Posted on Leave a comment

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்

நேஷனல் ஹெரால்ட் என்பது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் 1000க்கும் மேற்பட்டோரைப் பங்குதாரர்களாக உள்ளடக்கித் துவங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் லிமிட்டட் (Associated Journals Limited). சுதந்திர வேட்கையை மக்களிடம் உருவாக்க இந்தி (நவ ஜீவன்), உருது (குவாமி ஆவாஸ்) மற்றும் ஆங்கில மொழிகளில் (நேஷனல் ஹெரால்ட்) வெவ்வேறு பெயர்களைக் கொண்ட பத்திரிகைகளாக இவை வெளிவந்தன. சுதந்திரத்திற்குப் பின்பு அது காங்கிரசின் கொள்கைகளைப் பரப்பும் பத்திரிகையாக மட்டுமே வெளிவந்ததும், போட்டிக்குப் பல பத்திரிகைகள் நாட்டுநடப்புகளை வெளிப்படுத்த, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நட்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக 2008ல் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மூடப்பட்டது. அது மூடப்பட்டபோது AJLன் கடன் மதிப்பு 90கோடி ரூபாயாகவும் அதன் சொத்து மதிப்பு 1600 கோடி முதல் 2000 கோடி பெறும் என்றும் சொல்கிறார்கள். சொத்து மதிப்பு விபரம் சந்தை மதிப்பில் இதைக் காட்டிலும் அதிகமென்றும் அரசு மதிப்பில் குறைவு என்ற விவாதங்கள் இருந்தாலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து அந்நிறுவனத்திற்குள்ளது.

நேரு துவங்கிய நிறுவனத்தின் மூடுவிழா காங்கிரசுக்கு மிக உணர்வுபூர்வமான ஒன்று என்பதால், தொழிலாளிகளின் சம்பளப் பாக்கியை அடைக்க 90 கோடியை (90 கோடியே 20 லட்சத்துக்கும் கூடுதல்) காங்கிரஸ் வட்டியில்லாக் கடனாக AJL க்குக் கொடுக்கிறது. இதன் மூலமாகத் தொழிலாளிகளின் சம்பளப் பிரச்சினை பிரச்சினை முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் 2008ம் ஆண்டு AJL நிறுவனம் வெறும் ரியல் எஸ்டேட் போல ஆகிவிடுகிறது.

யங் இந்தியா பிரைவேட் லிமிட்டட் (YI)

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் யங் இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற லாபமீட்டா நிறுவனம் (Non Profit Organization) 5 லட்சம் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பெரும்பான்மைப் பங்குதாரர்களாக சோனியா (38%), ராகுல் (38%) என 76% பங்குகளைக் கொண்டவர்களாகவும் மீதமுள்ள 24% க்குப் பங்குதாரர்களாக மோதிலால் வோரா, (காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் & 2008 ல் AJL கடனில் இருந்த போது அதன் இயக்குநர்), காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே மற்றும் தொழில்நுட்பவாதி பைட்ராடோ ஆகியோர் அடங்குவர்.

காங்கிரஸ், அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் (நேஷனல் ஹெரால்ட்) மற்றும் யங் இந்தியா மூவரும் செய்த குளறுபடிகள் என்ன? இதில் உள்ள முறைகேடு சம்பந்தமாக விசாரிக்கக் கோரிய மனுவை சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் 2012ல் தொடுத்தார். அந்த வழக்கின் சாராம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

AJL ன் 90+ கோடி கடனை அடைக்க யங் இந்தியா நிறுவனம் முன்வருகிறது. AJL நிறுவனம் இதை ஏற்கிறது. அதாவது இக்கடனை அடைக்கும் பட்சத்தில் ஒரு பங்குக்கு 10 ரூபாய் வீதமாக 90+ கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் பங்குதாரராக யங் இந்தியா மாறி விடும். இப்போது யங் இந்தியா 50 லட்சம் ரூபாயைக் கடனாகச் செலுத்துகிறது. யங் இந்தியா நிறுவனம் காங்கிரசிடம் கருத்துச் சுதந்திரத்தை ஏற்படுத்தவும் மதச்சார்பின்மையைப் பேணும் வகையில் மீண்டும் பத்திரிகை நடத்துவதாகத் தெரிவிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு 89 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்கிறது காங்கிரஸ். வெறும் 50 லட்சத்தைக் கடனாகச் செலுத்திவிட்டு, AJL ன் 99% பங்குகளைக் கொண்ட நிறுவனமாக யங் இந்தியா மாறி விடுகிறது. அதாவது AJL நிறுவனத்தையே ஏறத்தாழ விலைக்கு வாங்கிவிட்டது. ஆனால் சட்ட ரீதியாகப் பார்த்தால் இரண்டும் தனித்தனி நிறுவனங்களே!

