
Vikram Phuken, The Hindu
இந்த வாக்கியங்கள் அலிக் பதம்ஸியை மிகச்சரியாக விவரிக்கின்றன எனலாம். நவம்பர் 18, 2018ல் தன் 90வது வயதில் காலமான பதம்ஸி இந்திய விளம்பர உலகில் முடி சூடா மன்னராகவே இருந்தவர். விளம்பரம் மட்டுமில்லமல் அவர் ஒரு மிகத்திறமையான தியேட்டர் ஆசாமியும் கூட. சினிமாவிலும் தலை காட்டியிருக்கிறார்.
நான் ஒண்ணரை வருடப் பயிற்சி முடித்து மேலாளராகப் பதவி ஏற்றதும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்டின் அழகு சாதனப்பொருட்கள் பிரிவில் சேர்ந்தேன். அந்தப் பிரிவிலிருந்துதான் இன்றைய பிரபல லிரில் சோப், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற அழகு சாதனப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். அன்றைய பிரிவின் தலைவர் சித்தார்த் சென் என்பவர் அன்றைய மார்க்கெட்டிங் உலகின் உஸ்தாத் என்று அறியப்பட்டவர். பதம்ஸீயின் நல்ல நண்பர். இருவருமாகச் சேர்ந்துதான் மிக மிக வெற்றிகரமான அந்த நீர் வீழ்ச்சியில் இளம் பெண் குளிக்கும் லிரில் சோப் விளம்பரத்தை உண்டாக்கியவர்கள்.
1985ல் பத்து வருடங்களுக்கு முந்தைய லிரில் சோப்பின் விளம்பரப் படத்தை மீண்டும் எடுக்கத் திட்டம் போடப்பட்டபோது அந்தப் பிரிவின் நிதி மேலாளர் என்னும் முறையில் பல கூட்டங்களில் நானும் பங்கேற்றிருக்கிறேன். நேரிடையாக பதம்ஸீயின் அணுகுமுறையைக் கண்டவன் என்னும் வகையில் எனக்கு அவர் மேல் சிவாஜி கணேசன் போல ஒரு மதிப்பு ஏற்பட்டது. மும்பையின் லீவர் ஹௌஸ் என்னும் எங்கள் அலுவலகத்தின் கான்ஃபெரென்ஸ் அறையில் தெலுங்குப்பட தேவலோகக் காட்சி போல சிகரெட் புகை சூழ சித்தார்த் சென்னும் அலிக் பதம்ஸீயும் விவாதித்து, வினாடி வினாடியாக அந்த லிரில் பட விளம்பரத்தை உருவாக்கியதை ஓரளவுக்குக் கண்ணால் கண்டவன் நான். படைப்புத்திறம் என்பது அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நிதரிசனமாகப் புரிந்துகொண்ட தருணங்கள் அவை. ஒரு விளம்பரம் எவ்வாறெல்லாம் மக்களைச் சென்றடையும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் இருக்கக்கூடும், அது எங்ஙனம் ஒரு பொருளின் விற்பனைக்குச் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்னும் இயலைக் கசடறக்கற்றவர் அலிக் பதம்ஸீ.
இந்த இருவரின் விவாதங்களில் ஒரு சுவாரஸ்ய அம்சம் – சர்வ சகஜமாகக் கெட்ட வார்த்தைகள் இறையும். ‘நான்கு எழுத்து ஆங்கிலச் சொல்’ ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டாவது இருப்பதைக் கவனித்திருக்கிறேன்!
பதம்ஸி உருவாகின லைஃப் பாய் விளம்பரம் பட்டி தொட்டிகளிலெல்லாம் அந்த சோப்பைக் கொண்டுபோய்ச் சேர்த்ததை நாமறிவோம். வடஇந்தியாவில் அப்போதெல்லாம் கடைகளில் பெயர்கூடச் சொல்லாமல் ‘லால்வாலி சோப்’ (சிகப்பு கலர் சோப்) என்றே கேட்டு வாங்குவார்களாம். நிதி மேலாளராக இருந்த நான் லைஃப்பாய் சோப்பின் விற்பனை எப்படியெல்லாம் உயர்ந்தது என்பதை அறிவேன்.
பதம்ஸீயின் இன்னொரு அபார உருவாக்கம் செர்ரி பிளாசம் ஷூ பாலிஷ். மிகச் சாமர்த்தியமாக சார்லி சாப்ளினை அதன் பிராண்ட் அம்பாசடாராக்கி பள்ளி போகும் குழந்தைகளின் செல்ல பிராண்டாக்கிவிட்டார். அம்மாக்கள் கடைகளில் சார்லி சாப்ளின் ஷூ பாலிஷ் என்று கேட்டு வாங்குவார்களாம்.
லலிதாஜியும் சர்ஃப் துணி சோப்பும் தெரியாத நடுத்தரப் பெண்மணி இன்று இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பெண்களை ஈர்த்த விளம்பரம். இந்த விளம்பரத்துக்குப்பின் கவிதா சௌத்ரி இன்னும் உயரத்துக்குப்போனது தெரிந்த விஷயம்.
பதம்ஸீயின் இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் காமசூத்ரா ஆணுறை விளம்பரம். நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடந்த சமாசாரத்தை விளம்பரத்தின் மூலம் வீட்டின் அறைக்குள் கொண்டுவந்தார் என்று அவர் மேல் குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் விளம்பர உலகம் வயதுக்கு வந்துவிட்டது என்று இந்தியர்களுக்கே உணர்த்தியவர் பதம்ஸீ. இந்த விளம்பரத்தில் நடித்த பூஜா பேடி மிகப் பிரபலமனது இன்னொரு சுவாரஸ்யம்.
