Posted on Leave a comment

மாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்


இயற்கையாகப் பரிணமித்த மானுடப் பண்பாடுகளிலும் சமய பாரம்பரியங்களிலும் பெண்களின் மாதவிடாய் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. அது உயிர் சுழற்சியின் முக்கிய அடையாளம். எனவே அந்த நிகழ்வை ஒட்டி சடங்குகள், சம்பிரதாயங்கள், ஐதீகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சடங்கு சம்பிரதாயங்களில் தீட்டு, பெண்-இழிவு போன்ற கோட்பாடுகளும் காலப்போக்கில் ஒட்டிக்கொண்டன. ஆனால் அடிப்படையில் இந்தக் கோட்பாடுகளும் சடங்கு சம்பிரதாயங்களும், மனித சமுதாயம் மாதவிடாய் குறித்த சில ஆழமான புரிதல்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் உருவாக்கப்பட்டன. அவை பெண்ணின் உயிர்ப்பிக்கும் தன்மையை மையப்படுத்தி அமைந்தவை. மாதவிடாய்க் காலத்தின் உடல்நிலை மனநிலை ஆகியவற்றையும் அவை கணக்கில் கொண்டிருந்தன. எனவே இச்சடங்கு சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள் அல்லது பெண்களை அடிமைப்படுத்தும் சதியாலோசனைகள் என ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது மானுட சமுதாயத்துக்கு நன்மை தராது என்பது மட்டுமல்ல, அது தீமையாகவும் முடியும்.

இங்கு நாம் இது தொடர்பாக இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணப் போகிறோம். ஒன்று: யூத சமயத்தில் எப்படி மாதவிடாய் தொடர்பான தீட்டுக்கோட்பாடும் சடங்குகளும் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது. இங்கே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. யூத மதச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் யூத விவிலியத்துக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கும் உண்மையான தொடர்புகள் எதுவும் கிடையாது. உதாரணமாக இங்கு கூறப் போகும் மாதவிடாய்ச் சடங்குகள் எதுவும் கிறிஸ்தவத்தில் இல்லை. கிறிஸ்தவம் யூத மதத்தின் மீது படர்ந்த ஒரு ஒட்டுண்ணியே தவிர அதனுடன் உண்மையான தொடர்பு கொண்ட மதம் இல்லை.

யூத மதத்தில் பெண் மாதவிடாய் முடிந்ததும் தூய்மையான இயற்கை நீரில் மூழ்கி அவளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவள் தன்னை மீட்டுருவாக்கிக் கொள்வதுடன் அவளது குடும்பத்துக்கும் ஐஸ்வரியம் அளிக்கிறாள். மிட்வா (Mitweh) எனும் இந்தப் புனித சட்டத்தை மிக எளிதாக பெண்-எதிர்ப்பு ஆணாதிக்கச் சட்டம் எனப் பேசமுடியும். மத்திய கால யூத சமயாச்சாரியார்கள் அப்படிப்பட்ட விதத்தில் எழுதியிருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு இஸ்ரேல் முதல் அமெரிக்கா வரை மிட்வாவுக்கான அமைப்புகள் மீண்டு உருவாகியுள்ளன. அங்கு பெண்கள் சென்று மாதவிடாய்க்குப் பிறகு குளிக்கின்றனர். அதை அவர்கள் தம் குடும்ப வாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்கும் ஆன்மிக புத்தெழுச்சிக்குமான பாலமாகப் பார்க்கின்றனர். இத்தகைய மிட்வா – நீராடும் மையங்கள்- பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதுடன் அவற்றுக்கு முன்பதிவு செய்ய வேண்டியதுள்ளது. அது பெண்கள் கூடுவதற்கான ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யூத சமுதாயத்தில் ‘ஃபெமிநாஸி’ எனப்படுகிற நம்மூர் ஈவேராத்தனமான மாவோயிஸ்ட் தனமான பெண்ணியவாதிகள் இல்லை. இல்லாவிட்டால் இந்த மையங்களை மூடச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்திருப்பார்கள். இம்மையங்களின் செயல்பாட்டிலும் கருத்தியலிலும் ஒரு முக்கியப் பெண்ணிய மாற்றம் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அது தீட்டு என்கிற கருத்தாக்கத்திலுலிருந்து மாதவிடாய் குறித்த சடங்கை ‘புத்துயிர்ப்பு’ என்கிற கருத்தாக்கத்துக்கு நகர்த்தியிருப்பதுதான்.

