Posted on Leave a comment

ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி | சுப்பு – கரிகாலன்

உங்களைப் பற்றி…

நான் ஈஸ்வர வருஷம் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று
பிறந்தேன். அதாவது, ஆங்கில ஆண்டு 1938 நவம்பர் பதினோராம் நாள். எனது அப்பா பெயர் ஏ.கிருஷ்ணசுவாமி,
தாயார் பெயர் லட்சுமி அம்மாள். என் தந்தையார் தென்னங்குடி கிராமத்தில் கர்ணமாகப் பணிபுரிந்து
வந்ததால் ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். நாங்கள் இரண்டு சகோதரர்கள், நான்கு
சகோதரிகள். ஆறு பேரும் பிறந்தது அன்பில் கிராமத்தில். வளர்ந்தது தென்னங்குடி கிராமத்தில்.

பத்தாம் வகுப்பு வரை தஞ்சையிலும், பியுசி திருச்சி ஜமால்
முகமது கல்லூரியிலும் படித்தேன். தஞ்சாவூர் சரபோஜி மன்னர் கல்லூரியில் படித்தேன். அதன்
பின்னர் சுவாமி சித்பவானந்தர் ஆரம்பித்த கல்லூரியில் ஓராண்டு படித்தேன். படித்து முடித்தவுடன்
தஞ்சாவூர் வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து 1997ம் ஆண்டு ஓய்வு
பெறும்வரை அங்கேயே பணியாற்றினேன்.

1948 – நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம்,
எனது அண்ணன் ஆர்எஸ்எஸ் ஷாகா சென்று கொண்டிருந்தார். அப்போது நானும் அவருடன் சென்றேன்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் சிக்ஷக் இல.நாராயணன். ஷாகா சென்ற முதல் நாளே அண்ணன் கையால்
குட்டுப்பட்டேன். ஆனால் மறுநாள் சென்றபொழுது என் உயிரிலும் மேலான நண்பன் நாராயணன் என்னைக்
கட்டி அணைத்து, நீங்க தினசரி ஷாகா வாங்க என்று சொன்னான். அன்று தொடங்கி இன்றுவரை உறுதியாக
இருக்கிறேன்.

தமிழகத்தில் சங்கத்தை வளர்ப்பதற்காக வந்த முதல் பிரச்சாரக்
சங்கராந்தி விழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது அப்போது
எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவரது உடல்மொழி என்னைத் ஈர்த்தது. இப்பொழுதும் என் கண்முன்னே
நிற்கிறது! 

அதற்குப்பிறகு தொடர்ச்சியாக நான் சங்கத்திற்கு வந்துகொண்டிருந்தேன். ஜமால்
முகமது கல்லூரியில் படிப்பதற்காக தஞ்சையிலிருந்து தினசரி சென்று வந்த காலகட்டத்தில்
தொடர்பு விட்டுப் போயிருக்கலாம். இன்று வரையில் 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நான்கு
பேர் மத்தியில் மதிப்பு இருப்பதற்குக் காரணம் நான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில்
பெற்ற பயிற்சியும் அனுபவமும்தான். நான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதும்
சங்கத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன்.
1959 திருச்சி பாப்பம்மாள் சத்திரத்தில் முதலாம் ஆண்டு பயிற்சி
முகாமில் என்னுடன் வந்திருந்தவர் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த இல.கணேசன்.
நானும் அவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். அவர் அவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட மாட்டார்.
என்னைவிட ஆறு வயது இளையவர். நான் காலையில் எழுந்து தேநீர் குடித்துவிட்டு அவருக்கும்
ஒரு கோப்பையில் தேநீர் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ‘கணேசா’ என்று சொல்லி எழுப்புவேன்.
அந்த நறுமணம் அவரை எழுப்பி விடும்.
இல.கணேசன் தஞ்சை வீரராகவா மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தார்.
ஆனாலும்கூட நான் ஆசிரியராகப் பணி செய்வதற்கு முன்னதாகவே அவர் தனது பள்ளிப் படிப்பை
முடித்துவிட்டார். இன்றும் கூட இல.கணேசன் என்னைப் பார்த்துச் சொல்லுவார். ‘சங்கத்தில்
ராமரத்தினம்தான் எனது முதல் வழிகாட்டி’ என்று. உண்மையில் எனது வழிகாட்டுதல் குறைவு.
அவரது சுய முயற்சி அதிகம். அவரது உழைப்பால் உயர்ந்து இன்று தலைவர் என்று சொல்லும் அளவுக்கு
வளர்ந்திருக்கிறார்.

முதலாம் ஆண்டுப் பயிற்சி மட்டுமல்ல, சங்கத்தில் இரண்டாம்
ஆண்டுப் பயிற்சியும் (1968ம் ஆண்டு) நானும் கணேசனும் சேர்ந்துதான் முடித்தோம். அப்பொழுதும்
கணேசன் என் அறையில்தான் தங்கியிருந்தார். மூன்றாம் ஆண்டு மட்டும், எனக்கு ஒரு வருடம்
முன்னதாகவே நாக்பூரில். நான் 1970ம் ஆண்டு தான் மூன்றாமாண்டு பயிற்சி முடித்தேன்.
கணேசன் அரசியல் தலைவராக வருவார் என்று உங்களுக்கு அப்போதே தெரியுமா?

