நன்றி: லைவ்மிண்ட் |
செப்டம்பர் 28, 2018
உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் பாரம்பரியமான பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஏற்கெனவே (தீர்ப்புக்கும் முன்னரே) உச்சநீதிமன்றத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்று மனு கொடுத்திருந்த கேரள அரசு- சீராய்வு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொக்கரித்தது. கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு – அரசின் கைப்பாவையாக அமைதியாகவே இருந்தது. பக்தர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், ஆன்மீக அமைப்புக்கள் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெண்களுக்கான சம உரிமை என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் பேசி இருக்கிறது. வெறும் புகழுக்காகப் பெண்ணியம் பேசும் ஒரு சிலரின் போக்குக்காக ஆலயத்துக்கான சம்பிரதாயம், பலகோடிப் பேர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.
பலரும் இதனை சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற செயல்களுடன் ஒப்பிட்டுப் பேட்டியளித்தார்கள். கட்டுரைகளும் எழுதினார்கள். அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தால் உண்டான அபத்தம் இது. சதியும், குழந்தைத் திருமணமும் இந்து மத நம்பிக்கை கிடையாது. அதற்கும் ஆலய வழிபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் அவை தனியொரு பெண்ணுக்குப் பாதிப்பை உண்டாக்குபவை. சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்காத காரணத்தால் எந்த இளம்பெண்ணுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலயமும் அதன் சம்பிரதாயங்களும் நம்பிக்கை உள்ளவர்களுக்கே என்ற புரிதல் முக்கியம். நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கே வரவேண்டிய அவசியம் என்ன? என்னுடைய இஷ்டப்படிதான் ஆலய விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்?
இப்படிப்பட்ட பலவிதமான மனக்குமுறல்களுடன் பக்தர்கள் கொந்தளித்தார்கள். வழக்கமான அமைதியாக அது இல்லாமல், எல்லா இடங்களிலும் அது எதிரொலித்தது.
செப்டம்பர் 30, 2018
பாலக்காட்டின் உள்ள ஐயப்ப பக்தர்களும் பெண்களுமாக சுமார் 600-700 பேர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாம ஜப யாத்திரையைத் துவங்கினார்கள்.
இதே நேரத்தில் People For Dharma, NSS போன்ற அமைப்புகள் மட்டும் (ஏற்கனவே இந்த வழக்கில் பக்தர்கள் சார்பில் ஆறு வருடங்களாக வழக்கை வாதாடியவர்கள்) – நாங்கள் மறுசீராய்வு மனு கொடுக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் அதுதான் பலருக்கும் ஆறுதல் கொடுத்தது.
அக்டோபர் 2, 2018
இரண்டொரு நாளில் இந்த அமைப்புகளுடன் இணைந்து பந்தள அரச குடும்பத்தினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். முடிவு செய்தது செப்டம்பர் 30ம் தேதி. அக்டோபர் 1ம் தேதி நான் அவர்களுடன் பேசியபோது 4000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது புரிந்தது. அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். 3மணிக்கு எனக்கு வந்த தொலைப்பேசியில் – இதுவரை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்கள்.
இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ், பிஜேபி உட்பட பல முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
அதன் பின்னர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் துவங்கி உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பக்தர்கள் தங்கள் மனவருத்தத்தையும் எதிர்ப்பையும் காட்டும் வண்ணம் ஆங்காங்கே கூடி கூட்டங்கள் நடத்தினார்கள்.
அக்டோபர் 5, 2018
தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் மறுசீராய்வு மனு செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். உடனடியாக பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரி குடும்பத்தினரும் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்கள்.
கேரள முதல்வரோ இளம் பெண்களை சபரிமலைக்கு ஏற்றியே தீருவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை கண்டும் காணாமல் விடும் மாநில அரசுகள் பல. அதிலும் கேரள அரசு கேட்கவே வேண்டாம். (உதாரணமாக ஒலிபெருக்கிகளுக்கான உச்சநீதிமன்றத் தடையை இதுவரை எந்த மாநில அரசுமே அமல்படுத்தவே இல்லை. இசுலாமியர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அதனைத் தடுத்தால் அம்மத நம்பிக்கைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாகும் என அமைதியாகவே இருக்கிறார்கள்.) ஆனால் சபரிமலைக்கு இவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் சொன்னதை செய்துமுடிக்கும் அடிமைகள் போல பாவ்லா காட்டிக்கொண்டு ஆலயத்தின் நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டன; நம்பிக்கைகள் நொறுக்கப்பட்டன.
