ஒற்றை அறை, கூடம், சமையல் பொந்து, ஒரு குளியலறை / கழிப்பறை என அந்தச் சின்னஞ்சிறு குடியிருப்பில் ஒருவர் பெருமூச்சு விட்டாலே பக்கத்து ஒண்டுக் குடித்தனத்துக்குக் கேட்டுவிடும். கூடத்தில் அமர்ந்திருக்கும் தனது நாத்தனார் மனதில் இந்தப் பேச்சு பாலை வார்த்திருக்கும் என நினைத்துக் கொண்டார் (குடும்பத்) தலைவி. அழுது அழுது அவரது முகம் வீங்கி இருந்தது.
தூங்காததால் கண்களைச் சுற்றிக் கருவளையம். இரண்டு நாட்களாக உண்ணாததால், எழுந்து நடமாட முடியவில்லை. காவல்துறையிடம் போகவேண்டாம் எனத் (குடும்பத்) தலைவன் முடிவெடுத்து விட்டார். கார்த்திக்கு ஒரே ஒரு மாமன்தான். அவனும் ‘கல்ஃப்’ வேலைக்குப் போய் இரண்டு வருடங்களாகிறது. அப்பா அம்மாவிடம் சொல்வதைத் தள்ளிப்போடும் அளவு அவர்கள் சிலநாட்கள் நிம்மதியாக இருக்கட்டும்.
*
“என்னடி அஞ்சு நிமிசத்துக்கு ஒருதபா நீ மொபைல எடுத்துப் பாத்துக்கினே இருப்பே. இப்போ கம்முனு இருக்க?” என்றாள் தோழி மாணவியிடம். மாணவியின் கண்கள் கலங்கி இருந்ததைக் கவனித்தாள்.
“கார்த்திக் பதில் போட்டானா?” ஆம் எனத் தலையை அசைத்தாள் மாணவி.
“எங்கே இருக்கானாம்?” பதிலுக்கு மாணவி உதட்டைப் பித்துக்கினாள். முக்கியமான கேள்வியைக் கேட்கத் தனிமை வாய்க்கவில்லை. மாலை இருவரும் சைக்கிள்களை எடுக்கும்போது யாரும் இல்லை. மெல்லிய குரலில் “ஏண்டி ரொம்ப ஒருமாதிரி இருக்க? எதாவது செஞ்சிட்டானா?” என்றாள் தோழி.
“அப்படீனா?”
“அப்டீனா? தொட்டானானு கேட்டேன்.”
“நீ எவன் கூடவாவது படுக்கறியா?” வெடித்தாள். தோழி திடுக்கிட்டாள்.
“அப்பறம் ஏண்டி என்ன மட்டும் கேக்குறே? நா அவன் இருக்குற இடம் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.”
*
தலைவனின் அண்ணன் தலைவன் இருவருக்கும் பொதுவாக ‘பிளாஸ்டிக் கப்’ இரண்டு மது நிறைந்து இருந்தன. “நீ வேற எந்த சொந்தக்காரங்களையும் தேடிப் போகாதே. நானே உனக்காக எல்லாருக்கிட்டேயும் பேசிட்டேன்.” தலைவன் கண்கள் பனித்தன.
“என்ன குறை வெச்சேன்? ஏன் ஓடிப் போனான்?”
“நீ போலீஸுக்கு ஏன் போகல? யாராவது கடத்தி இருந்தா?”
“ஏழை பாழைப் பையன யாரு கடத்துவா?”
“உனக்குத் தெரியல. கிட்னி திருடவங்களா இருக்கலாம்.”
“எனக்குப் போலீஸ் எதுவும் செய்வாங்கங்கிற நம்பிக்கை இல்ல.”
*
சீர்காழி போய் வர தலைவன் சிதம்பரத்தில் அறை எடுத்தபோதோ அல்லது அன்று இரவில் அவரது நெருக்கத்தின் போதோ தோழி அவரைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன்- குழந்தைகள் அவளை 24 மணிநேரமும் தேடுவார்கள் என்பதால் அவசரமாகத் தன்னைக் கேட்கக்கூடாது என்னும் புரிந்துணர்வை அவரோடு தோழி ஏற்படுத்தியவர்தான். இந்தமுறை அதற்கு விதிவிலக்கு தந்திருந்தார்.
