Posted on Leave a comment

சபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் வரலாம் என்று தீர்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய ஊடகங்களிலிருந்து இந்தியாவில் உள்ள பல ஊடகங்களும் ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் வர வயது வரம்பு உள்ளது என்ற விஷயத்தைக் கூறாமல், இந்த விஷயத்தை ஒருதலைப்பட்சமாக அணுகுகிறார்கள். மாற்றுப் பாலினத்தவராகிய நான், மாற்றுப் பாலின ஒருங்கிணைவு உடையவராகிய, இடையிலிங்க நபரான நான், இந்தத் தீர்ப்பை மிகவும் வேதனையுடன்தான் பார்க்கிறேன். ஏன்னென்றால் சனாதன தர்மம் என்பது ஒருவருக்குக் கட்டுப்பட்டு, ஒரு நபர் வரையறுக்கும் எல்லைகளில் கட்டுப்படும் ஒன்றல்ல. இது மிகவும் விரிவானது. மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட பன்மைதன்மை வாய்ந்த தர்மத்தில், ஒருதலைபட்சமான ஒரு தீர்ப்பை இந்தியாவின் உச்சநீதிமன்றம் வழங்குகிறது. மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றமானது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பது. ஆனால் சனாதன தர்மத்தில் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஐயப்ப வழிபாடு என்பது சாஸ்தா வழிபாட்டோடு தொடர்புடையது. அவரைச் சுற்றிப் பல கதைகள், பல சம்பவங்கள், பல நபர்களால், பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 900 வருடங்களாக இவருடைய புராணம் மலையாள தேசத்தில் பந்தளத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கக்கூடிய ஒரு காவியமாகத் திகழ்கிறது. முக்கியக் கடவுளாக ஐயப்பன் வணங்கப்படுகிறார். சாஸ்தா வழிபாடு என்பதே ஆராய்ச்சிக்கு உட்படுத்தக்கூடிய பரந்த ஆழமான தொன்மம். அதில் பல்வேறு நாட்டார் சமய மரபுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன.

நம் சனாதன தர்மத்தில் வேதத்தில், ஸ்ருதி, ஸ்மிருதி என்ற இரு பிரிவுகளில் ஸ்மிருதிகள் என்றும் வளர்ந்துகொண்டே இருக்கும். அதில் காலத்திற்கேற்றாற் போல் பல விஷயங்கள் பக்குவமடைந்து செழிக்கும். உண்மையாகவே ஹிந்து மதத்தில் பெண்களுக்கு எதிராக, அல்லது எந்தப் பாலினத்திற்கும் எதிரான விதிகள் உள்ளனவா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மாற்றுப் பாலினமுள்ள நபரை, அல்லது மாற்றுப் பாலின ஒருங்கிணைவு உள்ள நபரைத் தண்டிக்க வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், கொல்லவேண்டும் என்று எந்தத் தரவுகளும், குறிப்புகளும் சனாதன தர்மத்தில் இல்லை. சனாதன தர்மத்தை சார்ந்த ஸ்ருதிகளிலோ, ஸ்மிருதிகளிலோ இப்படி ஒரு குறிப்பும் இல்லை.

Gender Specific Rituals என்று கூறப்படும் ஒரு பாலின சாராரை மையப்படுத்திய வழிபாட்டு முறைகள், அவர்களை ஆன்மிகத்தில் உயர்த்துவதற்காக, உலகியல் வாழ்க்கையில் இருந்து உயர்த்துவதற்காக, உலகியல் வாழ்க்கை சாராத ஓர் உன்னத நிலையை அவர்களுக்குப் புகட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அப்படி உருவாக்கப்பட்ட ஒன்றே ஐயப்ப வழிபாடு. ஐயப்ப வழிபாடு போலவே மிகவும் பிரசித்தி பெற்ற பல வழிபாடுகள், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்த மக்களை ஆன்மீகத்தில் மேம்படுத்துவதற்காக, தர்மத்தில் மேம்படுத்துவதற்காகப் பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் ஸ்மிருதிகள் சார்ந்து வடிவமைத்தார்கள். அதில் குறிப்பிட்ட பல பாரம்பரியங்கள் பிராமணர்கள் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டவை. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் மாற்றுப் பாலினத்தவரின் வழிபாடு சார்ந்த விஷயங்கள். விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகளின் அரவான் வழிபாடாக இருக்கட்டும், குஜராத்தில் இருக்கும் பசுரா மாதா வழிபாடாக இருக்கட்டும், சகிபேகிகள் என்று சொல்லக்கூடிய மாற்றுப் பாலினத்தவரின் ஒரு அங்கத்தினர் கிருஷ்ணரைத் தொழும் விதமாக இருக்கட்டும், பாரதக் கண்டத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆண் – பெண் மட்டுமல்லாமல் மற்ற பாலின அடையாளங்களைத் தாங்கி நிற்கும் மக்களுக்காகவும் வழிபாட்டு முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி கட்டுவார்கள். ஏன் அரவாணிகள் மட்டும் தாலி கட்ட வேண்டும், பெண்களும் ஆண்களும் கட்டக்கூடாதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. எல்லம்மா வழிபாடு, ரேணுகாதேவி வழிபாட்டில் ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து எல்லாம்மாவை வழிபடுவார்கள். கோட்டாங்கரை பகவதி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து, அதாவது ஆண்கள் பெண்களாகத் தங்களை பாவித்துக்கொண்டு அன்னையை வழிபடுவார்கள். ஏன் ஆண்கள் மட்டும் பெண்கள் போல உடை உடுத்த வேண்டும், ஏன் பெண்கள் ஆண்கள் போல உடை உடுத்தி வழிபாடு நடத்தவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியுமா? முடியாது. நீதிமன்றம் பாரம்பரியமிக்க இது போன்ற விஷயங்களில் தலையிடுவது பல ஆன்மிக நெறிகளை வலுவிழக்கச் செய்துவிடும்.

