“ஏட்டி, புள்ளைக்கு எப்படி இருக்கு?”
“இன்னும் விட்டுவிட்டுத்தான் காச்ச அடிக்கி. பேதிலபோவான் கிணத்துப்பக்கம்
போவானா.. யெ உயிர எடுக்கணும்னே புறந்திருக்கான்.”
“புள்ளையே காச்சல்ல கிடக்கு, அதப்போய் திட்டிகிட்டு இருக்க.”
“பின்ன என்னத்தே, ஒரு சொல்பேச்சு கேக்கானா பாருங்க.”
“ஏல ராசா, அந்த கிணத்து பக்கம் போவதியாலே, அங்கன அவ நிக்கானு சொல்லிட்டு
கிடைக்காவல்ல எல்லாரும்… பின்னையும் எண்டே இப்படி அழிச்சாட்டியம் பண்ணுதியோ.”
அந்த கிணறு குளத்துக்குள் இருந்தது. குளத்துக்குள் கொஞ்சதூரம் இறங்கி
நடந்துதான் கிணற்றை அடைய முடியும். கிணத்தடி உண்டு. கிணற்றைச் சுற்றி மூன்று அடி
அகலத்துக்கு சிமிண்ட் தரை போட்டிருக்கும். அது குளத்தில் இருந்து இடுப்பளவு உயரம்
இருக்கும். குதித்து எற வேண்டியிருக்கும். அதில் உட்க்கார்ந்து துணி துவைக்க,
அலசும் வேலைகள் நடக்கும்.
கிணற்றின் மேல நாலு பக்கமும் நாலு அடி உயரத்துக்கு கல்தூண் நிற்கும்.
நீச்சல் தெரியாதவர்கள் சேலையைக் கிணற்றுக் கல்தூணில் கட்டிட்டு இன்னொரு முனையை இடுப்பில்
கட்டிக்கொண்டு உள்ளே குதித்து நீந்துவது மாதிரி நடிக்கலாம். நாம் அந்த வகைதான்.
அந்த ஞாயித்துகிழமை நல்ல விடியலாக இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணி
நல்லா குளத்துல ரொம்பி இருந்துச்சு. கிணத்துலயும் முக்கா கிணத்துக்கு தண்ணி.
கிணத்தடில நின்னுகிட்டு குனிஞ்சா கிணத்து தண்ணிய தொடலாம். அந்த அளவு தண்ணி.
நாங்க ஏழாவது படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பொ வழக்கம் போல அன்னிக்கி
குளிக்க போனோம்… இல்ல ஓடினோம். தெருவில புடிச்ச ஓட்டம்… சிட்டாய் பறக்கதுனு
சொல்வாங்களே, அந்த மாதிரி.
வெங்கிட்டு, வெள்ளையா, வெயிலுக்கந்தன், மணி, நான். இதில் வெயிலுக்கந்தன்
மிக வேகமாக ஓடினான். குளத்தில் இறங்கியதும் கொஞ்சம் வேகம் தடைபட்டது. ஆயினும்
இடுப்பளவு நீரில் வேகமாக ஓடினான். ஓடி கிணத்தடி அடைந்து அதில் ஏறினான்.
எறியவன் அப்படியே கிணற்றுச் சுவரைப் பிடித்து ஆவியம் (ஒருவர் குனிந்து
நிற்க அவரின் முதுகில் கை வைத்து அப்டியே தாண்டுவது) தாண்டுவதுபோலத்
தாண்டி,குளத்தில் குதித்தான்.
“ஏ, நான் தான் பர்ஸ்டே.”
சொல்லிக்கொண்டே குதித்தான்.
நாங்கள் அப்போது தான் கிணத்தடி ஏறினோம். கிணற்றில் குதித்து உள்ளே
போனவன்… வந்தான்… அவன் கூடவே… வேறு எதோ ஒன்று… பச்சை கலர் துணி…. இல்லை…
சேலை… இல்லை…
“டேய்ய்ய் … மேலே ஏறுடா.” வெள்ளையா கத்தினான்.
வெயிலுக்கந்தன் மேலே வரும்போதே ஏதோ இடித்துக்கொண்டே வருவதை உணர்ந்தான். ‘அதுக்குள்ள
இந்த பயலுவோ குதிச்சிட்டானுவலா’ என்ற யோசித்தபடியே காலை உதைத்துத் தண்ணீரின்
மேற்பரப்புக்கு வந்து கொண்டிருந்தான் .
