Posted on Leave a comment

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா? | ஜடாயு


இன்று புழக்கத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தின் பாரம்பரிய வடிவத்தில் உத்தரகாண்டம் அதன் கடைசிப் பகுதி என்ற அளவில் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது அனைவராலும் ஏற்கப்படவில்லை. உத்தரகாண்டம் ஆதிகாவியமான வால்மீகி ராமாயணத்தில் உள்ளதல்ல, பின்னால் சேர்க்கப்பட்டது என்ற கருத்து ஸ்ரீ ராமபத்ராசாரியார் (சித்ரகூட்) உள்ளிட்ட ஆசாரியர்கள், பல பாரம்பரிய ராமாயணப் பண்டிதர்கள், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் உள்ளது. அவ்வாறு கருதும் பாரம்பரியப் பண்டிதர்கள் தங்களது ராமாயண பாராயண முற்றோதலில் அந்தக் காண்டத்தை வாசிப்பதில்லை, அதனைச் சொற்பொழிவு செய்வதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்த்தரப்பாக வேறுசில அறிஞர்களின் கருத்துக்களும் உள்ளன. இந்த நீண்ட விவாதத்தின் முக்கியப் புள்ளிகளை ஒரு பறவைப் பார்வையாக இக்கட்டுரையில் பார்க்கலாம். எனது ராமாயணக் கல்வி மற்றும் ஆய்வில் நான் வந்தடைந்த கருத்து உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்பதே. எனவே அதற்கான உறுதியான வாதங்களை முதலிலும், அத்தகைய பிற்சேர்க்கைக்கான பின்னணி குறித்த எனது புரிதலை இரண்டாவதாகவும் அளித்திருக்கிறேன்.

உத்தரகாண்டத்தின் உள்ளடக்கம்: 

வால்மீகி ராமாயணத்தில் ஆறாவதாக உள்ள யுத்தகாண்டம் ராம பட்டாபிஷேகம் மற்றும் ராமராஜ்யத்தின் வர்ணனையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு வருவது இக்காண்டம். ‘உத்தர’ என்ற சொல்லுக்கு ‘பிறகு / பின்னால்’ என்றும் சில இடங்களில் ‘கடைசியான’ (உத்தரக்கிரியை என்பது போல) என்றும் பொருள். இதில் கூறப்படும் விஷயங்கள்:

1. ராவணாதியரின் பிறப்பு, வளர்ப்பு, தவம், மூவுலகையும் அவர்கள் படையெடுத்து வெற்றி கொள்வது. பட்டாபிஷேகத்திற்கு வந்துள்ள முனிவர்களிடம் ராமர் கேட்க, அவர்கள் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

2. குடிமக்களில் ஒருசாரார் பழிதூற்றுவதை ஒற்றர்கள் மூலம் கேட்ட ராமர் சீதையை வனத்துக்கு அனுப்ப முடிவெடுத்து, லக்ஷ்மணன் கானகத்தில் அவளை விட்டுவருவது. சீதையின் துயரம், வால்மீகி முனிவர் அவளைக் கண்டு தனது ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல். லவ குசலர்களின் பிறப்பும் வளர்ப்பும்.

3. சத்ருக்னன் படையெடுத்துச் சென்று லவணன் என்ற அரக்கனை வதம் செய்து, மதுபுரி என்கிற மதுரா நகரை உருவாக்கி அங்கு ஆட்சிபுரிதல்.

4. தவத்திற்கு அதிகாரமில்லாத சூத்திர முனியான சம்பூகன் தவம் செய்வதால் கேடுகள் விளைவதால் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று நாரதர் உள்ளிட்ட ரிஷிகள் கூற, ராமர் சம்பூகனை வதம் செய்தல்.

5. ராமர் அசுவமேத, ராஜசூய யாகங்களைச் செய்தல். யாகசாலையில் வால்மீகி முனிவருடன் லவ குசர்கள் வந்து ராமாயணத்தைப் பாடுதல், தனது புதல்வர்கள் என்று அறிந்து ராமர் மகிழ்தல். (அசுவமேதக் குதிரையை லவகுசர்கள் பிடித்துக் கட்டுவது, பிறகு ராமரின் படைகளும், ராமருமே வந்து லவகுசர்களிடம் போரிட்டுத் தோற்பது ஆகியவை எதுவும் இதில் இல்லை. அவை பிற்காலத்தில் மகாகவி பவபூதி தனது உத்தர ராம சரிதம் என்ற காவியத்தில் நாடகத்தன்மைக்காக எழுதிச் சேர்த்தவை).

