Posted on 1 Comment

ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒடிஸாவின் தலைநகரான புபனேஸ்வரும்
ஒன்று. பொ மு மூன்றாம் நூற்றாண்டுவரை பின்னோக்கி பாய்கிறது புபனேஸ்வரின் வரலாறு. கால
ஓட்டத்தின் பல சுவடுகள் படிந்து பல சமய மற்றும் கலாசார அடுக்குகள் உருவாகியிருக்கின்றன.
சமணம், பௌத்தம், சாக்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் கோல்லோச்சியதற்கான
தொல் எச்சங்கள் மாநிலமெங்கும் மூலைமுடுக்கெல்லாம் புதைந்து கிடக்கின்றன.

சைவம்

புபனேஸ்வர் பெரிய நகரம். திரும்பிய இடமெல்லாம் கோவில்கள்.
அதில் முக்கியமானவை ராஜா- ராணி கோவில், சித்தேஷ்வர்-முக்தேஷ்வர் இரட்டை ஆலயங்கள் மற்றும்
ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயம். இவை அனைத்துமே சிவாலயங்கள். புபனேஸ்வர் என்று
ஊர் பெயரே திருபுவனத்தைக் கட்டி ஆளும் சிவபெருமானின் பெயரைத்தான் குறிக்கிறது.
இந்த மூன்று ஆலயங்களுமே பொயு 10-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
அன்றைய கலிங்கத்தை ஆண்ட மன்னர்களால் கலிங்கத்துக் கட்டடக் கலையை ஒட்டி எழுப்பப்பட்டவை.
பூரி ஐகன்நாதர் ஆலயம் உட்பட ஒடிசாவின் பெரிய ஆலயங்கள் யாவும் ரேகா தேவூள் என்ற கட்டடப்
பாணியையொற்றி உயர்ந்த கோபுரம் மற்றும் நுழைவாயில்கள் யாவும் நுட்பமான அலங்காரங்களுடன்
செதுக்கப்பட்டிருக்கின்றன.

ராஜா – ராணி கோவிலில் இன்று விக்கிரகம் ஏதும் இல்லாததால்
பூசை நடப்பதில்லை. மற்ற ஆலயங்கள் இன்றளவும் உபயோகத்தில்உள்ளன.

(சித்தேஸ்வர் முக்தேஸ்வர் ஆலயம்)

ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயத்தில் உறைந்திருக்கும்
சிவன் ஹரிஹரன் என்று அழைக்கப்படுகிறார். கட்டமைக்கப்பட்ட காலத்தில் அது சிவன் (ஹரன்)
கோவிலாக இருந்தாலும் மிகத் தீவிரமாகப் பரவி வந்த ஜகன்நாதர் மரபின் தாக்கத்தால் ஹரியும்
(விஷ்ணு) சேர்க்கப்பட்டது என்பது உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் கருத்து.

பௌத்தம்

ஒடிசா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கலிங்கத்துப் போர்.
பொ மு மூன்றாம் நூற்றாண்டில், அண்டைய ராஜ்ஜியமான மகதத்தை ஆண்ட அசோக மன்னன் கலிங்கத்தின்
மீது போர் தொடுத்து அந்நாட்டைச் சின்னாபின்னமாக்கி, குருதியாறு ஓடச்செய்ததாக வரலாறு.
போரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்ததாகவும் ஒரு லட்சத்து
ஐம்பதாயிரம் பேரை நாடு கடத்தியதாகவும் அசோகன் சூளுரைத்த கல்வெட்டு புபனேஷ்வரிலிருந்து
15 கிலோமீட்டர் தூரத்தில், தவளகிரி அல்லது தவுளி என்றழைக்கப்படும் சிறு குன்றின் அருகில்
உள்ளது. குன்றின் மீது ஏறி நின்று அன்றைய போர்க்களத்தைப் பார்த்தால் வயல்கள், பச்சை
மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும்அமைதிப் பூங்காவாக மிளிர்கிறது.
அசோகர் ஏன் இத்தனை பேரழிவை மேற்கொண்டார் என்பதற்கு சரித்திரப்
பேராசிரியர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது கலிங்கம் இந்தியத்
துணைக்கண்டத்தின் வடகிழக்குp பகுதியின் முக்கியமான துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தது என்பதுதான்.

