Posted on Leave a comment

அறிவியல் கருத்தரங்குகளில் தொன்மங்கள் தொடர்பு | சுதாகர் கஸ்தூரி


நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
அமேசான் பிரைமில் ஃபோரன்ஸிக் ஃபைல்ஸ்
என்ற தொடர் பிரபலமானது. தடவியல் அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு சிக்கலான கேஸ்களுக்கு
எப்படித் தீர்வு கண்டார்கள் என்பதானது கரு. அதில் ஒன்று இப்படிப் போகிறது.
அமெரிக்காவில் ஒரு குழந்தை திடீரென உடல்நிலை
பாதிக்கப்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறது. பரிசோதனைக்கு அதன் ரத்தம் எடுக்கப்பட்டு,
புகழ்பெற்ற தனியார் பரிசோதனைச்சாலை (ஸ்மித்க்ளைம் பீச்சம்)யில் ஆய்வு செய்யப்படுகிறது.
கேஸ் க்ரோமோட்டோகிராஃபி கருவியில் ரத்தத்தில் எத்திலீன் க்ளைக்கால் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது.
இது கார்களின் ரேடியேட்டர்களில் நீர் உறைவதைத் தடுக்கக் கலக்கப்படும். அதே எத்திலீன்
க்ளைக்கால் குழந்தையின் பால்புட்டியில் இருப்பதாக அறிகிறார்கள். தாய், குழந்தையைக்
கொல்ல முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்படுகிறாள். அடுத்தமுறை குழந்தை நோய்வாய்ப்படுகையில்,
எத்திலீன் க்ளைக்காலை முறிக்கும்விதம் எத்தனால் கொடுக்கப்படுகிறது. குழந்தை இறந்துவிடுகிறது.
தாய் இதனூடே சிறைக்காவலனுடன் தொடர்புகொண்டு கர்ப்பம் தரிக்கிறாள்.
இழுத்து மூடிவிடவேண்டிய கேஸ். இரு ஆய்வாளர்கள்,
ஆய்வு அறிக்கையில் ஏதோ தவறு இருப்பதாக மீண்டும் பரிசோதிக்கிறார்கள். அது எத்திலீன்
க்ளைக்கால் அல்ல, ப்ரொப்பியோனிக் ஆஸிட் என அறிகிறார்கள். இது ஒரு அரிய நோயால் உருவாகிறது
என்பதையும், அப்பெண்ணிற்குப் பிறக்கும் அடுத்த மகவிற்கும் அந்த நோய் இருப்பதையும் அறிந்து,
அவள் கொல்லவில்லை எனத் தீர்மானிக்கிறார்கள். அவள் விடுவிக்கப்படுகிறாள்.
அதாவது, தீர்வு முடிவானபின்னும், அறிவியல்,
முயற்சியால் தன்னைத் தோற்பித்துக் கொள்கிறது. தவறு. அறிவியல் படிகள் தோற்கடிக்கப்பட்டு,
புதிய படிகள் தோன்றுகின்றன. இறுதியில் அறிவியலே தோல்வியில் வெல்கிறது.
எதையும் கேள்விக்குரியதாக்கும் அறிவியல்.
அது உறுதியென நிரூபிக்கப்பட்டதெனினும். அவ்வாறு நிரூபிக்கப்படவில்லையெனில், அது மேலும்
கேட்கும். கேள்விகள் தாறுமாறாக, தருக்கமன்றி இருக்கலாம். ஏனெனில், அறிவியல் மூலம் நாம்
அறியவேண்டியது, உண்மை, அதுமட்டுமே. ‘ஒரே ஓர் உண்மை மட்டுமே உண்டு. அதுவே ப்ரம்மம்’
என்பது நம் இந்திய சிந்தை.
இதை எதற்குச் சொல்கிறோம்? ஒரு நிகழ்வு
உண்மையா இல்லையா என்பதைக் கேள்விகள் கேட்பதன் மூலமே அறியமுடியும். இராமன் பாலத்தைக்
கட்டினான் என்பதை உறுதியாக நிரூபணமின்றி நம்புவது கேலிக்குரியதென்றால், அதனை நிரூபணமின்றி
கேலிசெய்து மறுப்பதும் கேவலமானதே. எதையும் கேள்விகேட்டு அறிந்துகொள் எனத் தூண்டும்
உபநிஷத்துகளின் இக்கால உறவினர்கள் நாம். எனவே தொன்மங்களில் கண்டவையும் கேள்வி கேட்கப்படவேண்டும்.
