‘ஸ்வாமி உள்ளே இருக்கீரா?’ என்ற சோகம் கலந்த குரலோடு
நீலகண்ட தீக்ஷிதர் ரேழியில் நின்றுகொண்டு உள்ளே நோக்கி கோவிந்த கனபாடிகளை அழைத்தார்.
சாணம் தெளித்து மெழுகிய சற்றே நீளமான மண் தரையோடு கூடிய திண்ணையில் ஊர்ப் பெரியவர்கள்
இருந்தார்கள். கறவைகள் பனிப்புல் மேய்வதற்காக அந்தந்த வீட்டின் கொட்டத்திலிருந்து வெளியே
வரவும், பல்கால் குயிலினங்கள் கூவிக்கொண்டு தன் இரை தேடப் போகவும் சரியாய் அமைந்த,
பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் காலம். ‘ஓதல் அந்தணர் வேதம்பாட, சீர்இனிதுகொண்டு நரம்புஇனிது
இயக்கி..’ என்று சிறப்போடு இருக்கும் மதுரையின் தென்மேற்கே ஒரு கிராமம் துவரிமான்.
இப்போது கனபாடிகளை அழைக்கும் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்.
பச்சிலை நீள் கமுகும் பலவும், தெங்கும் வாழைகளும்,
விளைசெந்நெலும் ஆகியெங்கும் மச்சனி மாடங்கள் நிறைந்த, வைகைக்கரையில் அமைந்த ஊர். எங்கு
நோக்கிலும் இயற்கை பச்சை கம்பளத்தை விரித்தாற்போல் இருக்கும் அழகு சூழ்ந்த ஊர். அரசன்
வழி நின்ற குடிகளும் அவ்வாறே உத்தமர்களாய் இருந்தார்கள்.
ரெங்கம்மாள் அகல் விளக்கின் வெளிச்சத்தில் திருமடப்பள்ளியில்
பாலமுது காய்ச்சிக்கொண்டிருந்தார். இரண்டு நாளில் ஏகாதசி. அதற்குள் அச்சித்திரம்-அஸ்வமேதம்
பாராயணம் முடித்து கடகம் என்ற யஜுர் வேதம் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அஸ்வமேதம்
பாராயணம் செய்து கொண்டிருந்தார் கனபாடிகள். பின்வரும் பஞ்சாதி சொல்வதற்கும், தீக்ஷிதர்
அழைப்பதற்கும் சரியாய் இருந்தது. அவர்கள் வந்த நோக்கமும் அது தான்.
‘ஆப்ரஹ்மன் ப்ராஹ்மனோ ப்ரஹ்மவர்சஸீ ஜாயதாம்’..
‘இந்த தேசம் முழுவதும் ப்ரஹ்ம தேஜஸ் உள்ள
வேதமறிந்தவர்கள் உண்டாகட்டும். இந்த நாட்டில் அரசர்களும், ஆயுதங்களும், வீர்ய சௌகர்யமும்
உண்டாகட்டும். பசுக்கள் முதலியவைகள் நன்கு உண்டாகட்டும். பெண்கள் நாகரீகமாக திகழட்டும்.
பருவம் தோறும் நல்ல மழை பெய்யட்டும். மரங்களும், செடிகளும், பயிரும் வளரட்டும். நமது
நாட்டிலுள்ள உள்ள எல்லோரின் யோக க்ஷேமம் வளர்ச்சி அடையட்டும். நமது நாட்டை ஆளும் அரசன்
புத்தி கூர்மையுடன் மக்கள் நலம் விரும்பும் வீரனாக திகழட்டும்.’
அவர்கள் குரல் கேட்டு, அந்த பஞ்சாதியோடு வெளியில்
வந்தார் கனபாடிகள்.
‘என்ன தீக்ஷிதர் ஸ்வாமி இந்நேரம். நான் கோவில்
நடை திறக்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறதே. ஏதாவது அவசரமா?’ என்றபடி வெளியில் பார்த்தார்.
அங்கு, அரையர், போரையர், தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி அனைவரும் வந்திருந்தனர். அத்தனை
பெரிய அரசு அதிகாரிகளையும் கண்டதில் கனபாடிகளுக்குத் திடுக்கிட்டது. விரைவாய் வெளியே
வந்தார். அனைவரையும் உள்ளே அழைத்தார்.