இதே போன்ற போக்குகள் இந்து சமுதாயத்திலும் நிகழ்கிறது. இந்து சமுதாயம், யூத சமுதாயம் போன்றவற்றில் இந்த மாற்றங்கள் மேலிருந்து சுமத்தப்படாமல் மிக இயல்பாகச் சமுதாயத்திலேயே உருவாகின்றன. ஆண்-மைய சமுதாய போக்குகளும் சமுதாய தேக்கநிலைகளும் இங்கும் உள்ளன. ஆனால் அதிலிருந்து விடுபடுவது என்பது ஒட்டுமொத்தமாக இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களையே அலட்சியப்படுத்துவதோ அல்லது வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதோ அல்ல.

அப்படிச் செய்ய முயன்றால் ஏற்படும் விபரீதங்கள் எப்படிப்பட்ட கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான பிரத்யட்ச ஆதாரத்தை நமக்கு அளித்திருக்கிறார் மார்க்ஸிஸ்ட் மகானுபாவன் மாவோ.

மாவோ

வரலாற்றுப் பேராசிரியர் ஃப்ராங்க் டிகோட்டர் (Frank Dikötter) ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். சீனாவின் ஆவணத்தொகுப்புகளைப் பார்க்கும் அரிய வாய்ப்புகள் கொண்ட வெகுசில மனிதர்களில் ஒருவர். அவர் 1958-62 சீனாவில் மாவோ தலைமையேற்று உருவாக்கிய பஞ்சம் குறித்து எழுதிய நூல் உலக பிரசித்தி பெற்றது. அறிவுலகத்தினரால் சீனாவின் 58-62 பஞ்சம் குறித்த சிறந்த ஆதாரபூர்வமான நூலாக அறியப்படுவது. ‘மாவோவின் பெரும் பஞ்சம்’ (Mao’s Great Famine 1958-62, 2010) எனும் அந்த நூலில் அவர் அன்று சீன சமுதாயத்தில் மார்க்ஸிய-மாவோயிஸ்ட்கள் செய்த கொடுஞ்செயல்களை அவர்களின் ஆவணங்களின் அடிப்படையிலேயே விவரித்துள்ளார். அவற்றுள் முக்கியமான ஒன்று எப்படி மாவோயிச மார்க்ஸிஸ்ட்கள் ஒற்றைப்படையான சமத்துவத்தைப் பெண்கள் மீது சுமத்தினார்கள் என்பது:

