Posted on Leave a comment

எழுத்து மூவர் | – அரவிந்த் சுவாமிநாதன்

“நீங்கள்
என்றைக்காவது ஒருநாள் சரியாய் சாமான்கள் வாங்கி வந்ததுண்டா? குப்பையும் கூளமுமாய் எல்லாச்
சாமான்களையும் வாங்கி வந்தால் நஷ்டம் யாருக்கு? கடைக்காரன் எது கொடுக்கிறானோ அதை வாயைத்
திறவாமல் வாங்கி வந்து விடுகிறீர்கள்! கடுகு பாதி மண்! ஆறு தடவை புடைத்தேன். இன்னும்
மண் போகவில்லை. புளி கன்னங்கரேல் என்று அடையாயிருக்கிறது. உங்களுக்கு என்று ஒன்பது
வருஷப் புளியை அந்தப் பாழாய்ப் போவான் எப்படிக் காப்பாற்றி வைத்திருக்கிறானோ! அவன்
வாங்கின காசு கரியாய் மாறாதா? பருப்பு பார்த்து வாங்கினீர்களே! அதற்கு அடித்துக் கொள்ள
இரண்டு கைகளும் போதாது. பூ என்று ஊதினால் பறக்கும் இலைப்பருப்பைக் கொடுத்து ஏய்த்து
விட்டான். குண்டுப்பருப்பு ஒரு கடையிலும் கிடைக்காமற் போயிற்றா? திருப்பத்தூர் குண்டுப்
பருப்பு சிரிப்பாய்ச் சிரிக்கிறது. உங்களுக்குமட்டும் எங்கிருந்து இலைப்பருப்பு கிட்டிற்றோ
தெரியவில்லை? போகும்போதே எண்ணெய் ஒரு கடைக்கு ரெண்டு கடையாகப் பார்த்து வாங்குங்கள்
என்று படித்துப்படித்துச் சொல்லியிருந்தேன்! காறல் எண்ணெய்யை ஒரு குடம் வாங்கிக் கொண்டு
வந்து நிற்கின்றீர்கள். அதை யார் தொடப்போகிறார்கள்? உடனே அந்தக் குடத்தைக் கடையில்
கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்து மறுகாரியம் பாருங்கள். நெய் பிணநாற்றம் வீசுகிறது.
இதற்கு விலை படிக்கு ஒரு ரூபா கொட்டிக்கொடுத்தீர்கள்….”

இப்படியெல்லாம் கணவனைத் திட்டும் மனைவியின் கதையைப் படித்தவுடன் இது ஏதோ 50, 60களில்
விகடன், கல்கி போன்ற இதழ்களில் வந்தது என்று நினைத்து விடாதீர்கள். இது அதற்கும் மேலே!
அதாவது 1900த்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. ‘தலையணை மந்திரோபதேசம்’ என்ற பெயரில்
1901ல் வெளியான இந்த நூலை எழுதியவர் ச.ம.நடேச சாஸ்திரி. இசையுலக மூவர் போல் எழுத்துலக
மூவரில் முதன்மையாக மதிக்கப்படத் தக்கவர் இவர். காரணம் இலக்கியச் செயல்பாடுகளில் பல
வகையில் அவர் முன்னோடியாக இருந்ததுதான். மேற்கண்ட ‘தலையணை மந்திரோபதேசம்’ நூல் விமர்சகர்களால்
‘நாவல்’ என்று மதிப்பிட்டாலும் உண்மையில் ராம பிரஸாத் – அம்மணி பாய் என்ற இருவருக்கிடையே
எழும் ஊடல்தான், சிறு சிறு சம்பவங்களாக, சிறுகதையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்
பெற்றிருக்கிறது. அந்த வகையில் இதனை சிறுசிறு சம்பவங்களின், கதைகளின் தொகுப்பு என்றும்
சொல்லலாம். தமிழில் இவ்வகை நகைச்சுவை எழுத்தின் முன்னோடி நடேச சாஸ்திரிதான். மட்டுமல்ல;
தமிழில் முதன் முதலில் துப்பறியும் நாவலை எழுதியவரும் இவரே! ‘தானவன்’ (‘தானவன் என்ற
போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்’) என்ற இவரது நாவல் 1894ல் வெளியானது.
