முன்குறிப்பு: உலகின் ஓரிடத்தில் நடக்கும் ஒரு கலாசாரத் திருவிழாவின் கோலாகலக் குறிப்புகள் என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி, குடி குடியைக் கெடுக்கும் என்பதிலும், குடியைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
*
ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான ம்யூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர் திருவிழா (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது. சாராயம் குடிக்க திருவிழாவா என்று நாம் மிரட்சியுடன் கேட்டால் என்றால், அதனால் என்ன என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
நம் ஊர் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மட்டையாவதற்கோ அல்லது காதல் தோல்வியில் புலம்புவதற்கோ அல்ல; இங்கே பியர் குடிப்பது ஒரு கலாசார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் திருவிழா 1810ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக் (Ludwig 1786 – 1868) Saxe Altenburg என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெஸாவைத் திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.
தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக ம்யூனிக்கின் வயல்வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்ஃபெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாவாகக் கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதை தெரெஸா பசும்புல் வெளி (Theresa’s Meadow) என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைஸென் (Wisen) என்றும் சொல்கிறார்கள்.
2018ம் வருட விழா தொடங்கிய ஞாயிறு (23 செப்டம்பர் 2018) காலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றது அலெக்ஸா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மரீன் ப்ளட்ஸ் என்னும், மிக அழகான ஃபௌண்டன் பன்னீர் தூவும் அந்த ராஜபாட்டையின் நடுவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டேன். சரியாகப் பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.
வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18ம் நூற்றாண்டுத் துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டைக் குச்சியில் தலைகீழாகக் கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) கோலாகலமாக ஊர்வலம் வருகிறார்கள்.
இந்த ஊர்வலத்தின் சிறப்பு அவர்களின் உடைகள்தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் (Drendl) என்னும் உடையைப் பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோஸென் (Lederhosen) என்னும் தோலிலான அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக் காலத்தில் எலிமெண்டரி பள்ளிப் பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை. ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை, பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோஸென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் ஃப்ரான்ஸ் ஜோசெஃப் (தன் திருமணத்துக்குப் போகும் வழியில் எதேச்சையாகப் பார்த்து மையல் கொண்டுவிட்ட ஸிஸ்ஸி என்னும் பவேரிய சாதாரணளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்தவித உடையை அணிந்து அதற்கு பெரும் கௌரவத்தை ஏற்படுத்திவிட்டார்.
சம்பிரதாயமாகத் தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் விழாவில், முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்து வரும். அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாசார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப் பார்த்து கையை ஆட்டி வைத்தேன்.
குழு குழுவாகப் போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குழுக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகத்தில், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம் நிரம்பி வழியும். வயது வித்தியாசமின்றி மழைத் தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களும் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச் சிரித்துக் கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.
காலை ஒன்பது மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் ம்யூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச் சென்று தெரெஸா பசும்புல்வெளியை சுமார் பன்னிரண்டு மணியளவில் அடைகின்றது. அங்கே ம்யூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத் தட்டி உடைத்து பியரை வழியவிட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க, ஆரவாரமாகத் தொடங்குகிறது இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பந்தயம் எல்லாம் கட்டுகிறார்கள். இதில் சாதனை செய்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம். மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு.
தெரெஸா பசும்புல்வெளியில் இந்த அக்டோபர்ஃபெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்.
ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தபோது போக்குவரத்தை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத் துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கடக்கும் இந்த ராஜபாட்டையில் போக்குவரத்து விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒழுக்கத்தில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்.
தெரெசா பசும்புல்வெளியில் இப்போது புல் வெளியெல்லாம் இல்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். உள்ளே நுழையும்போதே கோலாகலத்தின் அடையாளங்கள் சந்தேகமின்றி வெளியில் தெருவிலேயே கேட்கின்றது. ஆம், அந்தச் சத்தம், பேச்சின் சளசளப்பு, சைக்கேடெலிக் வண்ணங்கள் கலந்து இழையும் விளக்குகள். பிறகு, அந்த சங்கீதம்! அபார துடிப்புமிக்க சங்கீதம். மிகப்பெரிய ‘பியர் கூடாரம்’ போட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் மேஜை நாற்காலிகள் போட்டு, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் இரண்டு கைகளிலும் பியர் கோப்பைகளை அடுக்கியவாறே நடந்து சென்று விநியோகிக்க, கூட்டம் மேடையில் துடிக்கும் சங்கீதத்துக்குக் கூடவே பாடி ஆடி மாய்ந்து போகிறார்கள்.
சங்கீதம் என்று ஒரு வார்த்தையில் அதை முடித்துவிட முடியாது. தற்காலிக மேடை போட்டு சங்கீத உபகரணங்கள் வைத்து நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறார்கள். சைகேடலிக் வண்ணங்கள் ஊடாடிக் கொண்டிருக்க கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். அங்கே மேடையில் ஒரு குழு (Band) ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அபார சங்கீதம். அந்தத் தாளம், ரிதம், கிடாரிஸ்டுகளின் சேட்டையுடன் கூடிய வாசிப்பு, எல்லாம் நம்மை ஒரு வேறு உலகத்திற்கு அழைத்துப் போவதை உணர முடிகிறது. கொஞ்சம் நேரமாக நேரமாக, அந்த சங்கீதம் மேலே மேலே என்று போய் ஒரு உச்சத்தில் நரம்புகளைத் துடிக்க வைத்துச் சட்டென்று முடிவது, போதையான எல்.எஸ்.டி அனுபவம். முடிந்து அந்த சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் தருணத்தில் கூட்டம் முழுவதும் ஹோ வெனா ஆர்ப்பரிக்கும். ரகளை! ஆங்காங்கே ஜோடிகள். ஒரு கையில் பியர் இன்னொரு கையில் பெண் என்ற விகிதத்தில் அவ்வப்போது பியரைச் சப்பிக்கொண்டு இடையிடையே அந்தப் பெண்ணின் மூக்கை நிரடிக்கொண்டும் இருக்கும் காட்சிகள் சர்வ சாதாரணம்.
