ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு நாடி ஜோதிட நிலையம் இருக்கிறது. “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்க முடியும். உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்பது நமக்கு பதிலாகக் கிடைக்கும்.
நம்மில் பலரும் நாடி ஜோதிடம் பார்த்திருப்போம். சிலருக்கு நாடியில் கூறியபடியே அனைத்துப் பலன்களும் நடந்திருக்கும். சிலருக்கு ஒன்றுமே நடந்திருக்காது. பொதுவில், பலன் பெற்றவர்கள் நாடி ஜோதிடம் உண்மைதான் என்பார்கள். நாடி சொன்னபடி தங்களுக்கு எதுவுமே நடக்காதவர்களோ, “சே, சுத்த ஏமாற்று வேலை, எல்லாம் பக்கா ஃப்ராடு. பொய்” என்பார்கள்.
அப்படியானால் உண்மைதான் என்ன?
நாடி ஜோதிடம் என்பது என்ன?
‘நாடி ஜோதிடம்’ என்பது தமிழர்களின் தொன்மையான ஆரூட முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுமையும் இவ்வகை ஜோதிடமுறை பயன்பாட்டில் இருக்கிறது. தென்னாட்டில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி போன்ற பலவகை நாடிகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தப் பெயர்கள் கொண்ட முனிவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றன. ஆனால் வடநாட்டில் இத்தகைய முனிவர்களின் பெயர்களினால் ஆன நாடிகளை விட சூர்ய நாடி, சந்திர நாடி, சுக்ல யஜூர் நாடி, சுக்ர நாடி, கெளமார நாடி, புத நாடி, பிரம்ம நாடி, துருவ நாடி, மார்கண்டேய நாடி, பிருகு நாடி, நாரத நாடி, கர்கர் நாடி, பராசரர் நாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்புமுதல் ஆயுள்வரையிலான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதே நாடி ஜோதிடம். நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறை. கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம் என அழைக்கப்படுகிறது. ‘நாடி’ என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்’ என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்’ என்று பொருள் கொள்ளலாம். நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடி ஜோதிடர்கள் பலன்களைக் கூறுகின்றனர்.
உலக அளவில் நாடி ஜோதிடம்
பல நாடுகளிலும் பலவேறு வகையான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. சில நாடுகளில் ‘கப்பாலா’ (kabbalah) என்னும் ஓர் இரகசிய, பழமையான ஆருட முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ‘டேரட்’ எனப்படும் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுப் பலன் கூறும் முறை சீனாவில் மிகப் பிரபலமானதாகும். இதன் மூலம் பல துல்லியமான பலன்கள் தெரிய வருகிறது என்பது அதைப் பார்த்த சிலரது கருத்தாக உள்ளது. திபெத்தில் வழங்கிவரும் Akashik Records என்பதும் கூட நாடிஜோதிடத்தின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டதே! சீன நாட்டிலும் இதே போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பெயர் (Iching) ‘யீசிங்.’ ‘யீ’ என்றால் ‘மாறுதல்’ என்பது பொருள். ‘சிங்’ என்றால் ‘புத்தகம்’ என்பது பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய கடந்த, நிகழ்கால, எதிர்காலச் சம்பவங்களைப் பற்றி விவரிப்பதே இதன் தனித் தன்மையாகும்.
நாடி ஜோதிடம் உண்மையா?
நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா? எதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது? விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எப்படி அறிய முடிந்தது? அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்? அந்த ஓலைச்சுவடி எழுத்துக்களை நாடி ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?
இப்படியெல்லாம் பல கேள்விகள் நமக்குத் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான விடைகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நாடி ஜோதிடர்கள் அவற்றைத் தொழில் ரகசியமாகவும், மறை பொருளாகவும் வைத்துள்ளனர். சீடர்களாகப் பயிற்சியில் சேரும்போதே இவ்வகை ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டேன் என இறைவன், குரு, அகத்தியர் போன்ற சித்தர்கள் திருவுரு முன் சத்தியம் செய்து உறுதி ஏற்கின்றனர். அதனால்தான் நம்மால் இவற்றின் ரகசியங்களை முழுமையாக அறிய முடிவதில்லை.
அதேசமயம் நாடி ஜோதிடம் பலிக்காதது போல் நாடி ஜோதிடம் குறிப்பிட்டபடி பலருக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவேதான் நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு ஆய்வு முறைகள் தேவையாக இருக்கின்றன. ஒரே நபருக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு முறை நாடி ஜோதிடம் பார்த்தால்தான் அதன் உண்மைத் தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் விஷயமுமாகும்.