காலவரிசையின்படி பார்க்கப் போனால் ‘பிரதாப முதலியார் சரித்திரம் (1879)’ நாவலுக்குப்
பிறகு தமிழில் வெளியான இரண்டாவது நாவல் ‘தானவன்’ தான். ஆனால் இது தழுவல் முயற்சி என்று
இலக்கிய ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டது. காரணம் Dick Donovan ஆங்கிலத்தில் எழுதிய
நாவல்களை முன் மாதிரியாகக் கொண்டே இந்த நாவலை எழுதியிருந்தார் சாஸ்திரி. தொடர்ந்து
‘தீனதயாளு’ (1900), ‘திக்கற்ற இரு குழந்தைகள்’, ‘மதிகெட்ட மனைவி’, ‘மாமியார் கொலுவிருக்கை’
போன்ற நாவல்களை எழுதினார். தமிழின் நாவல் வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் வித்திட்டவர்களுள்
ச.ம. நடேச சாஸ்திரியும் ஒருவர்.
ச.ம.நடேச சாஸ்திரி
முதன்
முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளரும் இவரே எனலாம். ‘FolkLore
in South India’ (1884), ‘The Dravidian Nights Entertainments’ (1886), ‘Tales of
the sun’ (1890) போன்றவை ஆங்கிலத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுப்புகள். ‘Hindu
Feasts, Fasts and Ceremonies’ (1903) என்ற நூல் இந்தியாவின் மக்கள் வாழ்க்கையையும்,
நம்பிக்கைகளையும் அதன் பண்டிகைகள் போன்றவற்றின் சிறப்பையும் ஐரோப்பியருக்கு அறிமுகப்படுத்த
எழுதப்பட்டதாகும். ‘The Dravidian Nights Entertainments’ என்ற நூல் தமிழில் வழங்கி
வந்த ‘மதனகாமராஜன் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக்
கதைகளை மொழிபெயர்த்த முன்னோடித் தமிழ் எழுத்தாளரும் நடேச சாஸ்திரியே என்று கூறலாம்.
இவர்,
1859ம் ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், மணக்கால் அருகே உள்ள சங்கேந்தி என்ற கிராமத்தில்,
ஸ்ரீ மகாலிங்க ஐயர் – அகிலாண்டேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணத்தில்
உயர் கல்வியை முடித்த பின் சென்னைப் பலகலையில் இளங்கலைப் படிப்பை நிறைவு செய்தார்.
1881ல் இவருக்கு இந்திய அரசின் கலை மற்றும் சிற்பத்துறையில் (Art and Sculpture) வேலை
கிடைத்தது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் சிவெலின் கீழ் இவர் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி உடையவராக
இவர் இருந்ததால், இவரது புலமையைக் கண்டு வியந்த ராபர்ட் சிவெல் இவருக்கு ‘பண்டிட்’
என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். சில வருடங்கள் சென்னையில் பணியாற்றியவர் பின்னர்
மைசூர் அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்று கலை மற்றும் சிற்ப கலைத் துறையில் இரண்டு
ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு தமிழகத்திலும் சிறைத்துறை, பதிவுத்துறை போன்ற துறைகளில்
பணியாற்றினார். லண்டன் கலாசாலை உறுப்பினராக இருந்த இவர் மீது ஐரோப்பியர்களுக்கு மிகுந்த
நன்மதிப்பு இருந்தது.
தனது
ஓய்வு நேரத்தில் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார் சாஸ்திரி. தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல்
சம்ஸ்கிருதத்திலும் சில நூல்களை எழுதியிருக்கிறார். ‘விவேக போதினி’ இதழில் இவர் தொடர்ந்து
பல கட்டுரைகளையும், மொழிப்பெயர்ப்புத் தொடர்களையும் (குமார சம்பவம்) எழுதி வந்தார்.
மிகுந்த கடவுள் பக்தி கொண்ட இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத் திருவிழாக்களில்
தவறாது கலந்து கொள்வது வழக்கம். அவ்வாறே ஒருநாள் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச்
சென்றிருந்தார். சுவாமி வீதி உலாவின் போடப்பட்ட அதிர்வேட்டுச் சத்தத்தால் மிரண்ட குதிரை
ஒன்று தறிகெட்டு ஓடியது. பயந்து ஒதுங்கி நின்ற நாடேச சாஸ்திரிகள் மீது வேகமாக வந்து
மோதியது. சாஸ்திரிகள் கீழே விழுந்தார். கல் ஒன்றின் மீது தலை அடிபட்டு மயக்குமுற்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி மறுநாள் ஏப்ரல் 11,1906 அன்று காலமானார்.
