸ்திரேலிய அருங்காட்சியக ஆவணங்களில் வாங்கப்பட்ட ஆண்டுகள் இந்த ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதில் பிரத்யேகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் உள்ள ஆவணங்களின் சரிபார்ப்பு தொடங்கி அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் விருத்தாசலத்திலிருந்து 2004ல் அபகரிக்கப்பட்டதுதான் என்பது வரை நமது சூப்பர் ஹீரோவும் அவரது உதவியாளர்களுமாக நிரூபிக்கிறார்கள். இறுதியில் வேறு வழியே இல்லாமல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரரை இந்தியாவிடம் திரும்பக் கொடுக்கிறது. ரொம்ப சுருக்கமாக சுவாரசியமில்லாமல் இங்கே சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தை, இப்புத்தகத்தை வாசித்தால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
சூப்பர் ஹீரோ நூல் ஆசிரியர் விஜயகுமார். அவர் தன்னை சூப்பர் ஹீரோ என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் சொன்னால் அவர் தன்னைத் துருத்திக்கொண்டு காட்டவே இல்லை. நூலில் அவரும் வருகிறார் என்பது போலவே தன்னைச் சுருக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையான சர்வதேச ஹீரோக்களுக்கு ‘உலகநாயகனே’ என்றோ எவரும் ஊளையிட கோமாளித்தனம் செய்துகொண்டோ அல்லது ‘வந்துட்டேன் பாரு’ என்று வெத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்டைல் என்கிற பெயரில் குரங்குச் சேட்டை செய்துகொண்டோ இருக்கவேண்டிய அவசியமில்லை.
விஜயகுமார் தமிழர்களின் பொக்கிஷம். விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபுரந்தன் நடராஜர் என நீளும் பட்டியலையும் அவற்றை எல்லாம் மீட்க விஜயகுமார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளையும் படிக்க படிக்க ரத்தம் கொதிக்கிறது.
பழமையான கலைப்பொருட்களுக்கான திருட்டுச் சந்தையும் அவற்றைக் கடத்தி விற்கும் மாஃபியாக்களும் உலகமெங்கும் செயல்படுகின்றனதான். ஆனால் இந்தியாவில் மட்டும்தான், அப்படிப்பட்ட பழமையான கலைப் பொருட்கள் அகழ்வாராய்ச்சிக் களங்களிலிருந்தோ அல்லது அருங்காட்சியகங்களிலிருந்தோ மட்டும் திருடப்படுவதில்லை. இங்கே, தமிழ்நாட்டில் மட்டும், இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறுகளில் மிகக்கொடுமையான படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் தாண்டி இன்னும் விளக்கேற்றப்படும் கோவில்கள். அங்கே உயிர்த் தன்மையுடன் திகழும் நம் தெய்வத் திருவிக்கிரகங்கள் – அவை திருடப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு அங்கே உள்ள மிகப்பெரிய உயர்தர ஹோட்டல்களின் மதுபான விடுதிகளில் மாமிச உணவகங்களில் கலைப்பொருட்களாக அல்லது மிக மிஞ்சிய செல்வந்தர்களின் வீட்டு வரவேற்பறைகளில் அலங்காரப் பொருட்களாக நிற்க வைக்கப்படுகின்றன. மேற்கத்திய அருங்காட்சியகங்களில் எவ்விதப் பூஜையும் மரியாதையும் இல்லாமல் கலைப்பொருட்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த அவலங்களைச் செய்ய இந்தியாவில் எல்லாத் தளங்களிலும் ஆட்கள் இருக்கிறாரகள்.
சட்டம், அரசு அமைப்புகள், அரசு அதிகாரிகள், உள்ளூர்த் திருடர்கள், இடைத்தரகர்கள், காவல்துறையில் சில திருட்டு ஆடுகள். அரசியல்வாதிகள், வர்த்தக புரோக்கர்கள் என அனைத்துத் தளங்களிலும் கோவில்களின் திருவிக்கிரங்களைக் கொள்ளையடிக்க என்றே ஒரு செயல்முறை அமைப்பாக அனைத்தும் இயங்குகின்றன என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார் விஜயகுமார்.
சட்டம் என்னய்யா செய்தது என்கிறீர்களா? விஜயகுமார் விளக்குகிறார். இந்தியத் தண்டனைகள் சட்டத்தில் 1993ல் 380ம் பிரிவில் தமிழ்நாட்டு சட்டமன்றம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஏதாவது வீட்டுக்குள் புகுந்து திருடினால் ஏழு வருடம் வரை கடுங்காவல் தண்டனை, அதற்கு மேல் அபராதமும் வரலாம். ஆனால் கோவிலுக்குள் புகுந்து திருடினால் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனை – அபராதம் குறைந்தது 2,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் நீதியரசர் கருதினால் இந்த இரண்டு ஆண்டுகளையும் கூடக் குறைத்துக் கொள்ளலாம்.
இன்றைக்கும் இந்தச் சட்டத்திருத்தம் அப்படியே இருக்கிறது என்கிறார். அதாவது கோவிலில் கலைச்செல்வங்களைத் திருடுகிறவர்களை (இவர்கள் சர்வதேச சிலைத் திருட்டு மாஃபியா வலையில் இறுதிக் கண்ணி) காவல்துறை பிடித்தால் கூட அவர்களுக்குக் கிடைக்கும் ‘ஊதியத்துடன்’ ஒப்பிடுகையில் அவர்களின் தண்டனை என்பது நேருவின் ஜெயில் வாசம் போல ஒரு சுற்றுலா விடுமுறையாகத்தான் இருக்கும். ஆனால் இவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ பல்லாயிரங்களிலிருந்து சில லட்சங்கள். ஆனால் இந்த ஊதியம் கூட இந்தியாவிலிருந்து செயல்படும் இடைத்தரகனின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. அது பல லட்சங்களிலிருந்து சில கோடிகள் வரை. அதுவும் இறுதியில் நியூயார்க்கில் இருந்து கொண்டு சிலைகளை சர்வதேச சந்தையில் விற்கிறானே அவனுக்குக் கிடைக்கும் பணத்துடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை – பல்லாயிரம் தொடங்கி கணிசமான மில்லியன் டாலர்கள்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படும் காவல்துறைப் பிரிவு எவ்வித வசதிகளும் இல்லாத, வேண்டுமென்றே பலவீனமாக்கப்பட்ட பிரிவு என்பதையும் விஜயகுமார் காட்டுகிறார்.