6. ராமரின் கோரிக்கைப் படி, வால்மீகி ஆசிரமத்திலிருந்து சீதை யாகசாலைக்குள் அழைத்து வரப்படுதல். ராமரும் சபையினரும் முனிவரும் அவளைப் புகழ்தல். சீதை பூமித்தாயை வேண்ட, பூமிபிளந்து அவளை ஏற்றுக் கொள்ளுதல்.

7. ராமர் லவ குசர்களுக்கும் பரதனது புதல்வர்களுக்கும் உரிய ராஜ்யத்தை அளித்துவிட்டு, அவதார காலம் நிறைவுற்றதை அறிந்து, சகோதரர்களும் அயோத்தி நகரத்தின் மக்களும் மற்ற உயிர்களனைத்தும் புடைசூழ சரயு நதியில் புகுந்து தனது இருப்பிடமான வைகுந்தத்தை அடைதல்.

இனி, உத்தரகாண்டம் பிற்சேர்க்கையே என்பதற்கான முக்கியமான வாதங்களைப் பார்க்கலாம். 

1. யுத்தகாண்டத்தின் இறுதி அத்தியாயம் தெளிவாக அதுவே காவியத்தின் முடிவு என்னும் வகையில் அமைந்துள்ளது. கடைசி 15 சுலோகங்கள் நூலின் பெருமைகளையும் அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களையும் எடுத்துரைக்கும் பலசுருதியாக உள்ளன. எனவே இதற்குப் பிறகு காவியத்தின் அடுத்த பகுதி தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை. (மகாபாரதத்திலும் புராணங்களிலும் பல இடங்களில் நடுநடுவிலும் அத்தியாய முடிவுகளிலும் கூட பலசுருதிகள் கூறப்பட்டுள்ளனவே என்று இதற்கு ஆட்சேபம் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி ராமயாணத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. மேலும் இந்தப் பலசுருதியில் ‘இந்தப் பகுதியை’ என்றில்லாமல் நூல் முழுவதையும் சுட்டுவதாக உள்ளது.)

2. உத்தரகாண்டத்திலுள்ள 111 சர்க்கங்களில் பாதிக்கு மேல் (55 சர்க்கங்கள்) மையக்கதையை விட்டு விலகி உபகதைகள் போன்ற வேறொன்றைக் கூறுவதாக (digression) உள்ளன. மகாபாரதத்திலும், புராணங்களிலும் இத்தகைய போக்கு மிக சகஜமானது, ஆனால் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான காவிய அமைப்பில் இப்போக்கு மிகச்சில இடங்களில், அதுவும் சிறிய அளவிலான விலகல்கள் என்ற அளவிலேயே உள்ளது.

3. மகாபாரதத்தில் பாண்டவர்களின் வனவாசத்தின்போது மார்க்கண்டேய ரிஷி அவர்களுக்கு ராமாயணக்கதை முழுவதையும் கூறுவதாக வருகிறது (வனபர்வம், 275-289). ராமோபாக்யானம் எனப்படும் இக்காதை பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. இதில் உத்தரகாண்டக் கதை நிகழ்ச்சிகள் இல்லை. பற்பல ராஜவம்சங்களைப் பற்றிக் கூறும் மகாபாரதத்தில் லவகுசர்கள் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. ஆனால் கிருஷ்ணர், நரநாராயணர்கள் பற்றிய நேரடிக் குறிப்பு உத்தரகாண்டத்தில் (53.20-22) உள்ளது. வேறு எந்தக் காண்டத்திலும் கூறப்படாத கோவிந்த, ஹரி, மாதவ, வாசுதேவ ஆகிய விஷ்ணு நாமங்கள் வருகின்றன. எனவே, உத்தரகாண்டப் பகுதி காலத்தால் மகாபாரத்திற்கும் பிற்பட்டது என்பது புலனாகிறது.

4. ராமாயண காலம் திரேதாயுகம் என பாரம்பரியமாக அறியப்படுகிறது. மற்ற காண்டங்களில் அதற்கு முந்தைய கிருதயுகம் மட்டுமே குறிப்பிட்டப் பட்டுள்ளது. ஆனால் உத்தரகாண்டத்தில் துவாபர, கலி யுகங்கள் பற்றியும் குறிப்பு உள்ளது (சர்க்கம் 74).

5. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில் வேத வேள்விகளையும், நதிகள் முதலான இயற்கை அம்சங்களையும் வணங்குதலையும் தவிர்த்து வேறுவகையான வழிபாடுகள் கூறப்படவில்லை. ஆனால் உத்தரகாண்டம் சிவலிங்க பூஜை (31.43), விஷ்ணு உருவத்தை பூஜித்தல் (109.31) ஆகியவற்றைக் கூறுகிறது. ராவணன் பிரம்மனிடம் வரம் பெற்றதாகவே முந்தைய காண்டங்களில் உள்ளது. சிவபக்தன் என்பது உத்தர காண்டத்தில் மட்டுமே உள்ளது. இவையும் பிற்காலத் தன்மைக்கு சான்றுகள்.

6. வால்மீகி ராமாயணம் என்ற கச்சிதமான ஒழுங்குடைய காவியப் பிரதியில் வேறெங்கும் கதை முரண்கள் இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில் மீண்டும் கூறப்படும் சில சம்பவங்கள் முன்பு கூறப்பட்டதற்கு முரணாக உள்ளன. சில உதாரணங்கள்: பிரபலமாக அறியப்பட்டுள்ள கும்பகர்ணன் வாய்குழறி தூக்கத்திற்கான வரம் கேட்டான் என்ற கதை உத்தரகாண்டத்தில்தான் (10.45) உள்ளது. மாறாக, யுத்தகாண்டத்தில் (6.61), கும்பகர்ணன் பிறந்தவுடனேயே பிரம்மா அவனைத் தூங்குமாறு செய்துவிட்டார் என்றே உள்ளது. ஹனுமானைப் பற்றி உத்தரகாண்டத்தில் உள்ள கதை (சர்க்கம் 36), முன்பு கூறப்பட்டதற்கு (கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் 66) முரணாக உள்ளது. ராவணன் அவளது சம்மதமின்றி ஒரு பெண்ணைத் தீண்ட முயன்றால் அவன் இறப்பான் என்ற சாபம், அவன் புஞ்ஜிகஸ்தலா என்பவளை வன்புணர முயற்சித்தபோது பிரம்மாவால் இடப்பட்டது என்று யுத்தகாண்டத்தில் (சர்க்கம் 13) கூறப்பட்டற்கு மாறாக, ரம்பையை அவ்வாறு செய்ய முற்படுகையில் குபேரன் மகன் நளகூபரன் அவ்வாறு சாபமிட்டதாக உத்தரகாண்டம் (சர்க்கம் 26) கூறுகிறது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வால்மீகி எழுதியிருக்க முடியும். இது எல்லாவற்றையும்விட, மற்ற காண்டங்களில் சிறப்பித்துக் கூறப்பட்ட ஏகபத்தினி விரதத்திற்கு முரணாக, ராமர் சீதை தவிர்த்து மற்ற பெண்களையும் மணந்து கொண்டதாக உத்தரகாண்டம் (42.22) கூறுகிறது.

6. அக்னி பிரவேசத்தின்போது தேவர்களாலும் ரிஷிகளாலும் சுவர்க்கத்திலிருந்து யுத்தகளத்தில் வானில் வந்து தோன்றிய தசரதராலும் தூயவள் என்று போற்றி ஆசிர்வதிக்கப்பட்ட சீதையைத்தான் ஏற்று ராமர் அயோத்திக்கு அழைத்து வருகிறார். ஆனால் குடிமக்களின் பழிதூற்றலைக் கேட்டு, அத்தகைய சீதையைத் துறந்து அவளை ராமர் வனத்திற்கு அனுப்பினார் என்ற கதைக் குறிப்பு, வால்மீகி ராமாயணத்தின் காவிய ஒருமையையும், ராமரின் பாத்திரப் பாங்கையுமே முற்றிலும் சிதைத்து விடுகிறது. முந்தைய ஆறு காண்டங்களில் அதை அபாரமாக வளர்த்தெடுத்து வந்த கவி-ரிஷியாகிய காவியகர்த்தா, ஏழாவது காண்டத்தில் அதை முற்றிலும் நாசமாக்கினார் என்பது போல இது உள்ளது. அந்த விவரணத்திற்குள்ளேயே பல உள்முரண்களும் குழப்பங்களும் உள்ளன.

