Posted on Leave a comment

சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

“எந்த ஊர் நீங்கள் எல்லாரும்?” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை “இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா?” என்றார்.  “நலமாக இருக்கிறார்” என்றேன். மோதியைப் பற்றி எதோ சிரித்துக்கொண்டே சொன்னார். நான், மாண்டரின் எனக்குக் கொஞ்சம்தான் தெரியும், சில வார்த்தைகள்தான் பேசமுடியும், நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் புரியவில்லை என்றேன். அவர் “பரவாயில்லை… நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள்” என்றார். இந்தப் பயணம் முழுவதுமே நான் சந்தித்த அத்தனை பேரும், எனக்குத் தெரிந்த சீன மொழியில் பேச முயற்சி செய்த போதெல்லாம், ஒரே ஆச்சரியமும் வியப்புடனும் என் சொற்பிழைகளை எல்லாம் விடுத்து என்னைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தைவிட சீன மொழியில் பேசுவதே சௌகரியமாக இருந்தது.

சீனாவில் காலடி வைத்ததிலிருந்து முதலில் தெரிவது கடலலை போன்று அலை அலையாக முகங்கள் முகங்கள், எங்கும் முகங்கள். குழந்தைகளுக்கு ஈடாக வயது முதிர்ந்தவர்களும் ஏராளமாகத் தென்பட்டனர். முதியவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியத்துடன், உடல் தளர்வின்றி இருப்பதாகப்பட்டது. அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது, எல்லோருமே ஒரு மாதிரி இரைந்து சத்தமாகப் பேசுவதாகப் பட்டது. சாலை நடுவில், பக்கத்தில் நிற்பவரிடம் கூட சாதாரணமாகப் பேசுவதைவிடக் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொள்கிறார்கள். மேலும், இருவர் பேசும்போது, அவர்கள் பேசுகிற தொனியை மட்டும் கவனித்தால் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போலவும், சிறிது நேரத்தில் இவர் அவரை அடித்து விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் ஏதாவது சாப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

பீஜிங்கில் அகலமான சாலைகள். எட்டு அல்லது பத்து வழிச் சாலைகள் அதிகம் தென்பட்டன. நகரைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து வட்டச்சாலைகள் அமைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் சென்ற ஒரு எட்டு வழிச்சாலை திடீரென்று முட்டுச் சந்தாகி விட்டது. அது இன்னும் முழுவதுமாக அமைக்கப்படவில்லை, பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பீஜிங் நகரத்துக்குள் பெரிய சாலையமைப்பு பணிகள் எதுவும் நடக்காவிட்டாலும், அங்கங்கே பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காகவென்றே மேலும் பல கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

சாலைகளில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பான்மையான மக்கள், சைக்கிள், மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையே உபயோகிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஆயிரக்கணக்கில் இது போன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் இரைந்து கிடக்கின்றன. இரு பெருநிறுவனங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். யாரும் சைக்கிள்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. மொபைல் செயலியில் சைக்கிள் மீது உள்ள கோட்-ஐ (Code) ஸ்கேன் செய்து இயக்கினால் சைக்கிள் பூட்டு திறந்து கொள்கிறது. பின்பு எவ்வளவு தூரம் செல்லவேண்டுமோ சென்ற பின் அங்கேயே சைக்கிளை விட்டுவிட்டுச் சென்று விடலாம். எவ்வளவு தூரம் சென்றோமோ அதற்குரிய தொகை நமது கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு விடும். குளிர் காலத்தில் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் மீது கோட் (Coat) மாதிரி ஒன்றைப் போடுகிறார்கள்.

சைக்கிளைத் தவிர பயணம் செய்வதற்கு ஊபர் மாதிரியான டாக்சிகளும், சப்வே ட்ரெயினும் செயல்படுகின்றன. இது தவிர பேருந்துகளும் உள்ளன. பேருந்துகள் சில இடங்களில் மின்சார ரயில் போல் மேலே மின்கம்பிகளைத் தொட்டுக் கொண்டும், அது இல்லாத இடங்களில் டீசலிலும் செல்லுகின்றன. எல்லோரும் பயமுறுத்தியதைப் போல, மாசு, புகை, மூச்சுத் திணறல் எதுவுமே நான் சென்ற பகுதிகளில் இல்லை. அங்கேயே வாழும் சீனர்களில் பலர் கூட மாசைக் கட்டுப் படுத்தும் மாஸ்க் அணிவதைப் பரவலாகக் காணமுடியவில்லை. ஓரளவு மாசு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சாலையில் கண்ட மற்றொரு விஷயம், நடந்து செல்பவர்களுக்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் சிக்னல் இல்லாதபோதும் குறுக்கே சாலையைக் கடக்க முயற்சிக்கும்போதும், யாரும் கோபப்பட்டு ஹாரன் அடித்து எரிச்சலை வெளிப்படுத்தவே இல்லை. பொதுவாகவே பல நிமிடங்கள் சாலையில் காத்திருக்கும்போதும், திடீரென்று யாராவது குறுக்கே செல்ல நேரிட்டாலும் யாரும் கோபப்படவே இல்லை.

