Posted on 1 Comment

கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்


தலைவரார்களேவ்…
தமிழ்ப்பெருமக்களேங் வணக்கொம்!
‘தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றைய தினம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங்
நாம்’
‘வண்ணாரப் பேட்டகின சார்பில் மாலை’
‘வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்கு போய்வா போன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா
தாமிழர்கள் சொவாழ்வாய்த் திட்டமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணக்குவியல் காண்போ
மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்’

இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…

விடுதலைக்குப் பின்னரான எழுபது வருடங்களில் தமிழகம் ஐம்பத்தொரு ஆண்டுகளாக திராவிட சித்தாந்தத்தை கைக்கொண்ட அரசியல் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறது. அரசியல் மட்டுமின்றி மொழி பண்பாடு சமூகம் மற்றும் இலக்கியம் என தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் திராவிடக் கருத்தியல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப் பரிசீலிக்க ஏற்றதான ஏற்றதொரு தருணம் இது.

ஆனைமுத்து, எஸ்.வி. ராஜதுரை, கீதா, கௌதமன் மற்றும் வீரமணி என்ற சாரங்கபாணி ஆகியோரால் பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா. வின் பேச்சும் எழுத்தும் தொகுக்கப்பட்டுத் திண்டு திண்டாக அச்சில் கிடைக்கின்றன. தென்னாட்டு இங்கர்சால் எனத் தம் தம்பியரால் மட்டும் அழைக்கப்பட்ட தமிழகத்தின் ‘ஒரே பேரறிஞரான’ அண்ணாதுரையின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் நூலகம்தோறும் புழங்கி வருகின்றன.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த சமூக உருவாக்கத்தில் பங்கு பெறும் ஆசிரியர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் திராவிட சிந்தனையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டே வந்துள்ளனர். அத்தாக்கம் சமகாலத்தில் வாழும் புதிய தலைமுறை வரை நீள்கிறது. போலவே அரை நூற்றாண்டுகாலம் நீடித்த ஆட்சி தந்த அதிகாரத்தின் வழியே தொடக்கக் கல்வி முதல் பல்கலைப் பாடங்கள் வரை திராவிட சிந்தனை விதைக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் வழியே சென்ற தலைமுறை வரை திரைப்படங்கள் மூலம் திராவிடக் கருத்தியல் பரிமாறப்பட்டது. தொகுத்துக் கூறினால் அரசியல் இலக்கியம் கலை எனச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் திராவிடச் சிந்தனை வேர் விட்டுப் பரவி இருக்கிறது எனலாம்.

அதிகார வலிமை மிக்க திராவிடக் கருத்தாக்கத்தை விமர்சித்து அவ்வப்போது தமிழில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன.

சுப்பு எழுதிய  ‘திராவிட மாயை ஒரு பார்வை’, பி.ராமமூர்த்தியின் ‘ஆரிய மாயையா திராவிட மாயையா?’, நெல்லை ஜெயமணியின் ‘கண்டுகொள்வோம் கழகங்களை!’ போன்றவை அவற்றுள் சில. இந்த வரிசையில் ஒரு புதிய வரவு தஞ்சை பொய்யாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இல. குணசேகரன் எழுதிய ‘திராவிட அரசியல்’ என்ற கட்டுரை நூல்.

புத்தகம் 336 பக்கங்களில் 18 அத்தியாயங்களில் திராவிட அரசியலை விமர்சிக்கிறது. திராவிட அரசியல்வாதிகள் தமது அடிப்படைக் கொள்கைகளாக கூறிக்கொள்ளும் திராவிட நாடு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு மற்றும் சமயச் சார்பின்மை போன்றவைகளுக்கு எவ்வளவு உண்மையாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதை 50 ஆண்டுகாலப் பரப்பில் அரசியல் தரவுகளுடன் இந்நூல் ஆராய்கிறது.

நீதிக்கட்சி முதல் இன்றைய திமுக வரை வளர்ந்துள்ள பிராமணத் துவேஷம் பற்றிப் புத்தகம் ஆராய்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், ஆலயக் கைங்கரியங்கள் மற்றும் ஆச்சார அனுஷ்டானங்கள் மூலம் சனாதன மதம் என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்து மதத்தின் பாதுகாவலராய் விளங்கிய பிராமணர்களைத் தனிமைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் கிருத்துவ மிஷினரிகள் தங்கள் மத மாற்றத்தை மேற்கொள்ள ஏதுவாக விதைக்கப்பட்டதுதான் பிஷப் கால்டுவெல்லின் ஆரிய திராவிட புரட்டு.

