
விஜயபாரதம் தேசிய வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரபுஜி இலக்கிய ஆர்வலர். ஜெயமோகனின் வாசகர். ஆரம்பக் காலத்தில் ‘ஜெயன்’ என்ற பெயரில் விஜயபாரதத்தில் எழுதிய கட்டுரைகளை இன்று ஜெயமோகனே மறந்துவிட்டிருப்பார். ஆனால், பிரபுஜி சேகரித்து வைத்திருந்தார். வாசிப்பில் அப்படியொரு நாட்டம். ரயிலில் போகும்போதெல்லாம் படிப்பாராம். முகநூலும் பார்ப்பார். நான் என்னவோ பெரிய படிப்பாளி என்று அவருக்கு நினைப்பு. “முகநூல், பத்திரிகை வேலை, ஊருக்குப் போகறது இதுக்கு மத்தியில எப்படி படிக்கறீங்க ஜி? பொறாமையா இருக்கு” என்பார். பல மாதங்களாக படித்தும், படிக்காமல் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தபடி “ஜி… கிண்டல் பண்றீங்களா?” என்பேன். “நெஜமா சொல்றேன். ஆச்சரியமா இருக்கு?” என்பார். கிண்டில் வாங்கியபோது, புத்தகத்தைப் படிப்பதற்கும் மின் புத்தகத்துக்கும் இருந்த வேறுபாடுகளைப் பற்றித் தீவிரமாக அலசியிருப்போம்.
இலக்கியம், அரசியல், பத்திரிகைப் பணி, ஹிந்துத்துவம், சமூக மாற்றங்கள், வாலிப விஷயங்கள் எதை வேண்டுமானாலும் திறந்த மனதுடன் அவரிடம் விவாதிக்க முடியும். முகநூலை பயன்படுத்துவது பற்றி அவரிடம் கற்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை போட மாட்டார். பல ஆண்டுகள் தனது முகப் படத்தைத் தவிர, வேறெந்த தனிப்பட்ட படங்களையும் பகிரவில்லை. பிறகு நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிலமுறை படங்களை மாற்றினார். அவ்வளவுதான். ராமானுஜர் 1000-ஆவது ஆண்டின் போதும், நிவேதிதை 150-இன் போதும் தினசரி பதிவுகளைப் போடுவார். அதற்காக அவர்களைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களையும் படித்தார். முகநூலில் தனக்குப் பாதித்த, பிடித்த அனைத்துப் பதிவுகளையும் விரிவாக அலசுவார்.
பிரபு ஜி திருநின்றவூரைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே சங்க அறிமுகம். அம்பத்தூர் தாலுகாவில் சங்கப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அதன் பிறகு, பக்க வடிவமைப்பாளராக 1990களில் விஜயபாரதத்தில் சேர்ந்திருக்கிறார். நடுவில் மூன்று நான்கு ஆண்டுகள் சாரதா பப்ளிகேஷன்ஸில் இருந்தார். பிறகு மீண்டும் விஜயபாரதம்.
ஹிந்துத்துவப் பணிகளில் தீவிரமான நாட்டம். ஆனால், பயணம் காரணமாகப் பல நேரங்களில் உள்ளூரில் இயக்கக் காரியங்களில் ஈடுபட முடியாமல் போய்விடும். “உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கண்டுபிடிக்க முடிகிறது?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
வாசிப்பு, இலக்கியம், கலை போன்ற விஷயங்களில் ஹிந்துத்துவர்கள் அதிகமில்லை என்பது அவரது ஆதங்கம். அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் ஹிந்துத்துவர்களைப் பாராட்டுவார். பல உதவிகளும் செய்வார். புனே திரைப்படக் கல்லூரி விவகாரத்தின்போது, “பார்த்தீங்களா ஜி… ஒரேயொரு கஜேந்திர சௌஹான் கிடைச்சார். அதனால போட முடிந்தது. நம்ம ஆட்கள் இன்னும் அதிகமா வரணும்” என்றார். வலம் பத்திரிகையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுடன் விவாதித்தார்.
கடந்த 26-11-18 அன்று காலை எட்டு மணியளவில் அவர் மட்டும் தனியே பயணமாகிவிட்டார். “சர்க்கரை வியாதி பற்றி நண்பர்களிடம் கூடவா சொல்லக்கூடாது? பிறகு எதற்கு நட்பு?” என்ற கோபத்துடனேயே கடைசியாகப் பார்த்துவிட்டு வந்தேன். ஓம் சாந்தி.