மகதத்தை ஆண்ட மௌரியர்களின் கடல் வணிகத்திற்கு கலிங்கம் பெரும்
இடைஞ்சலாக இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அப்பா பிந்துசாரன் காலத்திலேயே கலிங்கத்தை
மகதப் பேரரசுடன் இணைக்கும் முயற்சி தோல்வியையே தழுவியது. மேலும், மகதப் பேரரசு தெற்கை
நோக்கி விரிவடைவதற்கான திட்டத்திற்கும் கலிங்கம் தடையாக இருந்து வந்ததும் போருக்கான
ஒரு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர கலிங்கத்து மக்கள் சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததும்
போருக்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடுமோ என்ற ஐயமும் எழுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும்,
இந்தப் போர் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் பரவுவதற்கு
மிகப் பெரிய காரணமாக இருந்தது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.
இன்று தவளகிரி குன்றின் மீது ஒடிசா அரசாங்கம் ஜப்பானியர்களுடன்
இணைந்து சாந்தி ஸ்தூபி ஒன்றை எழுப்பியிருக்கிறது. அந்த ஸ்தூபியின் மீது புத்தரின் வாழ்க்கையில்
நடந்த முக்கியமான சம்பவங்கள் மற்றும் அசோகர் கலிங்கத்துப் போருக்குப் பின் மனமாற்றம்
அடைந்ததையும் சித்தரித்திருக்கிறார்கள்.

தவளகிரியிலிருந்து இறங்கி வரும் வழியில் இந்தியாவின் மிகப்
பழமையான சிற்பங்களில் ஒன்று காணக் கிடைக்கிறது. அது அசோகர் காலத்தில் செதுக்கப்பட்ட
ஒரு யானை. இதுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் செதுக்கப்பட்ட யானை சிற்பங்களிலேயே இவ்வளவு
செம்மையாக இதுவரை வேறு எங்கும் செய்யப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
சொல்வது போல் யானை பார்ப்பதற்கு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் முழுமையான யானை
செதுக்கப்படவில்லை. ஒரு பாறையில் இருந்து அது வெளிப்படுவதுபோல், யானையின் முன் பகுதியைச்
செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிலைக்கு புத்த மதத்தில் ஒரு சிறப்பு உண்டு. புத்தரின்
தாய் மாயா தேவியின் கர்ப்பத்தை ஒரு வெள்ளை யானை ஊடுருவியதாகவும் அதன் பின்தான் அவர்
புத்தரை கருத்தரித்தார் என்று சொல்லப்படுகிறது. தவளகிரியின் பாறையில் வடிக்கப்பட்ட
யானை மாயாதேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட
2,300 ஆண்டுகள் பழைய சிற்பம் இத்தனை காலம் மழை வெயில் குளிர் தாண்டி இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
என்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான்.
அசோகர் காலத்தில் புத்தருக்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு
இருக்கவில்லை. அவரை வெறும் சின்னங்களைக் கொண்டே சித்தரித்தனர். ஆகையால் இங்கு புத்தரின்
வடிவத்திற்கு பதில் புத்தரின் பிறப்பைக் குறிக்கும் யானை செதுக்கப்பட்டுள்ளது.

யானை அரசு அதிகாரத்தின் சின்னமும் ஆகும். அசோகரின் அரசு பிரகடனங்கள்
அருகிலேயே ஒரு பாறையில் பிராகிருத மொழியில், பிராமி எழுத்துக்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டில் பௌத்த தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி மக்கள் தர்மத்தின் வழியில் எவ்வாறு
செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திய, பௌத்த வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அவசியம்
பார்க்க வேண்டிய இடம்.

முன்னே சொன்னது போல அசோகர் காலத்தில் புத்தருக்கு வடிவம்
கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குசானர் என்றழைக்கப்படும் மத்திய ஆசியாவிலிருந்து வந்து
இந்தியாவை ஆண்ட வம்சத்தினர் காலத்தில்தான் (பொ மு ஒன்றாம் நூற்றாண்டு) புத்தர் உருவக
சிலை வடிக்கும் மரபு உண்டானது.