அவன் உதைக்க உதைக்க காலை எதோ இடித்துக்கொண்டே இருந்தது. வெள்ளையாவாதான்
இருக்கும். அவன்தான் இந்தச் சேட்டை பன்னுவான் என்று நினைத்தபடியே மேல வந்தவன்,
தன்னை இடித்துக்கொண்டிருந்தவனைத் திட்ட திரும்பியவன் அதிர்ந்தான்.
இதற்குள் நாங்கள் எல்லோரும் கத்த
ஆரம்பித்தோம்.
“மேல வாலே…மேல ஏறுல.”
இப்போது முகம் நன்றாகத் தெரிய ஆரம்பித்து இருந்தது.
பச்சைக்கலர் சேலை கட்டிய பெண் பிணம்.
அதுவரை கீழே இருந்தது, இவன் குதித்ததும் கால் பட்டு மிதக்க
ஆரம்பித்திருந்தது. இப்போதுதான் அவன் நன்றாகப் பார்த்தான்.
“எ… ம்… மே …”
அலறிக்கொண்டே நீந்தினான். நல்லவேலையாக அந்தப் பதற்றத்தில் இன்னும் வேகமாக
கிணற்றுச் சுவர் நோக்கி நீந்தினான். கிணற்றின் சுவர் அருகில் வரவும் அவன் கையைப்
பிடித்துத் தூக்கி வெளியே இழுத்தோம்.
இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருப்போம் என முடிவெடுத்தாலும் ,வெயிலு
கத்திக்கொண்டே சென்றான்.
“எ… ம்…மே, பொ…ண…ம்… கிணத்துல பொணம்.” அழுதுகொண்டே ஓடினான்.
“ஏல… என்ன சொல்லுதே.”
“எங்க ல?”
“யாருல?”
அவன் ஓடும் வழி எங்கும் கேட்பவர்களுக்குப் பதிலே சொல்லவில்லை.வீட்டை நோக்கி
ஓடிக்கொண்டே இருந்தான். நாங்கள் அதிர்ச்சியில் பிரம்மை பிடித்ததுபோல் சென்று
கொண்டிருந்தோம். யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லவா வேண்டாமா, சொன்னால் நல்லதா,
சும்மானாச்சுக்கும் அழுது நடித்துவிடலாமா என்றெல்லாம் மனசுக்குள் குழம்பிக்கொண்டோம்.
மென்று முழுங்கி, “அந்த கிணத்துல பொணம் மிதக்கு” என்று சொன்னோம். கிட்டத்தட்ட
அழத் தயாராக இருந்தோம்.
“எப்ப பாரு குளம் கிணறுனு. ஒழுங்கா வீட்டுல இருக்குதுங்களா பாரு.” யார்
யாரோ திட்டினார்கள். வீட்டுக்குள் வந்து பதுங்கினோம்.
“டே, உங்கள தான் போலீசு தேடுதாம், சாட்சி சொல்ல ஆள் வேணுமாம்” என்றார்
போஸ்ட் ஆபீஸ் பெரியப்பா. இன்னும் பயந்தோம். பீதியில் கிடந்தோம்.
கந்தனுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்திருந்தது. அவன் அப்பா ஒரு அப்பிராணி
என்பார்கள். எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். அதிர்ந்து பேச மாட்டார். “அவருக்கு
இப்படி ஒரு புள்ளை.”
“புள்ளெழுவலா இதுங்க, எல்லாம் வினைங்க.”
“சரி. எப்படியும் யாராவது போய் குளிக்கையில அது வந்து தானே ஆவணும். இவனுவ
குளிக்கையில் வந்திட்டு, ஆனா தைரியசாலி புள்ளெழுவதான்.”
“அதானே பாரேன், தைரியமா நடந்து வந்திட்டானுவளே, இவனுவளும் முங்கிராம. அதுவே
பெரிய விஷயம்லா.”
“அது இவனுவள அடிக்காம இருந்துச்சே.”
ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.
“என்னமோ நாங்க கொன்னு கிணத்துல போட்ட மாதிரி பேசுறீங்க.”
