Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 18 | அவசர நிலை | – சுப்பு


இந்திரா காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு
1971 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது
திமுக. இருந்தாலும் இந்த நல்லுறவு நெடுநாள் நீடிக்கவில்லை. அன்றையத் தமிழக முதல்வர்
மு.கருணாநிதியும் பாரதப் பிரதமர் இந்திராவும் மாலைகளை அணிந்தபடி அருகருகே இருப்பது
போன்ற சுவரொட்டிகளை வெளியிட்டது திமுக.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்து கடும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டது. இந்தக் கசப்பு இரண்டு பக்கமும் பரவிக்கொண்டிருந்த வேளையில் தமிழின்
முன்னணி வார இதழுக்குப் பேட்டியளித்தார் திமுக.ச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர். அவர்
சொன்னது “கலைஞர் விரும்பினால் இந்திரா என்ன, 16 வயது சந்திரா கூட…” என்று.

இதுபோன்ற திமுகவின் பழக்கமான ஆபாசத் தாக்குதல்கள் ஒருபக்கம்
இருந்தாலும், இதுமட்டுமல்ல இந்திய அரசியல் குறித்த திமுகவின் பார்வையில் ஒரு மாற்றமும்
தென்படத் துவங்கியிருந்தது. எழுபதுகளின் முற்பகுதியில் இந்திராவின் காங்கிரசுக்கு எதிராக
பீகாரிலும் குஜராத்திலும் உருவாகி வந்த எழுச்சிக்கு ஆதரவான குரல்கள் திமுக தரப்பிலும்
கேட்கத் தொடங்கின. இதன் நீட்சியாகத்தான் அமைந்தது திமுகவின் ‘அவசரநிலை எதிர்ப்பு’ என்கிற
நிலைப்பாடு.

இந்தச் சூழலில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயி
சென்னைக்கு வந்தார். குமுதம் வார இதழ் அட்டைப் படத்தில் அவரை வெளியிட்டுப் பிரபலப்படுத்தியது.
அதன் உள்ளே இருந்த பேட்டியில் “திமுகவினர் நாடாளுமன்றத்தில் மொழிப் பிரச்சினை பற்றி
மட்டும்தான் பேசுவார்கள். பொருளாதாரம் போன்ற முக்கியமான விஷயங்களில் அவர்களுடைய குரல்
ஒலிக்காது” என்று குறிப்பிட்டிருந்தார். குமுதம் இதழ் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமையில்
தமிழகத்தின் அரசியல் பரப்பு முழுவதும் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அன்று மாலை சென்னையில் கோட்டூர்புரத்தில் குடிசைமாற்று வாரிய
வீடுகள் திறப்பு விழா நடந்தது. விழாவில் பேசிய திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
முரசொலி மாறன் ‘பொருளாதாரம் குறித்துத் தான் வாஜ்பாயி உடன் விவாதிக்கத் தயார்’ என்று
சவால் விடுத்தார்.
ஆனால் கருணாநிதி ‘பூர்ஷ்வாக்களோடு விவாதம் செய்யக்கூடாது’
என்று சொல்லி அவரை அடக்கிவிட்டார்.

*

பங்காளதேசத்துப் போரின்போது இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த ஒரு
கோடி அகதிகளுக்கு உணவளித்ததின் காரணமாக இந்திய நாட்டின் தானியக் கையிருப்பு வெகுமளவில்
குறைந்துவிட்டிருந்தது. தவிர, நாட்டின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
விலைவாசி உயர்வின் காரணமாகத் தன்னெழுச்சியாக வெகுஜனப் போராட்டங்களும் நடைபெற்றன. மே
1974ல் நடந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் பிரச்சினைகளைக் கூர்மையாக்கியது.
குஜராத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்டப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுத்துச்
செல்லப்பட்டது. வெகுஜன எழுச்சியை எதிர்கொள்ள இயலாமல் மாநில அரசு ராஜினாமா செய்தது;
குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்தது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது மொரார்ஜி
தேசாயின் உண்ணாவிரதப் போராட்டம்.

குஜராத் எழுச்சியைத் தொடர்ந்து பிகாரிலும் மாணவர்கள் களத்தில்
குதித்தனர் (மார்ச் 1974). மாணவர்களுடைய போராட்டத்தை லத்தியாலும் துப்பாக்கியாலும்
ஒடுக்கிவிடலாம் என்று நினைத்த காங்கிரஸ் அரசின் முயற்சி பலிக்கவில்லை. ஜெ.பி. என்றழைக்கப்பட்ட
ஜெயபிரகாஷ் நாராயண் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து அதற்கு முழுப் புரட்சி
என்கிற வடிவமும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்தது.
லஞ்ச ஊழலாலும் விலைவாசி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட மக்களின்
போராட்டம் இயல்பானது. ஆனால் இதை அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தது இந்திராவின்
எதேச்சிகார எண்ணம். பிகாரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 மாணவர்கள்
உயிரிழந்தனர் (18-03-1974). சமஸ்திபூரில் நடந்த குண்டு வெடிப்பில் மத்திய ரயில்வே அமைச்சர்
உயிரிழந்தார். இந்தப் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் இந்திரா.

விலைவாசி உயர்வுக்கும் லஞ்ச ஊழலுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி
செய்த வேளையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் இந்திராவின் ஜால்ராவாக செயல்பட்டது
என்பது சரித்திரத்தின் கரும்புள்ளிகளில் ஒன்று.
இந்திரா எதிர்ப்பும் காங்கிரஸ் எதிர்ப்பும் நாடு முழுவதும்
திரண்டு வந்துகொண்டிருந்த வேளையில் அலகாபாத் நகரிலிருந்து வந்த ஒரு செய்தி வெடிமருந்தில்
வெப்பம் கலந்ததுபோல் ஆயிற்று. ஜனநாயக மாதா அலகாபாத் நகரில் 1975 ஜூன் 12ஆம் தேதி தனக்குத்
தானே ஒரு மாலை சூட்டிக்கொண்டாள். அந்த ஜனநாயகத்தின் வெற்றியைக் கொண்டாடித்தான் வெடிமருந்தில்
வெப்பம் சேர்ந்தது.