(புத்தர் சிலை – ரத்னகிரி)

புபனேஷ்வரிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரத்னகிரி,
லலிதகிரி மற்றும் உதயகிரி என்ற மூன்று முக்கியமான பௌத்த தலங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில்
புத்தரின்பல உருவச் சிலைகள் கிடைத்துள்ளன. இந்த இடங்கள் பொ மு மூன்றாம் நூற்றாண்டு
தொடங்கி பொ பி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பௌத்தத் தலங்களாகக் கோலோச்சியிருந்தன என்பதை
நிரூபிக்கும் விதமாக அகழ்வாராய்ச்சியில் பல பௌத்த விஹாரங்களும், ஸ்தூபிகளும், பௌத்த
கோயில்களும் கிடைத்திருக்கின்றன.
இதில் முக்கியமாக ரத்னகிரியில், வஜ்ரயானம் என்ற தாந்திரிக பௌத்தம் பின்பற்றப்ப்பட்டதற்கான
ஆவணங்கள் கிடைத்துள்ளன. தாந்திரிக மரபு நம் கலாசாரத்தில் முதல் முதலாக ஒடிசாவில், வஜ்ரயானம்
மூலமாகதான் நுழைந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இங்கு கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளை மற்றும் வடிவங்களை
வைத்துப்பார்த்தால் ரத்னகிரி நளாந்தாவுக்கு இணையான பௌத்தத் தலமாக இருந்திருக்ககூடிய
சாத்தியகூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால், காலப்போக்கில் மக்களிடையே பௌத்த சமயத்திற்கான ஆதரவு
குறைய ஒடிசா உட்பட இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பொ பி 13ம் நூற்றாண்டோடு பௌத்தம்
விடைபெற்றுக் கொண்டது.

சமணம்

ஒடிசாவில் பௌத்தம் தழைத்திருந்த காலகட்டத்தில், மக்களிடையே
சமண மதத்திற்கும் பேராதரவு இருந்தாகத் தெரிகிறது. புபனேஷ்வரில் உள்ள சமண மதத்தைச் சார்ந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் உதயகிரி-கண்டகிரி என்ற இரட்டைக் குன்றுகளில் குடையப்பட்ட
குகையறைகள்.
அசோகர் காலத்திற்கு பின் பொ மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை
ஆண்ட காரவேலர் என்னும் மன்னர் காலத்தில் சமணத்துறவிகள் தங்குவதற்காகக் குடையப்பட்ட
குகையறைகள் இவை. காரவேளா சமண மதத்தைத் தழுவி இருந்தவன்.
தவளகிரியில் அசோகரின் பௌத்த தர்ம கல்வெட்டுக்கு சவால் விடுவது
போல் நேர் எதிர் கோணத்தில் 6 மைலுக்கு அப்பால் உதயகிரியில் இந்தியாவில் செதுக்கப்பட்ட
முதல் சமணக் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு யானைக் குகை (ஒடியாவில் ஹாதி கும்ஃபா)
என்று பெயரிடப்பட்டுள்ள குகையறையின் கூரைப் பகுதியில் காணக்கிடைக்கிறது.
யானைக் குகைக் கல்வெட்டு காரவேளாவின் சமகாலச் சரித்திர நிகழ்வுகளின்
மிகப்பெரிய ஆவணம். இந்தக் கல்வெட்டு, சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரான ஆதிநாத்தின்
(தீர்த்தங்கரர்கள் சமண மதத்தின் குரு பரம்பரையைச் சார்ந்தவர்கள்) சிலையைக் கடத்திச்சென்ற
நந்தா வம்சத்து மன்னர்களின் பிடியிலிருந்து காரவேளா மன்னன் எவ்வாறு மீட்டெடுத்தான்
என்பதைக் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டில்தான் முதன்முறையாக விந்திய மலைக்கு வடக்கே
உள்ள பகுதியைக் குறிக்க ‘பாரதவர்ஷம்’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள்
கூறுகின்றனர். இதில் பழங்காலத் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும்
இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உதயகிரியில் சமணத்தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் ஏதும் காணக்
கிடைக்கவில்லை. ஆனால் அருகில் இருக்கும் கண்டகிரியின் குகையறையில் சமணத்தின் முதல்
9 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சற்றுத் தள்ளி வேறொரு குகையறையில்
சமணர்கள் வழிபடும் எல்லா (24) தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக்
காணமுடிகிறது.
மும்பைப் பல்கலைக்கழகத்தில் சமண இறையியல் (jainology) பிரிவின்
வருகைப் பேராசிரியராகவும் பாட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரியும் ஷில்பா சேடா, “ தீர்த்தங்கரர்
வழிபாட்டு வரலாற்றைப் பொருத்தவரை உதயகிரி குகைகள் மிக முக்கியமானவை. தீர்த்தங்கரர்களின்
வழிபாடு சிறிது சிறிதாக வளர்ந்து வடிவம் பெற்றதைக் காண முடிகிறது” என்கிறார்.
தாய்த்தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்த சமூகத்தின் தாக்கம்
சமணத்தின் மீதும் உண்டானதற்கான முக்கிய ஆவணம் இங்குக் கிடைக்கிறது. அது யக்ஷினிகள்
எனப்படும் சமணப் பெண் காவல் தெய்வங்களின் சிற்பங்கள்.
கண்டகிரியில் தீர்த்தங்கரர்களின் வடிவங்களுக்கு அருகிலேயே
அம்பிகை என்னும் யக்ஷினியின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. யக்ஷினிகள் தீர்த்தங்கரர்களின்
காவல் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். சிற்பங்களின் உருவளவை வைத்துப் பார்த்தால் தீர்த்தங்கரர்களுக்கு
சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிற அம்பிகையின் உருவம் அவள் சமணத்தில் தீர்த்தங்கரர்களுக்கு
இணையான அந்தஸ்தைப் பெற்றிருந்தது தெரிகிறது.
சமண யக்ஷினியியானஅம்பிகை காலம் செல்ல செல்ல இந்து மதத்தில்
தன்மயமாக்கப்பட்டு இன்று அம்பாளின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறாள்.
யக்ஷினிகள், இந்தியத் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் தாக்கத்தினால்
சமணத்தில் உருவம் பெற்று, பின்னாளில் இந்து வழிபாட்டு மரபில் இணைந்துவிட்டன. இன்று,
கண்டகிரியில் பழைய தீர்த்தங்கரர் உருவங்களைக் கொண்ட சமணக் கோயிலும் மற்றும் அம்பிகை
அம்மனின் இந்துக் கோவிலும் ஒருசேர இருப்பதைக் காணலாம்.