AJLன் பல சொத்துகள் டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ளது. பத்திரிகை வெளியிடப்படாமல் AJLன் இடங்கள் பல கம்பெனிகளுக்கு, அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இதன் மூலமாக மாதம் 60 லட்சம் ரூபாய் வாடகையாகப் பெறப்படுகிறது. இந்நிலையில்தான் சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கை 2012ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் பதவியிலிருக்கும் போதே தொடர்கிறார். இவ்வழக்கில் அவரது முக்கியக் குற்றச்சாட்டுகள் AJL நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து நம்பிக்கையைப் பெறாமல் போர்ட் மீட்டிங் மூலமாக அனைத்து முடிவுகளையும் எடுத்துத் தவறுகள் நடந்துள்ளது. நம்பிக்கை மீறுதல், லாபமீட்டா நிறுவனம் என்று சொல்லிவிட்டு வாடகைக்கு விடுதல் மற்றும் முழுக் கடனையும் அடைக்காமல் AJL நிறுவனத்தின் பெரும் சொத்துக்களை அபகரிக்கவே யங் இந்தியா என்ற நிறுவனம் குறிப்பிட்ட தனி நபர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது; அதன் சாட்சியாகவே தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி கடனையும் தள்ளுபடி செய்து AJL நிறுவனத்தின் சொத்துகளை அபகரிக்கத் திட்டமிடல்; காங்கிரஸ் கட்சி மக்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் திரட்டிய நிதியை ஒரு நிறுவனத்திற்குக் கடனாக வழங்குதல் சரியில்லை
எனப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கை நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்கிறார்.

காங்கிரசின் வாதம்

AJLன் பங்குதாரர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். மேலும் காங்கிரஸ் கட்சி கடனை அளிப்பதும் அதைத் தள்ளுபடி செய்வதும் முறைப்படியே நடந்துள்ளது. AJLன் இடங்கள் அரசிடமிருந்து லீசுக்குப் பெறப்பட்ட இடங்கள் என்பதால் அதை விற்க இயலாது. எனவே இதை யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் அனுபவிக்க முயன்றார்கள் என்ற சுவாமியின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது. இதில் சுப்பிரமணியன் சுவாமி என்ற தனி நபர் தலையிட இயலாது. மேலும் யங் இந்தியா நிறுவனம் லாபம் ஈட்ட இயலாத நிறுவனம். அதன் இயக்குநர்கள் எந்த லாபத்தையும் அனுபவிக்கவில்லை. இப்போதும் AJL மற்றும் YI இரண்டும் தனித்தனி நிறுவனங்களாகவே இயங்கி வருகின்றன. அது லாபமீட்டா நிறுவனமாகவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பின்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் பேண யங் இந்தியா முன் வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதை ஏற்றுத்தான் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்பதே காங்கிரசின் வாதம். காங்கிரஸ் கட்சி ஒரு நிறுவனத்திற்குக் கடன் அளித்துள்ளதால் அக்கட்சியைத் தேர்தலில் பங்குபெற அனுமதிக்கக் கூடாது என்ற சுவாமியின் கருத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது என்பதும், கட்சி எந்த நிறுவனத்திற்கும் கடனாக அளிக்கக் கூடாது என்று சட்டமேதுமில்லை என்றும் வாதிடுகிறது.

2011ம் ஆண்டில் கூட நேஷனல் ஹெரால்டின் 231 பங்குதாரர்களின் பங்குகள் உட்பட்ட விஷயங்கள் வெளியிடப்பட்டது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் தமது கருத்துகளை முன்வைக்கிறது.

வழக்கின் போக்கு என்னவாக உள்ளது?