சிறுகதைகள்,
நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று சகல தளங்களிலும் முன்னோடியாக வாழ்ந்த அவரது வாழ்வு
1906ல் முற்றுப்பெற்றது. என்றாலும் அவரது மறைவிற்குப் பின்னும் அவரது கட்டுரைகள் ‘விவேக
போதினி’ இதழில் தொடர்ந்து வெளியாகின. நூல்கள் பலவும் தொடர்ந்து அச்சிடப்பட்டன. இன்றைக்கும்
அவரது நூல்கள் (ஆங்கிலத்தில்) அச்சில் கிடைக்கின்றன என்பதே அவரது முன்னோடி முயற்சிகளுக்கு
முக்கிய சான்றாகிறது.
*******
“மதுரையில்
‘ஜில்லா ஸ்கூல்’ என்று பெயர் வழங்கிய கவர்ன்மெண்டு காலேஜ் என்ற பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில்
ஒரு மூலையில் சில பெஞ்சுகளும் அவற்றின் மத்தியில் ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தன.
அந்த மேஜையின்மேல் சில மைக்கூடுகள் இருந்தன. ‘டிங்டாங்’ என்று பத்தாவது மணி அடித்தவுடன்
அவ்விடத்தில் சுமார் இருபது பையன்கள் வந்து கூடினார்கள். அவர்கள் வந்து ஐந்து நிமிஷத்திற்குள்
அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட கறுத்த உருவத்தையுமுடைய ஒரு மனிதர் அங்கே
வந்தார். அவர் அந்தப் பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதர். அவர் பெயர் அம்மையப்ப பிள்ளை.
அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கலாம். அவர் பிறந்த ஊர், ‘ஆடுசாபட்டி’ என்று ஐந்தாறு
வீடுகளும் ஒரு புளியமரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம். அவர் அகாத சூரர். எமகம், திரிபு
என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப்பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று
உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையிலகப்பட்டுவிட்டால் ராமபாணம்
போட்டாற் போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச்
சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.
ஒரு காலத்தில்
தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி
தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி
என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொடுங்குகிற
வழியாகவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்படமாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக,
‘அடா போடா, புஸ்தகமே, சிலேட்டே, பென்சிலே, கலப்பையே, மோர்க்குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே’
என்று இப்படி வாயில் வந்த வார்த்தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி புதுவசவுகள்
அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப்போனான். அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு
விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான பாட்டுகளைச் சொல்லி
எதிராளியின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாவிட்டால்
என்ன? அதனுள் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால்
அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.”

மேற்கண்ட, வரிக்கு வரி நகைச்சுவை ததும்பும் எழுத்து எழுதப்பட்டது 19ம் நூற்றாண்டில்
அல்ல. அதற்கும் முன்பு. ஆம். இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால், 1893ல், மேற்கண்ட
வரிகள் இடம்பெற்ற தொடரை விவேக சிந்தாமணியில் எழுதியவர் பி.ஆர். ராஜம் ஐயர். இத் தொடரை
எழுதும்போது அவருக்கு வயது 21. இவ்வுலகில் அவர் வாழ்ந்ததோ வெறும் 26 வருடங்கள் தான்.
இலக்கிய உலகில் பயணித்ததோ வெறும் ஐந்தே ஆண்டுகள்தான். அதற்குள் அவர் செய்திருக்கும்
சாதனை தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைபேறுடையது.
ராஜம்
ஐயர், 1872ம் ஆண்டில், வத்தலகுண்டில் பிறந்தார். உயர்கல்வியை அவ்வூரில் நிறைவு செய்தவர்,
மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் சேர்ந்து எஃப். ஏ. பயின்றார். அதனைத் தொடர்ந்து அக்காலத்தில்
புகழ்பெற்று விளங்கிய சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.
தமிழ் இலக்கியத்தில் தேர்ந்திருந்த ஐயர், வித்வான் பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய
கச்சிக்கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை ஒன்றை கல்லூரி இதழுக்காக எழுதினார். அதுவே
அச்சில் வந்த இவரது முதல் படைப்பு. அக்கட்டுரையே இவரது திறமையை பலரும் அறியக் காரணமானது.
கல்லூரி நூலகத்தில் இவர் வாசித்த ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ் வெர்த், டென்னிசன்
போன்றோரது படைப்புகள் கவிதா ஆர்வத்தைத் தூண்டின. கம்பனின் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன.
பி.ஏ. படிப்பை நிறைவு செய்ததும், தொடர்ந்து சட்டம் பயில்வதற்காக சென்னை சட்டக் கல்லூரியில்
சேர்ந்தார். ஆனால், இறுதித் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. அது இவரது மனதை வாட்டியது.