தெரியாது. அப்போது தெரியாது. ஆனால் அவர் பிரசாரத்துக்காக
வந்தபிறகு அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவருடைய பேச்சு, பழகக்கூடிய
விதம், நகைச்சுவை உணர்வு, எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நிச்சயமாக எதிர்காலத்தில்
பெரிய பொதுநலத் தலைவராக வருவார் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அன்று நான் சொல்லக்கூடிய
காலகட்டத்தில் ஜனசங்கம் இருந்தது. ஆனால் ஜன சங்கத்திற்கு தமிழகத்தில் அந்த அளவுக்கு
வளர்ச்சி இல்லை.
1959 பாப்பமா சத்திரம் முகாமுக்கு ஒரு சிறப்பு உண்டு மூன்று
நாட்கள் பரம பூஜ்ய குருஜி அவர்கள் அந்த முகாமில் உரையாற்றினார். பண்டித தீனதயாள் ஜீயவர்களும்
மூன்று நாட்கள் தங்கியிருந்து எங்கள் மத்தியில் உரையாற்றினார். நானாஜி தேஷ்முக், பாய்
மஹாவீர் போன்ற பெரியவர்கள் அந்த முகாமுக்கு வந்திருந்தனர். அன்றைக்கு தமிழகமும் கேரளமும்
இணைந்துதான் நடந்தது. தமிழகத்திலிருந்து 50 பேர் வந்தால் கேரளத்தில் 100 பேர் வருவார்கள்.

நான் மதுரையில் இரண்டாமாண்டு பயிற்சி முடிக்கும்பொழுதும்
பரம பூஜ்ய ஸ்ரீ குருஜி அவர்கள் மூன்று நாட்கள் வந்திருந்தார்கள். 1970ம் ஆண்டு நாக்பூர்
முகாமிலும் ஐந்து நாட்கள் கலந்து கொண்டார்கள்.
சங்கத்திற்கு நான் வந்ததிலிருந்து 1975 நெருக்கடி நிலை அறிவிக்கப்படும்வரை
தஞ்சாவூரின் அனைத்து தாலுகாக்களுக்கும் அப்போதைய பிரசாரக் ராமகோபாலன் அவர்களுடன் சென்றிருக்கிறேன்.
20 தாலுகாக்கள். வேலைக்கு அஞ்சு பேரைக் கூப்பிட்டா பத்து பேர் வருவாங்க. அவங்களோட பேசிட்டு,
‘ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க’ன்னு ராமகோபாலன் சொல்வார். அப்ப நிச்சயமா எல்லாரும்
கேட்கிற முதல் கேள்வி, ஏன் காந்தியைக் கொன்றார்கள் என்பதுதான். அப்போது பவ்யமாகச் சொல்வார்.
சரி இனிமே கொல்ல மாட்டோம் என்று. நகைச்சுவை உணர்வு அவருக்கு. பின்னர் அதன் அரசியல்,
மற்ற நுணுக்கங்கள் பற்றி விளக்குவார். காந்தி கொலைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பில்
ஆர்எஸ்எஸ் என்ற வார்த்தையே இல்லை என்று சொல்லி, ஆர்எஸ்எஸ்ஸுக்கும் அதற்கும் தொடர்பே
இல்லை என்பார். உங்களுக்குத்தான் நல்ல பாட்டு பாடத் தெரியுமே, ஒரு பாட்டு பாட வேண்டும்
என்று யாரையாவது கேட்பார். உடனே அதுக்கு ஒருவர் ‘நரபலி கொடுத்த வீர பங்கமும் பாஞ்சாலமும்’
என்று நெஞ்சை உருக்கும் விதமாய்ப் பாடுவார்.

அதிலிருந்து ஒன்றிரண்டு பேர் நமக்கு சங்கக்காரர்கள் கிடைப்பார்கள்.
அன்று கிடைத்தவர்கள்தான் இன்றுவரை தொடர்ந்து சங்கப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், கும்பகோணத்தில் ஒருவர் பிளாஸ்டிக் கடை வைத்திருந்தார்.
தஞ்சாவூர் ஜில்லா சங்கசாலக் அவரை சங்கத்திற்குக் கொண்டு வந்தவர். அதன்பிறகு நெருக்கடி
நிலையின்போது சங்க சகோதரர்கள் செய்த சாகசம்தான் இன்று ஆயிரக்கணக்கில் சாகா வளர்ந்திருப்பதற்கு
அடிப்படைக் காரணம்.
நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக, ஸ்தாபன காங்கிரஸ் இவர்களெல்லாம்
சத்யாகிரகத்தில் ஈடுபடவில்லை. பதுங்கிக்கொண்டார்கள். துணிந்து எதிர்த்துப் போராடியது
சேவகர்கள்தான். தமிழகத்திலிருந்து 1000 பேர் கைது. தஞ்சாவூரிலிருந்து 15 பேர் மிசாவில்
கைதானோம்.

நவம்பர் 14 1975. தஞ்சாவூர் சத்யாகிரகத்தில் தலைமை தாங்கக்
கூடிய பொறுப்பு எனக்கு இருந்தது. 18 மாதங்கள் மிசாவில் கைதாகும் பாக்கியம் கிடைத்தது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு மீண்டும் அதே பள்ளிக்கூடத்தில் பணியாற்றினேன். அந்த மேல்நிலைப்பள்ளி
உயர்நிலைப் பள்ளி முழுக்க முழுக்க காங்கிரஸ் குடும்பத்தின் நிர்வாகத்தில் இருக்கிறது.
வாண்டையார் குடும்ப நிர்வாகம். அவர்கள் முழுக்க முழுக்க காங்கிரஸ்காரர்கள். ஆனாலும்கூட
நான் எதிர்த்தது நெருக்கடி நிலையைத்தான், மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத்தான்,
தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்ததால், எனக்கு
மீண்டும் வேலை கொடுத்தார்கள்.

அதனால்தான் 1997 நான் ஓய்வு பெற்றபொழுது அய்யாறு வாண்டையார்
அவர்கள் கையினாலேயே எனக்குப் பட்டாடை அணிவித்து ஒரு பொன் மோதிரம் போட்டுக் கௌரவித்தார்.

லட்சியத்தில் உறுதியாக இருந்தால் சமூகத்தில் எந்த ஒரு சக்தியாலும்
நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நெருக்கடி காலத்தில் உங்களுடைய குடும்பத்தின் நிலை?

