Posted on Leave a comment

சபரிமலைத் தீர்ப்பு – ஒரு பார்வை : லக்ஷ்மணப் பெருமாள்


 உச்சநீதிமன்றம் சமீபத்தில், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள், அனைத்து வயதுப் பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என்றும், ஒரேயொரு பெண் நீதிபதி மட்டும் மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது அரசியல் சட்டப் பிரிவு 25க்கு முரணானது என்பதால் கோயில் நிர்வாகமோ அல்லது மதமோதான் முடிவெடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு இந்து சமய வழிபாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு எதிரானது என்று பக்தர்களும் பொது மக்களும் நம்புவதால்தான் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் எனச் சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: (தலைமை நீதிமதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பாலி நாரிமன், சந்திர சூட், கன்வில்கர்)

1.சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க பெண்களுக்கு நீண்ட காலமாகப் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.

2.தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் காட்டக் கூடாது.

3.சபரிமலை கோவிலில் பெண்களுக்குத் தடை விதிப்பது சட்டவிரோதம். அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

4.சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும்.

5.பெண்களைத் தெய்வமாக வழிபடும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக்கூடாது.

6.வழிபாடு என்பது அனைவருக்கும் உள்ள சம உரிமை.

நால்வரின் தீர்ப்பில் தனி நபர் அடிப்படை உரிமை, பெண்ணுரிமை, அனைவருக்கும் சம உரிமை என்பதைத்தான் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நீதிபதி இந்து மல்கோத்ராவின் தீர்ப்பின் சாராம்சம்:

1. கோயில் வழிபாட்டு முறைகளில் உள்ள மத ரீதியான பழக்க வழக்கங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது.

2. வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

3. மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்சினைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

4. சம உரிமை என்பதுடன் மதரீதியான பழக்கங்களைத் தொடர்புப்படுத்தக் கூடாது.

5. சபரிமலை சன்னதி மற்றும் தெய்வத்துக்கு இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26 பிரிவின் கீழ் பாதுகாப்பு உள்ளது; மத விஷயங்களில் பகுத்தறிவுக் கருத்தைப் பார்க்கக் கூடாது. இந்தியா பலவிதமான நடைமுறைகளையும் அரசியலமைப்பு அறநெறிப் பன்முகத்தன்மையையும் கொண்டிருக்கிறது. பகுத்தறிவற்ற பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்த அல்லது பின்பற்ற
சமுதாயம் சுதந்திரம் அளிக்க வேண்டும்.

தீர்ப்பைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதுக்கு முன்பாக சபரிமலை ஐயப்பன் கோயில் வரலாறு பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இந்து சமயத்தின் வழிபாட்டு நடைமுறைகளில் ஏன் ஒரு விஷயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 360 டிகிரியில் பார்க்க வேண்டிய ஒரு விஷயத்தை வெறுமனே பெண்ணுரிமை என்று சுருக்கிப் பார்த்து விட இயலுமா?

சபரிமலை ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சாரியம்

சபரிமலை ஐயப்பனை மாளகபுரத்தம்மாள் என்ற பெண் தீவிரமாகக் காதலிக்கிறாள். அவள் தன்னை மணக்குமாறு ஐயப்பனிடம் மன்றாடுகிறாள். ஐயப்பன் நான் யாரையும் திருமணம் செய்வதில்லை என்பது ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவு. தான் நைஷ்டிக பிரம்மச்சரியத்தில் இருப்பதால் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய இயலாது, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதே தனது முடிவு என்கிறார். இருப்பினும் உன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் என்னை வழிபட வரும் கன்னிசாமிகள் ஏதேனும் ஒரு வருடம் வராமல் இருந்தால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உத்தரவாதம் கொடுக்கிறார். எனவேதான் ஐயப்பன் திருமணத்திற்குத் தகுதியுடைய பெண்களிடமிருந்து விலகி இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே 10 -50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்ற வழிமுறை பின்பற்றப்பட்டிருக்கலாம். இப்போதும் சபரிமலை கோயில் அருகில் மாளகபுரத்தம்மனை வணங்கி விட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