காண்டங்கள்
நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில் மற்றும் குடும்ப விபரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து சாந்தி காண்டம், தீக்ஷை காண்டம், ஔஷத காண்டம், ஞான காண்டம், பிரசன்ன காண்டம் போன்றவையும் உள்ளன. துல்லிய காண்டம், அரசியல் காண்டம், எல்லைக் காண்டம் போன்றவையும் இருக்கின்றன. சூட்சுமமான விஷயங்களை, ரகசியங்களை, மறை உபதேசங்களை, இறையருள் மற்றும் ஞானம் பெறும் ரகசிய வழிமுறைகளை, சித்தர்களுடனான தொடர்புகளை, ஆலயம் அமைப்பது பற்றிய செய்திகளைப் பற்றிக் கூறும் சூட்சும காண்டமும் உள்ளது. இவையே மற்ற ஜோதிட முறைகளுக்கு இல்லாத நாடி ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.
நாடி ஜோதிடம் பார்க்கும் முறைகள்
நாடி ஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை; பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்க முற்படுகின்றனர். அதற்கான நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. சிலருக்கு ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் கூட ஆகலாம். மற்றும் சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்துதான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.
ஓலைச்சுவடி கிடைத்ததும் நாடி வாசிப்பவர் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவரை அழைப்பார். அது அந்நபருக்குரிய ஓலைதானா என்பதனை அறியப் பல கேள்விகளைக் கேட்பார். நாடி பார்க்க வந்திருப்பவர் எந்த விபரங்களையும் (பெயர் உட்பட) முன்னதாகக் கூற வேண்டியதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’, அல்லது ‘இல்லை’ என்று மட்டும் பதில் கூறினால் போதும்.
பொதுவாகக் கீழ்க்கண்ட கேள்விகளைப் போன்ற பொதுவான கேள்விகளையே நாடிஜோதிடர்கள் கேட்பர். சரியான ஓலைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு கேட்பதாகச் சொல்கின்றனர். ஜோதிடம் பார்க்க வந்தவர் அதற்கான சரியான பதிலைக் கூறுவதன் மூலம் அவருக்கான ஓலையினைக் கண்டறிந்து பலன் கூற முற்படுகின்றனர். ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களைப் படித்து விளக்கம் கூறுகின்றனர். அவற்றை ஏட்டில் எழுதியும், ஒலிப்பதிவு நாடா/குறுந்தகட்டில் பதிவு செய்தும் தருகின்றனர்.
பொதுவான கேள்விகள் சில. (இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், சுவடிக்குச் சுவடி இவ்வகைக் கேள்விகள் மாறுபடும்.)
(1) தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா? (2) தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா? (3) தங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வருக்கு மேலா? (4) தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? (5) நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா? (6) உங்களுக்குக் காதல் திருமணமா? (7) முதல் குழந்தை பெண்ணா? (8) தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா? (9) மனைவி / கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா? (10) உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா? (11) உங்கள் பெயர் வல்லினத்தில் தான் ஆரம்பிக்குமா? (12) நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா?
இது போன்ற சில கேள்விகளுக்கு நாடி பார்க்க வந்தவர் கூற வேண்டிய பதில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பது மட்டுமே. இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான, சரியான பலன்களைத் தாங்கள் கூறுவதாக நாடிஜோதிடர்கள் சொல்கின்றனர். ஆனால், இக்கேள்விகள் மூலம் ஒருவரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பாடலில் வந்ததுபோல் படித்துக் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் உள்ளது.
ஒலைச்சுவடி பற்றிய விவரங்கள்
நாடி பற்றிக் கூறும் ஓலைச்சுவடியானது சுமார் பத்து முதல் பதினொன்று அங்குல நீளத்திலும், ஒன்று முதல் ஒன்றரை அங்குல அகலத்திலும் காணப்படுகின்றது. அந்த ஓலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, நன்றாகக் கட்டிவைக்கப்பட்டுளன. ஒவ்வொரு ஓலைக்கட்டிலும் சுமார் ஐம்பதுமுதல் நூறு ஓலைகள்வரை காணப்படுகின்றன. சிலவற்றில் அதைவிடக் குறைவாகவும் ஓலைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் பின்புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் காணப்படுவதில்லை. அவற்றில் உள்ள எழுத்துக்கள் கூட்டெழுத்துக்கள் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள். “ஒற்று நீங்கிய மிகவும் பழைய எழுத்துக்களாகக் காணப்படும் அவற்றைத் தங்களைப் போன்ற சிறப்புப்பயிற்சி பெற்றவர்களேயன்றி மற்றவர்களால் வாசிக்க இயலாது” என அவர்கள் கூறுகின்றனர். மேலும் எழுத்துக்கள் சுருக்க முறையில் குறியீடாக அதில் எழுதப்பட்டு இருக்கும் என்றும், அதனைப் பயிற்சி பெற்றுப் பல்லாண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் அனுபவம் வாய்ந்தவரே அன்றி மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இக்கூற்றை சுவடியியல் வல்லுநர்கள் மறுக்கின்றனர். “இத்தகைய எழுத்துக்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் வெறும் கிறுக்கல்கள். ஏமாற்றுவேலை” என்பதே அவர்களில் பலரது கருத்தாக உள்ளது.