கோபம், அழுகை, ஆற்றாமை எல்லாம் ஒன்று சேர வெங்கிட்டு சொன்னான். “அது யார்னே
எங்களுக்கு தெரியாது.” அவனுக்காவது பேச்சு வந்தது. எங்களுக்கெல்லாம் மூசசு
மட்டும்தான் வந்து கொண்டிருந்தது.
“ஓ, சார்வாளுக்கு அந்த ஆசை வேறயா.” காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே
சொன்னார் ஆறுமுக சித்தப்பா. “எவனும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. மூணு
நாளைக்கு எவனையும் ஒண்ணா பாக்க கூடாது.போங்கல” என விரட்டினர்.
கிணத்தடிப்பக்கம் கூட்டம் அலை மோதியதாக எதிர் வீடு அத்தை சொன்னார்கள்.
“யாராம் டி” – காந்தி பெரியம்மா கேட்டாள்.
பெரியம்மா ரொம்ப குண்டாக இருப்பாள். பிந்துகோஷ் மாதிரி. ஆனால் உட்கார்ந்த
இடத்தில இருந்தே எல்லா செய்தியையையும் சேகரித்து விடுவாள். எங்க தெரு ஆல் இந்திய
ரேடியோ.
“தெரியல மயினி”என்று இழுத்தபடியே சொல்ல, “ஏத்தாடி, இந்த அநியாயம் எங்கும்
உண்டுமா” என்று புலம்பியபடியே வந்து சேர்ந்தாள் பார்வதி ஆச்சி. “சே, பச்சைபுள்ளகாரித்தா,
ரெண்டு நாளா காணோமாம்தா. ரெண்டு நாளும் தேடாமலா இருப்பாவோ.”
“சீ, என்ன அநியாயம்.” – எதுத்த விட்டு அத்தை.
“சித்தி, என்ன சொல்லுத, யாரு?” – பெரியம்மா.
“தெற்கு தெருதான், எட்டையபுரத்து சங்கரன் இருக்காருல்லா, அவர்
மருமவதானாம்தா.”- ஆச்சி.
“எது, அந்த கலரா ஒரு புள்ளை இருக்குமே அதுவா?” – பெரியம்மா.
“ஆமாட்டி, அது பேரு சாலா-ட்டி.”- விசாலாட்சிதான் சாலாவாகச் சுருங்கிப்
போனாள்.
“அய்யயோ, யேன் இப்புடி பண்ணுச்சாம்.”
“என்னனு ஒன்னும் தெளிவா தெரியல. சண்டையும் கூட்டமுமா இருந்துருக்கு போல.
பாதவத்தி, இந்த முடிவெடுத்துட்டா. அந்த கைபுள்ளை அழுதமேனிக்கு இருக்குத்தா… சீ..
இப்படியும் உண்டுமா” என்ற பார்வதி ஆச்சி கொஞ்சம் நேர மெளனத்துக்குபி பின் சொன்னாள்.
“பாதவத்தி. என்ன கஷ்டமும் இருக்கட்டுமே. பச்சைப்புள்ளை மொவத்துக்காக வாழ வேண்டாமா.”
சொல்லும்போதே அழுகை வந்தது ஆச்சிக்கு. “எங்க ஆத்தாலாம் என்ன கஷ்டபட்டு என்னைய
வளர்த்தா தெரியுமா, மூதி, இப்படி பண்ணிட்டு பேயிருக்கா.” லேசா அழுது முந்தானையில்
துடைத்துக்கொண்டாள். “இதுல வவுத்தெரிச்சல் என்ன தெரியுமா, இரட்டைவட சங்கிலி
தொலஞ்சுற கூடாதுனு ரவிக்கையோட சேத்து ஊக்கு மாட்டிட்டு விளுந்துருக்காத்தா. அந்த
சங்கிலி ரவிக்கையோட ஒட்டி கிடக்கு.”
“ஏம்தா, அவளா குதிச்சாளா, இல்லை அடிச்சு தூக்கி போட்டுட்டானுவலா? ”-
பெரியம்மா விசாரணையைத் துவங்கினாள்.
“அப்பிடியும் இருக்குமோ, யார் கண்டா?”
நான் சாலாக்காவை ரெண்டொருதரம் பார்த்திருக்கிறேன். இடுப்பில் குழந்தையைத்
தூக்கி வைத்துக்கொண்டு சோறூட்டும். அழகாக இருக்கும். சிரித்த முகம்.
