Posted on Leave a comment

கனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட்டுச் செல்லாதீர்கள் | அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: மைத்ரேயன்

கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் ‘அஸதோ மா சத்கமய’ என்ற பாடல் பாடப்படுவதை, மதச்சார்பின்மை என்ற பெயரில்
எதிர்க்கிறார்கள். இது, மதமாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மதத்தினர், பல தெய்வங்களை
ஏற்றுக்கொள்ளும் பாரத அறிவுப் பாரம்பரியத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பேயன்றி வேறில்லை.


ஜே.பி.எஸ். ஹால்டேன் (1892-1964) ஒரு பல்துறை வல்லுநர். உயிரியலாளர்களில்
மிகச் சிறந்தவர். இன்று புது டார்வினியம் என்று அறியப்படும் மெண்டலிய மரபியலையும் டார்வினியத்தின்
பரிணாமக் கோட்பாட்டையும் இணைத்த சிந்தனை வழியை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்.

அவர் ஒரு கட்டத்தில் மார்க்சியராகவும் இருந்தவர். நொந்துபோய்தான்
மார்க்சியத்திலிருந்து வெளி வந்தார். அறிவியல் ரீதியாகப் பொய்யான புது லாமார்க்கியத்தை
சோவியத் குழுமம் மிக முனைந்து பரப்ப முற்பட்டதும், முரண் சமயக் கோட்பாடுகளை ஒடுக்குவதற்கான
குற்ற விசாரணை முறைகளையொத்த மார்க்சிய விசாரணை முறைகளை மரபியலாளர்கள் மீது ஸ்டாலின்
அவிழ்த்து விட்டதும், ஹால்டேனை அதிர்ச்சியடையச் செய்து மார்க்சியத்திலிருந்து அவரை
வெளியேறச் செய்தது.
அவர் இந்தியாவிற்கு வந்து, பண்டைய பாரத தரிசனங்கள் மீது தனக்கிருந்த
ஆர்வத்தை வெளிப்படுத்தலானார். அதே சமயம் இந்தியர்கள் அடைந்திருந்த பெரும் சரிவைப் பற்றி,
குறிப்பிட்டுச் சொன்னால், விமர்சன வழி சிந்தனை முறைகளில் அவர்கள் அடைந்திருந்த தாழ்ச்சி
பற்றிய தன் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் எழுதிய
கட்டுரை ஒன்றில் ஹால்டேன் இப்படி எழுதினார்:

“இந்து சமயம் அறிவியல்
நோக்கை முன்வைக்கிறது; இது அறிவியலை அணுகுவதில் இந்தியர்களுக்குப் பெரும் வலுவைக் கொடுக்கிறது.
காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்வது, நமக்கு பூமி, காற்று, ஆகாயம் ஆகியன பெரும் சிறப்புள்ளன
என்பதையும், அவற்றைப் பற்றி நம் முழுச் சக்திக்கு எட்டியவரை சிந்திப்பது நம் கடமை என்பதையும்
நினைவூட்டுகிறது. இம்மந்திரத்தை உச்சாடனம் செய்வோரில் நூறில் ஒருவர் இதைச் செய்தாலுமே
அறிவியலில் இந்தியா உலகத் தலைமைக்குச் செல்லும்.”

Science And The Enquiring Mind, த ஹிந்துஸ்தான் டைம்ஸ், மே 18, 1956.

அவர் இந்தக் கூற்றை உரைத்த சுமார் எழுபது ஆண்டுகளுக்குப்
பிறகு, உபநிஷத்துகளில் இருந்து எடுக்கப்பட்ட, மானுடத்தை இருளிலிருந்து வெளிச்சத்துக்கும்
பொய்மையிலிருந்து நிஜத்துக்கும் நகர உந்தும் சிறப்பான ஸ்லோகமானது மதச்சார்பின்மையைக்
குலைக்கிறதா என்று ஆராய இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு சிறப்பு அமர்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இதை அறிந்தால் ஹால்டேனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
வழக்கைத் தொடுத்தவர், மேற்படி ஸ்லோகத்தை, குறுகிய குழுவாதம், வறட்டு வாதம் மற்றும்
மதப் பிரார்த்தனை என்று வாதிடுகிறார்.

