Posted on Leave a comment

நேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி

தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தவே தேவையில்லாத பெயர் ஹெச்.ராஜா.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியல் வட்டாரம் அவரைச் சுற்றியே இருக்கிறது. பேச்சைப்
போலவே, அவரும் பரபரப்பாகவே இருக்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு மறுநாள் அஞ்சலிக் கூட்டங்களுக்குச்
சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பியவரை ‘வலம்’ இதழுக்காகச் சந்தித்தோம்.

நீங்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தீர்கள்?

என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன் அவர்கள், தமிழகத்துக்கு
ஆர்எஸ்எஸ் அறிமுகமான காலத்திலேயே 1942ல் சங்கத்தில் இணைந்தார். 1948ல் நேரு அரசாங்கம்
சங்கத்தின் மீது வீண் பழி சுமத்தித் தடை செய்தபோது, என் தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன்,
பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரதத் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி
ஜி, சமீபத்தில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி ஐராவதம் மகாதேவன், அன்றைய தினம் சங்கத்தின் மாநிலச்
செயலாளராக இருந்த அண்ணாஜி, இவர்கள் அனைவரும் சத்தியாகிரகம் செய்ததற்காக, ஆறு மாதம்
மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நான் 1964ல் மூன்றாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, பத்துஜி (பத்மநாபன்ஜி – பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக இருந்தவர்)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தார். அவர் என்
தகப்பனாரைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார். ஒருநாள் என்னிடம், “உனக்கு கபடி விளையாடப்
பிடிக்குமா?” என்றார். “பிடிக்கும்” என்றேன். அவரால் அழைத்து வரப்பட்டு, அப்போதிலிருந்து
ஷாகா வரத் தொடங்கினேன்.

எந்தெந்த நிலைகளில் சங்கப்பணி செய்திருக்கிறீர்கள்?

நான் 1974-75ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் நேரத்தில்
காரைக்குடி ஷாகா முக்கியசிக்‌ஷக் பொறுப்பில் இருந்தேன். 1980லிருந்து 1984 வரை கோல்
இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பிறகு 1984 முதல் 1990 வரை ராமேஸ்வரம்
விபாக் வியவஸ்தா பிரமுக்காக இருந்தேன். 1990-91ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக
இருந்தேன். பிறகு, 1991 பிப்ரவரி முதல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வருகிறேன். முதலில்
சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். 1993ல் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது, மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அது
வெற்றிகரமாக அமைந்தது. மறுநாள் அத்வானிஜியை நிர்வாகிகள் சந்தித்தபோது, ‘Tamilnadu
learned to mobilize’ என்றார். அதற்குப் பிறகு, 1995ல் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
2006 நவம்பர் வரை 11 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு, 2006ல் மாநிலத் துணைத்
தலைவர் ஆனேன். 2014 ஆகஸ்ட் முதல் தேசியச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உங்கள் சொந்த தொகுதியான சிவகங்கையைச் சேர்ந்தவர்.
அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

திரு. ப.சிதம்பரம் ஒன்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி
அல்ல. நான், 1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டேன்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனைவிட நான் 19,000 வாக்குகள்தான்
குறைவு. ஆனால், அப்போதே ப.சிதம்பரம் என்னை விட 1 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றார்.
அந்தத் தேர்தலில் சுதர்சன நாச்சியப்பன் பெற்ற வாக்குகள் 2,45,000. நான் பெற்ற வாக்குகள்
2,25,000. சிதம்பரம் பெற்ற வாக்குகள் 1,25,000தான். கடந்த 2014 தேர்தலிலும் அதே நிலைதான்.
அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அதிகமான பணம்
செலவழித்தும் கூட என்னை விட 30,000 வாக்குகள் குறைவாகப் பெற்றார். சிதம்பரத்துக்கு
உள்ளூரில் செல்வாக்கு இல்லை. அவருக்குக் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது.
அது தொடர்கிறது.

சமீப காலமாக உங்கள் பேச்சுகள், சர்ச்சையைக் கிளப்புகிறதே?

