Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 15 – சுப்பு

அரங்கம் என்ற தீவு

எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு கடலில் கட்டுமரப் பயணம் போவதுண்டு. அலைகளைக் கடந்து ஆழமான பகுதிக்குப் போனால் நல்ல வெய்யில் நேரத்திலும் குளுமையாயிருக்கும். கட்டுமரம் கடலின் அசைவுக்கேற்றபடி மெதுவாக ஆடும். கடல் நீலநிறத்தை விட்டுக் கருப்பாகவோ, பச்சையாகவோ இருக்கும். மரத்தில் உட்கார்ந்துகொண்டு தண்ணீரில் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, நாங்கள் எடுத்துப்போன சாதத்தையோ, பிரட் பட்டர் ஜாமையோ சாப்பிடுவோம். வெகு நேரம் அங்கேயே தங்கியிருந்துவிட்டு மாலையில் கரைக்குத் திரும்புவோம்.

விஷ்ணுவுக்கு நீச்சல் தெரியும். அவனும் எப்போதாவது எங்களோடு சேர்ந்து கொள்ளுவான். ஆட்கள் அதிகமாயிருந்தால் இரண்டு கட்டுமரங்களை எடுத்துப் போவதும் உண்டு. இந்தக் கும்பலில் நீச்சல் தெரியாதவர்கள் நானும் பிரபாகரனும்தான். பிரபாகரன் மீனவர் குலத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் கடல் தொழிலுக்குப் போகாமல் ஐ.டி.ஐ. படித்துவிட்டதால் நீச்சல் தெரியாது. என்னையும் பிரபாகரனையும் ஆளுக்கொரு தாம்புக் கயிற்றை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கடலில் இறக்குவார்கள். யார் முதலில் கயிற்றை அசைக்கிறார்களோ அவர்கள் அவுட். கண்களைத் திறந்தால் உப்புநீர் பட்டுக் கண் எரியும். கண்ணைத் திறக்க மாட்டேன். மூச்சுவிட முடியாமல் திணறி மூக்கில் நீரேறி தலைக்குள் போய்விடும். வாயைத் திறந்து குடித்த நீரால் வயிறு பெரிதாகிவிடும். இத்தனை கஷ்டப்பட்டாலும் நான் ஒரு நாளும் முதலில் கயிற்றை அசைத்ததில்லை.

கயிற்றை அசைத்தபிறகு இருவரையும் மேலே இழுத்து விடுவார்கள். மேலே வந்தபிறகு கட்டு மரத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு மூச்சு விடுவோம். வாந்தி எடுப்போம். வாந்தி எடுத்தால் பிறகு நிறைய சாப்பிடலாம் என்பது அப்போதிருந்த அபிப்பிராயம். ‘சாதிப் பெயரைக் கெடுக்கிறான்’ என்று சொல்லி நண்பர்கள் பிரபாகரனை அடிப்பார்கள்.

இவ்வாறு ஒருமுறை கடலுக்குப் போயிருந்தபோது ராட்சத அலை (Tidal wave) வந்துவிட்டது. நான் கரையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்ததால் இதைக் கவனிக்கவில்லை. என் எதிரே நின்று கொண்டிருந்தவன் திடீரென்று தண்ணீரில் குதித்துவிட்டான். எனக்குப் பின்னாலிருந்த ராஜேந்திரனும் குதித்துவிட்டான் என்பதைத் தெரிந்துகொண்டேன். இன்னொரு கட்டுமரத்திலிருந்த நால்வரும் என் கண்முன்னே தண்ணீரில் குதித்துவிட்டார்கள். ஏன் எல்லோரும் குதிக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது வானம் இருட்டிவிட்டது. வயிறு ரங்கராட்டினத்தில் போவதுபோல் சங்கடம் செய்தது. எனக்குப் பக்கத்தில் இருக்க வேண்டிய கடல்நீர் நழுவிக் கீழே போனது. அப்போதுதான் பெரிய அலை ஒன்று கட்டுமரத்தை வேகமாக இழுத்துப்போவதைப் புரிந்துகொண்டேன். கடல்பரப்புக்கு ஆறு அடி உயரத்தில் வேகமான சவாரி. இந்தப் பயணம் சில நிமிடங்கள் நீடித்தது. திடீரென்று அலை கட்டுமரத்தைத் தாண்டிப் போய்விடவே, மரம் கீழே விழுந்தது. மரம் கீழே விழும்போது புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்தேன். கட்டுமரத்தில் குந்தி உட்கார்ந்துகொண்டு குறுக்குக் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மரம் கீழே விழுந்த வேகத்தில் மீண்டும் எகிறும்போது நான் பத்திரமாக மரத்திலேயே இருக்க முடிந்தது. இல்லாவிட்டால் மரம் என்னைத் தூக்கி எறிந்திருக்கும்.