இந்து சமயத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல புராணம் உள்ளது. அதன் அடிப்படையை வைத்தே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசித்தம் என்ற வகையில் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் ஆகம விதிப்படி என்றால், கேரளத்தில் தாந்திரிக முறைப்படி வழிபாட்டு விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

இன்றும் இந்தியாவில் சில கோயில்களில் ஆண்கள் முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அனுமதிக்கப்படுவதில்லை. சில பூஜைகளில் அவர்களுக்கு அனுமதி கிடையாது. ஆண்கள் அனுமதிக்கப்படாத முக்கியமான சில கோயில்களைப் பற்றிப் பார்க்கலாம். இது பற்றி ஆராய்ந்தால் இன்னும் பல கோயில்களிலும் இதுபோன்ற சிறப்பு வழிபாட்டு முறைகள் இருப்பதைக் கண்டறிய இயலும்.

ராஜஸ்தானிலுள்ள பிரம்மன் கோயில்

உலகிலேயே உள்ள ஒரே பிரம்மன் ஆலயம் இதுதான். ஒருமுறை பிரம்மா யக்ஞ பூஜையை புஷ்கர் நதியில் நடத்த ஏற்பாடு செய்த சடங்கிற்கு அவரது மனைவியான சரஸ்வதி வர தாமதித்ததால் காயத்ரி என்ற பெண்ணை மணந்து பூஜையை மேற்கொண்டுள்ளார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி திருமணமான ஆண்கள் மனைவியை மரியாதை செலுத்தும் விஷயமாக பிரம்மனை வழிபடச் செல்லக்கூடாது, அதை மீறிச் சென்றால் மனைவியை அவமதித்த செயல் என்பதாகவும் அப்படிச் செல்லும் திருமணமான ஆண்கள் வாழ்வில் பல பிரச்சினைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதாக அக்கோயிலின் தல புராணம் சொல்கிறது. எனவேதான் இன்று வரையிலும் திருமணமான ஆண்கள் இக்கோயிலில் உள்ளே செல்ல அனுமதியில்லை.

காம்ரூப் காமாக்யா கோயில், அஸ்ஸாம் :

இந்துமதத்தில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் கோயிலுக்கோ வீட்டிலோ பூஜை செய்யக் கூடாது என்பது பொது நடைமுறையாக இருந்தாலும் காம்ரூப் காமாக்யா கோயிலில் அத்தகைய நிலையில் உள்ள பெண்களும் உள்ளே சென்று வழிபட அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் சென்று தேவி சதியை (Maa Sati) வழிபாடு செய்யும் வழக்கமும் உள்ளது.

இக்கோயிலில் பெண்களும் அல்லது துறவி மட்டுமே பூசாரிகளாக இருக்க இயலும் என்பதும், தேவி சதியின் மாதவிடாய் துணி மிகப் புனிதமானது என்பதால் அதைப் பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையும் உள்ளது. இங்கு ஆண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை.

தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில், தமிழ்நாடு:

இக்கோயில் அம்மனை பகவதி அம்மன், தேவி துர்கா என்றும் வழிபடுகிறார்கள். பானா என்ற அரசன் தவமிருந்து சாகாவரம் பெற்றதாகவும் தான் இறப்பது ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே நிகழ வேண்டும் என்றும் வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவனை வதம் செய்யவே தேவி பகவதி அம்மன் கன்னி வடிவத்தில் பிறந்ததாகவும், சிவன் அவளைத் திருமணம் செய்யமுற்பட்டபோது சேவல் கூவ, நல்ல நேரம் முடிந்து விட்டதாக எண்ணி சிவன் திருமணம் செய்யும் ஆசையைக் கைவிட்டு விட்டார். இத்தகைய தொன்மம் இருந்தாலும் தேவி கன்னி பகவதி அம்மனை அனைவரும் வணங்க இயலும் என்பதும் நடைமுறையில் உள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஔவையார் பூஜையில் ஆண்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்ற வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மற்றும் சக்களத்துக்காவு கோயில்

இரு பகவதி அம்மன் கோயில்களிலும் ஆண்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் திருவிழாவின்போது கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்ற வழக்கமுள்ளது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கலா என்ற திருவிழா பத்து நாட்கள் நடக்கும். அப்போது மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு கண்ணகி அம்மனை வழிபடும் வழக்கமுள்ளது. பெண்கள் மட்டுமே வழிபடும் விழாவான இது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

சக்களத்துக்காவு கோயிலில் நாரி பூஜையின் போதும் தனு பூஜையின்போதும் ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்பது தாந்திரிக அடிப்படையில் கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.

