Posted on Leave a comment

விறகுக்கட்டில் தேள் – சுதாகர் கஸ்தூரி

அம்பாசமுத்திரத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாகப் படித்துக்கொண்டிருந்த காலம். வீடுகளில் திண்ணை தாண்டி சிறு உள்தாழ்வாரத்தில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். அடுத்த வீட்டில் ஒருநாள் அலறல் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தோம். ஆண்டாள் மாமி, வலது கை ஆள்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு வலியில் கத்திக்கொண்டிருந்தாள். “தேள்.. விறகுக்கட்டுல தேள்.. கொட்டிருத்து.” அண்ணன் விறகுக்கட்டை அவசரமாக விலக்க, தேள் ஒன்று கொடுக்கை உயர்த்தியபடி அவசரமாக உள்ளே ஓடி மறைந்தது. மாமிக்கு யாரோ, ஸேஃப்ட்டி பின் கொண்டு, தேள் கொட்டிய இடத்தில் மெல்லத் தோண்டி, சிறு கொடுக்குத் துண்டை வெளியே எடுத்து… கையில் சுண்ணாம்பு வைத்து… அதற்குள் மாமி வலியில் துவண்டு விட்டாள்.

கிட்டத்தட்ட ஆறு மாதகாலம், மாமியின் விரல் வளைந்தே இருந்தது. “கையில் என்ன மாமி?” என்றால் போதும் “அதேண்டா கேக்கறாய்.. ஒரு பெரிய தேள்.. நட்டுவாக்காலியோ என்னமோ.. கொட்டிடுத்து” கிட்டத்தட்ட அழுதுவிடும் குரலில் ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். ‘அது தேள் குஞ்சு’ என்றான் அண்ணன். நட்டுவாக்காலியெல்லாம் இல்லை. ஆனால் ஆண்டாள் மாமி அதனை உறுதியாக நம்பினாள்.

அதன்பின் விறகு எடுக்கவே பயந்தாள். “அம்பி வந்து ரெண்டு விறகு எடுத்துக்கொடுத்துட்டுப் போடா” என்பாள். அம்பி, இல்லாதபோது “டேய், இவனே, செத்த வந்து ரெண்டு விறகு உருவிப் போட்டுட்டுப் போ” என்பாள், என்னைப் போன்ற சிறுவர்களிடம். பிள்ளைகள் விளையாட்டில் பந்து எதாவது செடிகளில் சென்றுவிட்டால் “டேய்.. அங்க போகாதே. தேள் எதாச்சும் இருக்கப்போறது.” அங்கு புதரில் பாம்பு இருக்கச் சாத்தியமிருந்தது. ஆனால் அவளுக்குப் பயம் தேள்தான்.

விறகு எடுத்துக்கொடுக்க யாராவது வந்தால்தான் உண்டு. மற்ற அனைத்துக் காரியங்களும் செய்யக்கூடிய ஆண்டாள் மாமிக்கு விறகு என்றால் தேள் நினைவு. மடங்கிய விரல் பல மாதங்கள் கழித்து நீண்டதா என்பது நினைவில்லை. ஆனால், அவரை மிகவும் தாக்கியது ஒரு குஞ்சுத் தேள் கொடுக்குதான் என்பதும், அவரது நடைமுறை வாழ்க்கையை மாற்றிப்போட்டது அந்த சிறுநிகழ்வுதான் என்பதும் எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. நானே சிலநாட்களில் விறகுக்கட்டைகளை எடுத்துப் போட்டிருக்கிறேன். (“பாத்துடா, உள்ள தேள் இருந்து வைக்கப் போறது.”)

சிலவேலைகளில் மட்டும் நாம் காலதாமதம் செய்வதற்கும், தவிர்ப்பதற்கும், ஏதாவது முன் அனுபவமோ, பிறரது அனுபவத்தைப் பார்த்து / கேட்டு உள்வாங்கியதோ காரணமாக இருக்கலாம். நமக்கு எப்போது தேள் கொட்டியது என்பதை விலகி நின்று ஆராய்ந்தால், அது குஞ்சுத்தேள்தான், நட்டுவாக்காலியல்ல என்பதும், நமது விரல் சில நாட்களிலேயே பலதேவைகளுக்கு நீண்டுவிட்டது என்பதும், விறகு எடுக்க மட்டும் வளைந்து வலியெடுக்கிறது என்பதும் தெரியவரும்.

பயங்களில் சில காரணமற்றவையாக இருக்கலாம். சில உள்மறைக் காரணங்களால் வந்திருக்கும். நமது நட்டுவாக்காலி நம்பிக்கைகளை நம்பாது, கொட்டிய தேள் எது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டால், விரல்வளைவுகளையும் விறகு எடுக்கத் தவிர்ப்பதையும் தவிர்க்க முடியும்.

