காலனியத் தாக்கங்களிலிருந்து விடுபட்டு சுய உணர்வு பெற்றுள்ள இந்துக்களுக்கு இந்த ‘விவாதம்’ செயற்கையானதாகவும், சாரமற்றதாகவும், அதே சமயம் பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாகவுமே தோன்றும். ஏன்? இந்துமதம், இந்துத்துவம் என்ற இரண்டு கருத்தாக்கங்களையும் திட்டவட்டமாக வரையறை செய்துவிடலாம் என்று எண்ணினாலும், இரண்டுக்கும் நடுவில் இனம்பிரித்தறிய முடியாத பொதுத்தன்மைகள்தான் இருக்குமேயன்றி, இவை கறாரான, இறுக்கமான இரு வேறுபட்ட விஷயங்களாக இருக்காது. உதாரணமாக, விஜயநகரப் பேரரசையும், சிவாஜியின் இந்து சாம்ராஜ்யத்தையும் (‘ஹிந்து பத பாதஷாஹி’) எப்படி வகைப்படுத்துவீர்கள்? இந்துமதம் என்றா அல்லது இந்துத்துவம் என்றா? இவை இல்லையேல், இந்திய நாட்டின் பல பகுதிகளில், இந்து மதமும் கலாசாரமும் உயிர்வாழ்ந்திருக்கவே சாத்தியமில்லை. இந்த மகத்தான அரசியல் எழுச்சிகள் நிகழ்ந்திருக்காவிடில், சஷி தரூர் சாகுல் ஹமீதாகவும், ராமச்சந்திர குகா ராபர்ட்டாகவும் பிறந்திருப்பார்கள்! இன்றும், இந்துமதமும் இந்து சமுதாயமும் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பல இடங்களில் அதே போன்ற ஆக்கிரமிப்பு அபாயங்களையும் கொடுமைகளையும் சந்தித்து வருகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இத்தகைய சூழலில், சுய மயக்கத்தில் ஆழ்ந்துள்ள அறிவுஜீவி எழுத்தாளர்களின் குழப்பவாதங்களின் அடிப்படையில் இந்துக்கள் தங்களது வரலாற்று உணர்வை மறுதலிப்பதும் நீர்த்துப் போகச் செய்வதும் தற்கொலைக்கு ஒப்பானதாகவே முடியும்.
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் போன்ற நவீன இந்து மறுமலர்ச்சியாளர்களின் கருத்துக்கள் விஷயத்திலும் இதே ரீதியிலான குழப்பத்தைத்தான் இந்த அறிவுஜீவிகள் வெளிப்படுத்துகிறார்கள். சொல்லப் போனால், ஆதி சங்கரர் தொன்மையான ஆறு தத்துவப் பிரிவுகளின் (தரிசனங்கள்) செழுமைகளையும் உள்வாங்கி அதன் மூலம் அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டி பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்தது, ராமானுஜர் அயராது பக்தியையும் சரணாகதித் தத்துவத்தையும் பிரசாரம் செய்து வைணவ மரபை நெறிப்படுத்தியது, பசவண்ணரின் வீரசைவ இயக்கம், துளசிதாசரின் ஸ்ரீராமசரிதமானஸ் என்கிற ராமாயண காவியம் சாதி, சமய, மொழிப் பிரிவினைகளைத் தாண்டி வட இந்தியாவின் அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்தது – இவையெல்லாம் இந்துமதமா அல்லது இந்துத்துவமா? சுவாமி விவேகானந்தர் விஷயத்தில் பேராசிரியர் ஜ்யோதிர்மய ஷர்மா அவரை இன்றைய இந்துத்துவ கருத்தியலின் அடிப்படைகளை உருவாக்கியவர் என்று அடையாளப் படுத்துகிறார். ஆனால், சஷி தரூர், அதே விவேகானந்தரை ‘இந்துத்துவம் தவிர்த்த இந்துமதம்’ என்ற தனது விநோத வகைப்பாட்டில் கொண்டு வருகிறார். இந்த இரண்டு அறிவுஜீவிகளுமே பாஜக / இந்துத்துவ எதிர்ப்புப் பள்ளியைச் சார்ந்தவர்கள் என்பதுதான் இதில் வேடிக்கையான விஷயம்.