சந்தோஷ் தேவி விராத்

இதைப் போலவே மகாராஷ்டிராவில் இக்கோயிலில் ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள் சென்று வணங்கும் வழிபாட்டு உரிமை கிடையாது.

இதைப்போலவே சில கோயில்களில் பெண்கள் உள்ளே செல்ல சில குறிப்பிட்ட நாட்களில் அனுமதி கிடையாது. திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில், ஹரியானாவில் உள்ள கார்த்திகேயா கோயில், கேரளாவிலுள்ள ஸ்ரீ பத்மநாபா கோயில் என சில கோயில்கள் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார். ‘எல்லா விஷயத்திலும் கேள்வி கேட்டுக் கொண்டே செயல்பட்டால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். நீங்கள் நம்பிக்கை வைக்கும் பத்து விஷயங்களைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள். அது கடவுளை நீங்கள் நம்புவதாக இருந்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார். மத விஷயங்களில் கடவுள் நம்பிக்கையில் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் மாறுவதே ஏற்புடையது. உதாரணமாக கற்பூரம் ஏற்றித்தான் தீப ஆராதனை செய்ய வேண்டும் என்ற பழக்கம் இடையில் வந்தது. அதன் பிறகு கற்பூரம் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று புரிந்தவுடன் பழங்கால முறைப்படி விளக்குத் தீபம் ஏற்றும் நடைமுறையைப் பெரும்பாலான கோயில்களில் பின்பற்ற ஆரம்பித்தார்கள். அவ்வாறாகவே பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்படி இல்லாமல் பெண்ணுரிமை, சம உரிமை என்று கேள்வி எழுப்புவதென்பது சில கோயில்களின் சிறப்புத் தன்மையையும் வழிபாட்டு அழகியலையும் கெடுக்கச் செய்யும். இறை நம்பிக்கை விஷயத்தில் கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்டு விட்டு அதை உடைப்பது எளிது. ஆனால் நாம் வாழ்க்கையில் எதன் மீதும் நம்பிக்கையற்றவர்களாகி நிற்போம். வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நகர்கிறது. அதிலும் மத நம்பிக்கைகளைச் சட்டம் போட்டுத் திணிக்க முற்பட்டால் அது பெரும் வன்முறைக்கு வித்திடும்.

உச்ச நீதி மன்ற தீர்ப்பை சபரிமலை விஷயத்தில் ஏன் பக்தர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை?

நன்றி: தி நியூஸ் மினிட்

அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் பல முரண்கள் உள்ளன. ஆண்கள் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது இங்கு பொருந்தாது. முதலில் வழிபாட்டு விஷயங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் சில நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பாலினம் சார்ந்த விஷயமாகச் சுருக்குவது அர்த்தமற்ற செயல். மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மத விஷயங்களில் மத்திய அரசு சட்டமாக்குவதன் மூலம் ஏற்றுக்கொள்ள இயலும் அல்லது அந்த மதமே அதன் வழிபாட்டு விஷயங்களில் காலப்போக்கில் கொண்டு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதைச் சம உரிமை என்று தீர்ப்பின் மூலம் திணிக்க முற்பட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தான் நடக்கும்.

தனி நபர் உரிமை என்பது இவ்விஷத்திற்குப் பொருந்தாது. நாளை ஒருவர் ஒரு கோயிலில் ஆண்கள் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்ற வழக்கம் தனக்கு ஒவ்வாத ஒன்று, நான் எந்த ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை குருவாயூர் கோயிலோ, திருச்செந்தூர் கோயிலோ தீர்மானிக்க இயலாது, எனது உடம்பைக்காட்டிச் செல்ல இயலாது, அது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது என வழக்குத் தொடரலாம். நீதிமன்றங்கள் ஆடையுடன் செல்வது அவரவர் உரிமை என்று தீர்ப்பு வழங்கினால் எப்படி இருக்கும்? கோயில் விஷயங்களில் கோயில் நிர்வாகம் சொல்லும் விதிகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.