தீக்ஷிதர் சொல்லத் தொடங்கினார். ‘கனபாடிகளே, நாம்
சிறிதும் எதிர் பார்க்காத ஒரு நேரம் வந்துவிட்டது. நம் ஊரையும் நம் குல தனத்தையும்
நாம் காக்க வேண்டும்.’ கனபாடிகளுக்குப் பதற்றம் அதிகமானது.
அரையர் தொடந்தார். ‘ஆம். அந்நியப்படை நம் நாடு
நோக்கி வருகிறது. அவர்கள் கண்ணூர் கொப்பம் வந்து விட்டனர். இன்னும் ஓரிரு நாளில் கண்ணூர்
கொப்பம் வீழ்ந்தவுடன் அந்நியப்படை நம் பாண்டிய நாடு நோக்கிவரும்’ என்றார் கொஞ்சம் தழுதழுத்த
குரலில் வரும் ஆபத்தின் குணம் தெரிந்து.
அதற்கு கனபாடிகள் ‘முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
திருநாடு சென்ற பின், நம் மன்னர் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் மழவராயன் சிங்காசனத்தை
அலங்கரிக்கும் போது இந்த சோழ, சேர, ஹொய்சாள அரசர்கள் நம்மை என்ன செய்ய முடியும்.’
மாறன்காரி இடைமறித்தார். ‘சரிதான் கனபாடிகளே. அவர்கள்
வருவதாயின் நம் ஊரின் சிறுபிள்ளை கூட எதிர்கொண்டு ஓடவிடும். ஆனால் வருவது அவர்களல்ல.
துலுக்க படைகள் வடக்கிருந்து ஒவ்வொரு நகரமாய்ப் பிடித்து வருகிறது.’ இது கேட்டவுடன்
கனபாடிகளும் தீக்ஷிதர்களும் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் இருந்தனர்.
மாறன்காரி தொடந்தார். ‘அந்தப்படை நாடு நகரமும்
அழிப்பது மட்டுமில்லாது கோவில்களையும் அழிக்கிறார்கள். அவர்கள் இலக்கே நம் தெய்வங்களும்,
ஆபரணங்களும்தான்.’ அதற்கு மேல் அவரால் பேச இயலவில்லை.
போரையர் விஷ்ணுவர்தன் தொடந்தார். ‘ஆம். ஸ்ரீரங்கம்தான்
தற்போது அவர்கள் இலக்கு. அதில் பெரும் பொருள் அவர்களுக்குக் கிடைக்கப்போவது உறுதி.
அந்த ஆசையில் அவர்கள் மதுரை நோக்கியே வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் உள்ள பலர் ஊரைவிட்டுச்
சென்றுவிட்டதாகவும், கோவிலையும், நம்பெருமாளையும் காக்க பெரும் படை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து அதில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் நம்
குடிகளையும், கோவிலையும் காக்க வேண்டும். அரசர் இன்று காலை மந்திராலோசனை கூட்டம் முடிந்து
திருமுகம் வரைவார் மூலம் ஓரிரு திருமுகங்களை நம் பாண்டிய நாட்டின் நாற்பத்திரெண்டு
நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறார். இதில் நாம் இருக்கும் ‘திருமலை வள நாடு’ மட்டுமின்றி,
‘திருமல்லிநாடு, திருவழுதிநாடு’ இரண்டும் மிக முக்கியமாய் இருக்கிறது. அந்நியரிடமிருந்து
இங்குள்ள கோவில்கள்தான் பெரிதும் காக்கப்படவேண்டும்.’ ஒரே மூச்சாய் சொல்லி முடித்தார்.
‘நம் ஊரின் பெருமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய
வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்கள் தான் இந்த ஊரின் முதல் குடிகள் என்று கூடச் சொல்லலாம்.
இங்குள்ள கோவிலில் உங்கள் குடும்பம்தான் வழிவழியாய் ஆராதனை செய்கிறார்கள். நம் கோவில்
பெருமை பன்மடங்கு பெரிது.’ பெரும் அரசு அதிகாரியான தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி.
அதிர்ச்சியில் உறைந்திருந்த கனபாடிகள் தொடந்தார்.