சர்ச்சை என்றால் விவாதம் என்று அர்த்தம். நான் ஒரு விவாதத்தைக்
கிளப்புகிறேன். நான் பேசுவது சர்ச்சை என்பவர்கள் யாராவது நான் பொய் பேசுகிறேன் என்று
கூற முடியுமா?

திக, ஈவெரா, நீதிக்கட்சி இவர்களெல்லாம் தேச விரோதிகள் என்று
பேசினேன். இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்குத்
தெரியாத விஷயங்கள். 1944ல் திராவிடக் கழகத்தின் துவக்க மாநாடு சேலத்தில் ஈவெரா தலைமையில்
நடக்கிறது. அதில், சி.என்.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதில் கூறப்பட்டது,
“ஆங்கிலேயன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம். காந்தியார் சொல்கிறார். அவருக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது. அவருக்கு வைத்தியம் செய்யக்கூட இங்கிலாந்தில் இருந்துதான்
வைத்தியர் வர வேண்டும். அப்படி அவன் வெளியேறிவிட்டால், விஞ்ஞானம் வெளியேறிவிடும்; கார்
ஓடாது; பஸ் ஓடாது. இந்தியாவால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது.”

அடல்ஜி ஆட்சியில் நாம் குண்டூசி கூடத் தயார் செய்தோம். ஆனால்,
ஈவெராவும், அண்ணாதுரையும் நம்மால் குண்டூசி கூடத் தயார் செய்ய முடியாது என்றார்கள்.
இவர்களெல்லாம் தலைவர்களா?
அடுத்த வரி இன்னும் மோசமானது. “அப்படி இந்தியாவில் இருந்து
வெளியேறுவதாக இருந்தால் லண்டனில் இருந்துகொண்டாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும்.”

இவர்கள் தேசவிரோதிகள் என்று கூறினால் சர்ச்சைக்கிடமானது என்பவர்கள்,
இந்த மாதிரி தீர்மானத்தை அவர்கள் போடவில்லை என்று சொல்ல முடியுமா? இதில் ஒரு பம்மாத்து,
அதாவது வெள்ளையன் வெளியேறி விட்டால் பார்ப்பனர் ஆதிக்கம் தலைதூக்கி விடும்; சமூகநீதி
போய்விடும் என்பதால்தான் ஈவெரா அப்படிச் சொன்னார் என்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்ட
தீர்மானத்தில் எங்காவது சமூகநீதி பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? “வெள்ளையன் வெளியேறினால்
விஞ்ஞானம் வெளியேறிவிடும். கார் ஓடாது; பஸ் ஓடாது.” இதுதானே லட்சணம்? அப்படியென்றால்
ஈவெரா தேசத் துரோகிதானே?

அதேபோல, ஈவெரா தமிழுக்கு மிகப்பெரிய எதிரி. அவரே சொல்கிறார்;
“தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழில் பேசக்கூடாது.” 1969ல் பேசுகிறார். கருணாநிதி அப்போது
பொதுப்பணித்துறை அமைச்சர். ஒரு கூட்டத்தில் ஈவெரா பேசுகிறார்: “தமிழுக்காகப் பதவியைக்கூட
ராஜிநாமா செய்யத் தயாராம். இதற்காகவா நீங்கள் பெரியார்ப் பல்கலைக்கழகத்தில் படித்தீர்கள்?
நான் இந்தியை எதிர்த்தேன். அது இந்த சனியன் தமிழ் வரக்கூடாது என்பதற்காக அல்ல. நீ உன்
பொண்டாட்டியோடு இங்கிலீஷில் பேசு.” இப்படி பேசிய ஈவெரா தமிழ்த் துரோகிதானே? தமிழ் விரோதிதானே?
இப்படியெல்லாம் சரித்திரத்தில் பதிவான உண்மைகளை ஹெச்.ராஜா
பேசுகிறான். நான் பேசும் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கும் ஏன், ஈவெராவே
ஒப்புக்கொண்டிருக்கிறார். “நான் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு துரோகம் செய்தேன்.”
பெரியார் என்ற மாயத்தோற்றத்தின் முன்னால் இந்தக் கழகங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாயத்தோற்றத்தை நொறுக்க வேண்டும். ஆகவேதான், நான் உண்மையான விஷயங்களை மக்கள் முன்
வைக்கிறேன். ஆகவே, சர்ச்சை நடக்கட்டும்.

