Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 17 | சுப்பு

மரணத்தோடு மல்லுக்கட்டிய தமிழ்

நான் கோவாவுக்குப் புறப்பட்டுப்
போகும்போதே (அக்டொபர் 1973) பெரியப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. உயர் ரத்த
அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவரை அடையாறு வி.எச்.எஸ். மருத்துவமனையில்
சேர்த்திருந்தார்கள். இரவில் நான் அங்கே துணைக்குப் படுத்துக்கொள்வேன். பகலில்
ஏற்படும் வேலைகளுக்கு என்னைப் பயன்படுத்த முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
ஒருநாள் விடியற்காலையில், பெரியப்பா
என்னை எழுப்பினார். இயற்கை உபாதையோ என்று நினைத்து நான் அந்தக் குடுவையைக்
கையிலெடுத்தேன். “அது இல்லை. நான் சொல்வதைக் கேள்” என்றார் அவர்.
 
கடந்த சில நாட்களில் அவருக்கு
அவ்வப்போது நினைவு தப்பிப்போய்க் கொண்டிருந்தது. எந்த நேரத்தில் எதைச் சொல்லுவார்
என்பதை ஊகிக்க முடியாது.
 
அவருடைய முகத்திற்கருகே சென்று
கவனித்துக் கேட்டேன்.
 
“காதலி கண்ட கனவு கரு நெடுங்கண்…”
என்று சொல்லி “இது எந்த இலக்கியத்தில் வருகிறது, அதன் அடுத்த வரி என்ன” என்று
கேட்டார்.
அவரை ஒருமுறைக்கு இருமுறையாகச்
சொல்லச்சொல்லி ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டேன்.
வெளியே வராண்டாவில் படுத்திருந்த
நயினாவை எழுப்பி பெரியப்பாவின் படுக்கையருகே இருக்கும்படிச் சொல்லிவிட்டுப்
புறப்பட்டேன், சைக்கிளில். அதிக தூரம் இல்லை. அந்தக் காலை நேரக் குளிர், அரைகுறைத்
தூக்கம், தெருநாய்த் துரத்தல் எதுவும் என்னைத் தொடவில்லை.
மரணத்தில் ஒருகாலும் மறுவுலகத்தில்
இன்னொரு காலும் வைத்திருக்கும் இந்த இழுபறி நிலையிலும் இந்தத் தமிழ்பற்று இவரைப்
பிடித்து வைத்திருக்கிறதே. இப்படியெல்லாம் விஷய ஞானத்தின் மீதும் மொழி மீதும் பிடிமானம்
கொள்ள முடியுமா, அந்தப் பிடிமானம் இந்த உயிரை இன்னும் சிலகாலம் தக்க வைக்குமா
என்கிற மாதிரி யோசனைகள். சைக்கிளை வேகமாக மிதித்தேன்…
மருத்துவமனையில் நோயாளி இருக்கும்போது,
உஷத் காலத்தில் வீட்டுக் கதவைத் தட்டினால் தப்பான அபிப்பிராயம்தான் ஏற்படும்.
அவர்கள் கதவைத் திறந்து என்னை உள்ளே விடுவதற்கு முன்பே சஞ்சலத்தைப்
போக்கிவிட்டேன்.
அடுத்த ஒரு மணி நேரம் வீட்டிலிருந்த
தமிழிலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் கையில். ஒருவரிடம் பெரியபுராணம், இன்னொருவரிடம்
கம்பராமாயணம், மற்றொருவர் திருவாய்மொழி என்று தேடிக்கொண்டிருந்த போது “இதெல்லாம்
வேண்டாம்” என்று சொல்லி என் அம்மா நிறுத்திவிட்டார். “சிலப்பதிகாரமாக இருக்கலாம்”
என்றார் அவர்.
கிடைத்தது சிலப்பதிகாரம். அதில்
கனாத்திறம் உரைத்த காதையில் இருந்தது, பெரியப்பா தேடிய வெண்பா.
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க – மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
களைப்பு தீர காப்பி சாப்பிட்டுவிட்டு
வெண்பா எழுதிய காகிதத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் சைக்கிளை மிதித்தேன். இந்த முறை
பரபரப்பு இல்லை. ஏதோ நானே ஒரு தமிழ்ப் புலவன் ஆகிவிட்டது போல ஒரு மிதப்பு.
மருத்துவமனைக்கு வந்து பெரியப்பாவின்
காதருகில் “சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை” என்று சொல்லி வெண்பாவைப்
படித்தேன். சந்தேகத்திற்காக இரண்டாவது முறையாகப் படிக்கும்போது கையை உயர்த்தி
என்னை நிறுத்திவிட்டார்.
“My Agony is over.” இதுதான் அவர்
பேசிய இறுதி வார்த்தைகள்.
மறுநாள் நான் புறப்பட்டு கோவாவிற்கு
போனேன். பெரியப்பாவின் இறப்புச் செய்தி தாங்கிய தந்தி அங்கே எனக்காகக்
காத்திருந்தது.
நான் சென்னைக்கு வந்து
பெரியப்பாவுக்கான சடங்குகளில் கலந்துகொண்டேன். எல்லாம் முடிந்த பிறகு சுபஸ்வீகாரம்
நடந்தது. அன்று, உறவினர்களையும், நண்பர்களையும் விருந்திற்கு அழைத்திருந்தார்கள்.
வாசலறையில் இலை போட்டு எல்லோரும்
சாப்பிட உட்காரும்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. எட்டு இலைகளைப் போட்ட
இடத்தில் பத்து பேர் உட்கார்ந்துவிட்டார்கள். நிலைமையைச் சமாளிப்பதற்காக
நயினா எழுந்துவிட்டார். கூடவே “துரைசாமி நீயும்
எழுந்திரு” என்று ஒருவரை எழுப்பிவிட்டார்.
 