சுபாஷ் கபூர் என்கிற ‘பிக் பாஸ்’ அவனுடைய முன்னாள் காதலி, இந்திய இடைத்தரகர்களான சஞ்சீவ் அசோகன், தீனதயாளன் (திருட்டுத் தரகனுக்குக் கிடைத்த பெயரைப் பாருங்கள்!), சிலைத் திருட்டுப் பிரிவில் இருந்த காதிர் பாட்சா, இது போக கலையுலக மேதாவிகள், மேற்கத்தியச் சந்தையின் ‘பெரிய மனிதர்கள்’ – அப்பட்டமான திருட்டுத்தனம் செய்தாலும் ஆவணங்களைச் சரியாக வைத்துக் கொள்ளும் நிபுணர்கள் என ஒரு பெரிய வலைப்பின்னலை தோலுரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
புத்தகம் ஒரு சரித்திர காட்சியின் விவரிப்புடன் தொடங்குகிறது. எப்படி தெய்வ விக்கிரங்களை விஸ்வகர்ம குலத்தினரும், அர்ச்சகர்களும், ஊர் மக்களும் இணைந்து படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்து வைத்தனர்; எப்படிச் சித்திரவதைகளையும் மீறித் தங்கள் உயிரையும் உடலையும் துறந்து நம் தெய்வங்களை நம் முன்னோர்கள் பாதுகாத்தனர் என்பதைத் தத்ரூபமாக விவரிக்கிறார். ‘மீண்டும் கோவில் வந்தேறத் திருவுளம் கொள்ளும் வரை இங்கே பாதுகாப்பாக இருங்கள்’ என இறைவனிடம் வேண்டி அவ்விக்கிரகங்களை அவர்கள் பத்திரமாக வைக்கிறார்கள். அதே பிரார்த்தனையுடன் புத்தகத்தை முடிக்கிறார் விஜயகுமார். கண்களில் நீர் திரையிட கோபமும் இயலாமையும் ஒரு புறம்; விஜயகுமார், செல்வராக், ‘இண்டி’ ஆகியோரிடம் நன்றி மறுபுறம் என இரு அதி தீவிர உணர்ச்சி நிலைகளுடன் புத்தகம் ஒரு தொடர்கதையாக முடிகிறது.
கோவிலின் மீதான மதிப்பும் மரியாதையும் அதைவிட முக்கியமாக அங்கிருக்கும் தெய்வத் திருவுருவங்களிடம் அன்பும் கொண்ட ஒரு அமைப்பை நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்திருந்தார்கள். சமூகத் தேக்கநிலையால் அதில் புகுந்துவிட்ட சில தீமைகளுக்காக அந்த அமைப்பையே நாசமாக்கிவிட்டு அதைவிடக் கேடுகெட்ட ஒரு அமைப்பை உருவாக்கி நம் கோவில்களை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு இந்து அறநிலையத்துறை அதிகாரியையும், ஒவ்வொரு கோவில் தொடர்பான ஊழியரையும், கோவில் திருவிக்கிரங்களையும் அதன் புனிதத்தையும் தம் உயிரினும் மேலாகப் பாதுகாப்பதாக அந்தந்த ஊர் மக்கள் முன்னிலையில் தம் குழந்தைகள் மீதும் தம் குடும்பத்தின் மீதும் சத்தியம் செய்ய வைக்கும் ஒரு சடங்கை உருவாக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என் நினைவில் உடனே வந்தது மானம்பாடி கோவில்தான். அங்குள்ள கோவில் விக்கிரகங்கள், சிற்பங்கள் உடைக்கப்பட்டு எவ்விதக் காவலும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு என்னென்ன போலிகள் உருவாகப் போகின்றனவோ, அவை எந்த அமெரிக்க ஹோட்டல் லாபியிலோ அல்லது எந்த ஆஸ்திரேலிய அருங்காட்சியகக் கூடத்தில் நிற்கப் போகின்றனவோ தெரியவில்லை. இந்தச் சிலைகள் விற்ற காசில் முதுபெரும் கிழத் தாரகைகளின் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அதில் இந்தியாவும் இந்து மதக் கடவுளரும் பழிக்கப்பட அதற்கும் விசிலடித்து இந்துத்துவர்களே முதல் காட்சி பார்த்துப் புளகாங்கிதப்பட்டு ஃபேஸ்புக் போஸ்ட் போடுவதும் கூட நடக்கலாம்.
ஆனால் மேலும் மேலும் விஜயகுமார்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகி இந்தப் புத்தகங்கள் தொடர்கதைகளாக இல்லாமல் இறந்த கால ஆவணங்களாக மாற வேண்டும். வெளிநாடு சென்றுவிட்ட நம் தெய்வத் திருவுருவங்கள் அனைத்தும் மீண்டும் நம் கோவில்களில் வேத மந்திரங்களும் இசைத்தமிழ்ப் பாசுரங்களும் முழங்க பூஜையேற்க வேண்டும். அதைச் செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் விஜய் குமாருக்கு வணக்கங்கள்.