குடும்பம் என்னாச்சு என்று கடவுளுக்குத்தான் தெரியும். எனது
தாய்மாமா ஓரளவு வசதி படைத்தவர். என் மனைவியைப் பிறந்த வீட்டில் கொண்டு விட்டுவிட்டேன்.
குறை சொல்லக் கூடிய மனநிலை இல்லாதவள் அவள். எனக்கு மூன்று குழந்தைகள். சிறு குழந்தைகள்.
ஆனால் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட எனக்கு நேரம் இல்லை.

யாதவர் ஜோஷி என்று ஒரு தலைவர். அவர் எழுதிய கடிதம் ஒன்று
திருச்சி சிறைக்கு வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தார், ‘நாமெல்லாம் மெழுகுவத்தி போன்றவர்கள்.
எரியும் மெழுகுவர்த்தியை நீங்கள் எப்படிச் சாய்த்தாலும் தலைகீழாகக் கவிழ்த்தாலும் தீபமானது
மேல் நோக்கித்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.’ அதனால் சிறையிலிருந்த அந்த 18 மாத
காலம் எங்கள் சிந்தனை தேசத்தை நோக்கியதாகவே இருந்தது. வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
திருச்சி மத்தியச் சிறையில் என்னுடன் இருந்த 15 பேரில் ஒன்பது பேர் மரணம் அடைந்துவிட்டார்கள்.
என்னோடு சேர்த்து ஆறு பேர்தான் உயிரோடு இருக்கிறோம்.

நெருக்கடி நிலை – அப்படின்னா என்னன்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியற மாதிரி
சொல்ல முடியுமா?

அவசரநிலை முடிஞ்சு 42 வருஷம் ஆகப்போகுது. அவசியம் இந்த விஷயத்தைப்
பதிவு பண்ணனும். அப்பத்தான் இந்தத் தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் இதனுடைய
ஆபத்து என்னன்னு புரியும்.
அப்போதைய பிரதமர் இந்திரா அம்மையார் தேர்தல்ல ஜெயிச்சது செல்லாதுன்னு
1975ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிச்சார். அதோடு கூடவே இன்னும் ஆறு வருஷத்துக்கு
அந்தம்மா தேர்தலில் போட்டியிட முடியாதுங்கறது அவருடைய தீர்ப்பு. உடனே அந்தம்மா ‘கொஞ்சம்
அவகாசம் கொடுங்க, பிரதமரை மாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. நான் காங்கிரஸ் காரியக்
குழுவை கூட்டி விவாதித்து வேறு ஒரு பிரதமரை மாத்துறேன்’ன்னு அவகாசம் கேட்டாங்க. உடனே
துரிதமா செயல்பட்டு அந்த வழக்குல மேல்முறையீடு பண்ணி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத்
தடை வாங்கினாங்க. அந்தத் தீர்ப்பே செல்லாதுன்னும் அறிவிக்க வைச்சாங்க. என்னதான் நீதியை
விலைகொடுத்து வாங்கினாலும் மக்கள் மனசுல ஒரு கோபம் இருக்கும் இல்லையா? அதை அடக்குறதுக்காக
நெருக்கடி நிலையை அறிவிச்சு தன்னை சர்வாதிகாரியா நிலை நாட்டிக்கிட்டாங்க.

ராத்திரியோட ராத்திரியா சங்கத்து மேல தடை வந்தது. எதிர்க்கட்சித்
தலைவர்களைக் கைது பண்ணினாங்க. மாபெரும் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய்,
அத்வானி, எல்லாரையும் கைது பண்ணிட்டாங்க. நெருக்கடி நிலையை எதிர்த்து சத்தியாகிரகம்
பண்ணின எங்களையும் கைது பண்ணிட்டாங்க. நாடு முழுக்க இந்த மாதிரி பல்லாயிரக்கணக்கானவர்கள்
கைதாகிச் சிறையில் இருந்தனர். அந்த அனுபவத்தைத்தான் நான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

திருச்சி மத்திய சிறையில உங்க கூட யார்யார் இருந்தாங்க?

பதில்: நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்
கைதானோம். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட எங்களோடு திராவிடர் கழகம், திராவிட
முன்னேற்றக் கழகம், ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட் போன்ற கட்சிகளைச் சார்ந்தவர்களும்
சில தீவிர கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சேர்த்து 250 பேர். நாங்கள்
15 பேர்.

நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளானார்கள்
என்ற பேச்சு அடிபட்டது. திருச்சியில் அப்படி ஏதும் நடந்ததா? உண்மையா?

அரசியல் கைதிகள் என்று நீங்கள் சொல்வது ஸ்டாலின் போன்ற அரசியல்
கட்சித் தலைவர்களை. எங்களோட இருந்தவர்களுக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஏன்னா, நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்துத்தான் சிறை வாழ்க்கை அமையும்.
எங்களது சிறை மேலாளர் ராமநாதன், கைதிகளின் ஆவணங்களை ஒவ்வொன்றாகப்
புரட்டிப்பார்க்கும்போது ராமரத்தினம் எம்எஸ்சி பிஎட், ஆசிரியர் என்றிருந்ததால் என்னைக்
கூப்பிட்டனுப்பினார். அவரது பையன் செயின்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தான். ஆங்கில வழி போதனா முறை. ஆனால் பையன் ஆங்கிலத்தில் சுமார். தன் பையனுக்குப்
பாடம் சொல்லித் தரும்படி என்னைக் கேட்டார். அது மட்டும் இல்லை. ‘வீட்டுக்கு வரமுடியுமா?’
என்றும் கேட்டார். ‘வீட்டுக்கு வந்தா உங்க வேலைக்கே உலை வச்சிடுவாங்க. சிறையை விட்டு
நான் வெளியில போக முடியாது. அதனால உங்க பையனை இங்கேயே வரச் சொல்லுங்க’ன்னு நான் சொன்னேன்.