புலவர் துரைசாமி கோவையிலிருந்து
வந்திருந்தார். இவர் பெரியப்பாவிடம் தமிழ் படித்தவர். வாரியங்காவல் கிராமத்தில்
இவரைப் போல ஏராளமான இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து புலவர் பரிட்சைக்கான
நுழைவுத் தேர்வுக்கு அனுப்புவது பெரியப்பாவின் இளமைக் கால சமூகப்பணி.
புலவர் துரைசாமி திண்ணையில்
உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். அவர் முதலியார் என்பதால் பந்தியிலிருந்து
எழுப்பிவிட்டார்களோ, அதனால் வருத்தப்படுகிறாரோ என்பது என்னுடைய ஐயப்பாடு. ஏதோ
நம்முடைய முயற்சியால் அதைச் சரி செய்யலாம் என்று நினைத்து அவரை நெருங்கினேன்.
கேட்டேன்.
 
துரைசாமி “பாரி பறித்த பறியும்…”
என்று சொல்லிக்கொண்டே அழுதுகொண்டிருந்தார். அழுகை நின்ற பிறகு அவர் எனக்குக்
கொடுத்த விளக்கம் இதோ.
முதலில் வெண்பா.
பாரி பறித்த பறியும், பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் சேரமான்
வாராயென்றழைத்த வாய்மையும் – இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.
கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியும்
ஔவையாரும் நட்போடிருந்தார்கள்.
பாரியின் மறைவின் போது பாரியின் மகளிர்
அங்கவை, சங்கவை இருவரும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார்கள். அந்தப் பொறுப்பை ஔவையார்
ஏற்றுக்கொண்டார். இரண்டு பெண்களையும் அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொரு மன்னனாகப்
பார்த்து முறையிட்டார். பலனில்லை.
 
அவர்கள் களைப்போடு பயணம்
செய்துகொண்டிருந்தபோது, வழியில் மழை வந்துவிட்டது. மூவரும் ஒரு மரத்தடியில்
ஒதுங்கினார்கள் அப்போது, ஔவையார் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்கள்
தங்களுடைய சிற்றாடையால் மூடினார்கள்.
 