தொன்மம் என்பதற்கு Myth என்று பொருள்
கொண்டால், கேம்ப்ரிட்ஜ் அகராதி இவ்வாறு வரையறுக்கிறது.
An ancient story
or set of stories, especially explaining the early history of a group of people
or about natural events and facts:
ஆக, தொன்மம் என்பது கட்டுக்கதை என்று
மட்டும் அகராதி சொல்லவில்லை. ஒரு கதை, முன்பிருந்த வரலாற்று நிகழ்வை, அல்லது இயற்கை
ச் சம்பவங்கள் அல்லது நிஜங்களைச் சுற்றிப்
புனையப்பட்டதாயிருப்பின் அது தொன்மமாகிறது. கதை, ஒரு கற்பனையாக இருக்கலாம். அதன் அடிப்படை
ஏதோ ஒரு நிகழ்வு. அது காலப்போக்கில் கதையில் மறைந்து நிற்கிறது. அதனைக் கண்டு அறியாமல்,
அதன் கதையோடு மட்டும் தொடர்புபடுத்தி, நிகழ்வே பொய் எனச் சொல்வது தொன்மத்தை அறியாத
கருத்து.
ஒரு நிகழ்வு முதலில் செய்தியாகப் பரவும்.
அது காலப்போக்கில் வதந்தியாக மாறும். வலுவான கற்பனை கூடிவரின், அது, இசை, நாடக, அல்லது
பேச்சுவழக்கில் கதையாக மாறும். அக்கதை, இடம், காலம், சமூக வழக்கில் திரிந்து வேறு வடிவங்களில்
பரிணமிக்கும். இது நல்லதங்காள், பட்டி விக்ரமாதித்தன் கதைக்கும், ராமாயண மகாபாரதக்
கதைகளின் வேறுவேறு வடிவங்களுக்கும் பொருந்தும்.
தான் நம்பும் ஒரு கதையின் போக்கினை, வடிவினை
நம்பும் ஒருவர், அதன் உட்கருவான நிகழ்வைக் கற்பனை என்று நினைப்பதில்லை. அவருக்கு அது
ஒரு தொன்மம் என்பது தெரிகிறது. தொன்மத்தின் அடிப்படையை கேம்ப்ரிட்ஜ் அகராதியில் படிக்காமலேயே
அவருக்குப் புரிகிறது. அந்த அடிப்படை நிகழ்வின் நிஜத்தினை அசைத்துப் பார்க்கும் எந்த
உத்தியையும் அவர் எதிர்க்கவே எத்தனிப்பார். உளவியலில், தான் நம்பும் ஒன்று தவறல்ல என்பதை
எப்பாடுபட்டேனும் உறுதிப்படுத்த, எடுக்கப்படும் முயற்சிகளை ஒரு கவனப்பிழை என்று வரையறுப்பார்கள்.
அந்தத் தொன்மங்கள், ஆதாரங்களற்று, தருக்கரீதியாக நிறுவப்படாதபோது, இம்முயற்சிகள் கேலிக்குரியனவாகத்
தோன்றும்.
அந்த முயற்சிகள் சிலவேளைகளில் அறிவியல்பூர்வமான
படிகளாகப் பரிணமித்து ஆதாரங்களோடு நிரூபித்திருப்பதும் கண்கூடு. இராமர் பாலம் என்பது இந்தியப் பகுத்தறிவாளர்களால்
எள்ளி நகையாடப்பட்ட பிறகு, அது ஒரு பாறைகளின் அமைப்பு என்று செயற்கைக்கோள் படங்களால்
அறிவிக்கப்பட்டபின்னர், நகையாடல்கள் நின்றன.