நாடி ஜோதிடம் – சில விளக்கங்கள்
சிறு குழந்தைகளுக்கும் இறந்த நபர்களுக்கும் நாடி ஜோதிடம் பார்க்கப்படுவதில்லை. ஜாதகமே இல்லாதவர்களுக்கும் நாடி மூலம் ஜாதகம் கணித்துப் பலன்கள் கூற முடியும். சாதாரண ஜோதிடத்தை விட நாடி ஜோதிடம் பார்க்க அதிகம் பொருள் செலவாகும். அதிகக் கால விரயமும் ஏற்படும். அதேசமயம் பலன்களும் துல்லியமாக இருக்கும். பரிகாரம் செய்தால்தான் முழுப்பலன் என்று நாடி ஜோதிடம் கூறுவதால், அதுபற்றி ஒரு தெளிவான பார்வையுடன், அதாவது, செலவு, கால விரயம், அலைச்சல் போன்றவை பற்றி முன்னமேயே தீர்மானித்துத் திட்டமிட்டுக் கொண்டு நாடி பார்க்கச் செல்வது நலம். கூடுமானவரை நாடி ஜோதிடர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதனைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பது நலம். பொதுவாக, நாடி ஜோதிடம் பார்க்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் ஒருவருக்கு ஒருவர் உறவினராக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தங்களுக்குள்ளே நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.
பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.
இவர்களுடைய சுவடிப் பரிமாற்றத் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரன் கோயில். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் உறவினர்கள் என்பதாலும், குருகுல முறைப்படி தொழிலைத் தொடர்பவர்கள் என்பதாலும், குலத்தொழில் என்பதாலும் சில நுணுக்கமான தகவல்களை, தங்களுக்குள் இரகசியமாகவே வைத்துள்ளனர். வெளிநபர்கள் யாரும் அதனை அறிவது மிக மிகக் கடினமாகும். உதாரணமாக விரல் ரேகைக்கு ஒரு நாடியில் வந்திருக்கும் பெயரானது மற்றொரு நாடியில் மாறுபடுவது ஏன் என வினவினால் சரியான விடை கிடைக்கவில்லை. கேட்டால் “தமிழ் நுணுக்கமான மொழி, ஒரே சொல்லுக்குப் பல பொருள் உண்டு, ஒவ்வொரு முனிவரும் அதனை ஒவ்வொரு மாதிரி குறிப்பிடுவர். அதன்படி மாறி இருக்கலாம் ஆனால் பலன் ஒன்றுதான்” என்று கூறுகின்றனர். ஆனால் இது பொருத்தமானதாக இல்லை.
நாடி ஜோதிடர்கள்
பெரும்பாலான நாடிஜோதிடர்கள் தூய்மையான வெண்மை நிற ஆடைகளையே உடுத்துகின்றனர். வாக்கு வன்மை பெற்றவராக இருக்கின்றனர். வருபவர்களின் சந்தேகங்களை நீக்க முனைபவராகவும் குறைகளைச் செவிமடுப்பவராகவும் உள்ளனர். இறைநாட்டம், ஒழுக்கம், பக்தி, பணிவு, திறமை கொண்ட இவர்கள், குருவினிடத்தே தீட்சை பெற்ற பின்னரே இப்பணியில் ஈடுபடுகின்றனர். பல வருடங்கள் குருகுல வாசம் இருந்து நாடி பற்றிய விவரங்கள், நுணுக்கங்கள், சூட்சுமங்களை விரிவாக அறிந்து, அனுபவ அறிவுடனும் குருவின் ஆசியுடனும் அனுமதியுடனும் இப்பணியில் ஈடுபடுவதாகச் சொல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஜோதிடம் முழுமையாகத் தெரியும் என்றும், தமிழில் பாடல் எழுதும் புலமையும் உண்டு என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே, பல்வேறு கேள்விகள் கேட்டு அதனைச் ஓலைச்சுவடியில் வந்தது போல் பாடலாக எழுதித் தந்து ஏமாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
நன்கு படித்தவர்களும் கூட நாடி ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சான்றாக டாக்டர், பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றுள்ள சிலரும் வைத்தீஸ்வரன் கோவிலிலும், சென்னையிலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதைக் கூறலாம். அவ்வப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிற்கும் இவர்களைப் போன்றவர்கள் சென்று பொருளீட்டி வருகின்றனர்.