தெற்கு தெரு ஆட்களே சேர்ந்து தூக்கி தெருவில் கொண்டு வந்து போட்டார்களாம். இரவு
ஒரு எட்டுமணிக்கு நான் சென்று தெற்குத் தெருவை லேசாக எட்டிப் பார்த்தேன். தெருமுனையிலேயே
போட்டிருந்தார்கள். சாலாக்காவின் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது.ரெண்டு
போலீசுகாரர்கள் இரும்பு சேரில் உக்காந்திருந்தார்கள். குளிருக்கு மப்ளர் கட்டி
இருந்தார்கள். கையில் டார்ச் வைத்திருந்தார்கள். ‘எங்கே கூப்பிட்டு விசாரிப்பார்களோ’
என்ற பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.
யாரிடம் என்ன விசாரித்தார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் யாரிடமும் எதுவும்
விசாரிக்கவில்லை.
“நம்மளா போய் சொன்னா என்னல, என்ன என்ன பாத்தோம்னு, கோர்ட்டலாம் பாக்கலாம். ஜம்ம்னு
போலீஸ் ஜீப்ல போலாம்” என்றான் கட்டமுத்து.
“வா, போலாம்” என வெள்ளையா இழுத்தான்.
“ஏய் போப்பா, நான் ச்சும்மால சொன்னேன்.”
கட்டமுத்து காமெடி என்ற பெயரில் இப்படித்தான் எதாவது பேசுவான்.
“அவம் துட்டுள்ள பார்ட்டில்லாடே. இளக்க
வேண்டியதை இளக்கி எல்லாத்தையும் சரி பண்ணிருவாம் பாரு” எனப் பொதுவாகப்
பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் எல்லாம் முடிந்தது. இரண்டாவது நாள் நாங்கள் மெல்ல ஒன்று கூடினோம். கந்தனுக்கு
விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டு இருந்தது. ‘இரவில் உளருதாம்’ என்று
சொன்னார்கள். முதலில் இரண்டு நாட்களுக்கு எங்களை கந்தனைப் பார்க்க விடவில்லை.
‘எல்லாம் உங்களாலதாம்ல; என்று திட்டினார்கள் அவன் அம்மா. அவன் அப்பவும்
அமைதியாக வெறிச்சமேனிக்கு இருந்தார். எங்களுக்கும் கந்தனை நினைத்துப் பயம் வந்தது.
“நேத்து நைட் 12 மணிக்கு ஜல்ஜல்னு சத்தம் கேட்டுச்சுல.” – குமாரு சொன்னான்.
“நான் லேசா ஜன்னல் கதவை திறந்து பாக்கலாம்னு நினைச்சேன். பயமா இருந்துச்சு.”
ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். சாலா கிணற்றடியில் உட்கார்ந்து அழுது
கொண்டிருந்தாள்… வா வா எனக் கூப்பிட்டாள்… நேற்று குளத்தங்கரை முனையில்
நின்றிருந்தாள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
*
அந்தக் கிணற்றடிக்குத்தான் ராசா போய்ட்டு வந்திருக்கானாம்.
“பேயா இருந்தாலும் கும்பிடுத்தவங்கள ஒண்ணும் செய்யாது, நாம சாலாக்காவ
கும்பிட்டுருவோமா” என்றேன்.
“எப்படி கும்பிடுதது.”- கட்ட முத்து.
“பூசைக்கு வீட்டுல வாங்குவோம்ல, அத எல்லாம் வாங்கிடுவோம்” என்றான் மணி.
பதினாறாம்நாள் கழிந்த சனிக்கிழமை யாரும் வராத பதினோரு மணிக்கு, பகல்தான், போக
பயம். ஒருவேளை சாலாக்கா வந்துட்டாள்னா?
வெற்றிலை பாக்கு, பழம், சூடம், பத்தி, பூ, பொரிகடலை வாங்கி குளத்தங்கரை
போனோம். கீழே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்தோம். பத்தி கொளுத்திக் காட்டினோம். கீழே
பார்த்துக்கொண்டே, கிணற்றைப் பார்க்க தீபாதரனை காட்டினோம். கிணற்றைப் பார்க்க
பயம்.