மார்க்கெட்டிங் உலகில் பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் இருக்கும் பெரிய மேலாளர்கள் இந்த விளம்பரங்கள் எப்படி வரவேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டுவார்கள். அவர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி ஒரு நல்ல பிராண்ட் விளம்பரம் கொண்டு வருவது மிக மிகக் கஷ்டமான செயல். பதம்ஸீ அந்தக் கடுமையான சவால்களைத் தன் அபாரத் திறமையாலும் ஆளுமையாலும் அனாயாசமாகக் கையாண்டு வெற்றி பெற்றார்.
பதம்ஸிக்குள் ஒரு நடிகர் இருந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் முதலில் நடித்தது தன் சொந்தச் சகோதரரின் நாடகக்குழுவில், ஏழே வயதில்! ஷேக்ஸ்பியரின் வெனீஸின் வியாபாரி நாடகத்தில் நடித்தார். என்ன வேடம் போட்டார் என்பது பற்றிச்செய்தி இல்லை. அடுத்த 70 வருடங்களில் அவர்களுடைய குழுவின் நாடகங்களை இயக்கியது பதம்ஸீ அல்லது அவரின் மனைவி பேர்ல் பதம்ஸி. நாடக உலகிலும் பல புதுமைகளைச் செய்தவர் பதம்ஸீ.
1974ல் ஆண்ட்ரு லாயிட் வெபெர் (ஆம் ஸ்லம் டாக் மில்லியனரின் இசையமைப்பாளரேதான்!) ‘ஜீஸஸ் கிரைஸ்ட் சூப்பர்ஸ்டார்’ என்னும் பிராட்வே ரக இசை நாடகத்தை அரங்கேற்றி இந்தியாவில் இதுபோன்ற நாடகங்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தினார். பதம்ஸீ ஓரளவுக்கு வெகுஜன வகை நாடகங்களையே இயக்கினார் என்றாலும் புதுமைகளும் செய்யாமலில்லை. கிரிஷ் கர்நாடின் துக்ளக் நாடகத்தை இவர் மேடையேற்றியது நாடக உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
இவர் மீது விமரிசகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு இவர் தன் படைப்புக்களில் வணிகத்தன்மையும் மேட்டிமைத்தன்மையுமே ஆதரித்தார் என்பார்கள். முக்கியமாக விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார் போன்றவர்களின் அடித்தட்டுக் கதைக்கருவை இவர் அதிகம் தீண்டியதில்லை என்னும் விமரிசனத்துக்குள்ளானவர். பதம்ஸீ இதற்கெல்லாம் கவலைப்பட்டுப் பதில் சொன்னாரில்லை.
உலகளாவிய நிலையில் நடிப்புக்காக பதம்ஸீயின் பெயர் வெளி வந்தது, ரிச்சார்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் இவரின் ஜின்னா வேடத்துக்காகத்தான். ஒரு காக்டெயில் விருந்தில் இவரின் அனாயாச பர்சனாலிடியைப் பார்த்த அட்டான்பரோ இவர்தான் ஜின்னா என்று அப்போதே முடிவெடுத்தார் என்பார்கள். அந்தப் படத்தில் இவர் அணிந்து வந்த தலையை ஒட்டிய குல்லாயும் ஒற்றை மூக்குக்கண்ணாடியும் புதிதாகப் பிறக்கவிருக்கும் ஒரு தேசத்தின் படபடப்பை நிதரிசனமாகத் திரையில் கொண்டு வந்த அற்புதத்தை நாம் பார்த்தோம்.
பல நடிப்புக் கல்லூரிகளுக்குச்சென்று பாடம் எடுத்திருக்கிறார். இன்றைய விளம்பர உலகத்தின் பல விற்பன்னர்கள் பதம்ஸீயின் புகைப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பதாகச் சொல்லுவார்கள்.
இந்தியாவின் விளம்பர உலகின் ‘பிராண்ட்’ தந்தை என்றே சொல்லும் தகுதி பெற்றவர் பதம்ஸீ. அவருடைய படைப்பாற்றலால் மட்டுமே இந்தியாவில் நூறுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் உருவாகியிருக்கின்றன.
அலிக் பதம்ஸீக்கு விளம்பர உலகத்தின் ஆஸ்கார் என்று கருதப்படும் International Clio Hall of Fame nomination கிடைத்திருக்கிறது. இதைப்பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது விசேஷம்.
லிரில் சோப் விளம்பரத்தில் பிரீதி சிந்தாவுக்கு முன்பு முதன்முதலில் நடித்த கரென் லூனல் என்னும் நடிகை, “அலிக் பதம்ஸீ இந்த விளம்பரத்தின் நுணுக்கங்கள் பற்றி ஷூட்டிங் தினங்களில் தினமும் பேசிப்பேசி என் மூடை உருவாக்கினார். எனக்கான புகழ் அவருக்குப் போய்ச்சேர வேண்டும்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தனைக்கும் இந்த விளம்பரத்துக்கான கதைக்கரு (ஸ்டோரி போர்ட்) என்ன தெரியுமா? “நீர் வீழ்ச்சியில் இளம் பெண்!” அவ்வளவுதான்.
அதுதான் அலிக் பதம்ஸீ!