ஏற்கெனவே
தனிமை விரும்பியாக இருந்த ஐயர், மேலும் தன்னுள் ஒடுங்கினார். விரக்தி அடைந்த நிலையில்
இருந்த இவருக்குத் தாயுமானவரின் நூல் தொகுப்பு கிடைத்தது. அது இவரது உள்ளத்தில் புதியதோர்
எழுச்சியைத் தோற்றுவித்தது. எது நிலையானது, எது நிலையற்றது, வாழ்வதற்கு என்ன தேவை என்பதையெல்லாம்
ஆராய்ந்து சிந்தித்து உணர்ந்தார். கைவல்லிய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள்
போன்றவை இவரது உள்ளத்தை ஞானமார்க்கத்தில் செலுத்தின. இவர் வசித்து வந்த திருவல்லிக்கேணியில்
அடிக்கடிச் சொற்பொழிவுகள் நடக்கும். ஒரு சந்நியாஸினி அவ்வப்போது அங்கு வந்து ஆன்மிகச்
சொற்பொழிவாற்றி வந்தார். அவரை அணுகி தீக்ஷை பெற்றார் ஐயர். தொடர்ந்த ஆன்மிக நாட்டத்தின்
விளைவால் சாந்தாநந்த சுவாமிகள் என்பவரிடமும் குரு தீக்ஷை பெற்றுச் சீடரானார். அதுமுதல்
எப்போதும் ஏகாந்தமாக அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதும் தனிமையில் தியானிப்பதும்
அவரது வழக்கமானது.

பி.ஆர்.ராஜம் ஐயர்

ராஜம்
ஐயரின் நண்பர் ஒருவர் ‘பிரம்மவாதின்’ இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.
ஐயரும் அதற்கு உடன்பட்டு ‘Man his Littleness and Greatness’ (மனிதன் – அவன் தாழ்வும்
ஏற்றமும்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதித் தந்தார். அது பிரசுரமானது
அக்கட்டுரை அவரது ஆன்மிக அனுபவத்தின் சாரமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து விவேக சிந்தாமணி
இதழுக்கு எழுதும் வாய்ப்பு வந்தது. அதுதான் ‘ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள்
சரித்திரம்’ என்னும் பெயரிலமைந்த தொடர். தமிழில் வெளியான முதல் நீண்ட தொடர்கதை; தமிழில்
முதன்முதலில் பெண்ணை மையப் பாத்திரமாக வைத்து, பெண்ணின் தலைப்பைச் சூட்டி எழுதப்பட்ட
முதல் நாவல்; ஆங்கில நடையின் தாக்கமின்றி எழுதப்பட்ட யதார்த்தமான முதல் தமிழ் நாவல்;
தமிழில் தத்துவம் பற்றிப் பேசிய முதல் நாவல்; இரு தலைப்புகள் கொண்ட முதல் நாவல் என்பது
உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது இந்நாவல். பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த
நாவல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்ட பெருமையுடையது.
தமிழின்
முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1879ல் வெளிவந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள்
கழித்துத் தான் (1896) இந்த நாவல் நூலாக வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும்,
கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக
ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த நாவல் மட்டுமல்லாமல், கம்பராமாயணத்தை அடிப்படையாக
வைத்து, கம்பனின் கவிச் சிறப்பையும், சீதையின் பெருமையையும் ஜானகி, நடராஜன் என்ற இருவர்
வியந்து உரையாடுவது போல் ‘சீதை’ என்ற தொடரையும் விவேக சிந்தாமணி இதழில் ராஜம் ஐயர்
எழுதியிருக்கிறார். ‘சீதை’ கட்டுரைதான் கம்பராமாயணம் பற்றி வெளியான தமிழின் முதல் இலக்கியத்
தொடராகும். கம்பனைப் பற்றி முதன்முதலில் தமிழில் விரிவாக ஆராய்ந்தவர் என்று சொல்லப்படும்
வ.வே.சு. ஐயருக்கு முன்பாகவே கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தி ஒரு தொடர் கட்டுரையை எழுதியவர்
ராஜம் ஐயர்தான். ராஜம் ஐயரின் கட்டுரை வெளியானபோது வ.வே.சு. ஐயருக்கு வயது 13தான்.
ராஜம் ஐயர் அத்தொடரை எழுத ஆரம்பித்தது ஜனவரி 1896ல். ஆனால், எட்டு அத்தியாயங்கள் மட்டுமே
கொண்ட அக்கட்டுரைத் தொடர் நிறைவுற்றது ஜனவரி 1898ல்தான். தொடர், மாதா மாதம் தொடர்ச்சியாக
வெளியாகவில்லை. காரணம், ராஜம் ஐயருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவும், தொடர் சிகிச்சைகளும்தான்.