இதற்குள் தண்ணீருக்குள் மூழ்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே உணர்வோடு ‘சுப்பு, சுப்பு’ என்று கத்தியபடி வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்தபிறகுதான் அவர்களுக்கு நிம்மதி. அவசரமாக மரங்களில் ஏறி மரங்களைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள். திசையே தெரியாமல் இருட்டிவிட்டது. காற்று வேகத்தில் மரத்தைச் செலுத்த நண்பர்கள் மிகவும் போராடினார்கள். மீண்டும் மீண்டும் பெரிய அலைகள். கொந்தளிக்கும் கடலின் நுரை வெள்ளம். என்னுடைய கண்முன்னே தென்குலத்தார் சிலர் விடாப்பிடியாக வந்து நின்றார்கள்.

சரியாக ஒரு மணி நேரம் சளைக்காமல், நண்பர்கள் துடுப்பு போட்டுக்கொண்டே இருந்தார்கள். பிறகு தென்பட்டது, பேஸின் பிரிட்ஜ் டவர். அன்று உயிர் தப்பியது அதிசயம்தான். இந்த மாதிரி ராட்சத அலைகளில் சிக்கினால் அவர்கள் கட்டுமரத்தோடு கடலில் புதைக்கப்படுவார்கள். எலும்பு கூடக் கிடைக்காது என்பதைக் கரைக்கு வந்தவுடன் தெரிந்துகொண்டேன்.

வருடக் கணக்கில் மீனவர்களோடு பழகியதில் எனக்கு அவர்களுடைய விவகாரங்கள் அத்துபடி ஆயிற்று. மீன்களின் வகைகளைத் தெரிந்துகொண்டேன். காற்று ஓட்டம் பற்றியும், கடல் நீரோட்டம் பற்றியும், மீன் பிடி சாதனங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மீன் முள் தொண்டையில் சிக்காமல் மீன் சாப்பிடுவது எப்படி, மீனவர்களின் குல ஆசாரம் என்ன என்பதெல்லாம் தெரிந்துகொண்டேன். வெகு சீக்கிரத்திலேயே இந்த ஜனங்களுக்கு நான் வேண்டப்பட்டவனாகி விட்டேன்.

எனக்கு வேலை இல்லை என்பதைப் பற்றி நொச்சிக்குப்பத்தில் யாரும் குறையாகச் சொல்லவில்லை. ஏனென்றால் இங்கிருந்த படித்தவர்களில் ஒருத்தருக்கும் வேலை கிடைக்கவில்லை. தவிர, தேர்தல் அரசியலைக் குறைத்துக்கொண்ட பிறகு ராஜேந்திரனும் நானும் இங்கு எல்லாத் தரப்பினராலும் விரும்பப்பட்டோம்.