போலி நாடி ஜோதிடர்கள்
அதே சமயம் நாடி ஜோதிடர்களில் பல போலி நாடிஜோதிடர்களும் உள்ளனர். உண்மையானவர்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் ஏமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி விடும். ‘உங்கள் சார்பாக நாங்களே அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விடுகின்றோம், நீங்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறுபவர்களிடம் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ‘பரிகாரங்களைச் செய்யும் பொழுது தொடர்புடையவர் உறுதியாக அதில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம்தான் அவர்கள் தம் பாவங்கள் முழுமையாக நீங்குகின்றன’ என்பதே மூத்த ஜோதிடர்கள் பலரது கருத்தாக உள்ளது. போலி நாடி ஜோதிடர்கள் பல்வேறு நுணுக்கமான முறைகளைக் கையாள்வதால் நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
நாடி ஜோதிட நிலையங்கள்
தமிழகத்தின் பல இடங்களில் அகத்தியர், வசிஷ்டர், பிருகு, சுகர், சப்தரிஷி, கௌசிகர் எனப் பல முனிவர்களின் பெயரில் நாடி ஜோதிட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தலைமைப்பீடமாகத் திகழ்வது வைத்தீஸ்வரன் கோவில். ஆனால்,
இங்கு தரகர்களின் ஆதிக்கம் அதிகம். ஊருக்குப் புதியவர்கள் வந்தாலோ, பேருந்தில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாலோ உடனே தரகர்கள் வருவோரை அணுகி, நாடி ஜோதிடம் பார்ப்பது குறித்துப் பேரம் பேச ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட நாடி ஜோதிடர் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், “அவர் இல்லை ஊருக்குப் போயிருக்கிறார்” என்றோ, “அவர் மகன்தான் இவர்” என்றோ அல்லது “அவர் உறவினர்தான் இவர்” என்றோ அல்லது யாரோ வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்தி “நீங்கள் குறிப்பிட்டவர்தான் இவர்” என்றோ கூறி ஏமாற்றுகின்றனர். வருபவர்களை வழிமறித்து, மனம் குளிரப்பேசி, சில குறிப்பிட்ட நாடி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மக்களைக் கூட்டி வருவதற்கு இவ்வகைத் தரகர்கள், வரும் நபரின் தராதரத்தைப் பொறுத்து, நபர் ஒருவருக்குத் தங்கள் கமிஷன் கட்டணமாக, ரூபாய் 50/- முதல் 100/- வரை நாடிஜோதிடர்களிடமிருந்து வாங்கிக் கொள்கின்றனர். ஆகவே இது போன்ற இடங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல நாடி நிலையங்களுக்குச் சென்னை, கோவை மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கிளைகள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் பெங்களூர், டில்லி, புனே போன்ற வெளிமாநிலங்களில் நாடிஜோதிட நிலையம் அமைத்துத் தொழில் செய்து வருகின்றனர். சான்றாக சென்னையில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கு மும்பையில் கிளை உள்ளது. தாம்பரத்தில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கும் மும்பையில் கிளை உள்ளது.
நாடி ஜோதிடப் பாடலின் அமைப்பு
நாடியில் வரும் பாடலானது ‘அந்தாதி’ என்னும் இலக்கிய அமைப்பில் உள்ளது. ‘அந்தாதி’ என்பது ‘அந்தம் + ஆதி’ என விரியும். அதாவது முன் நின்ற பாடலின் ஈற்றசையோ, எழுத்தோ, சீரோ, அடியோ, தளையோ, தொடையோ வரும் பாடலின் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதே அந்தாதியாகும். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக ‘அந்தாதி’ விளங்குகிறது. தமிழில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, பொன் வண்ணத்தந்தாதி, அற்புதத் திருவந்தாதி, எனப் பல அந்தாதி நூல்கள் உள்ளன.