மேலும் இக்காலகட்டத்தில் அவர் ‘பிரபுத்த பாரதா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
‘பிரபுத்த
பாரதா’ சுவாமி விவேகானந்தரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதழ். அதில் தனது இயற்பெயரிலும்
டி.சி. நடராஜன், ரங்கநாத சாஸ்திரி எனப் பல்வேறு புனைபெயர்களிலும் தத்துவ, வேதாந்த,
புராண, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதினார் ஐயர். அவ்விதழில் ‘True Greatness or
Vasudeva Sastri’ என்ற தலைப்பில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய தொடர் நாவல் மிக முக்கியமானது.
சுமார் 20 வாரங்கள் வெளியான அந்த நாவல் ராஜம் ஐயருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால்
முற்றுப்பெறாமல் நின்றுவிட்டது. அந்த வகையில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய, தொடர்கதை
எழுதிய தமிழின் முதல் எழுத்தாளர் பி.ஆர். ராஜம் ஐயர் என்று சொல்லலாம்.
தனது
ஆன்மிக வேட்கை காரணமாக ராஜம் ஐயர் தனது உடலை சரிவரப் பராமரிக்கவில்லை. அதனால் அடிக்கடி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. நோய் முற்றி, மே 13, 1898ல் தனது 26ம் வயதில் காலமானார்.
“கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர்
என்ற புகழ் ஒரு முகமாகக் கிடைக்கப் பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமய்யர். இந்த நாவலின்
முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு
அதோடு ஒப்பிடக் கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை” என்பது இலக்கிய மேதை சி.சு.செல்லப்பாவின்
கருத்து.
தனது
பெயர் கடல் கடந்து பரவ வேண்டும் என்ற ஆசை ராஜம் ஐயருக்கு இருந்தது. அது பிற்காலத்தில்
சாத்தியமாயிற்று. ஸ்டூவர்ட் ப்ளாக் பெர்ன் (Stuart Blackburn) இந்நூலை ‘The Fatal
Rumour’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ராஜம் ஐயர் பிரபுத்த பாரதாவில்
எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘Rambles in Vedanta’ என்ற தலைப்பில் 900 பக்கங்கள்
கொண்ட நூலாக வெளியாகியுள்ளது.
குறைவான
காலமே வாழ்ந்தாலும் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்திரிகை என்று நிறைவாக எழுதி
தனது முத்திரைகளைப் பதித்துச் சென்றிருக்கும் பி. ஆர். ராஜம் ஐயர், இலக்கிய உலகம் மறக்கக்
கூடாத ஒரு முன்னோடி.
******
“எனக்கு ஆறு
வயதாகும்பொழுது என் சிறிய தாயாராகிய தஞ்சாவூர்ப்பெண் எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு
அப்பொழுது பதின்மூன்று வயது. அவள் அழகுள்ள பெண்; தணிந்த விலையுள்ள சீலைகள் கட்டிக்
கொள்ள மாட்டாள். தன்னைச் சிங்காரஞ் செய்து கொள்வதில் வெகு விருப்பமுடையவள். நடையுடை
பாவனைகளெல்லாம் புதுமாதிரியாகவே யிருந்தன. அவளுக்கு எழுத வாசிக்கத் தெரியும். வந்து
சிலநாள்களுக்குள் அவள் குணம் வெளிப்பட்டது. தானே வீட்டில் ஏகாந்தமாய் ஆளவேண்டுமென்ற
எண்ணத்துடன், என் தாய் இறந்த நாள்முதல் வீட்டுவேலைகளைப் பார்த்துக்கொண்டு என்னை அன்புடன்
வளர்த்துவந்த என் அத்தையைப்பற்றித் தன் புருஷனிடத்திற் கோட்சொல்லத்தொடங்கி, சிலநாள்களில்
அவளைத் துரத்திவிட்டாள். அப்புண்ணியவதி வெகு விசனத்துடன், நான் அழுவதைக் காணப் பிரியமின்றி,
வெளியே விளையாடப்போயிருக்கும் பொழுது, தன்னூருக்குப்போய்விட்டாள். நான் வீட்டுக்கு
வந்தவுடன் ‘அத்தையம்மாள் எங்கே?’ என்று கேட்டேன். அதற்கு என் சிறு தாயாகிய செங்கமலம்
‘அத்தையுமில்லை, பாட்டியுமில்லை. முண்டையொழிந்தாள். சனியன் தொலைந்தது’ என்றாள். நான்
கோ வென்றழுதேன், அதற்கு அவள் ‘என் காலின் கீழ் முட்டாதே. எங்கேயாவது ஒழி’ என்று சொல்லிக்கொண்டே
பிடித்திழுத்து முதுகிலடித்து வெளியே தள்ளிவிட்டாள். நான் தெருவில் விம்மி விம்மி யழுதுகொண்டு
நின்றேன். அப்பொழுது என் தகப்பனார் வந்தார். அவர் ஒன்றும் கேட்கவில்லை. திரும்பிக்
கூடப் பார்க்கவில்லை. என் துக்கம் அதிகரித்தது. அப்பொழுதுதான் நான் அனாதை யென்றறிந்தேன்.