அ) அபகீர்த்திக்குப் பயந்து சீதையைத் துறக்கிறேன் என்று ராமர் முதலில் கூறுவதாகவும், ஆனால், பின்பு கருவுற்றிருந்த அன்பு மனைவியாகிய சீதையைக் கானகத்திற்கு அனுப்பியதே பெரிய அபகீர்த்தி (52.15) என்றும் இருவேறு இடங்களில் உத்தரகாண்டம் கூறுகிறது. பின்பு சீதையைத் துறப்பதற்கான முகாந்திரம்தான் என்ன?

ஆ) லவகுசர்களை சீதையின் மறைவுக்குப் பின் ராமர் இளவரசர்களாக ஏற்கிறார். பழிதூற்றப்பட்ட அரசிக்குப் பிறந்த குழந்தைகளை அரசன் ஏற்பது சாஸ்திர சம்மதம் என்றால், அக்குழந்தைகள் பிறந்தபோதே செய்தியறிந்து அரசனாகிய ராமர் அவர்களை ஏற்றுக்கொண்டு வளர்த்திருக்கலாம். பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

இ) லவகுசர்கள் கானகத்தில் வளர்கையில் ராமர் அவர்களது தந்தை என்பதை சீதை அவர்களுக்குக் கூறவில்லையா? கூறினாள் எனில், அவர்கள் எப்படி எந்தவிதமான கேள்விகளும் எதிர்வினைகளுமின்றி ராமாயணம் முழுவதையும் வால்மீகியிடமிருந்து கற்றார்கள்? இதுபற்றிய எந்தக் குறிப்பும் உத்தரகாண்டத்தில் இல்லை.

ஈ) தனது அபகீர்த்திக்கும் (அதனால் விளையும் நரக பிராப்திக்கும்) அஞ்சி ராமர் சீதையைத் துறந்தார் என்றால், சீதைக்கு அடைக்கலம் அளித்த வால்மீகிக்கு அந்தக் குற்றங்களும் பாவங்களும் நேராதா என்ற கேள்வி எழுகிறது.

உ) உத்தரகாண்டத்தில் இறுதியில், “துர்வாச மகரிஷியின் சாபத்தினால் ராமர் சீதையும், தனது சகோதரர்களையும் தானே தண்டனையளித்து துறக்கும் நிலை உருவாகும் என்று முன்பே கூறப்பட்டுள்ளது” என்று சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறுவதாக வருகிறது. ஆனால், சீதைக்கும் லக்ஷ்மணனுக்கும் மட்டுமே இக்கதி நேர்கிறது. பரதனையும் சத்ருக்கனையும் ராமர் இவ்வாறு செய்வதில்லை. ஏன் ரிஷியின் சாபத்திற்கான பாதிப்பலன் மட்டுமே உண்டாயிற்று என்ற கேள்வி எழுகிறது.

ஊ) தன்னை நம்பி வந்தவர்களிடமும், சரணமடைந்தவர்களிடமும் குற்றங்கள் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று விபீஷணன் அடைக்கலம் கேட்டும் வரும் தருணத்தில் ராமர் கூறுவதாக வால்மீகி கம்பீரமான மொழியில் பதிவு செய்கிறார் (யுத்த காண்டம்18.3,29,32,35):

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

“ஒரே ஒரு முறை, ‘நான் உன்னைச் சேர்ந்தவன்’ என்று கூறிக்கொண்டு என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் எந்த அச்சமும் நேராதபடி அபயம் அளிக்கிறேன். இதுவே எனது விரதம்.”

இத்தகைய ராமர், தன்னை நம்பிவந்த சீதையைப் பின்பு ஊரார் பழிக்காகத் துறப்பதாக உள்ள சித்தரிப்பு சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது.

எ) “அந்த சீதைக்காக ராமர் உலகத்தையே தலைகீழாகச் செய்துவிடுவேன் என்கிறார் என்றால், அது சரியாகவே இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மூவுலகிற்கும் அதிபதியாவது என்பதுகூட சீதையின் பேரொளியின் ஒரு கீற்றுக்கும் ஈடாகாது” என்று ஹனுமான் கூறுகிறார் (கிஷ்கிந்தா காண்டம் 15.50). இது சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் சீதையின் தரிசனத்தைப் பெறுவதற்கு முந்தைய ஹனுமானின் கூற்று. இக்கூற்றின்வழி ராமரின் இதயத்தைப் பேசுபவர் வால்மீகியேதான். அத்தகைய ராமரின் சித்திரத்தை பின்பு வால்மீகி மாற்ற வேண்டியதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