அனைவரிலும் மிகவும் பாதிக்கப்படும் சூழலில் இருந்தவர்கள் பெண்களே. ஏனெனில் உழைப்புக்கே உணவு என்பதை தாரக மந்திரமாகச் செயல்படுத்திய அரசு இயந்திரம், உடல் சார்ந்த எந்த பலவீனத்தையும் பட்டினியாகவே மாற்றியது. தொழிற்சாலைகளிலும், கூட்டுப்பண்ணை வயல்களிலும் கோரப்பட்ட இலக்குகளை அடைய உழைக்க வேண்டிய கட்டாயத்தில் மாதவிடாய் என்பது ஒரு பெரும் பிழையாகப் பார்க்கப்பட்டது. மாதவிடாய் தொடர்பாக பாரம்பரிய சீன மதத்தில் இருந்த விலக்குகள், தீட்டு தொடர்பாக இருந்த சில ஓய்வுகள் ஒரே நாளில் ஒரேயடியாக ஒழிக்கப்பட்டன. மாதவிடாய்க் காலங்களில் வேலைக்கு வராமல் இருப்பதற்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள் சிலர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாத விடாய்க்காக விடுப்பு கேட்ட பெண்களை மிகவும் அவமானப்படுத்தினார்கள். செங்டாங் எனும் பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சி உயரதிகாரி விடுப்பு கேட்ட பெண்களின் உள்ளாடைகளை இரத்தம் இருக்கிறதா எனும் சோதனைக்கு உள்ளாக்குவதை நடைமுறையாகவே மாற்றினார். இப்படிப்பட்ட அவமானகரமான சோதனைகளை சந்திப்பதைக் காட்டிலும் மாதவிடாய்க் காலங்களிலும் தொழிற்சாலைகளுக்கும் வயல்களுக்கும் சென்று உழைப்பதே மேல் எனப் பெண்கள் கட்டாய உழைப்பைத் தேர்ந்தெடுத்தனர். இது பெரும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. பல பெண்கள் இதன் காரணமாக மாதவிடாய் வேதனைகளில் கடுமையாகத் துன்புற்றார்கள். பின்னர் பேறுகாலங்களில் அதிகமாக இறக்கலானார்கள்.

இப்பகுதியில் வரிகளுக்கு நடுவே படிக்கும்போது ஒரு விஷயம் புரியும். சீனாவில் இருந்த பாரம்பரிய மாதவிடாய் தொடர்பான தீட்டுகளுக்கு மற்றொரு பரிணாமமும் இருந்தது. அது பெண்களுக்கு உடல் உழைப்பிலிருந்து ஓய்வு வழங்கியது. அதை மாவோவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘மௌன கீதங்கள்’ படத்தில் இயக்குநர் பாக்கியராஜ் மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் வேதனைகளையும் அழகாகக் காட்டியிருப்பார். அத்துடன் அதை ‘அந்த மூன்று நாட்கள்’ என்பது உடல் உறவு முடியாத நாட்கள் என்பதைத் தாண்டி எப்படி ஆண்கள் சிந்திக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதையும் சாட்டையடி போலக் காட்டியிருப்பார். இயக்குநர் பாக்கியராஜுக்கு பெண்களின் உளவியல் குறித்து இருந்த அறிதலில் நூற்றில் ஒரு பங்கு மாவோவுக்கு இருந்திருந்தால் எத்தனையோ பெண்களின் மரணமும் கொடும் வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பாக்கியராஜுக்கு இருந்த பண்பாட்டு அறிவு மாவோவுக்கு இருக்கவில்லை. மாவோ ஒரு பண்பாட்டு அறிவிலி, அத்துடன் ஒரு கொடுங்கோலனும் கூட. பாரம்பரியப் பண்பாடுகளுக்கு எதிரான புரோட்டஸ்டண்ட் காலனிய மனோவியாதி மார்க்சிய மாவோக்களுக்கு இயல்பானது. இதன் விளைவுகளைப் பேராசிரியர் மேலும் விவரிக்கிறார்:

பட்டினியாலும் பெரும் அயர்ச்சியாலும் பெண்கள் மிகவும் பலவீனமடைந்தனர். எந்த அளவு பலவீனமடைந்தார்களென்றால் அவர்களுக்கு மாதவிடாய் வருவதே நின்றுவிட்டது. பெண்களுக்கு ஏதோ கொஞ்சம் மருத்துவ உதவிகள் கிடைத்த நகர்ப்புறங்களிலேயே இதுதான் நிலைமையாக இருந்தது. பெய்ஜிங்குக்கு தெற்கே உள்ள மாவட்டம் ஒன்றில் உலோக தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களில் பாதிப்பேருக்கு மாதவிடாய் வருவது நின்றுவிட்டது. அவர்களுக்கு பிறப்புறுப்புகளில் தொற்றுகளும், கருப்பைகளில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. அவர்கள் சுத்திகரித்து கொள்ளக்கூட வசதிகள் இல்லை… கிராமப்புறப் பெண்களின் நிலையோ இன்னும் படுமோசம். பலரின் கருப்பைகள் கட்டுடைந்து போயின.