நாடி ஜோசியரைப் பார்க்கப்போனபோது தலைவனும் உடன்வா என வலியுறுத்தவில்லை. இவரும் முன்வரவில்லை. அறையின் தனிமை ஒருவிதத்தில் இனிமையாகவே இருந்தது. தனிமை என்பது வாய்த்தால்தான். உண்மையில் தலைவனும் இல்லாமல் இதே அறையில் இன்னும் இரண்டுநாள் தங்க இயன்றால்கூட நிம்மதியாகத்தான் இருக்கும். ஜோசியரைப் பார்த்தபின் தலைவன் முகம் இன்னுமே கலக்கமாக ஆகிவிட்டது. “உயிரோடு இருக்கான்னாரு. எங்கே இருக்கான்னோ அல்லது திரும்பி வருவானான்னோ சொல்ல முடியலை அவராலே” என்றார்.
*
“ஒன் ப்ளஸ் 6 போனோட வருவேன்னான். அதான் ஒடியே போய்ட்டான்” என்றான் கார்த்திக்கின் பள்ளித்தோழன் 1.
“வெறும் நூறு ரூபாதான் பெட்கட்டி இருந்தான்” என்றான் 2.
“அவன் போனப்புறம் யாருடாக் ‘கட்டிங்’ வாங்கித்தர்றான்” என்றான் 3.
“எப்பிடியும் நீ ஓசிதான். யாரு வாங்கிக்கொடுத்தா உனக்கென்னடா?” என்றான் 4. அவன் ஸ்கூலுக்குக் கட் அடிச்சி காசு சேத்தாண்டா. உன்னால ஸ்கூல் பையையே தூக்க முடியலே” என்றான்.
இரவு மணி எட்டு. பள்ளிக்கூடக் காவலாளி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார். ஒரு மோட்டார் சைக்கிளைக் கண்டதும் அவரது கண்கள் பிரகாசித்தன. அது தள்ளிப்போய் பக்கத்தில் உள்ள முட்டுச்சந்தில் நின்றது. காவலாளி கொண்டு வந்த புகைப்படத்தைத் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இருசக்கர வாகன ஓட்டுனர். அவரிடமிருந்து தனக்குப் பணம் கைமாறியதும் காவலாளி முகம் இன்னும் மலர்ந்தது.
*
‘உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாயமான மாணவன்’ என்று பெட்டிச் செய்தித் தலைப்பு தொடங்கியது. அரசு உயர்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கார்த்திக்கைக் காணவில்லை. பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. இரு சக்கரவாகனம் பழுதுபார்க்கும் வேலைசெய்து பணம் சேர்த்த கார்த்திக் போனது எங்கே?
தினசரியை தலைமை ஆசிரியருக்கும் கல்வித்துறை அதிகாரிக்கும் இடையே இருந்த மேஜை மீது வைத்துச் சுட்டிக் காட்டினார் காவல்துறை உதவி ஆணையர். “சார் … உங்க பள்ளிக் கூடத்துல ஒரு பையன் வர்றானா வரதில்லையா… என்ன விஷயம் என்ன காரணம் எதையுமே நீங்க கவனிக்கிறதில்லையா?” என்றார் தலைமை ஆசிரியரைப் பார்த்து. கல்வி அதிகாரி “என்ன பதில் சொல்லப் போறீங்க?’ என்றார்.
ஓரிரு நொடிகள் மௌனம் காத்தபின் தலைமை ஆசிரியர், “டிஈஓ சாருக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களோட பேரண்ட்ஸுக்கு எஸ்எம்எஸ் கொடுக்கவோ அல்லது ஆட்களை வெச்சுத் தேடவோ எந்த வசதியும் கிடையாது. இந்தப் பையன் எப்பவுமே ரெகுலரே வர்றது இல்லை. ஆதி திராவிடர் விடுதிப் பையன்கள் விஷயத்துலே எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கிறோம். இவன் டே ஸ்காலர் சார்.”
“பசங்களுக்கு எப்படி எடுக்கிறீங்களோ தெரியாது, எனக்கு நல்லாப் பாடம் எடுக்கறீங்க. மீடியாவுக்கு நியூஸ் போனப்பறம்தான் நமக்கே தெரியவருது. நீங்க என்கிட்டே பேசற மாதிரி நான் சீஇஓ கிட்டே பதில் சொல்ல முடியாது. சட்டசபையிலே இது கேள்வியா மாறும். அப்போ உங்க மேலே நடவடிக்கை எடுக்கவேண்டி கூட வரலாம்.”