தாந்திரம்

அம்பிகையைப் பற்றி பேசும்போது தாந்திரத்தைப் பற்றிப் பேசாமல்
இருக்கமுடியாது. பௌத்தமும் சமணமும் ஒடிசாவில் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் தாந்திரம்
ஒடிசாவை ஆட்கொண்டது.

தாந்திரத்தின் மூலம் அதர்வ வேதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தாந்திரம் என்பது அடிப்படையில் நம் உடல் என்னும் நுண் அண்டத்தைக் (microcosm) கொண்டு
பிரம்மம் என்னும் பேரண்டத்தை (macrocosm) அறியப் பயன்படும் ஒரு மறையறிவு. யோகமும் தாந்திரத்தில்
அடக்கம்.
வஜ்ரயானம் அல்லது தாந்திர பௌத்தம் வழியாகத்தான் தாந்திரம்
முதல்முதலில் ஒடிசாவில் அறிமுகமானதாகச் சொல்கிறார்கள். பௌத்த தாந்திரத்தில் யோகம்,
மண்டலங்கள் எனப்படும் யந்திரங்கள் மற்றும் சிறப்பு மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சமணம் அம்பிகை என்னும் பெண் யக்ஷனியை உருவாக்கியதுபோல் பௌத்தம்
தாரா மற்றும் மகா மயூரி போன்ற பெண் காவல் தெய்வங்களை உருவாக்கியது. ரத்னகிரியில் இந்தப்
பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் பல கிடைத்துள்ளன.

இந்திய சமய மரபில் சைவமும், சாக்தமும் (சக்தி உபாசனை), தாந்திரமும்
ஒருங்கிணைந்தே பயணித்துள்ளன.