தங்களுடைய நிலையை மறந்து, தாங்கள் அரச
குமாரிகளாக
இருந்தும் இப்படி அலைய வேண்டிய நிலை
வந்துவிட்டதே என்பதை மறந்து, அவர்கள் தனக்காகப் படும்பாட்டை நினைத்து நெஞ்சம்
உருகிய நிலையில் ஔவையாரிடமிருந்து வெளிப்பட்ட வெண்பாதான் இது.
இதன் பொருள்: மூன்று விஷயங்கள் அந்த
நீலச்சிற்றாடைக்கு நேர் என்கிறார் ஔவையார். தமிழில் நேர் என்றால் சமம் என்று
அர்த்தம். பாரதியார் “பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்…” என்று
எழுதியிருக்கிறார். அந்த மூன்று விஷயங்கள், பாரி பறித்த பறி, பழையனூர் காரி
கொடுத்த களைக்கொட்டு, சேரமான் வாராய் என்றழைத்த வாய்மை ஆகியவைதான்.
தன் அரண்மனையில் தங்கியிருந்த ஔவையார்
புறப்பட்டுச் செல்வதை பாரி விரும்பவில்லை. பரிசுப் பொருள்களைக் கொடுத்து
அனுப்பிவிட்டு வழியில் இவனே ஏற்பாடு செய்து அதைக் கொள்ளையடித்துவிடுகிறான்.
பரிசுப் பொருள்கள் எல்லாம் பறிபோய்விட்டால் மீண்டும் ஔவையார் தன்னைத் தேடி வருவார்
என்பது பாரியின் திட்டம். பழையனூர் காரியைத் தேடிப்போனார் ஔவையார். காரி,
தோட்டத்தில் அமர்ந்தபடி கையில் களைக்கட்டோடு கொத்திக்கொண்டிருந்தான். ஔவையாரைப்
பார்த்தவுடன் களைக்கொட்டை ஔவையாரிடம் கொடுத்துக் கொத்தும்படிச் சொன்னான். சேரமான்
அரண்மனையில் விருந்துக்கு இலை போட்டபோது எல்லோரும் அமர்ந்துவிட்டார்கள்.
இடப் பற்றாக்குறையால் ஒருவர் எழுந்திருக்க வேண்டிய
நிலை. தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்கிற உரிமையோடு சேரமான் ஔவையாரைப் பார்த்து
எழுந்திருக்கும்படிக் கேட்டுக்கொண்டான். இந்த மூன்று செய்கைகளும் பாரி மகளிர்
போர்த்திய நீலச் சிற்றாடைக்குச் சமம்.
தன்னை உரிமையோடு பந்தியிலிருந்து
எழுப்பிவிட்டார்கள், இது சேரமானின் செய்கையை ஒத்தது என்று சொல்லி துரைசாமி கண்ணீர்
விட்டார்.
பெரியப்பா மறைந்துவிட்டாலும் அவருடைய
தமிழ் இன்னமும் அங்கே உலவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
பெரியப்பா மறைவால் குடும்பச் சூழலில்
ஏற்பட்ட சில மாறுதல்கள் ஒருபக்கமும், மீன்வலை வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள்
ஒருபக்கமும் இருக்க, என்னுடைய இன்னொரு பக்கமும் அப்போது வீரியமாக
வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அடையாறு பகுதியில் சில விஷயங்கள் பராமரிக்கப்பட வேண்டும்
என்றும் அதற்கு என்னுடைய மற்றும் என் நண்பர்களுடைய புஜபலம் அவசியம் என்றும்
தீர்மானித்து அதைச் செயல்படுத்திக்கொண்டிருந்தேன். இதே சமயத்தில் என்னுடைய
ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடும் இன்னொரு பக்கத்தில் நீடித்துக்கொண்டிருந்தது. அது பற்றி:
திருத்தணியில் ஒரு திருமணம் – வங்கி
வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கும் சக ஊழியருக்கும் ஏற்பட்ட காதல் விளைவாக.
பெண் ஐயர்; பையன் ஐயங்கார். இருந்தாலும் அது அந்த காலத்தில் பிரச்சினையாகிவிட்டது.
பையன் வீட்டார் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் சம்மதம் இல்லாமலே திருமணத்தை
நடத்தி வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, பெண் வீட்டார் பையனைக் கூட்டிக்கொண்டு
திருத்தணிக்குப் போனார்கள். ஒரு வேளை கலவரம் ஏதாவது ஏற்பட்டால்
தற்காப்புக்கென்றுச் சிலரை உடன் அழைத்துச் சென்றார்கள். அந்தத் தற்காப்பு
ஆசாமிகளில் நானும் ஒருவன்.
காரணம் பெண்ணின் தம்பி மகேஷ் என்னுடைய
நண்பன்.
 மகேஷின் ஒரு அக்கா நடிகர் நீலுவின்
மனைவி. இன்னொரு அக்கா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மருமகள். மகேஷ் சந்தேகப்பட்டபடி
ஏதாவது அடிதடி நடக்கும் என்ற நம்பிக்கையில் தயாரிப்புடன் திருத்தணிக்குப் போனேன்.
ஆனால் கடைசி நிமிடக் (க்ளைமாக்ஸ்) காட்சியில் எல்லாமே மாறி விட்டது. பையனின்
தாயாரும், தகப்பனாரும் அங்கே வந்து அழுது கொண்டே ஆசிர்வதித்தார்கள். எங்களுக்கு
வேலையில்லை.
 