ராமநாதன் அவரோட அறையிலேயே எனக்காக ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.
அவரோட பையன் தினசரி பாடம் படிக்க வருவான். இரண்டே மாசத்தில எல்லாப் பாடத்துலயும் நல்ல
மதிப்பெண் வாங்கினான். அம்மா அவங்க பையன்கிட்ட விசாரிச்சிருக்காங்க. பையன் ‘அந்த வாத்தியார்
எனக்கு நல்லா பாடம் நடத்தினார்’ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கான். உடனே அந்தம்மா தன்
கணவரைக் கூப்பிட்டு, ‘இந்த சங்கத்துக்காரங்க ரொம்ப நல்லவங்களாத்தான் இருக்கணும்; நம்ம
பையனை இந்தளவுக்கு படிக்க வச்ச அவங்களுக்கு நாம ஏதாவது பிரதியுபகாரம் பண்ணனும்னு’ சொல்லி
இருக்காங்க.

திருச்சியில காந்தி காய்கறிச் சந்தை பிரபலம். அங்கிருந்து
தினசரி நல்ல பச்சைக் காய்கறிகள் அவங்க சொந்தச் செலவுல வாங்கி அனுப்புவாங்க. சிறையில்
இருக்குறவங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பொதுவா காய்ந்துபோன காய்கறிகளைத்தானே போடுவாங்க,
உங்களுக்கு மட்டும் என்ன பச்சைக் காய்கறிகள் வருதுன்னு கேட்பாங்க. யாரோ புண்ணியவான்
அனுப்பி வைக்கிறார்னு சொல்லி நானும் சமாளிச்சுடுவேன்.
அப்படித்தான் எங்களுக்குக் கடைசி வரைக்கும் தனி மரியாதை,
அந்தஸ்து கிடைச்சது. அது எல்லாத்துக்கும் காரணம் எங்களோட நடத்தை.

பிற கட்சிக்காரங்க உங்களோட கலந்து பழகுவாங்களா?

பழகுவாங்க. ஆனா துக்க வீட்டுல இருக்கறது போல சோகமாவே இருப்பாங்க.

கோ.சி.மணி, திருச்சி சிவா போன்ற மாற்றுக் கட்சிக்காரங்க எங்களோட
இருந்தாங்க. அவங்களை எல்லாம் கூப்பிட்டு மத்தியானம் ஒரு காப்பி கொடுத்துட்டுப் பேசுவோம்.
எப்படிங்க உள்ள வந்தீங்கன்னு கேட்டாக்க, நாங்க எங்கங்க போராடினோம், பிடிச்சிட்டு வந்துட்டாங்கன்னு
புலம்புவாங்க. திருச்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கே.அனந்த நம்பியார் என்பவரை தூத்துக்குடியிலிருந்து
பிடிச்சிட்டு வந்தாங்க.

சத்தியாகிரகம் பண்ணினா மிசாவில கைதாவோம்னு தெரிஞ்சுதான் சங்கக்காரர்கள்
நாங்க கைதானோம். அதனால எங்க மனநிலையில எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் சிறைக்குள்
இருந்தாலும் சங்க முகாமில் இருப்பது போலத்தான் உணர்ந்தோம். அதைத்தவிர வெளியில் இருந்து
செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.

செய்திகள் எப்படி உள்ளே வந்தன?

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து இப்போது ஓய்வு
பெற்றிருக்கக் கூடிய பெல் ஸ்ரீநிவாசன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
அவர்தான் எங்களுக்குச் செய்திகளைக் கொண்டு வருவார். நாக்பூரில் இருந்து, தில்லியில்
இருந்து வரக்கூடிய குறிப்புகள் ஆங்கிலத்தில் இருக்கும். ஸ்ரீநிவாசன் ஏதாவது சிறைக்காவலரிடம்
ஐந்தோ பத்தோ கொடுத்து செய்திகளை உள்ளே அனுப்புவார். காவலர் அதைத் தனது காலணியில் ஒளித்து
வைத்து வந்து உத்தமராஜிடமோ, என்னிடமோ அறைக்குள் தள்ளி விட்டுச் சென்று விடுவார். நான்
அதைத் தமிழில் மொழிபெயர்த்து அனைவருக்கும் அனுப்புவேன். சில நேரங்களில் வாசித்தும்
காட்டுவேன்.

அனந்த நம்பியார் போன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு
எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். எப்படி உங்களுக்கு மட்டும் செய்தி வருதுன்னு கேட்பாங்க.
டெல்லியில் ஒரு சுரங்கம் வச்சிருக்காங்க, அதுல காகிதத்தைப் போட்டுத் தண்ணி ஊத்தினா
அது வந்துடும்னு கிண்டலாகவே பதில் சொல்லுவேன்.

இதுல விசேஷம் என்னன்னா, நாங்க சிறைக்குப் போனதிலிருந்து வெளியே
வர்ற வரைக்கும் எல்லாக் காலத்திலும் தொடர்ச்சியா செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அதுல குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தில்லியில் நாடாளுமன்றக்
கூட்டத்தொடரின்போது சுப்பிரமணிய சாமி தோன்றினார், பேசினார், தப்பினார் என ஒரு செய்தி.
கும்பகோணத்தைச் சேர்ந்த ரமணி என்கிற ராமஸ்வாமி எங்களோடு சிறையில் இருந்தார். அவரது
மனைவியும், சகோதரரும் அவ்வப்போது அவரைப் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாகக் கிடைத்த
செவிவழிச் செய்திதான் அது. அதை நான் சக கைதிகளிடம் தெரிவித்தேன். எவரும் நம்பவில்லை.