அக்டோபர் 8, 2018
தந்த்ரியையும், பந்தள அரச குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கேரள முதல்வர். இளம்பெண்களை அனுமதிப்பதைத் தவிர வேறேதும் இருந்தால் பேசுவோம் என்று இருவருமே பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள்.
அக்டோபர் 16, 2018
அம்மாத நடைத் திறப்புக்கு ஒருநாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், பக்தர்கள், சபரிமலையை அடுத்துள்ள கேந்திரமான நிலக்கல் எனும் ஊரில் நாம ஜபத்தைத் துவங்கினார்கள்.
‘இளம் பெண்களை அனுமதிக்க முடியாது’ என்ற தீர்மானமான முடிவுடன் பக்தர்கள் அங்கே குழுமத்துவங்கினார்கள். அவர்களே ஒரு செக்போஸ்ட் அமைத்து, பெண் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து அனுப்பத் தயாரானார்கள். இந்தப் பக்தர்களே ஐயப்பனின் போர்ப்படைபோல அங்கே வியூகம் அமைத்தார்கள். ‘சரண கோஷமே எங்கள் ஆயுதம்’ என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.
சபரிமலை ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் பலரும் காத்திருந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும், சோஷியல் மீடியாவிலும், டீவியிலும் இதுவே பேச்சாக இருந்தது. சபரிமலையின் வரலாறு – வரலாறாகவே தொடர்ந்தது.
திடீரென அன்று இரவு. சரண கோஷம் முழக்கியபடி காத்திருந்த பக்தர்கள் மேல் லத்தியைச் சுழற்றியது போலீஸ் படை. லத்தி சார்ஜ் செய்தபோது கலைந்து ஓடிய பக்தர்கள், பயந்து ஓடவில்லை. மீண்டும் பகவானுக்காகக் கூடினார்கள்.
அக்டோபர் 17, 2018
நடந்த சம்பங்களையெல்லாம் கண்டு மனம் நொந்த ராமகிருஷ்ணன் என்ற 80 வயது குருசுவாமி ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
17ம் தேதி ஐப்பசி மாதத்துக்கான நடைத்திறப்பு பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்தேறியது.
சபரிமலையின் ஆசாரம் காக்கப்படவேண்டும் என்று போராடிய கோவிலின் முன்னாள் தேவஸ்வம் போர்டு தலைவர் ப்ரயார் கோபாலகிருஷ்ணன் முதல் தந்திரி குடும்பத்து 85 வயது மூதாட்டி தேவிகா அந்தர்ஜனம் வரை காரணமின்றிப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் யாரும் இல்லாமல் பக்தர்களின் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இதனாலெல்லாம் பக்தர்களின் கொதிப்பு அதிகமானதே தவிர எள்ளளவும் குறையவில்லை.
ஆந்திராவிலிருந்து வந்த ஒரு இளம் வயதுப் பெண்மணியை கேரள காவல்துறையினர் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பம்பை தாண்டிச் சிறிது தூரம் நடந்த அப்பெண்மணி தானே முன்வந்து தனக்குத் தைரியம் இல்லை என்று திரும்பி விட்டார்.
அக்டோபர் 18
‘சபரிமலைக்கு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டி வந்த பெண்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் நோக்கம் தெளிவாகிறது.
லிபி – என்பவர் பெண்ணியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சுஹாசினி ராஜ் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் நாத்திக, ஹிந்து எதிர்ப்பாளர். கவிதா ஜாக்கல் என்ற கிறிஸ்தவர். ரெஹானா பாத்திமா என்ற முஸ்லீம். மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்தவர்.
இதில் ஒருவர் கூட ஐயப்பன் மேலோ, சபரிமலை மேலே உள்ள நம்பிக்கைக்காகவோ பக்திக்காகவோ வரவில்லை. குழப்பம் விளைவிக்கவும், மத உணர்வுகளைப் புண்படுத்தவும் மட்டுமே வந்துள்ளார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் சபரிமலைக்கு வந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் உள்ளம் கொதித்தார்கள்.
கேரள அரசாங்கமோ ஒரு இளம் பெண்ணையாவது மேலே ஏற்றியே தீருவது என்ற தீர்மானத்துடன் அடாவடியாகப் பேசுவதும், பக்தர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதும் எனத் தகாத செயல்களைத் துவங்கியது.