அக்டோபர் திருவிழாவில் பியர் தயாரிப்பதற்கான உட்பொருட்கள் என்ன என்பதைக்கூட 1516ம் யூனிக் சட்டம் சொல்லியிருக்கிறது. இவை தவிர இதில் ஈஸ்ட் மட்டும் கலக்க அனுமதி. ஏனென்றால் இந்தச்சட்டம் இயற்றப்பட்டபோது ஈஸ்ட் எனப்படும் சமாசாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென்று தனி ஃபார்முலாவில் தயாராகும் பியர் மற்ற சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படக்கூடாது என்பதும், இந்த கம்பெனிகள் தவிர வேறு எந்த சாராய நிறுவனமும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் பியரைத் தயாரிக்க முடியாது என்பதும் சட்டம்.
இந்த தெரெசா மைதானத்து நுழைவிலேயே கடுமையான பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தக் கெடுபிடி தேவைதான். ஏகப்பட்ட கூடாரங்கள் போடப்பட்டிருக்க அவற்றில் கூட்டம் கூட்டமாக ஜனம் அம்முகிறது. குறைந்த அளவு பியர் கோப்பையே ஒரு லிட்டர்தான். அதன் விலை கிட்டத்தட்ட பதினொரு யூரோக்கள் (சுமார் 900 ரூபாய்.) அதகளமாகப் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பியர் குடித்த வண்ணம் இருக்கிறார்கள்.
கூடவே ஏகப்பட்ட உணவு வகைகளும் கிடைக்கின்றன. பவேரியன் மற்றும் ஜெர்மன் வகை உணவுகள்தாம் அதிகம். அதிலும் வறுத்த கோழி, பன்றி கட்லெட், ஸ்பாட்ஸீ என்று சொல்லப்படும் முட்டை உணவு, விதவிதமான காய்கறிகள் பழங்கள் என்று நிறைய வகைகள் இருந்தாலும் அந்தப் பச்சை மாமிச நாத்தம், நம் ஊர் போல மிளகு காரம் மசாலா சேர்க்காததாலோ என்னவோ, சில சமயம் நம் ஊர் ஊதுவத்திகளை விட மோசமாக இருக்கிறது.
லாங்கோஸ் (Langos) என்று ஒரு சாப்பிடும் வஸ்து. அங்கே கூட்டம் அல்லாடியது. என்னவென்று பார்த்தால் நம் ஊர் னான் போல, ஆனால் அப்பளமாகப் பொரிக்கப்பட்ட ஒரு மகா வட்ட சமாசாரத்தில் கொழகொழவென க்ரீம் தடவி, அதன் மேல் ஏகப்பட்ட சீஸைக்கொட்டி, மேலும் தக்காளி துண்டுகள் மற்றும் குரோய்ட்டர் என்னும் இலை தழை போன்ற சாலடுக்கான சாமக்கிரியைகளைப் பரப்பி, “உங்கள் உணவை எஞ்சாய் பண்ணுங்கள்” என்று கீச்சுக்குரலில் அழகிய இளம் பெண்கள் கௌண்டரில் தருகிறார்கள். இந்த னான் என்னும் அப்பளத்தை முகத்தில் க்ரீம் அப்பிக்கொள்ளாமல் சாப்பிடுகிறவர்களுக்கு, அதேதான், கேள்வி கேட்காமல் நம் வலது காதை வெட்டிக்கொடுக்கலாம்.
என்னுடைய ஸ்வெட்டர் காலி. மூக்குக்கண்ணாடி முழுக்க கிரீம்.
பியர் அருந்தும் ஸ்டால்களைத்தவிர குடும்பத்தோடு வருபவர்களுக்காக பலப்பலக் கேளிக்கைகளுக்கான சௌகரியங்களும் இருக்கின்றன. நம் ஊர் ஜெயண்ட் வீலின் பலதரப்பட்ட வடிவங்கள். அதன் உயரமும் சுழற்சியும் வீச்சும், புவிஈர்ப்பைக் காதலிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு வயிற்றில் ஈரப்பந்து சுருட்டிக்கொள்ள வைக்கின்றன. கூடவே உபத்திரவமில்லாத வளையம் எரிதல், துப்பாக்கிச் சுடுதல் வகை விளையாட்டுக்களும் பலப்பல உண்டு. விதவித பலூன்களைக் கொடுத்து குழந்தைகளைக் கிறீச்சிட வைக்கிறார்கள். நூல் தவறின ஒரு குழந்தையின் ஹீலியம் பலூன் வானத்தில் ஏறின காட்சியை ஏதோ பெரிய அதிசயம் போல ரசித்துப் பார்த்த கூட்டத்தில் நானும் அடக்கம்.
இந்தக் கோலாகல வட்டாரம் முழுக்கவே புகை பிடிக்க அனுமதியில்லை என்றுதான் இருந்ததாம். ஆனால் புகை பிடிக்கும் அன்பர்கள் சிணுங்கியதால் ஒரு சில இடங்களில் புகை பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள்.
இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் கோலாகலத்தில் இரண்டு வாரங்கள் உல்லாசமாகக் கூட்டம் கூடி லிட்டர் லிட்டராக பியர் அருந்தி, உண்டு, அனுபவித்து, அதே சமயம் ஒரு சின்ன அசம்பாவிதத்துக்கூட இடமில்லாமல் இருக்கும் அவர்களின் ஒழுக்கம் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை நாம் யோசிக்கத்தான் வேண்டும்.