“பயங்களை வெற்றி கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது அதனை எதிர்த்தான இயக்கம்” என்கிறார் ஸ்காட் ஆலன், தனது பிரபலமான ‘The Discipline of Masters’ என்ற புத்தகத்தில். “தோல்வி கொண்டுவரும் முதல் தடைக்கல் – பயம்” என்றே ‘சுய-தோல்வியடையச் செய்யும் தடைகள்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். தள்ளிப்போடுதல் என்பதில் நாம் சொல்லும் சாக்குகள் பல இருப்பினும், அதில் முக்கியமானதைக் கவனியுங்கள் – ஒரு பயத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.

“உங்கள் பயங்களை வெற்றி கொள்ளுங்கள்” என்று பல புத்தகங்களிலும், உற்சாகமூட்டும் பேச்சுகளிலும் பார்க்கலாம். ஆனால் இது அத்தனை எளிதில் சாத்தியமல்ல. நமது பயங்களின் ஆதிமூலம் தெரியாமல், தற்போது நமது பயத்தின் நீட்சி எதனால் என்பது தெரியாமல் நம்மால் நமது பயங்களை எதிர்கொள்ள முடியாது. மிக ஆழமான, வலி நிறைந்த பயமாக இருக்குமானால், மனநல ஆலோசகர்களை அணுகுவதுதான் சரியான வழி.

மற்றபடி, “லைட் இல்லைன்னா, உள் ரூமுக்குப் போகமாட்டேன்” என்று சொல்லுவதில் சிறுவயதில், திடீரென “பே” என்று அலறி பயப்பட வைத்த அண்ணன்களின் குரல்களே இன்றும் மனத்தின் ஆழத்தில் இருந்து, இருட்டான அறைக்குச் செல்லப்பயப்பட வைக்கிறது என்பதை நாமே புரிந்துகொள்வது யதார்த்தம். இதற்கும் சில உரையாடல்கள் அவசியம். “ஆமா, நான்தான், நீ அந்த ரூம் போகும்போதெல்லாம் பின்னால இருந்து ஊ ஊன்னு ஊளையிடுவேன். நீ அம்மான்னு அழுவே” என்று அண்ணன் இப்போது சிரித்துக்கொண்டே நினைவு கூர்ந்தால், அதனை மனதில் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதும், மெல்ல மெல்ல இருட்டிய அறையில் சென்று லைட்டைப் போட்டுப் பழகுவதும். அதனைப் பாராட்டி உற்சாகமூட்ட ஒருவர் அருகில் இருப்பதும் ஆரோக்கியமான செயல்.

சில நேரங்களில் மட்டுமே, தன்னந்தனியாக பயங்களை எதிர்கொள்ள முடியும். மனம், முன் அனுபவம் கொண்டு ‘நமக்கு இது பயப்படுத்தும் அனுபவம். தவிர்த்துவிடு’ என்றே நம்மைத் தளர்த்தும். விலக்குவதற்கான தருக்க ரீதியில் அனைத்துக் காரணங்களையும் முன்னிறுத்தும். அவை அனைத்தும் நியாயமானவையே. “இந்த வயசுல நீச்சல் கத்துகிட்டு என்ன செய்யப்போற? பேசாம உன் வேலையைப் பாரு” என்பது நாற்பத்தைந்து வயதுப் பெண்மணிக்குத் தகுந்த காரணமாக இருக்கலாம். ஆனால், தண்ணீர் மீதான பயம் அவருக்கு என்றுமே இருக்கும். கங்கையில் குளிக்கப் போனாலும் ஒரு செம்பு தேவைப்படும். சில்லென்ற நீரில் முழுகி எழும் ஆனந்தம் அவருக்கு என்றுமே கிட்டப்போவதில்லை – அவர் அதனை ஆழ்மனதில் மிக விரும்பினாலும்.

