Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு


பணம் முக்கியம். அதைவிட பத்துஜீ முக்கியம்

விவேகானந்தர் பாறைக் குழு வெளியிட்ட புத்தகத்தை நானும் கண்ணனும் விற்பனை செய்தோம், சாதனை செய்தோம், ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றோம் என்று சொன்னேன் அல்லவா? கணக்கு தப்பு. விற்பனை பன்னிரண்டு அல்ல, தொண்ணூற்று இரண்டு.

அது ஒரு தனிக் கதை. இந்தத் தனிக்கதை வீரக் கதையா, சோகக் கதையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நானும் கண்ணனும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போனோம். சைக்கிளில் போனால் வழி திறக்காது என்பதால் பேருந்தில் போய்விட்டு நடந்தே போனோம். அதுமட்டுமல்ல, அரை ட்ரௌசருக்கு அனுமதி கிடைக்காது என்பதால் சலவை செய்யப்பட்டு இஸ்திரி செய்யப்பட்ட முழுக்கால் சட்டையோடுதான் போனோம்.

வரவேற்பறையில் இருந்த பெண்மணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ் தட்டுப்படவில்லை. என்னைப் பொருத்தவரை எவ்வளவுதான் ஆங்கிலப் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்தாலும் சம்பாஷணை சமயத்தில் அது கை கொடுக்காது என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். சில நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதத்தை அங்கு வந்த ஒரு பெரியவர் கவனித்துவிட்டார். குளுகுளு லிப்டில் ஏற்றி எங்களை அவருடைய அறைக்கு அழைத்துச்சென்றார். போகிற வழியில் அவருக்குக் கிடைத்த மரியாதையை வைத்தே அவர்தான் இங்கே முதலாளி என்பதை யூகித்துவிட்டோம்.

அந்த சவேரா ஹோட்டல் முதலாளி ராமராகவ ரெட்டி எங்களுக்குக் கொடுத்தது இனிய அதிர்ச்சி. விவேகானந்தர் பாறைக்குழு பற்றியோ இந்தப் புத்தகம் பற்றியோ எதையும் நாங்கள் அவருக்கு விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எண்பது புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் காசோலையை வாங்கிச் செல்லும்படிச் சொல்லிவிட்டார்.

எனக்கும் கண்ணனுக்கும் இடையே எப்போதும் ஒற்றுமைகள் குறைவு, வேற்றுமைகள் அதிகம் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும் சவேரா ஹோட்டல் லிப்டில் இறங்கி வாசலைக் கடந்து வெளியே வந்த பிறகுதான் இருவருடைய புத்தியும் ஒரே திசையில் பயணித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். எண்பது புத்தகங்களை விற்றால் கமிஷன் தொகை மட்டும் ரூபாய் இரண்டாயிரம். தர்ம நியாயப்படி இதைப் பிரித்துக்கொண்டால் ஆளுக்கு ரூபாய் ஆயிரம். இதை எப்படி செலவு செய்வது என்கிற ரீதியில்தான் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். கண்ணனுடைய தேர்வு புதுச் சட்டை புது பேண்ட். என்னுடைய தேர்வு எலிபன்ஸ்டன் தியேட்டரில் ஆங்கிலப் படம் என்று ஆரம்பித்து கற்பனை ஒருமாதிரி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது…

மறுநாள், பத்துஜீ என்று அழைக்கப்படும் பத்மநாபன்ஜீயை சந்தித்தோம். அவர்தான் எங்களை வழிநடத்துகிற மாலுமி. பத்துஜீ காரியத்தில் கவனமாக இருப்பார். கொள்கையில் உறுதியாக இருப்பார். நாங்கள் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றாலும் அவர் எடுத்த முடிவை நாங்கள் ரசிக்கவில்லை. இவ்வளவு பெரிய வியாபாரம் செய்துவிட்டு அதில் இவ்வளவு ரூபாய் கமிஷன் வரும் என்று வணிக ரீதியில் கணக்குப் போடுவது தவறு என்றும், தேச சேவைக்கு வந்தவர்கள் இதற்கெல்லாம் சபலப்படக்கூடாதென்றும் சொல்லி முடித்துவிட்டார்.

பிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வருத்தப்படுகிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதால் எங்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘புத்தகங்களை டெலிவரி செய்வது, காசோலையை வாங்கி வருவது என்பதற்கெல்லாம் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

பத்துஜீ புறப்பட்டுப் போன பிறகு எனக்கும் கண்ணனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பணம் முக்கியம் என்றாலும் அதைவிட பத்துஜீ முக்கியம் என்ற தீர்மானத்திற்கு முடிவில் வந்து அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டோம்.

காசு கம்மியாகவும் நாட்டுப்பற்று அதிகமாகவும் இருந்த அந்த நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. நான் கண்ணன் மூன்றாவதாக வாசு பிரசன் ஆகிய மூவரும் அடையாறு பகுதியில் சங்க நடவடிக்கைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டிருந்தோம். வாசு பிரசன் என்னுடைய கல்லூரித் தோழரான விஷ்ணுவின் தம்பி என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அடையாறு காந்தி நகரின் ஆற்றங்கரைப் பகுதியில் ஷாகா நடத்தினோம். இதில் வாசுவுக்கு ஓரளவு கொள்கைத் தெளிவு உண்டு. எனக்கும் கண்ணனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்பாடம். கொள்கை, தத்துவம் ஆகியவற்றில் நான் பின்தங்கியிருந்தாலும் கூட்டம் சேர்ப்பதில் எனக்குத்தான் முதலிடம். ஷாகாவிற்கு வருகிறவர்கள் இருபது இளைஞர்கள், இதில் பதினைந்து பேர் என்னால் கொண்டுவரப்பட்டவர்கள் என்கிற பெருமிதம் எனக்கு இருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியாக ஷாகாவுக்கு வருகிறார்கள். என்னுடைய பிரவேசத்தைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன். வாசு அன்றைய நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவன். கல்லூரியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நண்பர்கள் அழைத்த கூட்டத்திற்கு வாசு போயிருக்கிறான். அங்கு போன பிறகுதான் தெரிந்தது, அது பகத்சிங்குடைய தாயார் வித்யாவதிக்கான வரவேற்புக் கூட்டம் என்று. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. பாராட்டிப் பேசுவதற்காக சிவாஜி கணேசனை அழைத்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்துப் பரவசப்பட்ட வாசு உடனே வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். எப்படியும் தாய்க் கழகத்திலும் தன்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் இணைந்துவிட்டான்.

கண்ணன் நல்ல வசதியான குடும்பத்துப் பையன். எனக்கு நெருக்கமானவன். மணிக்கணக்கில் நான் சங்கத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகபாவம் மாறாமல் கேட்டுக்கொண்டிருப்பான். ஓரளவில் எனக்கே சலித்துப்போய் நானே நிறுத்திவிடுவேன்.

சென்னை லாயட்ஸ் ரோடில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு நான் போனோன். ஆர்ய சமாஜம்தான் முகாமுக்கான இடம். நான் போனது முகாமுக்கு முதல்நாள் – சில ஏற்பாடுகள் விஷயமாக. கண்ணனையும் என்னோடு அழைத்துப்போனேன்.

போன இடத்தில் அண்ணா சாலையில் உள்ள ஒரு கடைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள் – ஏதோ ஒரு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக. குறிப்பிட்ட மருந்துள்ள குறிப்பிட்ட கடையைக் கண்டுபிடித்து அது இங்கே கிடைக்காது, இன்னொரு இடத்தில் பார்க்கவும் என்று அவர்கள் சொன்னதன் பேரில் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

நான் வந்த பஸ் லாயட்ஸ் ரோடு ஆர்ய சமாஜம் அருகில் வந்ததும் இறங்கிவிட்டேன். ஆர்ய சமாஜத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு ஆச்சரியம் என்னைத் தாக்கியது. பாத்திரங்கள் நிரம்பிய கட்டை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு கண்ணன் உள்ளே போய்க்கொண்டிருக்கிறான். மேலே சட்டை இல்லை, பேன்டை மடித்துவிட்டு முக்கால் சைஸ் ஆக்கிவிட்டான். உடம்பெல்லாம் வியர்வை.

கண்ணனுடைய மாற்றத்திற்கு காரணம் என்ன? மணிக்கணக்காக நான் பேசியபோதெல்லாம் ஏற்படாத மாற்றம் இரண்டு மணி நேரத்தில் ஏற்பட்டது எப்படி என்பதைப் பிறகு பல சமயங்களில் கண்ணன் விரிவாகச் சொன்னான். அதை இப்போது ஒரு வரியில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். சங்கத்தின் அதிகாரியாக இருந்த பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அண்ணாமலைஜிதான் அந்த மாயத்தைச் செய்தவர். அவர்தான் ஆர்ய சமாஜத்தில் கண்ணனை மாற்றியமைத்திருக்கிறார்.