மீன்பிடி வலை வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் என்று ராஜேந்திரனுக்கு ஒரு யோசனை. இரவு நேரங்களில் அகில இந்திய வானொலி ப்ளாட்பாரத்தில் படுத்துக்கொண்டு இதைப்பற்றி அடிக்கடி பேசி, நிறையக் கனவு கண்டு நாங்கள் பிழைப்பதற்கு இதுதான் ஒரே வழியென்று முடிவெடுத்தோம். தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லோரும் ஒரே வியாபாரியிடமிருந்துதான் தங்களுக்குத் தேவையான வலைகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த வலைகள் எங்கே தயாரிக்கிறார்கள் என்ற விவரமே யாருக்கும் தெரியாத மர்மமாயிருந்தது. அந்த வியாபாரியிடம் வேலை செய்து கொண்டிருந்த பையனிடம் நான் நெருங்கிப்பழகி, இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டேன். கர்நாடகாவில் ஹோஸ்பேட்டுக்கருகில் துங்கபத்ரா அணையில் இதற்கான மிஷின் உள்ளதென்று தெரிய வந்தது. துங்கபத்ரா எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே போய்வருகிற அளவுக்கு வசதியும் இல்லை.

இதற்குள் விஷ்ணு இஞ்சினியரிங் முடித்துவிட்டு சேலத்தில் வேலைக்குப் போய்விட்டான். வார இறுதியில் சென்னைக்கு வருபவனிடம் தவறாமல் மீண்டும் மீண்டும் வலை வியாபாரத்தின் செழிப்பான எதிர்காலம் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய தொந்தரவைத் தாங்க முடியாமல் விஷ்ணு 500 ரூபாய் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் ராஜேந்திரன் அதில் 300 ரூபாயைச் செலவழித்துவிட்டான். இதனால் எனக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது. எப்படியாவது துங்கபத்ரா போய் வந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பது ராஜேந்திரன் கட்சி. அவன் 300 ரூபாயை திருப்பிக் கொடுத்தால்தான் புறப்பட முடியும் என்பது என் கட்சி. இதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது. பணத்தைக் கொடுத்த விஷ்ணுவோ என்னை நச்சரித்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் துங்கபத்ராவுக்குப் புறப்பட்டோம்.

பம்பாய் மெயிலில் ஏறி குண்டக்கல்லில் ரயில் மாறி ஹாஸ்பேட்டுக்குப் போனபோது மாலை நேரம் ஆகிவிட்டது. அங்கிருந்து துங்கபத்ராவுக்கு பஸ். துங்கபத்ராவுக்குப் போய், வலை தயாரிக்கும் தொழிற்சாலையில் நுழைந்து அந்த மிஷினைப் பார்த்ததும் “இனிமேல் நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டாம்” என்று ராஜேந்திரன் சொல்லிவிட்டான். அங்கிருந்த மேனேஜரிடம் பேசிவிட்டு, மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தோம். லாட்ஜுக்குப் போய்த் தங்கலாமென்று நினைத்துக் கையிலிருந்த காசை கணக்குப் பார்த்தால் ஷாக். நாங்கள் அப்போதே புறப்பட்டு ஹாஸ்பெட்டில் ரயிலைப் பிடித்தால்தான் ஒழுங்காக சென்னைக்குப் போய்ச்சேர முடியும். ஒரு வேளை அதிகமாகத் தங்கினால் சாப்பாட்டுக்கே காசு கிடையாது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஹோஸ்பேட்டுக்குப் பஸ் கிடையாது. ரயில் தவறி விடப்போகிறதே என்ற பயத்தில் ஹோஸ்பேட் வரை தண்டவாளத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடித்தோம்.