*

அமெரிக்க நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் தனியாகவும், கடைகளும் அரசு அலுவலகங்களும் தனியாகவும் இருக்கும். ஆனால் பீஜிங்கில் நமது இந்திய நகரங்களைப் போலவே குடியிருப்புப் பகுதிகளும், அலுவலகங்களும் பெருவிற்பனைச்சாலைகளும் (mall) அருகருகே இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் உள்ளன. ஆனால் கடைகள், விற்பனைப் பொருட்கள், எதிலுமே சிறிதும் ஆங்கிலம் கிடையாது. ஓரிடத்தில் கொஞ்சம் பாலும் தயிரும் வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் தயிர் என்றால் அதில் இனிப்பு சேர்க்கப்பட்டது மட்டுமே கிடைக்குமாம், வெறும் தயிர் கிடைப்பதில்லை. எங்கும் அசைவ மயம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தானே சமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சீனாவின் மக்கள் தொகையோ நூற்று முப்பது கோடி. அவர்களில் நூறு கோடிப் பேர் அசைவம் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை கோடி மிருகங்கள் தினமும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன, ஒரு வருடத்தில் எத்தனை மிருகங்கள் அழியும் என்று கணக்கிட்டால் வியப்பாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் கே.எஃப்.சி, மெக்டோனாட்ஸ் போன்ற உணவகங்களில் பன்றிக் கறி கிடைக்கிறது. இந்த உணவகங்கள் எல்லாமே உள்ளூர் பாணியில் உள்ளன. வால்மார்ட் போன்ற பெருவிற்பனைக் கூடங்களில் உயிருடன் உள்ள கடல் வாழ் உயிரினங்களை விற்கிறார்கள். சீனர்கள் உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா வீதிகளிலும் ஒன்றிரண்டாவது உணவகங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து ஆங்கிலேயர் எப்படித் தேயிலை பயிர்களைத் திருடி இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து நண்பர்களுடன் பேசினோம். இரண்டாம் உலகப்போரின்போது சீனப் போர்க் கைதிகளை நமது உதக மண்டலத்திற்குக் கொண்டுவந்து தேயிலை பயிரிட ஆங்கிலேயர் பயன்படுத்திய விவரம் குறித்தும் பேசினோம். ஹுவான் சுவாங், இ சிங் போன்ற யாத்திரிகர்கள் குறித்து பேச்சு தொடர்ந்தது. ஹுவான் சுவாங் நன்கு அறியப்பட்டவர், பள்ளிகளில் பாடங்களில் அவரது பயண விவரங்கள் உண்டு என்று எங்கள் சீன நண்பர் தெரிவித்தார்.