‘அம்மா செத்துப்போனாள்’ என்பதின் பொருள் அப்பொழுதுதான் தெரிந்தது. குளத்திற் போய் விழுந்து
இறக்கலாமென்று நினைத்தேன். ஆனால் தவளை கடிக்குமே. கிணத்திற் போய் விழுந்துவிடுவோமென்றால்
ஆமை கடிக்குமே. ஒரு விஷயமும் தெரியாது; என்ன செய்கிறது! இவ்வித யோசனைகளில் அழுகை மாறிவிட்டது.
பிற்பாடு என் தோழியாகிய சேஷி தம்பிக்கு வைசூரி கண்டிருந்ததனால் அவள் வீட்டுக்குப் போகக்கூடாதென்று
என் அத்தையம்மாள் சொல்லி யிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. வைசூரியினா லிறக்கலாமென்று
நினைத்து அங்கே போகப்புறப்பட்டேன். சேஷி வீட்டு வாசலிற் போனவுடன் வேப்பிலைகள் சிதறிக்கிடப்பதைக்கண்டு
பயந்து திரும்பிவிட்டேன். சாயங்காலம் சாப்பாட்டுவேளை வந்தவுடன், பசிமுன்னிழுக்க, வெட்கம்
பின்னிழுக்க, மெள்ள மெள்ள வீட்டருகே சென்றேன். தெருத் திண்ணையில் வீற்றிருந்த என் தகப்பனார்,
‘சாவித்திரி! உள்ளேபோய்ச் சாப்பிடு’ என்றார். நான் தலையைக் கவிழ்ந்துகொண்டே வீட்டுக்குட்
சென்றேன். உடனே செங்கமலம் என் சிறிய தாயார் ‘எடுத்துப் போட்டுத் கொண்டு தின்னு’ என்றாள்.
என் கண்களிற் கண்ணீர் தளும்பிற்று. ஒன்றுஞ் சொல்லாமல் சோற்றுப் பானையிலிருந்து எடுத்துப்
போட்டுக்கொண்டு சாப்பிட்டபின், எச்சிலைச்சுத்தி செய்துவிட்டுத் திகைத்து நின்றேன்.”

ஒரு சிறிய பெண்ணின் அவல வாழ்வை மிக உருக்கமாகச் சொல்லும் இவ்வரிகளை எழுதியவர், அனந்த
நாராயண ஐயர் மாதவையா என்னும் அ. மாதவையா. ஜூன் 1892ல் விவேக சிந்தாமணி இதழில் ‘சாவித்திரி
சரிதம்’ என்னும் மேற்கண்ட வரிகள் கொண்ட இத்தொடர் வெளியானபோது அவருக்கு வயது 20. ஒரு
சிறு பெண், தன் வாழ்க்கையை தன் சரித்திரமாகவே கூறுவது போல் அமைந்த இத்தொடர்தான் விவேக
சிந்தாமணி இதழில் வெளியான முதல் தொடர். ‘சாவித்திரி’ என்ற பெண் தன் வரலாற்றைக் கூறும்
இக்கதையை ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார் மாதவையா. அதுதான் தமிழில்
அவரது முதல் படைப்பு. அதற்கு முன்பு, அவர் தான் பயின்ற கிறித்தவக் கல்லூரி இதழில் ஆங்கிலக்
கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அந்த வகையில் ‘சாவித்திரி சரிதம்’ தமிழில் வெளியான மாதவையாவின்
முதல் படைப்பு மட்டுமல்ல; தமிழில் வெளியான முதல் தொடர்கதையும் கூட. ஆனால், ஆசிரியருடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அத்தொடர் ஆறு மாதங்களோடு (நவம்பர் 1892) நிறுத்தப்பட்டு
விட்டது. அதே காலக்கட்டத்தில் பெ. சுந்தரம் பிள்ளையின் ‘மனோன்மணீயம்’ குறித்து ஒரு
திறனாய்வையும் அவர் விவேக சிந்தாமணியில் எழுதியிருந்தார். ஆசிரியருடன் ஏற்பட்ட பிணக்கு
காரணமாக அதன் பின்னர் விவேக சிந்தாமணியில் எதையுமே மாதவையா எழுதவில்லை. (அதற்குச் சில
மாதங்களுக்கு பிறகுதான் பிப்ரவரி 1893ல் ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ விவேக
சிந்தாமணியில் தொடராக வெளியாக ஆரம்பித்தது.) ‘சாவித்திரி சரிதம்’ பின்னர் மீண்டும்
எழுதப்பட்டு 1903ல் ‘முத்து மீனாட்சி’ என்ற தலைப்பில் நாவலாக வெளியானது.