ட்விட்டரில் ஒரு பதிவு போட்டீர்கள்? பிறகு, அது உங்கள் அட்மின் போட்டதாகக் கூறி
ஏன் எடுத்துவிட்டீர்கள்?

இல்லை. அது உண்மையாகவே நான் போட்டதில்லை. உங்களுக்குப் புரிவதற்காகச்
சொல்றேன். என் குழந்தைகள் சின்னவர்களாக இருந்தபோது காரைக்குடியில் அவர்களைக் கூட்டிக்கொண்டு
வெளியே போவேன். அப்போது, ஈவெரா சிலையைக் காண்பித்து, “இது யாருப்பா?” என்று கேட்டால்,
“அம்மா, ராமனைப் பத்தி பேசும்போது ராவணன் பத்தியும் நினைவு வரும். இவர், ஹிந்து மதத்தை
அழிக்க நினைத்த ராவணன்” என்பேன். நாளை இப்படியொரு தேச விரோதி, ஹிந்து விரோதி இருந்தார்
என்பது மக்களுக்குத் தெரிவதற்காக அந்தச் சிலை இருக்கணும் என்று நினைப்பவன் நான். அந்த
ட்வீட் போட்ட அன்றைக்கு, கர்நாடகத்தில் ஒவ்வொரு நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர்
என மொத்தம் 56 பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்துக்காக தேசியத் தலைவர் அமித் ஷா
அழைத்திருந்தார். அதற்காக நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த ட்வீட்
உண்மையிலேயே என் அட்மின் போட்டதுதான். நான் இறங்கி அதைப் பார்த்தும், உடனே எடுக்க சொல்லிவிட்டேன்.
சிலைகளை அகற்றுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. அந்த ட்வீட்டை அட்மின் போட்டார்
என்பதால், இப்போது நான் அட்மின் வைத்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க. வளராது என்கிறார்களே?

1980ல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியபோது, சிவகங்கையில் முதல்
உறுப்பினராகச் சேர்ந்து, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியைத் தொடங்கியவர்களில்
நானும் ஒருவன். அப்போதிலிருந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். குறிப்பாக,
1989லிருந்து பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறேன். அதை மக்கள் அப்போது காது கொடுத்து
கேட்கக்கூட மாட்டார்கள். ஆனால், அன்று நாம் பேசிய பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு
370 அந்தஸ்து, ராம ஜென்ம பூமி போன்ற விஷயங்களெல்லாம் இன்று மக்களாலும் பேசப்படுகிறதா
இல்லையா?

கொள்கை ரீதியாகப் பிற்காலத்தில் பாஜகவில் இணைந்தாலும்
1971 முதல் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அந்தத் தேர்தலில் இந்திரா
காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி வைத்தது. அப்போது, எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். பிரிக்கப்படாத
திமுகவுக்கு அந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் 35 சதவீதம். 72ல் எம்ஜிஆர் திமுகவை
விட்டு வெளியேறுகிறார். 1977 தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்தத் தேர்தலில் திமுக
பெற்ற வாக்குகள் 24 சதவீதம். எம்ஜிஆர் பிரித்த வாக்குகள் 11 சதவீதம்தான். ஆனால், அவர்
பெற்ற வாக்குகள் 35 சதவீதம். அவர்கள் தங்களை அண்ணா திமுக. என்று சொன்னாலும், மக்களைப்
பொருத்தவரை அவர்கள் Anti திமுகதான்.