இதிலுள்ள சிக்கல், இந்து தர்மத்தின் எல்லாவற்றையும் உள்ளடக்கிய
ஆழ்ந்த தன்மையும், நாட்டில் அதிவேகமாகப் பெருகிவரும் பண்பாட்டு அறிவின்மையும்தான்.

இந்து தர்மமானது, மதமாற்றம் செய்யும் மற்ற மதங்கள் போன்றதல்ல;
அது பலவிதமான மதம் மற்றும் தத்துவ இழைகளோடு இணக்கமான, பிரபஞ்சத்தைப் பார்க்கும் ஒரு
நோக்கு என்று ஹால்டேனே கூறியிருக்கிறார். இருளிலிருந்து ஒளிக்கும், பொய்மையிலிருந்து
உண்மைக்கும் பயணிக்குமாறு கூறும் ஸ்லோகம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று நாம் சொல்லத்
தலைப்பட்டால், நாளை பரிணாமக் கொள்கையைக் கூட மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று வாதிடும்
நிலைக்கு நாம் வந்துவிடுவோம். ஆராய்ந்து பார்த்தால் அந்த ஸ்லோகம், இஸ்லாமிய-கிறித்துவ
அடிப்படை நம்பிக்கையான ‘அனைத்தையும் படைத்தது ஒரு சிருஷ்டி கர்த்தர்’ என்பதை மறுக்கிறது.
மாறாக, வேதாந்த அடிப்படை கொண்டதும், மேற்கத்திய தத்துவ மரபில் ஸ்பினோசாவால் முன்வைக்கப்பட்டதுமான
ஆளுமை அற்ற நிர்க்குண இறையைத்தானே முன்வைக்கிறது?

ஏற்கெனவே மதச் சொற்களான கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப்
பின் என்பனவற்றுக்குப் பதிலாக, உலகெங்கும் தற்போது பயன்படும் மதச்சார்பற்றச் சொற்களான
, ‘பொது ஆண்டுக்கு முன்’, ‘பொது ஆண்டு’ ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையை தமிழ்நாட்டில்
அரசியல் கட்சிகள் தடுத்து நிறுத்தின. காரணம்—கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளுங்கள்—அவை மதச்சார்பின்மைக்கு
எதிரானவையாம்.

தொலைநோக்குக் கொண்டவரான சீதாராம் கோயல், இந்த வகை ‘மதச்சார்பின்மை’
இந்தியாவின் வக்கிரமான அரசியல் பயன்பாடு என்று முன்பே சொல்லி இருந்தார். இன்று இத்தகைய
மதச்சார்பின்மை என்பது, இந்து தர்மம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பல இறைமைக் கோட்பாடுகளுக்கும்
பன்முக அறிவுப் பாரம்பரியங்களுக்கும் எதிராக, மதமாற்ற முனைப்புக் கொண்ட மதங்கள் காட்டும்
மூர்க்கமான வெறுப்பே அன்றி வேறில்லை.

அறிவுத் திரட்டிலும், ஆன்மிகத் தேடலிலும் இப்படிப்பட்ட பல
வகையான, பல நோக்குகள் கொண்ட பாரம்பரியங்களுக்குப் புகலிடமாக இருப்பதோடு அவற்றைக் காத்துப்
பேணுவதால்தான் ஒரு தேசமாகவும், நாகரிகமாகவும் பாரதம் உயிர்த்து நிற்கிறது—இதைத்தான்
பலவகையான தத்துவ மரபுகளுக்கும், ஆன்மிகப் பார்வைகளுக்கும் ஒத்திசையக் கூடியது என்று
ஹால்டேன் கூறினார். நவீன இந்தியாவுக்குக் கால்கோளிட்டவர்களிடம் பல குறைகள் இருந்தாலும்
இந்து தேசத்தின்பால் ஆற்ற வேண்டிய இந்தக் கடமை இந்திய தேச-அரசுக்கு இருப்பது உள்ளுணர்வில்
தெரிந்திருக்கிறது. இந்தியக் கடற்படை ஒரு வேத ஸ்லோகத்தையும், இந்திய விமானப் படை கீதையிலிருந்து
ஒரு ஸ்லோகத்தையும், தாம் கடைப்பிடிக்கும் பொன்மொழிச் சொற்களாக (மோட்டோ) ஏன் கொண்டிருக்கின்றன
என்பதையும், இந்தத் தேசம் தனது சின்னத்தில் உபநிஷத ஸ்லோகத்திலிருந்து ‘சத்யமேவ ஜயதே’
என்பதையும் ஏன் கொண்டுள்ளது என்பதையும் இது விளக்கும்.