பல ஊடகங்களும் ஏதோ ரௌடிகள் மட்டுமே சபரிமலையில் இருப்பது போன்ற காட்சிகளைக் காட்டியது. மக்களின் வண்டிகளை உடைத்தது யார், ரகளையில் ஈடுபட்டது யார் என்று அனைவருக்குமே தெரியும்.
இதில் முக்கியமாகப் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ஊடகங்களில் பரப்பப்படும்படி, பக்தர்கள் யாரையும் தாக்கவும் இல்லை; தொல்லை தரவும் இல்லை. அவர்களைத் தொடக்கூட இல்லை என்பதே உண்மை. வீம்புக்காக வந்த இளம் பெண்கள் காலில் விழுந்து, மேலே போக வேண்டாம் என்று வயதான பெண்மணிகள் கேட்டுக்கொண்டார்கள். மீறிவந்தவர்கள் முன்பு, மனிதச்சுவர் போல நின்று சரண கோஷம் முழக்கினார்கள் ஏனைய பக்தர்கள். பம்பை முதல், அப்பாச்சி மேடு, நீலிமலை, சபரிபீடம், மரக்கூட்டம், சன்னிதானம் வரை ஆங்காங்கே சோறு-தண்ணி இல்லாமல், வெறும் கட்டாந்தரையிலும் காட்டுப்பாதையிலும் பக்தர்கள் படுத்துக் கிடந்து, சபரிமலை ஆச்சாரத்தை மீறி ஒரு இளம் பெண்ணும் ஏறிவிடாமல் காப்பதற்காக ஆறு நாட்களாகத் தவம் கிடந்தார்கள்.
அக்டோபர் 19, 2018
ஒரு மந்திரிக்குக் கூட இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 300 போலீஸ் பாதுகாப்புப் படை புடை சூழ, கவிதாவும், ரெஹானா பாத்திமாவும் காவல்துறை சீருடை, தலைக்கவசம் சகிதம் மேலே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பக்தர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாமல், கிட்டத்தட்ட 18ம் படியிலிருந்து 100 அடி தொலைவிலுள்ள நடைப்பந்தல் வரை, காவல் படையுடன் வந்துவிட்ட இவர்களை, பக்தர்கள் மனிதச்சுவர்களாக மாறி நின்று தடுத்தார்கள். லத்தி சார்ஜ் செய்ய எங்களிடம் ஆர்டர் உள்ளது என்று காவல்துறை பயமுறுத்தியது.
“நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை. எங்களை அடித்துவிட்டுத் தாராளமாக அவர்களைக் கூட்டிச்செல்லுங்கள். ஆனால் எங்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் வனபாலகனான ஐயப்பன் மீது விழும் அடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று சரண கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் கூடிவிட்டார்கள்.
இதற்கிடையே இப்படிப்பட்ட பெண்களைப் காவல்துறை அழைத்து வந்திருப்பதை அறிந்து பந்தள ராஜ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மலையில் பூஜையில் ஈடுபடும் கீழ்சாந்தி எனப்படும் பூஜகர்களும், பூஜைகளை நிறுத்தி, பதினெட்டாம் படியின் முன்பிருந்து பஜனை பாடத் துவங்கினார்கள். இளம்பெண்களை ஏற்ற முயற்சித்தால், கோவில் நடை உடனடியாக அடைக்கப்படும் என்று தந்த்ரி அறிவித்தார்.
இத்தனை எதிர்ப்பையும் எதிர்பாராத காவல்துறை ஒருவழியாகப் பின்வாங்கியது.
ரெஹானா பாத்திமா தனது இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டுவந்ததாகவும், அதனை சன்னிதியின் ஐயப்பன் முன்பு வீசி எறிய திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாயின. எந்தவிதமான ப்ரோட்டோகாலும் இல்லாத இவர்களுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பும், காவல்துறையின் சீருடையும் கொடுத்தது எப்படி என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பினார்கள்.
அக்டோபர் 20, 2018
இதன் பின்னரும் தலித் போராளி என்ற பெயரில் மஞ்சு என்ற பெண்ணும், “ஏசுவின் சக்தி என்னை சபரிமலைக்கு அழைக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் முயற்சித்தார்கள். பக்தர்களின் விடாமுயற்சியால் அதுவும் தோல்வியுற்றது.