அ.மாதவையா
ஆகஸ்ட்
16, 1872ல் திருநெல்வேலியில் உள்ள பெருங்குளம் கிராமத்தில் அனந்தநாராயண ஐயருக்கும்
மீனாட்சியம்மாளுக்கும். மகனாகப் பிறந்தார் மாதவையா. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில்
உயர் கல்வியை முடித்தார். பின் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். அதில்
தேர்ச்சி பெற்ற பின் உப்பு-சுங்க இலாகாவில் அரசு அதிகாரியாகச் சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம்
இரண்டிலும் நல்ல புலமை பெற்றிருந்த மாதவையா, இருமொழிகளிலும் எழுத ஆரம்பித்தார். அவரது
‘பத்மாவதி சரித்திரம்’ தமிழில் தோன்றிய மூன்றாவது நாவலாக இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ‘விஜய மார்த்தாண்டம்’, ‘தில்லை கோவிந்தன்’, ‘சத்தியானந்தன்’,
‘கிளாரிந்தா’ போன்ற நாவல்களை எழுதினார். அந்நாவல்களுக்கும், ‘குசிகர் குட்டிக்கதைகள்’
என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதைகளுக்கும் வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்தன.
தனது படைப்புகளில் ஆண்-பெண் சமத்துவம், பெண் கல்வி, விதவா விவாகம், சாதி எதிர்ப்பு,
இந்து மதச் சீர்கேடுகளைச் சாடுதல் போன்றவற்றை மையப்படுத்தியிருந்தார். மூட நம்பிக்கைகளைச்
சாடி நவீன மேற்கத்திய சிந்தனைப் போக்குகளைத் தன் படைப்பில் முன்வைத்ததால் அவரது படைப்புகளுக்கு
எதிர்ப்புக் கிளம்பியது. என்றாலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
தமிழின்
மீது கொண்ட ஆர்வத்தால் பெ.நா.அப்புசாமி, வே.நாராயணனுடன் இணைந்து 1917ல் ‘தமிழர் கல்விச்
சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அச்சங்கத்தின் மூலம் ‘தமிழர் நேசன்’ இதழைத்
துவக்கினார். ‘பாரிஸ்டர் பஞ்சநதம்’, ‘மணிமேகலை துறவு’ போன்ற நாடகங்களை அவர் தமிழர்
நேசனில் எழுதினார். மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் சிலவற்றையும் எழுதினார். ஆங்கிலத்துக்கு
இணையான தமிழ்க் கலைச் சொற்கள் பலவற்றை அவ்விதழில் அறிமுகப்படுத்தினார். 1922ல் விருப்ப
ஓய்வு பெற்ற பின் தனிப்பட்ட தனது கருத்துக்களை வெளியிடுவதற்காகவே ‘பஞ்சாமிர்தம்’ என்ற
இதழைத் துவக்கினார். அதில் ‘நிலவரி ஏலம்’, ‘கண்ணன் பெருந்தூது’, ‘ஏணி ஏற்றம்’, ‘முருகன்
ஆரூடம்’ போன்ற சிறுகதைகளையும் ‘தக்ஷிண சரித்திர வீரர்’ போன்ற கட்டுரைகளையும் எழுதினார்.
தான் எழுதியது மட்டுமில்லாமல் அசலாம்பிகை அம்மையார், விசாலாக்ஷி அம்மாள், லக்ஷ்மி அம்மாள்,
வே.தாயாரம்மாள், மா.பாமணி போன்ற எழுத்தாளர்களையும் பி.வி.ஜகதீச ஐயர், வி.சுப்பிரமணிய
ஐயர், ரா.வாசுதேவ சர்மா போன்ற பண்டிதர்களின் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.