அடையாரின் ஆரம்ப ஷாகா நாட்களில் ஆர்வமாக இருந்தவர்கள் இரண்டு பேர். முதலில் பாலாஜி. பாலாஜியின் அப்பா அரசு வழக்கறிஞர், இனிமையானவர், அனுஷ்டானங்களுக்குட்பட்டவர். பாலாஜியை வர்ணிப்பதற்குச் சிரமப்பட வேண்டாம், இதற்கு எதிர்ப்பதம்! பாலாஜி அடையாறு ஆற்றங்கரையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியின் மாணவன். தன்னுடைய வகுப்புத் தோழன் சரத்தை பாலாஜி ஷாகாவுக்கு அழைத்து வந்தான்.

சரத், சென்னைக்குப் புதுவரவு. டெல்லியிலிருந்து வந்ததால் தமிழைவிட இந்தியில்தான் பழக்கம் அதிகம். சரத்தின் தந்தை சுயமரியாதைக்காரர். சரத்தின் அண்ணன் சுதர்சன் ஏற்கெனவே எனக்கு வேண்டப்பட்டவன் ஆகிவிட்டபடியால் சரத்தும் எனது உள் வட்டத்திற்குள் வந்து ஷாகாவிற்கும் வந்துவிட்டான்.

இதில் இன்னொரு சூட்சமத்தையும் சொல்லிவிடுகிறேன். ஷாகா நடக்கிற இடம் ஏற்கெனவே நாங்கள் கபடி ஆடிக்கொண்டிருந்த இடம்தான். எனவே நண்பர்களிடம் கபடியாட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் போவதற்கு முன் கொடி வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி சாதா கபடியை ஷாகா கபடியாக மாற்றிவிட்டேன்.

இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய பழைய கபடியின் விளையாட்டுத் திட்டத்தில் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. விளையாட்டின்போது தகராறு ஏற்பட்டு யாராவது சண்டை போட்டால் அவர்களை யாரும் தடுக்கக்கூடாது; இரண்டு பேர் சண்டை போட ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் விலகி வட்டமாக நின்று அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.

பாலாஜிக்கும் சரத்துக்கும் சண்டை வந்துவிட்டது. சண்டை வந்தவுடன் நாங்கள் வட்டம் கட்டினோம். முக்கிய சிக்ஷக்காக இருக்கிற வாசுவுக்கு இது புரியவில்லை. விசிலை ஊதினான், ஊதினான், ஊதிக்கொண்டே இருந்தான்.

பாலாஜியும் சரத்தும் காயங்களோடு வீட்டிற்குப் போய்விட்டார்கள். ஷாகாவில் சண்டை போடக்கூடாது என்பதையும் இதனால் இந்து ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதையும் பலவாறாக உணர்த்த வாசு முயற்சி செய்தான். எனக்கு அது சுவாரஸ்யப்படவில்லை. சண்டை போடக்கூடாது என்பதைச் சொன்னால் இருபது பேர் நம் கைவிட்டுப் போய்விடுவார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

பத்துஜி வந்தவுடன் வாசு என்மீது குற்றப்பத்திரிக்கையை வாசித்தான். அதிகமாகச் சட்டம் போட்டால் ஆள் சேர்க்க முடியாது என்றேன் நான். பத்துஜி, “ஆள் கணக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நாலு பேர் இருந்தாலும் ஷாகா ஒழுங்காக நடக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார். நிலைமையைச் சமாளிப்பதற்காக ஷாகா பெசன்ட நகருக்கு மாற்றப்பட்டது.

இன்று வாசு பெங்களூருவில் இருக்கிறான். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்து பதவிப் படிகளில் ஏறி லெப்டிநென்ட் கர்னலாகி ஓய்வு பெற்று பெங்களூருவில் வசிக்கிறான். பாலாஜியின் பணி ஒரு தொண்டு நிறுவனத்தில். சரத் என்கிற சரத்குமார், தமிழகத்தின் திரைப்பட நட்சத்திரங்களில் முன்னணியில் இருக்கிறான்(ர்).

(தொடரும்.)

Leave a Reply