கும்பகோணத்தைச் சேர்ந்த மார்க்கெட் துரை பெரிய போக்கிரி.
திமுகவைச் சேர்ந்தவன். கோசி மணியே அவனைக் கண்டால் நடுங்குவார். அவன் என்னிடம் வந்து,
‘என்ன ராமரத்தினம், ஏன் இப்படிப் பொய்ச் செய்தி எல்லாம் பரப்பறீங்க? சுப்பிரமணியசாமியாவது
நாடாளுமன்றத்திற்கு வர்றதாவது, பேசுறதாவது? சும்மா பொய் சொல்லாதீங்க!’ என்றான்.
‘பாரப்பா, இது எனக்கு வந்த செய்தி. நம்புவதும் நம்பாததும்
உன் இஷ்டம்’ என சொல்லிட்டேன். மூணு நாள் கழித்து அந்தச் செய்தி வெளிவந்தது. மார்க்கெட்
துரை என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டான். இதிலிருந்து நமக்கு முன்னாடி பெட்டிப் பாம்பு
மாதிரி பவ்யமா வளஞ்சு கும்பிடுவான்.

இன்னொரு சுவாரசியமான சம்பவம். 1976 மார்ச் 18ல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்
அனைத்துக் கட்சி கைதியினரும் விடுதலை செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ்,
தி.க, திமுக என அனைத்துக் கட்சியினரும் விடுதலையானார்கள். ஆனால் எங்களையும் மூன்று
நக்சலைட்டுகளையும் மட்டும் விடுவிக்கவில்லை.
ஆர்எஸ்எஸ் காரர்கள் பதினைந்து பேர். மூன்று நக்சலைட்டுகள்.
நாங்கள் 18 பேர் மட்டும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டோம். அடுத்த நாள் ஜெயபிரகாஷ்
நாராயணன் நாடு தழுவிய உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். உண்ணாவிரதத்தில்
நாங்களும் பங்கெடுக்கப் போகிறோம் என்று எழுதிக் கொடுத்தோம்.

கடிதத்தைப் பார்த்த சிறை அதிகாரிக்கு ஆச்சரியம். எங்களோடு
சேர்ந்து அந்த மூன்று நக்சலைட்டுகளும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். ‘சங்கத்துக்காரங்கதான்
உண்ணாவிரதம் இருக்காங்க! நீங்க ஏன் அதுல போய் கலந்துக்குறீங்க?’ன்னு கேட்டார் சிறை
அதிகாரி செல்லதுரை. அதுக்கு நக்சலைட்டுகள் சொன்ன பதில்தான் ஆச்சரியமான விஷயம்.
“சங்கத்துக்காகரங்க எங்களோட ஒரு வருஷமாக உள்ள இருக்காங்க.
அவங்க தங்களுக்குன்னு இது வரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
இந்த நாட்டுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்கும்னா அது சங்கத்தாலதான் நடக்கும். அது புரிஞ்சதாலத்தான்
கையெழுத்து போட்டோம்”.

சிறை சட்டப்படி உண்ணாவிரதம் இருக்கக் கூடாதே!

பதில்: ஆமாம். அதனாலதான் சிறைத் துறை அதிகாரிகள் என்னோட பலஹீனத்தை
வைச்சு மிரட்டிப் பார்த்தாங்க.

அது என்ன பலஹீனம்?

பீடி பிடிக்கிறதுக்கு சிறையில் ஒரு தொகை (Smoking
Allowance) தருவாங்க. அந்தப் பணத்தை எல்லாம் வச்சு நான் பத்திரிகைகள் வாங்கிடுவேன்.
அது தெரிஞ்சுக்கிட்ட அந்தச் சிறை அதிகாரி உண்ணாவிரதம் இருந்தா பத்திரிகைகளை நிப்பாட்டிடுவேன்னு
பயமுறுத்தினார். சாப்பாடே வேணாம்னு சொல்றேன், பத்திரிகையையா பெருசா நினைக்கப் போறோம்னு
சொல்லிட்டேன்.

சிறை மேலாளர் ராமமூர்த்தி ‘யோவ் செல்லதுரை, அவங்களை ரொம்ப
மிரட்டாதீங்க. ஒருநாள் உண்ணாவிரதத்தை காலவரையற்ற உண்ணாவிரதம்னு நீட்டிக்கப் போறாங்க’
ஒரே போடாகப் போட்டார். சிறை அதிகாரி ஆடிப்போயிட்டார். ஒருநாள்தானே, அந்த ஒரே நாள்ல
நிப்பாட்டிடனும் என்னும் நிபந்தனையுடன் எங்களுக்கு அனுமதி தந்தார். ‘பாருங்க இட்லிக்கு
மாவு அரைச்சிருக்கோம். நாளைக்கு இட்லி, தொட்டுக்க மோர்க் குழம்பு. நீங்களும் சாப்பிட
வாங்க!’ என அவர்கிட்ட சொன்னேன்.
ஒருநாள்தான் உண்ணாவிரதம். அதையும் சோதிச்சுப் பார்த்தாங்க.
இட்லி, தோசை, நெய்யில பொரிச்ச பூரி. இதுதான் அன்றைய காலை உணவு. எங்க அறை முன்னாடி கொண்டு
வச்சுட்டாங்க. நாங்க கண்டுக்கவே இல்லை. அதேபோல மதியச் சாப்பாடு, இரவு பட்சணம், எல்லாமே
அறை வாசல்ல வச்சாங்க. ஏன் வீணடிக்கிறீங்கன்னு கேட்டோம். தலைமைச் செயலாளர் கேப்பாங்க,
அவங்களுக்கு உணவு கொடுத்தாச்சான்னு விசாரிப்பாங்க, அதனாலதான் வைக்கிறோம்னு சொன்னாங்க.
அடுத்த நாள் காலையில் எல்லாத்தையும் எடுத்துக் கொட்டினாங்க.