‘நீங்கள் சொல்வது சரிதான். அந்த இறைவனே எங்களுக்கு இந்தக் கைங்கர்யத்தைத் தந்திருக்கிறான்.
நம்மாழ்வார் சொல்வது போல ‘தன்னாக்கி என்னால் தன்னை இன்கவி பாடும் நம்வைகுந்தநாதன்’.
நீங்கள் சொல்வது போல் நம் ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. என் முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
இங்கு தான் கிருதுமால் என்ற வைகையின் கிளை நதி உற்பத்தியாகி மதுரை நோக்கிப் புறப்படுகிறது.
அங்கு நம் கூடலழகர் சந்நிதி சுற்றிப் பாய்கிறது, வைகுந்தம் போல். கடைச்சங்க காலத்திற்கு
முந்திய பாண்டியர்களில் ஒருவராகிய ‘வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ ஆட்சிக் காலம் தொட்டே
இந்த ஊருக்கு வரலாறு உண்டு. நெடுங்காலம் ஆட்சி செய்தார் இப்பாண்டியன். ஒரு நாள் இந்த
ஊரில் கிருதுமால் நதியில் சந்தியாவந்தனம் செய்யும்போது, அவர் கையில் ஒரு மீன் அகப்பட,
அது தன் உருவைப் பெரிதாக்கிக்கொண்டே போக, அரசனும் அதற்கு இடம் தர முடியாமல் தவித்தான்.
முடிவில் அதுவே திருமாலின் முதல் அவதாரமாக ‘மச்சாவதாரமாக’ காட்சி தந்தது. உலகமே கடற்
பிரளயத்தால் அழிய, திருமால் சொல்லியபடி, அந்த மீனின் அருளால், இம்மன்னன் மட்டும் நம்
கிருதுமாலில் தோன்றிய நம் குடிகளைக் காத்தார். இதையே திருமங்கை ஆழ்வாரும் தம் திருமொழியில்
இப்படி சொல்லிருக்கிறார்.
வானோரளவும்முதுமுந்நீர் வளர்ந்தகாலம் * வலியுருவில்
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்ட தண்டாமரைக் கண்ணன் *
ஆனாவுருவிலானாயன் அவனைஅம்மாவிளைவயலுள் *
கானார்புறவில்கண்ணபுரத்து அடியேன்கண்டுகொண்டேனே.
‘அது முதல் இந்த ஊர் பாண்டியர்களின் வழிபடு ஊரானது.
வடிவலம்ப பாண்டியர் பின்னாளில் அதே கிருதுமால் தோன்றுமிடத்தில் ஒரு சிறு கோவிலும் கட்டினார்.
அதற்கு இறையிலி/திருவிடையாட்டம் (நிலங்களும்)தந்து எங்கள் முன்னோரை ஆராதனம் செய்யப்பணித்தார்.
இன்று வரை நாங்கள் கைங்கர்யப்பேறுபெற்றோம். அப்பப்பா எவ்வளவு சிறப்புஇருக்கிறது நம்
ஊருக்கு’ என்றார் கனபாடிகள்.
அவர் வாய் திறந்தாலே வேதமும் தமிழ்மறையும் அருவியாய்ப்
பெருக்கெடுக்கும். வந்தவர்கள் எல்லாம் தங்கள் வேலையை மறந்து இருந்தனர். அப்போது சங்கிடுவான்
சங்கின் ஒலி கேட்டுத் தன் நிலைக்கு வந்தனர்.
‘இவ்வளவு பெருமையுடைய நம்மூர் காக்கப்படவேண்டும்.
பலகாலம் தொட்டு இங்கு நம்மைக் காக்கும் நம் பெருமானும்..’ உணர்ச்சியின் மேலிட்டு கொஞ்சம்
கர்ஜித்தார் அரையர், சைவ சமயத்தராயினும். அடுத்த வேலைகளில் இறங்க அனைவரும் ஆயத்தமாயினர்.
போரரையரும், மாறன் காரியும் அதற்கான திட்டம் வகுத்தனர்.