ஆனால், நிஜமான அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக இருப்பின், அதனை
ஒத்துக்கொண்டு, அதன் மேலான ஆய்வுகளைத் தொடரும் முயற்சிகளை ஆதரித்திருக்கவேண்டும்; குறைந்தபட்சம்,
எதிர்க்காமலாவது இருக்கவேண்டும்.. தமிழகப் பகுத்தறிவாளர்களிடம் கொஞ்சம் அதிகமாத்தான்
எதிர்பார்க்கிறோமோ?
எல்லாத் தொன்மங்களும் அறிவியல், சரித்திரச்
சான்றுகளால் நிரூபிக்கப்பட்டுவிடுவதில்லை. உலகமெங்கும் இத்தேடல்கள் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றன. அது கிரேக்க,

ரோமானிய, எகிப்திய, அல்லது அதற்கு முந்திய ஹிட்டைட்டுகள், ஆசிரியர்கள் காலத்தவையாக
இருப்பினும், நாமறியாத தீவுவாசிகளிடம் நிலவும் கதைகளாக இருப்பினும், தொன்மங்களில் நிகழ்வுத்
தேடல்கள் தொடர்கின்றன. ஏன் இந்தத் தேடல்கள்? அமெரிக்கர் ஒருவர், ஏன் ஆப்பிரிக்க நாட்டில்
இருக்கும் தொன்மம் ஒன்றினை உறுதிப்படுத்த எழ வேண்டும்?
தனது நம்பிக்கை உலகளாவியது
(universal belief) என்று நிரூபிப்பது, ஒட்டுமொத்த மனித சமூகத்தைத் தன்னிடம் துணைக்கழைக்கும்,
பெருவாரியாக்கும் (majority) முயற்சி இது. அதிகம் பேர் நம்பினால், தன் சிந்தை சரியானது
என்று உறுதிப்படுத்தும் உத்தி.
ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கிரேக்க
சமுதாயத்தில் ஓராக்கிள் கோவில் என்று ஒன்றிருந்தது. அதில் குறி சொல்லிய பெண், தரையிலிருந்து
வரும் ஆவியை முகர்ந்து, கிறங்கிய நிலையில் ஏதோ உளறுவாள். அவளருகில் இருப்பவர், அவளது
உளறல் மொழியில் சில விடயங்களைக் கணித்துக் குறி சொல்லுவார். அந்தக் குறிசொல்லிய பெண்
குறித்தான கதைகள் ஏராளம். அது இருக்கட்டும்.
இன்று அக்கோவில் இல்லை. இரு இடிபாடுகளை
வரலாற்று வல்லுநர்கள் ‘இதுதான் அந்த ஓராக்கிள் கோவில்’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இருந்துவிட்டுப் போகட்டும். மண்ணுக்கடியிலிருந்து வந்த அந்தப் போதைப்புகை?
அது ஒரு கனிம ஆவிகளின் கலவை என்றார்கள்
சில அறிஞர்கள். மண்ணுக்கு அடியிலிருந்து வரவேண்டுமென்றால், தரையின் அடியில் ஒரு பிளவு
இருந்து, அதன் வழி, நிலத்தடி வாயுக்கள் கசிந்து வந்திருக்கவேண்டும். செயற்கைக்கோள்கள்
மூலம், இடிபாடுகளின் அடியே நிலத்தடியில் பிளவு இருப்பதை ஜியாலஜிஸ்டுகள் உறுதிப்படுத்தினர்.
கவனியுங்கள். ஒரு தொன்மத்தை நிரூபிக்க, வரலாறு, ஆர்க்கியாலஜி, புவியியல், செயற்கைக்கோள்
வல்லுநர்கள் இந்தப்பாடு படுகிறார்கள்.
இதோடு வேதியியல் நிபுணர்கள் ‘அந்தக் கலவையில்
இருந்திருக்கக்கூடிய வாயுக்கள் அவற்றின் விகிதம் எவ்வாறு இருக்கும்?’ என்று ஆய்கிறார்கள்.
தற்பொழுது ‘அது எத்திலீன், பென்ஸீன், கார்பன் டை ஆக்ஸிடு மற்றும் மீத்தேன் கலவை’ என்று
ஒரு கருத்து நிலவுகிறது. இன்னும் இவை முழுதும் நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் ஆய்வு
தொடர்கிறது. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்ற எள்ளலில் இருந்து இது வேறுபட்டது.