அப்போது, கருணாநிதி என்ற நபர்; அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்
ஓட்டுகள் பிரிந்து கிடந்தன. இன்றைக்கு ஹிந்து சனாதன தர்மத்தை வேரறுப்பது, ஹிந்துத்
திருமணங்களைக் கொச்சையாகப் பேசுவது என ஸ்டாலின் இருப்பதைப் போலத்தான் அவரது அப்பாவும்
இருந்தார். கருணாநிதியின் மீதான வெறுப்பினால் வரும் ஓட்டுகளைப் பெறுபவராக எம்ஜிஆர்
இருந்தார். ஆனால், இன்று கொள்கை ரீதியாக இதை எதிர்க்கும் நமக்கு, வலிமையான தலைமையும்
வேண்டும். இப்போது நமக்கு மோடி கிடைத்திருக்கிறார். ஆகவே, திமுக எதிர்ப்பு ஓட்டுகள்
வருங்காலத்தில் நமக்கு விழும். அது தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

மோடி அரசின் திட்டங்களை தமிழக பாஜக ஏன் சரியாக பிரசாரம் செய்வதில்லை?

பாரதிய ஜனதா கட்சி இயக்க ரீதியாக தனக்கு இருக்கும் பலத்தின்
அடிப்படையில் வேலை செய்து வருகிறது. அதைத்தான் நான் சொன்னேன். இந்திய மக்கள் முதலில்
தலைவர்களைத்தான் ஏற்பார்கள், பிறகுதான் கொள்கை. குஜராத்தில் மோடியை எப்படித் தாக்கி
தாக்கி அவரை வலிமைமிக்க தலைவராக உருவாக்கினார்களோ, அதேபோல தமிழகத்திலும் ஹிந்துத்துவ,
தேசியக் கொள்கைகளுக்கு எதிராக உள்ள ஜிஹாதிஸ்ட், ஈவெஞ்சலிஸ்ட் (கிறிஸ்தவ மதமாற்றச் சக்திகள்),
தமிழ்த் தேசியவாதிகள், நகர்ப்புற நக்ஸல்கள் ஆகிய நான்கு தீய, பிரிவினைவாத சக்திகளும்
செய்த எதிர்மறைப் பிரசாரத்தின் காரணமாக, இன்று மக்களே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாஜக பற்றி மக்களுக்குச் சென்றடைந்திருக்கிறது. ஆகவே, அதன் பலன்கள் நிச்சயமாக பாஜகவுக்குக்
கிடைக்கும்.

இப்போது பாஜக-அதிமுக கூட்டணி வந்துவிட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகவே
அதிமுக அரசை தமிழக பாஜக எதிர்க்கவில்லையே? பாஜகதான் அதிமுக அரசை இயக்குகிறதா?

இது குழந்தைத்தனமான பேச்சு. நம் கூட்டாட்சி அமைப்பின்படி
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணக்கம் அவசியம். அதுதான் இருக்கிறதே ஒழிய, பாஜக,
அதிமுக அரசை இயக்கவில்லை. இன்று ஏன் கூட்டணி வந்துள்ளது என்றால், நான் ஏற்கெனவே சொன்னது
போல இந்த நான்கு தீயசக்திகள்தான் காரணம். கருணாநிதி இருந்தபோது திமுக அவர் கட்டுப்பாட்டில்
இருந்தது. ஆனால், இன்று திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஸ்டாலின் யார்
கட்டுப்பாட்டில் இருக்கிறார்? வைகோ கட்டுப்பாட்டில், திருமாவளவன் கட்டுப்பாட்டில்,
சீமான் கட்டுப்பாட்டில், பாரதிராஜா கட்டுப்பாட்டில், வைரமுத்து கட்டுப்பாட்டில்! எல்லாப்
பிரிவினைவாத சக்திகளும் அவரை ஆட்டுவிக்கிறது. ஆனால், ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையாக
இருக்கிறார்.

அ.திமுக அரசுக்கு எதிராக நீங்கள், ஆலய மீட்பு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறீர்களே?