7. உத்தர காண்டத்தில் வரும் சம்புகன் வதம் வால்மீகி ராமாயணத்திலேயே அதற்கு முன்பு கூறப்பட்டதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. தசரதரால் இருட்டில் யானை என்று கருதி அம்பெய்து கொல்லப்படும் முனிகுமாரனான சிரவணனின் கதையை நாம் நன்கு அறிவோம். இறக்கும் தருவாயிலும் தசரதரைத் தன் வயதான, கண்தெரியாத பெற்றோரிடம் செல்லக் கோரும் அவன், “தான் வைசிய தந்தையாருக்கும், சூத்திர தாயாருக்கும் பிறந்தவன்” என்று கூறுகிறான் (அயோத்தியா காண்டம், 63.50). அவன் “தவத்திலும் சாஸ்திரங்களைக் கற்பதிலும் ஈடுபட்டிருப்பவன்” (63.25, 64.33) என்ற குறிப்பும் உள்ளது. அந்தப் பெற்றோர்கள் தாங்கள் உயிர்துறக்கும் முன்பு இடும் கடும் சாபத்தினால்தான் பின்பு புத்திரசோகத்தால் தசரதரே இறக்க நேரிடுகிறது எனில் அவர்களது தவத்தின் வலிமை எந்த அளவிற்கு இருந்து என்பதைப் புரிந்துகொள்ளலாம். பின்பு, கானகத்தில் வனவாசிகளான சபரர்களின் குலத்தைச் சேர்ந்த சபரி என்ற மூதாட்டியை ராமர் சந்திக்கிறார். அவளது தவத்தின் மேன்மையைப் புகழ்கிறார். அவளது தவ வலிமையால் அவள் மேன்மையான உலகங்களை அடைந்தாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது (கிஷ்கிந்தா காண்டம், 3.74). ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, உத்தரகாண்டம் சூத்திரன் தவம் செய்ய அருகதையற்றதால் அவன் தண்டிக்கப் படவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இது பிற்சேர்க்கையன்றி வேறென்ன?

(நன்றி: இப்பகுதியில் உள்ள சில குறிப்புகளும் ஆதாரங்களும் Ramayana of Valmiki (Vol 1-7), translation by Dr. R Rangan, WEBOLIM India publication நூலிலிருந்து எடுக்கப்பட்டவை) 

பிற்சேர்க்கையும் பரவலும்: 

மகாபாரதத்தில் உத்தரகாண்டக் கதைக் குறிப்புகள் எதுவும் இல்லை என்பதை முன்பே பார்த்தோம். புராணங்களில் ஸ்ரீமத்பாகவம் (9.11.10-11) ராமாவதாரம் பற்றிய பகுதியில் சீதையை வனத்திற்கு அனுப்பியதையும் லவகுசர்கள் பிறப்பையும் இரண்டு சுலோகங்களில் சுருக்கமாகக் கூறுகிறது. பத்மபுராணத்தில் (5.56.61-64) ஊரார் பழிப்பேச்சைக் கேட்டு, பரதனிடம் ஆலோசித்து, கானகத்தில் விட்டுவர பரதனை அனுப்புவதாக உள்ளது. வேறுசில புராணங்களிலும் இருக்கலாம். எப்படியாயினும் இப்புராணங்கள் குப்தர் காலத்தியவை (பொ.பி. 3 முதல் 5ம் நூற்றாண்டு) அல்லது அதற்குப் பிற்பட்டவை என்பதே வரலாற்றாசிரியர்களின் கருத்து.