சுப்ரமணிய சுவாமியின் கோரிக்கை மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்ற காங்கிரசின் கோரிக்கையை பாட்டியாலா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது. சுப்பிரமணியன் சுவாமி அளித்த விபரங்களின் படி நேஷனல் ஹெரால்டில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது எனக் கருதிய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான சோனியா, ராகுல் மற்றும் இதர நால்வரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை அனுப்பியது.

காங்கிரஸ் ஆரம்பத்தில் இதைக் கௌரவப் பிரச்சினையாகக் கருதி டெல்லி உயர்நீதி மன்றத்தை அணுகியது. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், மேலும் இதில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்ற கோரிக்கை மனுவையும் முன்வைத்தது. நீண்ட விசாரணைக்குப் பின் 2015 டிசம்பர் 19 அன்று ஆறு பேரையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

காங்கிரஸ் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமா என்று பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் சட்ட ரீதியாக இரண்டு கீழ்க் கோர்ட்களும் ஆஜராகச் சொன்ன வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்பதால் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் சோனியாவிற்கும் ராகுலுக்கும் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி பெயில் எடுத்து வெளியே வந்தனர்.

இதன் மற்றொரு பகுதியாக நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வாங்கியதில் கட்சி நிதியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராஹுல் காந்தியும் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த அமலாக்கத்துறை வழக்கு ஒன்றை ஆகஸ்ட் 2014ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. மேலும் 2011-12ம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனத்தின் வருமான வரிக் கணக்கை மறு மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை தொடுத்த வழக்கில் மறு மதிப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் வாதிட்டது. ஆனால் செப்டம்பர் 11, 2018 அன்று வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்வதைத் தடை செய்ய இயலாது என்று தெரிவித்தது. மேலும் இதில் ராகுலை விடுவிக்கக் கோரி காங்கிரஸ் வைத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் Pgurus என்ற பத்திரிகைச் செய்தி பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது. “2011ம் ஆண்டில் ராகுலுக்குக் கிடைத்திருக்கும் 414கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்காக யங் இண்டியா நிறுவனத்தின் சோனியாவுக்கும் ராகுலுக்கும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித் துறை ரூ.250 கோடி அபராதம் விதித்திருந்தது. வருமான வரித்துறை யங் இண்டியா நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி இருந்ததை மறைத்து விட்டார் என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

2011 – 12 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கை தாங்கள் மறுமதிப்பீடு செய்யப் போவதாக ராகுலுக்கு 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வருமானவரித்துறை ஒரு கடிதம் அனுப்பியது. இக்கடிதம் கண்டவுடன் ராகுல் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி வருமானவரித்துறை தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாக வழக்குத் தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை. மேலும் ராகுல் ஊடகங்கள் தன்னைப்பற்றி அவதூறாகச் செய்தி பரப்புவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.”

சாமானியனின் பார்வை:

சில அடிப்படைக் கேள்விகள் நமக்கு எழுகின்றன. சட்ட ரீதியாக இந்த வழக்கு எப்படிச் செல்லும் என்பதெல்லாம் நம்மால் சொல்ல இயலாது. ஆனால் நடந்துள்ள செயல்களை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டுள்ள ஒன்று என்பது தெளிவாகிறது.

1. AJL க்கு அளிக்கப்பட்ட கடனில் 50 லட்சத்தை யங் இந்தியா நிறுவனம் அடைத்தபோது மீதித் தொகையை அளிக்க இயலாது என்று யங் இந்தியா நிறுவனமோ AJL நிறுவனமோ தெரிவிக்காத பட்சத்தில் கடனைத் தள்ளுபடி செய்தது எதனால்? காங்கிரசின் முடிவு என்று கொண்டால் கூட யங் இந்தியா நிறுவனம் கடனை அடைக்காமலேயே எப்படி 90+ கோடி பங்குகளின் அதாவது 99% பங்குகளின் பங்குதாரராக மாறியது என்ற எளிய கேள்வி முக்கியமானது.

2. காங்கிரசின் வாதப்படி AJL இடத்தை விற்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், யங் இந்தியா லாபமீட்டா நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் AJL வாடகைக்கு விட்டு வரும் மாத வருமானமான 60 லட்சம் ரூபாய் இப்போது எங்கு செல்கிறது? அதன் பங்குதாரர்களுக்குத் தானே சென்று சேரும். அவ்வகையில் 99% பங்குதாரர்களாக உள்ள சோனியா, ராகுலுக்கு மட்டுமே இதில் 76% பங்கு சென்று சேரும் என்பதுதானே அர்த்தம்.