‘இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் நம் ஊரைக்
காலி செய்து மேலும் தெற்கே போகவேண்டும். குடிகள் கொஞ்சம் கொற்கை நகர், அதாவது நம் பழைய
தலைநகரம் வரை சென்றால் நல்லது. அது கொஞ்சம் பாதுகாப்பானது. இங்கு நம் படை வீரர்கள்
மட்டும் குடிகள் போல் தங்கி இருக்கட்டும். அந்நிய படைகள் வந்தவுடன் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.
நம் தேசத்தவர் கொஞ்சம் சேர தேசம் அருகில் சென்றுவிட்டனர். இங்குள்ளோர் தங்கள் இல்லங்களில்
ஒரு சுவரில் பிறை ஒன்றமைத்து, அதனுள் பக்கவாட்டில் 3-4 அடியில் துளையிட்டு தங்கள் நகைகள்,
இன்ன பிற முக்கிய வஸ்துக்களை சேமித்து, அதன் மீது மண்சாந்து பூசிவிடவேண்டும். நம் மக்கள்
செல்லும் வழியில் முன்னதாகவே நம் படை இரண்டு குழுவாய் செல்லும். ஒன்று முன்னர் எதுவும்
ஆபத்து இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும். மறறொன்று அவர்களுக்கு சமைத்து, போகும் வழியில்
இருக்கும் கல் மண்டபங்களில் வைத்துவிடுவார்கள். அரையரே இதை இப்போதே இந்த வளநாட்டிலுள்ள
ஏனாதி, மதவராயன், வத்தராயன் முதலானோர் மூலம் யாரும் அச்சப்படாதவாறு குடிகளுக்குத் தெரியப்படுத்தவும்..
இன்னும் சிலகாலம் தான்’ என்று ஒரு திட்டம் முடித்தார் மாறன்காரி.
‘அடுத்து நம் பெருமானையும் கோவிலையும் காக்க வேணும்.’
தீக்ஷிதர் தொடந்தார். ‘கோவிலைக் காக்க ஸ்ரீரங்கம் போல் ஏதாவது வியூகம் வகுக்க வேண்டும்.
நம் கோவில் சிறியது. அவர்களை ஊருக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும். நம் பெருமானை
மட்டும் எப்படியாவது காக்க வேண்டும். உலகெல்லாம் காக்கும் நம் பெருமாளை இப்படி நாம்
காக்க வந்திருப்பது என்ன விந்தையோ.’
‘சரி, காலம் தாழ்த்த நேரமில்லை. அரையரே, நீர் போய்
நம் உத்தரவை அதிகாரிகளுக்குச் சொல்லும். இதற்கு திருமுகம் தேவைப்படாது..’
அரையர் விடைபெற்றவுடன் மாறன்காரி, ‘நம் பெருமானைக்
காப்பதுதான் பெரும் கவலையாய் இருக்கிறது. இந்த ஊரைவிட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
போகவேண்டும். கோவிந்த பட்டரே, நான் அதற்கான ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போய் இன்றைய
ஆராதனைகளை முடித்துவிட்டு வாருங்கள். நான் திருமுகத்தில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களைப்
பார்த்துவிட்டு இரண்டாம் கால ஆராதனையில் வந்துவிடுவேன்.’ அனைவரும் கலைந்தனர்.
கனபாடிகள், ரெங்கம்மாள் செய்த பதார்த்தங்களைத்
தன் இல்லப் பெருமானுக்கு கண்டருளப்பண்ணிவிட்டு கோவில் நோக்கிப் புறப்பட்டார். வழியெல்லாம்
அதிக கவலையோடு, கண்களில் கண்ணீரோடு ஓடினார், தன் முன்னோர் ஆராதித்த பெருமானைக் காண.
கோவில் வாசலில் சிலர் விஸ்வரூபம் சேவிக்க காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களிடமும், பெருமானிடமும் காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கோவிந்த பட்டர்
ஆராதனைகளைத் தொடங்கினார். அவரேதான் பெருமானுக்கு தளிகை செய்யவும் வேண்டும். இவர்கள்
குடும்பத்தின் கைங்கர்யம்தான். இவருக்கு சிறுபிள்ளையாதலால், இவரே அந்த கைங்கர்யமும்
செய்தார். அன்று பெருமாள் கோடி சூரியனை மிஞ்சியவராய், சங்கு-சக்கர தாரியாய் நான்கு
புயங்களுடன் இரண்டு நாச்சிமாரோடு காட்சி தந்தார். திருமல்லிநாட்டில் ஒரு பகுதியுள்ளதால்
இங்கு ஆண்டாளுக்கு சந்நிதி இல்லை. வகுளபூஷண பாஸ்கரராய் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார்.