எனவே, மகாபாரதம் அதன் முழுவடிவில் தொகுக்கப்பட்டதற்குப் பின்பும், மேற்கண்ட புராணங்கள் இயற்றப்படுவதற்கு முன்பும் ஆன இடைப்பட்ட காலத்தில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியில் அதற்குப் பின்வந்த ராமாயணக் காவியங்கள் பலவற்றில் உத்தரகாண்டம் இடம்பெறுகிறது. காளிதாசரின் ரகுவம்சத்திலும் (14,15ம் சர்க்கங்கள்) பவபூதி இயற்றிய உத்தர ராம சரிதம் என்ற அற்புதமான காவிய நாடகத்திலும், அபாரமான கவித்துவத்துடன் உத்தரகாண்டக் கதை கூறப்படுகிறது. குறிப்பாக, கருணை, சோகம் ஆகிய ரசங்களை வெளிப்படுத்துவதில் பவபூதியின் காவியம் நிகரற்றதாக மதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாம் பரவலாக அறிந்துள்ள கம்பராமாயணம் யுத்தகாண்டத்துடன், ஸ்ரீராம பட்டாபிஷேகத்துடன் முடிவடைகிறது. கம்பர் காலத்தில் (பொ.பி. 11ம் நூற்) உத்தரகாண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியாக பெருமளவு நிலைபெற்றுவிட்டபோதும் அவர் அதனை எழுதாது விடுத்தார். ராமாயணத்தின் காவிய அமைதியைக் குலைப்பதாக அது உள்ளது என்று அவர் கருதியதே காரணம் என்று தோன்றுகிறது. ஒட்டக்கூத்தர் எழுதியதாக உத்தர ராமாயணம் என்ற நூல் வழங்கப்படுகிறது. (உண்மையான ஆசிரியர் வாணியந்தாதன் என்போரும் உளர்.) இது பரவலாகப் பயிலப்படுவதில்லை.

துளசிதாசர் (16ம் நூற்.) ஹிந்தி மொழியில் எழுதிய ஸ்ரீராமசரிதமானஸ் காவியத்தில் உத்தரகாண்டம் என்ற பகுதி உள்ளது. ஆனால், அதில் சீதையைத் துறந்தது, யாகம் செய்தது, சம்புகன் வதம் ஆகிய கதைகள் இல்லை. தர்மம், ஞானம், பக்தி, வைராக்கியம் குறித்த ஞான உபதேசங்களே பெருமளவு உள்ளன.

பக்தி இலக்கியங்களிலும், ராமரைக் குறித்த துதிப்பாடல்களிலும் மீண்டும் மீண்டும் முதல் ஆறு காண்டங்களில் உள்ள விஷயங்களேதான் வருகின்றன. உத்தரகாண்ட செய்திகள் அனேகமாக இல்லை, அல்லது மிகமிகக் குறைவாகவே உள்ளன. ‘சீதையை தாட்சண்யமின்றி கானகத்திற்கு அனுப்பியவனே’ என்று பாடுமளவுக்கு எந்த ராம பக்தனுக்காவது கல்நெஞ்சம் இருக்குமா என்ன? உதாரணமாக, ஒட்டுமொத்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 3-4 வரிகளில் மட்டுமே இக்குறிப்புகள் உண்டு (“செறிதவச் சம்புகன் தன்னைச் சென்றுகொன்று செழுமறையோன் உயிர்மீட்டு…” “மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்” – குலசேகராழ்வார்). தியாகராஜ கீர்த்தனைகளில் ஒன்றிரண்டு இடங்களில் ‘குசலவ ஜனகா’ போன்ற வரிகள் உண்டு. ராமபக்தர்கள் உணர்வுபூர்வமாக உத்தரகாண்டத்தை என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

எனில், ஆதியில் இந்தப் பிற்சேர்க்கைக்கான பின்னணி என்னவாக இருந்திருக்கக்கூடும்?

முதன்மையாக, ராமாயணத்தை ஒட்டுமொத்த குல/வம்ச வரலாறுகளில் பொருத்தவேண்டிய தேவை. ஏனெனில், இந்தியாவின் பண்டைய மன்னர்கள் அனைவரும் (இதில் சேர சோழ பாண்டியர்களும் அடக்கம்) தங்களது குலமுறையை சூரிய / சந்திர வம்சங்களுடன் ஏதோ ஒரு வகையில் பொருத்திக் கொண்டனர். இது அவர்களுக்கு ஒரு மகத்தான பாரம்பரியப் பெருமையையும் தார்மீக உரிமையையும் அளித்தது. மகாபாரதத்திலும் புராணங்களிலும் நாம் பல இடங்களில் நீண்ட வம்சப் பட்டியல்களைக் காண்பது இதனால்தான். ஆதிகாவியமான வால்மீகி ராமாயணம், சூரிய வம்சத்தையும், சகரன், இக்ஷ்வாகு, திலீபன், ரகு போன்ற ராமரின் குலமுன்னோர்களையும் கூறுகிறதென்றாலும் அது அடிப்படையில் வம்சகாதைப் பாடல் அல்ல. மாறாக தர்மத்தின் திருவுருவமான ராமனின் சரித்திரத்தையும் அறத்தின் பாதையையும் கூறுவதே அதன் மையநோக்கம். அதனால் அது பட்டாபிஷேகத்துடன் நிறைவடைந்துவிட்டது. பிறகு, அதற்கு ஒரு வம்சகதைத் தொடர்ச்சி அளிப்பதற்காக உத்தரகாண்டம் சில நூற்றாண்டுகள் கழித்து வலிந்து இணைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