இது ஒரு கேள்வியை முன் வைக்கிறது. ‘எனது விருப்பம், எனது பயங்களைப் போக்கிவிடாதா?’ விருப்பம் (desire) என்பதற்கும், ஆழ்ப்பற்று (passion) என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு சைக்கிள் ஓட்ட ஆசை என்பதற்கும், ‘என்ன மழையானாலும் சரி, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் சைக்கிள் ஓட்டியே தீருவேன்’ என்பதற்கும் உள்ள வித்தியாசம் அது. ஆழ்ப்பற்று நம்மை, நமது பயத்திலிருந்து விலகி வரச்செய்யும். இந்த உள்ளுணர்வு வராவிட்டால், நம்மால் மிகப் புத்திசாலித்தனமான, மிகச்சரியான, நடைமுறைக்குச் சாத்தியமான சாக்குப் போக்குகளை ஒரு பட்டியலாக அடுக்க முடியும். “சர்க்கரை வியாதிக்கு தினமும் முப்பது நிமிசம் நடக்கணும். சரி. எனக்கு நடக்கப் பிடிக்கவும் செய்யும். ஆனா, எட்டுமணிக்கே ஆஃபீஸ் கிளம்பணுமே? தவிர, எங்க நடக்க முடியுது சொல்லுங்க? ரோடெல்லாம் ஒரே ட்ராஃபிக். புழுதி… இதுல நடந்தா…” இதெல்லாம் சரிதான். நடக்க மிகவும் பிடிக்கும் என்றால், ஆறுமணிக்கே எழுந்திருக்க வைக்கும். மூக்கில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டு நடக்கத் தோன்றவும் செய்யும். இது ஆழ்ப்பற்றின் அடையாளம்.

ஆழ்ப்பற்று மட்டுமிருந்தால் போதுமா? ஒவ்வொரு பயத்தின்பின்னும் அதன் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. இத்தனை வருடம் நீரில் இறங்காமல் இருந்துவிட்டு, திடீரென நீச்சல்குளத்தில் குதிக்க முடியுமா என்ன? சைக்கிள் ஓட்டிவிட முடியுமா? ‘48 வயதில், 85 கிலோ எடையில், இப்ப நான் பரத நாட்டியம் கத்துக்கப் போறேன்னு சொன்னா, சிரிக்க மாட்டாங்களா? முதல்ல, எந்த டீச்சர் சேத்துக்குவாங்க?’

தருக்கம் சார்ந்த இந்தக் கேள்விகளும் நியாயமானவைதான். “ஆழ்ப்பற்றுடன் மற்றொரு பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்கிறார் டாக்டர் ஆஞ்செலா டக்வொர்த், அவரது ‘Grit’ என்ற பிரபலப் புத்தகத்தில். அது பொறுமையுடனான விடாமுயற்சி (Perseverance). நிஜமான தடைகளைவிட, நம் மனதில், அத்தடைகளைக் குறித்துத் தோன்றும் நினைவுகளும் கேள்விகளுமே மிகப்பெரிய தடைகள்.

‘எந்த டீச்சர் வயதான என்னை டான்ஸ் கிளாஸ்ல சேத்துக்குவாங்க?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் தள்ளி வைத்து ‘எங்கு வயதானவர்களுக்கும் டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறார்கள்?’ என்று தேடுவதும் கேட்பதும் முதல்படி. சிலர் வியக்கலாம்; எள்ளி நகையாடலாம். பொறுமையுடனான விடாமுயற்சி என்பது ‘தெரியலையே, அப்படியெல்லாம் இருக்க சாத்தியமில்ல’ என்ற பதில்களைத் தாண்டி ‘அடுத்து’ என்று அடுத்த நண்பரிடம் கேட்கத் தூண்டும்.

எத்தனை முறை இப்படித் தோல்விகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்? “குறைந்தது நாற்பது முறை” என்கிறார் ஜாக் கான்ஃபீல்ட், தனது ‘How to Get From Where You Are To Where You Want To Be’ என்ற புத்தகத்தில், “ஒரு புத்தகத்தை எழுதிப் பதிப்பதற்கு”. அனைவரும் புத்தகம் எழுத முயல்வதில்லை என்றாலும், குறைந்தபட்சம் இருபது முறை தடைகளையும், தோல்விகளையும் எதிர்நோக்கி ‘அடுத்து’ என்பதை மீண்டும் முயலுங்கள் என்று எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

பின்னணியில், பயம் பெருமளவில் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதிலும், தேள்கொட்டிய நிகழ்வு நமக்கு எது என்பதைக் கேட்டுத் தெளிவதிலும், எந்த அளவில் தள்ளிப்போடுவதை விரும்புகிறேன் என்பதனை உணர்வதிலும், அதனை அடைய எந்த அளவில் ‘அடுத்து’ என்று இயங்க முயல்கிறேன் என்பதனை உறுதிப்படுத்துவதிலுமே, ஒரு முயற்சியைத் தள்ளிப்போடுவது என்ற பழக்கம் நலிவடைய முடியும்.

Reference

Angela Duckworth: Grit

Jack Canfield: How to Get From Where You Are To Where You Want To Be

Scot Alan: The Discipline of Masters

Leave a Reply