அக்டோபர் மாத அமர்க்களங்களுக்கு நடுவே எங்களது குழுவில் உள்ள பக்தர்களும், நானுமே சந்நிதானத்தில் இருந்தோம். பந்தள ராஜ குடும்பத்தினரும் எங்களுடன் இருந்தார்கள். அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தோம்.
அக்டோபர் 22, 2018
மேலும் மூன்று 43 வயது பெண்களை பக்தர்களே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
அன்று மாலை நடை அடைக்கும் வரை இந்தப் பரபரப்பான சூழ்நிலை தொடர்ந்தது. அன்று காலை போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் ஐயப்பனின் சந்நிதியில் நின்று கண்ணீர் சிந்தி அழுதார். பின்னர் தான் நிர்பந்திக்கப்பட்டுப் பக்தர்களுக்கு எதிராக நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து அங்கிருந்து கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்றுமாலை – நடை அடைக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் மாறுவேஷத்தில் பெண்களை மேலே ஏற்ற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வர, பக்தர்கள் அனைவரும் (நான் உட்பட) மனிதசங்கிலி அமைத்து அடுத்த 2 மணிநேரம் சந்நிதானத்தைச் சுற்றி நின்றுகொண்டோம். அந்த மாதத்துப் பூஜையும் நடை அடைப்பும், ஹரிவராஸனமும் பக்தர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.
எத்தனை முயற்சித்தும் ஒரு இளம் பெண்ணையும் அனுமதிக்கவில்லை என்ற திருப்தி ஒருபுறம். அதே சமயம் – அமைதியாக, ஆனந்தமாக பகவானின் அருளை அனுபவித்த சந்நிதானத்தில் இத்தனை போராட்டங்களும், குழப்பங்களுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். ஐயோ நடை அடைக்கிறார்களே என்று வருத்தப்பட்ட காலம் போய், சீக்கிரம் நடையை அடைத்து விடுங்கள் என்று சொல்லும்படியான நிலை வந்துவிட்டது.
இதற்கிடையே எப்படியாவது சபரிமலையின் ஆச்சாரத்தை அழித்தே தீருவது என்ற முடிவில் இருக்கும் சக்திகள், புதிது புதிதாக ஒவ்வொருவராக களம் இறக்கினார்கள். சபரிமலை ஒரு பௌத்த ஆலயம் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டது.
சஜீவ் என்ற ஆதிவாசி குழுத் தலைவர் சபரி கோவிலே எங்களுக்குதான் சொந்தம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார். (இது குறித்து தனிக்கட்டுரையாக விளக்கிச் சொல்கிறேன்). இது அடிப்படை ஆதாரமற்ற வெறும் குழப்பும் முயற்சி என்பது தெளிவு. சில விஷமிகளின் சதிச்செயல்.
1950களில் சபரிமலை என்பது ‘சவரிமலை’ (St. Xavier) என்று சொல்லி நடந்த தீ வைப்புச் சதி; அதன் பின்னர் 1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்று கூறி ஒரு சர்ச்சை – இப்போதைய பினராயி அரசு போலவே நிலக்கல்லில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அன்று நடந்தேறின.
இதன் பின்னணியில் நிற்கும் சில மதவாத சக்திகளின் சதிவேலையில் இதுவும் ஒன்று. உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆலயத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று நம்முடன் தோளோடு தோள் நிற்கவேண்டும். ஒரு சில விஷமிகள் இதுபோல ஆதிவாசிகளைத் தூண்டிச் சதிச்செயல்களில் ஈடுபட்டு மத ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார்கள்.
25 அக்டோபர், 2018
இதுவரை நாங்கள் சீராய்வு மனு கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவந்த தேவஸ்வம் போர்டு, நாங்கள் மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்பதோடு, பக்தர்கள் மேல் குற்றம் சொல்லியது. 1500 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
26 அக்டோபர், 2018
புனிதமான இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டு சென்ற காரணத்துக்காக வழிபாட்டுத் தலத்தை இழிவு செய்ததாகவும், மத நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகவும் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சுதந்திரமாக வெளியே விட்டுவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடியது.
27 அக்டோபர், 2018
கேரளமாநிலம் கண்ணூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா “ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக்கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்” என்று பேட்டி கொடுக்க நிலைமை இன்னும் பரபரப்பானது.