லவனது வழியில் ஓரிரு தலைமுறைகளும் குசனது வழியில் அக்னிவர்ணன் ஈறாக நீண்ட ஒரு வரிசையையும் காளிதாசரின் ரகுவம்சம் கூறுகிறது. ஒரு காவிய அவலத்தைக் கொண்டு வருவதற்காக, அக்னிவர்ணனை காமத்திலும் குடியிலும் மூழ்கி அந்த ஒளிமிகுந்த பரம்பரைக்கே களங்கமாக வந்து சேர்ந்தவனாக கவி சித்தரிக்கிறார். ஆனால், இறுதியாக, பூமிக்குள்ளிருக்கும் விதைபோல அவன் மனைவியின் கருவில் சிசு வளர்ந்து வந்தது என்று காவியத்தை நிறைவு செய்கிறார்!

சத்ருக்னன் மதுரா நகரத்தை நிறுவிய காதை, கோசல நாட்டிலிருந்து மேற்கு நோக்கி இக்ஷ்வாகு வம்சத்தினர் விரிவடைந்ததைக் குறிக்கலாம். “குசனுடைய அழகிய தலைநகரம் விந்திய மலைச்சாரலில் குசாவதீ என்றும், லவனுடைய நகரம் ஸ்ராவஸ்தீ எனவும் புகழ்படைத்ததாயிற்று (உத்தரகாண்டம் 108.4,5) என்பதை வரலாற்று ரீதியாக இந்த நகரங்களில் புதிய அரசுகளும் ராஜவம்சங்களும் உருவாகி வளர்ந்ததுடன் தொடர்புப்படுத்தலாம். பேதி (Bedi), சோந்தி (Sondhi) ஆகிய பஞ்சாபி சமூகத்தினரும், அதனைச் சார்ந்த குருகோவிந்த சிங் அவர்களும் தன்னை ராமருடைய பரம்பரையில் வந்தவர்களாகப் பிரகடனம் செய்கின்றனர். லவன் உருவாக்கிய லவபுரி என்ற நகரமே பின்பு லாகூர் ஆயிற்று என்றும் ஒரு கருத்து உள்ளது. உத்தரகாண்டம் தென்னிந்தியாவைவிட வடஇந்தியாவிலேயே மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இத்தகைய கூறுகளே காரணமாகலாம்.

சரி, வம்சத் தொடர்ச்சியே உந்துதல் என்றால் லவகுசர்கள் இளவரசர்களாக அரண்மனையில் பிறந்து வளர்ந்ததாக சித்தரித்திருக்கலாம்; சீதையைக் கானகத்திற்கு அனுப்புதல் என்ற சோகமான பிரசங்கத்தை இணைப்பதற்கான தேவை என்ன என்று கேட்கலாம். அது பல்வேறு விதமான ஊகங்களுக்கு இட்டுச்செல்லும். கல்நெஞ்சத்துடன் கூட பிரஜைகளின் கருத்துக்கு மதிப்பளிக்கும் ‘மரியாதா புருஷோத்தமன்’ என்ற ஒரு அரசனின் ஆதர்சத்தை நிலைநிறுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம். இலக்கிய நோக்கில் பார்த்தால், மங்கலமாக முடியும் காதையை அதிலிருந்து திசைதிருப்பி கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் பாணியில், சோகத்தையும் சிதைவையும் குலைவையும் நோக்கி இட்டுச் சென்று முடிக்கும் வகையில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கலாம். மனித மனத்தின் போக்குகள் விசித்திரமானவை.