நித்ய ஆராதனை முடித்து ஆழ்வார் பாசுரங்கள் சில சொல்ல ஊரிலுள்ள சிலரும் வந்திருந்தனர்.
திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருவாய்மொழி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
பட்டர் மட்டும் ‘தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்
என்செய்கேனோ?’ என்று நின்றுருகிக் கொண்டிருந்தார். இரண்டாம் ஆராதனம் முடிய மாறன் காரியும்
வந்தார்.
கோவிலில் கூட்டம் குறைய, நடை சாற்றும் நேரம் வந்தது.
மாறன்காரி கோவிந்த பட்டரை அழைத்துக் கொண்டு பின்னால் இருந்த மாஞ்சோலை சென்றார். இருவர்
மட்டும் ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆகட்டும் ஸ்வாமி அப்படியே செய்கிறேன்.’
என்று பட்டர் வெளியே வந்தார். மாறன்காரி ஏதோ யோசித்துவிட்டு பின் வழியாய் சென்றார்.
கோவிந்த கனபாடிகள் சன்னதி தெரு தாண்டி வரும் போதே மக்களிடத்தில் ஒருவித கிளர்ச்சி தெரிந்தது.
ஆங்காங்கு கூடி பேசிக்கொண்டிருந்தனர். இவர் வீடு வந்த போது ரெங்கம்மாளும் அதையே சொன்னார்.
தங்களிடம் பெரும் நகைகள், வாஸ்துக்கள் இல்லை. அந்தப் பெருமான் மட்டுமே இவர்களின் குல
தனம்.வேறு சொத்து இல்லை. சில முக்கிய நபர்கள் தவிர இரவோடு இரவாகப் பலரும் காலிசெய்தனர்.
படைவீரர்கள் குடிகள் போல் வந்தனர்.
அரசன் இரவு மந்திராலோசனை கூட்டியிருந்தார். மாறன்
காரி அங்கு இருந்தார். அதுவழக்கமாய் நடக்கும் சபையில் இல்லை. மதுரைக்குத் தொலைவில்
திருக்கானப்பேர் அருகில் இருந்தது. அங்கு தான் நாணயம் தயாரிக்கும் இடம் இருந்தது. குலசேகரன்
1200 கோடி பொற் காசுகளை தன் கருவூலத்தில் வைத்திருந்தார். அதையும் பாதுகாக்க வேண்டி
அங்கு கூட்டம் நடந்தது. கருவூல சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பாதி மாறன் காரியிடம் தரப்பட்டது.
அவர் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். நேராக கனபாடிகளைக் காண அங்கிருந்து கிளம்பி
விடிந்து சில நாழிகைகளில் துவரிமான் வந்தார்.
சோழ தேசத்தில் வேளக்காரப்படை என்று ஒன்றிருக்கும்.
அது தங்கள் உயிரைக்கொடுத்து மன்னரைக் காக்கும். அது போல பாண்டிய தேசத்திலும் ஒருபடை
இருந்தது. அதற்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்று பெயர். அதில் ஒரு பிரிவை இந்த மூன்று
கோவில்களைக் காக்கும் பணிகளிலும் அரசன் பணித்திருந்தான். அவர்களும் மாறன் காரியுடன்
வந்தனர். அரசனே திருமலை நாட்டிலுள்ள அழகாபுரி கோட்டை (அழகர் கோவில்)செல்வதால் தனி பாதுகாப்பு
ஏற்படுத்தப்படவில்லை. முனையெதிர் மோகர் என்ற படைப்பிரிவு அரசனோடு இருந்தது. காலை ஆராதனைகள்
முடிந்த பின் மீண்டும் மாலை ஆராதனத்திற்காக கோவிந்த பட்டர் சென்றார். அதற்கு முன் தென்னவன்
ஆபத்துதவிகள் கோவில் முன் இருந்தனர்.
அன்று சாயங்கால ஆராதனை நேரம்தாழ்த்தி செய்யப்பட்டது.