‘தற்பொழுது நிரூபிக்கப்படாத தொன்ம நிகழ்வுகளை,
அவை உண்மையில் நடந்தவை, இருந்தவை என்று உறுதிப்படுத்த, தன் நம்பிக்கையின் அடித்தளத்தை
அசைக்கவரும் விசைகளைத் தடுத்து நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள்’ என்றே உளவியலாளர்கள்
வரையறுக்கிறார்கள். இதன்படி பார்த்தால், ‘இராமன் விமானத்தில் பறந்தானா? அக்காலத்தில்
இராமர் பாலம் இருந்ததா? மகாபாரதத்தில் எப்படி நூறு குழந்தைகள் பிறந்தன? அஸ்திரங்கள்
அக்காலத்தில் இத்தனை வலுவானதாக இருந்தனவா?’ என்ற கேள்விகள் இருவகையில் கேட்கப்படலாம்.
ஒன்று எள்ளி நகையாடும் கோணம், மற்றது இருந்திருக்குமா என்ற அறிவியல் கோணம். எந்த வகையில்
முன்னேறுகிறோம் என்பது நமது சிந்தனையைச் சார்ந்தது.
ஏனெனில் அறிவியல் ஆய்வு என்பது ஒரு கருதுகோளை
உறுதிப்படுத்தும் அல்லது தகர்க்கும் முயற்சிப்படிகளின் விளைவுகளின் தொகுப்பு. அதன்
முடிவு மற்றொரு கருதுகோளாக வரும்போது, ஆய்வு பலவீனப்பட்டுப் போகிறது. கவனிக்க, ஆய்வு
முயற்சிப்படிகளின் விளைவும், கருத்துமே தோற்கின்றன. ஆய்வு அல்ல. வேறொரு ஆய்வு, மற்றொரு
முயற்சிப்படிகளின் கனம் கொண்டு இதனை வெற்றிகரமாக நிரூபிக்கலாம். எனவேதான் அறிவியல்
என்பது எப்போதும் மேற்சென்று கொண்டே, மாறிக்கொண்டே இருக்கும் முயற்சிப் படிகள். ஒரு
வரியில் work in progress.
நியூட்டனின் விதி, குவாண்டம் உலகில் தடைதட்டியது.
ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை குறித்த கருதுகோள் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. என்றேனும்
அதுவும் ஒருநாள் முறியடிக்கப்படலாம். மற்றொன்று பிறந்துவரும். இது அறிவியல்.
நம்பிக்கைகளில் சில தகர்க்கப்படலாம்.
முன்பு தகர்க்கப்பட்ட நம்பிக்கை நிரூபிக்கப்படலாம். அறிவியல் என்றுமே முடிவாகச் சொல்லிவிடாது.
தனது தோல்வியைத் தோல்வி என ஒத்துக்கொண்டு முன்னேறுவது அறிவியல். இரு பெரும் மனச்சாய்வுகளின்
நடுவே காலத்தில் அறிவியல் சிந்தனை அமைதியாக ஓடுகிறது.
கண்மூடித்தனமாக ‘ராமர் பாலத்தை விலங்குகள்
கட்டின’ என்று நம்புவதை விட, ‘இந்தக் கிறுக்கர்கள் உளறுகிறார்கள்’ என்று அதனை ஏளனமாகப்
பேசுவதை விட, சத்தம் போடாமல், அப்படி இருந்திருக்க அறிவியல்பூர்வ வாய்ப்பு உண்டா என்று
கேட்பதும், முயற்சி எடுப்பதும் சிறந்தது. முயற்சிகள் நகையாடப்படினும், அறிவியல் சிந்தனை
இதனையெல்லாம் கவனிக்காது முன்னேறும்.
ஆதாரங்கள்
https://dictionary.cambridge.org/dictionary/english/myth
https://www.smithsonianmag.com/science-nature/ten-ancient-stories-and-geological-events-may-have-inspired-them-180950347/

https://explorable.com/definition-of-research

Leave a Reply