சூழ்நிலை இப்படி இருக்க பெண்களின் உதவிக்கு மார்க்ஸும் வரவில்லை. கம்யூனிஸ்ட் அகிலமும் வரவில்லை. அவர்களில் பலரின் உயிர்களைக் காப்பாற்றியது ‘மூடநம்பிக்கை’ நிறைந்ததாகவும் பெண்ணடிமைத்தனம் என்றும் சொல்லி மார்க்ஸிஸ்ட்களும் மாவோயிஸவாதிகளும் வேட்டையாடிய பாரம்பரியச் சடங்கு சம்பிரதாயங்களும் அவை தொடர்பான மருத்துவ முறைகளும்தான். பேரா. டிகோட்டர் எழுதுகிறார்:

“கிராமத்தவர்கள் பலர் மருத்துவமனைகளுக்குச் செல்ல அச்சப்பட்டனர். அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை அணுகினர். ஹுபேய் எனும் பகுதியில் பாரம்பரிய மருத்துவச்சிகள் காலம் காலமாகத் தலைமுறைகள் தோறும் கையளிக்கப்பட்டு வந்த மருந்துகள் மூலம் பெண்களை குணப்படுத்தினர். வாங்க் மாமி என அறியப்பட்ட மருத்துவச்சி பல நூறு பெண்களுக்கு இப்படிப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் அவர்களின் கருப்பைக் குழாய்ப் பிரச்சினைகளிலிருந்து குணப்படுத்தினார். வீட்டில் (இரகசியமாக) நாலைந்து பெண்களைத் தங்க வைத்து அவர் மருந்துகளைக் கொடுக்க அவர் கணவர் காடுகளுக்குச் சென்று தேவைப்படும் மூலிகைச் செடிகளையும் வேர்களையும் கொண்டு வருவார். ஆனால் இதெல்லாம் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடக் கூடாது. அவற்றை கம்யூனிஸ்ட் அரசு சகித்துக் கொள்ளாது. இப்படிப்பட்ட மாற்று மருத்துவம் இல்லாத சூழலில் பெண்கள் வேறுவழியே இல்லாமல் கொடுமையான வேதனைகள் இருந்த போதிலும் மாவோயிஸ்ட் அரசுக்காகக் கடும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டார்கள்…”

ஆக மாவோ தாவோயிஸ்ட்களுக்கும், பௌத்தத்துக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் எதிராக மட்டும் வர்க்கப் போரை நடத்தவில்லை. சீனப் பெண்களின் கருப்பைகளுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினார். மார்க்ஸிஸம் என்பது ஸ்டாலினுக்கு யூத வெறுப்புக்கான ஆயுதமாகப் பயன்பட்டது போல மாவோவுக்கு ஹான் இனவெறிக்கான ஆயுதம். ஹிட்லருக்கும் மாவோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்தியாவிலும் இப்படிப்பட்ட இனவெறியும் வர்க்க வெறுப்பும் இணைந்த ஒரு கொடுங்கோல் இரத்தக் காட்டேறி ஆட்சியை நடத்த காம்ரேடுகள் தயாராகவே இருக்கிறார்கள். அதற்கான முதல் ஒத்திகைதான் சபரிமலை. ஆனால் இம்மண்ணில் சபரிமலை முதல் ஆற்றங்கால் வரை பாரம்பரியங்களின் பலமே இங்குக் கருப்பைகளுக்கு எதிரான கம்யூனிச வக்கிரத்தை நடத்தவிடாமல் தடுக்கிறது. எனவேதான் மார்க்ஸிஸ்ட்களுக்கு ஹிந்துத்துவத்தின் மீது அத்தனை வன்மையும் வக்கிரமும் கொண்ட ஆத்திரம்.

Leave a Reply