2 நவம்பர், 2018
கடந்தமாதம் நடந்த நிலக்கல் போராட்டத்தில் காணாமல் போன சிவதாஸ் என்ற பக்தர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.
4-5 நவம்பர், 2018
சித்திரை அட்டத்திருநாள் என்ற காரணத்துக்காக தீபாவளியை ஒட்டி ஒரு நாள் சபரிமலை நடைத்திறப்பு இருந்ததால் வரலாறு காணாத வகையில், கிட்டத்தட்ட 2500 காவலர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண்காவலர்கள் உட்பட சபரிமலையில் குவிக்கப்பட்டார்கள். நடைதிறக்கும் முன்னரே இந்தப் பெண் காவலர்கள் கண்ணீர் மல்க ஐயப்பன் திருநடைக்கு முன் நின்று வணங்கிவிட்டுப் பின்னர் வேலைக்குச் சென்றார்கள்.
6 நவம்பர், 2018
தீபாவளி நாளான அன்று சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டம் குறைவானால் இளம் பெண்களை எளிதாக ஏற்றி விடுவார்கள் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. சாதாரணமாக 1000 பேர் கூட வராத சித்திரை அட்டத் திருநாளுக்கு அன்று வந்தது 15,000 பேர். சிபிஎம் கட்சி உறுப்பினரின் மனைவியான அஞ்சு என்னும் இளம் பெண் பம்பைக்கு வந்து சேர, சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கொதிப்படைந்தார்கள்.
கூடி இருந்த பக்தர்களுடன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்துகொண்டு மொத்த மலையிலும் சரண கோஷத்துடன் வலம் வந்தார்கள்.
தன் கணவன் வற்புறுத்திய காரணத்தால்தான் – தனக்கு விருப்பம் இல்லாமல் இங்கு வந்ததாக அஞ்சு தெரிவித்துத் திரும்பச் சென்றார்.
11 நவம்பர், 2018
பொய்யுரைகளைப் பரப்பி சபரிமலையை ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாக கேரள முதல்வர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். ஆன்லைன் முறையில் கிட்டத்தட்ட 539 இளம் பெண்கள் சபரிமலை தரிசனத்துக்காகப் பதிவு செய்திருப்பதாக தேவஸ்வம் போர்டு தெரிவித்தது.
12 நவம்பர், 2018
பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்போவதில்லை என்று போர்டு திட்டவட்டமாக அறிவித்தது. 1947ல் ஆலயத்தைத் தனது நிர்வாகத்தில் கொண்டு வரும்போது, ஆலய சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று போர்டு தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதாக பந்தள ராஜ குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத போர்டு பிரபல உச்சநீதிமன்ற வக்கீலான அர்யம சுந்தரத்தை சபரிமலை வழக்குக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் நியமித்தது.
பக்தர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கண்ட வக்கீல் சுந்தரமோ அடுத்த நாளே வழக்கிலிருந்து பின்வாங்கி விட்டார்,
13 நவம்பர், 2018
உச்சநீதிமன்றத்தில் அன்று சீராய்வு மனுக்களுக்கான பதில் வருவதாக இருந்ததால் பக்தர்களும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏற்கெனவே வழக்கு நடத்திய People for Dharma, NSS தவிர, பந்தளக் குடும்பம், தந்த்ரி குடும்பம், தனிப்பட்ட பக்தர்கள், அமைப்புகள் என 49 பேர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள், 49 மனுக்களும் (ரிவ்யூ பெடிஷன்), 4 ரிட் பெடிஷன்களும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய சட்ட அமைப்பைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு வெற்றிதான். ஆனாலும் அதனை முழுதும் அனுபவிக்க விடாமல் உச்சநீதிமன்றம் ஒரு ‘…க்’ வைத்தே உத்தரவு வழங்கியது. ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் வரையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்குத் தடையில்லை என்பதே அது.
ஒரு பெண் வந்துவிட்டாலும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் பாழாகிவிடுமே என்று பரிதவித்த பக்தர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் அக்டோபர் மாதப் பூஜையில் 5 நாட்கள் நடைத்திறப்பு, தீபாவளியன்று ஒரு நாள் நடைத்திறப்பு மட்டுமே. ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 56 நாள் நடை திறந்திருக்கும் மண்டல மகர காலகட்டத்தில், புற்றீசல் போல வீம்புக்காகக் கிளம்பி வரும் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்பது எல்லோருக்குள்ளும் இருந்த ஒரு கேள்வி.