பிராமணர்கள், ஆரியர்கள், வந்தேறிகள் என்ற கோட்பாடு வெறுப்பு அரசியலின் மீது கட்டமைக்கப்பட்ட போலி வரலாறு என்பதை கால்டுவெல்லுக்கு பின்பு வந்த பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் உரைத்த பின்பும், திராவிட சித்தாந்தவாதிகள் தங்கள் பிராமணத் துவேசத்தைக் கைவிட்டதே இல்லை என்பதை நூலாசிரியர் குணசேகரன் விவரிக்கிறார்.

1920களில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தபோது நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவில்லை. போலவே, அண்ணாதுரை ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கீழவெண்மணி படுகொலையின்போது ஈ.வெ.ரா. பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக எள்முனை அளவும் பாடுபடவில்லை என்பதையும் புத்தகம் விளக்குகிறது.

புத்தகம் 1920 முதல் 2010 வரையிலான திராவிட அரசியலின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது இப்புத்தகம்.

சாதிப் பிரிவினையை ஒழித்தோம் என்றார்கள், ஆனால் சாதித் தலைவர்களின் பெயர்களைப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சூட்டினார்கள். தென்மாவட்ட கலவரங்களுக்குப் பிறகு அவை நீக்கப்பட்டதை அறிவோம்.

தமிழர்ப் பண்பாட்டைத் தூக்கிப்பிடிப்பது நாங்கள்தான் என இன்றளவும் கதைக்கிறார்கள். ஆனால் இவர்களின் தந்தை பெரியார் கண்ணகி முதல் மாதவி வரையிலான காப்பியப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது வரலாற்று உண்மை.

1967ல் அண்ணாதுரை, பக்தவச்சலத்தை வெற்றி கொள்ள வழிவகுத்தது அரிசிப் பஞ்சமும், இந்தி மொழியும். இவர்களின் உடோப்பிய திராவிட நாட்டுக்கு உட்பட்ட கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையினை ஏற்று தாய்மொழிவழிக் கல்வியுடன் செழித்திருக்க, தமிழகத்தில் தாய்மொழி கான்வெண்ட்டுகளில் காணாமல் போயிருக்கிறது.

“கட்சியில் சேர்ந்தவுடன் பேரனுக்கு மத்திய அமைச்சர் பதவியா?” என ஊடகங்களின் கேள்விக்கு, “அவருக்கு இந்தி தெரியுமே” என்றார் கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்த ஆன்மாக்கள் சாந்தி அடைந்திருக்கும். மக்கள்-தேவர்- நரகர் என்ற நூலில் எழுத்தாளர் பிரபஞ்சன் ‘நாம்தானே இளிச்சவாயப்பர்’ என்கிறார்.

காந்தியடிகளால் தென்னகத்தில் திருச்சியில் 1016ல் தொடங்கிவைக்கப்பட்ட தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி பயில்வோர்களில் அதிகம் பேர் தமிழகத்தில் இருந்துதான் என்பது நகைமுரண்.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்ற போராடினார்கள் – ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியவர்கள். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரும் எப்போதும் இனிக்கிறது அவர்களுக்கு.

1926ல் சுயராஜ்ஜியக் கட்சியிடம் தோற்றுப்போகிறது நீதிக்கட்சி. நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் பி சுப்புராயன் கட்சியை விட்டு வெளியேறி சுயராஜ்ஜியக் கட்சியுடன் ஆட்சி அமைத்தார். கழகங்களிடையே கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்கு வித்திட்டவர் யாரெனத் தெரிகிறதா? 1967 தேர்தலின்போது அண்ணாதுரை ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதி தந்தார். ஆட்சியைக் கைப்பற்றியதும், ‘மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ எனத் தமிழைக் கொண்டு டபாய்த்தார்.

நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் என்று கூறி ஆட்சியைப் பிடித்ததும் ‘கையளவு நிலமாவது தருவேன்’ என்ற முத்தமிழ் அறிஞர் அண்ணாதுரைதான். இன்னும் இருபது ரூபாய்க்குத் தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பதுதான் பேரவலம்.

‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என சூளுரைத்தார்கள். பிசி ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு பிரிவினை தடை சட்ட மசோதா வந்ததும் திராவிட நாடு கோரிக்கையைச் சுடுகாட்டிற்கு அனுப்பினார்கள்.

சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் செழுமைப்படுத்திய தமிழ்மொழியை பகுத்தறிவு என்ற போர்வையில் பக்தி இலக்கியங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பகுத்தறிவின் எல்லை இந்துமதம் வரையில்தான் என்பதைக் கூறவே தேவையில்லை. பிள்ளையார் சிலையை உடைத்த ஈ.வெ.ரா தனக்குத் தானே சிலையை வைத்துக்கொண்டார். பின்னாட்களில் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று வசைப்பாடப்பட்ட கழகத்தார் ‘சரஸ்வதி உன் நாவில் இருக்கிறாள் என்கிறாயே, எங்கே அப்பா அவள் மலம் கழிப்பாள்?’ எனக் கூசாமல் கேட்டார்கள். ‘உங்கள் இதயத்தில் குடியிருக்கும் அண்ணா வாடகையா தருகிறார்?’ எனக் கேட்டால் தமிழினத் துரோகி என்பார்கள்.

‘தமிழை நான் கற்றுக்கொண்டது கலைஞரின் வசனம் கேட்டுத்தான்’ எனக்கூறுவது திருவிழா / திரை விழா மேடைகளில் வழமையான ஒன்று. அண்ணாவும் கதை வசனம் எழுதியவர்தான். நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் நீளமானது. தென்னரசு, முரசொலிமாறன், அன்பழகன், நெடுஞ்செழியன் அவர்களுள் சிலர். இலக்கிய ரீதியில் அவர்கள் எழுத்துக்கு என்ன இடம் என்பது தனியே ஆராயத் தக்கது. ஆனால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான திராவிட இயக்கப் புனைவுகள், கண்ணதாசனின் வார்த்தைகளில் சொன்னால் ‘நச்சு இலக்கியங்கள்’.

திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்க புதிதாக நாம் எதையும் கூற வேண்டியதில்லை. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிர் அணிகளில் இருந்தபோது பரஸ்பரம் ஒருவரை பற்றி மற்றொருவர் பேசிய, எழுதியவற்றைக் குறிப்பிட்டாலே போதுமானது. பலவற்றை அச்சிலேயே ஏற்ற முடியாது.

சாதி ஒழிப்பு என்ற பெயரில் பிராமணத் துவேஷத்தையும், பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத வெறுப்பையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட திராவிட இயக்கங்களின் மூலவர் ஈ.வெ.ரா ஒரு சமூகப் போராளியாக நிறுவப்பட்டுள்ளார். பாடப்புத்தகங்கள் வழியாக மட்டுமே அறியும் பேஸ்புக், வாட்ஸ்அப் இளையதலைமுறை அவரை மார்டின் லூதர் கிங் ஜூனியராகவோ மால்கம் x ஆகவோ அறியும் அபாயம் உள்ளது. இச்சூழலில் ‘திராவிட அரசியல்’ போன்ற நூல்கள் தேவைப்படுகின்றன.

நூறு நூல்களை வாசித்து அவைகளின் சாரத்தை இல. குணசேகரன் நூல் ஆக்கியுள்ளார். நல்ல அச்சு, தரமான தாள், இனிய நடை – சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல். புத்தகத்தில் காணப்படும் ஏராளமான அச்சுப்பிழைகள் அடுத்த பதிப்பில் களையப்படும் என நம்புவோமாக.

தமிழ் இலக்கணப்படிப் பிழையாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். சில இடங்களில் வழு (பிழை) வந்தாலும் சரியானது போன்று தோற்றமளிக்கும். அதற்கு வழுவமைதி என்று பெயர். இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைக்கு ‘காலவழுவமைதி’ என்பதே தலைப்பு. பிறழ்வுகளையே அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கங்களைப் பற்றிய இக்கட்டுரைக்கு இதைவிடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது.

கண்ணீரும், செந்நீரும் சிந்திப் பெற்றது சுதந்திரம். அந்த சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கக் கோரிய ஒரு மனிதரைப் பெரியார் என அழைப்பது பேரவலம் அல்லவா?

பின்குறிப்பு: கவிதையை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். உங்களை அறியாமல் உங்கள் குரலில் ஒரு கயமைத்தனம் கலப்பதைப் பார்க்கலாம்.

1 thought on “கால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்

  1. முக்கால் நுாற்றாண்டுகால திராவிட அரசியலின் அபத்தங்கள் ,போலி பிரச்சாரங்களின் முகத்திரைகள் கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கப்பட்டு வருகிறது ,அதில் இக்கட்டுரையும் தன் பங்கை செவ்வனே செய்துள்ளது ,அந்த ஆரம்ப திராவிட மேடைப்பேச்சு நல்ல நய்யாண்டி வகை

Leave a Reply