மறுநாள் காலையில் நாங்க இட்லி மோர்க்குழம்பு சாப்பிட்ட உடனே
அந்தச் சிறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நாடு முழுக்க இருந்த உண்ணாவிரதத்தின்
தொடர்ச்சி சிறையிலும் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி.

இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், மறுநாள்
காலையில் சமையலுக்குப் பொருள் எல்லாம் வாங்கறதுக்காக போனப்போ, பின்னாடி இருந்து ‘பிரதர்’னு
ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன். கலியபெருமாள். தமிழ்ப் புலவர். நக்சலைட்டுகள் அமைப்பின்
தலைவர். நெருக்கடி நிலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. வேறொரு கொலை வழக்கில் கைதாகிச்
சிறையில் இருந்தவர். எல்லாரையும் தோழர் என்றுதான் கூப்பிடுவார்.
அவரு சொன்னாரு, ‘தோழர்கள் சொன்னாங்க. நேத்து உங்க உண்ணாவிரதம்
பெரிய வெற்றி. அதைவிடப் பெரிய சந்தோஷம் சிறை அதிகாரியும் கண்காணிப்பாளரும் உங்களால
நேத்து முழுக்க ரொம்ப அவஸ்தையில் இருந்தாங்க. சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறது சட்டப்படி
குற்றம். ஆனா நீங்க ரொம்ப துணிச்சலா அதைச் சாதிச்சுட்டீங்க. அதுதான் அந்த அதிகாரிகளுக்கு
வயித்தெரிச்சல். உண்மையிலேயே ஆர்எஸ்எஸ்காரர்கள் நல்லவர்கள்.’ இது அந்த நக்சலைட் தலைவர்
வாயிலிருந்து வந்த வார்த்தைகள்.

அடுத்த நாள் நாங்க சாப்பிட உட்கார்ந்தோம். அந்த மூணு பேரும்
தனியா சாப்பிடுவாங்க. அவங்க எங்கிட்ட வந்து, ‘நாங்களும் உங்களோடு சேர்ந்து சாப்பிடலாமா’ன்னு
கேட்டாங்க. ‘சேர்ந்துக்கறது பத்தி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கோழி, கறி, மீன்
எதுவும் கிடைக்காதே’ன்னு சொன்னேன். பரவாயில்லை, நீங்க என்ன கொடுக்கிறீங்களோ சாப்பிடுகிறோம்னு
சொன்னாங்க. சரின்னு எங்க தட்டுகளுடன் சேர்த்து அவங்களுக்கும் தட்டு வைச்சோம். ஆனா கொஞ்சம்
தள்ளி உட்காரச் சொன்னேன். ஏன்னா நாங்க 15 பேரும் சாப்பிடறதுக்கு முன்னாடி போஜன மந்திரம்
சொல்றது வழக்கம். ஸஹனா வவது மந்திரம் சொல்லிச் சாப்பிடுவோம். ரெண்டு நாள் பார்த்துட்டு
மூணாவது நாள் நாங்களும் மந்திரம் சொல்லலாமான்னு அந்த நக்சலைட்டு தலைவர் கேட்டார். பொதுவான
மந்திரம்தான் ஐயா, யார் சொன்னால் என்ன, வாங்கன்னு சொல்லி சேர்ந்து மந்திரம் சொல்லிச்
சாப்பிட ஆரம்பிச்சோம்.
பிறகு நாங்க 15 பேரும் விடுதலை ஆகும்போது அந்த மூன்று பேர்
‘ஓ’ன்னு அழுதாங்க.

சிறையிலிருந்த காலத்துல நக்சல்கள் கூட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில்
நான் புரிந்து கொண்டதை என்னோட நாட்குறிப்பில் எழுதி வச்சிருக்கேன். அது என்னன்னா, நாட்டு
மக்கள் எல்லோரும் முன்னேறனும்னுதான் சங்கமும் நினைக்குது. நக்ஸல்களும் அப்படித்தான்
நினைக்கிறாங்க. ஆனால் மனிதர்களைச் சுட்டுத்தான் திருத்த முடியும்னு நக்ஸல் நம்புறான்.
மனிதனுக்கு உள்ள தெய்வாம்சம் இருக்குன்னு சங்கம் நினைக்குது. இதுதான் வித்தியாசம்.

பாரதி மிக அழகாகச் சொல்லுவார், ‘பக்தி உடையார் காரியத்தில்
பதறார்; மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்’
என்று. நாங்கள் சிறையில் அதை முழுமையாகக் கடைப்பிடித்தோம்.

சிறையில அவங்க எல்லாரும் உங்க கூட ஒத்துழைப்போடுதான் நடந்துகிட்டாங்களா?

எங்களோட கைதான ஸ்வயம்சேவகர்கள்ல நிறையப் பேர் தறி நெய்யறவங்க.
மார்க்ஸிஸ்ட் அனந்த நம்பியார் அவங்ககிட்ட போய், ஐயோ பாவம் உங்க இயக்கமே தடைசெய்யப்பட்டது,
உங்களுக்கு விடுதலையே கிடையாதே, நீங்கள் எல்லாம் எப்படித்தான் வெளியே வருவீங்களோன்னு
பேசி அவங்க தன்னம்பிக்கையை அசைச்சுப் பார்ப்பார். கோவத்துல நான் போய் அந்தாளுகிட்ட
சண்டை போட்டேன். ‘உங்க இயக்கம் ஏன்யா சிபிஎம்ன்னு பிரிஞ்சுது? நீங்க சீனா அடிவருடிங்கறதுனாலதானே!
ஏன் உங்க இயக்கமே ஒரு காலத்துல தடை செய்யப்பட்டது. நீங்க இயங்காம போய்ட்டீங்களா என்ன?
இப்ப கூடத்தான் உங்க இயக்கத்தைத் தடை பண்ணலை. ஆனா நீங்க ஏன் உள்ள வந்தீங்க! தடை செய்யறது
பெருசில்லையா. தடையை உடைச்சு அதுலேர்ந்து எப்படி வெளியே வர்றோம்ங்கறதுதான் முக்கியம்”ன்னு
சொன்னேன்.