பெரியவர் ஒருவரின் ஆலோசனைப்படி வஞ்சிர மீனைப் பிடிக்கும் வலை ஒன்று தயாரிப்பதென்று முனைந்தோம். சென்னையிலிருந்து நைலான் நூலை வாங்கிக்கொண்டு துங்கபத்ராவிற்குப் போனோம். துங்கபத்ராவில் நெய்த வலையை எடுத்துக்கொண்டு, ஏகப்பட்ட கனவுகளைச் சுமந்துகொண்டு சென்னைக்கு வந்தோம். இதைச் செய்வதற்கு 5000/- ரூபாய் செலவாயிற்று. இந்தத் தொகையும் விஷ்ணுவால் வழங்கப்பட்டதுதான். வியாபாரம் செய்வது ஒருபுறமிருக்க எனக்குக் கடன் வாங்குவதில் தேர்ச்சியும், ருசியும் ஏற்பட்டுவிட்டது. தேவையான அளவு பணத்தைக் கடன் கொடுப்பதற்குக் குப்பத்தில் ஆட்கள் இருந்தார்கள். எங்களுடைய அன்றாடச் செலவை ஈடு செய்வதற்காக நானும் ராஜேந்திரனும் கடன் வாங்க ஆரம்பித்தோம். எந்தவிதமான எழுத்தோ, பத்திரமோ கிடையாது. வாய் வார்த்தைதான். வட்டி மட்டும் குறைந்தது ஆண்டிற்கு அறுபது சதவீதம்.

வஞ்சிரம் வலையை வாங்க யாரும் தயாராயில்லை. பரிசோதனை முயற்சியாகப் பாதி வலையை எண்ணூர் தாழங்குப்பத்தில் இருந்த ஒருவருக்குக் கொடுத்தோம். வலையைப் பயன்படுத்தி அவர் சம்பாதித்தவுடன் எங்களுக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டுமென்று அவரிடம் கூறினோம். அவரும் உடன்பட்டார். வலையை வாங்கிக்கொண்டு போனவர் அதற்குப் பிறகு எங்களை வந்து பார்க்கவில்லை. வஞ்சிரம் வலையில் நல்ல வருமானம் என்று சேதிமட்டும் அவ்வப்போது வரும். சில மாதங்கள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே வசூலுக்குப் புறப்பட்டேன்.

ஆறு மாதம் நடையாய் நடந்தும் ஒன்றும் பெயரவில்லை. இந்தச் சமயத்தில் எனக்குக் குப்பு மாணிக்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது. குப்பு மாணிக்கம் ராஜேந்திரனுக்குப் பெரியம்மா. எனக்கும் பெரியம்மா ஆனார். அறுபது வயதான மூதாட்டி. விதவை. குப்பு மாணிக்கம் ஒரு விசித்திரமான பெண்மணி. கருவாடு விற்பது இவருடைய தொழில். ஆனால் மாதத்தில் பாதி நாட்கள் விரதமிருப்பார். மீன் சாப்பிட மாட்டார். எப்போதும் ஏதாவது பிரயாணத்திலேயே இருப்பார். ஏகப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள். பையன்கள் இவரை வைத்துக் காப்பாற்றத் தயாராயிருந்தாலும் இவர் சுயமாக சம்பாதிக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். வஞ்சிரம் வலையை எப்படி விற்பது என்று ஆலோசனை கேட்கப் போனவனை குப்பு மாணிக்கத்தின் அன்பு கட்டிப்போட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து பல வருடங்களில் குப்பு மாணிக்கத்தை ஆலோசிக்காமல் நான் வியாபார விஷயமாக எதுவும் செய்ததில்லை. இந்த நேரத்தில் நானும் ராஜேந்திரனும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்த கடன்களுக்குப் பாதிக்கு மேல் குப்புமாணிக்கம்தான் காரண்டி.

குப்பு மாணிக்கம் எங்களை அரங்கத்திற்கு அழைத்துப் போனார். நாங்கள் போவதற்கு முன்பே வஞ்சிரம் வலை அங்கே போயிருந்தது. அரங்கத்திலும் எண்ணூர் தாழங்குப்பம் பார்முலாதான். இதில் எனக்குக் கொஞ்சமும் சம்மதமில்லையென்றாலும், வியாபாரம் என்றால் வளைந்து கொடுத்துத் தீர வேண்டும் என்று ராஜேந்திரன் சாதித்துவிட்டான். அரங்கத்திற்குப் போக வேண்டுமென்றால் சென்னையிலிருந்து பழவேற்காட்டிற்கு ((Pulicat) பஸ்ஸில் போய், அங்கே படகில் ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றைக் கடந்த பிறகு பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகிலோ, கால்வாய்க்கரை ஓரமாய் நடந்தோ அரங்கத்திற்குப் போகலாம். பதினைந்து கிலோ மீட்டர் பயணம்.