“பசங்களை ரொம்பக் கஷ்டப் பட்டுத்தான் மேனேஜ் பண்ரோம். ஆக்ஷன்னா எல்லா ஊர் ஹெச்எம் மேலேயும் எடுக்க வேண்டி வரும்.”
*
“கார்த்திக் எங்கே இருக்கான்?”
“எனக்கு எப்படி சார் தெரியும்?”
“என்னடா…. உன்கிட்டே வேலை செஞ்சவன் காணாப் போயிருக்கான். எதிர்க் கேள்வி போடுற?”
“முதல்லேடா போட்டு பேசறத நிறுத்துங்க. கம்யூனிஸ்ட் கட்சி மெம்பர் நானு.”
“சரீங்கண்ணே. கார்த்திக் எங்கேன்னு சொல்லிட்டுப் போங்கண்ணே.”
“அவன் என் மெக்கானிக் ஷாப்புல எப்பவாவதுதான் வேலைக்கி வருவான். அவன தினமும் நான்வரச் சொன்னதுமில்ல. என்கிட்ட வேல பாக்குறவன் அவனுக்கு நண்பன். அவன் சொல்லித்தான் இவனுக்கு நான் எப்பவாச்சும் டெம்பொரரியா வேலை கொடுத்தது.”
“சின்னப் பையனை வேலைக்கி வைக்கிறது குத்தம் தெரியுமா உனக்கு?”
“ஒரு சின்ன மெக்கானிக் ஷாப் சார் என்னுது. நான் மட்டும்தான் தினமும் வேலை பாக்குறவன். வேற யாருமே எனக்கு ஆர்டர் கிடைச்சா அப்பப்போ வந்துட்டுப் போறவங்க. நிறைய விசாரணை செஞ்சு வேலைக்கி வைக்கிற அளவு பெரிய கம்பெனி ஒண்ணும் இல்லை.”
*
தலைமை ஆசிரியர் அறையில் கார்த்திக்கின் 1,2,3,4,5 வரிசைப்படுத்தப்பட்டார்கள். “படிக்கிற பசங்க நீங்க… குழந்தைப் பசங்க… இல்லேன்னா நாங்க விசாரிக்கிற விதமே வேறே தெரியுமில்ல?”
“பதில் சொல்லுங்கப்பா” என்றார் தலைமை. “தெரியும் சார்” என்றான் 1.
மற்ற நாலவரும் தலையை அசைத்தனர்.
“எங்க தண்ணி அடிப்பீங்க?”
மௌனம்.
அவர் தலைமை ஆசிரியரைப் பார்த்து, “கொஞ்சம் வெளியிலே இருங்க சார். மைல்ட் பீட்டிங் தரணும்” என்றார்.
“வேண்டாம் சார்” என்றான் 2.
நாங்க ராத்திரி தெப்பக்குளக்குட்டிச் சுவத்து மேலே வெச்சுக் கொஞ்சமாக் குடிப்போம்” என்றான்.
“பணப் பிரச்சனையா? கொலை பண்ணிட்டீங்களா?”
“ஐயோ…” என்று அலறினான் 5.
“அம்மா மேலே சத்தியம் சார். அவனை நாங்க எதுவும் பண்ணலை. அவன் வேலைக்கிப் போயி புதுபோன் வாங்கினான். எப்பவாச்சும் குடிக்க செலவு பண்ணுவான் சார்.”
“அவன் போன் நம்பர கொடுங்க. நாளைக்கிப் பின்னே அவனோட பாடி எங்கேயாவது தென்பட்டது தொலைஞ்சீங்க” என்றதும் 4 ஒருசீட்டில் ஒரு கைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான்.
அவர்கள் சென்றதும் தலைமை, “அவன் போன் நம்பரை நீங்க பேரண்ட்ஸ்கிட்டேயே வாங்கி இருக்கலாமே சார்” என்றார்.
“சார்.. அவங்களுக்கு அவன் போன் வெச்சிருந்ததே தெரியாது. அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்… அதான் அவன் அவங்களுக்குத் தெரியாமலேயே மறைச்சிருக்கான்.”