இந்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையக் குழு, தன்
சின்னத்தில் ஈசாவாஸ்ய உபநிஷத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தைக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகள்
எழக் காரணம், வேண்டுமென்றோ, அல்லது பிழையாகவோ, இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பதையும்,
இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக இருக்க வேண்டியதையும் இணைத்துப்போட்டுக் குழப்பிக்
கொள்வதுதான்.

இந்தியாவின் அரசு சமயச் சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டியது
குறித்து எந்த மாறுபட்டக் கருத்தும் இருக்க முடியாது என்பது போலவே, இந்து என்ற சொல்லின்
மிகுந்த ஆழமும் விரிவும் உள்ள பொருள் பெறும் முறையில் இந்தியா ஓர் இந்து தேசம் என்பது
குறித்தும் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது.

இன்று நாம் எதிர்கொள்கிற பிரச்சினையின் வேர் இந்த இரு விஷயங்களிடையே
உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக இல்லாமல் மங்கவைத்துவிட்ட அரசியல் உணர்வில் நேர்ந்துள்ள
இந்தத் துரதிர்ஷ்டவசமான அடையாளக் குழப்பம்தான். இதனாலேயே, உச்சநீதிமன்றம் கூட அதன்
தரத்துக்கு ஏற்றபடி துச்சமாகக் கருதி உடனடியாக நிராகரித்திருக்க வேண்டிய ஒரு விண்ணப்பத்தைப்
பரிசீலனைக்கு அனுமதித்து, அதைப் பற்றித் தீர்மானிக்க ஒரு சிறப்புக் குழுவையும் உருவாக்கி
இருக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
நம் கல்வித் திட்டங்களில் அவசரமாகத் தேவைப்படுவது ஏதேனும்
உண்டென்றால் அது வேத தரிசனங்கள், வேதாந்தம், சாங்கியம், வேத முறைகளின் சத்காரியவாதம்,
ஜைனத்தின் ஸ்யாத்வாதம் (1), பௌத்தத்தின் ப்ரதித்யசமுத்பாதம் (2) ஆகியவை , அறிவியல்,
கலையியல் மேலும் மானுட ஆய்வியல் துறைகளில் போதனை முறைகளில் அறிவார்ந்த முறையில் சேர்க்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
நவீன கால இந்தியக் குடியரசின் வரலாற்றில் துவக்கத்திலேயே
இந்தத் தேவையின் தீவிரம் நன்கு உணரப்பட்டிருந்தது. இயற்பியல் துறையில் பிரசித்தி பெற்றவரும்
கல்வியாளர்களில் முன்னிலையில் இருந்தவருமான பேராசிரியர் தௌலத் சிங் கோத்தாரியின் தலைமையில்
1966ம் ஆண்டு கல்வி ஆய்வுக் குழு, அன்று மத்திய அரசில் கல்வி மந்திரியாக இருந்த மொஹம்மத்
கரீம் சாக்ளாவிடம் சமர்ப்பித்த அறிக்கை கல்வியின் இந்த அம்சம் குறித்துக் கூறியது இது:

“நம் படிப்பினைகளைச்
சரிவரப் பெற்றோமானால், அறிவியலானது நமது பண்பாடு மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளின்பால்
நமக்கிருக்கும் பொறுப்பை நலிவாக்காமல், வலுவாக்க உதவுவதாக அதைப் பயன்படுத்துவது நமக்குச்
சாத்தியமாகும். வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி பண்டைய ஞானிகள் பெற்றிருந்த
உள்ளொளி, சில வழிகளில் தனிச் சிறப்புடையது; அது “உலகின் நிகழ்வுகள் பற்றிய மிக ஆழமான உள்ளறிவின் அரிய எடுத்துக் காட்டாகும்.”
அந்த உள்ளொளிக்கு இன்றைக்கேற்ற மறு விளக்கத்தைப் பெற்று, அதைப் புதிய உயர் தளங்களுக்கு
ஏற்றுவது நம் இலக்காகவும், நம் கடமையாகவும் இருக்க வேண்டும்.”

மேலே மேற்கோளில் தடித்த எழுத்துகளில் உள்ள வாக்கியம் அறிவியலாளர்
ஷ்ரோடிங்கரின் நன்கறியப்பட்ட, நம் காலத்து அறிவியலின் போக்கையே மாற்றி அமைத்த நூலான
‘வாட் ஈஸ் லைஃப்?’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு, அந்த
ஆய்வுக் குழு தன் அறிக்கையில், கேன உபநிஷத்தின் முதல் பாடலிலிருந்து மேற்கோள் காட்டி,
அதை விரித்துரைக்கிறது. ஆய்வுக்குழு இந்த இடத்தில், ஜவஹர்லால் நேருவையும் மேற்கோள்
காட்டுகிறது, அவர் சொல்கிறபடி, நாம் அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்பட முடியாதென்றாலும்,
“பன்னெடுங்காலமாக இந்தியா எந்த அத்தியாவசியமான கொள்கைகளைக் கடைப்பிடித்ததோ அவற்றையும்
நாம் பொய்யாக்க முடியாது.” இந்தியாவை வெறுப்போரில் மிகக் கெடுமதி படைத்தவரை விட்டு
விட்டால், வேறு எவரும், உபநிஷத்துகள் “பன்னெடுங்காலமாக இந்தியா எந்த அத்தியாவசியமான
கொள்கைகளைக் கடைப்பிடித்ததோ” அவற்றையே பிரதிபலிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

இந்திய நாகரிகத்தின் இந்தத் தனிச் சிறப்பை இந்தியா அதன் அறிவியல்
பாடத் திட்டங்களில் பயன்படுத்தி அவற்றை மேலெடுத்துச் சென்றிருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.
பொறுங்கள்—இது வேத காலத்திலேயே விமானங்கள் இருந்தன; மகாபாரதத்திலேயே அணு ஆயுதம் தரித்த
ஏவுகணைகள் இருந்தன என்பனவற்றையோ, அல்லது டார்வினியத்தை எதிர்க்கும் மூடத்தனமான கருத்துகளையோ
அல்லது போலி குருமார்களின் சிஷ்யர்களால் ‘அபார சக்திகள்’ என விதந்தோதப்படும் மாயாஜாலத்
தந்திரங்களையோ பற்றியது அல்ல. இன்று நாம் காண்கிற இந்த வகை மன நோய்கள், இன்றைய கல்வி
முறையில் பொதிந்துள்ள பண்பாட்டு அறியாமையால் உண்டாகும் தாழ்வு மனோபாவத்தால் விளைபவை.

இங்கு கூறப்படுவது புதுக் கண்டுபிடிப்புகளை அடைவதற்குத் தேவையான
திடகாத்திரமான உளவியலை உருவாக்குவது பற்றியது; வாழ்வின் அனைத்துப் போக்குகளிலும் நித்தியமான
மதிப்பீடுகள் கொண்ட அறிவியலை அடைவது பற்றியது. இந்த நாகரிகம் ஏற்கெனவே, வேதாந்தத்தின்
மதிப்பீடுகள் எப்படி அன்று ஒரு ஜகதீஷ் சந்திரபோஸையும் ஜ்யார்ஜ் சுதர்ஷனையும் இன்று
நம்மிடையே உள்ள மஞ்சுல் பார்கவா மற்றும் சுபாஷ் கக்கையும் படைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது.
இருப்பினும், இந்த நாகரிகத்தின் இத்தகைய விளைவுகள், இந்த அமைப்பின் விளைவுகளாக இருந்ததை
விட, இதற்கு விதிவிலக்குகள் போலவே தெரியவருகின்றன. உபநிஷத்துகளின் மதிப்பீடுகளையும்,
புத்தர் மற்றும் சங்கரரின் ஆன்மிகத்தையும் நம் கல்வி முறையில் இணைத்து ஓர் அமைப்பை
உருவாக்கி இருந்தோமானால், என்னென்ன வகையான அற்புத மலர்கள் இந்தத் தேச மண்ணில் மலர்ந்திருக்கும்!