கோவிந்த பட்டரும் மிகவும் வாஞ்சையோடு செய்தார். இனி இப்பெருமானுக்கு எப்போது இது போல்
கைங்கர்யம் செய்வோம் என்ற கேள்வி இருந்தது. பின்னிரவு வருமுன் கோவில் நடை சாற்றப்பட்டது.
ரெங்கம்மாளும், மற்றும் சில படைவீரர்களும் அங்கிருந்தார். அன்றோடு பட்டரும் ஊரை விட்டுப்
புறப்பட வேண்டும்.
குதிரை குளம்படி கேட்டு மாறன் காரி நிமிர்ந்தார்.
தூதுவன் திருசிராமலையிலிருந்து வந்தான். ஓலை படித்தவர் கண்களில் குளமாய்க் கண்ணீர்.
அருகிலிருந்தவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. கோவிந்த பட்டரை அழைத்து விவரத்தைச் சொன்னார்.
‘ஸ்வாமி, நான் சொன்னபடியே நடந்தது. கண்ணூர் கொப்பம்
வீழ்ந்தது. ஸ்ரீரங்கம் தாக்கப்பட்டது. அங்கு மட்டும் இதுவரை பல்லாயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் பெருமாளை மட்டும் காப்பாற்றி இருக்கின்றனர்..’
முழு விவரமும் சொல்லவில்லை. கனபாடிகள் தரையில்
அமர்ந்தார். சற்று விம்மலோடு அழவும் செய்தார். இனி நடக்கும் காரியத்தைப் பார்க்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தார். காரி அவரை கொற்கை தேசம் போகச் சொன்னார். ‘எங்கள் குல தனத்தை
விட்டு எப்படிப் போவேன்’ என்று புலம்பினார். மறுத்தார். காரியும் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஒரு பெரும் பெட்டியில் சன்னதியில் இருக்கும் விக்ரகங்களை
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு தென்னவன் ஆபத்துதவிகள் படையோடு மேற்கு நோக்கிப் பயணமானார்கள்
கோவிந்த பட்டரும் அவரது குடும்பமும். நம்மாழ்வார் மட்டும் மாறன் காரியோடு வேறு திசையில்
சென்றார். மேற்கு நோக்கி சென்றவர்கள் கூட வேறு சிலரும் சென்றனர். கோவிந்த பட்டர் கோவில்
சாமான்களை எடுத்துக்கொண்டு காப்பிடல், அச்சோ பதிகம் உட்பட சில பெரியாழ்வார் பாடல்களை,
பெருமானுக்கு எந்த ஊறும் நேரக்கூடாது என்றபடி பாடிக்கொண்டு போனார்.
வரவிருக்கும் அந்நியப் படைகளைத் திசை திருப்ப,
திருக்கானப்பேரிலிருந்து கொண்டுவந்த பொற்காசுகளை கிழக்கே, வடக்கே என்று கொஞ்சம் புதைத்து
வைத்தனர் சில படை வீரர்கள். இது காரியின் ஒரு யோசனை. அப்படியாவது இந்தப் பெருமான்களைக்
காக்கவேண்டும். மறுநாள் காலை அவ்வளவு இனிதாய் இல்லை. எதிர்பார்த்ததை விட வேகமாக மாலிக்
காஃபூர் தலைமையில் அந்நியப்படை மதுரை வரை வந்து விட்டது. திரு தளவாய்புரத்தில் சுந்தர
பாண்டியன் எதிர் கொண்டு சற்றே தாமதமாக்கினான். அதற்கு மேல் முடியாமல் அவனும் வீர பாண்டியனோடு
சேர்ந்து மதுரை கோட்டைக்குள் வந்தான்.
மாலிக் காஃபூர் படையோடு கோட்டையின் வெளியில் காத்திருந்தான்.
மூன்றுநாளாகியும் அவனால் கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. சித்திரை மாத வெய்யிலில்
அவன் படைவீரர்கள் சோர்ந்திருந்தனர். நீரும் இல்லை. வேறு வழியில்லாமல் பாண்டியனிடம்
சமாதானத் தூது விட்டான். கோவில்களை அழிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு கோட்டைக் கதவுகள்
திறந்தன. அதற்கு பிரதி பலனாய், மாலிக் காஃபூருக்குப் பாதி உணவு தானியமும், அனைத்து
குதிரை, யானைகளும் தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. கோவில்களுக்காக இவை அனைத்தையும்
ஏற்றான் பாண்டியன். ஏகப்பட்ட செல்வங்களோடு 612 யானைகளும், 20000 குதிரைகளும் பெற்று
வடக்கே புறப்பட்டான் மாலிக் காஃபூர்.