சான்றாக ஒருவரின் நாடி ஜோதிடக் குறிப்பில் வந்த ‘அந்தாதி’ அமைப்பில் இருக்கும் பாடல்.
காலமதில் ஒளடதபதி தலைவன் தோற்றம்
காளையிவன் அறிவு முதல் திறமை யூகம்
மேலான அத்தன் சுகம் அன்னை வீவு
மேதினியின் ஈர்வேபடல் தந்தையர்க்கு
தந்தையர்க்கு முன்குடியாள் புதல்வனாகும்
தானிவர்க்கு ஆண்துணை ஓர் அரிவை இல்லை
துணைஆணும் வேறு குல மன்றல் தொண்டு
இயம்ப அது வாகனத்தின் ஓட்டம் தன்னில்
ஆனால், “இவ்வகைப் பாடல்கள் ‘அந்தாதி’ அமைப்பில் இருந்தாலும் இவை அகத்தியர் போன்ற முனிவர்களாலோ, சித்தர்களாலோ இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்பதும், “சங்ககாலத்தில் ‘ஆசிரியப்பா’வே ஏற்றம் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் தோன்றிய ‘வெண்பா’ யாப்பில் இம்முனிவர்கள் பாடியிருக்க வாய்ப்பே இல்லை” என்பதும் தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. இவற்றிற்கு விளக்கம் கூறும் நாடி ஜோதிடர்கள், “அக்காலத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை அப்படியே பயன்படுத்துவதில்லை. அவற்றைப் பிரதியெடுத்தும், படி ஓலை தயாரித்துமே பயன்படுத்துகிறோம். அப்படி பிரதியெடுக்கும்போது பிழை நேர்ந்திருக்கலாம்” என்கின்றனர். ஆனால், இக்கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை.
அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்பது நாடி ஜோதிடர்கள் கருத்து. ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)
நாடி ஜோதிடம் சில சந்தேக விளக்கங்கள்
சுவடியியல் அறிஞர்களிடம் நாடி ஜோதிடம் பற்றிக் கேட்டால், “இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.
ஆனால் நாடி ஜோதிடர்களோ, “இவையெல்லாம் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள்தான். எங்களைப் போன்று அதைப் படிப்பதற்கென்றே, தனியாக குரு மூலம் பயிற்சி பெற்றவர்களால் அன்றி மற்றவர்களால் அதைப் படித்து பொருள் காண முடியாது” என்கின்றனர். மேலும் “ஒரு வித மூலிகையை உள்ளடக்கி, சில ரகசிய மந்திரங்களை உச்சாடனம் செய்து, தனிமையில் அமர்ந்து தவம் செய்தால், அந்த எழுத்துக்களைப் படிக்கும் ஆற்றலும், வாக்குப் பலிதமும் உண்டாகும்” என்று இவர்கள் கூறுவது நம்பக் கூடியதாக இல்லை.
நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை, எழுத்துக்களின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு நாடி ஜோதிடர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல; ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அது நாடி ஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவது போல மக்களை ஏமாற்றியும் வருகின்றனர். (பார்க்க படங்கள் : 2, 3) அதுவும் மொழி தெரியாத வெளிநாட்டுக்காரர்கள், வட இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது இன்னமும் எளிது. “உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி; புண்ணியவான்; முனிவரின் அருள் பெற்றவர் “ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி, ஓலைச்சுவடியைக் காட்டிப் பணம் பறிக்கின்றனர். இவர்களில் சிலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட சம்பவங்களும், சிலர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் கூட இருக்கின்றன.
நாடி ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா, ‘பொய்’ என்றால் ஏன் பொய்யாகிறது, அதற்குக் காரணம் என்ன, சிலருக்கு மட்டும் ஏன் நாடியில் வந்தது போலவே பலன்கள் நடக்கின்றன, அதற்கான சூட்சும காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. “நாடி ஜோதிடத்தில் ‘யக்ஷிணி’ போன்ற சில தேவதைகளின் பயன்பாடு உண்டு” என்ற கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் மிக விரிவாக, பலர் ஒன்றிணைந்து, பல்வேறு கால கட்டங்களில் பல முறை மீள மீளச் செய்ய வேண்டிய ஆய்வுகளாகும். என்றேனும் ஒருநாள் எதிர்காலத்தில் இது சாத்தியமாகக் கூடும் என்று நம்புவோம். அதுவரை ‘உண்மை’ என்றும் ‘பொய்’ என்றும் இரு வேறு கருத்துக்களுடன் இது புரியாத புதிராகவே நீடிக்கும்.