ஒரு காலகட்டத்தில் தாந்திரம் ஒடிசாவை ஆட்கொண்டதற்கான அத்தாட்சியை
புவனேஸ்வரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹீரப்பூர் சௌஷட் யோகினி வழிபாட்டுத்தலத்தில்
காணலாம். சௌஷட் என்றால் வடமொழியில் 64 எண்ணிக்கையைக் குறிக்கும். இங்கு 64 தேவதைகளின்
வழிபாடு நடத்தப்படுகிறது. அறுபத்து நான்கு திசைகளுக்கான தேவதைகள் இவர்கள். இந்த அறுபத்து
நான்கு தேவதைகளில் பல கிராமியத் தேவதைகளும் அடக்கம். யோகினிகளுக்கான வழிபாட்டுத்தலங்கள்
பொதுவாகக் கூரையற்று வட்ட வடிவமாக இருப்பதைக் காணலாம். இந்தியாவில், ஒடிசாவிலும் மற்றும்
மத்திய பிரதேஷ் மாநிலங்களில் மட்டும்தான் யோகினிகளை வழிபடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு
தலத்திலும் யோகினிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

(ஹீரப்பூர் ஆலய யோகினிகள்)

ஹீரப்பூர் யோகினிகளில் தாரா, சாமுண்டி, வராஹி, நரசிம்ஹி,
அம்பிகா, பத்ரகாளி, கௌமாரி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியவர்கள் அடங்குவர். அறுபத்தினாலு
தேவதைகளில் முக்கியமாகக் கருதப்படுபவள் மகாமாயா தேவி. பத்து கைகள் கொண்ட மகாமாயா தேவியை
தலைமைத் தேவதையாக வணங்குகிறார்கள் ஊர்மக்கள். ஒவ்வொரு யோகினியின் சிற்பத்தின் கீழேயும்
அவளுடைய வாகனத்தையும் செதுக்கியிருக்கிறார்கள்.
ஆகமக் கோயில்களிலிருந்து ஹீரப்பூர் மாறுபட்டிருந்தாலும் இங்கே
இருக்கும் சிற்பங்கள் செவ்வியல் வடிவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு யோகினியின்
சிகை அலங்காரமும் அவள் பூண்டிருக்கும் நகைகளும் வித்தியாசமானவை. இறை வழிபாட்டுத் தலங்களில்
நமக்குக் கிடைக்கும் பொதுவான அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இங்கு
கிடைக்கிறது. இறைவியல் ஆய்வாளர்கள் தவிர்க்க முடியாத ஒரு தலம் ஹீரப்பூர் யோகினி வழிபாட்டுத்தலம்.

வைணவம்

பௌத்தம், சமணம், சைவம், தந்திரம் ஆகிய எல்லா சமய மரபுகளும்
உச்ச நிலையை அடைந்து ஒருங்கிணையும் புள்ளிதான் ஜகன்நாதர் மரபு.

(நவகுஞ்சரம்)



பூரியில் உறைந்திருக்கும் ஜகன்நாதர், எல்லாருக்குமான தெய்வம்.
ஜெகன்நாதர் மரபின் சடங்குகளிலும் சரி அந்த மரபைச் சுற்றி அமைந்த கதைகளும் சரி ஒடிசாவைத்
தாக்கிய பலதரப்பட்ட சமயங்களின் தாக்கமும் மற்றும் மாநிலம் முழுவதும் மேலோங்கியிருக்கும்
பழங்குடியினரின் கலாசாரக் கலப்பும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

நம்முடைய அய்யப்பனுக்கு வாவர் மற்றும் ரங்கநாதனுக்கு ஒரு
துலுக்கநாச்சியார் இருந்ததைப் போல ஜகன்நாதருக்கு பொ பி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலாபேக்
என்ற இஸ்லாமிய பக்தர் இருந்ததாகs சொல்லப்படுகிறது. பொ பி 19ம் நூற்றாண்டில் பஞ்சாப்பை
ஆண்ட சீக்கிய மன்னனான ரஞ்சித் சிங் தனது இறுதி நாட்களில் தன்னிடமிருந்த கோகினூர் வைரத்தை
பூரி ஜகன்நாதருக்கு எழுதி வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

இன்றும் ஜகந்நாதரின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால்
ஈர்க்கப்பட்டு வெவ்வேறு சமயங்களிலிருந்து பக்தர்கள் பூரி ஜகந்நாத் யாத்திரையின்போது
ஒன்று திரள்கிறார்கள்.