‘உத்தர’ என்ற சொல்லுக்கு விடை என்றும் ஒரு பொருள் உண்டு. பிற்சேர்க்கைக்கான மற்றொரு உந்துதல் என்ன என்பதை நேரடியாகவே இப்பொருளிலிருந்து ஊகிக்கலாம். ஆதிகவியின் மனத்திலிருந்து இயல்பாகப் பொங்கிப் பெருகிய ராமகாதையை அவர் அவ்வாறே சுலோகங்களாக வடித்தார். ஆனால் பின்னால் அதை வாசித்தவர்களுக்கு பல இடங்களில் கேள்விகள் எழுகின்றன. உத்தரகாண்டம் இவற்றுக்கெல்லாம் திட்டமிட்டு விடையளிப்பது போல இருக்கிறது. சில உதாரணங்கள்: அ) கிஷ்கிந்தா காண்ட முடிவில், கடலைத் தாண்டுவது பற்றி வானரர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், ஜாம்பவான் நினைவுறுத்திய பின்பே ஹனுமானுக்குத் தன் மாபெரும் பலம் பற்றிய உணர்வு ஏற்படுகிறது. அந்த வர்ணனை மிக இயல்பானது. சக்திமான்களுக்கும் கூட அடுத்தவர் சொல்வதுவரை தன் பலம் தெரிவதில்லை என்ற சமாதானமே போதுமானது. அதெப்படி ஹனுமானுக்கு தன் பலம் முற்றிலுமாக மறந்து போகும் என்ற கேள்வி அங்கு இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில், அந்தக் கேள்வியை வலிந்து எடுத்துக்கொண்டு, சிறுவயதில் முனிவர்களின் ஆசிரமங்களில் குறும்புத்தனங்கள் செய்ததால், முனிவர்கள் அவ்வாறு சாபமிட்டனர் என்ற விளக்கம் தரப்படுகிறது. ஆ) வாலி, ராவணனைத் தோற்கடித்து தன் வாலில் கட்டுமளவுக்கு வீரனாக இருந்தான் என்ற கதை வாலிவதத்திற்கு முன்பும் பின்பும் எங்குமில்லை. அது உத்தரகாண்டத்தில் வருகிறது. ராவணன் அதுவரை யாராலும் தோற்கடிக்கப் படவில்லை என்பது உண்மையல்ல என்று நிறுவுவதற்காகவே இது இணைக்கப்பட்டிருக்கலாம் இ) ராவண வதத்திற்கும் பட்டாபிஷேகத்திற்கும் பிறகு உத்தரகாண்டம் ராவணனின் பூர்வகதையை, குடும்ப வரலாற்றை, வெற்றிகளை, அவன் அடைந்த சாபங்களை மிக விரிவாகக் கூறவேண்டியதற்கான அவசியம் என்ன? அது தொடர்பாக முந்தைய காண்டங்களில் எழும் கேள்விகளுக்கு (எ.கா: சூர்ப்பணகை எங்கிருந்து வந்தாள் பிறகு எங்கே போனாள்?) விடைசொல்வதற்காகத்தான். எனவே, வால்மீகி ராமாயணம் அதன் முழுவடிவை அடைந்து பரவலானதுமே அதன் முதல்கட்ட வாசகர்களால் இதில் ஏதோ சொல்லாமல் விடுபட்டிருக்கலாம், தர்க்கபூர்வமாக இந்தக் காவியம் கச்சிதமாக இல்லை ஆகிய எண்ணங்களால் உந்தப்பட்டு ‘விடைகூறும் தன்மை’யுடன் பிற்சேர்க்கையாக இந்தக் காண்டம் இணைக்கப்பட்டது என்று கருத இடமிருக்கிறது.

ராமாயணம் என்ற வற்றாத ஜீவநதி நமது பண்பாட்டின். அறவாழ்வின், கலாசாரத்தின், தேசியத்தின் இடையறாத பிரவாகமாக என்றென்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம்காலமாக எத்தனையோ கிளைகளும் சிற்றாறுகளும் அதில் கலந்தும் பிரிந்தும் தடம் மாறியும் இந்த மண்ணையும் அதன் மைந்தர்களையும் வளப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே உத்தர காண்டத்தையும் கண்டு அதனைச் சமநிலையுடன் ஒரு வழியில் புரிந்துகொள்ளும் முயற்சியே இக்கட்டுரை.

உதவிய நூல்கள்: 

[1] வால்மீகி ராமாயணம் உத்தரகாண்டம்: https://sanskritdocuments.org/mirrors/ramayana/valmiki/uttarakand_1.htm

[2] ரகுவம்ச மஹாகாவ்யம் (வே.ஸ்ரீ வேங்கடராகவாசார்யார் தமிழ் உரை)

[3] ஸ்ரீமத்வால்மீகி ராமாயண ஸாரம் – ஸ்ரீ அண்ணா, ராமகிருஷ்ண மடம்

Leave a Reply