‘தயவு செஞ்சு எங்க தொண்டர்களோட மனநிலையைச் சோதிக்காதே’ன்னு
சொல்லிட்டு வந்தேன்.

அனந்த நம்பியாருக்கு இதயம் பலகீனமா இருக்குன்னு அவருடைய மனைவி
எழுதிக் கொடுத்து அவரை விடுதலை பண்ணி வெளியே அழைச்சிட்டுப் போய்ட்டாங்க. ‘ஐயா, எங்கள்
தலைவனே எங்களை விட்டுட்டுப் போய்ட்டான்’னு அவங்க கட்சிக்காரங்க எல்லாம் நம்மகிட்ட வந்து
அழுவாங்க. நான்தான் அவங்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லுவேன்.
அது தவிர, வெளியில இருக்குற நம்மாளு ஒருத்தர்கிட்ட சொல்லி
கட்டுக்கட்டா பீடி வாங்கி வைச்சிருப்பேன். அந்த கம்யூனிஸ தோழர்களுக்கு அப்பப்ப ஒரு
பீடிக்கட்டு கொடுப்பேன். சில பேரு அதை வச்சு, ராமரத்தினம் சிறைக்குப் போய் கெட்டுப்
போயிட்டாருன்னு பேசிக்கிட்டாங்க. அது தனி விஷயம். ஒரு சின்ன செய்திகூட வெளியில் போகும்போது
பல விதமான உருவமெடுக்கும் அப்படிங்கறதுக்கு இது ஒரு உதாரணம்.
எங்களோடு சிறைப்பட்டிருந்த திமுக சிவாவுக்கு அப்போது இருபது
வயது இருக்கும். முதலாமாண்டு முதுகலைப் பட்ட மாணவர். எங்களோடு நட்பு பாராட்டியவர்களில்
ஒருவர். கேரம், கைப்பந்து என அனைத்திலும் பங்கெடுப்பார். சதுரங்கம் ஆடுவதில் கில்லாடி.
இப்போது திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பின்பும் நம்முடன் நல்ல தொடர்பில்
இருக்கிறார்.

எங்களோடு சிறைப்பட்டிருந்த சங்க பிரசாரக் உத்தம ராஜ் அவர்கள்
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்தபோது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலிக்
கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி சிவா “இவர்கள் (சங்கத்துகாரர்கள்) மட்டும் இல்லையென்றால்
நாங்கள் எல்லாம் சிறையிலேயே செத்திருப்போம்!” என வெளிப்படையாகப் பேசினார்.
வெளியே எந்த சங்க வேலையைச் செய்யக்கூடாது என்று எங்களைக்
கைது செய்தார்களோ, அதை நாங்கள் சிறைக்குள்ளே சிறப்பாகச் செய்துகொண்டிருந்தோம். தினசரி
ஷாகா உட்பட.

ஷாகா என்றால் த்வஜ ப்ரணாம் உண்டா?

த்வஜ ப்ரணாம் மட்டுமல்ல, தினசரி பிரார்த்தனையும் உண்டு! ஆக
18 மாதங்கள் அரசுப் பணத்தில் நாங்கள் ஷாகா நடத்தினோம்.

உங்கள் கூட இருந்த சக கார்யகர்த்தர்கள்?

தஞ்சாவூரைச் சேர்ந்த ஏ.என்.சுந்தர்ராமன் என் மனசுக்கு ரொம்ப
நெருக்கமானவர். கல்யாணமான மூணு மாசத்துல கைதாகி விட்டார். 18 மாசம் என்னோட கூடவே இருந்தவர்.
அவர் பசங்க எல்லாம் இன்னைக்கு நல்ல நிலையில் இருக்காங்க. அவரோட மனைவி இன்னும் இருக்காங்க.
நம்முடைய நிகழ்ச்சி எது நடந்தாலும் அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கிறது நம்ம வழக்கம்.

கோபி ராமமூர்த்தி இன்னொருத்தர். சிறையில் இருக்கும்போது அவருடைய
குழந்தை தவறிப் போச்சு. அதுக்காக ஒருநாள் பரோல்ல வெளியில போனார். மறுநாளே திரும்பி
வந்துட்டார். அவர் உள்ளே வந்ததும் அவர் எவ்வளவு வசூல் பண்ணிட்டு வந்தார் என்றுதான்
மீதி கட்சிக்காரங்க, இயக்கத்து ஆளுங்க கேட்டாங்க. அவங்க எல்லாருக்கும் பணத்து மேலதான்
குறி. அவங்களுக்கு லட்சியத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது.

குடும்பத்தலைவர் நீங்களே கைதானபோது உங்க குடும்பம் எப்படிச் சமாளித்தது?