நமது சனாதனதர்மத்தில் வாமாச்சாரம், தக்ஷிணாசாரம் என்று இரண்டு மெய்யியல் சார்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. வாமாச்சாரம் என்றால் அது இடதுகை வழக்கம் என்றும் தக்க்ஷிணாசாரம் என்றால் அது வலக்கை வழக்கம் என்று சொல்லுவார் ஸ்ரீ இராமகிருஷ்ணர். பெருவாரியாக தென்பாரதத்தில் நாம் பின்பற்றுவது தக்ஷிணாசாரம் சார்ந்த வழிபாட்டு முறை. வாமாச்சாரத்தில் மிகவும் விசித்திரமான தாந்திரிக முறைகள் எல்லாம் உள்ளன. வைணவத்தில் கூட லட்சுமி தந்திரம் கூறும் மிகவும் வித்தியாசமான மரபொன்று உள்ளது.

இதில் ஏன் இந்தியாவில் எல்லாம் தக்ஷிணாசாரம் போல் இல்லை, ஏன் இந்தியாவில் வடக்கு/வடமேற்குப் பகுதிகளில் வாமாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. தக்க்ஷிணாசாரம் எப்படி பாரதத்தில் முகிழ்ந்த ஓர் உன்னதமான முறையோ அப்படித்தான் வாமாச்சாரமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த ஒரு தொன்மையான பாரம்பரிய முறை. இரண்டிலும் வழிபாட்டு முறைகள் வேறுபட்டு பன்மைகொண்டு ஒற்றுமையோடு துலங்குகின்றன.

இவற்றையெல்லாம் இதைப் பின்பற்றுபவர்கள் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர, சட்டம் படித்ததனால் மட்டுமே புரிந்துகொண்டுவிட முடியாது. ஏனெனில் இந்த நிலையைப் புரிந்துகொள்வதற்கு அதில் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

என்னுடைய தாய்வழித் தாத்தாவானவர் ஒரு ஐயப்ப குருசாமி. அவர் பிராமணர் அல்ல. அவர் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றவர். இன, சாதி பேதமின்றி, அனைவரும், மாலையிட்டுக் கொள்ளும்போது என் தாத்தாவின் கால்களில் ஆசி பெறுவதற்காக விழுவார்கள். இதில் எந்தப் பேதமும் இல்லை.

ஐயப்பன் என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. ஐயப்பன் கட்டுப்படுவது அங்கு வரும் பக்தர்களுக்கே. இதெல்லாம் புரியாமல் பாலினப் பாகுபாடு (Gender/Women Discrimination) என்று, பெரிய நகரங்களில் உட்கார்ந்துகொண்டு இதுபற்றி எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் பல நபர்கள், இந்தியாவில் ஒரு பாலினத்தை உயர்த்துவதற்காகப் பல்வேறு வாய்ப்புகளை வகுத்துக்கொடுத்த இந்த சனாதன தர்மத்தை அழிக்கிறார்கள். உதாரணத்திற்கு தேவதாசி என்பது பொதுச்சொல். தேவதாசி என்பது பெண்களை மட்டும் குறிப்பதல்ல. தேவதாசி ஆண்களையும், தேவதாசியாக இருந்த இடையிலிங்க, மாற்றுப்பாலினத்தவரையும் குறிக்கிறது. இந்த சமூகத்தில் இருப்பவர்கள் மிகவும் சுதந்திரமான நபர்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது ஆங்கில அரசு. அதில் பிரச்சினைகள் நடந்திருக்கலாம். ஆனால் அந்த சமூகத்தில் ஒட்டுமொத்த மக்களும் பரத்தை குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பரத்தையர்களுக்குத் தனி அங்கீகாரம் கொடுத்தது இச்சமூகம். சனாதன தர்மம். அதேவேளையில் ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அதன் நெறிமுறைகள் எப்படி இருக்கவேண்டும் என்று நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தது. இது ஆபிரஹாமிய நெறிமுறைகள் போல் அல்லாமல், பிராந்திய முக்கியத்துவத்துடன் கூடிய இந்துத் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் ஐயப்பன் கோவிலில் இருக்கக்கூடிய வழிபாடு.