தாங்களும், தங்கள் உடைமையும், கோவில்களும் காக்கப்பட்டதை
எண்ணி ஊர் மக்கள் ஆரவாரித்தனர். அந்நியர்களுடன் போரிட்டுத் தோற்கடிக்க முடியாதது கண்டு
வீர பாண்டியன் சற்றே வருத்தத்தோடு இருந்தான். மாறன் காரியும், மற்றை அமைச்சர்களும்
உடனிருந்தனர். துவரிமானிலிருந்து வந்த நம்மாழ்வாரை மாறன் காரி மதுரை மீனாட்சி கோவிலுக்குள்
வைத்திருந்தார். கோவிலினுள், மாலிக் காஃபூர் ஒரு நிமிஷம் நின்று கவனித்தபோது, மாறன்
காரி உயிர் அவரிடமில்லை. சிறு புன்முறுவலோடு அவன் நகர்ந்தான். இதைப்பார்த்த பாண்டியன்
பின்னர் காரியிடம் கேட்ட போது துவரிமான் பற்றி சொன்னார்.
இரண்டு மூன்று நாட்களில் விஷயம் எங்கும் பரவியது.
தங்கள் ஊரை விட்டுப்போன மக்கள் திரும்ப வந்தனர். கோவிந்த பட்டர் மேற்கே நாகமலையில்
பெருமானோடு இருந்தார். அவரை விஷயம் எட்டவே, தென்னன் ஆபத்துதவிகள் சூழ, மலை அடிவாரத்திலேயே
பெருமானுக்கு விஷேஷ ஆராதனை செய்யத்தொடங்கினார். ஆம் அவர்கள்தான் உண்மையான ஜெய-விஜயர்கள்
இப்போது. மறுநாள் ஊர் நோக்கி அவர்களும் திரும்பினர். ஒருவாரத்தில் மாறன் காரி வந்தார்.
நம் பெருமானை சேவிக்க வீர பாண்டியரும், சுந்தர பாண்டியரும் துவரிமானுக்கு வருவதாக கனபாடிகளிடம்
சொன்னார். அவருக்கு மிகுந்த ஆனந்தம்.
அரசன் வருகைக்காக ஊர் அலங்கரிக்கப்பட்டது. பேரிகைகள்
முழங்கின. இரண்டு பாண்டியர்களும் தங்கள் முன்னோர் வணங்கிய இறைவனை கோவிலில் சென்று வழி
பட்டனர். சுந்தரபாண்டியன் கோவிலை கொஞ்சம் பெரிதாய்க் கட்ட விரும்பினான். திடீரென்று
ஒரு இடத்தில் கருடன் பாண்டியன் அருகில் வந்து பின் வேறொரு இடத்தில் மூன்று முறை வட்டமிட்டது.
சுந்தர பாண்டியனுக்குப் புலப்பட்டது. மாறன் காரியிடமே அந்தப் பொறுப்பையும் ஒப்படைத்தான்.
கருடன் வட்டமிட்ட இடத்தில் சில மாதங்களில் கோவில்
உருவானது. ஸ்ரீரங்கம் போலவே இந்த ஊரும் நதிகளால் பிரிக்கப்பட்டு ஒரு தீவு போலத்தான்
இருந்தது. ஆம். ஒருபுறம் வைகை, மறுபுறம் கிருதுமால். கோவிலுக்குள் அரங்கனையே ப்ரதிஷ்டை
செய்தனர். ஆனால், நின்ற கோலத்தோடு, அரங்கராசனும், ஸ்ரீ தேவி, பூ தேவியுமாய். சுந்தர
பாண்டியனே மங்களாசாசனம் செய்து ஸம்ப்ரோக்க்ஷணம் செய்தான். கோவிந்த கனபாடிகளும், தீக்ஷிதரும்
கைங்கர்யங்களைத் தொடந்தனர், பொலிக பொலிக பொலிக என்று!