சத்யாகிரகம் பண்ணினால் கைதாவோம்னு தெரிந்தேதான் என் மனைவியை
அன்பில் கிராமத்தில் எங்க மாமா வீட்டில் கொண்டு விட்டுவிட்டேன். வீட்ல நான் இல்லையே
என்கிற குறையைத் தவிர்த்து பொருளாதார ரீதியா வீட்டுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. என்
மனைவியும் அதிகம் ஆசைப்படுபவர் கிடையாது. யாராவது ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டால்கூட,
ஒன்றும் தேவையில்லை என மறுத்து விடுவாள். தங்களது உறவினர்களை சிறையில் சந்திக்க வரும்
எவரும் கைதிகளிடம் கொடுப்பதற்கென்று ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார்கள். நான் மட்டுமே
என் கையில் இருப்பதை என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என, என்னைப் பார்க்க வருபவர்களிடம்
கொடுத்து அனுப்புவேன்.
எனது தாய்மாமா மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக வேலை
செய்து வந்தார். அதனால் ஒருநாள் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஒருவரைப் பார்த்து,
‘எங்க வீட்டுப் பையன் ஆசிரியர் உத்தியோகம் உத்யோகம் பார்க்கிறான், அவன் தப்பு ஏதும்
பண்ணி இருக்கமாட்டான்’ என்று சொல்லி இருக்கிறார். அந்த அதிகாரி அவரது பார்வையில் படும்படி
கோப்பு ஒன்றை எடுத்து மேஜையில் வைத்திருக்கிறார். அதில் எனது அப்பா பெயர், அம்மா பெயர்,
அதற்கு கீழே ஏ.எஸ்.ராமசாமி என்று எனது மாமா பெயரும் இருந்திருக்கிறது. என்னைக் காப்பாற்றப்
போனவர் தனது பெயரைப் பார்த்ததும் தன் மீதும் வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில், விட்டால்
போதும் என்று அலறி அடித்து ஓடி வந்துவிட்டார்.

விடுதலையான பின்னால் வேலை உடனே கிடைத்தா?

நான் தஞ்சாவூர்ல ஏற்கெனவே வேலை பார்த்துக்கிட்டு இருந்த பள்ளிக்கூடத்துக்குப்
போய் மீண்டும் எனக்கு வேலை கொடுக்க மனு கொடுத்தேன். அவர் என்னோட கோரிக்கையை மாவட்ட
அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். அது கல்வித்துறை இயக்குநர் கிட்ட போச்சு. அவர்கிட்ட
இருந்து அந்த மனு கல்வித்துறைச் செயலருக்கு போச்சு. அவர் தலைமைச் செயலருக்கு அனுப்பி
வைத்தார்.

தலைமைச் செயலர்தான் என்னை வேலையை விட்டு நீக்குவதாக ஆணை பிறப்பித்திருந்தார்.
அந்த ஆணை மாநிலக் கல்வித்துறை இயக்ககத்துக்கு வந்திருந்தது. நான் மீண்டும் வேலையில்
சேரப் போகிறேன் என்று மாநிலக் கல்வி அதிகாரிகள் மத்தியில் சொன்னபோது அலுவலக குமாஸ்தா
எனது பணிநீக்க ஆணையை என்னிடத்தில் காட்டினார்.

தலைமைச் செயலர் எனது பெயரை மாவட்டங்களுக்கு அனுப்பி நான்
எதுவும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறேனா என அறிக்கை கேட்டிருந்தார். இதற்குள்
ஏழு மாதங்கள் ஓடிவிட்டன.

பிறகு எம்ஜிஆர் ஆட்சி வந்தது. அரங்கநாயகம் கல்வித் துறை அமைச்சராக
வந்தார். அவர் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரைச் சந்தித்து “என்னை ஏன் மிசாவில் கைது
செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் கைதானபோது சுதந்திரமில்லை. சோறு கிடைத்தது. விடுதலை
ஆகிவிட்டேன். சுதந்திரம் கிடைக்கிறது, சோறு கிடைக்கவில்லை! இரண்டும் சேர்த்து எப்போது
கிடைக்கும்” என்று கேட்டேன். அவரது ஆணையின் மூலமாக நான் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தேன்.
மார்ச் மாதம் விடுதலை ஆனேன். நவம்பர் மாதம் வேலை கிடைத்தது.

சிறை வாசத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வரவில்லையா?

நான் விடுதலையாகி வந்த பிறகும் தொடர்ந்து சங்க வேலைதான் செய்து
வந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஜில்லா கார்யவாஹ் பொறுப்பில் நான் இருந்தபோது,
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இல.கணேசன் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்டார். அப்போது
ஒருமுறை அவர் என்னை சந்தித்து பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பேற்கும்படி வேண்டினார்.
‘ஐயா, கட்சி வேலையை நீங்கள் பாருங்கள்; சங்க வேலையை நான் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.
கடவுள் புண்ணியத்தால் எனக்கு அரசியல் ஆசையே வரவில்லை.
பரம பூஜ்ய ஸ்ரீ குருஜி தொடங்கி பரம பூஜ்ய ஸ்ரீ தேவரஸ் ஜி,
பரம பூஜ்ய ஸ்ரீ ரஜு பையாஜி, பரம பூஜ்ய ஸ்ரீ சுதர்ஷன் ஜி, இப்போது இருக்கக்கூடிய பரம
பூஜ்ய ஸ்ரீ மோகன் பாகவத் ஜி என ஐந்து சர்சங்கசாலக்களைப் பார்த்ததனால், அவர்களது தாக்கத்தினால்,
சங்க வேலையைத் தாண்டி பெரிதாய் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்குள்ளே ஊறிவிட்டது.
அரசியல் என்பது சாதாரண மனிதர்களுக்கானது. அதைத் தாண்டி சமுதாயத்திற்காகச்
செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்களை சங்கம் மட்டுமே செய்ய முடியும். அதைத்தான் நாங்கள்
செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு சிலர் வேண்டுமானால் சங்கத்திலிருந்து அரசியலுக்குச் செல்லலாம்.
ஆனால் என்னைப் பொருத்தவரை சங்க வேலையை விட்டுவிட்டு வேறு எந்த அமைப்புகளுக்கும் போவதை
எனது மனம் ஏற்கவில்லை.
ஒரு தொண்டனாக, ஸ்வயம்சேவகனாக, என் வாழ்நாளின் இறுதி வரை இருப்பேன்
என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. எத்தனை பெரிய பதவி வந்தாலும் என்னைப் பொருத்தவரையில்
அது இரண்டாம் பட்சம்தான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

(நவம்பர் 12, 2018, ஸ்ரீரங்கம்; நன்றி: விஸ்வநாதன்)Leave a Reply