“இந்திரா காந்தி தேர்தலில் ஊழல் செய்தார். எனவே ஆறு ஆண்டுகளுக்குத்
தேர்தலில் நிற்க அவருக்குத் தகுதியில்லை” என்கிற தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி
ஜக்மோகன்லால் சின்ஹாவால் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்திற்குச்
சென்றார். விடுமுறைக் கால நீதிபதியாகப் பணியாற்றிய நீதியரசர் கிருஷ்ண ஐயர் பிறப்பித்த
உத்தரவில் இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியாது என்றும் ஆனால் அவர் பிரதம
மந்திரியாகச் செயல்படலாம் என்றும் தெளிவுப்படுத்தினார்.
இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திரா அவசரநிலையைப்
பிரகடனப்படுத்தினார் (25-06-1975).

*

இந்திரா அவசர நிலையை அறிவித்தபோது நான் கோவாவிலிருந்து சென்னைக்கு
வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்ததும் விட்டுப் போன செய்தித்தாள்களை எல்லாம் தேடிப்
பிடித்துப் படித்தேன். இந்தியாவெங்கும் பத்திரிக்கைத் தணிக்கை அமலில் இருந்தாலும் கருணாநிதி
கொடுத்த தைரியத்தில் தமிழகத்துப் பத்திரிக்கைகள் தாக்குப் பிடித்தன. அவசர நிலையைக்
கண்டித்து திரு. காமராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்காரர்களால் பிரசுரிக்கப்பட்டு
விநியோகிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்காரர்கள் லோச் சங்கர்ஸ் ஸமிதி (திரு.ஜெ.பி.யின் ஸ்தாபனம்)
என்ற பெயரில் தங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். தவிர ரகசியப் பிரசுரங்களையும்
அவ்வப்போது வெளியிட்டார்கள். பெரும்பாலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலிஸின் பிடியில் சிக்காமல்
தப்பிவிட்டதாக, இவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தப் பிரசுரங்களை நானும் நண்பர்களும்
பஸ் ஸ்டாண்டிலும் பொது இடங்களிலும் விநியோகித்தோம்.
அவசரநிலையை எதிர்த்து ஆர்எஸ்எஸ்காரர்கள் சத்தியாகிரகம் செய்தார்கள்.
வடபழனியில் நடந்த சத்தியாகிரகத்திற்கு நான் போயிருந்தேன். அன்று போலிஸ் ஸ்டேஷன் வாசலில்
நின்றுகொண்டு ‘அவசரநிலை ஒழிக’ என்று கோஷம் போட்டோம். பக்கத்தில் நடந்து கொண்டிருந்த
பொதுக்கூட்ட மேடையில் ஏறி மைக்கில் கோஷம் போட்டோம். ஆனால் அன்று யாரும் கைது செய்யப்படவில்லை.
இண்டு இடுக்கெல்லாம் இந்திராவின் பாஸிசம் பரவியிருந்த காலத்தில்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளைக்குச்
சொந்தமான நிதி ஒரு வங்கிக் கணக்கில் இருந்தது. அந்தக் கணக்கை முடக்கவேண்டும் என்று
ஒரு சனிக்கிழமை அன்று ஆளுநர் உத்தரவிட்டார்.
கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளேயே சங்கத்துக்காரர்களுக்குத்
தகவல் தெரிந்துவிட்டது. என்னதான் அவசரநிலை, அடக்குமுறை என்றாலும் அரசு இயந்திரம் அசைவதற்குக்
கொஞ்சம் நேரமாகும் என்று தெரிந்தது. இரண்டு நாள் இடைவெளி கிடைத்தது.

அதற்குள் பணத்தை எடுக்க முடியாதபடி ஒரு சிக்கல். அந்த வங்கிக்
கணக்கு இரண்டுபேர் கையெழுத்திட வேண்டிய ஜாயின்ட் அக்கவுண்ட். ஒருவர் சென்னை மத்தியச்
சிறையில் மிசா கைதியாக இருந்த ரெங்கசாமி தேவர். இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக்
கிளைக்குத் தலைவர். இன்னொருவர் கே.சூரிய நாராயணராவ் என்கிற முழுநேர ஊழியர். சூரிய நாராயணராவ்
தேடப்படும் நிலையில் தலைமறைவாக இருந்தார். இவர் கையெழுத்திட்ட காசோலையில் ரெங்கசாமி
தேவர் கையெழுத்திட வேண்டும். காசோலையை வங்கியில் சேர்ப்பித்து வல்லிசாகப் பணத்தை எடுத்துவிட
வேண்டும் என்பது செயல்திட்டம்.

சிறையிலிருக்கும் கைதியிடம் காசோலையைக் கொண்டுசெல்வது எப்படி?
கையெழுத்திட்ட காசோலையை வங்கிக்குக் கடத்தி வருவது எப்படி? இருப்பதோ இரண்டுநாட்கள்.

இந்தச் சிக்கலோடு என்னைத் தேடி வந்தார் பிரசாரக் ரவி. நான்
நொச்சிக்குப்பத்தில் இருந்தேன். நான் செயல்பட்டேன்.
செவ்வாய்க்கிழமை காலை அரசு அதிகாரிகள் வங்கிக்கு வந்தபோது
காசு, காக்கா ஊஷ் ஆகிவிட்டிருந்தது.

தொடரும்…Leave a Reply