நான் அதைtஹ் தொடர்ந்து செய்து வருகிறேன். அதற்கும் ஒரு குறிப்பிட்ட
அரசாங்கத்துக்கும் சம்பந்தப்படுத்த முடியாது. அதை மிகப்பெரிய சதியின் ஒரு பகுதியாகவே
பார்க்கிறேன். ஏனென்றால், இன்றைக்குக் கூட என்னிடம் வடபழனி கோயில் நிலத்தின் பத்திரத்தை
ஒருவர் காண்பித்தார். அப்படி பத்திரம் போட்டதற்காக, ஒரு அதிகாரி மீது பத்திரப்பதிவுத்
துறை துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், அந்தப் பத்திரத்தை ரத்து செய்யச்
சொல்லி கோயில் செயல் அதிகாரி இதுபற்றி பத்திரப் பதிவுத் துறையில் புகார் கொடுத்திருக்காரா?
இல்லை. ஏனென்றால், கோயில் நிலங்கள் பற்றிய பதிவேடு அவர்களிடம் இல்லை. இந்து அறநிலைய
சட்டம் 29வது பிரிவு என்ன சொல்கிறது? கோயில் நிலங்கள், ஸ்வாமி விக்ரஹங்கள், நகைகள்,
கோயில்ல இருக்கும் பாத்திரங்கள் உட்பட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப் படவேண்டும்
என்று சட்டம் சொல்கிறது. ஆனால், பதிவு செய்யப்பட்டிருக்கா? சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை.
ஐந்து வருஷங்களுக்கு மேல கோயில் சொத்துக்களை லீஸுக்கு தரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது.
ஆனா, அவனவன் நிரந்தரமா உட்கார்ந்திருக்கான். 34(ஏ) பிரிவுப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
சந்தை நிலவரப்படி கோயில் சொத்துக்களின் வாடகையை மறுநிர்ணயம் செய்யணும். ஆனா, வெள்ளைக்காரன்
காலத்துல போட்ட கட்டணமே இன்னும் இருக்கு. என்னோட போராட்டம் வெறும் ஊழலுக்கு எதிரான
போராட்டம் மட்டுமில்லை. பெரும்பான்மை சமுதாயத்தோட வழிபாட்டு உரிமையை மறுப்பதற்காக ஒரு
துறையா? ஏனென்று சொன்னால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 38,606 கோயில்கள்
இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில், 8,500-9,000 கோயில்கள் இல்லை. திருவண்ணாமலையில இடும்பனார்
மற்றும் இளையனார் கோயில், வால்மீகி கோயில்ல கர்ப்பகிரகம் இருந்த இடத்துல கடைகள் இருக்கு.
அறநிலையத் துறை எடுத்துக்கற நிலையில அந்தக் கோயில் எப்படி இருந்தது? வழிபாடுகள் நடந்ததாலதானே
எடுத்தாங்க. குறைந்தபட்சம் அதை எடுத்த நிலையில எப்படி இருந்ததோ அப்படி அதை பராமரித்திருக்க
வேண்டாமா? இப்போ கையில் எடுத்துருக்கேன். மக்கள் மத்தியில விழிப்புணர்வு வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா, எனக்குப் புரியுது. இது மிக நீண்ட போராட்டம். அதுக்கு தயாராகவே இருக்கேன்.

சமீப காலமாக இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியை
சமூக வலைத்தளங்களில் அதிகமாக வசைபாடுகிறார்கள். வட இந்தியாவில் அவர் படத்தை வைத்துச்
சுடும் நிகழ்ச்சியை நடத்துகிறார்களே?

அதைச் செய்பவர்கள் ஹிந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள். அது
ஆர்எஸ்எஸ் பரிவார் அமைப்புகளில் இல்லை. மேலும், அந்தச் செயல் தவறானது; ஏற்புடையதல்ல.
உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் யோகிஜி அரசாங்கம்தான் அவர்களை கைது செய்திருக்கு. இதுல
ஒரு வேடிக்கை என்னவென்றால், நாடு சுதந்திரம் பெறக்கூடாதுன்னு சொன்ன ஈவெராவின் வழியில
வந்த வைகோ கண்ணீர் விடறாராம். என்ன ஒரு போலித்தனம். இவங்க நோக்கம், காந்திஜியோட புகழைக்
காப்பாத்தறதில்லை. அதை வச்சி பாஜகவை ஒரு தட்டு தட்ட முடியாதான்னு ஒரு அல்ப புத்தி.
இந்த விஷயத்துல பாஜகவைக் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அந்த செயல்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை.

ஹிந்து வாக்கு வங்கி இன்னும் இருக்கிறதா?