*
சாதாரணமான புடைவை அணிந்திருந்த பெண் போலீஸ் ஆசிரியைகள் அறையில் மாணவியிடம், “கார்த்திக், உன்கிட்டே கூடச் சொல்லலியா?” இல்லை எனத் தலையை அசைத்தாள் அவள் கண்ணீருடன்.
“ரொம்பவே லவ் போல” என்ற போலிஸின் உதிர்ப்பு அவள் கண்ணீரை இன்னும் அதிகப்படுத்தியது.
“அப்பா அல்லது அம்மா யாருக்காச்சும் தெரியுமா?”
“இல்லை.”
“படிக்கிற வயசுக்கு இது அதிகம். அவன் போன் பண்ணினான்னா எங்ககிட்டே சொல்லு. எதையும் மறைச்சே யூனிபார்மில் உன்வீட்டுக்கே வருவேன்.” கட்டுக் கடங்காமல் அழுதாள் மாணவி.
*
தலைவிரிக் கோலமாகத் தரையில் புரண்டு அழும் சகுனியின் மனைவியின் தனிமைத் தேவை கருதித் தாதிகள் வெளியேற்றப்பட்டனர். கைத்தாங்கலாக ஒரு தாதி அழைத்துவர அந்த அறைக்குள் நுழைந்த காந்தாரியின் காலில் சிறிய மரத்துண்டு உரசி நகர்ந்து விழுந்தது.
“என்ன அது?” என்றார் காந்தாரி.
“பகடைக்காய்கள் இரண்டுள் ஒன்று அம்மா.” என்றாள் பணிப்பெண்.
சகுனியின் மனைவி அருகே சென்ற காந்தாரி, “அண்ணன் வீரமரணம் அடைந்ததால் நான் என் ரத்த உறவுகள் மூத்தவரை இழந்தேன். அவர் இல்லாமல் நான் அனாதை” என்றார்.
“அவருடன் வாழ்ந்த நாட்களில் அச்சம் தினசரி கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருந்தது. இன்று துக்கம் என்னையே விழுங்கிக் கொண்டிருக்கிறது.” விம்மலுடன் சொற்கள் உதிரியாக வந்தன.
“சோகத்தைப் பங்கு போட்டுக் கொள்ள முடியாது. அதுவே நம்மை அடித்து ஓயும். அஸ்தினாபுரத்தின் சோகம் ஓயும்போது யாருமே எஞ்சி இருக்க மாட்டோம்.”
*
மீரட் நகரிலிருந்து புதுடெல்லி செல்லும் நெடுஞ்சாலை ஓரம் ஒரு அரைவட்டவடிவ கன ரக வாகனம் நிறுத்தும் இடத்தில் இரண்டு மூன்று லாரிகள் நின்று கொண்டிருந்தன. ஒன்றின் அடியில் படுத்து எதையோ முடுக்கிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவனுக்கு இணையாக எண்ணெய்க் கறை பட்ட கால் சராய் மேற்சட்டை அணிந்த ஒருவன் லாரிக்குக் கீழே குனிந்து அவனை அழைத்தான். வெளியில் வந்தபோது வெய்யிலின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது.
“கைசேஹோ? படியா?” என்றான் கார்த்திக்.
“ஹிந்தி ஓரளவு பேசுகிறாய்” என்ற மற்றவன், “உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்” என்றான்.
“என்ன?” கருப்பாய் நாற்பக்கமும் சதுரமான ஒருமரத் துண்டு. சின்னஞ்சிறியது. அதிகம் ஹிந்தி பேசாமல் என்ன இதில் விசேஷம் என சைகையால் கேட்டான் கார்த்திக்.
“மீரட் மெட்ரொ ரயில் வேலையில் என் அப்பா. கூலி. அவர் தோண்டும்போது பழைய செப்புக்காசுகளுடன் இதுவும் கிடைத்தது. அஸ்தினாபுரத்துடையது என்கிறார் அப்பா” என்றவன் சாலை ஓரத்தில் அதன் ஒரு பக்கத்தை மெல்லிய உரசலாகப் பல தடவை உரசி கார்த்திக்கிடம் காட்டினான்.
தாயம் என்பதைக் குறிக்கும் ஒற்றைப்புள்ளி ஆழமாய்.
“சொக்கட்டான் காய்போல” என்றான் நண்பன்.
*