ஒரு நோக்கில், உச்ச நீதி மன்றம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
எனலாம், அதாவது அதை நல்லபடியாகப் பயன்படுத்துவதை அது தேர்ந்தெடுத்தால். உபநிஷத்துகள்,
“அஸதோமா சத்கமய” என்பன போன்ற பாடல்கள் மூலம் எதை வெளிப்படுத்துகின்றனவோ அதுதான் இந்தியாவின்
ஆன்மாவும் சாரமும் என்று அறுதித் தீர்மானமாக அது முடிவு சொல்லக் கூடும். இவற்றை நாம்
இழந்தோமானால் இந்தத் தேசம் என்பதன் சாரத்தையே நாம் இழப்போம். அந்த ஆன்மாவை இழந்தால்,
இந்தத் தேசிய-அரசின் அனைத்து நிறுவனங்களும், கருவிகளும் ஆன்மா இல்லாத வெற்று உடலாகத்தான்
நிற்கும்.

* * *
குறிப்பு: இக்கட்டுரையின் மூல ஆங்கில மொழி வடிவம், ஸ்வராஜ்யா
என்ற ஆங்கில அச்சுப் பத்திரிகையில் ஜனவரி 30, 2019 அன்றுவெளியானது. அதன் விவரம்:

‘Your Highness, Lead Us Not From Light To Darkness’ by
Aravindan Neelakandan.
Swarajya Magazine, January 30, 2019.

மொழிபெயர்ப்பாளரின்
குறிப்புகள்:

(1) ஸ்யாதவாதம் என்ற ஜைனச் சிந்தனை முறைக்கு ஒரு விளக்கம்
இங்கே கிட்டும். http://jainworld.com/book/antiquityofjainism/ch10b.asp

நவீன யுகத்தின் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு துறையான
புள்ளியியலில், நிகழ்தகவு ஆய்வு எனப்படும் Probability analysis என்பதற்கு உதவக் கூடிய
சில கோட்பாடுகள் ஸ்யாதவாதம் எனப்படும் இந்த ஜைனத் தத்துவ முறையில் இருப்பதாக, இந்தியப்
புள்ளியியல் துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பி.ஸி. மஹலநோபிஸ் ஒரு கட்டுரையில்
குறிக்கிறார். அது குறித்து மேல் விவரங்கள் இங்கே கிட்டும்:
https://indiaphilosophy.wordpress.com/tag/syadvad/

(2) விக்கிபீடியாவில் பௌத்தக் கோட்பாடுகளுக்கு நிறைய விளக்கங்கள்
கிட்டும். என்றாலும் வலை உலகில் கிட்டும் விளக்கங்களில் பலவும் இந்திய பௌத்தத்தை அடிப்படையாகக்
கொண்டவையாக இருக்க வாய்ப்பு அதிகம். திபெத்தியரின் பௌத்தம் பல வேறுபாடுகளோடு காணப்படும்
என்பதை நாம் அறிவோம். ப்ரதித்யசமுத்பாதத்தை ஒரு திபெத்திய ஆய்வாளர் விளக்குவதை இங்கே
பார்க்கலாம்:
https://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8678/2585

பௌத்தம் பெருமளவு விளக்கங்களைக் கொடுக்கப் பயன்படுத்திய பாலி
மொழியில் இதே கோட்பாட்டின் பெயர்: ‘படிச்சசஸமுப்பாத’! (
पटिच्चसमुप्पाद)Leave a Reply