ஹிந்து வாக்குகளை விட ஹிந்துத்துவ வாக்குகள் பாஜகவுக்கு வரணும்னு
சொல்றேன். 1980களில் சிவகங்கைல அரண்மனைக்கு எதிரே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்கு.
அதை நெடுஞ்சாலைத் துறை இடிக்க வந்தாங்க. அதை எதிர்த்து நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.
அப்போ, என்னிடம் பேச வந்த தாசில்தார், “இதோ பாருங்க. என் பாக்கெட்டுல பிள்ளையார்பட்டி
பிள்ளையார் போட்டோ வச்சிருக்கேன். எனக்கும் சமய உணர்வு இருக்கு” என்றார். ஆனால், சமூக
உணர்வு இருந்ததா? கோயிலுக்குப் போனேன், வழிபட்டேன், திருநீறு வாங்கினேன் என்பதல்ல.
ஹிந்து என்ற சமூக உணர்வு வேண்டும். அதனாலதான், என் சமூக வலைத்தளங்களில் வெறுமென ஹிந்து
என்று நான் எழுதுவதில்லை. ஹிந்து உணர்வாளர்கள் என்றே பதிவிடுகிறேன். அனுமனைப் பற்றிய
ஸ்லோகத்தில் ‘அஜாட்யம்’ வேண்டும் என்பார்கள். அதாவது ஜடத்தன்மை அற்றது. அந்த ஜடத்தன்மை
போனால் நம்மை ஆதரிப்பார்கள்.

தேர்தலில் தமிழக பா.ஜ.க.வின் பிரசாரம் என்னவாக இருக்கும்?

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பிரசாரம் செய்வோம். கழிவறைத்
திட்டம், சமையல் எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், விவசாயிகளுக்குப்
பயிர் காப்பீட்டுத் திட்டம், முத்ரா கடன் அல்லது பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களால்
பயன்பெற்றவர்களின் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாரியாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளின்
வீடுகளுக்குச் சென்று, “இந்த மாதிரி திட்டங்கள் தொடர வேண்டுமானால், மோடி நிச்சயம் பிரதமராக
வேண்டும்” என்று கேட்போம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலை தூக்கியுள்ளனவே?

இது மூலமா, கோல் எடுத்தாத்தான் குரங்காடும்னு தெரியுதா? அதாவது,
அவர்களை ஒடுக்க ஜெயலலிதா கடைப்பிடித்த அணுகுமுறையை இப்போதும் கடைப்பிடித்தால், அந்தச்
சக்திகள் ஒடுங்கும்.

மோடி தமிழகத்துக்கு எதிரானவர் என்கிறார்களே?

ஒரு மாற்றுக்கட்சி நண்பர் என்னைத் தேடி வந்தார். “ஏங்க, ஒடிஸாவுல
நீங்க ஒரு எம்.பி. தான். ஆனா, உள்ளாட்சித் தேர்தலில் 36 சதவீத வாக்குகள் வாங்கியிருக்கீங்க.
மேற்கு வங்கத்துல பிரதான கட்சியா வந்துருக்கீங்க. அசாம்ல 4 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு
ஆட்சியையே பிடிச்சீங்க. தமிழ்நாட்டுல அப்படியொரு சூழ்நிலை இருக்கான்னா, இருக்கு. நீங்க
நெடுவாசல் போய் பாருங்க” என்றார். நானும் நெடுவாசல் போனேன். ஊரே திரண்டு வரவேற்றது.
அங்க இருந்து 5 கிமீ தொலவுல வடகாட்டுல 30 பேர் கொண்ட நாம் தமிழர், மே 17 கும்பல் மட்டும்
எனக்கு எதிரா கொடி பிடித்து நின்னாங்க. ஆகவே, மோடி இருந்தால் தங்களுக்குப் பிழைப்பு
போய்விடுமென்று திமுகவின் கொள்ளைக்காரக் கும்பல், மற்ற பிரிவினைவாத சக்திகள்தான் மோடியைத்
தமிழகத்துக்கு எதிரானவாக சித்திரிக்கிறார்கள். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். 

Leave a Reply