மகேஷ் அடையாறில் என்னோடு ஆரம்ப கால
ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டவன். தொடரின் இந்தப் பகுதியை
எழுதிக்கொண்டிருக்கும் பொழுது மகேஷ் இயற்கை எய்திவிட்டான் என்ற செய்தி
தொலைப்பேசியில் வருகிறது…
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர்
பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் ஒருநாள் முகாம் நடைபெற்றது. எஸ்.குருமூர்த்தியும் (இன்றைய
துக்ளக் ஆசிரியர்) நானும் விவஸ்தா. அதாவது ஏற்பாடுகளைக் கவனிப்பவர் என்று பொருள்.
முகாமில் இருப்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். என்னையும்
குருமூர்த்தியையும் அழைத்துப் பேசினார் நிர்வாகி. இவர் ‘ஹண்ட்ரட் ஜி’ என்று
அன்புடன் அழைக்கப்பட்ட சீனிவாசன். நாங்கள் இருவரும் அடையாறு போய் ஹோட்டலில் ஐம்பது
பாக்கெட் உப்புமா வாங்கி வர வேண்டும். சைக்கிளில் புறப்பட்டோம்.
அடையாறு வருவதற்குள்ளேயே எங்களுக்குள்
வாக்குவாதம் வலுத்துவிட்டது. ‘காந்திநகரில் உள்ள என் வீட்டுக்குப் போய்
உப்புமாவைத் தயார் செய்து விடலாம்; அதன் அளவும் அதிகமாக இருக்கும்’ என்பது என்
யோசனை.
குருமூர்த்தி, சங்கத்தின்
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவன். ஹோட்டலில்தான் வாங்க வேண்டுமென்று முரண்டு
பிடித்தான்.
ஒரு வழியாக அவனைச் சம்மதிக்க வைத்து
வீட்டுக்குப் போய் என் தாயாரைப் பாடாய்ப் படுத்தி உப்புமா தயாரான பின்புதான்
தெரிந்தது – உப்புமாவைப் பாக்கெட் போடுவது ஒரு மந்திரக் கலை என்று.
சமாளித்து, சண்டை போட்டுக்கொண்டு,
வியர்த்து விறுவிறுத்து, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சிறுவர் பூங்காவுக்கு வந்தால் –
உணவு நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆகி விட்டிருந்தது.
சங்கத்துக்காரர்களுக்கு நேரக்
கட்டுப்பாடு முக்கியம் என்பதால் சீனிவாசன் ஜி என்னை முறைத்துப் பார்த்தார். குரு,
தனக்குச் சம்பந்தமில்லாதது போல் இருந்து விட்டான். முகாம் முடிந்த பிறகு சீனிவாசன்
ஜி என்னிடம் சொன்னது இதுதான்:
“ உன்னுடைய யோசனையை நேற்றே
சொல்லியிருந்தால் அதற்கேற்றபடி செய்திருக்கலாம்.யோசித்துச் செயல்பட வேண்டும்.
செய்யும்போது யோசிக்கக் கூடாது.”
எனக்கிருந்த பதட்டத்தில் இதைப்
புரிந்துகொள்ள இரண்டு நாள் தேவைப்பட்டது.
தொடரும்…

Leave a Reply