14 நவம்பர்
இதற்கிடையே கேரள அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்தது. கேரள முதல்வர் தன் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க எதற்காக இந்தக் கூட்டம் என்று கம்யூனிஸ்ட் தவிர அனைவருமே வெளிநடப்பு செய்தார்கள்.
அன்று மாலையே தந்த்ரி குடும்பத்துடனும் பந்தள அரச குடும்பத்துடனும் மற்றொரு கூட்டம் ஏற்பாடானது. “குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் பெண்களை அனுமதிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் சுத்தி செய்து கொள்ளுங்கள்” என்ற அற்புதமான யோசனையை கேரள முதல்வர் முன்வைத்தார். அறியாமல் செய்த தவறுகளுக்கே சுத்தி – தவறுகள் செய்ய அது லைசன்ஸ் இல்லை என்று கூறி அதனை நிராகரித்தது தாழமண் இல்லம்.
16 நவம்பர், 2018
விடியும் முன்னரே அன்றைய தினம் பரபரப்பானது அதிகாலை 4:30 மணியளவிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், தன் தோழியர் ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் குழுவினரை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வர மறுத்து விட்டது. இதற்குள் செய்தி கேட்டு விமான நிலையத்தை அடைந்த பக்தர்கள் வாயிலை முற்றுகையிட்டு பஜனை செய்யத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 19 மணி நேரம் தொடர்ந்த இந்த நாம ஜபத்தின் காரணத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தின் வாயிலைக் கூடத் தாண்ட முடியாமல் திரும்ப வேண்டிய நிர்பந்தம் உண்டானது.
நவம்பர் 18, 2018
கேரள அரசு பக்தர்களைத் துன்புறுத்தும் நோக்கில் சம்பந்தம் இல்லாத புதிய நடைமுறைகளை சபரிமலையில் அமல்படுத்தத் துவங்கினார்கள். சபரிமலையில் இரவில் யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5,200 போலீசார் குவிக்கப்பட்டார்கள்.
நடைப்பந்தலில் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து யாரும் அங்கே தங்கமுடியாதபடி அனுப்பப்பட்டார்கள். சரண கோஷம் முழக்கியதாகக் கூறி நூற்றுக்கணக்கான ஐயப்பன்மார்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பக்தர்களிடம் போலீஸ் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது
போலீஸ் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
1. பக்தர்கள் குழுவாகக் கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.
2. சரண கோஷங்களை இடக்கூடாது.
3. ஊடகங்களிடம் பேசக்கூடாது.
4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.
5. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், காவல்துறையிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நவம்பர் 22, 2018
சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. எந்த வருடமும் இல்லாதபடி இம்முறை பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. சபரிமலையில் காவல்துறையினரே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைப் பார்த்து மும்பையிலிருந்து வந்த 110 ஐயப்பன்மார்கள், பாதி வழியில் திரும்பச் சென்று, ஆரியங்காவில் தங்கள் இருமுடியைப் பிரித்து அபிஷேகம் செய்துள்ளார்கள்.
நிலைமையைக் காணவந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாக்ருஷ்ணனிடமே நக்கலும் அதிகார தோரணையுமாக போலீஸ் அதிகாரி பேசுகிறார். “பக்தர்கள் பம்பையிலிருந்து மேலே வர 45 நிமிடங்கள் தானே ஆகும்? வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது? 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது? இதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்?
“அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா” என்று அழைத்தோம், மலையெங்கும் பக்தர் செய்யும் அன்னதானத்தை தடுத்து விட்டார்கள்.
“ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா” என்றோம், குறைந்தது 100ரூபாய் இருந்தால்தான் நிலக்கல்லிலிருந்து பஸ்ஸில் பம்பா வர முடியும் என்றானது.
“சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா” என்றோம், சபரியில் சரணம் கூப்பிட்டால் கைது செய்யப்படுவாய் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வழிபடுவதற்கான உரிமை – Article 25- Right to Pray என்று முழக்கமிட்டு இத்தனையும் செய்தார்களோ, அந்த உரிமை – Right to Pray – இங்கே சாமானிய பக்தனுக்குப் பறிக்கப்பட்டுவிட்டது. அவன் காலம்காலமாக வழிபட்ட முறையில் அவனுக்கு வழிபட உரிமை மறுக்கப்படுகிறது.