“கடைசியாக ஒருதடவை கிணத்த பார்த்துருவோமா.”- கட்டையன்.
“சும்மாருல, அப்படியே குனிஞ்ச தலை நிமிராம போயிருவோம்” எனக் கத்தினேன்.
“யக்கா, கந்தன ஒன்னும் பன்னிரதக்கா… அவன் ரொம்ப நல்லவன். வேனும்னு ஒன்ன
மிதிக்கல.” கிட்டத்தட்ட அழும் குரலில் சொன்னான் மணி.
“யாரையுமே ஒன்னும் பன்னிராதக்கா.” இது கட்டமுத்து.
ஒருமாதம் ஆகியும் பயம் போகவில்லை. யாரும் கிணத்துக்குப் போகவில்லை. தண்ணி
எடுக்கவும் வழியில்லை. ஊர் கொஞ்சம் திணறியது. இறுதியில் ஒரு பூசாரி வைத்துப் பூஜை செய்வது,
எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்வது என்று முடிவானது.
பூசாரி வந்தார், உடுக்கை வேப்பிலை சகிதம். நெற்றி மற்றும் உடல் முழுவதும்
திருநீறு. உடுக்கை அடித்தபடியே காளி பாடல்களை உக்கிரமாய்ப் பாட ஆரம்பித்தார். ஒரு
பெண்ணுக்கு உடுக்கைச் சத்தத்தில் சாமி வந்தது. இல்லை சாலாக்கா வந்தாள்!
“யாரிட்டி ஆடுதா?” கண்ணை இடுக்கிக்கொண்டு பார்வதி ஆச்சி கேட்டாள்.
“தெற்கு தெரு ராணி தாம்.”
என்னென்னவோ மந்திரங்களை உச்சரித்தபடி பூசாரி, “ஏன் இப்படி பண்ணினே, சொல்லு.”
சாலாக்கா அமைதியாக இருந்தாள்.
“சொல்லு, ஏன் இப்படி பண்ணினே.”
“சொல்ல மாட்டேன். சொல்ல மாட்டேன்.”
“சரி, இனிமே இந்த
பக்கம் நீ வரக்கூடாது. ஹே…ஹே…ய்… சொல்லு. வர மாட்டேன்னு சொல்லு.” திருநீறை
வாரி முகத்தில் அடித்தார்.
“ஊருக்கு குடிக்க தண்ணி வேணும்தா, நீ போய்ரு …” யாரோ ஒருவர் கத்தினார்.
சாலாக்கா காறித் துப்பினாள். “த்த்த்தூஊ… ஒரு பொம்பள புள்ளை… ஹ..ஹ ..ஹ..”
மூச்சு வாங்கியபடி சொன்னாள். “அழுது அரட்டுறப்போ….. ஹ..ஹ ..ஹ…. காப்பாத்த
துப்பில்லை… ஹ.. ஹ.. ஹ.. தண்ணி வேணுமாடா… தண்ணி.”
“யாத்தீய்ய்ய், எம் மருமவள வுட்டுருத்தா… உனக்கு என்ன வேணுமோ கேளுத்தா.”-
ராணியின் மாமியார்க் கிழவி சொன்னாள்.
“உவ்வ்வ்வ்வ்வ்…. இன்னொரு சாலா… ஹ..ஹ.. ஹ.. இந்த ஊருல.. ஹ..ஹ..ஹ இருக்கக்
கூடாது…”
“சரி..த்..தா..” மருமகள் காலில் விழுந்து மாமியார்க் கிழவி கும்பிட்டாள்.
*
இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. பம்பாயிலிருந்து
நேற்று ஊருக்கு வந்த மலர் அத்தை ராணியிடம் கேட்டார்கள்.
“எப்படிட்டீ இருக்க?”
“நல்லாருக்கேன்த்தே.”
“மவளா, பேரு என்ன ராசாத்திக்கு?”
“சாலா.”
“யேம்ட்டி , அவ பேர வச்சுருக்க?”
“அவளாலதாம்த்தே நிம்மதியா வாழ்தேன், அடி உதை இல்லாம.”
குழந்தை அழகாகச் சிரித்தது, சாலாக்கா கன்னத்தில் இருக்கும் மரு மாதிரியே
ஒரு அழகிய மருவுடன்.