‘பொது தர்ம சங்கீத மஞ்சரி’, ‘இந்திய தேசிய கீதங்கள்’ போன்றவை மாதவையரின் கவிதைத் தொகுப்புகளில்
குறிப்பிடத் தகுந்தவை. இராமாயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ‘பால ராமாயணம்’ என்று ஆங்கிலத்தில்
எழுதியுள்ளார். கம்பராமாயணம் மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
மாதவையா
சமூகச் சீர்த்திருத்தங்களை வலியுறுத்தியதாலும், இந்து மதக் கருத்துக்கள் சிலவற்றைச்
சாடி எழுதியிருந்ததாலும், கிறித்தவத் தாக்கம் அவரது படைப்புகளில் தென்பட்டதாலும் அவர்
கிறித்துவச் சார்புடையவர் என்பதாக ஒரு கருத்து அக்காலத்தில் முன் வைக்கப்பட்டது. ஆனால்,
அதை மறுக்கிறார், எழுத்தாளரும், மாதவையாவின் உறவினருமான பெ.நா.அப்புசாமி. “மாதவையா
குசிகர் குட்டிக் கதைகள் முதலியவற்றை எழுதியதாலும், பத்மாவதி சரித்திரத்தின் சில பகுதிகளிலும்,
கிளாரிந்தா என்னும் நாவலிலும், சத்தியானந்தா என்னும் நாவலிலும், கிறிஸ்தவ மதத்தையும்
அம்மதத்தைச் சார்ந்த பெரியார்கள் சிலரையும் புகழ்ந்ததாலும், அவர் தம்முடைய மதத்தின்
மீது பற்றற்றவர் என்றும், அவர் கிறிஸ்தவ மதப் பற்று மிக்கவர் என்றும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இது முற்றும் தவறு” என்கிறார் அவர். உண்மையில் மாதவையா சமரசவாதியாகவே இருந்திருக்கிறார்.
சிலகாலம் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்து அதன் உறுப்பினராக இருந்திருக்கிறார். புத்தரின்
மீது ஈடுபாடு ஏற்பட்டு எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’யை தனித் தமிழில் ‘சித்தார்த்தன்’
ஆக எழுதி வெளியிட்டார். மற்றபடி அவர் தன்னை சமயவாதியாகவோ ஆச்சார சீலராகவோ வெளிப்படுத்திக்
கொள்ளவில்லை. ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கை உடையவராகவே வாழ்த்திருக்கிறார். ‘அமுத
கவி’ என்ற புனைபெயரில் இறைவனை வேண்டி ‘பஞ்சாமிர்தம்’ இதழில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார்
மாதவையா.
‘பத்மாவதி
சரித்திரம்’ நூலின் மூன்றாம் பாகத்தை பஞ்சாமிர்தத்தில் ஆரம்பித்தார். ஆனால், அது முற்றுப்
பெறவில்லை. சென்னைப் பல்கலையின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்த அவர், 1925 அக்டோபர்
22 அன்று, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்; தமிழைக் கட்டாயப் பாடமாக்க
வேண்டும் என்று அக்குழுவில் பேசினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசி அமர்ந்தவர்,
மூளையின் ரத்தநாள வெடிப்பு ஏற்பட்டு அங்கேயே காலமானார். அவர் இறப்பிற்குப் பின் அவர்
எழுதிய ‘மோகினி மாசா’ என்ற நாவலின் இரண்டு அத்தியாயங்கள் ‘பஞ்சாமிர்தம்’ இதழில் வெளியாகின.
அதன் பின் அந்த இதழும் நின்று விட்டது.
*
ச.ம.நடேச
சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், ஆ. மாதவையா என்னும் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான இம்மூவரது
சாதனைகள், இலக்கிய உலகம் என்றும் மறக்காமல் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று.
இந்த
மூவர் பட்டியலில் பாரதியைப் பற்றிக் குறிப்பிடவில்லையே, அவரும் இவர்களுக்குக் கிட்டத்தட்டச்
சம காலத்தில் வாழ்ந்தவர்தானே என்ற ஐயம் பலருக்கும் தோன்றக்கூடும். உண்மைதான். நாவல்
முயற்சிகள், சிறுகதை, கவிதை, கேலிச் சித்திரம், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள்,
நகைச்சுவை என்று பல வகைகளில் பாரதி இவர்களைப் போலவே முன்னோடியாகப் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்
என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பாரதி நம் அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மகா கவி. மகா
படைப்பாளி. அந்த அளவுக்கு அவர் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றைப் பிறிதொரு
சமயம் பார்க்கலாம்.
*


Leave a Reply