ஜகந்நாதர் மரபு பற்றி காலம்சென்ற வங்காள வரலாற்றாசிரியர்
ஜாதுநாத் சர்கார், ‘ஒடிசாவின் பல்வேறு சமயங்கள் காலப்போக்கில் ஒன்றுகூடி ஜகந்நாதர்
மரபில் இணைந்துள்ளன’ என்கிறார்.

ஒடிசாவின் பல அடுக்குக் கலாசாரத்தை ரத்தினச் சுருக்கமாக உணர்த்தும்
ஒரு சிறிய கதை இங்கே. இந்தக் கதை சரளா மகாபாரதம் என்று அறியப்படும் ஒடியா மஹாபாரதத்தில்
வருகிறது.

கதைப்படி ஒருமுறை அர்ஜுனன் மலையின் மீது தவம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது அவன் முன்னால் ஒரு வினோதமான மிருகம் வந்து நின்றது. அதன் உடல் உறுப்புகள் வெவ்வேறு
மிருகங்களுடையதாக இருந்தன. அந்த மிருகம் சேவலுடைய தலையும், மயிலுடைய கழுத்தும், எருதின்
திமிலும், சிங்கத்தினுடைய வாலும் கொண்டிருந்தது. அதனுடைய மூன்று கால்களில் ஒன்று யானையுடைய
காலாகவும், ஒன்று புலியின் காலாகவும் , மற்றொன்று குதிரையுடைய காலாகவும் இருந்தது.
மிருகத்தின் நான்காவது கால் மனிதனுடையது. மேல்நோக்கி எழும்பியிருந்த ஒரு கை ஒரு நீல
வண்ண சக்கரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆச்சரியப்படவைக்கும் மிருகத்தைக் கண்டவுடன்
அர்ஜுனன் முதலில் மிரண்டு போனான். அதைக்கொல்ல அம்பு எய்தினான். ஆனால் அடுத்த நொடியே
அவனுக்கு அந்த மிருகம் யார் எனப் புரிந்தது. அந்த மிருகம் வேறு யாருமல்ல, அண்ட பிரம்மாண்டத்தை
ஆளும் நாராயணன் என்பதை அறிந்துகொண்டான். எல்லா உயிரினங்களிலும் வீற்றிருப்பது ஒரே இறைப்பொருள்தான்
என்ற உண்மையைத் தனக்கு உணர்த்தவே நாராயணன் இந்த வினோதமான மிருகத்தின் உருவத்தில் தன்
முன் தோன்றியதை உணர்ந்தான். உடனே வில்லையும், அம்பையும் கீழே இறக்கினான். அந்த மிருகத்தின்
காலில் சென்று விழுந்தான்.
அந்த மிருகத்தின் பெயர் நவகுஞ்சரம். நவகுஞ்சரத்தின் உருவம்
பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச்
சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

(பூரி கோவிலில் நவகுஞ்சரம்)

நவகுஞ்சரத்தைப் பற்றிப் பேசுகையில், மும்பைப் பல்கலைக்கழகத்தில்
‘கம்பாரடிவ் மிதாலஜி (comparative mythology) போதிக்கும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல்,
“நவகுஞ்சரத்தின் உருவமும் சரி, தத்துவக் குறியீடும் சரி, ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை,
தனிதன்மை வாய்ந்தவை. இதற்கு ஒப்பாக உலகக் கதைகளில் வேறேதும் இருப்பதுபோல் தெரியவில்லை”
என்கிறார்.
நவகுஞ்சரத்தைப் போலவே ஒடிசாவின் கலாசாரத்தன்மையும் பல பரிமாணங்கள்
கொண்ட கலவைதான். ஆனால் அந்தக் கலவையின் அடித்தளத்தில் இருப்பது பரந்து விரிந்த பிரமாண்டத்தில்
மனிதனின் இருத்தலுக்கான காரணத்தேடல்தான் என்பதில் ஐயமில்லை.

1 thought on “ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

  1. Jai Sri Jagannath. Thanks for the wonderful post.

Leave a Reply