*

இரும்புத் திரை நாடு என்பார்கள். சீனாவிற்கு செல்லும்முன்பே எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று விரிவாகச் சொல்லி இருந்தார்கள். மதத்தைப் பரப்புதல், மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வருகிறவர்கள், சந்தேகப்படும் வகையில் நிறைய பிரசுரங்கள் புத்தகங்கள் எடுத்து வருகிறவர்கள் போன்றவர்களைக் கூட சீன நாட்டுக்குள் உள்ளே நுழைய விடமாட்டார்கள். பௌத்த விஹாரங்கள் கூட சுற்றுலா செல்லும் இடம் போலச் செயல்படுகின்றன. சர்ச்சுகளும் அப்படித்தான். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிஷப்புகள் வாடிகனின் பிரஜைகள், அவர்கள் எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டாலும் முதலில் வாடிகனில் அனுமதி வாங்கித்தான் கைது செய்ய முடியும் என்று சொல்வர். ஆனால் சீனாவில் சர்ச் அந்நாட்டு கம்யூனிச அரசுக்கே தன் விசுவாசம் என்று அறிவித்துவிட்டுத்தான் செயல்படுகிறார்கள். சீனர்களிடையே பெரும்பாலான கிறிஸ்தவ மதமாற்றம், தாய்வானிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் வருகிற சீனர்களிடமிருந்தே ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில், டிவி சானல்கள் எல்லாமே சீன மொழியில்தான் இருந்தன. பிபிசி மற்றும் CNBC சேனல்கள் மட்டுமே ஆங்கிலம். அதிலும், செய்திகளில் சீனா குறித்து ஏதேனும் செய்தி இருந்தால் உடனே அந்த சானல் பல நிமிடங்களுக்குக் கருப்பாகி முடங்கி விடுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில்தான், ஹாங்காங்கில் ஒரு மாணவர் குழு, தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருந்தது; பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ஒருவர் புகார் அளித்தும், அவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் செய்திகள் பிபிசியில் வரும்போதெல்லாம் முடங்கியது. சீன மொழி சானல்களில் நான் பார்த்தவரை எல்லாமே நேர்மறையான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. ஒரு கிராமத்தில் எப்படி விவசாயம் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது, எப்படி அங்கே எல்லாரும் செல்வந்தர்கள் ஆகி வருகிறார்கள் என்பது மாதிரியான செய்திகளே. சைனா டெயிலி போன்ற செய்தித் தாள்களிலும் இதே நிலைதான். உலகச் செய்திகளில் கூட எப்படி எல்லா நாடுகளும் சைனாவுக்கு சாதகமாக உள்ளன, அல்லது எதிராக நடந்துகொள்ளும் நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன என்பது போன்ற செய்திகளே காண முடிந்தது.

நான் பழகிய அளவில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. இந்தியாவைக் குறித்து மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். நமக்கு பாகிஸ்தான் போல, சீனாவுக்கு ஜப்பான். ‘பொதுவாக நாங்கள் ஜப்பான் குறித்து எதுவும் பேசவே மாட்டோம். ஜப்பான் மீது ஆழ்ந்த வருத்தமும் கோபமும் உள்ளது’ என்றார் என் நண்பர்.

*

நாங்கள் சென்றிருந்த நேரம் Moon festival என்ற பண்டிகைக் கொண்டாட்டம். இந்தியாவில் புரட்டாசி பௌர்ணமி தினத்தை சரத் பூர்ணிமா என்று கொண்டாடுவர். சீனாவில் இந்த நாள் ஒரு அரசு விடுமுறை நாள். மதம், நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அதற்கு முதல்நாள் சீனப் பெருஞ்சுவரைக் கண்டு வந்திருந்தோம். சீனப் பெருஞ்சுவர் சிறிய குன்றுகளின் மீது வளைந்து வளைந்து செல்கிறது. பல இடங்களில் அதற்கு அடியில் சுரங்கம் (tunnel) அமைத்தும், சில இடங்களில் அதன் குறுக்கேயும் சாலைகள் அமைத்துள்ளனர்.

நாங்கள் சென்ற பகுதியில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களைப் போன்றே கசகசவென்று கடைகள். ஆனால் நடைபாதைகள் படு சுத்தமாக இருந்தன. சுவரின் மீது ஏறி நடந்து செல்ல பல படிகள் ஏற வேண்டி இருந்தது. பல இடங்களில் புதிதாக சிமென்ட் / கான்க்ரீட் போட்டுப் பராமரித்திருந்தனர்.  ஒரு பக்கம் ஒரு காவல் கோபுரத்தில் இருந்து இன்னொரு காவல் கோபுரத்துக்கு ஓட்டப்பந்தயம் கூட நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில், டிக்கட் வாங்கும்போது இந்தியர்களுக்கு ஒரு விலை, வெளிநாட்டினருக்கு ஒரு விலை என்று வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாருக்குமே ஒரே விலைதான்.