உதாரணமாக தமிழகத்தில் மது விலக்கு அமலில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதை வைத்து ஒருவர் சர்ச்சுகளில் ஒயின் வழங்குவது சட்டத்தை மீறிய செயல் என்று வழக்குத் தொடர்ந்தால் இந்திய நீதிமன்றங்கள், ‘மது உடல் நலத்திற்குக் கேடான ஒன்று, அதைச் சர்ச்சுகளில், அதுவும் தடை விதிக்கப்பட்ட மாநிலத்தில் கொடுப்பதை ஏற்க இயலாது’ என்றும் தீர்ப்பளிக்குமா? அவ்வாறான தீர்ப்பை அளிக்காது. அவ்வாறானத் தீர்ப்புகளை அளித்தால் மேற்கத்திய நாடுகளால் இந்தியாவும் சவுதியை போல அடிப்படைவாத நாடாகப் பார்க்கப்படும் என்று கருதும்.

பாராளுமன்றங்கள் மட்டுமே சட்டங்கள் இயற்ற இயலும். தற்போது நீதிபதிகள் சட்டத்தைத் தங்களுக்கேற்றவாறு பொருள்விளக்கம் செய்து அதற்கு ஏதேனும் ஒரு சட்டப்பிரிவை மேற்கோள் காட்டித் தீர்ப்பளிக்கின்றனர். அதனால்தான் சபரி மலை விஷயத்தில் நான்கு நீதிபதிகளின் கருத்து ஒரு மாதிரியாகவும், ஒரு நீதிபதியின் கருத்து வேறு மாதிரியாகவும் உள்ளது.

முத்தலாக் விஷயத்தில் சட்டமியற்றச் சொல்லும் நீதிமன்றம் சபரிமலை விஷயத்தில் ஏன் அரசுக்கு அறிவுரை சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்வதில்லை? பெண்ணுரிமை என்றால் அதே அரசியல் சட்டப்பிரிவை வைத்துப் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்ட மட்டும் நீதிமன்றம் தயக்கம் காட்டுவது ஏன்? முத்தலாக் விஷயத்தில் மட்டும் ஏன் பாராளுமன்றம் சட்டம் இயற்றட்டும் என்று அறிவுறுத்துகிறது. பெரும்பான்மை சமூகமான இந்து மதத்தினர் சார்ந்த விஷயங்களில் தங்களது தீர்ப்பாக எதைக் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள், சிறுபான்மை சமூகத்தினர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்து மதத்தில் பெண்ணுக்கான சொத்துரிமை கொண்டு வந்தபோது ஏற்றுக் கொண்டார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பல சட்டங்களைக் கொண்டு வந்தபோது ஏற்றுக் கொண்டார்கள். திருமணம், சொத்து, விவாகரத்தானால் மனைவிக்கான நிவாரணத் தொகை என அனைத்தையும் இந்து சிவில் சட்டமாகக் கொண்டு வந்தபோது ஏற்றுக்கொண்டவர்கள்தான் கோயில் விஷயம் என்று வரும்போது நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதை மதிப்பதில்லை. இதைத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் கண்டோம். தங்களின் இந்து பாரம்பரியத்திற்கெதிராகத் தீர்ப்புகள் வந்ததால்தான், மக்களின் போராட்டம் முன்பு அரசும் உச்ச நீதிமன்றமும் அடிபணிய வேண்டி வந்தது வரலாறு.

சபரிமலை விஷயத்தில் அரசியல் நிலைப்பாடுகளும் தற்போதைய நிலையும்

ஆரம்பத்திலிருந்தே தேவஸ்வம் போர்ட் நிர்வாகிகள் அரசின் கைப்பாவையாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேரள அரசு நீதிமன்றத்தில் வழக்கின்போது அரசுத் தரப்பில் மாற்றி மாற்றித் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்தியாவின் இந்துக் கலாசார வழிபாட்டின் முழுமையையும் புரிந்து கொள்ளாமல், அடிப்படை உரிமை, சம உரிமை என்று சுருக்கிப்பார்த்துத் தீர்ப்பளித்தது. ஒருபுறம் பெண்ணியவாதிகளிடமும், முற்போக்குவாதிகளிடமும் தமது அரசு முற்போக்கு அரசு என்று காட்டிக் கொள்ளும் பினராயி விஜயனின் கம்யுனிஸ அரசு ஒரு பெண்ணையும் இதுவரை ஐயப்ப தரிசனத்திற்கு முற்றிலுமாக அழைத்துச் செல்லவில்லை. அதற்குக் காரணமுள்ளது.

இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உட்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தொடர் போராட்டமும் அதற்கு பெருமளவு இந்துக்களின் தெருமுனைப் போராட்டங்களின் ஆதரவையும் பார்த்தே கம்யுனிஸ அரசு செயல்படுகிறது. முற்போக்கு அரசு என்றும் காட்டிக்கொள்ள வேண்டும், அதே வேளையில் வாக்குகளும் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கம்யுனிஸ அரசு செயல்படுகிறது. ஒருபுறம் 144 தடைச்சட்டம் போட்டுப் போராட்டங்களை ஒடுக்க முனைகிறது.

இதற்கிடையில் இத்தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிய மனுக்களை ஒருவழியாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கம்யுனிஸ அரசு போலவே மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், 10 to 50 வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளே செல்ல இடைக்காலத் தடையும் போடவில்லை. இதையும் கம்யுனிஸ அரசின் செயல்பாடு போலவே பார்க்க வேண்டியுள்ளது. தற்போது கம்யுனிஸ அரசு, தானே இத்தீர்ப்பை அமல்படுத்த சிறிது கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டால் தனக்கு இழுக்கு என்று கருதுவதால் மீண்டும் தேவஸ்வம் போர்டைக் கைப்பாவையாக்கி தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் வேண்டுமென வழக்கைப் பதிவு செய்ய வைத்தது. இதே தேவஸ்வம் போர்ட், தீர்ப்பு வந்தவுடன் தனக்கு அதிர்ச்சி என்றது. அரசிடம் ஆலோசனை நடத்திய மறுநாளே மறுபரிசீலனைக்குத் தாம் செல்லப்போவதில்லை என்றது. இப்போது கால அவகாசம் கேட்பதுகூட நீதிமன்றமே முன்வந்து பெண்களை உள்ளே செல்ல இடைக்காலத் தடை விதிக்கட்டும் என்று எண்ணுவதால்தான்.

இந்துக்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்களின் உரிமையை நிலைநாட்டியது போலவே கம்யுனிஸ அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். என்னைப் பொருத்தவரையில் மத வழிபாட்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்கள் மதத்திற்குள்ளிருந்து வரவேண்டும். இவற்றை நீதிமன்றங்கள் தங்கள் கையில் எடுத்தால் நாட்டில் அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் நீதிமன்றங்களே வழிவகுத்ததாக அமைத்துவிடும். அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல பாராளுமன்றச் சட்டங்கள் வாயிலாகத்தான் சட்டச் சீர்திருத்தங்கள் ஏற்படவேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சமூகத்தை ஏற்றுக்கொள்ள வைப்பது எளிமையாக இருக்கும். நடைமுறைக்கு வரவும் உதவும்.

(இக்கட்டுரை அச்சில் வெளியான போது அதில் இருந்த தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டிய அனீஷ் கிருஷ்ணன் நாயர் அவர்களுக்கு நன்றி. இந்த ஆன்லைன் வடிவத்தில் அப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன) 

Reference:

https://indianexpress.com/article/india/sabarimala-verdict-live-updates-supreme-court-women-temples-kerala-5377598/

https://www.quora.com/What-is-your-opinion-about-the-Supreme-Court-verdict-lifting-the-ban-on-women-s-entry-to-Sabarimala-Temple

https://www.ibtimes.co.in/heres-list-8-temples-india-where-men-are-not-allowed-enter-706187

https://www.youtube.com/watch?v=LiFvKP9FhzM

https://timesofindia.indiatimes.com/india/sc-verdict-on-section-377-all-you-need-to-know/articleshow/65695884.cms

https://www.indiatoday.in/india/story/adultery-verdict-supreme-court-section-497-1350477-2018-09-27

https://tamil.thehindu.com/opinion/columns/article25093409.ece

Leave a Reply