சின்ன மஸ்தாதேவியை வழிபடுகிறோம். தாந்திரிக சாதனைகளில் வாமாச்சாரத்தில் துர்க்கையை எழுப்புவதற்கு போக்கு ரத்தம் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. தக்க்ஷிணாசாரத்தில் போக்கு ரத்தம் அப்படி இடம் வகிப்பதில்லை. தக்க்ஷிணாசாரத்தின் நிலைகள் வேறு. இங்கு ஒரு கோவிலின் கர்ப்ப பீடத்தில் புரோகிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பெருவாரியான கிராமக் கோவில்களில் அம்மனுக்கு எல்லாப் பாலினத்தை சேர்ந்த நபரும் பூஜை செய்யலாம். ஸ்ரீ சாரதா மடத்தில் (ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துணைவியார்) பெண் துறவிகள் மட்டுமே யாகம் செய்யவேண்டும். அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் ஆண் துறவியர் மட்டுமே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சடங்குள் செய்ய அனுமதி. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

பெண்களுக்கு சம உரிமை என்பதைப் பற்றிப் பேசும் பெண்கள் அனைவரும் உண்மையான சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது கிடையாது. ஒருதலைப்பட்சமாக இதுபோன்ற விஷயங்களில் தலையிடுபவர்கள், பெண்களுக்கு கத்தோலிக்க திருச்சபையில் பெண்கள் போப் ஆக முடியுமா என்பதைப் பற்றிக் கேள்வி எழுப்புவது கிடையாது. இஸ்லாமில் இருக்கும் பெண்களின் நிலையைப் பற்றிக் கேள்வி எழுப்புவது கிடையாது. பல்வேறு இனங்களில் இன்று அழிந்துகொண்டிருக்கும் பெண்களுக்குக் குரல் எழுப்ப ஆள் கிடையாது.

குறிப்பாக யசீதி இனப் பெண்கள். இன்று நதியா மூரத் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ISIS இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தொடர்ந்து வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டவர். அப்படியிருக்கக்கூடிய ஒரு நபரைப் பற்றி இங்கு பேசுவதற்கு ஆள் கிடையாது. அவரைப் போன்ற பல பெண்களை ஒரு சில டாலருக்கு விற்றது ISIS. அதேநேரம், இங்கு நம் நாட்டில் இருக்கக்கூடிய இறையியல் கொள்கையானது, ஆண், பெண் மட்டுமின்றி, என்னைப் போன்ற இடையிலிங்கப் பாலினத்தவருக்கும் ஏற்புடைய ஒரு ஆன்மிக விழுமியங்களைத் தாங்கிய ஒரு தர்மம். அப்படிப்பட்ட ஒரு தர்மத்தில் உள்ளார்ந்த தன்மை (Inclusiveness) இல்லையென்று சொல்வது வருத்தத்துக்குரியது. வழக்குரைஞர் சாய் தீபக் என்பவர், “Not all exclusion are discrimination” என்று சொல்கிறார். அது மிக முக்கியமானது.

இச்சூழ்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆன்மீக விழுமியங்களைச் சீர் குலைப்பதாகும். இதே நீதிமன்றம் நாளை மாற்றுப்பாலினத்தவரின் மதச்சடங்குகளில் தலையிடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆகவே முதலில் ஐயப்பன் வரலாறு, அவர் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதை விட, இதுபோன்ற பாலினம் சார்ந்த வழிபாட்டில் (Gender Specific Rituals) இருக்கக்கூடிய உன்னதமான விஷயத்தை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே, இதுபோன்ற சடங்குகள், காவியங்கள், காப்பியங்கள் அதைச்சுற்றி இருக்கக்கூடிய மரபுகளைப் புரிந்து நடந்துகொள்ள முடியும்.

Leave a Reply