அண்மைக்காலங்களில் ‘இந்துமதம் எதிர் இந்துத்துவம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து விவாதங்களை ஊடகங்களிலும் கல்விப் புலங்களிலும் நேருவிய செக்யூலரிஸ்டுகளும் இடதுசாரிகளும் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சஷி தரூரின் குறிப்பிட்ட புத்தகமும் அதன் ஒரு பகுதிதான். இந்தியாவின் தேசிய மைய நீரோட்டத்தில், தங்கள் சித்தாந்தங்களும் கொள்கைகளும், அரசியல் பொருளாதாரம் கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் வலுவிழந்து தேய்ந்து மறைந்து கொண்டிருப்பதைக் கண்டு இவர்கள் பீதியடைந்திருக்கிறார்கள். இத்தனை காலமாக இந்துமதத்தைக் குறித்து பழமைவாதம், மூடநம்பிக்கை, சாதிக் கொடுமை என்று எதிர்மறையாகவே பேசிவந்தவர்கள் இந்தத் தரப்பினர். ஆனால், அயோத்தி இயக்கத்தையும் வாஜ்பாய் ஆட்சியையும் தொடர்ந்து இந்துத்துவ எழுச்சி நீறுபூத்த நெருப்பு போல கனன்று கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டின் இந்தியாவில், அத்தகைய வாதங்கள் நிராகரிக்கப்படும் என்பதை இப்போதுதான் தாமதமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டில் இந்தியாவின் வெகுஜன மனநிலையைப் பீடித்திருந்த நேருவியம், சோஷலிசம், மார்க்சியம் போன்ற குறுகிய கால ‘இசங்’களைக் காட்டிலும் வலிமையானது இந்துமதமே என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், காங்கிரஸ் வகையறாக்கள் வேஷம் போட்டு, முரசறைந்து என்னவெல்லாமோ செய்து மோதியை விடவும் பாஜகவை விடவும் உண்மையான இந்துக்கள் நாங்கள்தான் என்று பரிதாபகரமாக நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலைமை உருவாவதற்கான காரணமே இந்துத்துவ எழுச்சிதான் என்பதை அரசியல் நோக்கர்களும் பெரும்பான்மையான பொதுமக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
‘இந்துமதம் வேறு இந்துத்துவம் வேறு’ என்ற நிலைப்பாடு ‘வெகுஜன’ இந்துக்கள் மற்றும் ‘ஆன்மீக’ இந்துக்களிடம் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று பாஜகவுக்கு எதிரான அரசியல் தரப்புகள் கணக்கிடுகிறார்கள். இந்துத்துவத்தை வன்முறை / மோதல், என்றும், காங்கிரஸ் பாணி செக்யுலரிசத்தை அமைதி / நல்லிணக்கம் என்றும் பெருவாரி இந்துக்கள் கருதுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் ‘மதத்தின் பெயரால் ரத்தம் சிந்தாத இந்துமதம்’ என்ற பிரசாரமும் மூளைச்சலவையும் பல பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. “இந்துமதம் தொடர்ந்து பல தாக்குதல்களை சந்தித்து வந்திருக்கிறது. ஆயினும் இது எதுவும் இந்துமதத்தைக் குலைத்து விடவில்லை. ஏனென்றால் இந்த மதம் யாராலும் உருவாக்கப்பட்டதல்ல; யாரும் இதைத் தீவிரமாக பிரசாரம் செய்யவில்லை. யாரும் ரத்தம் சிந்தி இதைக் காப்பாற்றவில்லை. இது ஒரு வாழ்க்கை முறை… இப்போது மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று கிளம்பியிருக்கும் இந்துத்துவ லும்பன்களிடம்தான் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்துமதத்தின் எதிரிகளே இவர்கள்தான்..” என்று மேதாவித்தனமாகப் பேசும் பல ‘வெகுஜன’ இந்துக்களைப் பார்க்க முடியும். இத்தகைய மனநிலைக்குப் பின் இருப்பது எந்தவிதமான ‘ஆன்மீக’ உணர்வும் அல்ல, முற்றான அறிவின்மையும் வரலாற்று உணர்வின்மையும் மட்டுமே.
இந்துக்கள் ஒருபோதும் பிறர்மீது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்டு வன்முறையிலும் ரத்தக் களறியிலும் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். ஆனால், தங்களது மதத்தையும் வாழ்க்கை முறையையும் ஆபிரகாமிய (இஸ்லாம், கிறிஸ்தவம்) மதங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பதற்காக ஏராளமான ரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. பொதுயுகம் 7ம் நூற்றாண்டு தொடங்கி இஸ்லாமின் வாளுக்குக் கீழ் வந்த அத்தனை தேசங்களும் கலாசாரங்களும், அவற்றின் பழைய சுவடுகள் ஏதுமின்றி அழிக்கப்பட்டன. ஆனால் ஆயிரம் ஆண்டுக்கால இஸ்லாமியத் தொடர் படையெடுப்பிலும் ஆட்சியிலும் கூட இந்துமதம் முற்றாக அழிந்து விடவில்லை. தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. இதை எப்படி விளக்குவீர்கள்? ஏதேனும் மாயமந்திரங்கள் அல்லது அற்புதச் செயல்களால் இப்படி நிகழ்ந்ததா என்ன?