3. AJL Vs காங்கிரஸ் என்று இருந்தால் அதன் பங்குதாரர்களின் மதிப்பு, இப்போது யங் இந்தியா துவக்கப்படாமல் இருந்தால், இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில் மற்ற பங்குதாரர்களுக்குச் சென்று சேரும் என்பதுதானே உண்மை. அதை மடைமாற்றி AJLன் பெரும் பங்குகளைத் தங்களுக்கு மட்டுமே வரும் வகையில் செயல்பட்ட ராகுலும் சோனியாவும் எப்பேர்ப்பட்டவர்கள்!

4. AJL நேருவால் தொடங்கப்பட்ட ஒன்று என்பதால் அது காங்கிரசின் உணர்வுப் பூர்வமான ஒன்று. எனவே காங்கிரஸ் அதன் நஷ்டத்தை அடைக்க முன்வந்தது என்று இப்போது சொல்கிறது. AJL புத்துணர்வுடன் செயல்பட வேண்டும், பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன காங்கிரஸ், மேலும் யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டதும் அதன் நோக்கமே என்று சொன்ன காங்கிரஸ் தற்போது கடனை அடைக்க மட்டுமே காங்கிரஸ் உதவியது என்று இன்று மாற்றிப் பேசுவது எதனால்?

5. வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்யக்கூடாது என்று காங்கிரஸ் ஏன் சொல்கிறது. தவறு இழைக்கவில்லை எனில் அதை எதிர்கொள்வதில் என்ன தயக்கம்?

6. இன்றைய நிலையில் AJL நிறுவனத்திற்கு வரும் வருமானத்தின் பெரும் பங்கு யங் இந்தியாவின் இயக்குநர்களுக்குத்தானே சென்று சேரும். லாபமீட்டா நிறுவனமாக யங் இந்தியா சொல்லிக் கொள்கிறது. அவ்வாறு சொல்லும் யங் இந்தியா நிறுவனம் வழக்கில் தங்களை நோக்கிக் கிடுக்கிப்பிடிவர 2016 ஆகஸ்டில் மீண்டும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை இணையப் பத்திரிகையாக மட்டும் வெளியிடும் முடிவை எடுத்தது ஏன்? அதுவும் 2017 ஜனவரியில்தான் இணையப் பத்திரிகை வெளியிடப்படுகிறது.

7. இணையப் பத்திரிகை நடத்த இன்று என்ன செலவாகும், அதற்கு எந்தளவிற்கான இடமும் சர்வர் தேவையும் உள்ளது என்பது நமக்குத் தெரியாதா? பத்திரிகை நடத்துவது போலக் காண்பித்துவிட்டு AJL மூலமாக வாடகைக்கு வரும் பணத்தின் பெருந்தொகையை இவர்கள் அனுபவிப்பது திட்டமிட்ட செயல் கிடையாதா?

சோனியா, ராகுல் மற்றும் காங்கிரசிற்கு இது மிகப்பெரிய அவமானம்தான். ஆனால் இதிலிருந்து வெளியே வரமுடியாமல் சட்டத்தின் மூலமாக வெளிவந்து விடலாம் என்பதை மட்டுமே பார்க்கிறது. சாமானியர்களாக நமது கேள்விகளில் உள்ள உண்மை சோனியாவும் ராகுலும் எத்தகைய தகிடுதித்தங்களைப் பண்ணியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருந்திருந்தால் வருமான வரித்துறை வழக்கோ, அமலாக்கத்துறை வழக்கோ இதில் இணையாத வண்ணமும், அரசின் அதிகாரத்தின் மூலமாகவே டாக்குமென்ட் வரை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை என்றோ முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் நேரெதிர்க் கட்சி ஆட்சி செய்வதும், வழக்கைத் தொடந்த சுப்பிரமணியன் சுவாமியை எதிர்கொள்வதும் கடினம் என்பதால்தான் இந்த வழக்கிலிருந்து எந்த வகையிலும் விடுபட இயலாமல் ராகுலும் சோனியாவும் தவித்து வருகின்றனர் என்பதே உண்மை.

Leave a Reply