அரங்கத்திற்குப் போகிறோம் என்று தெரிந்தவுடன் குப்பத்து நண்பர்கள் அரங்கத்தைப் பற்றிக் கதைகதையாகச் சொன்னார்கள். அரங்கத்தின் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையானவை. அங்கே குப்பை போட்டால் நூறு ரூபாய் அபராதம். ஊர்க் கிணற்றில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய். ஊர்த்தலைவரை எதிர்த்துப் பேசினால் ஆயிரம் ரூபாய். இந்த ஊர்க்காரருக்கு நாம் கடன் கொடுத்துப் பணத்தை வசூல் செய்ய முடியாவிட்டால் ஊரில் புகார் செய்தால் போதும். நமக்குத் தரவேண்டிய பாக்கியை ஊர்ப்பணத்திலிருந்து கொடுத்துவிட்டு ஊரார் அவனிடம் வசூல் செய்து கொள்வார்கள். அரங்கத்தில் கன்னிப் பெண்ணை யாராவது காதல் செய்தால் அவர்களைக் கட்டிப்போட்டுக் கல்யாணம் செய்துவிடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

உல்லாசப் படகையும், கன்னிப் பெண்களையும் கற்பனை செய்தவாறு பழவேற்காட்டைக் கடந்தவனுக்கு அக்கரைக்குப் போனவுடன் வெறுத்துவிட்டது. பதினைந்து கிலோமீட்டர் முள்ளோடு முள் மோதும் காடு. நரிகளும், சாராயம் காய்ச்சுபவர்களும்தான் இங்கே சஞ்சாரம். படகுப் பயணம் என்றால் சிந்து நதியின் மிசை நிலவல்ல. முப்பது அடி அகலமுள்ள, ஆழமில்லாத கால்வாயில் போகும் இந்தப் படகை கரையில் நடந்து போகிறவன் ஓவர்டேக் செய்துவிடலாம். படகு அரங்கத்திற்குப் போவதற்கு மூன்று மணி நேரமாகும். கிராமத்துத் தேவையான எல்லாப் பொருட்களும் படகு மூலமாகத்தான் வரும். கால்வாய் சென்னையிலிருப்பதுபோல் சாக்கடையாயிருக்காது. கலங்கிய சேற்று நீராக இருக்கும்.

அரங்கத்தில் எனக்கு வெயில் நேரத்தில் குந்தக் குடிசை கிடையாது. ஒரு பக்கம் கால்வாய், இன்னொரு பக்கம் கடல். ஊர் மேட்டிலிருக்கும். ஊரில் ஒரே ஒரு டீக்கடை. அங்கேயும் ஆட்டுப்பாலில்தான் டீ போடுவார்கள். ஆட்டுப்பாலில் ரோமம் இருக்கும். அந்த ரோமம் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதற்காக சிகிச்சை என்ன என்பதையெல்லாம் எனக்கு ஏற்கெனவே உபதேசிக்கப்பட்டிருந்தது. எனவே, நான் அரங்கத்தில் இருந்தவரை டீ குடிக்கவில்லை.