அதற்கும் முந்தைய தினம், பேலஸ் ம்யூசியம் என்கிற Forbidden Cityக்கு சென்றோம். (அண்மையில்தான் மோதி இங்கே வந்து சென்றார்). தஞ்சை பெரிய கோவிலைப் போல நான்கைந்து மடங்கு பெரிய அரண்மனை இது. ஒரு காலத்தில் அரச குடும்பம் வாழ்ந்த இடம். மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டின்கூரை அமைப்பை வைத்தே ஒருவரின் சமூக மதிப்பை கூறிவிடலாமாம். சாதாரண மக்கள் வீட்டுக் கூரைகள் கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். அரசர்களின் வீடுகள் மட்டும் கூரை மஞ்சள் நிறத்தில் பொன்னைப் போன்று இருக்குமாம். இங்கேயும் அரண்மனைக்குள் அப்படித்தான் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற ஒரு மைதானம், அதைக் கடந்ததும் அகழி, அதைத் தாண்டியதும் காவல் கோபுரங்களுடன் கோட்டைக் கதவு, அதைப் பூட்ட உபயோகிக்கும் பன்னிரண்டு அடி நீள ஒற்றை மரத்துண்டு, அதற்குப் பின் அரச தர்பார். அங்கே தரையில் டிராகன், சிங்கம், புலி போன்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அரசர்கள் அதன் மீது நடந்தது வருவார்களாம். அங்கங்கே ஐந்தடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவில் பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள், நீர் சேமிக்கவாம். அரசர்கள் உபயோகித்த பொன்னாலான சிம்மாசனங்கள் கூட அங்கே வைத்திருக்கிறார்கள்.

சென்ற இடமெல்லாம் ஏராளமான கூட்டம், முக்கியமாக கொரியர்கள் நிறைய இங்கே சுற்றுலா வந்திருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு இந்தியர் குழுவையும் கண்டேன்.

அடுத்து நான் பார்த்த பகுதி, சீனாவின் தேசிய அருங்காட்சியகம். இங்கே சீனாவில் கிடைத்த பழங்காலப் பொருட்கள், பழங்கால மக்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், மூங்கில் துண்டுகள் என்று பலவும் இருக்கின்றன. ஏராளமான வெண்கலம், தங்கம், பிற உலோகங்களில் செய்த விதவிதமான புத்தர் சிலைகள், பௌத்த மதத் தேவதைகளின் பிரதிமைகள் பலவும் இங்கே அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றின் பெயரை சம்ஸ்க்ருத உச்சரிப்பு மாறாமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் பேசிய பல சீன நண்பர்களுக்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பௌத்தம்தான் மிகவும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. பாலி மொழி குறித்து ஒரு சீன நண்பர் பல விவரங்கள் கூறினார். ஆனால் அவருக்கு சம்ஸ்க்ருதம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தேசிய அருங்காட்சியகத்திற்கு அருகிலேயே தியானன்மென் சதுக்கம், அரசினர் மாளிகைகள் பலவும் உள்ளன. என்னுடன் வந்த சீன நண்பர் பயபக்தியுடன்  இங்கேதான் சேர்மன் இருக்கிறார். இதற்கு முன்பு சேர்மன் மாவோ இங்கிருந்துதான் அலுவல்களைக் கவனிப்பார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். 1989ம் ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி லேசாகக் கேட்டேன், அது எப்போதோ பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்தது, இப்போது அதெல்லாம் யாருக்கும் நினைவில் கூட இருப்பதில்லை என்று நகர்ந்து விட்டார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாதுகாப்பும் பலமாக உள்ளது. எக்காலத்திலும் பாஸ்போர்ட், ஐடி கார்டு இல்லாமல் செல்லக் கூடாது. யாரையும் எங்கேயும் நிறுத்தி சோதனை செய்வார்கள். ஏன் இத்தனை பலமான சோதனைகள், இங்கே தீவிரவாதிகள் குறித்து பயமா என்றேன். தீவிரவாத நிகழ்வுகளை விட, ஏதாவது போராட்டங்களே அடிக்கடி நிகழும், உடனே காவல்துறை வந்து அடக்கிவிடும் என்றனர். நான் சென்ற ஒரு வாரத்துக்குள் எனக்கு அப்படி எதுவும் சிக்கலான அனுபவம் நேரவில்லை.

இந்திய நகரங்களில் பெரும்திரளான மக்களின் நடுவே இருக்குபோது ஒரு நிம்மதியற்ற நிலை இருப்பதாக எனக்குப் படும். எதிலும் ஒரு அச்சம், தற்காப்பு, சுயலாபம், உயர்ந்தது தாழ்ந்தது என்று உணரமுடியாத நிலை, அலட்சியம் எல்லாம் தென்படும். பீஜிங்கில் நான் பார்த்தவரை, எரிச்சல்படாத டாக்சி ஓட்டுநர்கள், அவசரப்படாத வாகனங்கள், பொதுமக்களிடம் விதிகளை மீறாத பழக்கங்கள் இவையே என்னைக் கவர்ந்தன. நாட்டின் தலைநகரமாகையால் இப்படி இருக்கலாம், வேறு பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றித் திரிந்து பார்த்தால்தான் அந்த மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

Leave a Reply