இல்லை. இதற்குக் காரணம், தங்கள் மதத்தையும் கலாசாரத்தையும் வாழ்க்கை முறையையும் காப்பாற்றுவதற்காக நமது முன்னோர்கள் தலைமுறைகளாகப் போராடி ரத்தம் சிந்தினார்கள் என்பதுதான். விஜயநகரப் பேரரசும், ராணா பிரதாப சிம்மனின் தலைமையில் ராஜபுத்திரர்களும், சிவாஜியின் கீழ் மராட்டியர்களும், லாசித் போர்ஃபுகன் (Lachit Borphukan) கீழ் அசாமியர்களும், தென்னாட்டின் நாயக்க வீரர்களும், ஒதிஷாவின் கஜபதி மன்னர்களும், குரு கோவிந்த சிம்மனின் கீழ் சீக்கியர்களும் மற்றும் பல எண்ணற்ற இந்து ஆண்களும் பெண்களும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து போராடி, உயிர்நீத்ததால் தான், இன்று நாம் இந்துக்களாக நீடிக்கிறோம். ஹரிஹர-புக்கர் சகோதர்களுக்கு ஆசியும் நம்பிக்கையும் அளித்த வித்யாரண்யர் போல, சிவாஜி மன்னருக்கு உத்வேகமூட்டிய சமர்த்த ராமதாசர் போல, நமது குருமார்களும் அருளாளர்களும் கூட இந்த நீண்ட போராட்டத்தில் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். நமது முன்னோர்களின் தியாகங்களைப் போற்றாவிட்டாலும், மறுதலிப்பதன் மூலம் அவமதிக்காமலாவது இருப்போம்.
ஆம், இவையெல்லாம் தெய்வத்தின் சக்தியால், தர்மத்தின் வலிமையால் நிகழ்ந்தது என்றே ஒரு சாதாரண இந்து நினைக்கக் கூடும். ஆனால் யதார்த்த உலகில், யதார்த்தமான மனித யத்தனத்தாலும் செயல்களாலும், யதார்த்தமான ரத்தமும் வியர்வையும் சிந்தப்படுவதாலும்தான் தர்மத்தின் சக்தி வெளிப்படும். நமது இதிகாசங்களும் புராணங்களும் இதைத்தான் கூறுகின்றன. எந்தக் குழப்பமும் கிலேசமும் இல்லாமல் அனைத்து இந்துக்களும் இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
19-20ம் நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சியும் 1980களின் மத்தியில் தொடங்கிய இந்துத்துவ அரசியல் எழுச்சியும் இந்த நீண்டகால வரலாற்றின் இயல்பான நீட்சியேயன்றி ‘நவீன’ மோஸ்தர்கள் அல்ல. அவ்வாறு அடையாளப்படுத்துவது என்பது, நீள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து குறைந்தபட்ச வரலாற்று உணர்வைப் பெற ஆரம்பித்திருக்கும் இந்து சமுதாயத்தை அதிலிருந்து திசைதிருப்புவதற்கான குயுக்தியன்றி வேறில்லை. மிகப்பெருமளவிலான எதிர்மறைப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் 2014ல் நரேந்திர மோதி தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது என்பது இந்துத்துவ அரசியலின் வளர்ச்சிப் பாதையில் ஒரு உறுதியான ஆரம்பத் தடம்தான். இன்னும் செல்லவேண்டிய பாதை நீண்டு உள்ளது. அந்தப் பயணத்தை முடக்கும் முயற்சிகளே இந்த எதிர்மறைப் பிரசாரங்கள்.
மேலும், இந்துத்துவம் என்ற இந்திய மூலம் கொண்ட சொல்லாட்சி, Hinduism என்ற ஆங்கிலச் சொல்லாட்சியுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு மேலானது. ‘துவம்’ என்ற சம்ஸ்கிருத பின்னொட்டுச் சொல், ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்கிறது, சமத்துவம், சகோதரத்துவம், கவித்துவம் என்பதில் உள்ளது போல. மாறாக, ‘இசம்’ என்ற ஆங்கிலப் பின்னொட்டுச் சொல், செயற்கையாக வலிந்து உருவாக்கப்பட்ட (பொதுவாக எதிர்மறையான) கொள்கையைக் குறிக்கிறது, கம்யூனிசம், நாசியிசம், பாசிசம் என்பதில் உள்ளது போல. தனது மதத்தின் மீது பற்றுக் கொண்ட கிறிஸ்துவர், அதைக் குறிக்க Christianity என்ற சொல்லைத்தான் விரும்புவாரே அன்றி, Christism என்ற சொல்லை அல்ல. எனவே, மொழியியல் ரீதியாகவும், இந்துத்துவம் என்ற சொல் Hinduism என்ற சொல்லை விட மேம்பட்டதாகவே இருக்கிறது.
இந்துத்துவம் என்ற சொல் இந்துமதத்தின் ஒட்டுமொத்த சமூக, அரசியல், கலாசார, வரலாற்று உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு அழகிய, ஆழமான சொல்லாகும். அச்சொல்லை ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம், பாஜக என்ற கட்சி ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புறுத்தி அதற்கு ஒரு குறுகலான, எதிர்மறையான பொருளைத் தருவதற்கு சஷி தரூர், ராமச்சந்திர குகா போன்றோர் முயல்கின்றனர். இது தவறானது மட்டுமல்ல, மேற்கூறிய உணர்வுகளைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் மிக அபாயகரமானதும், இந்து சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிப்பதுமாகும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்துக்களும் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.