நாங்கள் போயிருந்தபோது வலையை வாங்கிப் போனவனின் தங்கைக்குத் திருமணம். திருமணத்தில் மொய்ப்பணம் வந்தவுடன் வலை பாக்கியை வசூல் செய்து கொள்ளலாம் என்பது குப்பு மாணிக்கத்தின் யோசனை. நானும் ஏற்றுக்கொண்டேன். திருமணம் சுண்ணாம்புக்குளம் என்ற ஊரில். பெண் வீட்டாரோடு நாங்களும் புறப்பட்டோம். மதியம் பதினோறு மணிக்கு அரங்கத்தில் சாப்பிட்டது. மாலை ஆறு மணிக்கு காற்றைப் பார்த்து படகு புறப்பட்டது. சுண்ணாம்புக் குளம் வந்தபோது இரவு மணி பத்து. டூரிஸ்ட் பேக் தலைக்குமேல். தொடைவரை மடிக்கப்பட்ட பேண்ட். ஒரு கையில் செருப்பு. சேற்றில் துழாவிக்கொண்டு கரைக்கு வந்தால் கண்ணே தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. கொஞ்ச நேரம் கழித்துப் பிள்ளை வீட்டார் வந்தார்கள். எனக்கும் ராஜேந்திரனுக்கும் பசி மயக்கத்தில் அடி எடுத்து வைக்க முடியவில்லை.

அப்போது புதிய சோதனை ஆரம்பாகியது. பெண் வீட்டார் பத்து அடி நடப்பார்கள். அதற்குள் பெண்ணுக்கு மாமனொருவன் குறுக்கே வந்து மறித்துக் கொள்வான். அவன் கோபித்துக் கொள்ள வேண்டுமென்பது சடங்கு. பிள்ளை வீட்டார் அவனைச் சமாதானம் செய்வார்கள். சமாதானம் செய்வதென்றால் சாராயம் கொடுப்பதென்று பொருள். கல்யாணப் பெண்ணும், மற்றப் பெண்களும், குப்பு மாணிக்கமும், நாங்களும் பசியில் தவிக்கும்போது மற்றவர்கள் உரிமைக் குடியை குடித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு ஊர்வலம் மெல்ல முன்னேறும். மீண்டும் மாமன் மறியல், சாராய சப்ளை, இத்யாதி. இரண்டு மணி நேரம் இந்த நிலைமையில் தாக்குப் பிடித்தோம். இதற்குள் ஆண்கள் எல்லோரும் என்ன நடக்கிறதென்றே தெரியாத அளவுக்குக் குடித்துவிட்டிருந்தார்கள். பிறகு குப்பு மாணிக்கத்தோடு நாங்கள் ஊருக்குள் நுழைந்தோம். மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் சாப்பாடு போடச் சொன்னோம். அங்கேயும் ஒரு சிறிய பிரச்சினை. சாராயம் குடித்துவிட்டுத்தான் சாப்பாடு என்பதில் அவர்கள் கண்டிப்பாய் இருந்தார்கள். அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றினோம்.

காலையில் கல்யாணம் முடிந்தாலும் மொய்ப் பணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பெண் வீட்டாரோடு வந்த ஒரு போலீஸ்காரர் வந்த இடத்தில் கள் குடித்துவிட்டுக் காசு தராமல் கலாட்டா செய்துவிட்டார். கள் இறக்குபவரின் ஆட்கள் எங்களைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். நிலைமை மோசமாகிப் போனவுடன், நாங்கள் கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிகள் என்று சொல்லி அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

அடுத்து வலையை விற்பதற்காக நெல்லூர் அருகிலுள்ள முத்துக்கூர் என்ற இடத்திற்குப் போனோம். அங்கும் விற்பனை இல்லை. திரும்பிவந்து நெல்லூர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தோம். ஹவுரா மெயிலில் சென்னைக்கு டிக்கெட் வாங்கியிருந்தோம். வண்டி வந்து நின்றவுடன் தூக்கம் கலைந்தது. தூக்கக் கலக்கத்தில் வண்டியில் ஏறி ஆளுக்கொரு பர்த்தில் படுத்துக்கொண்டோம். கண் விழித்தபோது காலை மணி ஆறு. வண்டி இன்னும் ஆந்திராவையே தாண்டவில்லை. ஹெளரா மெயில் என்று நினைத்து பாசஞ்சர் ரயிலில் ஏறி விட்டிருந்தோம். கையில் காசில்லை. பசி…

(தொடரும்)

Leave a Reply